premierknits’s message in tamil –
அன்புள்ள ஜெயமோகன், உயிர்மை இணையதளத்த்ில் இந்திராஜித்தின் தங்களைக்குறித்த அவதூறுகளை பார்த்தீர்களா? அதுகுறித்து தங்களின் எதிர்வினை என்ன? மௌனம் பல நேரங்களில் பலவீணத்தின் அறிகுறியாகிவிடும் என்பதை அறிவீர்கள் என்று நினக்கின்றேன் . அன்புடன்,
vijayakumar S
அன்புள்ள விஜயகுமார்,
இணையம் ஒரு திறந்த ஊடகம். இங்கே எழுத, கருத்து தெரிவிக்க தகுதி தேவையில்லை. தன் கருத்து ஏதோ ஒருவகையில் முக்கியமானது என ஒருவர் எவ்வகையிலும் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே எல்லாரும் எல்லாவற்றைப்பற்றியும் எழுதலாம்.
என்னைப்பற்றிய அவதூறுகள், வசைகள் ஆகியவற்றுக்கு நான் பதில் சொல்ல முயன்றால் அதற்கே நேரம் சரியாக இருக்கும். இணையத்தில் எப்படியும் ஐநூறு கட்டுரைகள் இருக்கும் என நினைக்கிறேன். எல்லா தளத்திலும் எழுதப்பட்டுள்ளன.
பொதுவாக இந்தவகையான எழுத்துக்களை நான் படிப்பதையே தவிர்த்துவிடுவேன். அதையே பிற எழுத்தாளர்களுக்கும் சொல்வே. தரமற்றவற்றை வாசிக்காதீர்கல். தரமானவை தானாகவே நம்மிடம் வந்து சேரும்.
என் கருத்துக்களை திரித்தோ, அவை இயங்கும் தளத்தின் தரத்தை அடையாமலோ, உள்நோக்கம் கொண்டோ கூறப்படும் கருத்துக்களையும் நான் பொருட்படுத்துவதாக இல்லை. இந்தப்புறக்கணிப்பு இல்லாமல் தீவிரமாக இயங்கும் எவரும் இணையத்தில் செயல்பட முடியாது.
நான் ஒருவரை பொருட்படுத்த வேண்டுமென்றால் அதற்கான தகுதியை தன் வாசிப்பு எழுத்து மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். அது அவரது எழுத்தில் வெளிப்பட வேண்டும்.
உயிர்மையைப் பொறுத்தவரை இம்மாதிரி ஆட்களை அது தொடர்ந்து கண்டு பிடித்து முன்வைக்கும். எனக்கு பிற அனைவரையும் விட மனுஷ்யபுத்திரன் மனம் எப்படி செயல்படும் என்று தெரியும். மேலும் இதேபோன்ற குரல்கள் தேடி எடுக்கப்படும்.
கொஞ்சநாள் காலச்சுவடு இம்மாதிரி அவதூறுகளை இதழ்தோறும் எழுதிக்கொண்டிருந்தது. அதற்கென்றே எழுத்தாளர்கள் கிளம்பி வந்தார்கள். இப்போது உயிர்மையின் முறை. இதன்மூலமெல்லாம் எந்த எழுத்தாளனையும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை இவர்கள் உணர்வதில்லை. இதழ் என்பது ஆக்கும் அழிக்கும் வல்லமை கொண்டதென்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய அவதூறுகளை எவராவது என்னிடம் விசாரித்தால் என் பதில் ஒன்றே. தாரளமாக அவையெல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள்ளுங்கள். மேற்கொண்டு என்னை வாசிக்கவும் செய்யாதீர்கள், அவ்வளவுதான். எனக்கு எந்த இழப்பும் இல்லை.
என் எழுத்துக்களே நான். உள்ளும் புறமும் நான் ஒன்றே. அதற்கு அப்பால் அந்தரங்கமென ஏதும் இல்லை. இத்தனை வலுவான எழுத்துக்கள் வழியாக ஒருவனின் ஆன்மாவை உணர முடியாத ஒருவரை மேற்கொண்டு விளக்கமளித்துப் புரியவைத்து என் வாசகராக ஆக்கித்தான் என்ன பயன்?
ஜெ