மலை ஆசியா – 5

ஜனவரி முப்பது அன்று தைப்பூசம். அன்றுதான் பத்துமலையில் வெயில் முழுக்க தலைகளிலேயே விழும் என்றார்கள். காலையில் எழுந்து குளித்துக்கொண்டிருந்தபோது வாசலில் ஒரு தட்டு கேட்க நாஞ்சில்நாடன் லுங்கியுடன் திறந்த பிள்ளைவாள் உடலுடன் வெளியே போய் எட்டிப்பார்த்தார். செய்திதாள்தான் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு திரும்புகையில் குதிஉயர்காலணி அணிந்து குதிரைபோலச் சென்ற ஒரு வெள்ளைக்காரி அவரை பீதியுடன் பார்த்தாள்.

 

நாஞ்சில் உள்ளே வந்து குழப்பத்துடன் ”இங்கயெலாம் சட்டைபோடாம வெளிய போக மாட்டாங்களா?” என்றார். ”ஆமா சார், ரொம்ப  அநாகரீகம்னு நெனைப்பாங்க” ”அப்டியா?” என்றார். நான் ” இதெல்லாம் ஊருக்கு ஊர் மாறுற வழக்கம். அவங்க கடற்கரையிலே ஒட்டுத்துணிகூட இல்லாம வெயிலிலே கூட்டம் கூட்டமா செம்மீனை காயவச்சதுமாதிரி கிடப்பாங்க. அது நாகரீகம். வீட்டில கொஞ்சம் காத்தாட இருந்துட்டா அநாகரீகம்” என்றேன்.

”தப்பா நெனைச்சிருப்பாளோ?” என்று நான் ”சேச்சே” என்று சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்புடன் நாஞ்சில் கேட்டார். ”கண்டிப்பா..” என்றேன் ”அவளை நீங்க அவமதிச்சிட்டதாத்தான் நெனைபபா” ”இப்ப என்ன செய்ய? ஒண்ணுமில்லேண்ணாலும் பெண்பாவம் பொல்லாததுண்ணு சொல்லு இருக்கே…அன்னிய நாட்டில வந்துபோட்டு..” அவளை தேடிக் கண்டுபிடிக்க கிளம்புவது எனக்கு பொருத்தமாகப் படவில்லை. ”சரி விடுங்க, அவ சகுனம் அவளுக்கு…இதெல்லாம் விதிதானே?” என்றேன்.

 

காரில் நேராக பத்துமலைக்குச் சென்றோம். வெயிலில் அந்தப்பகுதியே வியர்வைமணம் கமழ இருந்தது. பெரும்பாலான முகங்களில் ஒரு மதுரைக்களை. ”அதிகமா விருதுநகர் சாத்தூர் இந்தப்பக்கமா இருந்து வந்தவங்க மாதிரி இருக்காங்க” என்று நான் நினைத்ததையே சொன்னார் நாஞ்சில். இலங்கையின் மலையகத் தமிழர்களைப் பார்த்தால் தஞ்சை முகங்களாக இருக்கும்.

பெரிய பெரிய அண்டாக்கள் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஊரிலிருந்து சமைத்து சாப்பிட்டபடியே வருவார்கள் போலும். அன்னிய ஊர்களில் குடும்பங்களைப் பார்க்கையில்தான் குடும்பத்தின் அழகே தெரிகிறது. குழந்தைகள் கீழே விரிக்கபப்ட்ட கித்தான்களில் தூங்க அப்பாவும் அம்மாவும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பெரிசுகள் கூடி அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தன. ஓர் அன்னிய மண் போலவே இல்லை. அன்னிய மண்ணேதான் என்று நினைக்கும்போது அத்தனை தமிழர்களை பார்ப்பது அலாதியான பரவசம் ஒன்றை அளித்தது

 

மலையருகே உள்ள விடுதியில் சாப்பிடச் சென்றோம். அங்கே சைவம் உணவுதான், முருகன் சைவமாயிற்றே. குறவள்ளி என்ன சமைத்திருப்பாள் என்று தெரியவில்லை. தைப்பூசம் வேறு. ஆனால் ஒருநாள் ஆனால்கூட அசைவம் இன்றி சோறு இறங்காத என் அப்பாவைப்போன்றவர்கள்தான் அங்கே பெரும்பான்மை என்று நினைக்கிறேன். சோயாபீன்ஸ் புரோட்டினில் செய்யப்பட்ட சைவ சிக்கன், சைவ மீன் குழம்பு, சைவ மீன் பொரியல், சைவ மட்டன் என்று அந்த ஓட்டலில் ஏராளமான உணவு வகைகள்.

அச்சுஅசல் கறி, மீனின் சுவை. அதேபோல வடிவம். சிக்கனில் எலும்புக்குப் பதில் மரத்துண்டு. மீன் பொரித்ததன் நடுவே பிளாஸ்டிக் முள்.சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ‘எங்கியோ உதைக்குதே’ என்று உணர்ந்துதான் அவை நிஜ மீன், சிக்கன் அல்ல என்று அறிய முடியும். சைவக் கள், சைவச் சாராயம் என்றெல்லாம் கிடைக்குமோ என்னவோ. கற்பை இழக்காமல் சோரம்போகச் சிறந்த வழி.

 

தைப்பூசக்கூட்டத்தில் போதிய அளவு நீந்தியபின் கொலாலம்பூர் அருகே உள்ள கெண்டிங் குன்றுகளுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்பினொம். கடல்மட்டத்தில் இருந்து 1750 கிமி உயரமுள்ள கெண்டிங் ஒரு மலைவாச ஸ்தலம். கிட்டத்தட்ட ஊட்டியின் அதே உயரம். ஊட்டியைப்போலவே சுற்றி சுற்றி சாலையில் ஏறிச்செல்லவேண்டும். கீழே அடர்த்தியற்ற காடு. மேலே செல்லும்தோறும் காடு அடர்பசும் பரப்பாக ஆனது.

கெண்டிங் மலைமீது குடியிருப்புகள் கடைகள் என ஏதும் இல்லை. இது ஒரு தனியார் சுற்றுலா- சூதாட்ட மையம். 1960களில் சீன வர்த்தகரான லிம் கோ டாங் அவர்களால் நிறுவப்பட்டது. அவரது மகனான லிம் கோ தாய் அவர்களின் தலைமையிலான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

 

கெண்டிங்கில் நாங்கள் நுழையும்போது மூடுபனி. பத்துமலையின் எரிக்கும் வெயிலில் ஒன்றரை மணிநேரம் முன்புதான் இருந்தோம் என்பதே மறந்து போய்விட்டது. ”ஊட்டி மாதிரி இருக்கு… ”என்றார் நாஞ்சில்நாடன் ”அந்த நாத்தம் மட்டும் இல்லை” பனிப்படலம் மேகம் போலச் சூழ அதநூடாக ஓங்கிய அடுக்கு மாடி கட்டிடங்கள் தெரிந்தன. காஸினோக்களும்  விடுதிகளும்தான் அங்கே எங்கும். ஊடே  தொங்கு ரயில்கள், சாகச கூண்டுவண்டிகள் விர்ரீட்டு சென்றன. பெரும்பாலும் சீன முகங்கள், கண்கள் இடுங்கி பழுப்பு பற்களுடன் சீனச்சிரிப்புகள்.

காசினோவின் உள்ளே சென்றோம். அதிக கூட்டம் இல்லை. கூட்டம் அன்று மாலைதான் மேலேறும் என்றார்கள். பல இடங்களில் கழுவிக்கொண்டிருந்தார்கள். நான் ஆஸ்திரரேலியாவிலும் அமெரிக்காவிலும் பார்த்த அதே அமைப்பு கொண்ட காசினோ. பளபளக்கும் விளக்குகள் உருவாக்கிய இரவுபகலற்ற சூழல். உருண்டபடியே இருக்கும் இயந்திரங்கள் அவற்றுடன் பிணைக்கப்பட்டவர்கள் போல விழிவிந்த பேதை மனிதர்கள்.

 

நூற்றுக்கணக்கான மையங்களில் சூதாடிகள் எதிரே இருக்கும் சீன நிபுணருடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு எந்த சீட்டுவிளையாட்டுமே தெரியாது. எந்த சூதாட்டமும் புரியவும் புரியாது. நான் முகபாவனைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நிபுணர் தன் முகத்தை பொம்மைபோல வைத்துக்கொண்டு கைகளை இயந்திரம்போல மல்லாத்தி காட்டியபடி படுவேகமாக சீட்டுகளை கலைத்து அடுக்கினார். கொய்தெடுத்த பணத்தை மடித்து ஒரு உண்டியல் வாய்க்குள் போட்டு அழுத்தி உள்ளே தள்ளினார். தோற்ற சீனர்கள் சமாளிப்புச் சிரிப்பு சிரித்து ‘வா, ஹா’ என முடியும் சொற்றொடர்களைச் சொல்லி கொண்டார்கள்.

 

நான் நினைத்தது போலவே நாஞ்சில்நாடனுக்கு முற்றாக அந்தச் சூழல் பிடிக்கவில்லை. ”கிறுக்கு பிடிக்கிறது மாதிரி இருக்கு” என்றார். மெல்பர்னில் அருண்மொழியும் அதைத்தான் சொன்னாள். ”மனுஷனை ஒருமாதிரி கேணையனா ஆக்குற எடம் மாதிரில்லா இருக்கு. மனுஷன் கிட்ட இருக்கிற ஏதோ ஒண்ணு இங்க வந்தா இல்லாம ஆயிடுது மாதிரி இருக்கே” என்றார். சரியான அவதானிப்பு அது என்று பட்டது. ஆன்மீகமாக மனிதனில் எஞ்சும் சிறிய ஈரம்கூட அங்கே துடைத்தழிக்கப்பட்டுவிடுகிறது. வெறிகொண்ட விழிகள்.

இந்தச் சீன இனத்தவர்தான் உலகம் எங்கும் சூதாடிக்கொண்டே இருக்கிறார்கள். லாஸ் வேகஸ் முதல் மெல்பர்ன் வரை. நாளை உலகை வென்று சீனா வல்லரசாக ஆகுமென்றால் தேசங்களையே காசினோக்களாக ஆக்கிவிடுவார்கள். யார்கண்டது, தோழர் பிரகாஷ் காராட்டு கூட நல்ல கேஸினோ ஒன்றை ஆரம்பிக்கக் கூடும். அதற்கான திறமை அவருக்கு உண்டு.

 

நாஞ்சிலை சமாதானம்செய்ய மனோ அதற்குள் கற்றிருந்தார். ”காபி சாப்பிடுங்க சார்” என்றார். இயந்திரப்பசு கறந்த சூடான காபி நன்றாக இருந்தது. நாஞ்சிலின் முகம் மலர்ந்து நெற்றி நடுவே உள்ள சுருக்கம் இல்லாமலாகியது. ”நல்ல காபி” என்றார். அந்தமனநிலையிலேயே அவரை மீட்டு எடுத்துக்கொண்டு சென்றுவிடவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

 

கிளம்பி கீழே வரும் வழியில் பெரும் புத்தர் கோயில் ஒன்று வந்தது. சீனபாணி கோயில் எத்தனை பெரிதென்று சாலையில் இருந்து தெரியவில்லை.  பெரிய சிவப்பு வளைவைத் உள்ளே சென்றபோது அந்த வளாகத்தின் அகலம் ஆச்சரியம் கொள்ளச் செய்தது.  செந்நிறமான கல்பதிக்கபப்ட்ட முற்றத்தைச் சுற்று ரத்தச்சிவப்பான சுவர்களுடன் மர உத்தரங்களையும் மூங்கில் சட்டங்களையும் கான்கிரீட்டில் போலி செய்து கட்டப்பட்ட பகோடாக்கள்.  சீனாவின் புராதன கோயில்களை நினைவூட்டும் அதே செவ்வண்ணம்.  டிராகன் அலங்காரம். மலர் செதுக்குகள்.

 

அந்த கோயிலுக்கு சின் ஸ்வீ கோயில் என்று பெயர். சீன தாவோயிச பௌத்தத்தின் கோயில் அது.முழுக்க முழுக்க கெண்டிங் நிர்வாகத்தால் கட்டப்பட்டது. கெண்டின் காசினோவின் நிறுவனரான லிம் கோ டாங் அவரது சொந்த ஊரான சீனாவில்  உள்ளப்ப்யூஜின் பகுதியின் பெங்க்லாய் மலையின் சாயலை இங்கே கண்டதனால் பெரும்பொருட்செலவில் இந்தக் கோயிலை அமைத்தார். 1975ல்தான் இந்தக்கோயில் கட்டும் பணி ஆரம்பித்தது. 28 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது இந்த வளாகம்.

 

காசினோ சில கணங்களிலேயே மறந்து போய்விட்டது. மையப் பகோடாவின் மீது ஏறுவதற்கு சுருள்படிகள் இருந்தன. சுவர்களில் சிறிய புத்தர் சிலைகள் அடர்ந்திருந்தன. லட்சம் சிலை போல ஏதோ கணக்கு இருக்கும்போல. கூரை மூங்கிலை அடுக்கி கட்டப்பட்டதுபோல கான்கிரீட்டால் செய்யப்பட்டது. பகோடாக்களுக்கே உரிய விளிம்பெழுந்து வளைந்த, அடுக்கடுக்காக மேலேறும் கூரைகள். மேலே நின்றபோது இரு பெரிய புத்தர் சிலைகள் தென்பட்டன.

 

கீழிறங்கி எதிரே இருந்த சிறிய குன்றின் மீது ஏறி சிலைகளை பார்த்தோம். மரபின் மைந்தனும் ராமலிங்கமும் ஏற்கனவே சிலைகளை பார்த்துவிட்டவர்கள் ஆதலால் படி ஏறாமல் அமர்ந்துவிட்டார்கள்.  அந்தக் குன்று முழுக்க சீனபௌத்த புராணங்களில் உள்ள எராளமான சிலைகள் செய்யப்பட்டிருந்தன..

இந்தியாவுக்கு பௌத்த சுவடிகளைத் தேடி வரும் பௌத்த துறவிகளின் சிலைகள் அற்புதமானவை. புத்தர் தாமரை மலர்மீது அமர்ந்த கோலத்தில் உபதேச முத்திரையுடன் இருக்கும் மாபெரும் ஒற்றைக்கற்சிலை கிட்டத்தட்ட அறுபதடி உயரமானது. பெரியசிலைகளுக்கு வரும் வடிவ ஒருமைச் சிக்கல்கள் இல்லாத துல்லியமான சிலை. புத்தரின் முகம் பெரும் சாந்தத்துடன் இருந்தது.

இன்னொரு பெரிய சிலை சீன பெண்போதிசத்வரான ‘க்வான் யின்’னின் நின்ற கோலம்.  குவான் யின் பிரியம் கருணை ஆகியவற்றுக்கான தெய்வம். போதிசத்வ அவலோகிதேஸ்வரரின் பெண் வடிவம் அது என்றும் சொல்கிறார்கள்.  இதைத்தவிர பல சிறு குகைக்கோயில்களில் போதிசத்வர்களின் சன்னிதிகள் இருந்தன

கெண்டிங் வந்த ‘தீட்டு’ புத்தர் கோயிலை தரிசித்ததன் மூலம் கழிந்தது என்று பட்டது. ஒன்று மனிதனின் பேராசை இன்னொன்று அவனது விடுதலை. இரண்டு ஒரே இடத்தில், ஒருவரால் அமைக்கப்பட்டவை. 

அந்தி சரிய ஆரம்பித்தபோது கொலாலம்பூருக்குக் கிளம்பினோம். கொலாலம்பூரை அடைந்தபோது ஒன்பது மணி. மையச்சாலையில் தைப்பூச தேர் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. வெள்ளி அலங்காரம் செய்த தேர். அதன் மீது ஒளி பாய்ச்சிய விளக்குகள். பழனி வெள்ளித்தேர்தான் நினைவுக்கு வந்தது.

ஏராளமான தமிழ் முகங்கள். குங்குமப்பொட்டு போட்டு சேலைகட்டி பூச்சூடிய பெண்கள். சுடிதார் போட்ட தமிழ் குமரிகள். நாதஸ்வரம் தவில் வாழைக்குலைகள் கனத்த மலர்மாலைகள்.  தீபச்சுடர்கள் எரிந்த தாம்பாளத்துடன் பெண்கள் முன்னால் சென்றார்கள். அய்யர்கள் தேங்காய் உடைத்து சூடம் காட்டிக்கொண்டே சென்றார்கள். வெல்வேல் தமிழ்மைந்தன் கொலாலம்பூர் தெருவில் பவனி வந்ததை கண்டதும் ஒர் மன எழுச்சி ஏற்பட்டது.

சாலையில் காரை நிறுத்தி தேர் சென்று மறைவது வரை பார்த்தபின் அறைக்குச் சென்§றோம்.

முந்தைய கட்டுரைசிந்துசமவெளி
அடுத்த கட்டுரைஅங்காடித்தெரு வருகிறது