பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 7
“ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை. அங்கிருந்து சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் நுழைகையில் அவர்கள் கோசலனுக்குரிய வரியை அளித்தனர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்தது. கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிடவேண்டியிருந்தது.
ஆனால் நாணல்களைப் பின்னி உருளைப்படகுகளை கட்டத்தெரிந்த ஏகசக்ரநகரியின் மக்கள் அப்பாறைகள் வழியாக மிக எளிதாக நழுவி வந்து மலைப்பொருட்களை விற்றனர். பொருட்களை வாங்கிக்கொண்டு அவ்வொழுக்கில் அவர்கள் கட்டி வைத்திருந்த பெரிய வடங்களைப்பற்றி படகுகளை மேலேற்றி தங்கள் நகருக்கு திரும்பிச்சென்றனர். திரேதாயுகத்தில் தசரதன் கோசலத்தை ஆட்சி செய்த காலம் முதலே ஏகசக்ரநகரி தன்னந்தனி அரசாகவே இருந்தது. அதைச்சூழ்ந்திருந்த நூறு மலைக்கிராமங்களுக்கு அதுவே சந்தைமையம்.
அந்நகரத்திற்கு அரசன் இருக்கவில்லை. அங்கே வாழ்ந்த ஏழுகுலங்களின் தலைவர்களின் குழுவால் ஆளப்பட்டது. நகரைச்சுற்றியிருந்த அடர்காடுகளில் இருந்து காட்டெருதுகளும் யானைகளும் மட்டுமே அவர்களை தாக்கக்கூடியவையாக இருந்தன. சரயுவின் பெருக்கைக் கடந்து எந்தப்படையும் அவர்களை நெருங்க முடியாது. ஆகவே அவர்கள் அந்நகரைச் சுற்றி மலைப்பாறைகளைக்கொண்டு உயரமற்ற கோட்டை ஒன்றை கட்டிக்கொண்டனர். காவலுக்கு வேல்களும் அம்புகளும் ஏந்திய சிறு படை ஒன்றை அமைத்திருந்தனர்.
அரசப்படைகளின் காவலற்ற ஏகசக்ரநகரி சிலநாட்களிலேயே பகனால் முழுமையாக கைப்பற்றப்பட்டது. ஒவ்வொருநாளும் கதாயுதத்துடன் அவன் நகரில் நுழைந்து மக்களைக் கொன்று குவித்து களஞ்சியங்களைச் சூறையாடி உணவுண்டு மீண்டான். அவனைத் தடுக்க ஏகசக்ரநகரியின் மக்கள் அமைத்த படைகள் அவன் தன் பெரும் கதாயுதத்துடன் கைகளை விரித்து வெறிச்சிரிப்புடன் உள்ளே வரும்போதே அஞ்சி ஓடினர். மக்கள் தங்கள் இல்லங்களுக்குள் குழிகள் தோண்டி அறைகள் அமைத்து அதனுள் ஒளிந்து உயிர்தப்பினர்.
கோசலத்திற்கு முழுமையாக அடிமைப்பட்டு கப்பம் கொடுத்து தங்களைக் காக்கும்படி கோரலாமென்றும் அவர்களை தங்கள் படகுகளிலேயே அழைத்துவரலாம் என்றும் வணிகரும் ஆயரும் வேளிரும் அடங்கிய குலச்சபை முடிவெடுத்தது. ஆனால் அச்சபையில் இருந்த குலமுதியவர் ஒருவர் “மைந்தரே, எந்த அரக்கனை விடவும் கொடியது அரசு என்று அறியுங்கள். இவனுக்கு வயதாகும். நோயுறக்கூடும். உளம் கனியவும் கூடும். அரசோ மூப்போ நோயோ கருணையோ அற்றது. கொடிய அணங்குபோல நம்மைக் கைப்பற்றி நம் குருதியை நாமறியாமலேயே உண்பது. நம் குருதியை குடிக்கும்தோறும் மேலும் வளர்வது. நம்மைக் கொன்று உண்ணும்பொருட்டு நம்மையே தன் காலடியில் விழுந்து மன்றாடவைக்கும் அளவுக்கு மதியூகம் கொண்டது. எண்ணம் முந்தி அரசை நாம் இங்குகொண்டுவந்தால் பின்னர் ஒருபோதும் ஏகசக்ரபுரி அதன் விடுதலையை மீட்டெடுக்க முடியாது” என்றார்.
குலத்தவர் திகைத்து கலைந்த ஒலி எழுப்பினர். “இவன் நம்மைக் கொன்று அழிப்பதை எப்படி எதிர்கொள்வது? எத்தனை நாள்தான் இங்கே அஞ்சி வாழ்வது?” என்றனர். குலமுதியவர் “அரசுக்கும் இவனுக்குமான வேறுபாடுதான் என்ன? அரசு நம்முடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. அது நம் குருதியை உண்ணுவதை நம்முடன் பேசி வரையறை செய்துகொள்கிறது. இவனிடமும் நாம் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் இவனும் நமது காவலனே. இவன் இன்னொரு அரக்கன் இங்கு வராமல் நம்மைக் காப்பான் அல்லவா?” என்றார். குலச்சபை அதையே செய்யலாமென்று முடிவெடுத்தது.
முதியவர் பகனிடமிருந்து ஊரைக் காக்கும் வழி ஒன்றை சொன்னார். பகனின் வீரர்களில் ஒருவனை மட்டும் சாலையில் வெட்டிய படுகுழியில் வீழ்த்தி அவர்கள் பிடித்தனர். அவன் இறந்துவிட்டான் என்று எண்ணி பகன் திரும்பிச்சென்றபின் அவனை சிறையிலடைத்து அவன் மொழி அறிந்த வணிகர்களை வைத்து அவனிடம் அன்புடன் பேசினர். பேசிப்பேசி அவனை அவர்களுக்கு இசையச் செய்தனர். அவனுக்கு அவ்வூரின் அழகிய இளம்பெண் ஒருத்தி மணமகளாக அளிக்கப்படுவாள் என்றனர். அவன் பகனிடம் பேசி ஊருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளச் செய்வான் என்றால் அம்மணமகளுடன் இனிதுவாழமுடியும் என்று வாக்களித்தனர்.
அவன் அதற்கு ஒப்புக்கொண்டு மலையேறிச்சென்று பகனைப் பார்த்தான். மெல்லமெல்லப் பேசி அவன் உள்ளத்தை கரைத்தான். ஏகசக்ரநகரியின் மக்கள் கோசலத்திற்கு அடிமைப்பட்டு அங்கே கோசலத்தின் பெரும்படை வந்திறங்கி விட்டால் அதன் பின் அங்கு வாழ்வது முடியாதது என்றான். ஏகசக்ரநகரி பகனை அரசனாக ஏற்று கப்பம் கட்ட ஒப்புக்கொள்கிறது. ஒவ்வொருநாளும் ஏகசக்ரநகரியில் இருந்து ஒரு வண்டி நிறைய உணவு குன்றேறி பகனின் குகைக்கே வந்துசேரும். அதை உண்டு அவன் அவர்களின் காவலனாக அங்கே குகைக்குள் வாழமுடியும். “அரசே, நாம் இங்கு தங்கி வலிமைபெறுவோம். நம்குடியை இங்கே பெருக்குவோம்” என்றான் அவன்.
பகன் கதையை வீசி நகைத்து “வெறும் உணவால் அமைவேனா? இச்சிறிய மானுடரை என் கையால் கொல்லவேண்டும். ஒவ்வொருநாளும் குருதி படாமல் இந்த கதாயுதம் அமையாது” என்றான். அவன் சிறிய செவ்விழிகள் சுருங்கி பற்கள் சீறி வெளித்தெரிந்தன. “என் சினத்துக்கு உணவு வேண்டும். அவர்களிடம் சொல். இந்த மலைத்தெய்வம் பலியின்றி அமையாது என்று.”
அதற்கும் ஏகசக்ரநகரி மக்கள் ஒப்புக்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஒருவன் வண்டிநிறைய உணவுடன் மலையேறி வந்து பகனின் கதைக்கு பலியாவான் என்றனர். பகன் அதற்கு ஒப்புக்கொண்டதும் ஏகசக்ரநகரே விழாக்கொண்டாடியது. குலத்தலைவர் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவன் என பகனுக்கு உணவுடன் சென்று பலியாகும் முறைமை அங்கே அமைந்தது. ஒவ்வொரு மாதமும் முப்பது இளைஞர்கள் குலதெய்வத்தின் கோயில் முன் குடவோலை முறைப்படி தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் தேர்வுசெய்யப்பட்டதும் அவர்கள் நெற்றியில் பச்சைகுத்தி அவர்களை பகனுக்கான பலிகளாக குலச்சபை அறிவித்தது.
அவர்கள் தங்கள் குலத்துக்காக உயிர்கொடுக்கும் புனிதர்கள் என்று கருதப்பட்டனர். குலதெய்வ ஆலயத்திலேயே தங்கி முப்பது நாட்கள் நோன்பிருந்து குலத்தவரால் வணங்கப்பட்டனர். ஒவ்வொருநாளும் அவர்களுக்கு தங்கள் குலத்தில் ஒரு வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. அவர்களை வணங்கினால் மூதாதை அருள்கொண்டு நோய்கள் தீருமென்றும் குழந்தைகள் நலம்பெறும் விளைகள் செழிக்கும் கன்றுகள் பெருகும் என்றும் நம்பினர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் எவ்வுறவும் கொள்ளாமல் வாழ்ந்தனர்.
குறித்த நாட்களில் மூதாதையருக்குச் செய்யவேண்டிய நீத்தார் கடன்களை முடித்து எழுந்த அவர்களின் கால்களைக் கழுவி குடும்பத்தினர் வாழ்த்து பெற்றனர். அவர்களின் கழுத்தில் மாலையிட்டு கண்ணீருடன் உணவு வண்டியில் ஏற்றியபின்னர் திரும்பி நோக்காமல் நடந்து தங்கள் இல்லத்தை அடைந்து கதவுகளை மூடிக்கொண்டனர். ஏழுநாட்களுக்குப்பின் அவர்களுக்கு நீர்க்கடன்களைக் கழித்து கோட்டைக்கு தெற்கே இருந்த புல்வெளியில் நடுகல் நாட்டி மாலைசூட்டி படையலிட்டு வணங்கினர்.
நாட்கள் செல்லச்செல்ல அதை இறக்கப்போகிறவனின் இல்லத்தார் அன்றி பிறர் எண்ணாமலாயினர். எண்ணுவது அளிக்கும் துயரை வெல்வதற்கான வழி அதை அறியாதவர்களாக ஆகிவிடுவதே என ஏகசக்ரபுரி கற்றுக்கொண்டது. தங்கள்முறை என்றோ வரப்போகிறது அதற்குள் எதுவும் நிகழலாமென்று எண்ணி ஆறுதல்கொண்டனர். நடுகற்கள் பெருகப்பெருக நினைத்தாலே நெஞ்சுநடுங்கவைத்த அந்நிலம் மேலும் மேலும் இயல்பாக ஆனது. அங்கே ஒருமுறை படையலிட்டபின் எவரும் திரும்பச்செல்லவில்லை.
அது ஏகசக்ரபுரியின் வெற்றி என்றே கொள்ளப்பட்டது. கோசலத்துக்குச் சென்றிருந்தால் நூறுமடங்கு கப்பம் கட்டவேண்டியிருக்கும் என்றும் கோசலத்தின் போர்களில் ஏகசக்ரபுரியின் இளைஞர்களும் இழுக்கப்பட்டு மும்மடங்கு வீரர்கள் இறந்திருப்பர் என்றும் வாதிட்டனர். பகனைப்பற்றிய கதைகளை அவர்களே சொல்லிச் சொல்லி பரப்பினர். அவன் ஒருவண்டி உணவையும் உணவைக்கொண்டுசெல்லும் வண்டியின் மாடுகளையும் அதை ஓட்டிச்செல்பவனையும் உண்டு பசியடங்குவான் என்றனர். இரவுகளில் அவனுடைய பேரோசை இடி என மலைகளில் ஒலிக்கும் என்றனர். அவ்வச்சமே ஏகசக்ரநகரிக்கு பெருங்காவலாக ஆகியது. தனிமனிதர்களின் துயர்களை அறியாமல் கடந்துசெல்வதே வெற்றிக்கான பாதை என்றறியாத அரசு எங்குள்ளது?
அந்நகருக்கு ஒருநாள் முதியவள் ஒருத்தியை தோளில் தூக்கிக்கொண்ட அரக்க வடிவம் கொண்ட ஒருவனும் அவனுடைய நான்கு உடன்பிறந்தவர்களும் வந்தனர். அவர்கள் உசிநாரபூமியின் காட்டை நடந்தே கடந்துவந்திருந்தமையால் தாடியும் முடியும் வளர்ந்து வெயில்மழையில் கறுத்து தவக்கோலம் பூண்டிருந்தனர். காட்டுத்தோலால் ஆன ஆடையை அணிந்து பசியால் மெலிந்து போயிருந்த அவர்கள் ஐவரும் தங்களை காட்டில் தவக்குடில் அமைத்து வாழ்ந்த முனிவர் ஒருவரின் மைந்தர்கள் என்றும் அந்தப் பெண் முனிபத்தினி என்றும் சொன்னார்கள். முனிவர் மண்நிறைவடைந்த பின்னர் காட்டுக்குள் வாழ அவர்கள் விரும்பவில்லை. அம்மைந்தர் மானுடரைக் கண்டு இல்லறவாழ்க்கையை வாழவேண்டுமென்று தான் அவர்களை கூட்டிவந்ததாக அன்னை சொன்னாள்.
ஏகசக்ரநகரியின் வைதிகர்தெருவில் அவர்கள் அலைந்து எளியதோர் பிராமண இல்லத்தில் அடைக்கலம் புகுந்தனர். ஓர் அன்னையும் இளமைந்தனும் புதுத்துணைவியும் மட்டும் வாழ்ந்த அவ்வில்லத்தில் இடமில்லை என்பதனால் புல்லைக்கொண்டு அவர்கள் ஒரு துணைக்குடில் கட்டிக்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஐந்து முனிகுமாரர்களும் நகருக்குள் சென்று உணவை இரந்துபெற்று மீண்டனர். மூத்தவர் அறவுரை ஆற்றியும் இளையோன் ஒருவன் சோதிடம் பார்த்தும் பொருளீட்டி உணவை பெற்றனர். அவர்கள் கொண்டுவந்த உணவை இரண்டாகப் பிரித்து பாதியை அவ்வரக்க வடிவினனுக்கு அளித்து எஞ்சியதை ஐவரும் பகிர்ந்துண்டனர்.
அரக்கவடிவு கொண்டவன் தன்னை விருகோதரன் என்று சொல்லிக்கொண்டான். நகரில் அவன் சென்றாலே அவனை அஞ்சி மக்கள் விலகி ஓடினர். அவன் உணவை இரந்தபோது எவரும் அளிக்கவில்லை. அவன் சரயுவின் கரையில் சென்று அங்கே இருந்த குயவர்களிடம் சேர்ந்துகொண்டான். ஆற்றங்கரையின் களிமண்ணை அள்ளி கரைக்குக் கொண்டுசென்று அரைத்து கூழாக்கும் பெரும்பணியில் அவர்கள் நூறு கழுதைகளை பயன்படுத்திவந்தனர். அவன் அப்பணியை தானே செய்வதாகச் சொல்லி மேலும் நூறுகழுதைகளுக்கு நிகராக உழைத்தான். அவர்கள் அளித்த பணத்தில் அவன் உணவை வாங்கிக்கொண்டு சென்று மறைந்திருந்து முழுமையாகவே உண்டான். பின்னர் வீடுதிரும்பி தன் இளையோர் கொண்டுவந்த உணவிலும் பாதியை உண்டான்.
ஏகசக்ரநகரை விட்டு சரயு வழியாக கோசலத்தை அடைய அவர்கள் எண்ணியிருந்தனர். இரந்துண்டு ஈட்டிய பணத்தைக்கொண்டு ஒரு படகை அமர்த்திக்கொண்டு அவர்கள் கிளம்பவிருந்த அன்று இரவில் அவர்கள் தங்கிய இல்லத்தில் அழுகையொலியைக் கேட்டு அவ்வன்னை சென்று விசாரித்தாள். அந்த இளம்வைதிகன் அழுதுகொண்டிருந்தான். அவன் மனைவி சினத்துடன் தன் வயிற்றைத்தொட்டு கூச்சலிட்டு அழுது மன்றாடினாள். அவன் அன்னை அழுது சோர்ந்து சுவர் மூலையில் சுருண்டிருந்தாள்.
என்ன நிகழ்கிறது என முனிபத்தினி கேட்டாள். இளம்வைதிகன் பகன் அங்கே வந்த கதையை சொன்னான். அந்தமாதம் உணவுடன் பலியாகச் செல்லவேண்டிய முப்பதுபேரில் அவனே முதல்வன். அவன் குலக்குழு குடவோலையிட்டு தெரிவுசெய்ததில் முதலில் வந்தபெயர் அவனுடையது. “அது எவர் செயலும் அல்ல. ஊழின் தேர்வு. நான் சென்று மடிவதே நன்று. தன் குடிக்காக இறப்பவர்களே அதை வாழவைக்கிறார்கள். எந்தப் பெருங்குடியும் அதன் ஒரு பகுதியின் அழிவை கொண்டே தான் வாழ்கிறது. அதில் துயருற ஏதுமில்லை” என்றான்.
அவன் மனைவி “செல்வமில்லாதவனின் மனைவி நான். உங்கள் குழந்தையை என் கருவில் சுமந்திருக்கிறேன். உங்கள் அன்னையின் பொறுப்பும் என்னுடையதே. நீங்கள் பலியானால் நான் என் கற்பையும் என் குழந்தையின் உயிரையும் அன்னையின் வாழ்வையும் காத்துக்கொள்ள முடியாது என்பது உறுதி. நீங்கள் இறந்தபின்னர் உங்களுக்காக நீர்விட எவரும் இல்லையென்றால் விண்ணுலகில் உங்கள் மூதாதையர் பசித்து விடாய்கொண்டு அழிவார்கள். ஒருவன் தன் மூதாதையருக்கும் உறவினருக்கும் செய்யும் கடமைகளுக்குப் பின்னரே குலத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் கடமைகள் வருகின்றன” என்றாள்.
”ஆம், ஆனால் என்னை என் குடி தேர்வுசெய்த பின் நான் செய்வதற்கேதும் இல்லை” என்றான் கணவன். “இன்றிரவே சேர்த்த சிறு செல்வத்துடன் சரயு வழியாக தப்பிச்செல்லலாம்” என்றாள் மனைவி. “நான் தப்பிச்சென்றால் அவர்கள் இன்னொருவனை அனுப்புவார்கள். அவன் உயிருக்கு நான் கடன்பட்டவன் ஆவேன்” என்று கணவன் மறுத்தான். “உங்கள் அன்னையும் மனைவியும் குழந்தையும் இறப்பார்களென்றால் அதற்கு நீங்கள் கடன்பட்டவரல்லவா?” என்று மனைவி சீற்றத்துடன் கேட்டாள்.
“என் குருதியால் உங்களுக்கு உணவீட்டி அளித்திருக்கிறேன். உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ளும் இடத்திலும் இருக்கிறேன். நான் யாரென்றே அறிந்திராத அந்த அயலவனின் பழியே பெரிது. உங்கள் பழி என்மேல் படியும். அவன் பழி என் மூதாதையர் மேல் விழும். உங்கள் சொல் என் மேல் விழட்டும். நான் நரகுலகில் அதன்பொருட்டு சென்று அகாலத்தில் எரிகிறேன். ஆனால் என் மூதாதையர் மேல் பழிவிழ ஒப்புக்கொண்டேன் என்றால் அதைவிடப் பெரும்பாவம் பிறிதில்லை” என்றான் கணவன்.
முனிபத்தினியைக் கண்ட மனைவி “அன்னையே, என் துயரைக் கேளுங்கள். நான் என் குடித்தலைவரின் காலில் சென்று விழுந்தேன். இந்நகரின் ஆட்சியாளர்கள் அனைவரையும் கண்டு கதறினேன். ஒரு நகர் வாழ்வதற்காக ஒருவன் இறப்பதில் என்ன பிழை என்றே அனைவரும் கேட்டனர். அவர் எனக்கு முழு உலகாக இருப்பவர், என் விழிநீரிலா இந்நகரம் வாழவேண்டும் என்றேன். எவரோ ஒருவர் விழிநீரில்தான் நாமனைவருமே வாழ்கிறோம் பெண்ணே என்றார் நீதியறிந்த என் குல முதியவர். நெரிசலிட்ட நகர்த்தெருவில் நின்று கதறினேன். என் உலகை அழித்தா நீங்கள் உண்ணவேண்டும் மானுடரே என்றேன். ஒவ்வொரு விழியும் என்னைத் தவிர்த்து விலகின. ‘உன்னுடையது என் துயரல்ல, ஆகவே அது நான் அறியவேண்டுவதும் அல்ல’ என்றே ஒவ்வொரு முகமும் என்னிடம் சொன்னது” என்றாள்.
“தெருவில் சென்ற ஒரு முதியவளின் ஆடையைப்பற்றி இழுத்து கேட்டேன். என் கணவன் நாளை இறக்கிறான். அது உன் மைந்தன் என்றால் நீ இப்படி எளிதாகக் கடந்து செல்வாயா என்று. நேற்று இன்னொருவன் சென்றபோது நீ இப்படித்தானே கடந்துசென்றாய்? என்றாள் அவள். அன்னையே, அக்கணம் அறிந்தேன். இவ்வுலகில் தான் என்றும் பிறர் என்றும் ஒரே ஒரு பிரிவினையே உள்ளது. தன் அறம், தன் நீதி, தன் இன்பம், தன்குலம், தன்குடி, தன்நலன் என்றே மானுடம் இயங்குகிறது. ஒவ்வொருவரும் வாழும் உலகில் பிறன் என்பவனே இல்லை” என தலையில் அறைந்து அழுதாள் வைதிகன் மனைவி.
முனிபத்தினி அமைதியாக “பிறந்தநாள் முதல் பிறனுக்காக வாழும் ஒருவனின் அன்னை நான்” என்றாள். “இவ்வில்லத்தில் இருந்து ஒருவன் செல்வதாகத்தானே கூற்று? நாங்களும் இவ்வில்லத்தினரே. என் மைந்தனை அனுப்புகிறேன்” என்றாள். திகைத்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் மனைவி. “என் மைந்தன் விருகோதரன் உன் கணவன் பொருட்டு பகனிடம் செல்வான்” என்றாள் முனிபத்தினி. “இல்லை, என்பொருட்டு ஒருவன் இறக்க நான் ஒப்பமாட்டேன்” என்று வைதிகன் பதறிக்கூவினான். “அது அயலவர் பழிகொண்டு மூதாதையரை இருளில் ஆழ்த்துவது. அதை நான் எக்காலமும் ஏற்கமுடியாது” என்றான்.
புன்னகையுடன் “என் மைந்தன் பலியாக மாட்டான். அவன் அவ்வரக்கனைக் கொன்று மீள்வான்” என்றாள் முனிபத்தினி. ஐயம் கொண்ட வைதிகனிடம் தன் இரண்டாவது மைந்தனை அழைத்து அவனுக்கு சான்றுகாட்டு என்றாள். அவன் சிரித்தபடி தன் இரு விரல்களால் அந்த இல்லத்தின் இரும்புத்தூணை வளைத்துக்காட்டினான். திகைப்புடன் வைதிகன் அவ்வரக்க மைந்தன் உணவுடன் செல்ல ஒத்துக்கொண்டான். “முறைப்படி நீங்கள் வண்டியில் உணவுடன் மலைப்பாதையில் செல்லுங்கள். என் மைந்தன் வழியில் வந்து உங்களிடமிருந்து வண்டியை பெற்றுக்கொள்வான்” என்றாள் முனிபத்தினி.
மறுநாளே வைதிகன் பெரிய வண்டியில் ஏற்றிய படகில் நிறைக்கப்பட்ட உணவும் தளும்பும் மதுக்குடங்களுமாக பகனின் மலை நோக்கி கிளம்பினான். பகனுக்கு பலியாகிறவர்கள் எவருமறியாமல் விடியற்காலையிலேயே சென்றுவிடவேண்டும் என்றும் அவன் குடியினர் எவரும் ஓசையிட்டு பிறரை எழுப்பலாகாது என்றும் நகரத்தில் முறையிருந்தது. ஒவ்வொரு நாளும் செல்லும் பலிவீரர்கள் மரக்கிளையில் இருந்து உதிரும் இலைகள் என்றன அவர்களின் நீதிகள். அவை ஓசையின்றி மென்மையாகவே நிலம் தொடவேண்டும். பூத்து எழும் புதுத்தளிர்கள் அதை அறியவே கூடாது.
வைதிகனின் வண்டி மலைப்பாதையில் சற்று தொலைவு சென்றதும் விருகோதரன் வந்து அவனை இறக்கிவிட்டுவிட்டு தான் ஏறிக்கொண்டான். வைதிகன் அஞ்சி ஒரு மரத்தடியில் நின்றான். அவன் மனைவி தெய்வங்களைத் தொழுது கண்ணீர் விட்டு கோட்டைவாயிலில் நின்றாள். விடியலின் இருளில் விருகோதரன் உரக்கக் குரலெழுப்பிப் பாடியபடி மலைச்சாலையில் சென்றான்.
மலைச்சரிவை அடைந்ததுமே அவன் வண்டியை நிறுத்திவிட்டு அவ்வுணவை முழுமையாகவே உண்டான். கள்பானைகளை குடித்தபின் அவற்றை தூக்கிப்போட்டு உடைத்து விளையாடினான். பகனின் வீரர்கள் மேலிருந்து உணவு வருவதைக் கண்டு பசியுடன் பாறைமுனை மேல் வந்து நின்று நோக்கினர். மதுக்குடங்களை எற்றி விளையாடும் பேருருவத்தானைக் கண்டு அவர்கள் ஓடிச்சென்று பகனிடம் சொன்னார்கள்.
“என்னை அஞ்சி நடுங்கும் சிற்றுயிர்களை நசுக்கி சலித்துவிட்டேன். இன்று ஒரு சிறந்த மற்போருக்கு என் தோள்கள் எழுகின்றன” என்று நகைத்தபடி பகன் குகைவிட்டு எழுந்து வந்தான். கீழே வண்டியுடன் உணவை உண்டு படகிலிருந்த பருக்கைகளைப் பொறுக்கி வாயிலிட்டுக்கொண்டிருந்த விருகோதரனைக் கண்டு தொடைகளையும் தோள்களையும் அறைந்து உரக்க நகைத்தபடி அணுகினான். ஆனால் அவன் ஒலியை விருகோதரன் பொருட்படுத்தவில்லை, அவன் அணுகியபின்னரும் திரும்பிப் பார்க்கவில்லை.
சினம் தலைக்கேறிய பகன் அவனை ஓங்கி அறைந்தான். விருகோதரன் விலகிக்கொள்ள அந்த அடி வண்டியை சிம்புகளாக நொறுக்கியது. மாடுகள் அஞ்சி சிறுநீர் கழித்தன. விருகோதரன் திரும்பி பகனை நோக்கி புன்னகைத்து உண்டவாயை புறங்கையால் துடைத்தபடி புன்னகையுடன் ”என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டான். அந்த பொருட்படுத்தாமை கண்டு தன் அனைத்து சீர்நிலைகளையும் இழந்த பகன் அருகே நின்ற மரத்தைப் பிடுங்கி விருகோதரனை அடித்தான். அதை வலக்கையால் பற்றி இடக்கையால் பகனின் விலாவில் அறைந்தான் விருகோதரன்.
அவர்களுக்கிடையே தொடங்கிய போரை பகனின் வீரர்கள் நகைத்தபடி விலகி நின்று நோக்கினர். பகன் விருகோதரனைவிட அரைமடங்கு பெரியவனாக இருந்தான். விருகோதரனின் இடையளவுக்கு தடிமனாக இருந்தன பகன் கைகள். அவன் காலை ஓங்கி மிதித்தபோது அருகே இருந்த பாறைகள் அதிர்ந்து மண்ணை உதிர்த்தன. போர் சிலகணங்களில் முடிந்துவிடுமென அவர்கள் எண்ணினர். ஆனால் விரைவிலேயே அவர்கள் அறிந்தனர் போர் என்பது ஆற்றலால் மட்டுமே ஆனது அல்ல என்று.
பகனின் பேருருவே அவனுக்கு தடையாக இருந்தது. விரைவாகத் திரும்பவோ தன்னை அணுகியிருப்பதைக் காணவோ அவனால் முடியவில்லை. அவனுடைய விலாப்பகுதியில் மிக அண்மையில் எப்போதும் தன்னை வைத்துக்கொண்டான் விருகோதரன். கீழ்விலா எலும்பிலேயே மீண்டும் மீண்டும் தாக்கினான். ஒருபோதும் வலியை அறிந்திராத பகன் அந்த அடிகளால் உரக்க கூச்சலிட்டான். சினம் கொண்டமையால் தான் கற்ற போர்க்கலையையும் அவன் மறந்தான். விருகோதரனைப் பிடிக்க அவன் பாய்ந்தபோது அவன் கால்களைத் தடுத்து மறித்து வீழ்த்தினான். பேரொலியுடன் மண்ணை அறைந்து விழுந்த பகனின் நெஞ்சுக்குழியில் ஓங்கி மிதித்து அவன் மூச்சை உடைத்தான்.
விருகோதரன் இருகைகளையும் வீசி காலை உதைத்து துள்ளி எழமுடிந்தது. பகன் கைகளை ஊன்றி புரண்டுதான் எழுந்தான். இரண்டாவது முறை விழுந்து பகன் எழுவதற்காகப் புரண்டபோது முன்னரே எழுந்துவிட்டிருந்த விருகோதரன் அவன் முதுகின்மேல் பாய்ந்து கழுத்தை தன் கரங்களால் பிணைத்து முழங்காலால் அவன் முதுகெலும்பை ஓங்கி முட்டி உடைத்து அக்கணமே கழுத்தின் சங்கையும் நெரித்து வளைத்தான். பகனின் கழுத்தெலும்பு ஒடிவதை அவன் வீரர்கள் கேட்டு உடல்சிலிர்த்தனர். உடைந்த கழுத்துடன் நிலத்தில் கைகளை அறைந்து கால்களை மண் கிளம்ப உதைத்து துடித்துக்கொண்டிருந்த பகன் மேல் ஏறி அமர்ந்து அவன் இரு கைகளையும் இரு கால்களையும் ஒவ்வொன்றாக உடைத்துச் சுழற்றினான்.
வாயிலும் மூக்கிலும் குருதி வழிய விழித்த கண்களுடன் மல்லாந்து கிடந்த பகன் மேல் ஏறி நின்று அவன் வீரர்களை நோக்கினான் விருகோதரன். அவர்கள் அஞ்சி கைகூப்பினர். “இனி நீங்கள் ஏகசக்ர நகரிக்குள் நுழையலாகாது. இங்கிருந்து கிளம்பி மறுபக்கம் காட்டுக்குள் சென்று விடுங்கள். உங்கள் சுவடு நகருக்குள் தெரிந்தால் தேடிவந்து உங்களைக் கொல்வேன்” என்றான். அவர்கள் பின் காலெடுத்துவைத்து ஓடி மறைந்தனர்.
பகனின் சடலத்தை தோளில் தூக்கியபடி மாடுகளை ஓட்டிக்கொண்டு விருகோதரன் திரும்பி வந்தான். காத்து நின்றிருந்த வைதிகன் அதைக்கண்டு அஞ்சி திரும்ப கோட்டை நோக்கி ஓடினான். அப்போதும் விடிந்திருக்கவில்லை. பகன் உடலை கோட்டைமுன் வீசிவிட்டு விருகோதரன் “எவர் கேட்டாலும் நான் என் மந்திரம் ஒன்றைச் சொன்னேன். பேருருவம் கொண்ட பூதம் ஒன்று வந்து பகனைக் கொன்று சுமந்துவந்து இங்கே போட்டது என்று கூறுங்கள்” என்றான். வைதிகன் நடுங்கும் கைகளைக் கூப்பி “அதைக் கேட்டு என்னை வேறு அரக்கர்களை அழிக்க அனுப்புவார்களே. மேலும் அரக்கர்கள் என்னைத் தேடிவருவார்களே” என்று சொல்லி அழுதான். “அஞ்சவேண்டாம். அப்போது நான் தேடிவருவேன்” என்றான் விருகோதரன்.
அன்றே தன் உடன்பிறந்தாரையும் அன்னையையும் அழைத்துக்கொண்டு அவன் சரயுவின் படகு ஒன்றில் ஏறி ஏகசக்ரநகரியை விட்டுச் சென்றான். அந்த வைதிகன் இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டுக்கொண்டே நகரின் உள்ளே ஓடி அவன் பகனை கொன்றுவிட்டதாக அறிவித்தான். அவனை பித்தன் என்றும் அச்சத்தில் சித்தம் கலங்கியவன் என்றும்தான் ஊரார் நினைத்தனர். ஆனால் வெளியே வந்து கோட்டைமுகப்பில் குன்றெனக் கிடந்த பகனின் உடலைக் கண்டதும் வாயடைத்துப் போயினர்.
பிரமதன் பாடி முடித்தான் “ஏகசக்ரநகரியின் தலைமை வைதிகனாகவும் ஊரே அஞ்சும் ஆற்றல்கொண்டவனாகவும் விளங்கும் கலிகன் அவ்வாறுதான் உருவானான். அவன் கொன்ற நூறு அரக்கர்களை விவரிக்கும் கலிகபிரதாபம் என்ற நூலை எழுதியவர் சண்டர் என்ற பெயருள்ள சூதர். அவரே இக்கதைகளை கலிகரிடமிருந்து கேட்டறிந்துகொண்டு கலிகபிரஹசனம் என்ற அங்கத நூலையும் இயற்றினார். அவரிடமிருந்து நான் கற்றதே இப்பாடல். அவர் வாழ்க!”
பாடல் முடிந்தபோது பேரவையே நகைத்துக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் உரக்க நகைத்தபடி எழுந்து கைகளை மேலே தூக்கி ”அது வேறெவரும் அல்ல. என் மைந்தன் பீமனே. அவனும் அவன் அன்னையும் உடன்பிறந்தாரும் நலமாக இருக்கிறார்கள். உடனே நம் ஒற்றர்கள் கிளம்பட்டும். சரயு வழியாக அவர்கள் சென்ற இடமென்ன என்று கண்டு சொல்லட்டும்” என்றபின் திரும்பி “விதுரா, மூடா, நீ என்ன சொன்னாய்? அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இல்லையா? நான் சொன்னேனே, என் மைந்தன் பீமன் அத்தனை எளிதாக இறக்க மாட்டான் என்று. அவனுக்கு என் மூதாதையரின் அருள் உண்டு. அவனை பெரும்படையெனச் சூழ்ந்து காப்பது அவர்களின் கருணை” என்றார்.
சொல்லிவரும்போதே அவர் குரல் உடைந்தது. “எங்கோ இருக்கிறான். நலமாக இருக்கிறான்” என்றவர் தளர்ந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு தன் முகத்தை கைகளில் ஏந்தி மூடியபடி தோள்குலுங்க அழத்தொடங்கினார். அதுவரை சிரித்துக்கொண்டிருந்த பேரவை எழுந்து திகைத்த முகத்துடன் அவரை நோக்கியது. விதுரர் சஞ்சயனை நோக்கி அரசரை உள்ளே அழைத்துச்செல்லும்படி கைகாட்டினார்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்