«

»


Print this Post

நைஜீரியப் படுகொலைகள்


அன்புள்ள ஜெயமோகன் சார்,
 
நலமா. இந்த கடிதத்துடன் நைஜெரியாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடுரமான சம்பவத்திற்கு
பின்னால் எடுக்கப்பட்ட படத்தையும் அனுப்பி இருக்கிறேன். இது குறித்த என் மனக்குமுறலையும்
நண்பர்கள் வட்டாரத்தில் பதிவு செய்திருக்கிறேன். என் கருத்தில் தவறுகள் இருகின்றன.  விடை
தெரியாத கேள்விகள் பல இருகின்றன. என்னால் ஒரு எல்லைக்குமேல் சிந்திக்க முடியவில்லை.
உங்கள் பதில் என் நிம்மதியான தூக்கமற்ற சில இரவுகளை சரிப்படுத்தலாம்.

அன்புடன்

Guru

அன்புள்ள குருமூர்த்தி,

ஒரு சிறப்புக்கவனத்துடன் சிலகாலமாக நான் நைஜீரிய அரசியலைக் கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் நைஜீரிய அரசியலும் தேசியப்பிரச்சினைகளும் பல வகைகளில் இந்தியாவுடன் ஒப்பிடத்தக்கவை. இந்தியவரலாற்றை ‘வேறுவகையில் அது சென்றிருந்தால்’ என்று கற்பனை செய்து ‘என்ன நடந்திருக்கும்’ என ஊகிப்பதற்கானச் சாத்தியங்களைக் காட்டும் நாடுகளில் ஒன்று நைஜீரியா. நைஜீரியாவை வைத்து ‘தேவதை’ என்று ஒரு கதையும் எழுதியிருக்கிறேன்.

பெயர்கள் மற்றும் நுண்தகவல்களுக்குள் செல்லாமல் ஒரு சித்திரத்தை அளிக்கிறேன்.நைஜீரியா நம்மைப்போலவே பல இனங்கள் கூடிவாழ்ந்த நிலப்பரப்பு. அவர்களுக்குள் இனப்பகையும் போர்களும் இருந்திருக்கின்றன. கூடவே சமரசங்களும் ஒத்துவாழ்தலுக்கான வழிமுறைகளும் ஆசாரங்களும் இருந்தன. நம்மைப்போலவே மிகமிகத் தொன்மையான ஒரு நாகரீகம் விளங்கிய மண் அது. தொல்பொருள்த் தடையங்கள் நைஜீரியாவின் பாரம்பரியத்தின் ஆழத்தை ஒவ்வொரு அகழ்வுக்கும் விரிவாகக் காட்டிக்கொண்டே செல்கின்றன.

நைஜீரியாவில் இருந்த தொன்மையான மதத்தையும் பண்பாட்டையும் எப்படி விவரிக்கலாம்? வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற  பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது. அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள்.

அங்கே பலதெய்வக் கோட்பாடு வலுவாக திகழ்ந்தது. அவற்றில் பல இனக்குழுக்கள்  உயர்ந்த நாகரீகத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவே  தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய  அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தெய்வம் இன்னொரு இனக்குழுவுக்குச் செல்ல முடியும். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்  இந்தியாவில் நிகழ்ந்தது அதுவே. 

இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது. அதுவும் இந்தியாவைப்போலவே.

நைஜீரியாவில் உள்ள மேய்ச்சல் சாதிகள் எளிதில் அரேபியர்களுடன் ஒத்துபோயின. இஸ்லாமை ஏற்றுக்கொண்டன. வேட்டைசாதிகளால் அதற்கு முடியவில்லை. ஆகவே வேட்டைச்சாதிகளை மதப்பகைவர்களாக அறிவித்து கொன்றே ஒழித்தது இஸ்லாம். மனிதவரலாற்றின் ஆகப்பெரிய மானுடவேட்டைகளில் ஒன்று சொல்லப்படும்  இந்தப் படுகொலைகள் தொடர்ந்து பலநூற்றாண்டுக்காலம் நடந்தன. வேட்டைச்சாதிமக்கள் ஒருகட்டத்தில் முழுமையாகவே அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள்.

இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது.  எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.

அத்துடன் இந்திய ஞானமரபின் தாக்கம் கொண்ட அக்பர் போன்ற பேரரசர்கள் சமரசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள் என்பதும் ஒரு மாபெரும் ஆசியே ஆகும். அக்பரினால் மட்டுமே இந்தியாவை ஓரளவேனும் ஒருகு டைக்கீழ் ஆள முடிந்தது என்பது ஆச்சரியமல்ல. போர்க்குணம் கொண்ட ஆதிக்க இஸ்லாமில் ஞானத்தின் சமரசத்தின் ஒளியுடன் சூ·பி மரபு  ஊடுருவியதும் இந்தியாவில் நழ்லூழ்தான்.

அதன்பின் நைஜீரியாவில் காலனியாதிக்க காலகட்டம். இந்தியாவைப்போலவே முதலில் போர்ச்சுக்கல்காரர்கள். கடைசியில் பிரிட்டிஷார். இஸ்லாமாகாமல் எஞ்சிய மக்களை காலனியாதிக்க சக்திகள் கிறித்தவர்களாக ஆக்கினார்கள். நைஜீரியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட சரிபாதியாகவே இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகியது. இரண்டுமே தங்களுடையது மட்டுமே மெய் என்ற ஒற்றை தரிசனம் கொண்ட மதங்கள். எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லாதவை.மரபான  மதநம்பிக்கை கொண்ட நைஜீரிய சாதிகள் இன்று உதிரிநாடோடிகளாக வரலாறே இல்லாமல் வாழ்கிறார்கள். 

இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த  சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.

அவ்வாறு இந்து,பௌத்த,சமண மதங்கள் செய்தது பெரும் வரலாற்றுப்பிழை என்று இப்போது மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகள் உருவாக்குகிறார்கள். கருத்தரங்குகள் நிகழ்த்துகிறார்கள். இந்தியப்பண்பாட்டின் வேர்களை அழித்துவிட்டார்களாம். சொல்லாமல் இருப்பார்களா என்ன?   

1960ல் சுதந்திரம் பெற்ற நைஜீரியா நம்மைப்போலவே குருதியில் நனைந்துதான் அதை அடைந்தது. பிரிட்டிஷார் வெளியேறியபோது அதிகாரம் ஒருங்குதிரண்ட பெரும்பான்மையினரான இஸ்லாமிய மேய்ச்சல் சாதிகளிடம் சென்று சேர்ந்தது. அதற்கு எதிராக கிறித்தவ சாதிகள் கிளர்ந்தெழ அவர்கள் மீது மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. மக்கள் லட்சக்கணக்கில் கொன்றே குவிக்கப்பட்டார்கள். கிறித்தவர்களுக்காக பையா·ப்ரா என்ற தனிநாடு தேவை என்ற கோரிக்கை நைஜீரியாவில் எழுந்தது. அது நசுக்கப்பட்டது.

எண்பதுகளுக்குப்ப்பின்னர் பழைய காயங்களை ஓரளவு மறந்து நைஜீரியா முன்னேற ஆரம்பித்தது. முன்னேற்றமென்றால் சற்றே நகர்வு. பட்டினிச்சாவுகள் இல்லாத ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக ஆகியது. இந்நிலையில்தான் உலகமெங்கும் பரவிய வகாபியம் நைஜீரியாவில் எழுந்தது. நைஜீரிய இஸ்லாமியர்களில் நடுநிலையாளர்கள் சிலர் தவிர பிறர் கடுமையான அடிப்படைவாதிகளாக ஆனார்கள். நைஜீரிய கிறித்தவர்கள் மீது மீண்டும் காழ்ப்பும் கசப்பும் உருவாக்கப்பட்டது.

அதன் மறுபக்கமாக நைஜீரிய கிறித்தவர்களை அமெரிக்காவும், ஐரோப்பாவும் தூண்டி விட்டன. அவர்கள் தங்கள் பிரிவினைக் கோரிக்கைகளை மீட்டு எடுத்தனர். இந்தன் விளைவே இன்று நிகழும் வன்முறை. இது மேலும் தொடரவே வாய்ப்பு. இங்கே உலகை கூறுபோட்டு வன்முறைக்களமாக ஆக்கியிருக்கும் மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் அரேபிய  அடிப்படைவாத சக்திகளும் தங்கள் பிரதிநிதித்துவப்போரை நிகழ்த்துகின்றன. ஆகவே இது எளிதில் முடியாது. ஒன்றுமறியா மக்களின் குருதி ஓடும். அடைந்துவந்த சிறிய முன்னேற்றங்களைக்கூட நைஜீரியா இழக்கும். பெரும் பஞ்சம் நோக்கி நகரும். இதுவே நாம் எதிர்பார்க்கக் கூடியதாகும்.

சில வருடங்களுக்கு முன் ஸீமமெண்டா அடிச்சி என்ற நைஜீரியப் பெண் எழுத்தாளர்  எழுதிய ஒருநாவலை [Half Of A Yellow Sun ] அமெரிக்க இதழ்கள் போற்றிப்புகழ்ந்து துதிபாடின. அந்நாவலை வாசித்தேன். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்ட நாவல் அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. நைஜிரிய இஸ்லாமியர்கள் நைஜீரிய கிறித்தவர்களுக்கு பையா·ப்ரா போராட்டத்தின்போது இழைத்த கொடுமைகளை அப்பட்டமாக விவரிக்கும் கதை அது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி நாவல்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன.

அந்நாவல் மேலை ஊடகங்களில் புகழப்பட்டதும் நம்மூர் ஆங்கில நாளிதழ்கள் புகழ்ந்து முழுப்பக்க கட்டுரைகள் போட்டன. உடனே நம் சிற்றிதழ்களிலும் அதேபோல கட்டுரைகள் வந்தன. எஸ்.வி.ராஜதுரை அதை ஒரு கிளாசிக் என்று ஒரு நீளக்கட்டுரை எழுதினார். எஸ்.வி.ராஜதுரைக்கு இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது என்பது என் எண்ணம். அவரை தூண்டிவிடுவதற்கு ஒரேயொரு ஆங்கிலக் கட்டுரையே போதுமானது. அந்நாவலை முன்வைத்துப்பேசும்போது இதேபோல இந்தியாவிலும் ‘தேசிய இன’ போராட்டங்களின் வரலாறு எழுதபப்டவேண்டும் என்று ராஜதுரை அறைகூவுகிறார்!

அந்நாவல் அந்த அளவுக்கு மேலை ஊடகங்களால் தூக்கிப்பிடிக்கப்பட காரணம் வேறு என நான் ஊகித்தேன். அதைப்பற்றி நான் எழுதினேன். கடந்தகால புண்கள் காய்ந்து அமைதியாக வளரமுற்படும் நைஜீரியாவில் வன்முறையை மேலை ஊடகங்கள் தூண்டுகின்றன என்று ஐயப்பட்டேன். அங்கே அவர்கள் ஒரு பிரிவினை வாதத்தை  மீண்டும் ஊதி எழுப்புகிறார்கள் என்றேன். அதற்கு இந்தியாவில் அவர்கள் செய்வதே எனக்கு உதாரணமாக இருந்தது.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே  இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கபப்டுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள்.

உதாரணமாக , ஸீமமெண்டா என்கோசீ அடிச்சி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்க பல்கலைகக்ழக தயாரிப்பு. அவருக்கும் நைஜீரியாவுக்கும் இடையேயான உறவென்பது மேலோட்டமான ஒன்று. பையா·ப்ரா கலவரம் குறித்த விஷயங்களை மேலைநாட்டு பல்கலைக்கழக ஆய்வேடுகளின் உதவியுடன் சேகரித்தே அவர் நாவல் எழுதியிருக்கிறார். அவர் பிறப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் அவை.

அதன்பின்னர் இதழியலாளர்கள் திரிபுசெய்திகளை உருவாக்குவார்கள். ஒருகட்டத்தில் மேலைநாடுகள் நினைப்பதை  ஆசிய ஆப்ரிக்க மக்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவரை ஒருவர் கொல்வார்கள். தங்கள் நாட்டின் அரசியலைப்பை சமூகக் கட்டுமானத்தை தாங்களே அழிப்பார்கள்.  தங்கள் தேசத்தின் முன்னேற்றத்தை தாங்களே தடுத்து ஒழிப்பார்கள்.

நான் எழுதிய அக்கட்டுரைக்கு கடுமையான எதிர்வினைகள் பல வந்தன. நான் செயற்கையாக ஊகங்களை உருவாக்குகிறேன் என்று சொன்னார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், ‘ஸீமமெண்டா அடிச்சிக்கு அவர் தகுதிக்கு மீறிய விருதுகள் வழங்கப்படும் , அவரைப்போல பல எழுத்தாளர்கள் அதேபோல எழுதுவார்கள் . ஒருகட்டத்தில் நைஜீரியாவில் வன்முறை வெடிக்கும், பாருங்கள்’ என்று. அதுவே நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது நடந்ததில் கடுமையான மனவருத்தம் கொள்ளும் தருணம் இது.

இனி என்ன நிகழும்? இந்த அனலை ஊதி ஊதி பெருக்குவார்கள் அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்களும் பல்கலைக்கழகங்களும். மறுபக்கம் இஸ்லாமின் சமரசமில்லாத மதவெறி. ஆகவே அழிவு அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் கிழக்கு திமோர் போல ஒரு சுதந்திர கிறித்தவ நாடு நைஜீரியாவில் உருவாகக்கூடும். ஆனால் அதன் அழிவுகள் மிக அதிகமாகவே இருக்கும்.

அந்த வரலாற்றுக்கசப்பை வளர்த்து நம்மை மோதச்செய்ய எவர் முயன்றாலும் அதை மீறி நிற்கும் தேச ஒற்றுமை, சமூக இணக்கம் மூலமே நம் குழந்தைகளுக்கு ஒரு அமைதியான, வளமான தேசத்தை நாம் விட்டுச்செல்ல முடியும்.

இரண்டு, போலிஅறிவுஜீவிகள் போல ஆபத்தான, அழிவுசக்திகள் வேறில்லை. மிக எளிதில் விலைக்கு வாங்கக்கூடியவர்கள் அவர்கள். அகங்காரம் மூலமே அழிவை உருவாக்குபவர்கள். தங்கள் சொற்களால் உருவாகும் எந்த அழிவுக்கும் பொறுப்பேற்க மறுப்பார்கள். அந்த அழிவைப்பற்றி மேலும் விவாதிக்க ஆரம்பிப்பார்கள். சிறு காரணங்களுக்காகவே பிளவை, வன்முறையை, கசப்பை அவர்கள் தூண்டிவிடுவார்கள். மதம் இனம் மொழி எதன் பெயரிலும்.  பிளவுவாதத்தை முற்போக்குக் கருத்தாகக் காட்ட  அவர்களால் முடியும். எந்த நாசகார கருத்தும் முற்போக்கு முகமூடியுடன் மட்டுமே வரும்.

பிளவையும் வெறுப்பையும் உருவாக்கும் எந்த ஒரு அறிவுஜீவியையும் துரோகி என்றும் ஐந்தாம்படை என்றும் புரிந்துகொள்வோம். அவர் எந்த இலட்சியத்தைப் பேசினாலும்சரி எத்தனை முற்போக்காக பேசினாலும் சரி. தன்னை பிறர் பிளவுபடுத்த அனுமதிக்கும் சமூகம் அழியும்.

ஜெ

 

    
 

 
 

 

பழைய பதிவு
 
ஸீமமெண்டா என்கோசீ அடிச்சி ஒரு அமெரிக்க தயாரிப்பு. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவருக்கு நைஜீரிய வேர்களே இல்லை. கேள்விப்பட்டவற்றின் அடிப்படையில் மீண்டும் நைஜீரிய இனக்குழுசார்ந்த உபதேசிய கனவுகளை கிளறியும், இனக்குழு சார்ந்த அவநம்பிக்கைகளை சீண்டியும் இந்நாவலை எழுதியிருக்கிறார். முழுக்கமுழுக்க ஆறிய புண்கலை கிளறும் நோக்கம் கொட்ன ஒரு படைப்பு இது. ஆங்கிலக்கல்வி மிக தீவிரமாக பரவி வரும் நைஜீரியாவில் இந்நாவல் மிக விரிவான பாதிப்புகளை உருவாக்கும்.நைஜீரிய பின்னணி தெரிந்தவன் என்ற முறையில் [ நான் எழுதிய ‘தேவதை’ என்ற சிறுகதையில் நைஜீரிய இனக்குழு போராட்டம் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது] இந்நாவலில் உள்ள நுட்பமான ‘விஷம்’ என்னை அயரச் செய்தது. இந்நாவலை அமெரிக்க ஊடகங்கள் தூக்கிபிடிக்கின்றன என்பதற்கு மிக விரிவான அரசியல் திட்டம் கண்டிப்பாக உள்ளது. உண்மையில் இந்நாவலில் அடிச்சியை விட பிற கைகள் அதிக பணியாற்றியிருக்குமோ என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. நைஜீரியாவில் கண்ணிவெடிகளை புதைக்க முயல்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள். அவை வெடித்து அங்கே ரத்தஆறு ஓடினால் அவர்களே காமிராவுடன் போய் ‘ரவாண்டா ஓட்டல்’ போன்ற படங்களை எடுப்பார்கள். அவற்றைப்பற்றி நம் ஆங்கில இதழ்கள் கட்டுரைகள் எழுதும். நம் சிற்றிதழ் அறிவுஜீவிகள் பெரிய வியாசங்கள் சமைப்பார்கள்…
 
 
 பழைய பதிவு

இப்போது மெல்லமெல்ல அந்த பேதங்களை மறந்து அது மேலெழுந்து வருகிறது. உடனே மேலைநாட்டு ஊடகங்கள் மீண்டும் பிரிவினையை வித்திட்டு ஊட்டி வளர்க்கின்றன. சிமொண்டா அடிச்சி என்ற  அமெரிக்காவில் பிறந்த நைஜீரிய ஆங்கில எழுத்தாளரை மாபெரும் நைஜீரிய எழுத்தாளராக மேலை ஊடகங்கள் விருது கொடுத்து கௌரவிக்கின்றன. அவர் பழைய பயாப்ரா பிரிவினையின் புண்களை செயற்கையாக ஊதிப்பெருகச்செய்ய முயல்கிறார். விரைவிலேயே அங்கே மீண்டும் இனவாதம் வெடித்து வன்முறை உருவானால் ஆச்சரியமில்லை.

களப்பிரர்,பாண்டியர்,நூல்கள்:கடிதங்கள்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6836/

7 comments

Skip to comment form

 1. tamilsabari

  அமைதி என்று மற்றவர்களிடம் கூவுபவர்களின் வெளிப்படையான முகம் பரிதாபகரமாக தான் இருக்கிறது.

 2. ramji_yahoo

  comparison between Nigeria (African countries) with India, is like comparing apple with Orange. Though I have not visited Nigeria, due to my sins, I got a chance to visit Kenya for 3 days. oH God, such a poor country, ill cultured people.

  I always try to forget to those countries.

 3. ஜெயமோகன்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார்,

  சில வருடங்கள் முன்பு உங்கள் விஷ்ணுபுரம் நாவலை ஒரே மூச்சில் படித்திருக்கிறேன். நம்மாழ்வாரை குறிப்பதுபோல கேலியாக நீங்கள் விஷ்ணுபுரத்தில் சித்தரித்திருந்தது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. அந்த கோபத்தில் உங்கள் கதை கட்டுரைகளை படிக்காமலே இருந்தேன்.
  என் நண்பர்கள் உங்களின் பல கட்டுரைகளை படிக்கச் சொல்லிசொல்வார்கள்.

  அண்மையில் உங்கள் மலரிலிருந்து மணத்துக்கு… [http://www.jeyamohan.in/?p=4003] கட்டுரை படித்தேன். என்னை நெகிழ வைத்த கட்டுரை அது. அது முதல் தங்களது வலைப்பக்கத்தை தொடர்ந்து படிக்க இயலாமல் போனாலும் அவ்வப்போது படித்து வருகிறேன். கடந்த சில மாதங்களில் காடு, சிறுகதை தொகுப்புகள், விசும்பு ஆகியவையும் படித்து விட்டேன். ஆழ்ந்த பார்வையும், புரிந்துணர்வும், மனிதர்களின் மீது உங்கள் பரிவும் எனக்கு உங்கள் மீது மரியாதையும், பக்தியுமே ஏற்படுத்தி வருகின்றன.

  நைஜீரியப் படுகொலைகள் குறித்த கட்டுரை, அந்த புகைப்படமே மனதை உலுக்கி விட்டது.

  ஒரே கட்டுரையில் ஒரு சம்பவத்தின் வரலாற்று பின்னணியும், அரசியலும், நிகழ் எதிர்காலங்களும் என்று எடுத்து காட்டி இருக்கிறீர்கள். கட்டுரை மிக அருமை. படித்த உடனே உங்களுக்கு ஒரு வரியாவது எழுதி போட்டு விட வேண்டும் என்று தோன்றியது. கடவுளின் பெயரால் நூற்றாண்டுக் கணக்கில் ஒரு தேசம் ரத்தம் சிந்துகிறது என்பது கொடுமையான விஷயம். நீங்கள் அடிக்கடி சொல்கிற இந்திய ஞான மரபை இன்றைய குருமார்கள் இது போன்று அமைதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு எடுத்துச் சென்று அறிமுகப் படுத்தலாமோ என்று தோன்றியது. இந்து மதம் என்று இல்லாவிட்டாலும் பௌத்த – சிரமண மதக் கருத்துக்கள் அந்த மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆனால் பௌத்தம் தழைத்த இலங்கை என்ன வாழ்கிறது என்றும் தோன்றுகிறது.

  மதத்தால் மனிதர்கள் அடித்துக் கொண்டு மடிவது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் குறையப் போவதில்லை என்று மட்டும் விரக்தி ஏற்படுகிறது.

  அன்புடன்
  ஸ்ரீகாந்த்

  அன்புள்ள ச்ரிகாந்த் நன்றி.

  மனிதாபிமானம் என்பதெல்லாம் ஒரு மனப்பழக்கம் மட்டுமே. மனிதன் இயல்பில் பூசலிடும் தன்மை கோன்ட உயிரினம். சேர்ந்து வாழ்வதற்காக அவன் தேடிக்கொன்ட பண்புகள்தான் பண்பாடும் நாகரீகமும் மனிதாபிமானமும் அனைத்தும். மிக மென்மையான தளைகள் இவை. எந்தக் காரணத்தாலும் இந்த தளைகளைக் கழற்றி விளையாடலாகாது. நம் எதிரிகளுக்கு எதிராக நாம் வன்முறையை எடுத்துக்கொன்டால் நம் சகோதரர்களுக்கு எதிராகவும் அதை பயன்படுத்தாமலிருக்க மாட்டோம்

  இந்தியாவில் பன்னெடுங்காலமாக மிகமிக மெல்லத்தான் , ஏராளமான பின்னடைவுகளுடன் , சகவாழ்வுக்கான ஒத்திசைவு உருவாகி உள்ளது. உலகவரலாற்றை எடுத்துப்பார்த்தால் மூன்று பெருமதங்களின் விளைநிலமான இங்கே மதமோதல் மிகமிக குறைவு. எல்லா மதங்களையும் ஒரேசமயம் சகஜமாக ஆதரிப்பதை நாம் சிலப்பதிகாரம் போன்ற செவ்வியல் நூல்களில் கான்கிறோம். மதங்கல் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயைந்து கலந்து வாழ்ந்த வரலாறே நமக்குள்ளது.

  அந்தப் பண்பாடு நம் செல்வம். அது நம்மை பலவீனமாக்கிவிட்டது என்று சொல்லும் ஒரு குரல் இன்று உள்ளது. அது நம்மை ஆன்மவல்லமை கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதை நாம் உணர்வது இத்தகைய உதாரணங்கள் மூலமே

  ஜெ

 4. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ.
  வணக்கம்.
  நைஜீரிய படுகொலை பற்றிய புகைப்படத்தை விட, உங்கள் கட்டுரை திகைப்பூட்டுகிறது. ஏனெனில், உங்கள் கட்டுரை மூலம் தெரியவந்த விஷயங்கள், இத்தகைய பல புகைப்படங்கள் வர உள்ளதன் முன்னறிவிப்பாக உள்ளது தான்.
  ஆதிக்க மனப்பான்மையே அனைத்து துயரங்களுக்கும் காரணம். இந்த ஆதிக்கத்துக்கு கருவிகளாகவே மதம், இனம், மொழி, உள்ளிட்ட வெளிப்புற அடையாளங்கள் அமைகின்றன.
  ஸீமமெண்டா என்கோசீ அடிச்சி என்ற எழுத்தாளரை முன்வைத்து நீங்கள் ஏற்கனவே எழுதிய எச்சரிக்கை உணமையாகிவிட்டது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளீர்கள். இங்கு தான், ஒரு எழுத்தாளன் நிறைவு பெறுகிறான். நடக்கக் கூடாததை- நடக்கப் போவதை – முன்கூட்டியே முன்னறிவிப்பது இலக்கியம் மட்டுமே. நைஜீரியாவிலிருந்து பாடம் கற்க, இன்னும் இந்தியாவுக்கு பல விஷயங்கள் உள்ளன.
  உங்கள் ‘இந்தியா- நைஜீரியா’ ஒப்பீடும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் உள்ளது. போலி அறிவுஜீவிகளும், முற்போக்கு முத்திரை தரித்தவர்களும் நடத்தும் நாடகங்கள் இந்தியாவில் பலிக்காமல் போவதற்கு காரணம் இறையருளோ என்று கூடத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஜெயமோகன் போன்ற எழுத்தாளரை கருவியாக்கி, மக்களுக்கு வழி காட்டுவாரா?
  -நன்றியுடன்
  வ.மு.முரளி.

 5. Ram

  I had opportunity to stay 10 months in Port Harcourt of Nigeria for official duty. It is in the south of Nigeria. The South and North of Nigeria are like 2 different countries due to the religious divide. In the streets of Port Harcourt, one eye catching experience was the countless number of Christian Gospel missionary offices. You name any 4 or more word sentences linked to divinity, you had so many number of different names of church groups operating in soul harvesting. The local Nigerians had 2 names, one Christian name (Justice, God’s power, Grace, were some typical names) and another nigerian tribal name. The south of Nigeria is one standing example to show how soul harvesting in the name of missionaries is carried out spoiling the local culture and living methods. My close friend in office was a Christian from TN and he got fed up by the missionary work there.
  Your article confirms the future trouble facing Nigeria. The oil money from Gulf countries and Missionary money from North America and Europe is speedily polarising the world in their respecitve faiths.

 6. ஜெயமோகன்

  அன்புள்ள திரு.ஜெயமோகன்,

  நலம் தானே ? மிகச் கூர்மையான அவதானிப்புகளுக்கு நன்றி.

  நைஜீரியாவின் தெற்குப்பகுதியில் எண்ணை வளங்கள் இருப்பதும் அதை தனியாக deal செய்ய முனையும் பெரிய அண்ணன்கள் வேலையும் இதில்
  கலந்து இருக்கிறது. இதெ வேலையை இராக்-குவைத், சூடான், இந்தோனேசியா – கிழக்கு தைமூர் போன்ற ’மனிதவள முன்னேற்ற’ முயற்சிகளில் நாம் கண்டிருக்கிறோம்.

  இந்த செய்தியை நான் தொலைக்காட்சியில் கண்ட போது வேண்டிக்கொண்டதெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் இப்படி எண்ணை வளங்கள் கண்டு பிடிக்கப்படாமல் இருக்க கடவது என்பதே.

  நன்றி,
  ஸ்ரீநிவாஸன்.

 7. samyuappa

  TRUTH IS A PATHLESS LAND – J.Krishnamurti

Comments have been disabled.