இரவு 20

காலடித்தடங்கள் பரவிய

வெண்மணல் வெளி இந்தப் பகல்

இந்தக் கருங்கடலோ

ஆயிரம் பல்லாயிரம்

மரக்கலங்களோடியும்

தடமேதும் பதியாதது.

எத்தனையோ நாட்கள் நான் தூங்கிக்கொண்டே இருந்தது போல உணர்ந்தேன். கட்டிலில் மீண்டும் மீண்டும் உடம்பை முறுக்கியபடி படுத்துக்கொண்டிருந்தேன். எழவே முடியவில்லை. காய்ச்சல் இருப்பதைப்போல வாய் உலர்ந்து நாக்கு லேசான கசப்புடன் இருந்தது. மூக்கும் கண்களும் காந்தின. ஆனால் கழுத்தில் கையை வைத்துப் பார்த்தபோது காய்ச்சல் இருக்கவில்லை. அப்படியே மீண்டும் தூக்கத்திற்குள் சென்றேன். இம்முறை அரைமணிநேரம் தூங்கியிருப்பேன். அது தூக்கமில்லை, ஒரு மென்மயக்கம். மீண்டும் விழித்துக்கொண்டபோது கொஞ்சம் புத்துணர்ச்சி இருந்தது.

எழுந்து கொண்டு தலையை கையால் தாங்கியபடி கண்மூடி சிந்தனையை ஓடவிட்டு மெத்தையிலேயே அமர்ந்திருந்தேன். மிக முக்கியமான ஒன்று நம்முள் இருக்கும்போது அதை தொடத்தயங்கி சிந்தனைகள் சுற்றிச் சுற்றிச் செல்கின்றன. வீட்டுக்கு முக்கியமான விருந்தாளி வந்திருக்கையில் குழந்தைகள் நடந்துகொள்வதுபோல.

பளீரென்று ஓர் காட்சிப்படிமமாக அது என் முன் நின்றது. உடம்பு விதிர்க்க தலை நிமிர்ந்து அறைக்குள் யாரோ வந்துவிட்டது போல சுற்று முற்றும் பார்த்தேன். அதன் பின் அமர முடியவில்லை. அந்த நினைவுன் தீவிரம் உள்ளே அழுத்தும்போது உடல் நிலையாக நிற்க முடியவில்லை. பரபரப்புடன் கழிப்பறை சென்றேன். பற்பசையை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி வந்தேன். என்ன செய்கிறேன் என நானே வியந்தபின் மீண்டும் உள்ளேபோய் சிறுநீர் கழித்தேன்.

கண்ணாடியைப்பார்த்துக்கொண்டே பல்தேய்க்க ஆரம்பித்தேன். கண்களுக்கு கீழே களைத்த இமைச்சதைகளில் நிழல் படிந்திருந்தது. என் முகத்தில் நிரந்தரமான ஒரு திகைப்பு படிந்திருப்பது போல தோன்றியது. என்ன நினைத்தேன் என எனக்கே தெரியவில்லை. நேராக ஷவரை திறந்து விட்டு லுங்கியுடனும் சட்டையுடனும் நீர்ப்பொழிவில் நின்றேன். நீர் என் சிந்தனைகளின் மீது கொட்டியதுபோல அவை கனத்து குளிர்ந்து ஈரமாகப் படிந்து அமைதியாவதை உணர்ந்தேன்.

தலைதுவட்டியபோது நான் என் நிதானம் மீண்டு விட்டிருப்பதை உணர்ந்தேன். உடைமாற்றிவிட்டு கீழே வந்தேன். பங்கஜம் இருந்தாள். மாலை வெயில் முற்றத்தில் நீள நீளமான நிழல்களாக விழுந்து கிடந்தது. கண்கள் கூச திரும்பிக்கொண்டு டீபாயில் கிடந்த கருப்புக் கண்னாடியை எடுத்து மாட்டிக்கொண்டேன். சோம்பல் முறித்தபடி அமர்ந்து நாளிதழ்களை வாசித்தேன். எந்தச் செய்தியும் ஆர்வம் அளிக்கவில்லை.

பங்கஜம் வந்து ”சாய எடுக்க்ட்டே?” என்றாள். ”ம்” என்றேன். ”நாயர் வந்நிருந்நு” ”ம்?” ”ஈ வீடு ஒரு மாசத்தினு எடுத்ததாணத்ரே…நீட்டணமோ எந்நு சோதிச்சு” நான் சற்றே யோசித்தபின் ”நான் அவர் கிட்டே பேசிக்கறேன்”என்றேன். அவள் இறுக்கமான முகத்துடன் விலகிச்சென்றாள்.

வெளியே நீளமான நிழல்களையும் மஞ்சள் ஒளியையும் பார்த்து அமர்ந்திருந்தேன். மிக இளம் வயது நினைவுகள் எழுந்தன. நானும் என் அம்மாவும் மஞ்சள் வெயில் ஒரு காலியான சாலையில் செல்கிறோம். பின்பு வேறெங்கோ ஒரு குளத்தின் மதிலில்  நான் கைக்குழந்தையாக அமர்ந்திருக்க எதிரே நீரில் இதே போல மஞ்சள் வெயில். என்னருகே அம்மா இருக்கும் உனர்வு. மெல்லிய தன்னிரக்கம் ஒன்று நெஞ்சுக்குள் பரவியது

வெளியே செல்ல முடியும் என்று தோன்றவில்லை. என் கண்கள் கூசி கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. ஒரு யோசனை தோன்றி மாடிக்குச் சென்று  இன்னொரு கறுப்புக்கண்ணாடியை எடுத்து அதை முதல் கறுப்புக்கண்ணாடி மீதே மாட்டிக்கொண்டேன். இப்போது கண்ணுக்கு இதமான வெளிச்சம் உருவாகியது. மாலையின் மஞ்சள் ஒளி கறுப்பு தேநீர் நிறைந்த கண்ணாடிக்கோப்பை வழியாக வரும் ஒளி போல இருந்தது.

வெளியே இறங்கி தென்னை மர நிழல்கள் நடுவே நடந்து சென்றேன். காயலில் மாலையின் ஒளி அலைகளின் வளைவுகளில் பல்லாயிரம் உப்புச்சிதறல்களாக துள்ளிக்கொண்டிருந்தது. பாசிக்குமிழிகள் மீது நாலைந்து கொக்குகள் அமர்ந்து ஊசலாடின.  நான் நெருங்கியதும் அவை எழுந்து பறந்தன. நீருக்குள் அவற்றின் பிரதிபலிப்புகள் ஆழமான எங்கோ பறந்து செல்வதைக் கண்டேன். காயல் விளிம்பில் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டேன்.

காயலையே பார்த்துக்கொண்டிருந்தேன். முதன் முதலாக அங்கே வந்தமர்ந்ததை எண்ணிக்கொண்டேன். மிக முக்கியமான எதையோ இழந்து விட்டேன் என்று பட்டது. எதை? தெரியவில்லை. அங்கே முதலில் வந்தமர்ந்ததன் பின்பு எத்தனையோ தீவிரமான அனுபவங்கள். ஒருமாதம் கூட ஆகவில்லை. அதற்குள் வெகுதூரம் தாண்டி வந்து விட்டிருக்கிறேன். அன்று நான் எந்த வாசலையும் திறக்காதவனாக, எல்லா முற்றங்களிலும் தயங்கி ஆவலுடன் நிற்பவனாக, இருந்தேன். அந்த ஆவலே அந்தக் காலகட்டத்தின் எனது இன்பமாக இருந்தது.

உடலுறவே அறியாத வயதில் பெண் அளிக்கும் பரவசம் அது. எல்லா பெண்களும் அழகிகளாக மனதை படபடக்க வைக்கிறார்கள். எந்தப்பெண்ணிடம் பேசினாலும் தொண்டை அடைத்துக்கொள்கிறது. உடல் வியர்த்து கைவிரல் நுனிகள் நடுங்குகின்றன. பெண்ணனுபவத்தின் ஆழங்கள் வேறு வகையில் நம்மை திறக்கின்றன . ஆனால் அறியாமையிலும் ஒரு பேரின்பம் இருக்கிறது.

நான் இழந்தது அறியாமையை. அறியாமை அளிக்கும் குதூகலத்தையும், அச்சமற்ற துள்ளலையும். ‘லாஸ் ஆ·ப் இன்னொசென்ஸ்’. எங்கோ வாசித்த வரி. நான் ஒரு கணம் ஏங்கிவிட்டேன். மீண்டும் திரும்பவே முடியாதா? மேலும் மேலும் ஆழத்திற்குத்தான் செல்ல முடியுமா? உடனே திரும்பி ஓடிவிட்டால் என்ன? ஆனால் என் பழைய உலகுக்கு என்னால் செல்ல முடியாதே. பழைய இடங்களுக்கு மட்டும்தானே செல்ல முடியும்?

என் எண்ணத்தை அறிந்ததுபோல காயல் மேல் பாசிப்படலம் வளைந்து எழுந்தமரக் கண்டு திடுக்கிட்டேன். அதையே அர்த்தமில்லாமல் பார்த்தேன். காயல் மீது இரு சிறிய படகுகள் மெதுவாகச் சென்றன. தூரத்தில் தேங்காய் நார் ஏற்றிய ஒரு படகு மாபெரும் சேவல் ஒன்று நீந்தி வருவது போல வந்தது. மீண்டும் பெருமூச்சு விட்டேன்.

முந்தாநாள் நான் விழுந்து கிடந்தபோது பூசை முடிவது வரை எவருமே என்னை தூக்கவில்லை. அரை மணிநேரத்தில் என் மயக்கம் தெளிந்து மூளைக்குள் ஆக்ஸிஜன் பரவியது. பனித்த கண்ணாடி துளித்து தெளிவது போல என் அகம் தெளிவடைய ஆரம்பித்தது. மணியோசையும் மந்திர உச்சாடனமும் கேட்டுக்கொண்டிருக்க நான் எங்கிருக்கிறேன் என்று தெரியாமல் சில நிமிடங்கள் பிரமித்து கிடந்தேன். கல்கத்தா தட்சிணேஸ்வர் கோயிலில் இருப்பதாக ஒரு எண்ணம் நெடுநேரம் இருந்தது.

தட்சிணேஸ்வருக்கு எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சென்றேன். ஐம்பதுக்கும் மேலான ஆடுகளை அங்கே அன்று வெட்டினார்கள். பீச்சிய குருதி தரையில் தெறித்து  அதன் மீது மனிதர்கள் நடந்து நடந்து கோயில் முழுக்க ரத்தத்தின் பச்சை வீச்சம். பெண்கள்கூட அந்தப் பச்சைக் குருதியை தொட்டு நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டார்கள். வெட்டப்பட்ட ஆடுகள்  வரிசையாக தூக்கி கிடத்தப்பட்டிருந்தன. குருதி படிந்து உலர்ந்து திரிதிரியாக ஆன அவற்றின் சருமம் மீது ஈக்கள் ரீங்கரித்தன. கருவறைக்குள் பளபளக்கும் கிரீடமும், செம்பட்டும், வெறித்த விழிகளுமாக காளி அமர்திருந்தாள்

என்னைச்சுற்றி இருந்தவர்களிடமிருந்தே குருதி வாசனை வீசுகிறதென உணர்ந்து மெல்ல எழுந்தமர்ந்தேன். அவர்கள் தங்கள் உடலில் ஆட்டின் ரத்தத்தை சந்தனம் போல பூசியிருந்தார்கள். அது உலர்ந்து திட்டுகளாக படிந்திருந்தது. மணியோசை என் தலைக்குமேல் கேட்டது. பிரமை கொண்டவர்கள் போல அவர்கள் மெல்ல மெல்ல ஆடியபடி ஒரு குறிப்பிட்ட சைகையே செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு குமட்டல் வந்தது . என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. தலை கனத்தது.

இரு வெள்ளையரின் தொடைகள் நடுவே உள்ள இடைவெளி வழியாக நான் பீடத்தில் அமர்ந்த லிஸ்ஸை பார்த்தேன். அவள் உடலெங்கும் குருதியும் குங்குமமும் பரவியிருக்க அடிவயிற்ற்றின் கீழே திறந்த யோனிக்கு முன்னால் செம்மலர்கள். என் நெஞ்சு திடுக்கிட்டு உச்சத்தில் அதிர மீண்டும் நான் மயக்கம்கொள்பவனாக உணர்ந்தேன். ஆனால் அப்படியே படுத்துக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டு இது முடிந்து விட வேண்டும், சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன்.

அப்படியே தூங்கிப்போய் நான் விழித்தபோது என்னை முகர்ஜி மெல்ல தூக்கிக் கொண்டிருந்தார். நான் விழித்துக்கொண்டு ”முகர்ஜி, என்னுடைய கார்” என்று அர்த்தமில்லாமல் ஏதோ சொன்னேன். ”கமான்” என்றார் அவர். நான் சட்டென்று எழுந்து அமர்ந்தேன். என் முன்னால் கலைந்த மாபெரும் சக்கரத்தின் ஓவியம். அதன் மேல் மலர்கள். எண்ணை சொட்டிய தடங்கள். பூஜை நிகழ்ந்த  இடத்தில் எதுவுமே இல்லை. அந்த கூடமே எச்சில்பட்டு கிடப்பது போலிருந்தது

”எல்லாரும் எங்கே?” என்றேன். ”கமான்” என்றார் முகர்ஜி. நான் அவருடன் மெல்ல நடந்தேன். தலையின் கனம் என்னை தள்ளியது. அவர் என்னை அவரது குடிலுக்கு அழைத்துச் சென்றதும் தரையில் பாய் விரித்து படுக்கச் செய்தார். பெரிய பித்தளை செம்பு நிறைய நுரைக்கும் கள் எடுத்து தந்து குடிக்கச் சொன்னார். நான் ”நோ” என்று சொன்னபடியே அதை வாங்கி குடித்தேன். சில்லென்று அதன் புளிப்பும் இனிப்பும்  சாராயமும் கலந்த வாடை என்னுள் நிறைந்தது. வரண்டு போயிருந்த என் தொண்டையும் நெஞ்சும் குளிர்ந்து சிலிர்க்க உடலை உலுக்கிக் கொண்டேன். ”ஸ்லீப்” என்றார் முகர்ஜி

அன்று பகல் முழுக்க நான் அவரது குடிலுக்குள் தூங்கிக்கொண்டிருந்தேன். எப்போதோ ஒரு முறை விழித்துக்கொண்டபோது நீலிமா என்னை குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். கோபத்துடன். அல்லது குரோதத்துடன். நான் ”ஐயம் ஸாரி” என்றேன். அவள் முகம் அப்படியே உறைந்திருந்தது. பார்வையை திருப்பினால் மறுபக்கம் இன்னொரு நீலிமா. இந்தப்பக்கம் இன்னொரு நீலிமா. அறையைச் சுற்றி வேறு வேறு வடிவங்களில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.

நான் மீண்டும் தூங்கிவிட்டேன். நீலிமாவின் கொடூரமான பார்வை என்னை கட்டி நிறுத்தியிருந்தது. புலி தன் இரையை காலொடித்து போட்டுவிட்டு நிதானமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும். அதன் கண்களைச் சந்தித்த இரை முடிவில்லாத ஒன்றை கண்ட பிரமிப்பில் அப்படியே உறைந்து நிற்கும். நீலிமாவின் வாய்க்குள் கோரைப்பற்கள் ஒளிர்வதைக் கண்டேன். இரு சிறு குறுவாள்களைப்போல.  அவள் நாக்கு செக்கச்சிவந்த ஒரு பாம்பு . எரியும் கண்கள். ஆனால் அவள் பேரழகுடன் இருப்பதாகவும் எனக்குப் பட்டது. ”நீயா?” என்றேன்.

நான் மாலையில் விழித்துக்கொண்டபோது முக்கர்ஜி அருகே நின்றார் ”நான் உங்களைக் கொண்டுபோய் வீட்டில் விடுகிறேன். இப்போது பரவாயில்லை அல்லவா?” ”யா, ஐ யம் ஓக்கே” என்று எழுந்து கொண்டேன். சோம்பல் முறித்தேன். குடிலுக்கு வெளியே சென்று மண் தொட்டியில் இருந்த குளிர்ந்த நீரால் முகம் கழுவினேன். உள்ளே வந்து என் உடைகளை அணிந்துகொண்டேன். உடைகளை அணிந்து கொண்டதுமே நான் பழைய மனிதனாக மீண்டு விட்டதுபோலிருந்தது.

”போவோம்” என்றார் முக்கர்ஜி .நான் எதையாவது சாப்பிட விரும்பினேன். அல்லது ஒரு டீயாவது. அதை உணர்ந்தவர் போல ”நாம் போகும் வழியிலேயே சாப்பிடலாம்” என்றார். என் காரிலேயே  என்னை பக்கத்தில் அமரச்செய்து அவர் ஓட்டினார். கார் கடற்கரைச் சாலையில் சீரான வேகம் கொண்டபோது மெல்ல மெல்ல நான் சமநிலைக்கு மீண்டு வந்தேன். ”நேற்று என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என்றேன்.

”நீங்கள் அதைப்பற்றி பேச விரும்புகிறீர்களா?” என்றார் முகர்ஜி ”ஏன்?” என்றேன். ”பேசினால் அது பலவீனமாகும். வெறும் தர்க்கமாக ஆகும். அதன் ஆழம் மறைந்துவிடும்” ”பரவாயில்லை. முழுக்க தர்க்கமாக ஆனபின்னர் எது எஞ்சுகிறதோ அது போதும்” ”அப்படியானால் பரவாயில்லை” ”நான் இந்த அளவுக்கு பலவீனமானவன் என்று நினைக்கவில்லை” என்றேன். ”ஆம் எனக்கும் அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் படித்தவர். வாசிக்கும் பழக்கமும் இருக்கிறது” என்றார் முக்கர்ஜி ”சுவாமிஜி பொதுவாக இப்படி ஒருவரை ஆரம்பத்திலேயே உள்ளே விடுவதில்லை. அவருக்கு ஏதோ திட்டம் இருக்கிறது”

”என்ன நடந்தது எனக்கு?” என்றேன். ”வேறொன்றுமில்லை. நம்முடைய இந்திய மனம் பலவகையான தீவிரமான மனப்பழக்கங்கள் கொண்டது. காமமும் நிர்வாணமும் இன்னமும் நமக்கு எளிதானவையாக இல்லை. நேரடியாக உடலை எதிர்கொள்ள நாம் இன்னமும் பழகவில்லை. ஆகவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் அகம் கடுமையான அதிர்ச்சியைச் சந்திக்கிறது… அதுதான்” என்றார் முகர்ஜி ”நான் இதை எப்படி விளக்குவேன் தெரியுமா? உங்கள் ஆழத்தில் உள்ள  தூய பிரக்ஞை மிகப்பெரிய ஒன்றை கண்டுகொண்டது. மேல் மனத்தில் உள்ள ஒழுக்கப்பிரக்ஞை அதை இறுக்கிப்பிடிக்க முயன்றது. உனக்குள் நிகழ்ந்த அந்த போராட்டத்தை உன்னால் தாங்கமுடியாமலானபோது உன் மனம் தன்னை அணைத்துக்கொண்டு அதில் இருந்து தப்பித்தது”

நான் ஒன்றும் பேசவில்லை. ”என்ன?” என்றார் முகர்ஜி. ”இதேபோன்ற சொற்களுக்கு நீங்கள் நன்றாக பழகிவிட்டிருக்கக் கூடும் என நினைக்கிறேன்” என்றேன் ”சரி, இது ஒரு ஊகம். சரியாக இருக்க வேண்டியதில்லை. இதுபோல எத்தனையோ ஊகங்களை சொல்லலாம். இப்படி எதைச் சொன்னாலும் அவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகவே இருக்கும். உண்மைக்கு மிக அருகே செல்வதுபோலவும் இருக்கும். உண்மையை நெருங்க முடியாதவையாகவும் இருக்கும்”

கார் சென்றுகொண்டே இருந்தது. சற்று நேரம் கழித்து முகர்ஜி மேலும் சொன்னார் ”தாயும் தந்தையும் உடலுறவு கொள்வதை பார்க்கும் குழந்தை அடையும் அதிர்ச்சி போன்றது இது என்று சொல்லலாம். நீங்கள் பார்த்தது ஓர் உண்மை. அந்த உண்மையை தாங்கும் சக்தி உங்கள் முதிராத மனதுக்கு இல்லை. ஆனால் அந்த உண்மைக்குப் பழகப் பழக நீங்கள் அதை சாதாரணமாக உணர முடியும்”

காரில் நெடுநேரம் ஆழமான அமைதி நிலவியது. முக்கர்ஜி தொடர்ந்தார் ”இதே அனுபவம் தலைகீழாக ஆகும் தெரியுமா? உங்கள் கண்ணிலும் நினைவிலும் காமம் குடியேறியபின் உங்கள் அம்மாவை நிர்வாணமாக பார்க்க நேர்ந்தால் –” ”ஓ, ஷட் அப்” என்றேன். ”ஸாரி” என்றார் முக்கர்ஜி ”பட் –” ”ப்ளீஸ்” என்றேன். அவர் ”ஸாரி…” என்று அமைதியடைந்தார்

கார் தாப்புவலைக்காரர்களின் டீக்கடை முன் நின்றது. சாலையில் செல்லும் வண்டிகளின் ஒளி அதை சுடரச் செய்து அணைப்பதன்றி வேறு விளக்கே இல்லை. காரை நிறுத்தி விட்டு ஒரு சொல் கூட பேசாமல் முக்கர்ஜி இறங்கிச் சென்றார். நாங்கள் அங்கே சென்றபோது கிட்டத்தட்ட எல்லா பெஞ்சுகளிலும் ஆளிருந்தது. கடைக்காரர் வந்து  இரு மர ஸ்டூல்களை போட்டார். நாங்கள் அமர்ந்துகொண்டோம்

எதிரே பெரச்சனைப் பார்த்தேன். அப்பால் தோமா. இருவரும் என் கண்களைச் சந்தித்து கண்ணிமைப்பாலேயே குசலம் செய்தனர். முகர்ஜி மெல்லிய குரலில் புட்டு பப்படம் பயறு சொன்னார். நான் என்னுள் ஆழ்ந்து அமர்ந்திருந்தேன். புட்டு வந்ததும் மௌனமாக சாப்பிட்டோம். மௌனமாகவே பணம் கொடுத்துவிட்டு எழுந்து தோமா ,பெரச்சன் இருவரிடமும் சிறு கண்ணசைவால் விடைபெற்று மேடேறினோம். திடீரென்று எனக்கு நான் மண்ணிலிருந்து ஆழத்துக்கு இறங்கி ஒரு பாதாள உலகுக்குள் சென்று மீண்டது போலிருந்தது. எலிகளின் உலகம். அல்லது ஆவிகளின் உலகம். மௌனமானது. கரும்பாறைபோல.

மீண்டும் காரில் இருவரும் இரு ஆவிகள் போல பயணம்செய்தோம். என் வீட்டுக்கு திரும்பும் வழியில் முக்கர்ஜி மென்ன கனைத்தார். ”நான் சொல்வது இதைத்தான். எதற்காக அடித்தளத்தை அஞ்ச வேண்டும்? எதற்காக உண்மைக்கு முன்னால் கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்? உண்மை அப்பட்டமானது. தாகத்துக்கு நீட்டிய கோப்பையில் கடல் வந்து கொட்டுவதுபோலத்தான் அது நம் முன்வரும் என்று ஒரு வங்காளி பவுல் பாட்டு உண்டு… நான் சொல்வதை சரியாகச் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை”

நான் ஏதாவது சொல்வேன் என்று தயங்கிவிட்டு முகர்ஜி மேலும் தொடர்ந்தார். ”உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்திக்கொள்வோம். அதன் பின்னர் நமக்கு கிடைக்கும் விடுதலையே அலாதியானது. பொய்யில் நாம் வாழும்போது நமக்குள் உண்மை ஒரு ரகசியமான பிரக்ஞையாக இருந்துகொண்டே இருக்கிறது. அதனால் ஒருபோதும் நம்மால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. நம் அகம் பதைத்துக்கொண்டே இருக்கிறது. நம் கால்கீழே பூமி எக்கணமும் சிதைந்துவிடும் என்ற பயம் இருக்கிறது நம்மிடம். ஆனால் இங்கே அது இல்லை. உண்மையின் கரும்பாறை மீது நாம் நின்றிருக்கிறோம்”

”கிறித்தவர்களை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். இந்த ஆழத்தை அவர்கள் உணர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதை பாவம் என்ற சொல்லைக்கொண்டு மூட முயல்கிறார்கள். தலையை மூடினால் கால் வெளியே தெரியும்.  தன்னை ஏமாற்றிக்கொள்ளாத ஒரு கிறித்தவன் வாழ்நாள் முழுக்க பாவத்துடன் போராடித் தோற்றுக்கொண்டே இருப்பான். அதன் குற்றவுணர்ச்சியை சுமந்து அவன் ஆன்மா வளைந்திருக்கும். அதை தன்னிடமிருந்தே மறைக்க வேடங்கள் போடுவான். அந்தரங்கத்தில் அச்சம் நிறைந்தவனாக இருப்பான்.  அதைவெல்ல எப்போதும் பைளைப்பற்றி பிறரிடம் பேசிக்கொண்டிருப்பான். அந்தச்சொற்களெல்லாமே அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது. ஒருவனை மதம் மாற்ற முடிந்தால் ஒரு கிறித்தவன் தனக்குள் இருக்கும் ஒரு அவிசுவாசியைத்தான் ஜெயிக்கிறான். பிராக்ஸி வார்…ஹஹாஹா!”

ஒருகட்டத்துக்குமேல் நான் அதைப்பற்றி எதையும் கேட்க விரும்பவில்லை. ஆனால் முகர்ஜி பேச விரும்பினார் ” அவன் தன்னை ஏமாற்றிக்கொள்ள விரும்பாத அளவுக்கு நேர்மையானவன் என்றால் தன்னை கசப்பு நிறைந்தவனாக ஆக்கிக்கொண்டிருப்பான். தோமஸைப்போல…பாவம் மனிதர்” என்றார் முகர்ஜி

நான் வெளியே பார்த்துக்கொண்டு  அமர்ந்திருந்தேன். முகர்ஜி மெல்ல அவரே பேச்சை நிறுத்திக்கொண்டார். மேனனின் வீட்டில் மெல்லிய சிவப்பு வெளிச்சம் ஜன்னல்கள் ஓட்டுக்கூரை இடுக்குகள்வழியாக கசிந்துகொண்டிருந்தது.  சூளை போன்றிருந்தது அந்த வீடு. முகர்ஜி ”வெல்…நான் சொல்ல வந்தது என்னவென்றால், நாம் காமத்தை பலவாறாக பிரித்து வைத்திருக்கிறோம். காதல் தாய்மை பாசம்….காமத்தை ஆதிப்பெரும் வல்லமையாகப் பார்த்தால்தான் அதிலிருந்து ஆரம்பித்து பிற ஆற்றல்களை நோக்கிச் செல்ல முடியும். ஆகவேதான்  சக்திவழிபாட்டில் காமத்தையும் அன்னையையும் ஒன்றாக இணைக்கிறார்கள் . நாம் நம் தாயால் வளார்க்கபப்ட்டிருக்கும் விதம் –”

”ப்ளீஸ் ஸ்டாப்பிட்” என்றேன். ”ஓகே. நாம் மறுபடியும் சந்திப்போம்” என் வீட்டு முகப்பில் முகர்ஜி காரை நிறுத்தினார். நான் இறங்கிக்கொண்டேன். ”எப்படி போவீர்கள்?” என்றேன். ”அது பிரச்சினையே இல்லை. மேனன் வீட்டில் யாராவது வருவார்கள் கூடவே சென்று நகரில் இறங்கி டாக்ஸியில் செல்வேன். பை” நான் படிகளில் நின்று ”பார்ப்போம்” என்றேன். ”கண்டிப்பாக. நான் வருகிறேன். இந்த முதிய யட்சியை தரிசனம் செய்துவிட்டுச் செல்கிறேன்…” சிரித்துக்கொண்டே தென்னை மரங்களின் வழியாக நடந்து சென்றார். நான் உள்ளே சென்று உடைகளுடன் படுத்துக் கொண்டேன்.

உரத்த சினிமாப்பாட்டொலியுடன் ஒரு சுற்றுலாப்படகு காயலில் சென்றது. ஏதோ இந்திப்பாட்டு. எல்லா இந்திப்பாட்டுகளும் ஒன்றுபோலிருப்பதாக, எங்கோ ஏற்கனவே கேட்டவையாக, தெரியும் எனக்கு. எனக்கு இந்தி அறிமுகம் மிகமிகக் குறைவு. படகின் முகப்பில் சூரல் நாற்காலியில் குண்டான  வட இந்தியர் சேட்டு அவரைப்போலவே குண்டான மனைவியுடன் ஒரு ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து அமர்ந்திருந்தார். மனைவி பூப்போட்ட பாலிஸ்டர் புடவையை முக்காடு போட்டு க்கொண்டு அமர்ந்திருக்க அவளருகே இரு பெண்கள் கரையை பைனாக்குலர் வைத்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

அவர்களுக்கு எப்படி அந்த பயணத்தை ரசிப்பதென தெரியவில்லை என்று ஊகித்தேன். எல்லாரும் சொல்கிறார்களே என்று கிளம்பி வந்திருக்கிறாரக்ள். ஆனால் இதில் என்ன இன்பம் இருக்கிறதென்றும் புரியவில்லை. நீர், தென்னைமரக்கூட்டங்கள், வானம். வேறு என்ன இருக்கிறது? இருட்டிவிட்டது. மரக்கூட்டங்கள் நிழல்குவியல்களாக ஆக ஆரம்பித்துவிட்டன.

மேனன் வீட்டில் இருந்து இசை கேட்டது. கூரிய வீணை அதிர்வு. மேனன் வெளியே இறங்கி  முற்றத்தில் நின்று என்னைப்பார்த்தார். பின்பு கையை ஆட்டினார். நானும் கையசைத்தேன். ‘ஹாய்” என்றபடி அவர் என்னை நோக்கி வந்தார். ”இங்கே என்ன செய்றே?” ”சும்மாதான்” ”சுவாமிஜியோட பூஜை உன்னை அதிர்ச்சி அடைய வச்சிட்டுதாமே” ”அதிர்ச்சி இல்லை…வேறு ஏதோ ஒரு மனக்குழப்பம்” ”இப்ப சரியாயிட்டியா?” ”பைன்” ”நீ அங்கே போயிருக்கவே கூடாது. ஐயம் ஸாரி, நான் தான் உன்னை அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். சுவாமி  உன்னிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை” ”அதனாலென்ன, ஓர் அனுபவம் தானே?”

மேனன் என்னருகே அமர்ந்தார். ”அனுபவம்னா, உண்மைதான்” என்றார். ”பட் திஸ் இஸ் டிரீம், தட் இஸ் நைட்மேர்” ”ட்ரூ” என்றேன். ”உண்மைய எதுக்காக அப்டி குரூரமா உருவகிச்சுக்கணும்? அழகா பரவசமா ஏன் அதை உருவகிச்சுக்கக் கூடாது? எனிவே இதெல்லாமே வெறும் உருவகங்கள் மட்டும்தானே?” என்றார் மேனன் ”என்ன பிரச்சினைன்னா இந்த ஆட்களுக்கு உண்மை உண்மையா இருந்தா மட்டும் போதாது. அது வந்து அறையணும். அதிர வைக்கணும். இவங்களுக்குள்ள இருக்கிற எல்லா பொய்யோட மிச்சங்களையும் அந்த வேகத்திலே அது அடிச்சுட்டு போயிடணும்….அவங்க எதிர்பார்க்கிறது அதுதான். ரப்பிஷ்”

”பின்ன என்ன செய்யலாம்கிறீங்க?” என்றேன். ”உண்மைன்னா அது கடல். கடல் மாதிரி அது வந்துட்டே இருக்கிறப்ப நமக்குள்ள இருக்கிற எல்லா பொய்யும் கொஞ்சம் கொஞ்சமா நாமே அறியாம கரைஞ்சு போயிடுதுல்ல? அது தான் சரியான வழி. எதுக்கும் அதுக்கான பரிணாம காலகட்டம் இருக்கு. அதுக்கான  அவகாசத்த நாம குடுக்கணும்…” ”எனக்கு இது ஒண்ணுமே புரியலை” என்றேன்.

”இங்கிலீஷிலே ‘லிவிங் இன் த டே லைட்’னு ஒரு இடியம் உண்டு. பொய்களிலே ஒளிஞ்சுக்காம உண்மையோட வெளிச்சத்திலே வந்து நிக்கிறதுன்னு அதுக்கு அர்த்தம். உண்மையிலே பகலே ஒருபெரிய மறைப்புதான். வெளிச்சம் ஆழத்திலே இருக்கிற எத்தனையோ விஷயங்களை மறைச்சிடுது. அந்த மறைப்பை களைஞ்சுட்டு வந்து வெட்டவெளியிலே நிக்கிறதுதான் ராத்திரியிலே வாழறது. லிவிங் இன் ப்யூர் சப்கான்ஷியஸ். நீ அதைத்தான் பயப்படறே. அதன் ஆழம் உன்னை பயமுறுத்துது”

நான் ”உண்மைதான்” என்றேன். ”எதுக்காக இந்த பயங்கரங்களை நான் சந்திக்கணும்னு இருக்கு” என்றேன். ”உனக்கு புற்றுநோய் இருக்குன்னா அதை உங்கிட்ட டாக்டர் சொல்லணும்னுதானே நினைப்பே? அதை தெரிஞ்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா அதுக்கு சமரசமாயிடுவே. அதிலே வாழ ஆரம்பிச்சிருவே. அதை அறியாம மூட சந்தோஷத்திலே வாழ ஆசைப்படுவியா? அப்டி வாழ்ந்திரத்தான் முடியுமா?” நான் ”எல்லாத்துக்கும் லாஜிக் இருக்கு” என்று புன்னகைசெய்தேன்.

”உண்மைதான்… லாஜிக்கை மீறி மனசுக்கு உண்மை தெரியும். அதாவது உண்மைய லாஜிக் வழியாத்தான் கைமாற முடியும். லாஜிக்கோட இடைவெளிகளிலே அதை ரகசியமா வச்சு பரிமாறணும்…” மேனன் சிரித்தார் ”கொஞ்சம் கொஞ்சமா நானும் ஒரு ·பிலாச·பரா ஆயிட்டு வர்ரேன் பாத்தியா? நைஸ்” நானும்  இறுக்கம் விலகி வாய்விட்டு சிரித்தேன்.

மிண்டும் சட்டென்று தீவிரமாகி மேனன் சொன்னார். ” தாந்தேயோட டிவைன் காமெடியிலே மாவீரனான யுலிஸஸ்தான் பாதாள உலகங்களுக்குப் போறான். ஒரு மாபெரும் வீரன் மட்டும்தான் ஆழங்களுக்கு போக முடியும். பயமே இல்லாதவன், தன்னோட ஆற்றல் வெளிப்படறதுக்கான சந்தர்ப்பமா எல்லா சவாலையும் பாக்கக்கூடியவன். அந்தமாதிரி வீரனாலதான் அங்கே போக முடியும்…” நான் பீமனைப்பற்றி நினைத்துக்கொண்டேன்.

மேனன் வீட்டுமுன் கார் வந்து நின்றது. அது நீலிமாவின் கார் என்றறிந்து என் மனம் படபடக்க ஆரம்பித்தது. நீலிமாவும் நாயரும் இறங்கி எங்களைப்பார்த்தார்கள். வீட்டுக்குள் இருந்து வந்த கமலாவும் எங்களைப் பார்த்தார். அவர்கள் எங்களைச் சுட்டி ஏதோ சொன்னார்கள். பின்பு மூவரும் எங்களை நோக்கி வந்தார்கள்.

நாயர் ”என்ன இங்கே? ·பிலாஸ·பியா?’ என்றார். ”கொஞ்சம்…” என்று சிரித்தேன். ”தானா கனியாததை தடியால அடிச்சு கனியவைக்கிறதுக்கு பேருதான் ·பிலாச·பி ” என்ற நாயர் அதை அவரே ரசித்து ஹோஹோ என்று அண்ணாந்து சிரித்தார். ”சரியாச்சொல்லணுமானா கனியவைக்கிறதுதான். ஆனா தடியாலே இல்லை. செறிய வயசிலே  எங்க வீட்டிலே பெரிய பலாக்காய்களை பறிப்பாங்க. அதை பழுக்க வைக்கணும்கிறதுக்காக காஞ்சிர மரத்திலே இருந்து குச்சி ஒடிச்சு அதிலே குத்தி வைச்சிருவாங்க. மறுநளைக்கே பழுத்து அறைமுழுக்க மணமா இருக்கும். அறுத்தா தேன் சொட்டும்” என்றார் மேனன். ”காஞ்சிரம் எப்டி கசக்கும் தெரியும்ல? கனியவைக்கிற கசப்பு தன் இஸ் ·பிலாஸ·பி”

நீலிமா சிரித்துக்கொண்டே பேசாமல் நின்றாள். எங்கள் கண்கள் சந்தித்து ரகசியமாக ஒரு புன்னகையை கைமாறிக்கொண்டன. பின்பக்கம் காயலில் ஒரு படகு எங்களை நோக்கி வந்தது. அதிலிருந்த படகோட்டி ”மேனன் சாரே? சவாரி உண்டோ?” என்றார். ”ஓ இந்நில்லடா” என்றார். ”வேம்பநாட்டு காயலிலேக்கு போகாம். அசலாய வேலியேற்றமுண்டு…” மேனன் என்னைப்பார்த்து ”என்ன போகலாமா?” என்றார். நான் ”ஓகே” என்றேன்

நாயர் ”நோ ஐ ஹேவ் நோ மூட்” என்றார். ”எந்நா தானிவிடே இருந்நோ” என்ற மேனன் ”அடுத்துவாடே” என்று படகுக்காரனிடம் சொன்னார். மோட்டார் பொருத்தப்பட்ட சிறிய உல்லாசப்படகு. பழங்கால கூண்டுவண்டிகள் போல கவிழ்க்கப்பட்ட கூடை வடிவப் பிரம்புக்கூரை .அதன் முகப்பில் அமர்ந்துகொள்வதற்கான சூரல் நாற்காலிகள், ஒரு மேஜை. உள்ளே பாட்டரியால்  இயங்கும் விளக்கு.

புகை அதிர அது  நெருங்கி வந்தது. முதலில் மேனன் இறங்கி படகுக்காரன் போட்ட பலகை வழியாக படகுக்குள் சென்றார். அதன்பின் கமலா செல்ல அவர் பிடித்துக்கொண்டார். கமலா ”ஊ” என்று உற்சாகமாக கூவி உள்ளே குதித்தார். அதன்பின் நீலிமா. கடைசியாக நான்.  படகு மெல்ல ஆடியபின் மெல்லிய மோட்டார் ஒலியுடன் கிளம்பி நீர் நடுவே சென்றது. படகுக்காரன் விளக்கை அணைக்க நாங்கள் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம். படகை நன்றாக திருப்பி நீரோட்டத்தில் விட்டுவிட்டு மோட்டாரை அணைத்துவிட்டான்.

மெதுவாக ஒழுக்கில் சென்றது படகு. ”மோட்டார் வேண்டே?” என்றேன் படகுக்காரனிடம். ”ஆஹா, இயாள் மலையாளம் படிச்சல்லோ” என்றார் கமலா சிரித்துக்கொண்டே நீலிமாவைப் பார்த்தபின். நீலிமா என்னை நோக்கி சிரித்தாள். படகுக்காரன் ”பெரியாற்று ஒழுக்குண்டு சாரே..நேரே கடலிலேக்கு போய்க்கோள்ளும். ராத்ரி பத்துமணிக்கு வேலியேற்றம் தொடங்ஙும். மடங்ஙி உள்ளில் வராம்…” என்றான். ”ஓரோ கட்டன் சாயா இடட்டே?” மேனன் ”ஆய்க்கோட்டே” என்றார்.

சூடான டீயை நீர் நடுவே அருந்துவது வினோதமான நிறைவை அளித்தது. இருபக்கமும் தென்னைமரத்தோப்புகள் நடுவே உயர்ந்த கட்டிடங்கள் மிதந்து பின்னால் சென்றன. ”இன்னும் கொஞ்ச வருஷம்…இந்த காயல்கரை முழுக்க ·ப்ளாட் வீடுகளாயிடும்” என்றார் மேனன் ”அப்ப நாங்க இங்கேருந்து போயிடுவோம். கொல்லம் பக்கம் போயிடலாம். அங்கே காயல் இன்னும் காயலாத்தான் இருக்கு” நான் ஒளிநிறைந்த கட்டிடங்களையே பார்த்தேன். மாபெரும் பொன்வண்டுகள் போலிருந்தன. காயலோரத்துச் சாலையில்  செம்மணிச்சரம் போல கார்கள் சென்றுகொண்டிருந்தன.

”நாங்க இங்கே வந்தப்ப இந்த நகரத்திலே இத்தனை கார்கள் இல்லை” என்றார் மேனன். ”இப்ப கேரளத்திலே கார்கள் இருக்கு ஓடுறதுக்கு ரோடுகள் இல்லை…சீக்கிரமே பணக்காரங்க ஹெலிகாப்டருக்கு மாறிடுவாங்கன்னு நினைக்கிறேன்” நகரம் மிதந்துகொண்டிருப்பது போலிருந்தது. நீலிமா அவளது பெரிய விழிகளால் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களுக்குள் செவ்வொளி மின்னிக்கொண்டிருந்தது. மாசற்ற கன்னங்கள். மென்மையும் உயிரும் வழிந்த கழுத்து. விரிந்த தோள்களில் கூந்தலிழைகள் வந்து படிய மெல்ல அவற்றை விலக்கி பின்னால் தள்ளினாள்.

பேச்சு மெதுவாக நின்றுவிட்டிருந்தது. விழிகளில் பிரக்ஞை மையம் கொள்ள சுழன்று பின்னால் மறையும் நகரையே பார்த்துக்கொண்டிருந்தோம். கொச்சி உயர்ந்த கிரேன்களில் விளக்குகளுடன் எங்களை நோக்கி மிதந்து அலைபாய்ந்து வந்துகொண்டிருந்தது. நான் வானத்தின் விண்மீன்களைப் பார்த்தேன். காற்றில் அவை ஆடுவது போல தோன்றியது. காற்றில் கட்டிடங்கள் திரைச்சீலை போல ஆடின.

சட்டென்று ஒரு கார் எதிரே திரும்ப அந்த செந்நிற ஒளியில் நீலிமாவையும் கமலாவையும் சில கணங்கள் பார்த்தேன். செந்தழலால் எழுதப்பட்ட இரு ஓவியங்கள் போல தெரிந்து மறைந்தார்கள்

[மேலும்]

முந்தைய கட்டுரைஅவதூறுகள் குறித்து…
அடுத்த கட்டுரைமூழ்குதல்