தேவதை

நாளிதழ்களின் வார மலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்; ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்க இசையின் பங்களிப்பு’. இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பது வருடங்களில் வந்த பெரும் படைப்புகளில் ஒன்று  இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்தர ஆய்வு நூலையும் போலவே இதுவும் தன் துறையிலிருந்து மேலே சென்று ஒட்டு மொத்த மானுடக் கலாச்சாரம் பற்றி பேசுவதனால் தான் அந்த முக்கியத்துவத்தைப் பெற்றது என்பது என் கணிப்பு. ‘இசை என்னை ஒரு வெறும் புழுவென உணரச்செய்கிறது’ என்ற இந்நூலின் வரியொன்றை ‘ஸ்பை கேர்ல்ஸ்’ பாட்டாக பாடி பிரபலப் படுத்தியிருக்கிறார்கள். மேரி பென்சாம் ப்ளூவுட்ஸ் இதை எழுதும் போது நான் தான் தட்டச்சு செய்து கொடுத்தேன்.என் பெயரை நீங்கள் நன்றிகள் பகுதியில் காணலாம். இது இருபது வருடகால உழைப்பு. நான் ஐந்து வருடம் தட்டச்சு பணி செய்தேன். அம்மா நைஜீரியாவிலிருந்து ஓடிவந்து, மறுமணம் செய்து கொண்டு, புதுக் கணவனுடன் சேர்ந்து சலவை நிலையம் ஆரம்பித்து, நான்கு குழந்தைகளும் பெற்றுக் கொண்ட போது  நான் அன்னியமானேன். பள்ளியை முடித்த பிறகு வீட்டை விட்டு ஓடி தோழியுடன் தங்கி பகுதி நேர வேலை செய்து கொண்டு படித்துக் கொண்டிருந்தேன். தட்டச்சு வேலை மிக கவுரவமாக இருந்தது என்பதோடு எனக்கு எப்போதுமே மொழியில் மோகம் அதிகம்.

மேரி பென்சாம் என்ற பெயரை கேட்டவுடனே உங்களுக்கு நினைவு மின்னலிடவில்லையா? நீங்கள் ஆப்ரிக்க வரலாறை அறியாதவர் போலும். நைஜீரிய வரலாற்றில் அழியா இடம் பெற்ற ஒரு புகைப்படம் உண்டு. எங்கள் தேசத்திலும், ஆப்ரிக்கா முழுக்கவும், அரசியல் புனிதர் என்று போற்றப் படும் ரெவரெண்ட் ஃபாதர் டேவிட் க்வாமி அபாச்சா [Devid Kwame Abacha ] அவர்களை கேள்விப் பட்டிருப்பீர்கள். காந்திக்கு சமானமான மனிதராக அவர் எப்போதுமே குறிப்பிடப் படுகிறார். அவர் ஒரு வெள்ளைச் சிறுமியை வானத்தில் தூக்கிச் சுழற்றும் படம் அது. பின்னணியில் நீலவானில் வெண்மேகங்கள். அவர்கள் முகங்களில் துள்ளும் உற்சாகம், கண்களின் ஒளி. அவள் பாவாடையும், தலைமயிரும் பறக்கின்றன. ஃப்ளாஷுக்கு பதிலாக அழிவற்ற அன்பின் ஒளியைக் கொண்டு எடுக்கப் பட்ட புகைப்படம் என்று அதைப் பற்றி ஒரு கட்டுரையாளர் பின்பு எழுதினார்.

அந்த சிறுமி மேரி பென்சாம். அவள் தந்தை எட்வர்ட் பென்சாம் ப்ளூவுட்ஸ் ஆப்ரிக்காவுக்கு ஆங்கிலிகன் சர்ச்சின் பிரச்சாரகராக வந்தவர். அவளது தந்தையின் விருந்தினராக வந்த அபாச்சா ஒரு பொன் வெயில் மாலையில் தோட்டத்தில் அவளுடன் விளையாடும் போது புகைப்பட நிபுணர் ஜான் கிரகாம் வில்மான்*1 எடுத்த புகைப்படம் அது. முதன்முதலாக லோகோஸ் டெய்லி டைம்ஸில்*2 பிரசுரமாகியதுமே நைஜீரியாவை கொள்ளை கொண்டது. அது உலகமெங்கும் மறு பிரசுரமாகியது. பிற அனைவரையும் விட அது மேரியை ஆழமாக பாதித்திருக்க வேண்டும். அவள் படிப்பை முடித்ததுமே அபாச்சாவின் ‘கிறிஸ்து குடிலுக்கு சேவகியாகச் சென்று அவரது பணிப் பெண்ணும் செயலாளரும் ஆனாள். அபாச்சேவின் பெரும்பாலான படங்களில் அவளும் இருக்கக் காணலாம்.

அபாச்சா மிக மிக எளிமையானவர். கிறிஸ்தவ எளிமை என்பார்களே அதுதான் அவரது வாழ்க்கை. அதை பிறருக்கும் வலியுறுத்தும் இயல்பு கொண்டவர். நைஜீரியாவின் தென் பகுதியில் பெரும்பான்மையினரான யோருபா இடையர் குலத்தில் பிறந்த அவர் சிறுவயதிலேயே வெள்ளைப் பண்ணையாளர்களுக்கு அடிமையாக விற்கப் பட்டவர். அவருடைய புகழ் பெற்ற சுயசரிதை ‘கிறிஸ்துவை சோதித்துப் பார்த்தேன்!’ *3 ஐ நீங்கள் கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டும். நம் ஆத்மாவுடன் நேரடியாக பேசும் அம்மாதிரி நூல்கள் மிகக் குறைவே. நிறவெறி நிரம்பிய உரிமையாளர்களின் கற்பனைக்கெட்டா கொடுமைகள் வழியாக மெல்ல மெல்ல ஆன்மா முதிர்ந்து கனிந்தவர் அபாச்சா. குதிரைலாயச் சுவரில் எழுதி, எழுதி கல்வி கற்று தன் எஜமானன் குப்பையில் வீசிய பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அந்த முழுநூலையும் அவர் மனப் பாடம் செய்த பிறகு எப்போதுமே அதை மனதால் வாசித்துக் கொண்டிருப்பார். அபாச்சா வேறு எந்த நூலையுமே படித்ததில்லை, அவருடைய உலக அறிவு, அரசியல் பக்குவம், சொல் வன்மை அனைத்துமே அந்த ஒரே ஒரு நூல் வழியாக அடைந்தவையே என்றால் நம்ப மாட்டார்கள்.

இருபது வயதில் அபாச்சா தானே சம்பாதித்த பணத்தால் தன் விடுதலையை ஈட்டியதுமே நேராகக் கத்தோலிக்க திருச்சபைக்கு போய் தன்னை ஒரு சேவகராக இணைத்துக் கொண்டார். வட நைஜீரியாவின் ஹெளசா இனத்தவரிடையே சென்று ஊழியம் செய்யத் தொடங்கினார். உங்களுக்கு தெரிந்திருக்காது நைஜீரியா ஏறத்தாழ 255 இனக் குழுக்களாலான நிலப் பகுதி.ஒருபோதும் அது ஒரு தேசமாக இருந்ததில்லை. ஃப்ரடெரிக் லுகார்ட் *4 தன் ராணுவ பலத்தாலும், ராஜதந்திரத்தாலும் அதை இணைக்கும் வரை அது இரண்டு பெரிய அரசுகளும், இருபத்தேழு சிறு தேசங்களும் ஓயாது போர் புரியும் பிராந்தியமாக இருந்தது. நான்கு முக்கிய இனக் குழுக்களான யோருபா, இபோ, ஹெளசா, ஃபுலானி *5ஆகியோர் ஒருவரை ஒருவர் எங்கு பார்த்தாலும் கொல்லத் துடிப்பவர்கள். அபாச்சா எப்படி ஹெளசா மக்களை அணுகினார் எப்படி அவர்கள் அவரை புனிதர் என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பதெல்லாமே நம்ப முடியாத அற்புதங்கள். மனிதனின் ஆன்ம பலம் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துபவை. அவரது கைகள் பட்டாலே எல்லா நோய்களும் பறந்துவிடுமென அவர்கள் நம்பினார்கள்.

படிப்படியாக அவரை நைஜீரியாவின் எல்லா இன மக்களும் புனிதர் என ஏற்றார்கள். நைஜீரியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக லட்சியங்களின் குறியீடாக அவர் மாறினார் .உருவாகி வந்த நைஜீரிய தேசிய உணர்வின் தொடக்கப் புள்ளியாக அவர் ஆனார். அவர் தலைமையில் ஃபுலானி இனக் குழுவின் அபுபக்கர் தஃபாவாவும், யோரூபா இனக் குழுவின் அவலோவோ ஒபெஃபேமியும்,  இபோ இனக் குழுவின் அசிகிவீ ந்னாம்டியும் தலைவர்களாக*6 உருவாகி வந்தார்கள். அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு நைஜீரிய தேசிய ஒருங்கிணைப்பு கட்சி வலுப் பெற்று வளர்ந்தது. ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் அபாச்சா தலைமையில் ஒரு பெரும் மக்கள் இயக்கமாக மாறியது. வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிரான போர் வெள்ளையருக்கு எதிரான கறுப்பின நிறவெறி அல்ல என்று அபாச்சா சொன்னார். சாத்தானை கிறிஸ்துவால் மட்டுமே எதிர் கொள்ள முடியும், இன்னொரு சாத்தானால் முடியாது என்று அவர் சொன்ன பொன்மொழியை மேற்கோள் காட்டாத மேலைநாட்டு இதழ்கள் குறைவே. அந்த மகத்தான இலட்சியக் கனவின் உருவகம் அப்புகைப்படம்.

அந்தப் படத்திலிருந்து இறங்கி வந்தவர்கள் போல அபாச்சாவும், மேரி பென்சாமும் கிராமங்கள் தோறும் சென்று தேவாலய முற்றங்களிலும், சந்தைகளிலும் மக்களை சந்தித்தார்கள். அவர்கள் உடை நுனியைத் தொட மக்கள் கூட்டம் கண்ணீருடன் நெரித்தது. யுவதியாக தொடங்கியிருந்த மேரியின் தோள்களில் தன் முதுமையால் மெலிந்த கைகளை வைத்தபடி அபாச்சா நிற்கும் புகைப்படம் கிட்டத்தட்ட தெய்வ உருவமாகவே நைஜீரிய இல்லங்களில் வைக்கப் பட்டிருந்தது. லண்டனில் நான் மேரியை சந்தித்தபோது அந்தபுகைப்படங்களையே பார்த்திருந்தேன். .ஆனாலும் நாற்பத்தேழு வயதான மேரி எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.அவரிடம் அதே அழகு இருந்தது. காரணம் அவர் மணம் செய்து கொள்ளவில்லை. மேலும் மிக வசீகரமான ஓர் மர்மமும் அவரிடம் இருந்தது.

போ ஸ்ட்ரீட்டில் அவரது பங்களா பெரியது, ஆறு சேவகர்கள் இரு சமையற்காரர்கள் இருந்தார்கள். மேரி எவரையுமே வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. அவருக்கு இசை தவிர ஆர்வமே இல்லை. தினமும் தன் வோக்ஸ் வேகன் காரில் சேவகர் இருவர் துணையுடன் இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வார். அவர் வீட்டில் ஏறத்தாழ நாற்பதாயிரம் இசைத்தட்டுகள் இருந்தன. அவ்வப்போது ஆப்ரிக்க இசைக் கலைஞர்கள் வந்து தங்கள் இசையைக் காட்டி செல்வார்கள்.மேரிக்கு கறுப்பர்கள் மீது ஆழமான ஈடுபாடு இருந்தது. ஒரு சமையற்காரர் மற்றும் ஓர் ஆயா தவிர எல்லா வேலையாட்களும் கறுப்பர்கள் தான். ஆனால் எவரிடமும் ஓரிரு சொற்களுக்கு மேல் எப்பொதுமே அவர் பேசுவதில்லை. அவர் மிக அதிகமாக பேசியது என்னிடம்தான். ஒரு நாளில் அதிக பட்சம் அரை மணி நேரம் .அதுவும் புத்தகவேலை தொடர்பாக மட்டும்.

மேரியை சர்வதேசப் பத்திரிகையாளர்களும் அவ்வப்போது ஆப்ரிக்க நிருபர்களும் மொய்த்தபடியே இருந்தனர். அவர் எவரையுமே இம்மிகூட நெருங்க விடவில்லை. அபாச்சாவின் மரணத்துக்கு பிறகு மேரி நைஜீரியாவை விட்டு உடனடியாக லண்டன் வந்து விட்டாள். அவரது மாமியான காலம்சென்ற நான்ஸி கிறிஸ்டானா ப்ளூவுட்ஸின் பெரும் செல்வம் அவளுக்கு கிடைத்தது, அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அவள் அடுத்த முப்பது வருடங்களில் அவள் ஒரு முறைகூட அபாச்சா பற்றி ஒரு சொல் கூட பேசவில்லை என்பதும், அபாச்சாவின் நினைவு நாள் கொண்டாட்டங்களை நைஜீரிய அரசு தேசிய விழாவாக கொண்டாடிய போது பெருமைக்குரிய அரசு விருந்தினராக அவளை அன்றைய அதிபர் அசிகிவீ ந்னாம்டி அழைப்பு விடுத்த போதிலும் அதில் பங்குபெற உறுதியாக மறுத்துவிட்டதும், ஒருமுறை கூட தான் பிறந்து பதினெட்டு வயது வரை வாழ்ந்ததும், தன் பெற்றோர் நித்தியத்துயில் கொண்டதுமான நைஜீரிய மண்ணுக்கு வர முற்படாததும் வியப்பாகவே பார்க்கப் பட்டது.

உங்களுக்கு பின்னணியை விளக்கியாக வேண்டும். 1947 ல் பிரிட்டிஷ் அரசு, நைஜீரியாவுக்கு ஒரு ஜனநாயகக் கூட்டமைப்பு அரசை அமைக்கும் உரிமையை அளித்தது. அதுவரை நைஜீரியத் தலைவர்களிடம் இருந்த ஒற்றுமை அத்துடன் முடிவுக்கு வந்தது .இனக் குழுக்களிடையே மனக் கசப்பு வளர்ந்தது. 1954ல் பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் ராஜ தந்திரத்துடன் நைஜீரியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுதந்திர முன்வரைவை சமர்ப்பித்தது. வடக்கு நைஜீரியா ஹெளசா, ஃபுலானி இனங்களின் மேலாதிக்கம் கொண்டது. தெற்கு நைஜீரியாவில் இபோ மக்கள் அதிகம். ஏற்கனவே இந்த ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தனித்தனியான கட்சிகள்தான் இருந்தன. அவை நைஜீரிய தேசிய ஒருங்கிணைப்பு கட்சி என்ற பெயரில் ஒன்றாக செயல்பட்டு வந்தன. அந்த இணைப்பு சிதறியது, பெரும் கலகங்கள் வெடித்தன. ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப் பட்டனர். 1960 ல் நைஜீரியாவுக்கு கிடைத்த சுதந்திரம் ரத்தத்தால் மெழுகப் பட்டிருந்தது.

இன ஒற்றுமையின் அடையாளமாக இருந்த அபாச்சா திடீரென அனைவராலும் சங்கடம் தரும் கிழவராக மாறிப் போனார். பிற இனக் குழுவினரின் மீது இறுதி ராணுவ வெற்றியை அடைவதே ஒரே வழி என நம்பிய தலைவர்கள் அவரது சமாதன உபதேசங்களை சதித் திட்டமாக மட்டுமே பார்த்தனர். இஸ்லாமியரான ஹெளசா மக்கள், நாற்பதாயிரம் கிறிஸ்தவ இபோ இனத்தவரை கொன்றொழித்த கலவரத்துக்குப் பிறகு இபோ மக்கள் தங்களுக்கென பையாஃப்ரா*7 குடியரசு ஒன்று தேவை என்று போராட ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் ஹெளசா, ஃபுலானி மக்களால் ஆன ராணுவம் கொடுமையான் அடக்கு முறையை அவிழ்த்து விட்டது. சாலையோரங்களில் பிணங்கள் குவிந்து கிடப்பது சாதாரணமாயிற்று. தன் கனவுகள் நொறுங்கி கிடப்பதை அபாச்சா கண்டார் ‘கிறிஸ்துவின் சடலம் உயிர்த்தெழலற்று அழுகிக் கிடப்பது போல இருக்கிறது இந்த தேசம்’ என அவர் தன் புகழ்பெற்ற நாட்குறிப்பில் எழுதினார் . ஆனால் அவர்  சோர்ந்து விடுபவரல்ல. தன் ஆன்ம வல்லமை மீது அவருக்கு அப்போதும் நம்பிக்கை மிஞ்சியிருந்தது. சிலுவையை அணைத்தபடி கலவரம் எரிந்து கொண்டிருந்த இமோ மாகாணத்தின் அபா நதிக்கரை ஊர்களிலும், வெறி கொண்ட யோரூபா மக்களின் ஓகன் மாகாணத்திலும் தன் ஒருசில சீடர்களுடன் அவர் சுற்றுப் பயணம் செய்தார். அவர் மீது அழுகிய முட்டைகளும், சாணி உருண்டைகளும் வீசப்பட்டன. அவருடன் வந்தவர்கள் கற்களால் தக்கப் பட்டார்கள். ஆனால் ஆச்சரியகரமாக மூன்று வாரங்களில் கலவரம் மெல்ல தணிந்தது .

அந்த நேரத்தில் தான் புகழ்பெற்ற ‘இண்டிபெண்டண்ட் ஆஃப்ரிக்கன் ‘*8 நாளிதழ் அந்த பரபரப்பான செய்தியை வெளியிட்டது. மேரி உண்மையில் அபாச்சாவின் காதலி தான் என்ற அச்செய்தி நைஜீரியாவை கொந்தளிக்க வைக்கவில்லை, குழப்பியது! ஆனால் நாம் தீமையை உடனே நம்பி விடுவோம். ஏனெனில் நமது ஆழத்துத் தீமையை வைத்தே அதை நாம் புரிந்து கொள்கிறோம். பல மாதங்கள் வதந்தி எங்கும் அலையடித்தது. கடைசியில் ஒருநாள் அவலோவோ ஒபெஃபேமி கடும் கோபத்துடன் அபாச்சா தங்கியிருந்த கிறிஸ்து இல்லத்துக்கு வந்தார். விசாரணையில் அபாச்சா இரவில் மேரியையும் தன்னுடன் படுக்கச் சொல்கிறார் என்று தெரிந்தது. கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவலோவோ ஒபெஃபேமி, அபாச்சா இருந்த அறைக்குள் வேகமாக நுழைந்தார். உள்ளே அவரது குரல் மட்டும் வெகுநேரம் கேட்டது.

ஒபெஃபேமி கடும் கோபத்துடன் கிளம்பிச் சென்ற பிறகு அன்றைய மாலை ஜெபத்தில் அபாச்சா அவரது மரணம் வரை பலவருடங்கள் கத்தோலிக்க சபையையும், நைஜீரியாவையும் குழப்பிய அந்த விஷயத்தை சொன்னார். தீய எண்ணங்களின் வடிவத்தில் சாத்தான் தன்னை அணுகாமல் இருக்க அவர் தன் பேத்திக்கு சமானமான மேரியை தன்னுடன் படுக்க வைத்துக் கொள்வது வழக்கம். அவளது தூய்மையே, தன் ஆன்மாவின் காவல் என அவர் அனுபவப் பூர்வமாக உணர்ந்தும் இருந்தார். ஆனால் அந்த கலவரங்கள் அவரை குழப்பி விட்டன. தனக்கு இருப்பதாக கோடிக் கணக்கான மக்கள் நம்பும் புனிதம் உண்மையிலேயே தனக்கு இல்லையா, அதனால் தானா தன்னுடைய கருணை வன்முறையாளர்களின் மனதை கரைக்காமல் போகிறது என அவர் மனம் இரவும், பகலும் சஞ்சலம் கொண்டது. நான் வெறும் பாவி தானா, புனிதத்தின் சாயல்கூட என்னிடம் இல்லையா என தனிமையில் மனம் உருகி கிறிஸ்துவிடம் கேட்டார்.

பிறகு அவரது வழக்கப்படி கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் அவர் ஒரு சோதனையை வைத்தார். ஒருநாள் இரவு அவர் மேரி தூங்கிய பிறகு தன்னை நிர்வாணமாக்கிக் கொண்டு அவளை அணைத்து படுத்துக் கொண்டார். எழுபத்திரண்டு வயதில்கூட தன் உடல் பெண்ணுடலை அறிவதை பீதியுடன் அறிந்தார். எழுந்து கிறிஸ்துவை அழைத்தபடி வெளியே ஓடி, இருண்ட வானில் நட்சத்திர கோடிகள் சிதறிப் பரவிய பெருவெளி முன் ஒரு தூசியாகவும், புழுவாகவும் தன்னை உணர்ந்தபடி நின்று கதறி அழுதார். ‘அந்தக் கணம் நான் அறிந்தேன், நான் தோற்று விட்டேன்!’  என்று மனமுடைந்த குரலில் அபாச்சா சொன்னார் .அன்று அதைக் கேட்ட சபையில் இருந்த பெண்கள் சிலர் அருவருப்பால் காறி உமிழ்ந்தனர். சில ஆண்கள் வேறு பக்கம் நோக்கிச் சிரித்தனர். எந்த கண்களையும் பார்க்காமல் அபாச்சா தழுதழுத்தார். ‘என்னைப் புனிதனாக ஆக்காதீர்கள், நான் மிகச் சாதாரணன், புனிதன் என நீங்கள் நம்பியதை ஏற்றுக் கொண்டதனால் மேலும் கீழானவன்’. அபாச்சா அன்று தள்ளாடிய நடையுடன் பிணம் போல தன் அறைக்கு திரும்பியதாக சொல்கிறார்கள். மேரி அந்த சபையில் குனிந்த தலையுடன் சிலை போல அமர்ந்திருந்தாள்.

1957 ஜனவரி 13 மாலையில் தலைநகர் லோகோஸின் தூய இருதய தேவாலய படிக்கட்டில் இறங்கி வரும் அபாச்சாவை ஒரு யோருபா இளைஞன் சுட்டுக் கொன்றான்.  அபயம் கோரும்படியான விரித்த கைகளுடன் மல்லாந்து கிடந்த அபாச்சாவின் உடல் புகைப்படங்கள் மூலம் உலகம் முழுக்க சென்று மனசாட்சிகளை உலுக்கியது. கோடிக்கணக்கான மக்கள் தெருக்களில் கூடி நின்று கதறி அழுதார்கள். பலர் தாங்களும் உயிரை விட்டார்கள். அவரை கொன்ற இளைஞன் தன்னை சுட்டுக் கொண்டு  இறந்தான். அவர் சொல்லிய இறுதி வாக்கியம் ‘ ஓ ஜீஸஸ்!’ என்ற செய்தி உலகமெங்கும் கிறிஸ்தவர் மனங்களை கரைத்தது. பெஞ்சமின் டூஃப்லிங் * 9 எடுத்த அந்த புகழ்பெற்ற புகைப்படத்தில் உச்சியில் சிலுவையுடன் ஓங்கி நிற்கும் தேவாலயமும், படிக்கட்டும் அபாச்சாவின் உடலும் ஒரே சமயம் துல்லியமாக தெரிந்தது. அக்கணமே அவர் புனிதரானார். நிரந்தரத்துவம் பெற்றார்.

அபாச்சாவை கொன்ற சாலமன் ஷாகாரியை அவரைக் காக்க வந்த தேவன் என்று சொல்ல வேண்டும். மிக நீண்ட உபவாசங்களாலும், கொடுமையான தனிமையாலும் மெலிந்து வெளிறி பட்டாம்பூச்சி இறகு போல வெடவெடத்துக் கொண்டிருந்த அபாச்சா ஏற்கனவே பாதிப் பங்கு மரித்து விட்டிருந்தார். அவரது பிரார்த்தனைக் கூடங்களுக்கு சில பெண்கள் தவிர எவரும் வராமலானார்கள். அவர் பிரார்த்தனை மேடையில் உரையாற்றாமல் தனக்குள் ஆழ்ந்தவராக வெகு நேரம் நிற்பது வழக்கமாயிற்று. சிலசமயம் அவர் கண்களிலிருந்து கண்ணீர் மெளனமாக கொட்டிக் கொண்டிருக்கும். அவர் மீது வசை அச்சில் வராத தினமே இல்லை என்று ஆயிற்று. ஏதோ இரும்புத் தளையிலிருந்து விடுதலை கிடைத்தது போல மக்கள் அவரது வீழ்ச்சியை கொண்டாடினார்கள்.  ‘ மேரி, மேரி, எங்கே காட்டு உன் ஆன்மாவை’ என்ற சோங்காய் மொழி ஆபாசப் பாடல் மிகப் புகழ் பெற்ற ஒன்று. எல்லாம் அவரது மரணத்துடன் நுரை போல அடங்கியது. அத்துடன் அந்த குற்ற உணர்வு அவரை புனிதராக்கி ஆவேசத்துடன் வழிபட அவர்களை தூண்டியது. அத்துடன் யோரூபா இனத் தலைவர் அவலோவோ ஒபெஃபேமி அபாச்சாவை புனிதராக நிறுவுவதில் தன் அனைத்து சக்திகளையும் செலவழித்தார். பின்பு அவரும், அபாச்சாவும் அந்தரங்கமாக உரையாடியபடி இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து அச்சில் வந்தபடி இருந்தன.

மேரியிடம் நிருபர்கள் அறிய விரும்புவது எதை என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். அதை மேரி ஒரு போதும் சொல்லவில்லை. ஐம்பதாறாவது வயதில் இசை ஆய்வாளராக உலகப் புகழ் பெற்று மரணமடைந்தார். ஒருமுறை நான் நைஜீரியா திரும்புவதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவரிடம் இதைப் பற்றி துணிந்து நேரடியாக கேட்டே விட்டேன். ஆச்சரியமாக மேரி, ‘நீ எதிர்காலத்தில் நல்ல நாவலாசிரியை ஆக வருவாய் ஃப்ரைடா’ என்ற பிறகு ‘ஆம், உன்னிடம் சொல்லலாம். உனக்கு அது புரியும்’ என்றாள்.

‘அபாச்சே அந்த பிரார்த்னைக் கூட்டத்தில் பலர் முன்னிலையில் எதிர்பாராமல் அதை சொல்லியதை நீங்கள் மன்னிக்கவேயில்லை, இல்லையா? ‘ என்று கேட்டேன் .

‘இல்லை, அதில்லை’ என்றார் மேரி. ‘ அவர் உடைகளை களையும் போதே நான் விழித்துக் கொண்டேன். ஆனால் நான் காத்திருந்தேன். அவர் உடல் வெட வெடக்க எழுந்து ஓடியபோது நான் இருளில் எனக்குள்ளே புன்னகைத்தேன்.’

”என்னிடமிருந்து திமிறி எழும் அந்த சக்தி எது என எனக்கு புரியவில்லை.அந்த நிமிடத்தில் எனக்கு ஒன்று தெரிந்தது, அவரை அந்த இடம் வரை மிக மென்மையாக இட்டு வந்ததே நான்தான். என்னை அறியாமலே அதை செய்திருக்கிறேன்” மேரி புன்னகைத்தாள்.’ உண்மையில் அறியாமலுமல்ல. அறிந்ததை எனக்கு நானே காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான். அவர் அப்படி துடித்தபடி ஓடிய போது சுட்டு விரலால் தள்ளி மாபெரும் கற்கோபுரத்தை இடித்துத் தள்ளியது போல இருந்தது எனக்கு. உலகத்திலேயே சக்தி வாய்ந்தவளாக, ஊதியே மலைகளை பறக்கச் செய்யும் திறன் கொண்டவளாக, என்னை உணர்ந்தேன்’

‘உங்களிடமேயானால் கூட இதை நீங்கள் ஒத்துக் கொள்வது ஆச்சரியம்தான்’ என்றேன்.

‘ஆம். ஆனால் ஒத்துக்கொண்ட பிறகு என் மீது அழுந்திக் கனத்த எடைகள் எல்லாம் போய்விட்டது போல உணர்ந்தேன். அபாச்சா சொன்னாரே! பெருவெளியின் கீழே சிறு புழுவாக உணர்ந்த போது மனமுடைந்து அழுததாக. நானும் அப்படியே தான் உணர்ந்தேன் . ஆனால் அப்போது தான் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியாக இருந்தேன்’ மேரி பெருமூச்சு விட்டு ‘பாவம் அபாச்சா, மிக நல்ல மனிதர்!’ என்றார்.

மேரி இறந்தபின் இதை நாவலாக எழுதினேன். காமன்வெல்த் நாடுகளின் பெண்ணிய இலக்கிய விருதான தங்கநாரை பரிசு இப்போது அளிக்கப் பட்டிருக்கிறது. கதையை நிறைய மாற்றியிருக்கிறேன், குறிப்பாக சூழலை. பரிசுத் தொகையில் ஒரு பகுதியை காந்தி வாழ்ந்த மண்ணை பார்க்க செலவழிக்க வேண்டுமன பட்டது. அழகிய ஊர், எளிமையான மக்கள். காந்தி பிறந்த மண்ணைப் பற்றி நான் கற்பனை செய்தது போலவே இருக்கிறது .

===============================================

குறிப்புகள்

=======

1] John Graham Willmann ஆரம்பகால புகைப்பட நிபுணர் . தொழிலால் ஆங்கிலிகன் சபை பாதிரியார்

2] 1830 முதல் வெளிவரும் நைஜீரியாவின் முதல் நாளிதழ் .ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டது.

3] ‘ I Experimented Christ! ‘ Devid Kwame Abacha . Biography .Oxford University Press 1951

4] Frederick John Dealtry Lugard, (1858-1945), பிரிட்டிஷ் தளபதி, நில ஆய்வாளர் .ராஜதந்திரி .ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை உருவாக்கியமுன்னோடி. 1890 ல் ஆப்ரிக்காவில் நுழைந்தார். 1912 முதல் 1919 வரை நைஜீரியாவின் முதல் கவர்னர்.

5] Yoruba , Ibo தெற்குபகுதி இனங்கள்.Hausa, Fulani வடக்கில்.

6] Sir Abubakar Tafawa (1912-1966), நைஜீரியாவின் முதல் பிரதமர் (1960-1966) . Azikiwe, Nnamdi (1904- ), நைஜீரியாவின் முதல் அதிபர்(1963-66). Awolowo, Obafemi (1909-87), மேற்கு நைஜீரியாவை சிறிதுகாலம் ஆண்டார் [1954-1959]

7] Republic of Biafra. 1968ல் இபோக்கள் சுதந்திரப் பிரகடனம் செய்தனர் .1970ல் இம்முயற்சி ஒடுக்கப் பட்டது.

8] The Independent African .இடதுசாரி வெகுஜன நாளிதழ்

9] இண்டிபென்டண்ட் ஆப்ரிகனின் புகைப்பட நிபுணர். பிறகு டைம் இதழில் சேர்ந்தார்.

[இச்சிறுகதை இந்தியா டுடே இதழில் வெளியானது. இப்போது ‘ கூந்தல் ‘ சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. .[கவிதா பதிப்பகம் எண் 14, மாசிலாமணி தெரு, தி நகர், சென்னை 600017]

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2003]

முந்தைய கட்டுரைவரலாற்றின் பரிணாமவிதிகள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை அரசு சு.வெங்கடேசன்