இரவு 19

 கூரிருளில்
கண்ணாடிக்கோப்பையில்
நிறைதுப் பருகுகிறேன்
இரவை
என் உடலின் ஆழங்களுள்
பரவுகிறது
என் நரம்புகளில் ஓடி
செல்களில் தேங்குகிறது
கரிய இரவு
பால்வீதிகளை
நகைகளாக அணிந்துகொண்ட
முடிவிலா இரவு

 நான் ஆசிரமத்தை அடையும்போது பத்தரை மணி. ஆசிரமத்திற்கு வெளியே காவலிருந்தது. சீருடை அணிந்த கரிய ஆள் கையில் டார்ச்சுடன் என்னை அணுகி ”ஆரா? எந்தா?” என்றான். நான் ”சுவாமிஜி விளிச்சு வந்நதா” என்றேன். ”ஸ்வாமிஜி எழுத்து தந்நிட்டுண்டோ?” நான் ”இல்ல, ஸ்வாமிஜியை அறியும்” என்றேன். அவன் ”எழுத்து இல்லாத ஆரையும் விடுகயில்ல” என்று சொல்லிவிட்டான். நல்லவேளையாக முகர்ஜி செல்போனை எடுத்தார் . நான் விஷயத்தைச் சொன்னதும் அவரே வாசலுக்கு வந்து காரை உள்ளே அனுப்பச் சொன்னார்.

நான் இறங்கியதுமே முகர்ஜி ”ஸோ யூ ஆர் அலோன்” என்றார்.” ”யா…ஹி இன்வைட்டட் மி ஒன்லி”. ”கமான்..” நான் அவருடன் சென்றேன். அவர் இடையில் ஒரு சிவந்த பட்டு துண்டு மட்டும் அணிந்திருந்தார். பூதாகரமான உடலில் இறுக்கமான தசைகளுடன் பயில்வான் போல தெரிந்தார். ”நீங்கள் முதலில் குளிக்க வேண்டும். இரவில் எதையும் சாப்பிட்டிருக்கக் கூடாது. சுவாமிஜி சொல்லியிருப்பாரே” நான் ”நான் குளித்துவிட்டுதான் வந்தேன். சாப்பிடவில்லை” என்றேன். ”இல்லை , இங்கே திரும்பவும் குளிக்க வேண்டும். நேரம் இருக்கிறது. வாருங்கள்” ஆசிரம வளைப்புக்குள் எங்குமே வெளிச்சம் இல்லை என்பதைக் கவனித்தேன். ஒரு விளக்கு கூட இல்லை. ஆனால் இருளுக்குள் நிறைய நடமாட்டம் இருந்தது.

முகர்ஜியின் ஸ்டுடியோவுக்குள் சுவர்களில் இருந்த யட்சி முகங்கள் இருளுக்குள் என்னை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அந்தப்பார்வை என்னை பதற்றம் கொள்ளச் செய்தது. முகர்ஜி ஒரு துண்டு மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு ”வாருங்கள்” என்று சொல்லி முன்னால் சென்றார். ஆசிரமத்தின் பின்பக்கம் ஒரு வெளியே செல்லும் வழி இருட்டுக்குள் வெண்தடம் போல தெரிந்தது. தென்னைமரங்கள் அடர்ந்த இருள் வழியாகச் சென்றோம். அப்பால் காயல் தெரிந்தது. ” இது காயலா/” என்றேன். ”காயலின் ஒரு வால்….நல்ல தண்ணீர்தான்” என்றார் முகர்ஜி

அங்கே ஒரு புதிய படித்துறை. அனேகமாக ஆசிரமத்தால் கட்டப்பட்டது ”நீங்கள் இங்கே குளிக்கலாம். நூற்றியெட்டு முறை நீரில் மூழ்க வேண்டும்” என்றார் முகர்ஜி ”மூழ்கி எழும்போது ஒவ்வொரு முறையும் நான் சொல்வது போல சொல்லுங்கள்” என்னருகே வந்து என் தோளில் கையை வைத்து மெல்ல கனத்த குரலில் ”ஓம் ஸ்ரீம் ஹம்” என்றார். நான் அதை வாய்க்குள் உச்சரித்தேன். ”ம்ம்” என்றபின் படியில் அவர் அமர்ந்துகொண்டார். நான் அவர் தந்த துண்டை வாங்கி கட்டிக்கொண்டு படிகளில் இறங்கி நீருள் புகுந்தேன். கீழே மணல். நீர் இளம் குளிருடன் இருந்தது.

 

மந்திரத்தைச் சொன்னேன். வாயில் புதிய ஒரு பலகாரத்தைப் போட்டது மாதிரி இருந்தது. சொல்லியபடியே மூழ்கி எழுந்தேன். மெல்லிய பாசிமணம் கொண்ட  நீர். மந்திரத்தைச் சொல்லியபடியே மூழ்கி எழுந்தேன். ஸ்ரீம் என்பது சக்திக்கான மந்திரம் போலும். மந்திர உபதேசத்தை பெரிய சடங்குகளுடன் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். இத்தனை எளிமையாக, சாதாரணமாக, அதை முகர்ஜி செய்தது ஆச்சரியமாக இருந்தது. இதென்ன நினைப்புகள். ஒரு மந்திரத்தைக்கூட முறையாகச் சொல்ல முடியாமல்…  மீண்டும் மந்திரம். எதற்காக இங்கே வந்திருக்கிரேன், ஏன் இதைச் செய்கிறேன்? எனக்கு இதில் ந்ம்பிக்கையும் இல்லை. மீண்டும் மந்திரம்… ஆனால்…

நூற்றியெட்டு எண்ணிக்கை சரியா? நான் மூழ்கி எழுந்ததும் முகர்ஜி ”ஓம் ஹ¤ம் மண்பத்மே ஹம்” என்று உரத்த குரலில் சொன்னார். நான் நீரில் இருந்து எழப்போக ”அந்த துணியை நீரிலேயே விட்டுவிட்டு நிர்வாணமாக ஏறி வாருங்கள்” என்றார் முகர்ஜி. நான் நிர்வாணமாக மேலே ஏறினேன். நூறு நூறாயிரம் கண்களால் ஆனதாக என்னைச்சூழ்ந்த வெளி தோற்றமளித்தது. மறுகணம் அது ஒரு கரிய ஆடைபோல என்னை வந்து மூடிக்கொண்டது. நான் எழுந்து நின்று திரும்பி காயலைப்பார்த்தேன். காயலும் வானமும் நிர்வாணமாக இருப்பது போல பிரமை எழுந்து உடல் சிலிர்த்துக்கொண்டது.

முகர்ஜி ஒரு சிவந்த பட்டுத்துண்டை நீட்டினார். நான் அதைக் கட்டிக்கொண்டேன். அவர் பேசாமல் திரும்பி நடந்தார். அவர் ஒன்றும் சொல்லாமலேயே மேற்கொண்டு எதுவும் பேசலாகாது என்பது எனக்குப் புரிந்தது. என் மனதில் நினைவுகள் ஓடின, ஆனால் அவை சொற்களில்லாமல் வெறும் ஓடைகளாக  பிரிந்து பிரிந்து வழிவதாக தோன்றியது. வானம் இதமான கரிய  ஒளியுடன் இருக்க கருமையின் ஒளியில் தென்னை ஓலைகள் மின்னி அசைந்தன. கடலில் இருந்து காற்று வரவில்லை. நிதானமான அலையோசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. 

 

ஆசிரம வளைவுக்குள் நுழைந்தபோது முதலில் என்னெதிரே வந்த கனமான வெள்ளையர் முழுமையான நிர்வாணத்துடன் இருப்பதைக் கண்டேன். அவரிடமிருந்து பச்சைகக்ற்பூரத்தின் வாசனை வீசியது. பின்னர் இரு இந்தியர்கள்.  நான்காம் முறையாக நிர்வாணமானவரைப் பார்த்ததும் நான் உடையுடன் இருப்பதை அசௌகரியமாக உணர ஆரம்பித்தேன். என்னை குடிலுக்குள் கொண்டுசென்ற முகர்ஜி ஒரு துண்டு கர்ப்பூரத்தை என்னிடம் கொடுத்தார். இன்னொன்றை எடுத்து இரண்டாக ஒடித்து தன்  இரு அக்குள்களுக்குள்ளும் வைத்துக்கொண்டார். நானும் அதே போலச் செய்தேன். அது உடலின் வாடையை இல்லாமலாக்கும் உத்தி என்று எண்ணிக்கொண்டேன்.

முகர்ஜி தன் துண்டை எடுத்து கொடியில் போட்டார். நான் அவரைப் பார்த்தேன். பெரிய சிலை போன்ற உடல். அவர் ஏதும் சொல்லாமல் வெளியே சென்றார். நானும் துண்டை எடுத்து கொடியில் போட்டுவிட்டு வெளியே சென்றேன். முழுநிர்வாணமாக இருக்கிறோம் என்ற துணுக்குறல் என் மனதுக்குள் வந்து சென்றது. என்னால் அதற்கு முடிகிறதென்பதே ஆச்சரியமாக இருந்தது. நான் என்னைச்சுற்றி யட்சிகளின் விழிகளைப் பார்த்தேன். என்னை உண்ணக்காத்திருக்கும் உதிரப்பசி கொண்ட மிருகங்களின் பார்வை.

சட்டென்று வெளியே சென்றுவிட்டேன். முற்றத்தில் சுழன்றுகொண்டிருந்த கடல்காற்றை உடலெங்கும் ஏற்றுக்கொண்டு கைகளை மார்பில் கட்டியபடி நின்றேன். பின்பு கைகளை எடுத்துக்கொண்டேன். நிர்வாணமான சமணச் சிலைகளைப்போல கைகளை தொங்க விட்டுக்கொண்டு நின்றேன். நிர்வாணம் ஏன் அந்தச் சுதந்திரத்தை அளிக்கிறது? இல்லை வெறும் மனப்பிரமை தானா அது?

அங்கே நடமாடிய அனைவருமே நிர்வாணமாக இருந்தார்கள். எவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவில்லை. தங்களுக்குள் மூழ்கி இயல்பாக நடப்பவர்கள் போலிருந்தனர். எனக்கு பெருமூச்சுகளாக வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு பெருமூச்சுக்கும் நான் இலகுவாக ஆகிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் அந்த இடம் கடலோசை எல்லாவற்றையும் வெகுதூரத்தில் கேட்க நான் எனக்குள் ஆழ்ந்து துண்டு கனவுக்காட்சிகளினால் ஆன ஓர் உலகுக்குள் சென்று கொண்டே இருந்தேன். அர்த்தமே இல்லாத கனவுப்பிசிறுகள். கனவு மட்டுமல்ல, நிகழ்ந்தவை. நினைவுகளுக்குள் கனவுகள் ஊடுருவியவை. பின்பு எப்போதோ நான் கனத்த பிசினாலான கடலொன்றுக்குள் மூழுகுவது போல அமைதிக்குள் மூழ்கிச்சென்றேன். காதுகள் அடைத்தன. கண்கள் மறைந்தன.

மீண்டபோது சுவர் சாய்ந்து அப்படியே நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன். அந்த அற்புதமான இன்மை உணர்வை நான் இரண்டாம் முறையாக அனுபவிக்கிறேன். அங்கே கடலும் வானமும் இருந்தன. இங்கே ஏதுமில்லை. ஆனால் இங்கே என் உடல் கடல் போல வானம் போல இருக்கிறது. அங்கே நான் கண்டதும் ஒரு நிர்வாணத்தைத்தானா? சொற்கள், மீண்டும் சொற்கள். இச்சொற்களை நான் முழுதும் விலக்க முடிந்தால்  நான் அகத்திலும் நிர்வாணம் ஆவேன்.

மணியோசை ஒலித்தது. ஒவ்வொருவராக கூடத்திற்குள் செல்ல ஆரம்பித்தார்கள். யாரும் யாரையும் அழைக்கவில்லை. யாரும் கூட்டமாகச் சேர்ந்து போகவும் இல்லை. நான் உள்ளே சென்று என் மனம் இயல்பாக தேர்வுசெய்த இடத்தில் அமர்ந்துகொண்டேன். கூடத்தின் பாதிப்பங்கு மெல்ல மெல்ல நிறைந்தது. அனைவருமே நிர்வாணமானவர்கள். பாதிப்பேர் வெள்ளையர்கள். பெண்களாக ஏழெட்டு வெள்ளைக்காரிகள் மட்டுமே. கூடத்தில் அந்த மையவிளக்கு மிகமிகச் சிறிய முத்துச் சுடருடன் எரிந்தது. அந்த ஒளியில் அங்கே நிறைந்திருந்த உடல்கள் நிழல்களை உருவாக்கி சுவர்களில் ஆடச்செய்தன.

நான் அந்த மந்திரத்தை உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன். சிலமுறை சொன்னபோது மந்திரம் மறைந்து உதிரி எண்ணங்களில் அலைந்து மீண்டும் மந்திரத்திற்கு திரும்பி வந்தேன். என் மனம் இத்தனை ஒழுங்கற்ற பாய்ச்சல் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. என் மனதுக்குள் நான் இடைவெளியே இல்லாமல் நான் நான் என்று எண்ணிக்கோண்டிருந்தேன். நான் சொல்கிறேன் நான் செய்கிறேன் நான் இருந்துகொண்டிருக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே இருக்கும் இந்த இதுதான் நான் போலும்.

மீண்டும் மணியொலி. வெளியே சங்கு முழங்கியது. பிரசண்டானந்தா வருகிறார் என்று நினைத்துக்கொண்டேன். வழக்கம்போல முன்னால் ஒரு சீடர் சங்கு ஒலித்து வர கையில் ஏந்திய சிற்றகலுடன் பிரசண்டானந்தா வந்தார். அவரது உடல் முழு நிர்வாணமாக இருந்தது. தாடியின் நிழல் மார்பில் விழுந்துக் கிடந்தது.  அனைவரும் அமைதியாக எழுந்து நின்றார்கள்

பிரசண்டானந்தா விளக்கைக் கொண்டு வந்து கும்ப வடிவில் நிறுவப்பட்டிருந்த சக்தியின் அருகே வைத்தார். அந்த விளக்கில் இருந்து முதல் திரியை கொளுத்தி அங்கிருந்த எல்லா தீபங்களையும் சுடரச்செய்தார் உதயபானு. பின்பு ஒரு பெரிய தாம்பாளத்தில் சுடர் முத்து எரியும் பீங்கான்அகல்களுடன்  சுற்றிவந்தார். ஆளுக்கொரு அகல்விளக்குகளை எடுத்துக்கொண்டார்கள்.  கூடம் முழுக்க சுடர்கள் அசைய அச்சுடர்களுக்குள் மனித உடல்கள் ஒளியுடன் அதிர்ந்தன. அந்தக்கூடமே கொன்றைமரம்போல செவ்வொளி இதழ்களால் நிறைந்தது.

 

ஓயாது மனியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. விளக்குகள் அடர்ந்து ஒளி எழுந்ததும்தான் நான் ஒன்றைக்கவனித்தேன். அந்த மொத்தக்கூடத்தையும் அடைத்துக்கொண்டு மாபெரும் சக்கரவடிவமொன்று தரையில் வரையப்பட்டிருதது. அதன் மீதுதான் அனைவருமே நின்றிருந்தார்கள். பல்லாயிரம் இதழ்கள் கொண்ட தாமரை. அந்த தாமரை இதழ்களுக்குள் சதுரங்களும் முக்கோணங்களும் ஒன்றையொன்று வெட்டித்தழுவி பின்னிச்சென்றன. சிவப்பு கருமை வெண்மை நிறங்களால் ஆன ஓவியம் அது. பலநூறு தாந்த்ரிக் ஓவியங்களில் நான் கண்டிருந்த சக்கரம்தான்.  அப்படி ஒன்பது சக்கரங்கள் உண்டு என்று அறிவேன். நடுவே தலைகீழ் முக்கோணம் கொண்ட அந்த சக்கரம் மூலாதாரம் என்னும் முதல்தாமரை. அதுதான் குண்டலினி உரங்கும் மலர். காம ஆற்றலின் ஊற்று.

தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்தின் முன் தாமரை வடிவிலான மணையில் பத்மாசனத்தில் அமர்ந்தவராக பிரசண்டானந்தா பூஜைசெய்ய ஆரம்பித்தார்.  இரு சீடர்களும் இருபக்கமும் நின்று அவருக்கு உதவிசெய்தார்கள். கும்ப வடிவிலானா சக்தி பிரதிஷ்டை மீது  விளக்குள் பட்டு அது ஒரு நெருப்புக்கோளம் போல சுடர்விட்டுக்கொண்டிருந்தது.  அந்த பூஜைகளையும் மந்திரங்களையும் அது தன் உடலே கண்ணாக பெற்றுக்கொள்வது போலிருந்தது. வெளியே இருந்து சீடர்கள் பல்வேறு பொருட்களுடன் உள்ளே வந்தார்கள். கும்பத்தின் முன்னால் விரிக்கப்பட்ட வாழை இலைகளில் ஏழு  குவியல்களாக சூடான மாவு கொட்டப்பட்டது. பச்சரியும் வெல்லமும் சேர்த்து இடித்தது என்று மணம் மூலம் தெரிந்தது. அருகே ஏழு குவியல்களாக ஏழுவகை செம்மலர்கள். தெச்சி, செவ்வரளி, தாமரை ஆகியவற்றை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிந்தது.

பஞ்ச தத்துவ பூஜை என்பதை இணையத்தில் தேடி வாசித்திருந்தேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று. ஐந்து ‘ம’க்கள். பஞ்ச மகாரம். மலர், மாவு, மது, மாமிசம், மங்கை. சில இடங்களில் மந்திரம் என்றார்கள். சில இடங்களில் மைதுனம் என்றார்கள். வங்காளத்தில் ஒருகாலத்தில் மாபெரும் வழிபாட்டுமரபாக இருந்திருக்கிறது.  இப்போது ஆனந்த மார்க்கிகள் போன்ற சிறு குழுக்கள் மட்டுமே செய்கின்றன. 

சீடர்கள் ஏழு மண்கலயங்களைக் கொண்டு வந்து வைத்தார்கள். சித்திரங்கள் வரையப்பட்ட சிறிய கலங்களில் கிரீடம் போல வெண் நுரை தெரிந்தது. வாசனையிலேயே அவற்றில் புளித்த கள் இருப்பது தெரிந்தது. அவற்றை கும்பத்தின் இடப்பக்கம் பரப்பி வைத்தார்கள்.  வலப்பக்கம் ஒரு மரபீடம் போடப்பட்டிருந்தது. அந்த பீடம் மீது வெள்ளி போல பளபளத்த ஒரு வாளை உதயபானு வைத்தார். அந்த வாளையே நான் பார்த்துக்கொண்டிருதேன். அது ஒரு கண் போல ஆகி என்னையே உற்றுப்பார்த்தது. 

என் மனம் பிரமைகொண்டு மிதப்பதை நானே கவனித்துக்கொண்டிருந்தேன். அங்கே இருந்த விசித்திரமான  சூழலே யதார்த்த உலகில் இருந்து விலக்கிக் கொண்டு சென்றுவிடுவது. ஓயாது சீராக ஒலித்துக்கொண்டிருந்த மனியோசை மனதை ‘மெஸ்மரைஸ்’ செய்கிறது என்று பட்டது. அங்கே நிகழ்ந்த எல்லா சடங்குகளும் மிகவும் சீராக நிதானமாக மெல்லிய் நடனத்தன்மையுடன் சடங்குகளாக நடந்தன. மெதுவான அசைவுகளுக்கே மனதை மயக்கும் தன்மை உண்டு. அவற்றிலிருந்து நம்மால் பார்வையை விலக்கவே முடிவதில்லை. ஒன்றில் அரைமணிநேரத்திற்கு மேல் கண்களை வைத்திருந்தாலே போதும் அது நம்மை மயக்கி பிரமையிலாழ்த்த ஆரம்பித்துவிடும். அதை நம் ஆழ்மனம் பார்க்க ஆரம்பித்துவிடும்.

ஏன் இப்படி பேசிக்கொண்டே இருக்கிறது மனம்? இங்கே நிற்கும் அத்தனைபேரும் அதைத்தான் செய்கிறார்களா? அப்படியானால் எத்தனை குரல்கள் இங்கே கேளாமல் ஒலித்துக்கொண்டிருக்கின்றன! இல்லை, தர்க்கம் மூலம் எனக்குள் விரிந்துகொண்டிருக்கும் கட்டவிழ்ந்த பிரமையை கண்காணிக்கிறேன். அதற்காகவே இச்சொற்களைச் சொல்கிறேன். இப்படி சீராகக் கோர்த்துக்கொள்கிரேன். ஆனால் இந்த சொற்கோவைகளுடன் சம்பந்தமே இல்லாமல் என் மனம் பித்து கொண்டு அங்கிருந்த காட்சிகளின் அசைவுகளுடன் சேர்ந்து அசைந்து கொண்டிருந்த்து. அந்த் மணியோசையுடன் சேர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

ஒரு சிறிய குறும்பாட்டுக் குட்டி தூக்கி வரப்பட்டது. அந்த மரப்பலிபீடம் மீது அது அமர்த்தப்பட்டது. எந்தக் கட்டும் இல்லாமல் அது வைக்கப்பட்ட இடத்திலேயே லேசாக நடுங்கியபடி அமர்ந்திருந்தது. அதை நன்றாக நனைத்திருந்தார்கள். அதன் கழுத்தில் சிவந்த மலர்மாலை போட்டு நெற்றியில் சிவந்த செந்தூரத்தை அப்பினார்கள். அதன் கண்கள் சிலையின் கண்கள் போல வெறித்து அசையாமல் நின்றன.

 

பிரசண்டானந்தா உரத்த குரலில் மந்திரங்களைச் சொல்லி கைகளால் விதவிதமான சைகைகளைச் செய்தபடி பூஜை செய்ய ஆரம்பித்தார். ஒரேபோல ஒலிக்கும் மந்திர உச்சாடனம் ரயிலோசை போல இருந்தது. சுழன்ற கையசைவுகளுடன் மலர்களையும் மாவையும் மாறி மாறி அள்ளி அந்த கும்பத்திற்கு ச் சமர்ப்பித்தார். நெடுநேரம் அந்த மந்திர உச்சாடனம்  நடந்தது. ஒருவேளை அங்கிருந்தவர்களில் நான் மட்டுமே அந்த காலப்பிரக்ஞையை அடைந்தேன் போலும் என எண்ணிக்கொண்டேன். பின்பு பிரசண்டானந்தா எழுந்து அந்த பளபளக்கும் கத்தியை எடுத்து மும்முறை தூக்கி, தாழ்த்தி வணங்கியபின் அந்த ஆட்டின் கழுத்தில் வைத்தார்

என் உடல் சிலிர்த்து புல்லரித்தது. அந்தக் கத்தியை என் கழுத்தில் உணர்வதுபோலிருந்தது. வெட்டு வெட்டு என்று என் அகம் பொறுமையிழந்து எம்பியது. அந்தக் கத்தி என் கழுத்தை குளுமையாக மென்மையாக வெட்டிக் கிழிக்க எனக்குள் இருந்து சூடான குருதியும் விம்மி நிறைந்திருந்த எண்ணங்களும் வெளியே பீரிட்டன. ஒரு தெறிக்கும் கட்டி உடைந்து சலம் வெளியேறியது போல என் உடல் நிம்மதியடைந்தது. என் மனம் காலியாகியது. என் குருதி தரையில் சிதறிக்கிடந்தது. என்னுள் குமிழியிட்ட அனைத்தும் சிந்திப்பரவிக்கிடந்தன.

பிரசண்டானந்தா குருதியை அள்ளி  அந்தக்குடம் மீது தெளித்தபின் திரும்பி கூடி நின்றவர்கள் மேல் வீசினார். என் கழுத்தின் மீது ஒரு மெல்லிய துளி பட்டபோது உடல் குலுங்கியது. அந்தக்குருதி நெருப்புபோல என் சருமத்தை எரித்தது. ஒரு மச்சம்போல அங்கேயே நிரந்தரமாக பதிந்துவிட்டது அது என எண்ணிக்கொண்டேன். சட்டென்று உலுக்கி விடுபட்டு கழுத்தை தொட்டேன். ஏதுமில்லை. மூக்கருகே கொண்டு சென்றேன். வாசனை ஏதுமில்லை. அதுவும் பிரமைதானா?

 

ஆட்டின் குருதியை மலர்களால் தொட்டு கும்பம் மீது போட்டுக்கொண்டே இருந்தார் பிரசண்டானந்தா. மீண்டும் மீண்டும் பொருளே இல்லாமல் ஒலிக்கும் மந்திரங்கள். இப்போது அந்த மந்திரங்களின் தாளமே என் சிந்தனையின் தாளமாக ஆகிவிட்டிருக்கிறது. என் விளிம்புகள் கரைந்து உள்ளே கொட்டிக்கொண்டிருக்கின்றன. நான் வேகமாக எல்லைகளழிந்துகொண்டிருக்கிறேன். அங்கிருந்து வெளியேற வேண்டுமென எண்ணிக்கொண்டேன். ஆனால் அதற்கு நான் பலரை தாண்டிச் செல்ல வேண்டும். தாண்ட என்னால் முடியுமா? அவர்கள் அனுமதிப்பார்களா?

வலப்பக்க வாசலில் இருந்து  இருபக்கமும் இரு சீடர்கள் இரு பந்தங்கள் ஏந்தி வர அந்த ஒளியில் அதிரும் காட்சியாக லிஸ் முழு நிர்வாணமாக வந்தாள். அவள் தனியாக வந்ததனால்தான் அந்த நிர்வாணம் கண்ணுக்கு தெரிந்தது. அந்த ஆட்டைப்போலவே அவளும் கனவிலிருந்தாள். அவள் வந்து நின்றதும் பின்னால் ஒருவன் ஒரு பீ£டத்தை எடுத்துவந்தான். கவிழ்ந்த தாமரைபோல மரத்தாலான பீடம். அதை அவன் வைத்து அதன்மேல் செவ்விதழ்களை அள்ளிப்பரப்பினான்.

பிரசண்டானந்தா எழுந்து கைகூப்பியபடி குப்புற நிலத்தில் விழுந்து முகமும் தோள்களும் மார்பும் தரைபடிய வணங்கினார். பின்பு எழுந்து அவளை இரு கைகளாலும் சைகை காட்டி வழிநடத்தி அந்த பீடத்தில் அமரச் செய்தார். அவள் அதன் மேல் அமர்ந்து வலதுகாலை விலக்கி தொங்க வைத்து இடதுகாலை தூக்கி மடித்து தொடையுடன் சேர்த்து அமர்ந்தாள். சிற்பங்களில் பெண்தெய்வங்கள் அமரும் முறை. அவள் பெண்குறி நன்றாக வாய்பிளந்து ஒரு ஆழமான உதிரக்காயம் போல தெரிந்தது.

என் நெஞ்சு அதிர்ந்துகொண்டே இருப்பதை உணர்ந்தேன். என் உடல்  குளிரில் நடுங்குவது போல நடுங்க கழுத்துச்சதைகள் இறுக்கமாக இழுத்துக்கொண்டிருந்தன. அவள் கழுத்தில் செம்மலர் மாலை போடப்பட்டது. அவள் காலடியில் அந்த வெண்கலக்கும்பம் கொண்டுவந்து வைக்கப்பட்டது. அவள் பெண்குறியை பார்க்கலாகாது என என் கண்களை விலக்கினேன். ஆனால் என் கண்களுக்கும் பிரக்ஞைக்குமான தொடர்பே முற்றிலும் இல்லாமலாகிவிட்டிருந்தது. என் கால்கள் உடலுடன் தொடர்பற்றவை போல துவள இடது தொடை மட்டும் துடித்துக்கொண்டே இருந்தது.

 

வேட்டைப்புலியின் குருதிவழியும் வாய்போலத் தெரிந்தது அவள் பெண்குறி. பின்பு எரிந்தெழும் செஞ்சுடர் போல. பின்பு ஒரு சினம் கோண்ட விழிபோல. அந்த விழி என்னை மட்டுமே நோக்குவதுபோல் இருந்தது. அங்கே என்ன நடக்கிறதென்பதையே நான் அறியவில்லை. நானும் அந்த விழியும் மட்டுமே அங்கிருந்தோம். மனம் திடுக்கிட்ட ஒரு கணத்தில் அது எனக்கு மிக அருகே இருந்தது. நான் அதன்பின் என் நினைவை இழந்து மெல்ல துவண்டு விழப்போகிறோம் என்ற உணர்வை கடைசியாக அடைந்து விழுந்துவிட்டேன்

[மேலும்]

முந்தைய கட்டுரைநைஜீரியப் படுகொலைகள்
அடுத்த கட்டுரைஅவதூறுகள் குறித்து…