«

»


Print this Post

இந்துமதமும் தரப்படுத்தலும்


1

ஆங்கிலம் என்ற திமிங்கலம் மற்ற உலகமொழிகளை விழுங்கிவருவதுபோல, பெருமதங்கள் உலகத்தின் அனைத்து பழங்குடிமதங்களையும் ஞானமார்க்கங்களையும் விழுங்கிவிட்டால்? இது இயற்கையான நிகழ்வாகுமா? விழுங்கப்பட்ட மதங்களின் ஆன்மீக தத்துவ ஞான தரிசனங்கள் என்னாவது?

என்று நண்பர் கதிரேசன் சொன்னது இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. சமண புத்த மதங்கள் பல நூற்றாண்டுகளாக உழைத்து பல பழங்குடியினரை (தமிழரும் தான்) தன் வசம் கொண்டு வந்தன. பின் சங்கரர் தொடங்கி அதன் பின் வந்த பக்தி இயக்கங்கள் பல நூற்றாண்டுகள் முரண்பட்டு சமண, புத்த மதங்களுடன் மோதி வெற்றி கொண்டு இந்து ஞான மரபின் கீழ் கொண்டு வந்தன. அது பின் பல பழங்குடிகளின் தெய்வங்களையும் “தந்திரமாக” தன் குடையின் கீழ் கொண்டு வந்தது. அய்யனார் சாமி, ஐயப்பன் எல்லாம் இப்படி தான் உள்ளே கொண்டு வரப்பட்டார்கள். ஐயப்பன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் என்கிற கதை எல்லாம் எப்போது வந்தது என்று நினைக்கிறீர்கள். இதனைப்பற்றி ஜெ முன்பு எழுதிருக்கிறார்.

இது போலவே இந்துக்களை கிறித்தவ, இஸ்லாமிய மதத்திற்கு ஈர்க்கும் நடவடிக்கைளை பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். இதை ஒரு ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக்கொள்ளவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை ஆதிக்க சாதியினர் (தோழர் கற்றுக்கொடுத்த வார்த்தை) அப்பட்டமாக வெறுத்து மிதித்துக்கொண்டிருந்தால் அவர்களை வேறு மதங்கள் குறி பார்ப்பது ஒன்றும் தவறில்லை. அப்படி அவர்கள் இந்து மதத்தை விட்டு விலகி போய் விடுவார்களென்று இந்துக்களுக்கு பயமிருந்தால் அவர்களுக்கு உரியதை மறுக்காமல் இருக்க வேண்டும். காசு வாங்கி விட்டு மதம் மாறி விடுறாங்க என்று கூச்சல் போடுவதெல்லாம் வேலை செய்யாது.

இன்னொன்று, இந்துக்கள் இதை பற்றி ஓவராக கவலைப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரைக்கும் இஸ்லாத்தின் மாபெரும் வன்தாக்குதல் இந்து ஞானமரபை அசைக்க முடியவில்லை. அதற்கு அடுத்து இருநூறு ஆண்டுகள் பெரும்பலத்துடன் வந்த கிறித்தவ மிஷனரிகளும் ஒன்றும் செய்ய வில்லை. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா, இந்தோனீசியா எல்லாம் கிறித்துவத்தும் இஸ்லாம் வந்த ஒரு நூற்றண்டில் அடி பணிந்ததை கவனம் கொள்ளவும். இந்து ஞானமரபு பிடி கொள்ளாதது. அனைத்து மரபுகளையும் தன்னுள் கொண்டது. அது அப்படியே தான் இருக்கும். இந்துக்களாக அதை அழித்தால் தான் உண்டு.

கடைசியில், இந்தியாவின் மக்கள் தொகையில் எட்டு சதவிகிதம் ஆதிவாசிகள். அவர்கள் எந்த பெரும் மததையும் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துக்களும், கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் அவர்களை அப்படியே விட்டு விட்டால் நன்றாக இருக்கும்.

சிவா

1

அன்புள்ள சிவா

சில விஷயங்களை  அறியாமல் மிக உறுதியாகச் சொல்லிவிடுகிறீர்களோ என்ற எண்ணம்.

1.  சமண பௌத்த இந்து மதங்கள் பழங்குடி வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் ‘அழிப்பதில்லை’ மாறாக ‘ உள்ளிழுத்துக்கொள்கின்றன’. அவற்றுக்கு ஒரு தத்துவ- புராண விளக்கம் மட்டுமே அளிக்கின்றன. சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் படிமங்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கின்றன.

அதாவது ஒரு ‘தரப்படுத்தல்’ அல்லது ‘மேம்படுத்தல்’ மட்டுமே நிகழ்கிறது. இந்த தொகுப்புச்செயல்பாட்டில் ஒரு இழப்பு உள்ளதா என்றால் உள்ளது. ஆனால் இது நூற்றாண்டுகளாக நடந்தும்கூட எந்த பழங்குடிப் பண்பாடும் அழிந்ததில்லை. பழங்குடிகளின் வரலாற்று நினைவுகள் இல்லாமல் ஆனதில்லை. சுயம் மறுக்கப்பட்டதில்லை. இந்திய பெருநிலத்தில் அழிக்கப்பட்ட பழங்குடி இனமே கிடையாது. வெகுசில உறுப்பினர்களே உள்ள இனம் கூட நீடிக்கவே செய்கிறது -தனியடையாளத்துடன்

மாறாக ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன. பிற வழிபாடுகளை பாவமானவை, வெறுக்கத்தக்கவை என்று அவை அந்த மக்களுக்குக் காட்டுகின்றன. அந்த மக்களின் பண்பாட்டு மரபு, பாரம்பரியம், தனித்தன்மை, வரலாற்று நினைவு முழுக்க அழிக்கப்படுகிறது.

இந்தியாவில் 300 வருடம் முன்பு மதமாற்றம் செய்யப்பட்ட பரதவர்கள் ஓர் உதாரணம். புனித சேவியருக்குப் முன்னால் அவர்களுக்கு என்ன வரலாறு இருந்தது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும்  இன்று அவர்களிடம் இல்லை. தொன்மங்கள், சடங்குகள் ,ஆழ்மன நம்பிக்கைகள் — எதுவும்! இன்று பழங்குடிகளுக்கும் இதுவே நிகழ்கிறது.

இந்த அழித்தொழிப்பைப்பற்றி நம் அறிவுஜீவிகள் பேசுவதே இல்லை. ஆனால் இந்து பௌத்த சமண மதங்களின் ‘அழிப்பை’ப்பற்றி  ‘ஆதிக்கம்’ பற்றி கருத்தரங்குகளாக போட்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் வேடிக்கை என்னவென்றால் சென்ற காலங்களில் இந்த வகையான கருத்தரங்குகள் எல்லாமே புனித சவேரியார் கல்லூரி போன்ற கிறித்தவ அமைப்புகளில்தான் நடத்தப்பட்டன! அவர்களின் நிதியுதவியுடன். அங்கே பேசிய எவருமே கிறித்தவம் இந்த பழங்குடி அடையாளங்களுக்கும், பண்பாடுகளுக்கும் என்ன செய்கிறது என பேசியதில்லை. ஒருவர் கூட!

2  பழங்குடிகளின் சமயம் இந்து மதம் அல்ல என்ற ‘கதை’ கடந்த பத்தாண்டுகளில்  வெளிநாட்டு நிதிபெறும் அமைப்புகளாலும் ஆய்வாளர்களாலும் மிக உக்கிரமாக சொல்லப்படுகிறது. இது உண்மை அல்ல என்பதை  எந்தப் பழங்குடி வழிபாட்டையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அறியலாம். பழங்குடிகளுக்கு அவர்களுக்கே உரிய தெய்வங்கள் உண்டு என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு சாதிக்கும் அவர்களுக்கே உரிய குலதெய்வங்கள் உண்டு. ஆனால் மைய  அடையாளம் இந்து மரபு சார்ந்ததாகவே இருக்கும் என்பதையும் காணலாம். இதுவே பழங்குடிகள் விஷயத்திலும்.

தமிழகப் பழங்குடிகள் இந்துமத அமைப்புக்குள் வந்தது சங்க காலத்திலேயே நடந்துவிட்டது என்பது படிக்கும் வழக்கம் கொண்ட எவருக்குமே தெரியும். சொல்லப்போனால் அவர்களின் தெய்வமான முருகனைத்தான் இந்துமதம் பெரும் தெய்வமாக வழிபடுகிறது.  இன்றும் தமிழகப் பழங்குடிகளில் 70 சதம் பேரின் கடவுள் வேலன் தான். பல்வேறு வடிவங்களில் இந்த தெய்வம் வழிபடப்படுகிறது.  மேற்குமலைகளில் சாத்தன் அல்லது சாஸ்தா. கேரளத்தில் பகவதி. அதாவது கண்ணகி. அதற்கு சிலப்பதிகாரமே சான்றளிக்கிறது.

அவர்களிடம் உள்ள விபூதி குங்குமம் கொடுப்பது, படையலிடுவது போன்ற சடங்குகள், மறுபிறப்பு போன்ற நம்பிக்கைகள் எல்லாமே இந்து மதம் சார்ந்தவையே. பெரும்பாலான பழங்குடி தெய்வங்களின் கதைகள் நேரடியாக சிவபெருமானில் வந்து முடிவதைக் காணலாம். இதை அ.கா.பெருமாள் போன்ற ஆய்வாளர்கள் பக்கம் பக்கமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பல ஆலயங்களில் பழங்குடிகளுக்கு தனியிடமும் தனிச்சடங்குகளும் உள்ளன. நான் மொழியாக்கம் செய்த கொடுங்கோளூர் கண்ணகி என்ற நூலை உதாரணமாக பார்க்கவும். பல இந்து ஆலயங்கள் பழங்குடி தெய்வங்களாக இருந்தவை. உதாரணம் திற்பரப்பு மகாதேவர் ஆலயம்.

சாராம்சத்தில் இந்து மதக்கூறு முற்றிலும் இல்லாத ‘தூய’ பழங்குடி தெய்வம் என ஒன்றுகூட இல்லை என்பதே உண்மை. எந்த பழங்குடித் தெய்வத்தின் கதையும் இயல்பாகவே சைவத்தில் வந்து முட்டுவதைக் காணலாம். இந்து மதம் என்பதே இத்தகைய பல ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே இதற்குக் காரணம்.  அதாவது இவர்கள் வேறு இந்துமதம் வேறல்ல. சம்பந்தமில்லாமல் கொண்டு வந்து இவர்களின் மேல் போடப்பட்ட அன்னிய வஸ்து அல்ல இந்து மதம். இவர்களிடமிருந்தே உருவாகி வந்தது அது.

1

என் விமரிசனம் என்னவென்றால் இந்துமதத்தின் அடித்தளத்தில் உள்ள குலதெய்வ வழிபாடு மற்றும் மூத்தார் வழிபாடுகளுக்கு அவற்றுக்கே உரிய தனித்தன்மை உண்டு என்றும் அதை தரப்படுத்தி சமப்படுத்தும் முயற்சிகள் இந்த ஊடக யுகத்தில்  அழிவை உருவாக்கலாம் என்றும்தான். ஒரு மாபெரும் தொன்மவெளி அது. ஆகம வழிபாடு போன்ற முறைகள் மூலம் அவற்றின் தனித்தன்மை அழிய விடக்கூடாது என்பதே என் எண்ணம்.

பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றால் யார்தான் இந்துக்கள்? இந்து மதத்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான். கீழே நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் அடங்கிய பழங்குடி வழிபாடு. மேலே பெருந்தெய்வ வழிபாடு. அதற்கு மேல் தத்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்தும் இருக்கும்.  தத்துவம் பழங்குடி வழிபாட்டை நோக்கி வரும். பழங்குடி வழிபாடு தத்துவம் நோக்கிச் செல்லும்.பழங்குடி தெய்வபிரதிஷ்டை இல்லாத எந்த பெரும் கோயிலும் தமிழ்நாட்டில் கிடையாது என்பதை நினைவுகொள்ளுங்கள்.

குலதெய்வ பழங்குடி தெய்வ வழிபாடு செய்பவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்றால் நானும் இந்து அல்லதானே? என் இட்டகவேலி முடிப்புரை நீலிக்கு இந்து பெருமத புராணங்களில் இடமில்லையே. இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்

இந்தச் சிக்கலை சிலர் தாங்கள் செய்யும் மதமாற்றச் செயல்பாட்டுக்கு நிகராக ஆக்கியதையே கடந்த இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆகப்பெரிய கருத்தியல் மோசடி என்று நினைக்கிறேன்

ஜெ

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Mar 19, 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6833/

20 comments

1 ping

Skip to comment form

 1. Ram

  இந்தியாவின் மக்கள் தொகையில் எட்டு சதவிகிதம் ஆதிவாசிகள். அவர்கள் எந்த பெரும் மததையும் சேர்ந்தவர்கள் இல்லை – இந்த வாதம் மிகவும் தவறானது. உள்னோக்கம் உடயது. உங்களுடய பதில் இந்த வாதத்தை தகர்க்க கூடியது. “Hinduism is not a religion, but a way of life (in fact many diverse ways of unique living)” is the more apt definition and Hinduism cannot be equated to the other “religions”. The Coat-Suit is a dress suitable for the cold climate. Today, this dress is being worn by people in tropical countries like ours in important occassions and this is exactly a “Naagariga Thinippu” by the Europeans who went invading all the countries. Similar to this is the “Madha Thinippu” and should be resisted by the local populace.

 2. முஉசி

  //மாறாக ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன.//
  இந்த பண்பு அந்த மதங்கள் தோன்றிய நிலத்தின் பெரும்பான்மையான ஆதி மனித வாழ்வியல் கூறுகளால் அமையப்பெற்றிருக்குமோ?

  //பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றால் யார்தான் இந்துக்கள்? இந்து மதத்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான். கீழே நாட்டார் தெய்வங்கலும் குலதெய்வங்கலும் அடங்கிய பழங்குடி வழிபாடு. மேலே பெருந்தெய்வ வழிபாடு. அதற்கு மேல் தத்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்தும் இருக்கும்.பழங்குடி தெய்வபிரதிஷ்டை இல்லாத எந்த பெரும் கோயிலும் தமிழ்நாட்டில் கிடையாது என்பதை நினைவுகொள்ளுங்கள்.//

  இந்த அடுக்குகளை சாதியமாக பார்ப்பது அரசியல் மரபாகவும், ஞான வளர்ச்சிநிலைகளாக பார்ப்பது பாரம்பரிய மரபாகவும் எண்ணத்தோன்றுகிறது.

 3. reader

  the initial cry was ‘tribals are oppressed in Hinduism so we convert them’. But the current cry is ‘tribals are never Hindus’. It is obviously because the ‘oppression’ argument is running out of steam with organized efforts by Hindu organizations like RSS. So now there is opposition to events like ‘Shabari Kumbh’ with the reasoning that the tribals are ‘animists’ and not Hindus. When the tribals close their eyes, get the book and surrender their lands, what will they be? still animists? (btw, that is a desmond tutu quote).

  i dont see any point in trying rational arguments with those. they know what are they doing, and with their money they will scream out any amount of rational arguments.

 4. kadaiyan

  //மாறாக ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன. பிற வழிபாடுகளை பாவமானவை, வெறுக்கத்தக்கவை என்று அவை அந்த மக்களுக்குக் காட்டுகின்றன. அந்த மக்களின் பண்பாட்டு மரபு, பாரம்பரியம், தனித்தன்மை, வரலாற்று நினைவு முழுக்க அழிக்கப்படுகிறது.//
  ஐயா எனக்கு ஒன்று புரியவில்லை நாம் இது வரை செய்து வந்த செயல்கள் தவறானவை என்று வரும்போது அதை முற்றிலும் நிறுத்தி விட்டு சரியான செயல்களை செய்ய தொடங்குவது ஒன்றும் தவறில்லையே. நம் முன்னோர்கள் இது வரை செய்த செயல்கள் பாவங்கள்,வெறுக்கத்தக்கவை என்று தெரிய வந்தால் அதை நாம் புறந்தள்ள தானே செய்ய வேண்டும். அதை வலியுறுத்துகின்ற மதங்கள் தானே சரியானவை.
  அவ்வாறில்லாமல் தவறு என்று தெரிந்தும் அதை ‘உள்ளீடு’ செய்கின்ற மதங்கள் எவாறு சரியானதாகும்? எதை வேண்டுமானாலும் ஏற்றுகொண்டு,அதையும் தனதாக்கிக்கொண்டு வாழ்கின்ற வளர்கின்ற மதங்கள் எவ்வாறு சரியான பாதையை காட்டும்.

 5. kalyaanan

  சிவா வர்கள் இந்த இணையதளத்தில் நீங்கள் எழுதிய நிறைய விசகயங்களை படித்ததே இல்லை என்று நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் ஜெ இந்த இணையதளத்திலே எழுதிய கட்டுரைகளில் ஒரு சித்திரத்தை அளிக்கிறார். இந்திய பண்படும் சரி இந்து மதமும் சரி ஒரே விதமான் செயல்பாடுகள் மூலம் உருவானவை. இந்தியாவில் உள்ள பல்லாயிரம் பழங்குடி வழிபாடுகளையும் அதேமாதிரி பலவகையான ஃபோக் வழிபாடுகளையும் சாரம்சப்படுத்தி அதிலே பொதுவான அம்சங்களை கண்டுபிடித்து தொகுத்துக்கொண்டே இருப்பதுதான் அந்த செயல்பாடு. எதையும் அழிப்பது அல்ல. பொதுமையாக்கி தொகுப்பத் மட்டும்தான் அந்த வழியாகும்.உ. காந்தியும் பனியாவும் என்ற கட்டுரையிலே சமணம் எப்படி அந்த தொகுப்பை செய்தது என்றும் அதன் மூலம் இந்தியாவில் எப்படி அது வன்முறையை குறைது சுமுகமான வியாபாரமும் மற்ற தொடர்புகளும் உருவாக்கியது என்றும் விரிவாக சொல்லியிருக்கிறார். இப்படி பழங்குடிகள் உள்ளே கொண்டுவந்து அடுக்கப்பட்டதே சாதியமைபை உருவாக்கியது. மைய ஓட்டத்துக்குள் வந்த பழங்குடிகளே சாதிகளானார்கள். இப்படி தொகுக்காமல் இருந்திருந்தால் இந்தியா இன்றும் ஆப்ரிக்கா மதிரித்தான் இருந்திருக்கும். முதலிலே வைதீக மதம் வந்தது. பிறகு சமணம் பின்னர் பௌத்தம் பின்பு மீண்டும் பக்தி இயக்கம். இப்படி தொகுக்கப்பட்டதனால்தான் இந்தியா உருவானது. இதை மோசடி என்று சொல்கிறார் சிவா. வேடிக்கைதான்.

  மெலும் அவருக்கு இந்த வரலாறே திர்புவாதிகலிடம் கற்றவகையிலேதான் தெரிந்திருக்கிறது. சங்க காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு வேதமதம் வந்துவிட்டது. முதுகுடுமிபெருவழுதி செய்த வேள்விகளை தான் ஆரம்பகால புறநாநூறு பாடுகிறது. பக்தி காலகட்டம் 1000 வருசம் கழிந்து வந்தது. தமிழர்கள் இந்துக்களாக இல்லாமல் இருந்த ஒரு காலக்ட்டத்தை பற்றி எவருக்குமே தெரியாது. ஆதிச்சநல்லூரிலேயே இந்து சடங்குகளும் சாமிகளும்தான் கிடைக்கின்றன. இந்துமதமே இங்கே இருந்து உருவானதுதான்

  சிவா சொல்லும் விசயங்களெல்லாம் எழுதப்படிக்க தெரியாத மேடைபெபெச்சாலர்கள் பல வருசங்களாக சொஇல்லி சொல்லி சலித்தவை. இப்போது எவ்வளவோ வாசிக்க வந்து விட்டது. புதிசக வாசியுங்கள் பேசுங்கள்

 6. kalyaanan

  அன்புள்ள கடையன் [காடையன் இலையே?]

  நீங்கள் சொல்வதுதான் சரியான ஆபிரகாமிய நம்பிக்கை. அதவது ஒன்றுதான் சரி மற்ற எல்லாமே தப்பு. தப்பை முழுசாக அழித்து சரியை நிறுவ வேன்டும். நடக்கிற காரியமா? முஸ்லீம்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். கிறிஸ்தவர்ர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ரெண்டிலே ஒரு மதம் அழிந்தால்தானே உலகம் சமாதானமாக முடியும்? இதுதான் உலகை ரட்சிக்கும் வழியா?

  இந்து மதம் நம்பும் விசய்மே வேறு ஐயா. ஆன்மீகம் வேறு பண்பாடு வேறு. ஆன்மீகம் என்பது அந்தரங்கமானது. அதை எந்த பண்பாட்டுக்குள்ளும் வைத்துக்கொள்ளலாம். இறைவனை வழிபட புற அடையாளங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. இந்து மதம் எந்த பண்பாட்டையும் அழிக்காது. இந்து மதத்துக்கு ஒரு ஞான தரிசனம் உண்டு. அதை நீங்கள் ஜெ எழுதும் கட்டுரைகளிலேயே பார்க்கலாம். எந்த ஒரு பண்பாட்டிற்கு உள்ளே நின்றுகொண்டும் அந்த ஞான தரிசனத்தைப் பற்றி பேச முடியும். சொந்த முன்னோர்களையும் பண்பாட்டையும் விடாமல் அந்த ஞான தரிசனத்தை அடையவும் முடியும். ஆன்மீக நம்பிக்கை மாறுவதனால் முன்னோர்களையே மறந்துவிட வேண்டியதில்லை.

  ஒரு பழங்குடி சமூகம் எக்ஸ் என்று ஒரு சமியை கும்பிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். கிறிஸ்தவமும் முஸ்லீம் மதமும் என்ன சொல்லும்? நீ கும்பிடுவது தப்பான சமியை, அதைக்கும்பிட்ட உன் முன்னோர் முட்டாள்கள். உன் பாரம்பரியமே பாவம் நிறைந்தது என்று சொல்லுவது ஒரு மரபு. அப்படி சொல்லி இந்த சாமியை கும்பிடு இதுதான் உண்மையான சமி என்பது அந்த வழக்கம். அப்படி அவர்கள் சொல்லும் சாமி வேறு ஒரு நிலப்பகுதியிலே இதே மாதிர்யான மக்களால் கும்பிடப்பட்ட சாமிதான். அதாவது ஒரு இன மக்களுக்கு மட்டும்தான் உண்மையான சாமி கிடைத்திருக்கிறது. அதைத்தான் மத்த இனங்கள் கும்பிட வேண்டும் என்று சொல்லுவது அந்த மரபு

  இப்படிச் சொல்லுவதனால்தான் ஆசீர்வதிக்கப்பட்ட இனங்களும் புனித இனங்களும் உண்டாகின்றன. அந்த சாமி உருவான இனத்துக்கு அந்த மதத்தில் முன்னுரிமை எப்போதுமே இருக்கும்

  இந்து மரபு என்ன செய்யும் என்றால் நீ உன் மரபிலேயே இரு. உன் மூதாதையர் கும்பிட்ட சாமியையே கும்பிடு. அதுவும் நல்ல சமிதான். எல்லாமே சாமிதான். எதை சாமியாக கும்பிட்டாலும் அந்த நம்பிக்கைதான் பெரியது. எல்லா நதிகளும் கடலுக்குத்தான் போகும் என்று சொல்லும். அதன்பிறகு அந்த எக்ஸ் சமியை மேலும் விளக்க ஆரம்பிக்கும். அதாவது அந்த சாமியை நீ இப்படி வைத்துப்பார். அதை பிரபஞம் அலவுக்கு பெரிசக யோசித்துப் பார். அதை தத்துவமாக ஆக்கிப்பார் என்று சொலும். அப்படி மெல்ல மெல்ல அந்த எக்ஸ் என்ற சாமியே ஒரு பெரிய இந்து சாமியாக அகும். அதை எல்லா இந்துக்களும் கும்பிடுவார்கள். முருகன் காளி அய்யப்பன் எல்லாமே இப்படி இந்து சாமியாக ஆனார்கள். எல்லா இந்து சாமிகளும் இப்படி உள்ளே வந்த சமிகள்தான்.

  பிரம்மம் என்று சொல்லக்கூடிய கடவுள் தத்துவம் தான் பழைசு. அதுதான் மையம். அது மனிதனால் அறிய முடியாத, மனிதனால் விளக்க முடியாத, பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கும் ஒரு ஆற்றல். அந்த பிரம்மத்தின் ரூபமாக் நாம் எதையுமே வணங்கலாம் என்பதுதான் இந்துமதம் சொல்வது. மாடன்சாமியும் பரப்பிரம்ம வடிவமாக கும்பிடலாம்.

  இப்படி சாமியை எல்லாம் தத்துவமாக விளக்குவதை ‘அழிப்பு’ என்று சொல்லும் அதே வாய்கள் தான் அந்த சாமியை அப்படியே பெயர்த்து வீசி அதை பாவம் என்று சொல்வதை ஆதரிக்கின்றன. அதை முற்போக்கான மாற்றம் என்று சொல்கின்றன

  நீங்களும் அதையே சொல்கிறீர்கள். பார்த்தீர்களா அந்த நம்பிக்கை அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் பழங்குடிகளை லட்சக்கணக்கிலே கொன்றே இல்லாமல் ஆக்கியதைக்கூட நியாயப்படுத்த வைக்கிறது உங்களை

  யோசியுங்கள் நண்பரே

 7. kadaiyan

  அன்புள்ள கல்யாணன்,
  உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
  நீங்கள் சொல்வது போல் ஒரு சாமியை ஒழித்து விட்டு இன்னொரு சாமியை வணங்குங்கள் என்று எந்த ஒரு மதமும் சொல்வதில்,அனைத்து மதமும் சொல்லுகின்ற கடவுள் ஒருவரே.ஆனால் அதற்கு நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற சிலைகள்,வழிபாடுகள்,உவமைகள்,கதைகள்,முடபழக்கங்கள்,இன்னும் பற்பல… இவைகளை தானே வேண்டாம் என்று சொல்லுகின்றன.

  உதாரணத்திற்கு உங்கள் வழிக்கே செல்வோம், இத்தனை ஆயிரமாயிரம் பழங்குடி தெய்வங்களை சேர்த்துக்கொண்ட நீங்கள் ஏன் உங்களோடு அல்லாவையும்,ஏசுவையும்,மோசசையும் சேர்த்து கொள்ளக் கூடாது ?

 8. Wilting Tree

  ஐயா,

  நீங்கள் சொன்னது:

  //சமண பௌத்த இந்து மதங்கள் பழங்குடி வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் ‘அழிப்பதில்லை’ மாறாக ‘ உள்ளிழுத்துக்கொள்கின்றன’. அவற்றுக்கு ஒரு தத்துவ- புராண விளக்கம் மட்டுமே அளிக்கின்றன. சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் படிமங்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கின்றன.

  அதாவது ஒரு ‘தரப்படுத்தல்’ அல்லது ‘மேம்படுத்தல்’ மட்டுமே நிகழ்கிறது. இந்த தொகுப்புச்செயல்பாட்டில் ஒரு இழப்பு உள்ளதா என்றால் உள்ளது. //

  எனது சந்தேகங்கள்:

  * “தரப்படுத்துதல்” அல்லது “உயர்த்துதல்” எனும்போதே, ஏற்கனவே இருந்த ஒரு நம்பிக்கையை மறுதலித்தல், அழித்துவிடுதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய அபாயம் இருக்கிறது. தத்துவ விளக்கங்களோடு அந்த நம்பிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன என்பதைச் சொல்ல எண்ணினீர்களா ?

  * நீங்கள் குறிப்பிடும் “இழப்பு” எது ?

  பிராமணர்களாக தங்களை இப்போது அழைத்துக்கொல்லுபவர்களின் குலதெய்வங்கள் பல நாட்டார் தெய்வங்களாக, அதில் பெரும்பாலும் பெண் தெய்வங்களாக இருப்பது குறித்து மேலும் தகவல் அறிய ஆவல்.

  இந்தக் கமெண்டைப் படிக்க முடிந்தால், நேரமும் இருந்தால் தகவல் தாருங்கள்.

 9. Ram

  Dear Kadaiyan,
  “உதாரணத்திற்கு உங்கள் வழிக்கே செல்வோம், இத்தனை ஆயிரமாயிரம் பழங்குடி தெய்வங்களை சேர்த்துக்கொண்ட நீங்கள் ஏன் உங்களோடு அல்லாவையும்,ஏசுவையும்,மோசசையும் சேர்த்து கொள்ளக் கூடாது” –
  Kindly confirm that all Christians and Muslims will accept this ideology. Hinduism accepts plural faiths and why should the Hindus reject the way of Christians and Muslims. But Christianity and Islam are monotheistic (considering the trinity of Christian faith as one) and they would not like to accept pluralism of faith at all. It is the reason for greater tolerance to other faiths of Hindus than the people of Abrahamic faiths. All paths lead ultimately to the one and only Supreme being or the Almighty. If it is accepted, then why should one convert from his ancestor’s faith to another faith. As the God is only one, the rituals only differ from one religion to the other.

 10. Ram

  நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற சிலைகள்,வழிபாடுகள்,உவமைகள்,கதைகள்,முடபழக்கங்கள்,இன்னும் பற்பல…
  If idols, rituals, ceremonies, festivals, stories, epics, myths are all wrong in Hinduism, then how do you say that they are absolutely correct in other religions like Christianity and Islam too. You can praise your faith belief to sky high and you have all the rights to do it, but you have absolutely no right to the belittle the faith of others. For eg. there were 63 Nayanmars of Shaivism who have experienced God. Tell me how many you have in the Abrahamic faiths.

 11. tdvel

  அல்லாவையும் ஏசுவையும் மோசசையும் இந்துக்கள் சேர்த்துக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படிச் சேர்த்துக்கொள்ள அந்தந்த மதங்கள் அனுமதிக்குமா. ஒரு யேசுவின் சிலையை கோயிலில் வைக்க கிறீத்துவர்கள் அனுமதிப்பாரா? ஆனாலும் அதை ஒருசாமான்ய இந்துவின் உள்மனம் ஒத்துக்கொள்ளவே செய்யும். வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் சென்றுபாருங்கள அங்கே வருபவர்களில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். எத்தனையோ பதிவுகளை பார்த்திருப்பீர்கள். அதில் எத்தனை இந்துக்கள் பைபிள் மற்றும் இஸ்லாமிய நூல்களின் உரைகளை, சொற்றொடர்களை சிலாகித்து உபயாகப்படுத்தியுள்ளனர் எனப்பாருங்கள். ஆனால் மற்ற மதத்தினர் எப்போதாவது அதை செய்ததுண்டா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்திய சமூகத்தை சமூகத்தை கட்டிக்காத்து வருகின்ற, மற்ற மதத்தினரை கொன்றொழிக்கவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டாத, குடும்ப அமைப்பை இன்னமும் காத்து வருகின்ற தன்னை திருத்திக்கொள்வதற்கு எப்போதும் தயாராயிருக்கின்ற, பல ஆன்மீக அறிஞர்களை உருவாக்கிய
  ஒரு பண்பாட்டை, ஒரு வாழ்க்கை முறையினை, வெறும் மூடநம்பிக்கைகளின் தொகுப்பாய் பார்க்கும் அகந்தை ஒருவருக்கு இருக்குமானால் அவர் மனக்கோளாருள்ளவராகவே கருதநேரிடும்.

 12. rajkann

  nee illatha idame illai .. alla alla
  Mr. Kadaiyan.
  There is a basic difference between Hindhuism and other religions. A hindu if he wish , practice.. can realise the God in him. Any body can become Shiva, In fact all are shiva swaroopa only .nothing else.

  We treat Jesus and Nabigal nayagam at par with our saints. Respectable , saintly persons .And even more nothing in Hinduism stops one accepting them as GOD. For us they are also shivaswaroopa .they are divine. supreme beings have ever walked on earth. Any Hindu will understand them and their message. Thats the beauty of Hinduism. There is no need for deviation from the present practice. Thy told nothing new as far as a Hindu or Buddhist is concerned.

  It was meant for people of different culture. who were cruel , greed and selfish at that time. Thats why the great Nabikal nayagam had to carry a sword to spread the holy message. Jesus failed to protect himself.

  If you look at the history of world religions the most popular have their roots in Asia only. Eastern origin.
  Drop your arguments and counter arguments. Fortunately you too have the same origin. Don’t try to spread any religion or message. For that you should be a Master of your own like Jesus or Nabikal nayagam. Otherwise it is just a wasteful effort.
  Just practice Christianity or Islam or whatever you like. you trust.
  Best wishes
  kannan

 13. stride

  அன்புள்ள ஜெ,

  தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.

  //ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன. பிற வழிபாடுகளை பாவமானவை, வெறுக்கத்தக்கவை என்று அவை அந்த மக்களுக்குக் காட்டுகின்றன.//

  என்று நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை. நான் காட்டிய சிறு உதாரணம் எந்த ஒரு மதமும்(இந்திய மதங்கள் உட்பட) வேரொருவரை மத மாற்றம் செய்தே வளர்ந்தது, பரவியது என்பதற்காக மட்டுமே.

  // சமண பௌத்த இந்து மதங்கள் பழங்குடி வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் ‘அழிப்பதில்லை’ மாறாக ‘ உள்ளிழுத்துக்கொள்கின்றன’ // என்று நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தொழில் நுட்பம் விஞ்ஞானம் அறியாத காலத்தில் எல்லா நிகழ்வுகளுக்கும் எதாவது தெய்வீக காரணிகளை உருவகித்து வாழ்ந்த பழங்குடிகள் இந்திய பெரு மதங்களின் கீழ் வந்த போது அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கவே வேண்டும். புரோகித, சமண, பௌத்த மதங்கள் அதை செய்து மிக பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டபடியால் அவை பழங்குடிகளிடம் ஆக்கிய மாற்றங்கள் அந்த குடிகளுக்கு அப்போது நன்மை செய்ததா தீமை செய்ததா என்று எவராலும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். வாளின் முனையில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒருவர் இஸ்லாத்தை தழுவியிருந்தால் இன்று அவரின் சந்ததியினரிடம் அதை பற்றி கேட்டால், நல்ல வேளை அந்த மூதாதையரை மாற்றம் செய்தார்கள், இல்லாவிட்டால் நாங்களும் சிலையை தானே தொழுது கொண்டிருப்போம் என்று தான் கூறுவார்கள். இது ஒரு எடுத்துக்காட்டுக்காகவே கூறுகிறேன்.

  //தமிழகப் பழங்குடிகள் இந்துமத அமைப்புக்குள் வந்தது சங்க காலத்திலேயே நடந்துவிட்டது // முற்றிலும் ஏற்கிறேன். வெகு காலம் முன்பே முன்னேறி இருந்த தமிழ்நாட்டில் இது அப்போதே நடந்து விட்டது என்பதில் வியப்பு இல்லை. நான் சொல்ல வந்த பழங்குடிகள் காலம் காலமாக வெளித்தொடர்ப்பு இல்லாமல் ஒரிஸா, ஜார்கண்ட், ம.பி, சட்டிஸ்கர் போன்ற இடங்களில் அதிக அளவு வாழும் பழங்குடியினர். அவர்கள் எவ்வளவு தூரம் இந்துக்களாக இருப்பார்கள் என்று எனக்கு இன்னமும் சந்தேகம். அவர்களை நாம் இந்துக்களாக கருதலாம் ஆனால் அவர்கள் தங்களை இந்துக்களாக கருதுகிறார்களா என்பதும் ஒரு கோணத்தில் பார்க்க வேண்டியது.

  //என் இட்டகவேலி முடிப்புரை நீலிக்கு இந்து பெருமத புராணங்களில் இடமில்லையே. இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்…
  இந்தச் சிக்கலை சிலர் தாங்கள் செய்யும் மதமாற்றச் செயல்பாட்டுக்கு நிகராக ஆக்கியதையே கடந்த இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆகப்பெரிய கருத்தியல் மோசடி என்று நினைக்கிறேன் // — Excellent Point. Well taken..

  இந்து ஞான மரபு பற்றி பல விஷயங்களை தங்கள் எழுத்துக்கள் எனக்கு தெளிவுபடுத்தி வருகின்றன. அதற்கு மிகவும் கடன் பட்டிருக்கிறேன். எனக்கு கீதை படிக்க ஆர்வம் வந்ததே உங்களால் தான். நான் பெர்சனலாக இந்து மெய் ஞான மரபை மானுட ஞான தடலின் உச்சமாக கருதுகிறேன். ஆனால் நான் கூற வந்தது என்னவென்றால், இப்போது இந்துக்களை மதமாற்றம் செய்ய முயலும் கிறித்தவ இஸ்லாமிய நிறுவனங்கள் இந்து மெய் ஞான மரபை மாற்ற முயலவில்லை. உயர் சாதியினரிடம் பிரச்சாரம் செய்வதில்லை. சாதி இந்துக்களால் இன்னமும் மிக கொடுமையாக நடத்தப்படும் தாழ்தப்பட்ட இந்துக்கள் தான் அவர்கள் இலக்கு. அவர்களின் நிலையில் யார் இருந்தாலும் கிறித்தவதின் அன்பும் இஸ்லாமின் சகோதரத்துவமும் சாதி வெறியில் இருந்து காப்பாற்றுவதற்காக அளிக்கப்படும்போது யோசிக்கவே செய்வார்கள். இங்கே கிறித்தவ இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வெளியில் இருந்து கிடைக்கும் பெரும் பணம் ஒரு முக்கிய factor. இந்த நிறுவனங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் சாதி வெறியின் கீழ் இருந்து மேலே வருவது ஒரு பக்க விளைவு மட்டும் தான். கிறித்தவத்திற்கு மதம் மாறியவர்கள் அதற்கப்புறமும் தாழ்த்தப்பட்டவர்களாகவே சாதி கிறித்தவர்களால் நடத்தப்படும் போது அதிர்ச்சி அடைகிறார்கள் என்பதும் உண்மை. எப்படி இருந்தாலும் தாழ்ந்த சாதியில் இருப்பவருக்கு சாதி வெறியின் கீழிருந்து மேலே செல்வது மிஷனரிகள் கொடுக்கும் பணத்தை விடவும் முக்கிய காரணியாக இருக்கிறது.

  இந்துக்கள் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் என் கேள்வி. இந்திய அளவில் விவேகானந்தருடன் இந்து சீர்திருத்தம் முடிவடைந்து விட்டதாக நான் கருதுகிறேன். காந்தி அதை மிகவும் நீட்டினார். ஆனால் அது ஒரு செக்யூலர் நீட்சியே. இன்று மூச்சு பயிற்சி சாமியார்களின் கையில் இருக்கிறது இந்து மதம். சைவ, சங்கர, வைணவ மடங்கள் இது பற்றி சுண்டு விரல் கூட தூக்கவில்லை. தாழத்தப்பட்ட மக்களுக்கு அரசியலில் நுழைவது மூலம் பாதுகாப்பு கிடைக்க ஆரம்பித்தாலும் அவர்களை சாதி இந்துக்கள் சக உரிமை உள்ள இந்துக்களாக ஏற்றுக்கொள்ளும் வரை மத மாற்றங்கள் தொடரும் தான். ஒரு பெரிய அளவில் சீர்திருத்தம் இந்து மதத்தில் நடக்கவேண்டுன் என்பதே என் அவா.

  //சில விஷயங்களை அறியாமல் மிக உறுதியாகச் சொல்லிவிடுகிறீர்களோ என்ற எண்ணம்.// அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சாதாரண இலக்கிய வரலாற்று ஆர்வாளனாக மட்டும் தான் உங்களுக்கு எழுதுகிறேன். நீங்கள் சு.ராவிடமும் நித்யாவிடமும் வாதாடி முரண்பட்டது போலவே நான் உங்களை கருதுகிறேன். தங்களுக்கு வரும் கடிதங்களை பார்க்கும்போது பலரும் அப்படி கருதுகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ் உபயோகம் குழப்பமாக இருப்பதற்கு மன்னிக்கவும். சிலவற்றிற்கு எப்படி தமிழில் எழுதுவது என்று தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்கும் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.

  பி.கு – நிறைய இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் உண்மையிலேயே தங்கள் மதத்தின் சாரத்தை நன்கு உணர்ந்து அதனை மற்ற மதத்தினரும் கிடைத்து பயன் பெற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் என்பதும் உண்மை. உங்கள் எழுத்தால் ஈர்க்கப்பட்டு படிக்கும் கிறித்தவ இஸ்லாமிய வாசகர்கள் அவர்களின் மத மாற்ற நிறுவனங்களை சாடுவது அவர்களை மிகவும் புண்படுத்தும் என்று நினைக்கிறேன். எண்ணிக்கை குறைவாகே இருக்கும் எவருக்குமே தற்காப்பு மனநிலை அதிகமாகவே இருக்கும். வெளிநாட்டில் ஒரு மைனாரிட்டியாக வசிக்கும் போது தான் அது எனக்கு தெரிகிறது. அதை பற்றி நீங்கள் நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

  நன்றி

  சிவா

 14. tdvel

  இந்து மதம் எப்போதும் எந்த ஒரு மனிதரின் கீழும் அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் கீழும் இருந்த்ததில்லை. மடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஒருசிலர்தான் இருப்பார்கள். அவர்க்ளும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தான் இருப்பார்கள். சாமியார்கள் கீழ் இருப்பவர்களும் அப்படித்தான். வெளிச்செல்வோர்கள் வெட்டப்படுவார்கள் அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்படுவார்கள் போன்ற பயமுறுத்தல்கள் எல்லாம் இருந்ததில்லை. எப்படி அறிவியல் எந்த ஒரு அறிஞரின் கீழோ அல்லது நிறுவனத்தின் கீழோ இருப்பதில்லையோ அவ்வாறே.
  சீர்திருத்தம் என்பது இந்து மதத்தில் ஒட்டுமொத்த மக்கள் மனமாற்றம் அடைவதன்மூலமே நடைபெறும். ஆகவே சீர்திருத்தங்கள் மெதுவாகத்தான் நடைபெறும். அவ்வப்போது தோன்றும் ஆன்றோர்கள் மனிதர்களின் மனங்களோடு உரையாடுதல்மூலம் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துகிறார்கள்.
  ஆனால் இப்போது இந்துமதத்திற்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் போலி சாமியார்கள் போடும் சத்தத்தில் உன்மையான ஆன்மீகவாதிகளின் குரல் மிகவெம் மெல்லியதாக கேட்பதுதான்.

 15. stride

  அன்புள்ள ஜெ,

  ஆதிவாசிகள் பற்றி தேடிக்கொண்டிருக்கும்போது
  Koenraad Elst எழுதிய “Who is a Hindu?” கிடைத்தது .
  http://www.bharatvani.org/books/wiah/

  அதில் Are Indian tribals Hindus? என்கிற பகுதியில் ஆதிவாசிகளை இந்துக்களாக கருதலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஆதிவாசிகளுக்கும் இப்போது இந்து மதமாக அறியப்படுவதுக்கும் வித்தியாசங்கள் உண்டு என்றும் கூறுகிறார் . முழு புத்தகமும் நிறைய தகவல்களை தருகிறது.

  “While upsetting the Christian notion that tribals are almost-Christians, this cultural gap between tribal society and “civilization”, both Hindu and Christian, also emphasizes the separate identity of tribals as compared to the dominant classes of Hindu society who have interiorized Christian morbidity. Indeed, many Hindus would not accept the tribals as good Hindus precisely for the same reasons why colonial Christians considered certain native populations as “savages”.

  The Pagan character of tribal religion gives it a common basis with Hinduism and even makes it part of Hinduism if the latter is defined as “Indian Paganism”. But this cannot explain away the really existing cleavage between mainstream Hindu society and tribal society. The latter is a lot more “Pagan” in the stereotypical sense, more “natural” than both Sanskritic Hinduism and Christianity, as exemplified by Verrier Elwin’s “conversion” to tribal culture coinciding with his embarking on a life of sexual experimentation and improvisation. This is of course why Western neo-Pagans, tired of Christian morality, would generally prefer tribal culture to the formalized and asceticism-minded Hinduism of medieval times. Hinduism has grown away from those elements in its own history which resemble the wilder aspects of tribal culture.”

  என்றும்

  Not one of the Indian tribes was entirely untouched by the influence of the Vedic-Puranic Great Tradition. This is one of the reasons why the relationship between Hinduism and any Indian “tribe” is different from the relationship between Hinduism and tribal cultures in other continents. Even the tribal cultures genetically unrelated to Vedic civilization were dimly integrated in the Hindu world which spanned the whole of India.

  “The two main distinctions breaking the cultural continuum between tribals and Hindus are these: the former have no taboo on cow-slaughter, and they have a sexual morality deemed loose by the Hindu middle class. As Gérard Heuzé remarks, “the tribals are known as people who drink alcohol and eat meat, sometimes even beef. They have, in this perspective, lowly and ‘impure’ mores which call for upliftment.” G.S. Ghurye has given an account of the rather vivid and varied sex life of some tribals he knew personally, not too different from what you see in the concrete jungles of American cities but quite repellent to middle-class Hindus.

  These are the things which have made the tribal despised in the eyes of upper-caste Hindus for centuries, but which they may well have in common with the Vedic Aryans. It seems that the tribals, in their relative isolation, have missed the development which changed the robust Vedic Aryans into the prudish, purity-obsessed Hindus of recent centuries.

  As for sexual morality, Hindu society became a lot more prudish in several waves, the last and most pervasive being the contact with the Christian West in its Victorian phase.By trying to whitewash the Vedic Aryans from the vices which modern scholarship has imputed to them (including cow-slaughter) and strait-jacket them into the fussy norms of modern Hinduism, Hindutva history-rewriters make the additional mistake of cutting some of their common roots with the tribals.”

  கடைசியில்
  “These are the things which have made the tribal despised in the eyes of upper-caste Hindus for centuries, but which they may well have in common with the Vedic Aryans. It seems that the tribals, in their relative isolation, have missed the development which changed the robust Vedic Aryans into the prudish, purity-obsessed Hindus of recent centuries.

  As for sexual morality, Hindu society became a lot more prudish in several waves, the last and most pervasive being the contact with the Christian West in its Victorian phase.By trying to whitewash the Vedic Aryans from the vices which modern scholarship has imputed to them (including cow-slaughter) and strait-jacket them into the fussy norms of modern Hinduism, Hindutva history-rewriters make the additional mistake of cutting some of their common roots with the tribals.” என்று கூறி முடிக்கிறார்.

  நிறைய ஆய்வுகளை தொகுத்து அளிக்கிறார் எல்ஸ்ட். அந்த தளத்தில் எல்ஸ்டின் வேறு சில புத்தகங்களும் கிடைக்கின்றன.

  நன்றி

  சிவா

 16. siddharthans

  அன்புள்ள ஜெயமோகன் அய்யா,

  தங்கள் எழுத்து அற்புதமாக உள்ளது. நீங்கள் கல்லூரி படத்தை பற்றி எழுதியதை இப்போது தான் படித்தேன். அப்படத்தை பார்த்த போதும் VVS லக்ஸ்மனின் ஆட்டத்தை பார்க்கும் போதும் ஏற்படும் பரவசத்தை உங்கள் எழுத்தை படிக்கும் போது ஏற்படுகிறது. அறிவுஜீவிகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எண்ணினேன் – இடதுசாரியாக அல்லது மேற்கத்திய பாதிப்புடன் – எதையுமே விஞ்ஞான பூர்வமாக இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்வேன் – போன்ற மனப்பான்மைகளுடன். உங்களை போன்ற ஒருவரைக் கண்டதில் மகிழ்ச்சி.

  அன்புள்ள கல்யாணன்,

  தங்கள் விளக்கம் அற்புதம்.

 17. tamilsabari

  செறிவுள்ள கருத்து பரிமாற்றங்கள்

  மதங்களை பற்றி குறிப்பிடும் போது வழிபாடு வேறுபாடுகள் மட்டுமல்லாது, சில மதங்களுக்கென தனி மொழி, உடை, கலாசாரம், வாழ்க்கை முறை மாற்றப்படுவதையும் கவனிக்க வேண்டுகிறேன்.

  நன்றி

 18. gomathi sankar

  எல்லா பழங்குடி தொன்மங்களும் சிவனிடம் முடிவதில் ஆச்சர்யம் இல்லை சிவனே ஒரு பழங்குடி தெய்வம்தான் வேதங்களில் ருத்ரனை பற்றி கிடைக்கிற வர்ணனைகளே சாட்சி இன்று ருத்ரன் என்று வேதகாலத்தில் அறியப் பட்ட சிவனே முழுமுதல் கடவுளானது தற்செயல் அல்ல சிவனையே ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் இருந்து விலக்கி வைத்துவிட்டுத்தான் பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்று பேசமுடியும்

 19. M.S.Boobathi

  இப்படி எளிதாக வைத்துக்கொள்ளலாம். இட்லியை அழித்து தான் இட்லி உப்புமா. ஆனால் அதில் இட்லியும் இருக்கும்.
  ஆனால் இட்லியை தப்பான உணவு என்று சொல்லி , பிட்சாவையோ , பேரீச்சம் பழத்தாலேயோ சாப்பிடச் சொல்வது
  போலன்று இந்துமத இணைப்பு. ஆனால் நாம் முருகன் என்று சொல்லி உள்ளே போனால் அவர் பெயரை சுப்பிரமணிய
  சுவாமி , பால தண்டாயுதபாணி என்று மாற்றியிருப்பதையோ , பண்டாரங்களை அடுத்த அடுக்கிற்கு இறக்கி அந்தணர்கள்
  மட்டும் பெருந்தெய்வ வழிபாடு நிகழ்த்துபவர்களாக மாறியதை எப்படி விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ள முடியும் ?

 20. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ

  உங்கள் இணையதளத்தில் சிலர் இந்து மதத்தில் தீண்டாமை கொடுமை இருப்பதாகவும் அதனால்தான் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தீண்டாமை இருக்கிறது உண்மைதான். அது கொடுமையுந்தான். ஆனால் அது சமூகத்தின் பிரச்சினையே அல்லாமல் மதத்தின் போதனை அல்ல என்று நூற்றுக்கணக்கான முறை பல்லாயிரம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்கொடுமைக்கு எதிரான போரில் ஈடுபட்ட இந்து மெய்ஞானிகளின் பட்டியல் உள்ளது. அரை நூறாண்டுக்குள்ளே அந்த தளத்தில் ஆச்சரியமான மாற்றம் உண்டாகியிருக்கிறது. . இந்துமதத்துக்குள் இருந்து கொண்டு அதற்கு எதிராக போராடுவதும் ஜெயிப்பதும் நடக்கும்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல பெரிய பெரியய இந்துக்கள் தலித்துக்களே. அமிருதானந்த மாயி போன்ற தீண்டப்படாத மீனவ சாதியைச் சேர்ந்த பெண்ணை பிராமணர் உட்பட கோடிக்கணக்கானவர்கள் தெய்வமாக வழிபடுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

  அதேசமயம் உலகம் முழுக்கவே சாதிக்கொடுமை போல பிறப்பால் இழிவுபடுத்தும் முறை இருந்திருக்கிறது. ஐரோப்பாவில் பிறப்பு அடிபப்டை இழிநிலையும் தீண்டாமையும் எல்லாம் ஊண்டு. பலநூறு வருடங்கள் கிறித்தவ மதம் அதை அங்கீகரித்திருக்கிறது. மதகுருமார் அதை எழுதி ஆதரித்திருக்கிறார்கள். அந்த நிலை மாரியது மதத்தால் அல்ல, தொழிற்புரட்சியால் என்றும் நிறுவப்பட்டிருக்கிறது. அரேபிய நாடுகளில் இன்றும் சாதிமேன்மையும் இழிவும் கடுமையாகவே உண்டு. குரேஷிகள் போன்ற உயர்நத சாதியும் உண்டு தாழ்ந்த சாதிகலும் உண்டு.வாதைப்பற்றி எத்தனையோ நூல்கள் உள்ளன. இந்திய கிறித்தவர்களில் தலித்துக்கள் தலித்துக்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டார்கள். மேலும்கூட நடத்தப்படுகிறார்கள். இன்று இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். அவர்களுக்கு இன்றும் வேறு சர்ச்சுதான். முஸ்லீம்களாக மாறியவர்களில் உள்ள தலித்துக்கள் தீண்டப்படாதவர்களுக்கு சமமாக நடத்தப்படுகிறார்கள். முஸ்லீம் தலித்துக்களின் குரல்கள் இப்போதுதான் மெதுவாக கேட்க ஆரம்பித்துள்ளன. கீழ்க்கண்ட கட்டுரையை பார்க்கவும்

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=21003121&edition_id=20100312&format=html

  [இந்தியாவில்வாழும் தலித்முஸ்லிம்களின் உரிமைகளையும்,குரல்களையும் பதிவு செய்யும் வகையில் இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்( IDMV) ஜூலை 22 , 2008-ல் உருவாகியுள்ளது. இது ஜனநாயக் ரீதியான ஒரு பரந்துபட்ட விவாததளத்தை முன்னிறுத்துகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று 1950 களில் மறுதலிக்கப்பட்ட உரிமையைமீண்டும்திரும்பப்பெறுதலாகும்.தலித்முஸ்லிம்களையும் பட்டியலில் உள்ள சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் சேர்த்திடவும் இதற்குதடையாக இருக்கிற இந்திய அரசியல் சாசனபிரிவு 341 – ல் திருத்தம் கொண்டுவரவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.]

  அப்படியானால் மதம் மாறினால் தீண்டாமை விலகும் என யார் சொன்னது? மதமாற்றம் செய்யும் சக்திகள் செய்யும் பொய்ப்பிரச்சாரம் அது. அதை வைத்து தலித்துக்களை ஏமாற்றுகிறார்கள். அங்கே போன தலித்துக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். ஆனால் திரும்பி வரமுடியாது. இங்கே மதமாற்றம் செய்தால் சமூக மாற்றம் ஏற்பட்டு விடுகிறது திரும்பிவந்தால் வன்முறையையும் சந்திக்க வேண்டும். மதம் மாருவதன்மூலம் கிடைக்கும் நிதியுதவி மற்ற சவுகரியங்கள் அல்லாமல் வேறு நன்மை கிடையாது.இந்த மதமாற்ற சக்திகளின் பிரச்சாரத்தை சில முற்போக்கு இந்துக்களும் திருப்பித் திருப்பிச் சொல்வது தான் வேடிக்கை. பிரச்சாரபலம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது. தீண்டாமையோ சாதிக்கொடுமையோ ஒன்றுபட்டு போராடுவதன் மூலம்தான் தீரும். பொருளாதார பலம் பெறுவதன் மூலம்தான் தீரும். அப்படி மேலே வந்த எத்தனையோ சாதிகள் உண்டு. காரணம் அது சமூகப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை. இந்த உண்மையை மறைத்து அதை ஏன் மதப்பிரச்சினையாக காட்டுகிறார்கள் என்றால் மதமாற்றம் செய்வதற்காகத்தான். இஸ்லாமிலே சாதி இல்லை கிறிஸ்தவத்திலே சாதி இல்லை என்று சொல்லியபடி அதற்குள் இருந்து அதை மறுப்பவர்களின் குரலை ஒடுக்குகிறார்கள். அங்கே உரிமையை கோரவே முடியாமல் ஆக்குகிறார்கள். அந்த சதிக்கு நம் அறிவாளிகளும் பலியாகி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

  சண்முகம்

  அன்புள்ள சண்முகம்

  எங்களூரில் உள்ள ஹாமீம் முஸ்தபா என்ற கவிஞர் தக்கலையிலேயே எப்படி இஸ்லாமுக்குள் சாதிக்கொடுமையும் அடிமைத்தனமும் இருக்கிறதென சுய வாழ்க்கை அனுபவத்தில் கவிதைகள் எழுதியிருந்தார். [ஊரு நேச்சை] வலுவான கவிதைகள். அவற்றை யாரும் பேசவே இல்லை.

  இஸ்லாமிய தலித்துக்கள் ஒன்றுபட்டு உரிமைக்காக குரபெழுப்புவதை வரவேற்கிறேன். இட ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கு அல்ல என்பதே என் எண்ணம்

  நீங்கள் சொல்வதை நானும் ஆதரிக்கிறேன். சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடு. அதை சமூக மாற்றம் மூலமே மாற்ற முடியும். மதம் அதை உருவாக்கவில்லை. நீடிக்க விடவும் இல்லை. மதம் அதற்கு சிலரால் பயன்படுத்தப்பட்டது. இந்த நூற்றாண்டின் மாபெரும் ஞானியரால் அந்த மத ஆதரவு ரத்து செய்யப்பட்டும் விட்டது. இனி போர் எஞ்சியிருப்பது சமூகத்தளத்திலும் பொருளியல் தளத்திலும் தான். அங்கே வெல்லும் சாதிகள் சாதிய இழிவை அகற்றிக்கொள்ளும்

  இதை மதப்பிரச்சினை மட்டுமே என திரும்பத் திரும்பச் சொல்லும் சக்திகள் இந்து மரபை அழிக்க எண்ணும் தரப்பினரே. மதமாற்ற நோக்கம் கொண்டவர்களும் அவர்களின் ரகசிய ஆதரவாளர்களும் மட்டுமே.

  ஜெ

 1. இந்துமதமும் தரப்படுத்தலும் « ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்"

  […] ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது […]

Comments have been disabled.