கர்மயோகம் : செயலெனும் விடுதலை

கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னர் நான் எழுதிவந்த கீதையின் நவீன உரை பல்வேரு பணிகள் காரணமாக நின்றது. அதை மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். அந்த முந்தைய பகுதிகளை வாசிப்பதற்கான சுட்டிகள் இவை. அவற்றின் தொடர்ச்சியே இந்த உரை.

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

கீதைத்தருணம்

கீதை எதற்காக?

கீதை வழிகள்

கீதை – நமது

கீதை அகம்

கீதைவெளி

கீதை : முரண்பாடுகள்

கீதா உபநிடதம்

கீதை முகப்பு

கீதை அறிவுலகில்

கீதை:1,மகத்தான மனத் தடுமாற்றம்

2. உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்)

3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்

செயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4

செயலே விடுதலை:சாங்கிய யோகம்

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-5

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம் 6

வழக்கமான கீதை உரைகளைப்போல எளிமையாக ஒன்றைச் சொல்ல இந்த உரை முயல்வதில்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். நம்முடைய மனம் ‘ஆகமொத்தம் கீதை சொல்வது இதைத்தான்’ என்ற வகையான உரைகளுக்கு மிகவும் பழகிவிட்டிருக்கிறது. அத்தகைய கூற்றுகளை அனிச்சையாக அது நாடுகிறது

அதற்கேற்ப பக்தி சார்ந்து கீதையை எளிமைப்படுத்தும் உரைகள் நிறையவே நமக்குக் கிடைக்கின்றன. ஊடகங்கள் வழியாக நாம் அவற்றை சலிக்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த வகையான உரைகள் கீதை என்ற கடலை தேக்கரண்டியால் எடுத்து புகட்டுபவை. தெக்கரண்டியளவுக்கே தேவைப்படுபவர்களுக்கு அது போதும்.

இந்த உரை கடலை கடலாகவே காண விழைபவர்களுக்கு உரியது. கீதை ‘ஒன்றைச் சொல்லும்’ எளீய உபதேச நூல் அல்ல. அது ஒரு மாபெரும் தத்துவ உரையாடல். தத்துவத்தில் இன்றுவரை விவாதிக்கப்பட்டுவரும் அடிப்படையான கேள்விகளை எழுப்பி தர்க்கம் மூலமும் தர்க்கத்தை தாண்டிச்செல்லும் கவித்துவம் மூலமும், அதற்குமப்பால் செல்லும் தரிசனம் மூலமும் விடைகாணும் நூல்.

ஆகவே கீதையை அதன் ஒவ்வொரு வரியையும் கூர்ந்து அவதானித்து, அனைத்துக்கோணங்களிலும் விவாதித்து, கற்பனைமூலம் விரிவடையச்செய்து, உள்ளுணர்வால் தியானித்துத்தான் உள்வாங்க முடியும். இது அதற்கான முயற்சி. இந்த விவாதத்தில் சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோரின் உரைகளையும் நித்ய சைதன்ய யதி, நடராஜ குரு ஆகியோரின் உரைகளையும் கருத்தில்கொண்டிருக்கிறேன்.

இத்தகைய உரை ஒன்றை தமிழில் எழுதும்போது கல்விநீக்கம் ஒன்றையும் செய்ய வேண்டியிருக்கிறது. கீதை சர்ந்து தவறாக, அரைகுறையாக புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்களை ஒவ்வொரு வரியிலும் விளக்கிக்கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு வரி சார்ந்து எழும் எல்லா வினாக்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆகவே இந்த உரை விரிவானதாக இருக்கிறது

இது கடினமாக இருப்பதாக சிலர் கூறினார்கள். முடிந்த வரை எளிய மொழியில் சொல்லவே நான் முயன்றிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே இது கடினமான பேசுபொருள். எளிமையாகச் சொல்வதற்கும் ஓர் எல்லை உண்டு.

இந்து ஞானமரபின் உண்மையான பிரச்சினையே இதுதான். அது  ஆழ்ந்து செல்லும்தோறும் நுண்மை கொண்டதாக மாறியபடியே செல்லும். அதன் மையம் எளிய விடைகளைச் சொல்வது அல்ல. ஆகவே அதன் சாராம்சமான பகுதிகள் எளிய மக்களுக்கு புரியக்கூடியவையும் அல்ல. பிரபஞ்ச தரிசனத்தை அன்றாட வாழ்க்கைக்கு அப்பால் செல்லாத ஒருவரிடம் சொல்லிவிட முடியாது, நவீன இயற்பியல் தரிசனத்தையும்கூடத்தான்

இந்து ஞானமரபின் அடிப்படைக் கட்டுமானம் உயர்தத்துவத்தால் ஆனது.  உயர்தத்துவம் என்பது எப்போதுமே பல்வேறுவகையான நுண்ணிய  மயக்கங்கள் கொண்டது. சிக்கலான முரணியக்கங்களால் ஆனது. அதை ஓரளவு தத்துவத்தில் ஆர்வம் கொண்ட, அதற்காக உழைக்க தயாராக இருக்கிற சிலரிடமே விவாதிக்க முடியும். அவர்களுக்காகவே இந்த உரை எழுதப்பட்டுள்ளது.

கர்மயோகம்

இடதுசாரித் தோழர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். கீதையைப் பற்றிய பேச்சு வந்தது. அவரைப் போன்றவர்கள் ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ என்ற ஒற்றை வரியாக மட்டுமே கீதையைப் புரிந்து வைத்திருப்பவர்கள். இவ்வரி கீதையில் எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று நான் விளக்கினேன்.

நண்பர் சீண்டப்பட்டார். ‘கீதை ஏன் மக்களைப் பகுக்க வேண்டும்? மானுடகுணம் முழுமைக்குமான சேதியாக அது ஏன் தன் கருத்தை முன்வைக்கக் கூடாது?’ என்று கூறினார். நான் அவரை சமாதானப்படுத்தும் முகமாக கூறிய எதுவுமே அவரைத் திருப்தி செய்யவில்லை. கீதை மனிதர்களைப் பகுப்பதில் அக்கறைக் காட்டும் ஒரு நூல் என்றே கூறிக் கொண்டிருந்தார்.

அது உண்மையா? உண்மைதான். கீதை தொடர்ந்து மனிதர்களைத் தரம் பிரித்தபடியே இருக்கிறது. ‘குணத்தின் அடிப்படையிலும், செயலின் அடிப்படையிலும் மனிதர்களை நான்காக பகுத்திருக்கிறேன்’ என்ற வரி, உண்மையில் ஒரு தொடக்கம் மட்டுமே. மனிதர்களின் தன்னியல்பு சார்ந்தும் அவர்களின் அறிவுத்திறன் சார்ந்தும் கீதை பலவாறாக பகுத்துக் கொண்டே செல்வதை கீதையில் தொடர்ந்து நாம் பார்க்கப் போகிறோம்.

இந்தப் பகுப்பை ஏன் கீதை நடத்துகிறது? ஏனென்றால் அது மனிதர்களை ஒற்றைப் பெருந்திரளாகக் கண்டு, அவர்களை நோக்கி ஒரே விஷயத்தை அறைகூவும் ஒரு மதநூல் அல்ல என்பதே. அது ஒரு தத்துவ, உள, அறிவியல் நூல். அது ஒவ்வொரு தனிமனிதனையும் நோக்கிப் பேசுகிறது. பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் தன் அந்தரங்க ஆழத்தையும் புரிந்து கொள்வதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு போக்கு இருக்கிறது. மானுட இயல்புகளில் முடிவில்லாத வகை பேதங்கள் உள்ளன. அந்த வகை பேதங்களையெல்லாம் கணக்கில் கொண்டு கீதை பேச முற்படுகிறது.

ஆனால் இது ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு பக்கத்தில் கீதை மானுடத்தை ஒரே அமைப்பாகக் கருதி, ஒவ்வொரு மனிதனையும் அந்த அமைப்பில் பொருத்திப் பார்த்துப் பேசவும் முற்படுகிறது. கீதையின் அந்த மானுடம் நோக்கிய குரலையும் நாம் தொடர்ந்து பார்க்கப் போகிறோம். ஒரே சமயம் தனிமனிதனையும் மானுடத்தையும் எதிர்கொண்டு பேசும் இந்த இயல்பால்தான் கீதை ஒரு முழுமையான தத்துவ நூலாக ஆகிறது.

இப்படிப்பட்ட இருமை நோக்கை நிகழ்த்துவதற்கு, கீதையின் முரணியக்க அணுகுமுறை [அதாவது யோகாத்ம முறை] சிறப்பாகப் பயன்படுகிறது என்பதைக் காணலாம். ‘கீதையின் செய்தி என்ன?’ என்ற வினாவுக்கு எளிதில் பதில் கூறிவிட முடியாது என்பது இந்த முரணியக்கத்தை கருத்தில் கொள்வதனால்தான்.

உதாரணமாக அர்ஜூன விஷாத யோகத்தில் அது ஒரு செய்தியைச் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட வகையான மானுடருக்கு உரியது அச்செய்தி . அந்தச் செய்தியால் நிறைவடையாது மேலும் முன்னகரக் கூடியவர்களுக்கு நடைமுறை சார்ந்த யோகமாகிய சாங்கிய யோகமும், நடைமுறை யோகத்தின் மிகச்சிறந்த பயிற்சியான யோக முறைமையும் முன் வைக்கப்படுகின்றன. அதுவும் போதாது என்று உணர்பவர்களுக்காக அது மேலும் முன்னகர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு யோகமும் முன்னதனுடன் முரண்பட்டு முன்னகர்வதன் வழியாக கீதை நிகழ்கிறது. இந்த ஒவ்வொரு யோகமும் ஒருவகை மனிதர்களுக்கு உரியது என்பதனால் கீதையில் அத்தியாயப் பிரிவினையே கூட மனிதர்களை பகுப்பதுதான். இந்தப் பெரும் பகுப்புக்கு உள்ளே கீதை மேலும் மேலும் திட்டவட்டமான பகுப்புகளைச் செய்தபடியே செய்கிறது.

இந்தப் பகுப்புகளையெல்லாம் தன் யோகாத்ம முறை மூலம் இணைக்கும் கீதை, அதன் ஒட்டு மொத்தமாக மானுடம் சார்ந்த ஒரு பெரும் செய்தியையும் முன்வைக்கத்தான் செய்கிறது. ஒரு மதநூலைப் புரிந்து கொள்ளும் ஒற்றைப்படையான பார்வையுடன் கீதையைப் புரிந்து கொண்டால் இந்த முரணியக்கத்தையும் அதன் மையத்தையும் நாம் காணமுடியாது போகும். இந்நூலின் தொடக்கத்தில் கீதையை மதநூலாகக் கருதக் கூடாது, தத்துவநூலாக மட்டுமே கருதவேண்டும் என்று கூறியது இதனால்தான்.

இப்படிப் பார்ப்போமே. ‘அகம் பிரம்மாஸ்மி’ என்பது ஒரு முழுமுதல் கூற்றாகவே நம் மரபில் முன்வைக்கப்படுகிறது. அது மானுட குலத்துக்கு மட்டுமல்ல, புழுப்பூச்சிகளுக்கும் கூடப் பொருந்தக்கூடிய ஒரு தரிசனம்தான். அதே சமயம் அனுமனை வழிபடக்கூடிய மனநிலை உடைய ஒருவரால் காளியை வழிபடமுடியாது என்பதும், உருவ வழிபாடு தேவையாக இருக்கும் ஒருவருக்கு அருவ வடிவமாக இறைவனை வழிபடமுடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளே.

ஒவ்வொரு இந்துவும் தன் ஞானமரபின் ஆதார வாக்கியமாகக் கொள்ளவேண்டிய ஒன்றுண்டு. ஒரு முழுமுதல் உண்மை பிற உண்மைகளை மறுக்கக்கூடியதாக அமையாது. அது பிற உண்மைகளை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மைக் கொண்டதாக மட்டுமே இருக்கும்.

இதுவே உண்மையில்  பிரபஞ்ச தரிசனத்தின் முரணியக்கமாகும். ‘ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்’ என்பதனால் பாக்டீரியா நம் உயிரைக் குடிப்பது பொய் என்றாகிவிடாது என்ற புரிதல் என அதை எளிமைப்படுத்திக் கொள்ளலாம். உயர் பெளதீகமோ, உளவியலோ, தத்துவமோ – இந்த முரணியக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் நாம் அவற்றின் அடிப்படைத் தரிசனங்களை உள்வாங்க முடியாது.

சாங்கிய யோகம் முடிந்ததுமே கீதை கர்மம்-ஞானம் என்ற பிரிவினையை நிகழ்த்தியபடி விவாதத்தை இன்னும் நுட்பமாக ஆக்குகிறது. ஒரு பேச்சுக்கு கீதையின் சாங்கிய யோகத்துக்குப் பிறகுள்ள பகுதிகள் நமக்குக் கிடைக்காமலேயே போய்விட்டன என்று வைத்துக்கொள்வோம். கீதை முழுமையான ஒரு நூலாகவே கருதப்பட்டிருக்கும் அல்லவா? கீதை எழுப்பும் கேள்விக்கான முழுமையான விடையை அது சாங்கிய தரிசனத்தின் தளத்திலேயே தந்துவிட்டது. அதாவது நமது நடைமுறை வாழ்வின் தளத்தில் கீதை எழுப்பும் பிரச்சினை முழுமையாகவே முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் கீதை மேலும் செல்கிறது. நடைமுறை தளத்துக்கு அப்பால் உள்ள தளங்களுக்கு அந்த வினாவை எடுத்துச் செல்கிறது. அதன்மூலம் நுட்பமாக அது நடைமுறைத் தளத்தை நிராகரிக்கிறது. நடைமுறைத்தளத்தை முழுமையாகவே சொல்லிவிட்டு அதற்குமப்பால் செல்லும் ஒருவன் உணரக்கூடிய  இடைவெளிகளை அல்லது போதாமைகளைப் பற்றி கீதை பேச ஆரம்பிக்கிறது. இதுவே முரணியக்கம் மூலம் முன்னகர்தல் – யோகாத்ம முறை.

இங்கே கர்மயோகம் தொடங்கும் விதத்தை நாம் கவனிக்க வேண்டும். கிருஷ்ணன் சாங்கிய யோகத்தில், கிட்டத்தட்ட கூறிமுடிக்கும் தொனியில், ‘மரணத் தருவாயிலாவது இந்த ஞானத்தை அடைபவன் பிரம்ம நிர்வாணம் அடைவான்’ என்று கூறிய பிறகு, அர்ஜூனன் மேலும் வினவும் சொற்களே கர்மயோகத்தின் தொடக்கம். இது கீதையின் இலக்கியக் கட்டுமானத்தின் அழகை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. அர்ஜூனனுக்கு சாங்கிய யோகம் போதுமானதாக இல்லை என்பதையே காட்டுகிறது. அப்பதில்களால் அவன் நிறைவுறவில்லை. அவனுடைய தேடலானது சாங்கிய யோகத்தைத் தாண்டிச் செல்கிறது. இன்னும் இன்னும் என அது துடிக்கிறது.

அதாவது கீதை மேலும் நீள்வதற்குக் காரணம் கிருஷ்ணன் அல்ல, அர்ஜூனனே. இன்னும் கேள்வி இருப்பதினால்தான் மேலும் பதில் வரவேண்டியிருக்கிறது. இவ்வுரையாடலில் பதில் கேள்வியினாலும் தீர்மானிக்கப்படுகிறது. இங்குள்ள உட்குறிப்பு தெளிவான ஒன்று. சாங்கிய யோகத்தில் இருந்து மேலே நகரும் ஆத்ம சாதகனுக்கு உரியது கர்மயோகம். உங்களால் மேலும் கேட்க முடிந்தால் மட்டுமே அடுத்த படியில் நீங்கள் கால் வைக்கலாம் என்று கிருஷ்ணன் உணர்த்துகிறார். இந்தப் பயணத்தில் எந்த ஒரு படியிலும் நின்றுவிடுவதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

[மேலும்]

முந்தைய கட்டுரைகம்பன் கண்ட மயில்
அடுத்த கட்டுரைஅங்காடித்தெரு கடிதங்கள்