பெருங்கதையாடல்

51QnWFSLCoL._SY344_BO1,204,203,200_

”சண்டாளி , அவ நல்லாருப்பாளா? கண்ணப்பாரு கண்ண. அவ கண்ணில கொள்ளிய வச்சு பொசுக்க” என்று மாமியாரின் குரல் பக்கத்து அறையில் கேட்டது. அதிலிருந்த அதியுக்கிரம் என்னை ஆறுதல்படுத்தியது. ஒன்றுமில்லை, சீரியல்தான். “என்னா பேச்சு பேசுறா? அவங்க புருசனும் பொஞ்சாதியும் ஆயிரம் பேச்சு பேசுவாங்க. இந்த நொள்ளக்கண்ணு மிண்டைக்கு அதில என்ன? வாறா பாரு பாவய நீட்டிட்டு”

உள்ளே வந்த மனைவியிடம் நைச்சியமாக “என்ன சீரியல்”என்றேன்.

“இது சீரியல் இல்ல ஜெயன். கதையல்ல கருத்துங்கிற ரியாலிட்டி ஷோ” என்றாள்.

“ஓ” என்றேன். எங்கள் வீட்டில் எட்டு வருடங்களாக டிவி இல்லை. ஆகவே இந்த உலகமே எனக்குக் கொஞ்சம் அன்னியம்தான்.”ரியாலிட்டி ஷோன்னா?’

“அது ஒண்ணுமில்ல. வீட்டிலே நமக்கு வெளிய சொல்ல முடியாத பிரச்சினைல்லாம் இருக்கும்ல?’

“ஆமா?

“அதை நாம இவுங்க நிகழ்ச்சியில போயி சொன்னா காதும் காதும் வச்சமாதிரி பேசி முடிச்சிருவாங்க… சோஷியல் செர்வீஸ்”

“இரு இரு, டிவியிலன்னா…”

‘இந்த நிகழ்ச்சியிலதான்”

“அய்யோ… அப்ப எல்லாரும் பாப்பாங்க இல்ல”

“ஆமா. பாத்தாத்தானே ரெவினியூ வரும்?’’

“இல்ல, நான் கொஞ்சம் குழம்பிட்டேன். அதாவது –”

“இதுக்கு மேலே தெளிவாச் சொல்ல என்னால முடியாது” என்று டீக்கோப்பையை கொண்டு திரும்பிப்போனாள்

மெல்ல எழுந்து சென்று கதவின் விரிசல் வழியாகப்பார்த்தேன். ஒருபெண் குமுறிக்குமுறி அழுதுகொண்டிருந்தாள். விசும்பல்கள் சுவரில் எதிரொலித்தன. தலையை வைக்கோல்பிரி நிறத்தில் மாற்றியிருந்த குடும்பஸ்திரீ ஒருத்தி உச்சு உச்சு கொட்டிக்கொண்டிருந்தாள். ரொம்ப நேரம் அதுவே கேட்டுக்கொண்டிருந்தது

நான் செல்பேசியில் மனைவியை கூப்பிட்டேன். “என்ன?’ என்றாள்

“இல்ல, ஏதாவது பிரச்சினையா? ரொம்பநேரமா அழுகைச்சத்தமா கேக்குது”

“இது ரியாலிட்டி ஷோல்ல… அழுவாம பின்ன சிரிப்பாங்களா… உசிர வாங்காத. எனக்கு அடுக்களையிலே ஆயிரம் வேல கெட்க்கு”

இருபது நிமிடம். திடீரென்று இசைச்சுழல். அதிரடிக்குரல் மாமியார் ஆங்காரமாக. “ஆமா, நாறமிண்ட நீ சொல்லித்தான் நான் சோப்பு வாங்கணுமாக்கும்? நீதானே பாலில வெசத்தப்போட்டு காமாட்சிய கொன்னிருவேன்னு சொன்ன.. சோப்பில என்னத்த வச்சிருக்கியோ” என்றார்

மீண்டும் மனைவியை அழைத்தேன். “கொஞ்சம் வந்திட்டு போ ப்ளீஸ்”

வந்து “:என்ன இப்ப?” என்றாள்

“தெரியாம கேக்கேன். இப்ப இது யாரு?’

“இது குத்துவிளக்கு சீரியலிலே வாற ராகினி”

“அவ எதுக்கு சோப்பப்பத்திச் சொல்றா?’

“அய்யோ. அவ அதில தேவிஸ்ரீயா வாறா. இது சோப்பு விளம்பரம்”

ஒருமாதிரி பிடி கிடைத்தது. “சரி” என்றேன்

“பேசாம ஏதாச்சும் பின்நவீனத்துவமா எடுத்துப்படி. உனக்கெல்லாம் அதான் லாயக்கு. என்னத்துக்கு இதையெல்லாம் கேட்டு என் உசிர எடுக்கிறே?’’ என்று திரும்பிச் சென்றாள்

நான் ஒரு சிற்றிதழை எடுத்தேன். பெருங்கதையாடல்களை கட்டுடைப்பதைப்பற்றிய கட்டுரை. நாலைந்து பத்திகள் வாசிப்பதற்குள் பின்மண்டையில் ஒரு நரம்பதிர்வு. ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அப்பால் டிவியில் ஒருவன் “அப்டித்தாண்டி இருப்பேன். ஆம்பிளைன்னா ஆயிரம் இருக்கும்’ என்றான். கற்புக்கரசி என்று அழுகைகலந்த குரலால் வெளிப்படுத்திய பெண் ஒருத்தி “நான் என்ன தப்பு பண்ணினேன்?’ என்றாள்

மாமியார் “ஆமா, நீ பெரிய பத்தினி… கண்ணாடிச் சொக்காய போட்டுட்டு பப்லு கூட நீ திங்கு திங்குன்னு ஆடினப்பவே நினைச்சேன்… பொண்ணா லெச்சணமா இருந்தா ஆம்புள மதிப்பான்” என்றார்

மெல்ல இறங்கி முற்றத்துக்குச் சென்று அப்படியே பின்பக்கமாக நடந்து சமையலறைக்குள் சென்றேன்

“என்ன இப்ப? பசிச்சா வட தாரேன். மீன் வறுக்க நேரமாகும்”

“இல்ல. என்னால உக்காந்திருக்க முடியல… ஒரே குழப்பம். இது என்ன கதை. இந்த பொண்ணு எதுக்கு அப்டி டேன்ஸ் ஆடினா?’’

எட்டிப்பார்த்து “ஜெயன், எத்தன வாட்டி சொல்றது. இவ அம்பிகாவா நடிக்கிற சோனி. இவதான் மானாட மயிலாட புரோக்ராமிலே பப்லு கூட ஆடினா”

”அது இந்த சீரியலுக்குள்ள வாற டான்ஸா?’’

“அய்யோ…அது வேற புரோக்ராம்…”

“உன் கையால இந்தத் தாலிய என் கழுத்தில கட்டாம விடமாட்டேன்” என்றாள் வில்லினி

“ஆம, நீ கிளிச்சே. உன் புருஷன் மாலினிய வச்சிருக்கான்… போயி அதப்பாரு” மாமியார் சொன்னார்

என் ஒழுக்கமனம் திமிறி எழுந்தது. “என்ன இது கதை. இவ எதுக்கு புருஷன விட்டுட்டு இவன கட்ட தாலியோட அலையறா?’’

“அது சண்முகம்-செம்பகம் சீரியலிலே. இவ அதில செம்பகமா நடிக்கிறா இல்ல? அதில அவ புருஷன் விட்டுட்டு போயிட்டான். இதில இவளுக்கு கல்யாணம் ஆகல…”

”வாழ்க்கைன்னா நாலும் இருக்கும். நாமதான்டீ அனுசரிச்சுப்போகணும்” என்றது பழக்கமான பெண்குரல்.

‘ஏங்க இவதானே சின்னப்பொண்ணா இருந்தப்ப ராஜீவ்காந்தி செத்துபோனத சொன்னா…. ”

“அது வேற. அவ ஷாலினியோட மாமியார். இவ இந்தவாரம் சினிமா நிகழ்ச்சிய நடத்தினவ.”

“ஒருகுடும்பப்பொண்ணுக்கு குங்குமம்தாண்டீ முக்கியம்” .

“ஆமா, நீ சினிமாவப்பாத்து விமர்சனம் செஞ்சுட்டு அலை.உம்பொண்ணு வாழ்க்க லெச்சணமால்ல இருக்கும்” என்றார் மாமியார்.

பளீரென்று எனக்கு ஒரு தெளிவு வந்தது.” பெருங்கதையாடல்!”

“என்னது?’ என்றாள்

”பக்தின் இதைத்தான் சொல்றார். நம்ம சமகால டிவி அப்டியே கலந்து ஒரேகதையா மாறிடிச்சு…”

மனைவி புன்னகைத்தாள், அவள் புன்னகை அழகாக இருக்கும்

“என்னிக்குமே பொறுமையா இருக்கிற பொண்ணுதான் ஜெயிப்பா….”

“நீ சொல்லு அத…. பொறுமையா இருந்துல்ல சுமதியோட வாழ்க்கை அந்த கெதியாச்சு?’ என்றார் மாமியார்

“சுமதி எந்த சீரியலிலே?’ என்றேன்

”உளறாதே. அவ நம்ம அருணாச்சலம் மாமாவோட பொண்ணு… அவ ஹஸ்பெண்ட்கூட பிராப்ளம்ல? அதச் சொல்றாங்க”

“கலைச்செல்வி செத்த அன்னிக்குதானே சுமதிக்கு அவன் நோட்டீஸ் அனுப்பினான்? பாவிப்பய”

”கலைச்செல்வி யாரு? எப்ப செத்தாங்க?”

“அவளா? மஞ்சள்மகிமை ஹீரோயின் அவ. மாடியிலே இருந்து கீழவிழுந்து செத்தாளே?’’

நான் திக்பிரமை பிடித்து சில கணங்கள் நின்றுவிட்டு திரும்பிவிட்டேன். அவ்வளவு பிரம்மாண்டமான பெருங்கதையாடலை எதிர்கொள்ள என் பின்நவீனத்துவ மூளைக்குத் திராணி இருக்கவில்லை

முந்தைய கட்டுரைநவீன அடிமைமுறை- கடிதம் 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79