நவீன அடிமை முறை

download

வா.மணிகண்டன் அவரது துறையான கணிப்பொறியியல் வணிகத்தில் சமீபத்தில் நிகழவிருக்கிற பெரும் ஊழியர் வெளியேற்றம் பற்றி எழுதியிருக்கிறார். நான் வேலை பறிபோகும் என்ற அச்சமே இல்லாத ஒரு துறையில் பணியாற்றியவன். இன்றும் அத்தகைய அச்சமேதுமில்லை, ஓய்வுபெற்றுவிட்டேன். என் பிள்ளைகளும் அதில் இல்லை. ஆனால் அந்தக்கட்டுரை திகிலை அளித்தது.

எட்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ரயிலில் என்னுடன் ஓர் இளைஞர் பயணம் செய்தார். கணிப்பொறித்துறை ஊழியர். அத்தகைய இளைஞர்களைப்போல தன்னை ஓர் அமெரிக்கனாகவே பாவனைசெய்துகொண்டிருந்தார். என்னுடன் இருந்த இன்னொருவர் ரயில்வே தொழிற்சங்க ஊழியர். அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். இளைஞர் தனக்கு அரசியல் தெரியாது, அதிலும் இந்திய அரசியலில் ஆர்வமே இல்லை என்றார். தொழிற்சங்க அரசியல் என்பது தகுதியற்றவர்கள் மிரட்டல் மூலம் வேலைகளில் நீடிக்கச் செய்யும் ஒரு வழிமுறை என்றும் இந்தியா அழிந்ததே தொழிற்சங்கத்தால்தான் என்றும் சொன்னார்

தொழிற்சங்கவாதி பொறுமையாக பதில் சொன்னார். தான் பேசுவது இடதுசாரி அரசியல் அல்ல, வெறும் பொருளியல் என்று சொல்லி ஆரம்பித்தார். மக்கள்தொகை மிக்க இந்தியச்சூழலில் தேவை X இருப்பு சூத்திரத்தின்படி எப்போதும் உழைப்பவர்தரப்பு பலவீனமாகவே இருக்கும் என்றார். ஆகவே உழைப்பவர்கள் ஒன்றாகக்கூடி தங்கள் பலத்தை குவித்துக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்றார். தொழிற்சங்கம் அதற்கான வழிமுறைதான் என்றும் அது அவ்வப்போது சோம்பலையும் பொறுப்பின்மையையும் ஊக்குவிக்கலாம் , ஆனால் பொதுவாக தொழிற்சங்க அரசியலே இந்தியாவில் உழைப்பவர்கள் கௌரவமாகவும் நம்பிக்கையாகவும் வாழ வழிசெய்தது என்றும் விளக்கினார்

இளைஞர் ஒத்துக்கொள்ளவில்லை. திறமை இல்லாமல் இருக்கையிலேயே அதெல்லாம் தேவை, திறமை இருக்கையில் அது மட்டுமே பேரம்பேசும் ஆற்றலை அளிக்கும் என்றார். தொழிற்சங்கவாதி திறமை என்பது மேலோட்டமான சொல் என்றார். திறமையில் இரண்டுவகை உண்டு. பதிலி நீக்கம் செய்யப்படத்தக்கது , செய்ய முடியாதது [replaceable ,irreplaceable] என்றார். இரண்டாம்வகைப்பட்ட நிபுணர்கள் ஒருசதவீதம்கூட இருக்கமாட்டார்கள். முதல்வகையினரில் மிகத்திறன் வாய்ந்தவர்கள் உண்டு. அவர்கள் சங்கம் இல்லையேல் முதலாளியின் அடிமையாக வாழவேண்டியிருக்கும் என்றார். ‘தெறமை இல்லாம உலகத்திலேயே பெரிய ரயில்வே நெட்வர்க்கை முதலீடே இல்லாம நடத்திட்டிருக்க முடியாது தம்பி. ஆனா சமானமான தெறமை உள்ளவங்க ஆயிரம் பேர் இருக்காங்க, தேவை அம்பதுபேர்னா அந்த திறமைக்கு மதிப்பே இல்லை’

‘அதெல்லாம் இல்லை. திறமைய எவனும் ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றார் அந்த இளைஞர். ‘நீங்க சொந்தமா சாஃப்ட்வேர் உண்டுபண்றீங்களா? அந்த சாஃப்ட்வேர வேற யாருமே உண்டுபண்ண முடியாதா? அப்டீன்னா சரி’ என்றார் தொழிற்சங்கவாதி. இளைஞர் கோபம் அடைந்து கத்த ஆரம்பித்தார். ‘உங்களுக்கு என்ன தெரியும்? டெக்னாலஜி பத்தி ஏதாவது தெரியுமா?’ என ஆரம்பித்து சொல்மழை. தொழிற்சங்கவாதி ‘நான் அப்டி சொல்லல. எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது’ என்று சமாதானமானார்.

இளைஞர் கழிப்பறை சென்றபோது என்னிடம் “நம்பிக்கையோட இருக்காரு. நல்லதுதான். ஆனா லாபருசி கண்ட முதலாளித்துவம் பத்தி இவருக்கு இன்னும் தெரியாது’ என்றார்

அந்நிகழ்ச்சியை எண்ணிக்கொள்கிறேன். இந்தியாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் இந்த நவீன முதலாளிகளால் கைவிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தேசப்பொருளியலுடன் விளையாட இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வேலைநீக்கம் உண்மையில் தொழிலாளர்களின் உணர்வுகளை சிதைக்கும். நிரந்தரமான அச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களை கற்பனையும் சுதந்திரமும் இல்லாத அடிமைகளாகவே ஆக்கும். அதற்கு இந்த முதலாளிகள் அனுமதிக்கப்படக்கூடாது

கேட்டால் இது நவீனத்தொழில்நுட்பத்துறை, நவீனப் போட்டிப்பொருளியல் என்பார்கள். ஆனால் மறுபக்கம் இலவச மின்சாரம், இலவச நிலம், கடன் சலுகைகள் என அரசிடம் இருந்து மானியங்களைப் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். அங்கே சோஷலிசம் பேசுவார்கள். உலகப்போட்டியில் பங்குபெற அரசின் உதவி அவசியம் என்பார்கள்

தனியார்மயத்தின் தேனிலவு முடிந்துவருகிறது என்றே நினைக்கிறேன். தொழிற்சங்கம் வலுவாக இல்லாமல் எந்த உழைப்பாளியும், எந்த ‘திறமையாளனும்’ கௌரவமாக வாழமுடியாது

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69