விருதுகள்

220px-Sahitya_Academy_Award_to_Rambhadracharya

சாகித்ய அக்காதமி விருது

விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்படும்போதும் என்னைக்குறிப்பிட்டு ஒரு கெக்கலிப்பு கிளம்பிவரும். ‘இந்தமுறையும் ஏமாந்தான்யா’ என்றவகையில். சாகித்ய அக்காதமி விருதுகளை நான் விமர்சித்தேன் என்றால் ‘கெடைக்கலைன்னு புழுங்குகிறான்’ என்பார்கள். பாராட்டினால் ‘சமாளிச்சான்யா’ என்பார்கள்.;

நான் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்காக தவம் கிடந்து ஏங்கி ஏமாந்துகொண்டிருப்பதாக எழுதும் அவர்களைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். முதல் விஷயம் அவர்களுக்கு நான் என்ன எழுதுகிறேன் என்பதே தெரியாது. ஆகவே தமிழில் ஏதாவது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு முந்நூறு நாநூறு பேருக்கும் எனக்கும் என்ன வேறுபாடு என்றும் தெரியாது. எழுதுவது என்பதே புகழும் விருதுகளும் பணமும் பெறுவதற்காக மட்டும்தான் என்று உண்மையிலேயே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது எழுதும் சில்லுண்டி கவிதைகளும் கதைகளும் அந்நோக்கம் கொண்டவை. ஆகவே அவர்கள் காணும் அக்கனவையே நானும் கொண்டிருப்பேன் என எண்ணுகிறார்கள்.

இவர்களின் அகத்தில் உள்ள தாழ்வுணர்ச்சியை நான் அறிவேன். அதுவே பெரிய சாபம் அவர்களுக்கு. இன்பம் நிறைவு என ஏதும் கிடைக்காமல் நரகத்தில் வாழச்செய்துவிடும் அது. ஆகவே இவர்களை எப்போதும் பரிதாபத்திற்குரியவர்களாகவே எண்ணி வந்திருக்கிறேன்.

எழுத்துக்கள் மூலம் வாசகர்களில் ஆழமான பாதிப்பைச் செலுத்தி வாழ்நாள் முழுக்க அவர்களுடன் வளரும் தகுதி கொண்ட எழுத்தாளர்கள் ஒரு பண்பாட்டில் ஒரு தலைமுறையில் மிகச்சிலரே இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் அடைந்த வெற்றி நன்கு தெரியும். தங்கள் வரலாற்று இடம் தெரியும். தங்கள் சொந்த ஆற்றல் என்ன என்றும் தெரியும். ஆகவே மேலும் செல்லவேண்டிய தொலைவு பற்றிய தெளிவும் இருக்கும். அவர்களுக்கு விருதுகளோ அங்கீகாரங்களோ பாராட்டுகளோ உண்மையில் பெரிய விஷயம் அல்ல. அவர்களின் படைப்புகளால் பாதிப்படைபவர்களின் எதிர்வினைகளே முக்கியம். நான் அந்த இடத்தையே ஆசைப்பட்டேன்

எளிய வாசகர் பலருக்கு ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று கோப்பையை வெல்வது போன்றது இலக்கிய விருது என்ற எண்ணம் இருப்பதை அறிந்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் ஒருபடைப்பாளியை விருது மூலமே அறிகிறார்கள். விருது பெற்றவர் என்பதனால் மட்டுமே மதிக்கிறார்கள்.

இந்தவகை வெள்ளந்திகள் சென்ற சில வருடங்களாக விருதுகள் அறிவிக்கப்படும்போது என்னைக் கூப்பிட்டு மிகுந்த நல்லெண்ணத்துடன் ‘இந்தவாட்டியும் எதிர்பார்த்தேன் சார்’ ‘பரவால்ல சார் அடுத்தவருசம் வந்திரும்’ என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு நாகரீகம் கருதி நான் ஏதேனும் சொல்லி சமாளிப்பேன். ஏனென்றால் முதல்சாரார் போல காழ்ப்பு கொண்டவர்கள் அல்ல இவர்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை எனக்குச் செய்யப்படும் நேரடியான அவமதிப்பு இது. ஒவ்வொரு அவமதிப்பையும் கடப்பது மிகப்பெரிய பொறுமை தேவைப்படும் செயல்.

அதை இவர்களிடம் சொல்லிப்புரியவைக்கவும் முடியாது. ‘சாகித்ய அக்காதமி விருது பெறுவதனாலே என் முக்கியத்துவம் எவ்வகையில் கூடுதுன்னு நினைக்கிறீங்க? கெடைக்காததனால நான் கெடைச்சவங்களை விட எப்டி குறைஞ்ச படியிலே இருக்கேன் ?’ என்று கேட்டிருக்கிறேன். ‘ஒரு போட்டீன்னா அதில ஜெயிக்கணும்ல சார்?” என்றார் ஒருவர்.

சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்படும் விதம் பலருக்குத் தெரிந்திருக்காது. கல்வியாளர்கள், இதழாளர்கள், அக்காதமிக்கு நெருக்கமான இலக்கியவாதிகளால் நூல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒரு இருநூறு நூல்கள் முதல் கட்டத்தெரிவில் பரிந்துரைக்கப்படும். இன்னொரு குழு பரிசீலித்து அவற்றில் இருந்து ஐம்பது நூல்களை தெரிவுசெய்கிறது. அவற்றில் இருந்து மேலும் ஐந்தாறு நூல்கள். கடைசியில் மூன்று நூல்கள். அந்த மூன்றுநூல்களில் இருந்து ஒன்றை நடுவர்கள் விருதுக்கு அறிவிக்கிறார்கள்

சென்ற இருபதாண்டுக்காலத்தில் என் எந்த நூலும் அந்த இரண்டாம்கட்ட தேர்வில் இருநூறு நூல்களில் ஒன்றாகக்கூட வந்ததில்லை. ஆகவே நான் அந்த ஓட்டத்தில் எவ்வகையிலும் இல்லை. எப்போதும் இருக்கப்போவதும் இல்லை. அதை நான் இருபதாண்டுக்காலம் முன்பே அறிவேன்.

சாகித்ய அக்காதமி எழுத்தாளர்களுக்கு அளிக்கும் பயணத்துக்கான நிதிக்கொடைகள், நூல் எழுதுவதற்கான உதவிகள் எதையும் நான் பெற்றதில்லை. அதன் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. அது நடத்தும் பட்டறைகள். ‘ஆசிரியரைச் சந்தியுங்கள்’ நிகழ்ச்சிகளில் அழைக்கப்பட்டதும் பங்கெடுத்ததும் இல்லை. அதன் வட்டத்திற்குள்ளேயே நான் இல்லை. ஆகவே ‘நல்லவேள கெடைக்கலை’ என்ற அந்த குதூகலம் ’பரவால்ல சார் , குடுத்திருவாங்க’ என்ற இந்த ஆறுதல் சொல்லல் இரண்டுமே அசட்டுத்தனங்கள்தான்

இதற்கான காரணம் நான்தான். சென்ற இருபத்தைந்தாண்டுகளாக, அதாவது என் முதல் நாவல் வெளிவந்தகாலம் முதலே, சாகித்ய அக்காதமி விருதுகளின் கடுமையான விமர்சகனாக இருந்து வந்திருக்கிறேன். அசோகமித்திரன் உட்பட முதன்மையான படைப்பாளிகள் கௌரவிக்கப் படாமல் எளிய வணிக எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன்.

சாகித்ய அக்காதமியின் கனிவுப்பார்வை எனக்கு நான் எழுத வந்த அவ்வருடமே, 1991ல், அமைந்தது. ஆனால் நான் கலந்துகொண்ட அந்த முதல் தேசியக் கருத்தரங்கிலேயே மொத்த உரைகளும் இந்தியில் மட்டும் அமைந்ததையும் அவற்றின் மீதான கருத்துரைகளும் இந்தியில் அமைந்ததையும் அவற்றின்மேல் கருத்துரைக்க நான் அழைக்கப்பட்டதையும் கடுமையாகக் கண்டித்து மேடையிலேயே பேசினேன்.

‘இந்தி மட்டும் தேசியமொழி என நினைத்தீர்கள் என்றால் என் தேசம் இந்தியாதானா என்று எண்ணுமிடத்திற்கு என்னைத் தள்ளுகிறீர்கள்’ என்று பேசியது அன்று நாளிதழ்களிலேயே சர்ச்சைக்குள்ளாகியது. மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடும் நானும் இணைந்து ஒரு கூட்டறிக்கையும் வெளியிட்டோம். அதுவே நான் அக்காதமியில் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி

சாகித்ய அக்காதமி விருது 1992ல் கோவிமணிசேகரனுக்கு அளிக்கப்பட்டமைக்கு எதிராக அன்று இளம் எழுத்தாளனாக இருந்த நான் மிகக்கடுமையாக எதிர்வினையாற்றினேன். எனக்கு ஒரு விருது அறிவிக்கப்பட்டபோது அதை முந்தைய வருடம் கோவி மணிசேகரன் பெற்றிருந்தார் என்பதனால் வெளிப்படையாக அதை நிராகரித்தேன். அது சுபமங்களாவில் செய்தியாக வந்து விவாதிக்கப்பட்டது.

அப்போது என் மேல் அக்கறைகொண்ட, அக்காதமியுடன் நெருக்கமாக இருந்த இரு மூத்த எழுத்தாளர்கள் கூப்பிட்டு “இது நீ விருதுபெறும் வாய்ப்புகளை தடுத்துவிடும். விருதுக்கு எண்ணமிருந்தால் இத்தகைய விவாதங்களில் மௌனமாகவே இரு” என்றார்கள். ‘விருது பெறுவது அல்ல, சுதந்திரமான விமர்சனக்குரலாக நீடிப்பதே எழுத்தாளனாக என் கடமை என உணர்கிறேன். நான் முன்னோடிகளாகக் கொண்டவர்கள் அனைவரும் அத்தகையவர்களே’ என்று சொன்னேன்

சிலவருடங்களுக்கு முன் அக்காதமியுடன் நெருக்கமான ஓர் எழுத்தாளர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அப்போதும் ஒரு இந்தியப்பயணத்தில் இருந்தேன். கூட நண்பர்களும் இருந்தனர். ‘நீ விருத நிராகரிச்சிருவேன்னுதான் தயங்கறாங்க. உனக்குக் குடுக்காம மத்தவங்களுக்கு குடுக்க எங்களுக்கே வெக்கமா இருக்கு… இது யாரும் குடுக்கிறதில்லை. சர்க்கார் குடுக்கிறது. நீ சரீன்னு சொல்லு, நான் பாத்துக்கறேன்’ என்றார். ‘சாகித்ய அக்காதமி விருது எனக்கு இப்ப ரொம்ப சின்னது சார்’ என்று பாதிவிளையாட்டாகப் பதில் சொன்னேன்.

இதெல்லாம் மிகச்சிறியவர்களுக்கான மிகச்சிறிய விளையாட்டுக்கள். சாகித்ய அக்காதமி என்ற விருது மேல் எனக்கிருக்கும் ஒரே கவனம் அது தரமற்ற எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும்போது அவ்வெழுத்தாளரின் இடமென்ன என விமர்சகனாகச் சுட்டிக்காட்டுவது மட்டுமே

header

இயல் விருது

இவ்வருடத்தைய இயல் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு வாழ்த்து அளித்த அனைவருக்கும் நன்றி. சில நண்பர்கள் எனக்கு இது தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என சினத்துடன் எழுதியிருந்தனர்.

இயல்விருது எனக்கு மிகநெருக்கமாக உள்ள நண்பர்களால் வழங்கப்படுவது. தமிழில் கௌரவிக்கப்படாது போன முன்னோடிகளுக்காக ஒரு விருதை உருவாக்கவேண்டும் என்பதே அதன் பின்னணியில் உள்ள நண்பர்களின் எண்ணமாக இருந்தது. அவர்களின் நோக்கமும் முயற்சியும் மிக முக்கியமானவை.அவ்வகையிலேயே சுந்தர ராமசாமிக்கு முதல் விருதை அளித்தபடி அதை ஆரம்பித்தனர். இயல்விருது அளிக்கப்படுவதில் என்னுடைய பரிந்துரை எப்போதுமே முக்கியமானதாக இருந்துள்ளது

நடுவே அந்த விருதிற்கு இருந்த கல்வித்துறை சார்ந்த தொடர்பு காரணமாக சில பேராசிரியர்கள் உள்ளே புகுந்து தங்கள் வழக்கமான அதிகாரப் பங்கீட்டு விளையாட்டுக்களை ஆரம்பித்தனர். அதாவது சாகித்ய அக்காதமியில் என்ன நிகழ்ந்ததோ அதுவே அங்கும் தொடங்கியது. அதற்கு எதிரான என் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் என் எதிர்ப்பை கடுமையாக வெளிப்படையாகத் தெரிவித்தேன்

அதன்பின் பிழைகள் சரிசெய்யப்பட்டன. ஞானி, ஐராவதம் மகாதேவன் இருவருக்கும் அளிக்கப்பட்ட விருதை சென்னையில் நிகழ்ந்த விழாவில் நான் பங்கெடுத்துப் பேசினேன். கனடாவில் நிகழ்ந்த விழாவில் எஸ்.பொ அவர்களுக்கு விருதளித்தேன்.

இம்முறை விருது எனக்கு அளிக்கப்பட்டிருப்பது சற்று சங்கடம் அளிப்பதே. ஏனென்றால் நான் பரிந்துரை செய்யும் சிலர் இன்னும்கூட பரிசளிக்கப்படாமலிருக்கிறார்கள். ஆனால் நண்பர்களின் உணர்வுபூர்வமான கோரிக்கை. ஆகவே பரிசைப் பெறுகிறேன்.

DSC_0028

விஷ்ணுபுரம் விருது

இயல் விருது மீதான கோபத்தால்தான் விஷ்ணுபுரம் விருது உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கும்போது மூன்று விதிகளை போட்டுக்கொண்டேன். ஒன்று விருதின் பெயராலேயே இது கல்வித்துறை சார்ந்ததோ ஏதாவது அமைப்பு சார்ந்ததோ அல்ல என்று தெரியவேண்டும். இது அடுத்த தலைமுறை வாசகர்களால் மட்டுமே அளிக்கப்படுவது என்று தெரியவேண்டும். நவீன இலக்கியத்தின் கறாரான மதிப்பீடுகளின்படி இது அளிக்கப்படுவது என்று தெரியவேண்டும்.

ஆகவேதான் விஷ்ணுபுரம் விருது என்று பெயர். அதில் ஒரு சீண்டும்தன்மை, அறைகூவல்தன்மை உள்ளது. நவீன இலக்கியத்திற்கு நவீன இலக்கியமே விருது அளிக்கட்டும், எவரிடமும் வந்து நிற்கவில்லை நாங்கள் என்ற குரல் அதில் ஒலிக்கிறது. ஆம் இது எழுத்தாளர் எழுத்தாளருக்கு அளிக்கும் விருது மட்டுமே என்ற தொனி இருக்கிறது

விருதின் அனைத்து தளங்களிலும் இந்த அறைகூவல் இருக்கும். வெறுமே கொடுக்கப்படும் விருது அல்ல. விருதுபெறுபவர் மீதான ஒரு விரிவான மறுவாசிப்பு தொடங்கிவைக்கப்படும். அவரைப்பற்றிய நூல் ஒன்று வெளியிடப்படும் [இம்முறை ஆவணப்படம்] அவரைப்பற்றிய விரிவான இரண்டுநாள் உரையாடல் அரங்கு ஒருங்கிணைக்கப்படும். அவர்தான் விருதுவிழாவின் நாயகனாக இருப்பார். எத்தனை பெரிய விஐபி கலந்துகொண்டாலும் மேடையில், அழைப்பிதழில் விருதுபெறுபவரின் படம் மட்டுமே இருக்கும்.

இவ்விருதுதான் இன்று தமிழகத்தின் முதன்மையான இலக்கிய விருது. தொகை மட்டும் அல்ல. விழா, கருத்தரங்குகள், நூல்வெளியீடு என ஒரு முழுமையான இலக்கியவிருது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கும் விருது இது. இன்று வருடம்தோறும் 3 லட்சம் ரூ வரை செலவாகக்கூடிய நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. நூறுபேர் வரை வந்து இரண்டுநாள் தங்கி சாப்பிட்டு உரையாடும் திருவிழா.

இதன் செலவு ஏறி ஏறிச் செல்வது அச்சமூட்டுகிறது. எங்களுக்கு புரவலராக அமைய பலர் தயாராகவும் உள்ளனர். ஆனால் ஓர் அமைப்பை, நிறுவனத்தை, ‘பிராண்’டை மேடையில் அனுமதித்தால்கூட அந்த விருதுபெறும் படைப்பாளியின் இடம் குறைந்துவிடுமோ என அஞ்சுகிறோம். ஆகவே தவிர்க்கிறோம்.

பெரும்பாலும் நண்பர்களின் கொடையால்தான் இந்நிகழ்ச்சி நிகழ்கிறது. அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நான் நெஞ்சு நிறைந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இணையதளம்

தமிழ் இலக்கியத் தோட்டம் கனடா

முந்தைய கட்டுரைபெருமாளும் நடராசரும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்