மூழ்குதல்

இரவு வாசித்துக்கொண்டிருந்தபோது இரண்டுமுறை ஆச்சரியமும் மகிழ்சியும் கலந்து வந்நது.  ஒன்று, அவள் படகில் அமர்ந்து துடுப்புப் போடும் போது.  “ மல்ஸிய கன்னி’ எனற சொல் நினைவில் வந்து சென்றது.  ஆச்சரியம் !  கடைசியில் நீங்களும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

இரண்டாவது பிரசன்னாவின் உரையாடல்.  நுண்ணுணர்வு சற்று குறைவாக உள்ளவர்களுக்கும் அவர்கள் வாழ்வில் சில மகத்தான கணங்கள் அமைய வாய்க்கும்  சாத்தியங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.  இன்று வாசித்த போது ஆச்சரியப்படும் விதமாக நீங்களும் அதைக்குறிப்பிட்டிருந்தீர்கள்.  ஆனால் இரண்டு விஷயங்கள் நான் நேர் மாறாக யோசித்திருந்தேன்.

  1. அந்த கணம் பெரும்பாலும் அவன் கவனிக்காமலேயே போய் விட வாய்ப்பு உண்டு என்று நினைத்திருந்தேன்.  அந்த கணம் அவனுக்கு ஒரு எழுச்சியை அளிக்கலாம்.  முந்தைய கணம் அனுபவித்த கவலையை அவன் முழுதாக மறக்கச்செய்யும் பேரனுபவமாகலாம்.  அக்கணத்தின் அருமையை உணர்ந்து நினைவில் நிறுத்துமளவிற்கு அவனுக்கு நுண்ணுணர்வு இல்லாமல் இருக்கிறது.  இருந்தாலும் அவன் அக்கணம் வாழ்ந்தான். அந்த எழுச்சிக்கு ஆளானான்.  என் சிந்தனையில் உள்ள எளிய மனிதன் அதற்கு அடுத்தகணம் பழையது போல் கவலைகளில் சிக்கி உழறலாம.  நீங்கள் அவ்வகையினரைப் பழக்கம் வழக்கம் ஆகியவற்றின் சேர்க்கையில் வாழ்கையை அமைத்தவர்கள் என்கிறீர்கள்.  அவர்கள் எப்போதாவது ஆழத்திற்கு வரக்கூடும்; அந்த நினைவுகளின் தொகுப்பே அவர்கள் வாழ்கையின்  சுருக்கம் என்கிறீர்கள்.  அதாவது, மிகு எழுச்சிக் கணங்கள் முழு தன்னுணர்வுடன் தான் நடக்கும் என்கிறீர்கள்

இப்படி ஒரு அற்புத கணத்தை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  பிறகு அதை ஒரு சாமானிய வாழ்வில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று  சில தினங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறேன்.  

  1. எனது வரையறையில் உள்ள ஆழம் என்பது உயரிய மகிழ்சிக்கான இடம்.  ‘ஜாக்ரத்” அப்பால் பேரமைதி, பேரழகு என்று நினைத்திருக்கிறேன்.  அதற்கு நேர்மாறாக ஜாக்ரத்தில் மிதப்பவன் மூழ்கி எழும் கணங்களில் காயங்களையே கொண்டு மீள்கிறான் என்கிறீர்கள். உதாகரணமாக, நம்பிக்கைத் துரோகம்.  அது வெளிப்பட்ட தருணம் பெரிய அதிர்சியை ஏற்படுத்தும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது.  எனக்குப் புரியாதது –   அது ஒருவன் “அடைவது” ஆகாதே.  அவன் முன் வந்து விழுந்ததல்லவா.?

நான் கண்ணாடி பிம்பத்தைப் புரிந்து வைத்துள்ளேனா..?

அன்புடன்

கெ.பி. வினோத்

வினோத்,

பல வருடங்களுக்கு முன்பு ஒரு கேள்விக்குப் பதிலாக நித்யா சொன்னார், ‘உள்ளே இருப்பது வெளியே உள்ள அளவுகோலின்படி இனிது என்று யார் சொன்னது?’ என்று. சிக்கலான கேள்வி அது.

நாம் இந்த உலகில் சிலவற்றை அழகென்றும் இனிதென்றும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த அன்றாட உலகில் செல்லுபடியாகும்  அழகும் இனிமையும் தான் அவை. அழகு இனிது நன்று என்பதெல்லாம் ‘விருப்பத்திற்குரியவை’ [ காமிதம்] என்ற சொல்லாலேயே பல மூலநூல்களில் குறிப்பிடப்படுகின்றன. விருப்பமே அழகாக, இனிதாக தோற்றமளிக்கிறது. விருப்பப்படாதது குரூரமாக அச்சம் தருவதாக தீங்காக தோன்றுகிறது.

இந்த உலகில் புழங்கும் பிரக்ஞையின் அடியில் சென்று நாம் அறியும் ஓர் உண்மை இந்த உலகில் நம்மால் பயன்படுத்தப்பட முடியாதது ஆகலாம்.  இந்த உலகின் நம் நம்பிக்கைகளை குலைக்கலாம். நாம் வாழும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கலாம். அதை இவ்வுலகப் பிரக்ஞையில் வைத்து நாம் விரும்ப முடியாது. அது நமக்கு அழகிலாததாக, பயங்கரமானதாக, தீங்கானதாக தோன்றக்கூடும்

ஒரு மகத்தான நம்பிக்கை துரோகம் நமக்கு ஓர் அடிப்படை உண்மையைக் காட்டுகிறதென வைத்துக்கொள்வோம். உண்மையை  அதன் பயன்கருதாது நம்மால் விரும்ப முடிந்தால் அது இனியதாக ஆகாதா என்ன? அந்நிலையே முழுமையான அறிதலை நோக்கி நம்மைக் கொண்டு செல்ல முடியும் இல்லையா?

ஜாக்ரத்துக்கு அப்பால் உள்ள ஆழங்கள் ஜாக்ரத்தில் மகிழ்ச்சியாக, நிறைவாக மாற்றிக்கொள்ளக்கூடியவற்றால் ஆனவை அல்ல. இங்கிருந்து கொண்டு போகும் ‘கரன்ஸி’ ஏதும் அங்கே செல்லுபடியாகாது. இங்கே நாம் சமூகத்துக்காக, குடும்பத்துக்காக, தேசத்துக்காக உருவாக்கி வைத்துள்ள  எவ்வளவோ உருவகங்கள் அங்கே உருகிப்போகும். நான் என்ன சொல்கிறேன் என ஆழத்தில் நாமனைவருமே அறிவோம்.

அங்கே நாமறிபவை நம்முடைய எளிய வரையறைகளுக்குள் நிற்காதவை. அங்கே நாமறியும் அமைதி ‘மங்கல’மானது அல்ல. உண்மையின் தரிசனம் மட்டுமே அளிக்கும் அமைதி . அது  நம்மை இன்னொருவர் ஆக ஆக்கும்

ஆகவேதான் பரமஹம்சனின் சிம்மாசனம் வெறுமையால் ஆனது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஅவதூறுகள் குறித்து…
அடுத்த கட்டுரைபாலாவுக்கு விருது