«

»


Print this Post

இந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்


திரு. ஜெயமோகன் அவர்களுக்கு
கிறிஸ்துவர் மீது தாக்குதல் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் எழுதி வெளியாகியிருந்த கடிதத்தையும் அதற்கான உங்களது ரத்தின சுருக்கமான பதிலையும் படித்தேன். தான் என்ன எழுதுகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உணந்த மற்றும் புரிந்த நிலையில் எழுதப்பட்ட கடிதமாக அது தெரியவில்லை. பிரவீன் தொகாடியா, ஆர்.பீ.வீ.எஸ்.மணியன், அசோக் சிங்கால், ராமகோபாலன் ஆகியோர் இந்து மதத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள், வெறும் துவேஷத்தை கக்குகிறவர்கள், தங்கள் பேசுவது அபத்தம் என்பதையே உணராதவர்கள் என்றெல்லாம் சொல்கிற இவருக்கு அவர்களிடமிருந்து மாறுபட்ட புரிதல் ஒன்று இருக்குமாயின் அதற்கு இக் கடிதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மதச்சார்பின்மை பற்றி, இந்துக்களும், இந்து மதமும் வஞ்சிக்கப்படுவது பற்றி, முஸ்லிம்கள் பற்றி அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதையே ஒரு வார்த்தை பிசகாமல் கூறுகிறார் இவர். இவரது அபத்தமான வாதம் இவருக்கு புரியாது இருப்பது ஆச்சர்யமல்ல. ஆனால் உங்களுக்கு புரியாதது ஏன்? மோடி பற்றிய சந்தோஷின் கருத்து தான் உங்களது கருத்துமா? நீங்கள் சொல்லும் விஷயங்கள் அப்படியே என் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன என்று கூறியிருக்கிறீர்கள். மோடிக்காக இவர் அவ்வளவு வாதடி என்ன பயன்? 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம்கள் படுகொலைப் பற்றி கரண் தாப்பர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் சொல்ல முடியாது நேர்காணலின் ஐந்தாவது நிமிடத்திலேயே வெளியேறிவர் மோடி. மோடிக்குத் தெரியும் தனது அரசின் செயலை தன்னைப் போன்ற மற்றொரு இந்துத்துவாவாதியிடம் மட்டுமே நியாயப்படுத்த முடியும் என்பது.
அடுத்ததாக, சர்வோத்தமன் என்பவரின் கடிதத்திற்கு எழுதியுள்ள பதிலில் ஸ்டாலினுக்கு கம்யூனிசம் கட்டிய கப்பத்தை பஜ்ரங்கதள்ளுக்கு ஆர்.எஸ்.எஸ். கட்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பதிலின் மூலம் கம்யூனிசம் பற்றிய உங்கள் மிகத் தவறான புரிதல் மட்டும் வெளிப்படவில்லை. ஏதோ ஆர்.எஸ்.எஸ். சிறந்த தத்துவம் மட்டும் நல்ல கொள்கைகளை அடித்தளமாக கொண்ட இயக்கம் என்பதாகவும் பஜ்ரங்தள், பா.ஜ.க. போன்ற அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளுமே அதற்கு கெட்ட பெயர் கொண்டு வருவது போலவும் சித்தரித்திருக்கிறீர்கள். தயவு செய்து, சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோரின் சிந்தனைகளிலிருந்து பஜ்ரங்தள், பா.ஜ.க. எவ்வாறு விலகிப் போய் விட்டது, ஆனால் ஆர்.எஸ்.எஸ். அவர்களின் சிந்தனைகளிலிருந்து விலகாமல் எவ்வாறு பின்பற்றுகிறது என்பதை நீங்கள் விளக்க வேண்டும். மார்க்ஸின் கம்யூனிசத்திற்கும் ஸ்டாலினியத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை மார்க்ஸின் சிந்தனைகளை அறிந்த ஒருவரால் எளிதில் நிறுவ முடியும் (ரோசா லக்ஸம்பர்க் முதற்கொண்டு ஏராளமான இடதுசாரி கம்யூனிஸ்டுகள் போல்விஷசத்தின் பல அம்சங்களை கடுமையாக தாக்கியும், முரண்பட்டும் வந்திருக்கிறார்கள்). ஆர்.எஸ்.எஸ்.க்கும் பஜ்ரங்தள், பா.ஜ.க. மற்றும் வி.எச்.பி. போன்ற அமைப்புகளுக்கும் இருக்கும் உறவு என்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் வெகுஜன அமைப்புகளுக்கும் இருக்கும் உறவைப் போன்றது. ஒரு வெகுஜன அமைப்பு தவறிழைக்கும் போது அதை கண்டிப்பதும், சரியான பாதைக்கு திருப்புவதும் அதன் தாய் அமைப்பின் கடமை. இதுவரை ஆர்.எஸ்.எஸ். தனது பரிவார அமைப்புகளின் எந்த நடவடிக்கையையும் கண்டித்ததில்லை. வேலைநிறுத்தம் தொழில் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று புத்ததேவ் பட்டாச்சார்ய கருத்து தெரிவித்த போது அக் கட்சியின் தலைமைக் குழு அவரை வெளிப்படையாக கண்டித்தது. புத்ததேவும் மன்னிப்பு கோரினார். இது ஒருவர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதற்கு அடுத்தபடியான கடுமையான நடவடிக்கை. சி.ஐ.டி.யூ.வின் தலைவர் எம்.கே. பாந்தே அணுசக்தி ஒப்பந்தத்தையும் முஸ்லிம்களையும் இணைத்து பேசிய போதும் அக் கட்சி உடனடியாக அவரை திருத்தியது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
இந்துத்துவா சிந்தனையைப் பற்றிய உங்கள் புரிதலைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதுவது நல்லது. அதிலு அபத்தமான கடிதங்களுக்கு இப்படி ரத்தின சுருக்கமாக பதில் எழுதாதீர்கள்.
இப்படிக்கு
க. திருநாவுக்கரசு
உதவி ஆசிரியர்
த சன்டே இந்தியன்
புது தில்லி 110017.

அன்புள்ள திருநாவுக்கரசு,

தங்கள் கடிதம் கண்டேன்.

பயணத்தில் இருந்தமையால் சந்தோஷ¤க்கு நானெழுதிய பதில் சுருக்கமாக அமைந்ததனால் உங்கள் புரிதலில் இடறல்கள் இருப்பதை நான் உணர்கிறேன். என்னுடைய கருத்துக்களை நான் எப்போதும் தொடர்ச்சியாக ஆணித்தரமாகச் சொல்லியே வந்திருக்கிரேன். நான் உடன்படுவது என்ன என்பதை அந்த என் கருத்துப்புலத்தில் வைத்தே பார்க்க வேண்டும். அதற்கு இவ்விணையதளத்திலேயே பல கட்டுரைகள் உள்ளன. ஏன் இவ்விவாதத்துக்கு முகாந்திரமான கட்டுரையே போதும்.அன்றி, அக்கடிதத்துக்கு கீழே உள்ள அடிக்குறிப்பாக மட்டும் கண்டு மேலே விவாதிப்பது பொருளற்றது.

என் இணைய தளத்தில் அரசியல் விவாதம் வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்தமைக்குக் காரணம் என்பது இதுவே, அவ்விவாதம் எப்போதுமே இவ்வாறு பரஸ்பர அவநம்பிக்கை, தவறான புரிதலின் அடிப்படையில் நடந்து வீணாக நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவதில் சென்று முடியும். சிற்றிதழ்கள், இணையம் எங்கும் நிகழ்வது இதுவே. ஓர் எழுத்தாளனாக நான் அப்படி வீணாகி விட முடியாது.  ஆகவே நான் அரசியல் விவாதங்களுக்கு தயாராக இல்லை என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். கிறித்தவர் மீதான தாக்குதலுக்கு எதிராக நான் எழுதியது  அரசியலை மீறிய ஓர் அற அடிப்படை அதில் இருப்பதனாலும் எழுதவேண்டாமென எண்ணியும் எழுதும் மன உந்துதல் ஏற்பட்டமையாலுமே. கிறித்தவமும் கிறிஸ்துவும் என் ஆன்மீகமான சாராம்சத்தில் உறைகிறார்கள்.

திரு சந்தோஷ் எழுதிய வெளிப்படடையான கடிதத்தைக்கூட இந்துத்துவ கடிதமாகக் காணும் உங்கள் அரசியலை நான் புரிந்துகொள்கிறேன். தமிழகத்தின் சுமையே இதுதானே. நீங்கள் நினைப்பதை பிறர் நினைக்காவிட்டால் கிளம்பிவிடுவீர்கள்.

நான் சந்தோஷிடம் எதை ஏற்கிறேன் என்பதை வெளிப்படையாகவே பட்டியலிட்டுவிடுகிறேன். ராமகோபாலன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் போன்றவர்களுக்கு இந்து மெய்ஞான மரபில் அடிப்படைப் பரிச்சயமோ அதன் மீது மதிப்போ இருக்க நியாயமில்லை என்பதையே அவர்களின் வெறி கொண்ட பேச்சுகள் காட்டுகின்றன என்ற அவரது கூற்றையே நான் முழுமையாக ஏற்று ஆமோதித்திருக்கிறேன். அவர்களை இந்துஞானமரபின் காப்பாளர்களாகவும்  பிரதிநிதிகளாகவும் கருதுவது இந்து ஞானமரபுக்கு இழைக்கும் பெரும் அநீதி.  என் கட்டுரையில் இந்துத்துவ முல்லாக்கள் என நான் அவர்களையும் அவர்களைப்போன்றவர்களையும்தான் சொல்கிறேன். சந்தோஷின் அந்த சினம்  ஒரு சராசரி இந்துவின் மனச்சான்று சார்ந்தது.

மறுபக்கம் நம்முடைய பிரபல ஊடகங்கள் முழுக்கமுழுக்க ஓரம் சார்ந்தவையாக உள்ளன, அவற்றுக்கு எந்தவிதமான அற அடிப்படையும் இல்லை என்பதே  என் எண்ணம். சந்தோஷ் சொல்லும் இதை நானே என் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். ஆங்கில இதழாளர்களில் கணிசமானவர்கள் அடிப்படை நேர்மை இல்லாத கூலிப்படையினர். அவர்களுக்கு அளிக்கப்படும் ‘விலை’ என்ன என்றெல்லாம் அவர்களுடன் இத்தனை வருடங்களாக புழங்கும் நான் அறிவேன். பெரும்பாலான கட்டுரைகளில் அவர்கள் செய்திகளைச் சொல்வதில்லை, திட்டமிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தையே முன்வைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு ‘தூண்டுதல்’ அளிக்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு ,குஜராத் கலவரம் ஆகியவற்றில் இந்துத்துவர்களின் செயல்களைப்பற்றிய என் கடுமையான வருத்தத்தை, ஆதங்கத்தை, கண்டனத்தை நான் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் நம் ஆங்கில இதழ்கள் அச்சம்பவங்களை  அதன் பின்னர் எடுத்துக்கொண்டு முன்வைக்கும் முறை இந்த தேசத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் நோக்கம் கொண்டது. முஸ்லீம்களுக்கு இந்திய ஜனநாயக அமைப்பிலும், இங்குள்ள அரசு அமைப்பிலும், இங்குள்ள நீதி அமைப்பிலும், சராசரி இந்துவின் நீதியுணர்விலும் எதிலும் நியாயம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணத்தையே மீண்டும் மீண்டும் அவை பதிவுசெய்கின்றன.

அக்கருத்துக்களை நாடெங்கும்  வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்கள் மறு பிரசுரம் செய்கின்றன.  ஒரு மாதம் குறைந்தது 10 இஸ்லாமிய தீவிர நோக்குள்ள இதழ்களை நான் படிக்கிறேன். அவை  அருந்ததி ராயையும்,  ராஜ் தீப் சர்தேசாயையும்  அ.மார்க்ஸையும் எல்லாம் மேற்கோள் காட்டி இந்திய தேசமும் மக்களும்  ஒட்டுமொத்தமாகவே இஸ்லாமியருக்கு எதிரானவை என எழுதுவதையே மீண்டும் மீண்டும் நான் வாசிக்கிறேன். இதன் மூலம் இந்திய இஸ்லாமியர் மனதில் கடந்த பல வருடங்களாக இந்திய வெறுப்பும் மத வெறுப்பும் பாதுகாப்பின்மையும் இங்குள்ள ஊடகங்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவையே இன்று தீவிரவாதம் உள்நாட்டிலேயே மலைபோல எழுவதற்கான காரணம்.  இந்த நாடு என்றாவது உள்நாட்டுப் போரால் அழியும் என்றால் அதற்கு மோதி பாணி அரசியல் வாதிகள் பாதி காரணம் என்றால் நமது இதழாளர்கள், அறிவுஜீவிகள் மீதிக்காரணம் என்றே நான் எண்ணுகிறேன். இதைப்பற்றிய சந்தோஷின் ஆதங்கத்தை நான் முழுமையாகவே ஏற்கிறேன்.

மோதி குறித்த சந்தோஷின் கருத்தை நான் ஏற்கவில்லை. மோதியை ஒரு தரமான அரசியல்வாதியாக நான் எண்ணவும் இல்லை. வன்முறைப்பின்னணி கொண்ட எந்த அரசியல்வாதியையும் என்னால் எவ்வகையிலும் ஏற்க இயலாது. இந்துத்துவ அரசியலில் ‘பஜ்ரங்தள்மய’ மாதலின் முகம் அவர்.  என் கட்டுரையில் அவரையே நான் கடுமையாக நிராகரித்து இருக்கிறேன் என்பதை எவரும் உணரலாம். மேலும் நேரடியாக குஜராத்தில் பயணம் செய்தவன் என்றமுறையில் குஜராத்தின் வளர்ச்சி பற்றிய பிரச்சாரம் மிகையானது என நான் உறுதியாகவே சொல்வேன். ராஜஸ்தானை ஒட்டிய குஜராத்தே இன்றும் இந்தியாவின் மிக தரித்திரமான பகுதி.  மோதியைப்பற்றிய ஆங்கில இதழ்களின் ஒருதலைப்பட்ச பிரச்சாரத்தின் மறுபக்கமாக உருவாக்கப்படும் பிரச்சாரத்தை சந்தோஷ் நம்புகிறார்.  ஒரு எளிய வாசகன் அந்த இடம் நோக்கி தள்ளப்படுவதை நான் புரிந்து கொள்கிறேன். உண்மையில் ஆங்கில இதழ்களின் காழ்ப்பையே தன் அரசியல் வெற்றிக்கான முதலீடாக எடுத்துக்கொள்கிறார் மோதி.

இந்து மனம் என்பதே இன்று நம் முதிரா அறிவுஜீவிகளால் அவமதிக்கப்பட்டு கூண்டிலேற்றப்பட்டிருக்கிறது. அதை சாதி வெறி மட்டுமே மரபாகக் கொண்ட, எந்த விதமான சிந்தனைப்புலமும் இல்லாத, வன்முறை மிக்க, பழமைவாத கருத்துக்குப்பையாக மட்டுமே காண நம்மை அவர்கள் நிர்பந்திக்கிறார்கள். சராசரி இந்துவின் ஆன்மீக எண்ணமும் கருணையும் நீதியும் கூட எள்ளி நகையாடப்படுகின்றன.  உடனடியாக அழிக்கப்படவேண்டிய ஒரு நச்சு சக்தி மட்டுமே இந்துமரபு என்று சொல்லும் நம் அறிவுஜீவிகள் அப்படி ஏற்காத ஒவ்வொருவரையும் இந்துத்துவ அரசியலை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக இந்த ஒருபக்கம் சார்ந்த, உள்நோக்கம் கொண்ட, பிரச்சாரத்துக்கு எதிர்வினை இருக்கும். அந்த கோபத்தை நான் சந்தோஷின் கடிதத்தில் காண்கிறேன். அவர் தன்னை இந்துத்துவ அரசியலில்  இருந்து எத்தனை தீவிரமாக விலக்கிக் கொள்கிறார் என்பதற்கு அவரது கடிதமே சான்று. ஆனால் மறுபக்கம் அவர் சார்ந்த சமூகம் மீது வைக்கப்படும் அநீதியான குற்றச்சாட்டு அவரை கொதிப்படைய வைக்கிறது. இன்றைய சராசரி இந்து இளைஞனின் உதாரண மனம் இது.  உங்களைப் போன்றவர்கள் அவர்களை இந்துத்துவ அரசியலை நோக்கி தள்ளுகிறீர்கள். உங்கள் கடிதத்தில் கூட அதையே செய்கிறீர்கள். இந்தியா எதிர்நோக்க்கியிருக்கும் ஆபத்தே இதுதான்.

**

இன்னொரு கடிதத்தில் நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கும் கோணலின் விஸ்வரூபமே பஜ்ரங்தள் என்று. விதை அங்கேதான் உள்ளது என்று. அது வேறு இது வேறு என்றல்ல. ஏன், என் முதல் கட்டுரையில் மிக விரிவான முறையில் இதை விவாதித்திருக்கிறேன். அதைக்கூட கவனிக்கமுடியாத அரசியல் மூர்க்கத்துடன் விவாதிப்பதையே நான் வீண் என்கிறேன்.

ஸ்டாலினுக்கும் லெனினுக்கும் சம்பந்தம் இல்லை என்ற உங்கள் கூற்றையெல்லாம் இப்போது விவாதிக்க அவகாசமில்லை. ஐம்பதாண்டுக்காலம் இருவரும் ஒன்றே என்று உலகக் கம்யூனிஸ்டுகள் வாதாடினார்கள். இன்றும் உலகில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் மிகப்பெரும்பாலானவை ஸ்டாலினை லெனினின் இன்றியமையாத நீட்சி என்றே நினைக்கின்றன. நம்முடைய எல்லா கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அதையே சொல்கின்றன. நீங்கள் அவர்களுடன் விவாதிக்க மாட்டீர்கள். ஸ்டாலினின் அழிவுத்தாண்டவத்தை எவராவது எடுத்துச் சொன்னால் மட்டும் லெனினைக் காப்பாற்ற முன்வருவீர்கள்.

கருத்தியக்கத்தை இயந்திரத்தனமாக அணுகும் மூர்க்கம், ஜனநாயக மறுப்பு, மையப்படுத்தப்பட்ட அதிகாரம் போன்று லெனினிடம் இருந்த ஒடுக்குமுறை அம்சங்களே ஸ்டாலினில் உச்சம் பெற்றன. அவை மார்க்ஸியத்தின் அரசியல் திட்டத்தில் உள்ளுறையாகவே இருந்தன.அதை மிக விரிவாகவே என் நாவலில் பேசியிருக்கிறேன். மேலைநாட்டினர் சொன்னால்தான் நீங்கள் மேற்கோள் மூலம் நம்புவீர்கள் என்றால் ஜீன் பால் சார்த்ர் முதல் ஐசக் டொய்ட்ஷர் வரை ஒரு பெரும் வரிசை ஆய்வாளார்கள் உள்ளார்கள்.படியுங்கள்.

*

நான் இந்து ஞான மரபை என் பாரம்பரியமாக எண்ணுபவன். அதன் தத்துவச் செல்வம், அதன் கலைகள், அதன் பேரிலக்கியங்கள் மானுடத்தின் சொத்து என்று உணர்ந்தவன்.  அது இல்லாவிட்டால் நான் வெறும் ஐரோப்பிய நகலாக வெறும் நுகர்வோனாக மாறிவிடுவேன் என நினைப்பவன். என் படைப்பியக்கத்தின் வேர்நிலமே அது என நம்புகிறவன்.

இம்மரபு  இந்த நிலத்தில் மிகச்சிக்கலான ஒரு முரணியக்கம் மூலம் உருவாகி வளார்ந்தது. அதன் சமூகவியல் வளர்ச்சி, அதன் தத்துவ வளர்ச்சி எல்லாவற்றையும் முரணியக்கம் என்ற கோணத்தில் அணுகினால்தான் புரிந்துகொள்ள முடியும். ஒன்றுக்கொன்று முரண்படும் பல்வேறு கூறுகள் கொண்டும் கொடுத்தும் வென்றும் அடங்கியும் நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சிபெற்ற நாகரீகம் இது. அதில் உள்ள அநீதிகள் அழிவுகள் அனைத்தும் எனக்கு தெரியும். அத்தகைய அநீதியும் அழிவும் இல்லாத பண்பாடே இல்லை என்று நான் எண்ணுகிறேன். நவீன மனம் அந்த அழிவின் அநீதியின் வேர்களைக் களைந்து  மரபின்  சாரத்தை மீட்டெடுக்கும்.

இன்று இந்தப் பண்பாட்டில் உள்ள எல்லாக் கூறுகளும் இதன் இன்றியமையாத உறுப்புகளே என்று எண்ணும் பக்குவம் உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். வென்றவையும் தோற்றவையும் எல்லாமே இணையான முக்கியத்துவம் பெற வேண்டும். ஒவ்வொன்றும் அதற்கான தனித்துவத்துடன் இயங்கும் வெளியாக இந்து ஞான மரபு இருந்தாக வேண்டும். ஒரு நிறுவனமாக அல்லாமல் ஒரு மாபெரும் உரையாடலாக இந்து ஞானமரபு நிகழ வேண்டும். அப்படி இந்து ஞான மரபை அணுகிய நாராயண குருவும் அவரதுமாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஓஷோ போன்றவர்களும்தான் என் முன்னுதாரணங்கள்.

இதற்குத் தடையாக இருப்பது இந்துஞான மரபை ஒரு ஒற்றைப்படையான கட்டமைப்பாக அணுகும் போக்கு ஆகும். இந்து ஞானமரபு அளிக்கும் எல்லையற்ற சுதந்திரத்தை இவ்வணுகுமுறையானது இல்லாமல் செய்கிறது. அதன்மூலம் காலப்போக்கில் இந்துஞானமரபை அது அழிக்கும். இந்த ஒற்றைப்படை நோக்குக்கு எதிராகவே இந்த இணையதளத்தில் மீண்டும் மீண்டும் நான் எழுதி வருகிறேன்.

இந்துத்துவ அரசியல் இந்து மரபின் அடையாளங்களை அரசியலாக்கம் செய்வதன் மூலம் இந்த ஒற்றைப்படையாக்கத்தை நிகழ்த்துவதனால் அதை நான் அபாயகரமானதாக அணுகுகிறேன். அதன் வன்முறை காரணமாக அதை எதிர்க்கிறேன். அதேசமயம் இந்து மரபையே அழித்தாக வேண்டுமென செயல்படும் நம்முடைய கூலிப்படை அறிவுஜீவிகளை இந்து மரபில் வேரூன்றியவன் என்ற முறையில் எதிர்க்கிறேன். ஆகவே அவர்களால் இந்துத்துவன் என்று முத்திரை குத்தப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு இம்மி கூட கவலை இல்லை. எழுத்தாளனுக்கு சமகாலத்தில் பெரும்பான்மை அங்கீகாரம் பெற்றாகவேண்டுமென கட்டாயம் ஏதும் இல்லை.

*

இந்த விவாதத்தை இங்கே நிறுத்திக் கொள்ளலாமென நினைக்கிறேன். நான் அரசியல் விவாதங்களில் நீச்சலிட விரும்புகிறவன் அல்ல.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/682

1 comment

 1. Arun

  Dear Mr. Jeyamohan,

  A very good afternoon to you. This is Arun from Chennai.

  I’m following your writings for quite some time, sir and I must say that you really write extensively on any chosen topic, without any partiality/bias.

  Please do continue this, sir.

  I just need to ask you one doubt, of course, as of now:).

  I’m very much interested in learning the Hinduism, its various thoughts/schools, sacred texts, et al. Now, will you please help me how to start learning?

  Hinduism in the sense, the learning of Hindu Philosophy, Brahmam, duality/non-duality (Advaita/Vishistadvaita/et al), what the Puranas/Smiritis/Epics/Vedas/Vedanthas/other texts actually try to say/establish???

  Am not able to understand the texts mentioned in Wikipedia in this regard…should I start studying Sanskrit first or what?

  Hence, may I request you please help me start with my search.

  Of course, am planning to buy your ‘Hindu Gnana Marabil Aaru Tharisanangal’ book so soon.

  Thanks again for taking your precious time reading this and your answer.

  Have a great day!!

Comments have been disabled.