இரவு 18

பதில் இல்லாத வினா

இவ்விரவு.

பதிலற்றவை முழுமையானவை

முடிவிலாதவை.

பகல்

இரவின் பதிலல்ல

ஒத்திப்போடுதல்தான்.

மீண்டும் மீண்டும்.

மேனன் சமையலறைக்குள் வந்து ”கமலா வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?” என்றார். ”போய் உங்க வேலையை பாருங்க. சும்மா உயிரை எடுக்காம” என்று கமலா சொன்னார். நான் தட்டுகளை து¨டைத்துக்கொண்டிருந்தேன்.  மேனோன் என்னிடம் ”நைஸ் ஜாப்” என்றபின் ”இவன் தான் இன்றைக்கு ஹீரோ. இவனை நீ இங்கே உட்கார வைச்சிருக்கே?” என்றார். ”எல்லாரும் வர்ரப்ப வருவார். யூ கென் கோ” என்றார் கமலா

”அட்மிரல் கிட்டே நாலு காய்கறி நறுக்கச் சொல்றது?” என்றேன். ”யார் இவரா? நல்ல கதை” என்று சிரித்தார் கமலா. ”உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? மிலிட்டரின்னா ஒரு பெரிய யந்திரம். அதுக்குள்ள நல்ல புத்திசாலிகளா பொறுக்கி கொட்டுவாங்க. மறுபக்கம் ஒண்ணுக்கும் உதவாத ஆட்களா வெளியே வருவாங்க. மிலிட்டரியிலே சேந்தா டிசிப்ளின் வரும். வேற எல்லாமே போயிடும்”

”நான் வர்ரேன்…அதான் சே·ப்” என்றபடி மேனன் திரும்பச் சென்றார். மஜீத் வெளியே இருந்து சீராக நறுக்கிய முள்ளங்கிகளுடன் வந்தார். ‘எடா மஜீதே, மேனன் சார் தொடங்ஙியா எந்நு நோக்கு” என்றபின் என்னிடம் ”நான் என்ன செய்றேன்னு பாக்கிறதுக்காக நைசா வந்திட்டு போறார்” என்றார். ”போத்துநாயர் வராதே மேனோன்சார் தொடங்ங்கில்ல” என்றார் மஜீத். ”போத்தா, யார்?” என்றேன். ”அதான் உன் வருங்கால மாமனார்.”  என்றார் கமலா. நான் சிரித்தேன்.

வெளியே கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. ”ஐ திங் இட் இஸ் வீணா… தே ஹேவ் தட் ஓல்ட் பென்ஸ்” என்றார் கமலா. அடுப்பில் அவியல் வெந்துகொண்டிருந்தது. அதன் வாழைக்காய் துண்டு ஒன்றை எடுத்து விரலால் நசுக்கியபின் ”ஓக்கே’ என்றார். ”அந்த தயிரை எடு” நான் பெரிய எவர்சில்வர் கிண்ணத்தில் இருந்த தயிரை எடுத்து நீட்டினேன். அதை பளிங்குப் பாளங்களாக சீவி எடுத்து அவியலின் மீது போட்டு லேசாக கிளறி பெரிய தட்டால் மூடி அப்படியே இறக்கி வைத்தார். அவியலுக்கே உரிய மணம் வர ஆரம்பித்தது.

கூடத்தில் இருந்து மேனன் ”சரவண்…” என்று கூவினார். ”பொய்க்கோ…பொய்க்கோ” என்றார் கமலா. நான் கையை துடைத்துக்கொண்டு கூடத்திற்குச் சென்றேன். அங்கே உயரமான ஒல்லியான அறுபது வயதான மனிதர் ஒருவர் கனத்த கண்ணாடியுடன் நிற்க அருகே ஒரு தடித்த சிவந்த நிறப் பெண். ”ஆ, திஸ் இஸ் த ஹீரோ…சரவண்” என்ற மேனன் என்னிடம் ‘இது வீணா பாகுலேயன். இது  அவள் கணவன் பாகுலேயன். ஹி வாஸ் எ புர·பசர் ஆ·ப்  ·ப்லாச·பி ஒன்ஸ்” என்றார். நான் ”ஹாய்” என்றேன்.

வீணா ”கமலா எந்து செய்யுந்நு?” என்றார். நான் ”சமையல்” என்றேன். ”ஓ…எந்தா அட்மிரல், எத்ர விருந்நுகாருண்டு இந்நு?” என்று வீணா சிரித்துக்கொண்டு கேட்டார். ”த ஹோல் கம்பெனி… பிகாஸ் டுடே இஸ் அ ஸ்பெஷல் டே” பாகுலேயன் என்னைப்பார்த்து புன்னகைசெய்தார். வீணா சமையலறைக்குள் சென்றார். நான் சோ·பாவில் அமர்ந்தேன். பாகுலேயன் ”ஆடிட்டர், இல்ல?” என்றார். ”ஆமா” என்றேன்.”ஆனா ஷேர் மார்க்கெட் பிசினஸிலேதான் இருந்தேன்…”

”குட்” என்றார் பாகுலேயன். நான் ”நீங்க  எங்க வேலை பாத்தீங்க?” என்றேன். ”எர்ணாகுளம் மகாராஜாஸ் காலேஜில்.. நான் இந்த வருடம் ஓய்வுபெற்றேன்” என்றார் பாகுலேயன் ஆங்கிலத்தில். நான் புன்னகையுடன் ” அதற்குப்பின்னர்தான் இரவு வாழ்க்கையா/” என்றேன். ” அதற்கு முன்பே அப்படித்தான். நான் அனேகமாக வகுப்புகளுக்கு போவதில்லை. மாணவர்களை அதிகாலையிலும் அந்தியிலும் என் வீட்டுக்கு வரசொல்லிவிடுவேன். என் கல்லூரியில் அதை பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் நான் ஒரு நல்ல ஆசிரியன்…”

மேனன் ”நல்ல தத்துவஞானின்னா மத்தவங்களை குழப்பிட்டு தான் தெளிவா இருக்கணும். இவர் அந்த மாதிரி” என்றார் . பாகுலேயன் சிரித்தார். ”மகாராஜாசில் ரொம்ப நன்றாக இருந்தது வாழ்க்கை. இப்போதுகூட நிறைய மாணவர்கள் தேடி வருகிறார்கள். நான் இருந்த காலம் ஒரு பொற்காலம். கெ.ஜி.சங்கரப்பிள்ளை டி வினயசந்திரன் மாதிரி கவிஞர்களெல்லாம் இருந்தார்கள். ..எல்லாருடனும் எனக்கு நல்ல உறவிருந்தது” மேனன் ”டாக்டர் எம் கங்காதரன் இருந்தார் இல்லையா?” என்றார். ”அவர் எம்ஜி யூனிவர்சிட்டியில். ஆனால் எல்லாரும் ஒரே குழுவாகத்தான் இருந்தோம்”

வெளியே இன்னொரு கார் வந்து நிற்க ஒருவர் ச·பாரி சூட்டில் ஏறி வந்தார். ”வரணம் வரணம்…” என்றார் மேனன். ”ஆகா, நம்ம பக்ஷிசார் வந்நிட்டுண்டல்லோ” என்றபடி வந்து அவர் பாகுலேயனின் தோளில் ஓங்கி அறைந்தார். முரட்டுத்தனமான தோரணையும் கட்டை மீசையும் கொண்ட உற்சாகமான மனிதர் ”நீங்கள்தான் சரவணன் இல்லையா?  நான் அப்துல் சத்தார். ஒரு வியாபாரி…சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று கையை நீட்டினார். இறுகப்பற்றி உற்சாகமாகக் குலுக்கினார். ”எந்தா மேனனே, தொடங்ஙுகயல்லே?”

”ஓ எந்தா தொடங்ஙுக? இவனல்லே வந்நிரிக்குந்நு” என்றார் மேனன். ”ஏன் இவர் குடிக்க மாட்டாரா?” ”இவனா, இவன் கொஞ்சம் ஜாஸ்தியா பச்சைத்தண்ணி குடிச்சா போதையேறி தத்துவமா உளறுவான்” சத்தார் என்னிடம் ”நான் இந்த மாதிரி தத்துவம் காரணமாக இரவு தூங்காமல் இருப்பவன் அல்ல. என் தொழில் முழுக்க அமெரிக்காவில். அமெரிக்காவின் பகல்தான் எனக்கு ராத்திரி. அமெரிக்கா போனால் பகலில்தான் விழித்திருப்பேன்” என்றார்.

இன்னொரு கார் வந்து நிற்க முப்பது வயதான இளைஞனும் மனைவியும் நான்கு வயதான பெண்குழந்தையும் வந்தார்கள். மேளயில் ரவிச்சந்திரன் என்று அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞர் ஒரு சிற்பி.  நெற்றியில் செந்தூரம் போட்டு மாநிறத்துடன் கொஞ்சம் குண்டாக அழகாக இருந்த அவர் மனைவி ”ரெம்யா ரெவி ” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ”அதென்ன மேளையில்?” என்றேன். ”தரவாட்டு பெயர். என் அப்பா கூட பிரபலமான சிற்பிதான் மேளயில் திவாகரன்.” நான் கேட்டிருக்கவில்லை. ”நவீன சிற்பங்கள் செய்கிறீர்களா?” ”இல்லை, நான் சிலைகள்தான் செய்கிறேன். மெட்டல். பார்த்தாஸ் கடையில் இருக்கும் பார்த்தாஸ் உரிமையாளரின் சிற்பம் நான் செய்ததுதான்”

பெண்குழந்தை அப்பா மடியிலேயே பிடிவாதமாக அமர முயன்றது. ”கமான் நிஷா” என்றார் பாகுலேயன். அவள் வெட்கத்துடன் அப்பா மடியில் முகம் புதைத்துக்கொண்டாள்.”லீவ் ஹர். ஒரு அரைமணிநேரம் அப்படி இருப்பாள் . அதற்குப் பின் அவளை கட்டுப்படுத்த ரவி ஓடி அலைய வேண்டியிருக்கும். போனதடவை என்ன ஆயிற்று தெரியுமில்லையா?” நான் ”படிக்கிறாளா?” என்றேன். ”ஸ்கூலுக்கு போகவில்லை. இவள் பகலில் விழித்திருப்பதில்லை” என்றான் ரவி.

நான் கொஞ்சம் வியப்புடன் அவனையே பார்த்தேன். ”அது ஒரு பிரச்சினை. அவளும் எங்கள் இரவுச் சமூகத்தில் ஒருத்தி.” என்றார் மேனன். ”இவளுக்காக ஒரு பள்ளிக்கூடம் தொடங்க முடியாது. எங்கள் இரவுச்சமூகத்தில் மொத்தம் நான்கு குழந்தைகள். நான்குபேரும் நான்கு ஊர்களில் இருக்கிறார்கள்” நான் ”எபப்டியும் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமில்லையா?’ என்றேன். ”ஆமாம், கொஞ்சம் கொஞ்சமாக பழக்க வேண்டும்…கஷ்டம்தான். ஆனால் அவள் அபாரமான புத்திசாலி. நான்கு சாதாரண குழந்தைகளுக்குச் சமம்” என்றான் ரவி. மேனன் ”பகலில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு…ஒரே வாரத்தில் அவளை நான்கில் ஒன்றாக ஆக்கிவிடுவார்கள்” என்றார்

பாகுலேயன் ”நிஷா, நீ பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டுமா வேண்டாமா?” என்றார். ”பள்ளிக்கூடம் டிவி மாதிரித்தானே இருக்கும்/” என்று நல்ல ஆங்கிலத்தில் நிஷா கேட்டாள். ”என்ன சொல்கிறாள்?” என்று அவர் ரவியிடம் கேட்டார். ”இப்போது இவளுக்கு டிவி போட்டுக்காட்டி பள்ளிக்கூடம் எப்படி இருக்கும் என்று சொல்லிக்கொடுக்கிறோம்” என்றான் ரவி. ”இவள் கேட்கிறாள், பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் எல்லாருக்கும் சேர்த்து ஒரே விஷயத்தை சொல்லிக்கொடுக்கிறாரே அது எப்படி புரியும் என்கிறாள்….”

”இல்லை” என்றாள் நிஷா. ” ஒரு மீசை வைத்த மனிதர் டிவி மாதிரி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி இப்படி ஒரு சதுரம் போட்டால் அது டிவிக்காட்சியாக ஆகிவிடும்..” கையால் சதுரம் போட்டு காட்டினாள். ” அவரிடம் நாம் பேசவே முடியாது. அவர்தான் அவருக்கு தோன்றியதை நம்மிடம் பேசுவார்….அப்புறம்” மூச்சை இழுத்து சோபாவில் ஏறி அமர்ந்து தீவிரமான முகத்துடன் ”ஒரே சேனல்தான். நாம் ஒரு ரிமோட் வைத்து அவரை ஒரு குரங்காக மாற்ற முடியாது. அவர் குரங்கைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார். குரங்கைப்பற்றி பேசும்போது அவர் சிரிக்கவே இல்லை. சிரிக்காமல் குரங்கைப்பற்றி பேசினால் குழந்தைகளுக்கு எப்படி புரியும்?”

நான் அந்தக்குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சமூட்டும் அறிவுக்கூர்மையும் கற்பனையும் கொண்ட பெண்குழந்தை என்று தோன்றியது. அவள் சோபாவில் இருந்து இறங்கி ”உங்கள் வீட்டில் ஏன் டிவி இல்லை?” என்றாள். ”எனக்குப் பிடிக்காது” என்றார் மேனன். ”எனக்கும் பிடிக்காது. ஆனால் நாம் டிவியை முட்டாளாக ஆக்க முடியும். ரிமோட்டில் அழுத்திக்கொண்டே இருந்தால் போதும் . ஆங்கிலமும் மலையாளமும் கலந்து அது பேசும். பாகுலேயன் தாத்தா, நீங்கள் தத்துவத்தில் டிவி வைத்திருக்கிறீர்களா?” ”என்ன டிவி?” ”வி¨ளையாட்டு டிவி மாதிரி தத்துவ டிவி?” ”நல்ல ஐடியாதான்” என்றார் அவர்.

”தத்துவத்தில் டிவி வைத்தால் அதில் பாட்டே இருக்காது.” என்றாள் நிஷா. ” ஏன் என்றால் தாத்தாக்கள்தான் தத்துவம் பேச முடியும்” பேசியபடியே புத்தக அலமாராவில் தொற்றி ஏறி ஒரு அலங்கார கண்ணாடிப்பொருளை எடுத்தாள். அந்தக்குழந்தைக்கு கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவிட்டி பிரச்சினை இருக்குமோ என்று எனக்கு சந்தேகம் எழுந்தது. ”தத்துவத்தில் பாட்டு பாடினால் அழுவது மாதிரி இருக்கும்” நான் அவளிடம் ”நிஷா உனக்கு தத்துவம் என்றால் என்ன என்று தெரியுமா?” என்றேன். ”நீ யார்?” ”சரவணன்” ”என்ன சரவணன்?” ”ஒரு நண்பர்” ”ஓ” என்றாள். பின்பு ”தத்துவம் என்றால் தர்க்கம். எல்லாவற்றையும் பற்றி தர்க்கம் செய்வது…”. மடேரென்று டீபாய் கோப்பையுடன் சரிந்தது

உள்ளிருந்து ரம்யா ஓடிவந்து ”அய்யோ…” என்றாள். ”ஒந்நு நோக்கிக்கூடே?” என்று சொல்லி ”ஸோறி” என்றாள். ”இட் இஸ் ஓக்கே…அவள் இதுமாதிரி பலதும் உடைக்கான் வேண்டி ஜனிச்சவள் அல்லே? ஸீ சரவணன், நிஷா இஸ் கோயிங் டு பி எ கிரேட் ஐகனோகிளாஸ்ட் ஒன் டே” ரம்யா மகளை கையில் பற்றி தர தரவென இழுத்துக்கொண்டே சென்றாள் ‘நோ.. நோ  அம்மே நோ” என்று கூவியபடி தரையில் இழுபட்டு சென்றது குழந்தை. ”ஐ வாண்ட் டு டாக் டு த ·பிலாச·பர்”

”அவளுக்கு பெண்களையே பிடிக்காது…”என்றான் ரவி ”உதவாத விஷயங்களை பேசுகிறார்கள் என்று நினைப்பு”  ”அபாரமான புத்திசாலி” என்றேன் நான். ”இரவிலே வளர்கிறாள்” மேனன் சொன்னார் ”அவள் இயல்பிலே புத்திசாலி. ஆனால் கூடவே இரவு இருக்கிறதே. பகலில் பெரும்பகுதி அவசியமே இல்லாத சமூகச் செயல்பாடுகளுக்காக சென்றுவிடுகிறது. வெயில், சத்தம் என்று சோர்வூட்டும் நேரமே அதிகம். ஒருநாளில்  ஒரு குழந்தை ஆழ்ந்த கவனத்துடன் எத்தனை நேரம் செலவிடுமென நினைக்கிறாய்? அதிகம்போனால் ஒருமணி நேரம். ஆனால் இரவில் நிஷா பனிரண்டு மனிநேரம் அப்படி கவனமாக இருக்கிறாள். பன்னிரண்டு மடங்கு!”

வாசலில் நீலிமாவும் நாயரும் வந்தார்கள். நான் எழுந்தேன். நாயர் ”ஹா ஹா…எல்லா ஆந்தைகளும் வந்திருக்கின்றன” என்றார். நீலிமாவின் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. முதன் முதலாக பார்த்துக்கொள்ளும் ஆணும் பெண்ணும்போல பார்வைகள் கலந்து ஒருவரில் ஒருவர் ஆழ்ந்திருந்தோம். மேனன் எங்களைப்பார்த்து ”ஆஹா..திஸ் இஸ் டெ·பனிட்லி எ டிவைன் லவ்!” என்றார்.

சத்தார் ”கேட்டடா நாயரே, நல்ல ஒரு பையனை நின்றே மகள் ஞானஸ்நானம் கொடுத்து எடுத்து… மிடுக்கி” என்றார். நீலிமா ”தேங்க் யூ அங்கிள்” என்றார். வெளியே உரக்க கார்கள் வரும் ஒலி கேட்டது. மேலும் நால்வர் வந்தார்கள்.  அறைக்குள் கலைசலாக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. உள்ளிருந்து வீணா வந்து ”அய்யோ நீலூ… நீ சுந்தரி ஆயல்லோடீ..” என்று வந்து தழுவிக்கொண்டாள். ரம்யா பின்னால் வந்து ”அவள் எப்போழும் சுந்தரியல்லே?” என்றாள்.

வழக்கமான பார்ட்டி மனநிலை. ஒருவர் இன்னொருவரிடம் பேசி பேச்சு முடிவதற்குள் இன்னொருவர் வந்து கலந்துகொள்ள அர்த்தமில்லாத உற்சாகப் பேச்சுகள். சிரிப்புகள். தழுவல்கள். புட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன. ஆளுக்கு ஒரு கோப்பையுடன் இருவர் மூவராக அமர்ந்து பேசினார்கள். எதிர்பாராத மூலைகளில் இருந்தெல்லாம் உரத்த சிரிப்பொலிகள் வெடித்தன. அவ்வப்போது என்னைப்பற்றிய பேச்சு வரும்போது ”சரவணன் இட் இஸ் எபவுட் யூ” என்று கூவினார்கள். நான் மனம் முழுக்க மகிழ்ச்சியை உணர்ந்தேன். மகிழ்ச்சி ஒரு விதமான அர்த்தமற்ற ததும்பலாக இருந்தது. நீலிமாவிடம் பேச விரும்பினேன். அவள் சமையலறையில் இருந்தாள்.

வெளியே கார் வந்தது. பிரசண்டானந்தாவும்  முகர்ஜியும் வந்தார்கள். மேனன் வாசலுக்குச் சென்று ”வரூ வரூ” என்று வரவேற்றார். பிரசண்டானந்தா வந்ததும் அமைதி ஏற்பட்டது. எல்லாரும் அவருக்கு வணக்கம் சொன்னார்கள். உள்ளிருந்து கமலா வேகமாக வந்தார். ”ஆ, கமலா…யூ ஆர் பிஸி” என்றார் பிரசண்டானந்தா. கமலா ”நமஸ்தே ஸ்வாமிஜி..நமஸ்தே முகர்ஜி சார்” என்றார். ”என்ன சமையல் கம்லா? மீன் உண்டா?” என்றார் முகர்ஜி. ”சைவம்” என்று கமலா சிரிக்க ”ஓ நோ” என்றார் அவர் கையை வீசி.

பிரசண்டானந்தா அமர்ந்துகொண்டார். ”எல்லாரும் தொடங்ஙிக் கழிஞ்š அல்லே?” மேனன் சிரித்துக்கொண்டு ”ஜஸ்ட் எ ·பன்…” என்றார். ”ஓகே குட்” என்றார் பிரசண்டானந்தா. முகர்ஜி நாயர் அருகே சென்று கட்டித்தழுவினார். ஒரு பெரிய மக் நிறைய எதையோ ஊற்றிக்கொண்டார். மீண்டும் சத்தம் எழ ஆரம்பித்தது. பிரசண்டானந்தா ”உன் மாமனாரையும் முக்கர்ஜியையும் ஒரே நுகத்தில் கட்டலாம், நல்ல ஆகிருதி” என்றார் ஆங்கிலத்தில். நான் சிரித்தேன். ”நீ ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறாய். வாழ்த்துக்கள். நீலிமா ஒரு தேவதை” ”தெரியும்” என்றேன்.

பிரசண்டானந்தா என்னைக் கூர்ந்து நோக்கி ”உனக்கு சஞ்சலங்கள் இருந்திருக்குமே” என்றார். ”இருந்தது…” என்றேன். ”இப்போது?” ”இல்லை” என்றேன். ”ஏன்?” நான் கொஞ்சம் தயங்கிவிட்டு கடலுக்குள் போனதைப் பற்றிச் சொன்னேன். அந்த அனுபவத்தை எப்படி விளக்குவதென எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவரே புரிந்துகொண்டது போல் இருந்தது. ”எனக்கு உக்கிரம் தேவையாக ஆகிறது. அது இல்லாமல் என்னால் இனிமேல் வாழ முடியாது” என்றேன்.

”உண்மைதான்” என்றார் பிரசண்டானந்தா. ”பகலில் வாழும் மனிதர்களையே பார்ப்போம். அவர்களில் யார் அதிகம் கூர்மையானவர்களோ அவர்கள் இன்னும் ஆழமாக வாழ முனைகிறார்கள். மற்றவர்கள் மேல்மட்டத்திலேயே வாழ்கிறார்கள். எந்த அளவுக்கு நுண்ணுணர்வு கூர்மையடைகிறதோ அந்த அளவுக்கு மனிதர்கள் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்து ஆழத்தில் வாழ்கிறார்கள், இல்லையா?” என்னை கூர்ந்து நோக்கி கேட்டார். நான் ”ஆமாம்” என்றேன்.

”ஆழம் என்று எதைச் சொல்கிறோம்?” என்றார் பிரசண்டானந்தா. நான் அவரே பேசட்டும் என்று காத்திருந்தேன். ”பெரும்பாலானவர்கள் வாழ்க்கையைப்பற்றிய நம்பிக்கைகள் புராணங்கள் சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றிலேயே வாழ்கிறார்கள். நூற்றுக்கு தொண்ணூறு பங்கு வாழ்க்கை பழக்கம், வழக்கம் என்ற இரண்டிலேயே முடிந்து விடுகிறது. நாமே செய்து நம்மிடம் படிந்துவிட்ட செயல்கள்தான் பழக்கம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்கள் காலாகாலமாகச் செய்து வரும் விஷயங்கள் வழக்கம். இதற்கு அப்பால் எதையாவது செய்பவர்கள் மிகமிக குறைவு. நம் மக்களில்  எதைப்பற்றியாவது சொந்தமாகச் சிந்திப்பவர்கள், ஒரு சொற்றொடரையாவது சொந்தமாகச் சொல்பவர்கள் அபூர்வத்திலும் அபூர்வம். நம்முடைய பொதுவான வாழ்க்கை என்பது மிக மென்மையான ஒரு சவ்வுபோன்றது. ஒரு மேல் சருமம் போன்றது. அதில்தான் நாம் சொல்லும் அத்தனை பண்பாடும் நாகரீகமும் அமர்ந்திருக்கின்றன. அத்தனை உணர்ச்சிகளும் சிந்தனைகளும்  வளர்ந்து நிற்கின்றன…”

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்களையே உற்று நோக்கி பேசும் வழக்கம் அவரிடம் உண்டு. அது அவரது சொற்களில் இருந்து நம் கவனத்தை விலக்க முடியாமல் செய்கிறதென்று நினைத்துக்கொண்டேன். ”மிகச்சிலர் அந்தச் சருமத்தை தாண்டி அடுத்த தளத்திற்கு வருகிறார்கள். பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் அப்பால் என்ன இருக்கிறதென தேடுகிறார்கள். பொதுவான நம்பிக்கைகளுக்கு அடியில் உண்மையில் என்ன இருக்கிறதென ஆராய்கிறார்கள். சிந்தனையாளர்கள் கலைஞர்கள் பலசமயம் வெறும் எக்ஸெண்டிரிக்குகள்….ஆனால் அவர்கள்தான் ஆழத்திற்கு  வருகிறவர்கள். ஆனால் அவர்கள்கூட மேல்மட்டத்தில்தான் வாழ்கிறார்கள். எப்போதாவது ஆழத்திற்கு வந்து திரும்பிசெல்கிறார்கள். அவ்வளவுதான்”

அவரை நான் வால்ட் டிஸ்னி படங்களில் வரும் பாம்பு என்று கற்பனைசெய்துகொண்டேன். இமைக்காத மயக்குவிழிகள். பேசப்பேச அவரது குரல் தாழ்ந்து மெல்லிய சீறலாக ஆகியது. உரத்து ஒலிக்கும் குரலை நம்மால் ஒதுக்க முடியும். முணுமுணுக்கும் குரலை கூர்ந்து கவனிக்காமல் இருக்கவே முடியாது ”ஆனால் சாதாரண மனிதர்களும் ஆழத்திற்கு வருவதுண்டு. முழுக்க முழுக்க மேல்சருமத்திலேயே வாழ்ந்து மறைய எவராலும் இயலாது. ஒருவேளை மந்தபுத்திகளால் முடியலாம். நுண்ணுணர்வு கொஞ்சமேனும் இல்லாத எவரும் இல்லை. மேலே மிதப்பவன் கைசோர்ந்து கொஞ்சம் அமிழ்ந்துவிடக்கூடும். உள்ளே இருந்து எதாவது அவனை பிடித்து இழுக்கக்கூடும். ஒரு சாமானியனின் வாழ்க்கையில் உக்கிரமான தருணங்கள் என்று அவன் சொல்வதெல்லாமே இந்த ஆழத்திற்கு அவன் வந்து மீண்டதைப்பற்றித்தான். ஒருவன் தன் வாழ்நாளைச் சுருக்கிச் சொன்னால் இந்த மூழ்கிய தருணங்களை மட்டும்தான் சொல்வான்…”

ஆழமான மௌனத்திற்குப் பின் அவர் தொடர்ந்தார் ”நீ கவனித்திருப்பாய்… அவ்வாறு அவர்கள் மூழ்கிய அனுபவங்கள் அனைத்துமே மிகமிக துயரம் மிக்கவையாகவே இருக்கும். தங்கள் பழக்க வழக்கங்களுக்கு அடியில் மனிதர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்று அறியும் போது அவர்கள் ஆடிப்போய்விடுகிறார்கள். வாழ்க்கையின் அஸ்திவாரமே நொறுங்கிவிடுவது போல உணர்கிறார்கள். அதிலிருந்து மீள அவர்கள் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் போராடுகிறார்கள். பலர் மீளமுடியாமலே ஆகிவிடுகிறார்கள். நடைபிணங்களாக ஆகிவிடுபவர்கள் உண்டு. கிறுக்கர்களாக , அவநம்பிக்கைவாதிகளாக ஆகிறவர்கள் உண்டு. அந்த மேல்மட்டத்தில் கொலைகளும் தற்கொலைகளும் அந்த ஆழத்தை சந்தித்த தருணங்களின் விளைவாகவே நடக்கின்றன. உதாரணமாக ஒரு மாபெரும் நம்பிக்கைத்துரோகம்.  மேல்மட்ட வாழ்க்கையில் மிகமிக உக்கிரமான அனுபவம் என்றால் அதுதான். ஏனென்றால் அவர்கள் வாழும் சருமத்தில் அது இல்லை. அது சருமத்திற்கு அடியில் ஆழத்தில் இருக்கிறது. அந்த ஆழத்தை முற்றிலும் அறியாமலேயே அவர்கள் அது வரை வந்திருக்கிறார்கள்.  பிரம்மாண்டமான பேய் போல அது கண்முன் நிற்கும்போது அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை…”

”நான் அந்த மேல்சருமத்தை ஜாக்ரத் என்று சொல்வேன்” என்றார் பிரசண்டானந்தா. ”சாக்த மரபிலே உனக்கு ஆர்வமிருந்தால் விரிவாகவே அதை நீ பயிலலாம். ஜாக்ரத் என்பது பல ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் உருவாக்கி எடுத்த ஒரு பாதுகாப்புப் படலம். முழுக்க முழுக்க பொய்யாலான ஒன்று அது. நம் உடலின் மேல்சருமம் இறந்த செல்களால் ஆனது தெரியுமா? ஆனால் உயிரற்றவற்றால் ஆன ஒரு படலம் நம் மீது இருப்பதனால்தான் நமக்குள் இருக்கும் உயிர்ச்சருமமும் சதைகளும் பாதுகாப்பாக இருக்கின்றன. அரைமணிநேரம் மேல்தோல் இல்லாமலிருந்தால் நம் உடல் பாளம் பாளமாக வெடித்துப் புண்ணாகிவிடும். அதேபோன்றதுதான் ஜாக்ரத். சாமானியர்கள் அதில்தான் வாழமுடியும். அது கொஞ்சம் விலகினால்கூட அதிர்ச்சியில்  அவர்களின் உலகம் சிதறிப்போய்விடும்.”

”நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜாக்ரத் என்றால் கிட்டத்தட்ட ·ப்ராய்ட் சொல்லும் கான்ஷியஸ்” என்றேன். ”ஆமாம். ஆனால் நாம் ·ப்ராய்டை மறந்துவிடவேண்டும். மொத்த மேலை உளவியலே ஒரு குழந்தைவிளையாட்டு. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. லங்காவதார சூத்ரம் மாதிரியான பௌத்த தியான நூல்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனிய மொழியில் மொழியாக்கம்செய்யப்பட்டன. அவற்றை படித்துவிட்டு ·ப்ராய்டும் யுங்கும் அவர்களுக்குத் தோன்றியதுபோல ஏதோ எழுதி வைத்திருக்கிறார்கள். அதற்குமேல் ஒன்றும் இல்லை” என்றார் பிரசண்டானந்தா ”பகல் என்பது ஜாக்ரத்தால் ஆனது.  ஜாக்ரத் விழித்திருக்கும் நேரம் அது. ஜாக்ரத்துக்கு அடியில் இருக்கிறது ஸ்வப்னம். அது இரவுக்குரியது. அதுதான் ஆழம். நம்முடைய கனவுகள் எங்கிருந்து முளைக்கின்றனவோ அந்த ஆழம். சப்கான்ஷியஸ் என்று அதைத்தான் கிட்டத்தட்ட  ·ப்ராய்ட் சொல்கிறார். அந்த ஆழத்துக்குத்தான் அடிக்கடி சாமானியர் மூழ்கி பதறியடித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். கனவு என்றால் அதை அவர்கள் விருப்பப்படி விளக்கிக்கொண்டு வாழ முடியும். அதுவே உண்மை என்று உணரும்போது அவர்களால் தாங்க முடிவதில்லை”

”இரவில் வாழும் நாம் அந்த ஸ்வப்னநிலையில் இருக்கிறோம்” என்றார் பிரசண்டானந்தா. ”ஆகவேதான் இது இத்தனை அழகாக இருக்கிறது. அழகு என்பதே ஸ்வப்னநிலையில் மட்டும் அறியப்படக்கூடிய ஒன்றுதான். அழகான ஒன்றைப் பார்க்கும்போது அந்த முதல் கணம் என்ன நிகழ்கிறது? நம் ஜாக்ரத் விலகி ஸ்வப்னம் வெளிப்படுகிறது.ஒரே ஒரு கணம் தான். உடனே  ஜாக்ரத்தின் திரை வந்து மூடிவிடுகிறது. ஆனால் ஒரு பேரழகு நம்மை பல நிமிடங்களுக்கு ஸ்வப்ன நிலையில் வைத்திருக்கிறது. அதைத்தான் நாம் பரவசம் என்கிறோம். உன்மத்த நிலை என்கிறோம். இந்த இரவு வாழ்க்கையில் நாம் எப்போதும் அந்த பரவசநிலையில் இருக்கிறோம், இல்லையா?” நான் பெருமூச்சுவிட்டேன். ”இங்கே நீ அறிந்த இந்த பரவசத்தை வேறு எப்போதும் அறிந்திருக்க மாட்டாய்.. இது ஒரு மாபெரும் கனவு. நாட்கணக்கில், வருடக்கணக்கில், முழு வாழ்க்கைக்கும் நீளும் கனவு.”

பிரசண்டானந்தா புன்னகைசெய்தார் ”நீ அந்தக் கனவை அஞ்சியிருப்பாய். கனவு கலைந்துவிடுமே என்ற அச்சம் மட்டும் அல்ல அது. கனவு நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனால் வரும் அச்சமும் கூட. அங்கே எல்லாமே அவற்றின் உண்மை வடிவில் இருக்கின்றன. எந்த போர்வையும் இல்லை. எல்லாமே அம்மணமாக இருக்கின்றன. அந்த உண்மையை நீ அஞ்சினாய். அதில் இருந்து தப்பி மீண்டும் பொய்யை நோக்கி செல்ல விரும்பினாய். ஆனால் உண்மையை அறிந்தபின் பொய்யில் வாழ்வது கடினமானது. நீரை உறிஞ்சிக்கொண்டபின்பு உன்னால் மிதக்க முடியாது”

”உண்மைதான்…ஒன்று தெரிகிறது, என்னால் திரும்பிப்போகவே முடியாது” என்றேன். ”அதேதான் நானும் சொல்கிறேன். திரும்பிப்போக முடியாதென்று நீ உணர்ந்த கணம்தான அந்தக் கடல். அப்பட்டமான உண்மைகளினால் ஆன இந்த கனவுவெளியின் பிரம்மாண்டத்தையும் மகத்துவத்தையும்  அங்கே நீ கண்டாய்” என்றார் பிரசண்டானந்தா ”மகாபாரதத்தில் ஓர் அற்புதமான கதை உண்டு. பீமனை கொல்வதற்காக கௌரவர் அவனைப்பிடித்து கைகால்களைக் கட்டி கங்கையில் தூக்கிப்போட்டுவிடுகிறார்கள். அவர்கள் போட்ட இடத்தில் நீருக்குள் ஒரு பெரிய பிலம் திறந்திருந்தது. அது பாதாள மூர்த்திகளான மாபெரும் நாகங்கள் பூமிக்கு வந்துசெல்லும் வாசல். அந்த வாய் வழியாக பீமன் பாதாள உலகுக்குச் சென்றுவிட்டான். அங்கே அதிபிரம்மாண்டமான நாகங்கள் இருந்தன. அவற்றில் பெரிய நாகமான வாசுகி விந்திய மலையை விட பெரிய பாம்பு. தங்களிடம் விருந்தாளியாக வந்த பீமனுக்கு வாசுகி ஒரு பானம் கொடுத்து உபசரித்தார். அந்த பானம் ஒரு பெரிய கலம் நிறைய உக்கிரமான பாம்பு விஷம். அதைக்குடித்ததும் பீமனுக்கு ஆயிரம் யானையின் பலம் வந்தது. மண்ணில் எவருமே அவனை தோற்கடிக்க முடியாது என்ற நிலை வந்தது. பூமியில் எந்த விஷமும் அவனை எதுவும் செய்யாது என்றாயிற்று”

கைநீட்டி என் தொடையில் தட்டினார் பிரசண்டானந்தா ”நீ அந்த விஷத்தைக் குடித்துவிட்டாய். இனிமேல் உன்னை எந்த விஷமும் தாக்காது. முழூஉண்மையில் நீ வாழும்போது திரைவிலகி உன்னை அதிர்ச்சிகொள்ளச்செய்யும்  எதுவும் நிகழப்போவதில்லை. நீ வாழ்வது ஸ்வப்னநிலையில். உனக்கு ஆர்வமிருந்தால் இன்னொரு வாசலை உனக்குள் மிக எளிதாக திறக்க முடியும். அது சுஷ¤ப்தியின் வாசல். மகத்தான இன்பத்தால் ஆன ஓர்  உலகம். அதற்குள்ளும் ஒரு வாசல். அது துரியம். இன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு வெளி அது…மேலே , பகலில் வாழ்பவர்கள், வருடக்கணக்காக தியானம் செய்தால் மட்டுமே சில கணங்கள் ஜாக்ரத்தை விலக்க முடியும். அதையே அவர்கள் பேரனுபவம் என்று கொண்டாடுவார்கள். நீ அவர்கள் தியானம் மூலம் வந்தடையும் இடத்தில் வாழ்கிறாய். அவர்கலில் லட்சத்தில் ஒருவர் மட்டுமே போகக்கூடிய ஆழங்களுக்கு நீ சாதாரணமாகச் செல்ல முடியும்…”

கமலா வாசலில் வந்து ”ஓகே கைஸ்…ஊணு ரெடி” என்று கை தட்டினார். மொத்தக்கும்பலும் ”ஹோ” என்று சத்தமிட்டது. அவருக்குப் பின்னால் ரம்யா நிற்க ஊடே புகுந்து வந்த நிஷா ”எல்லாரும் சேர்ந்து பீட்டில்ஸ் மாதிரி ரீங்கரிக்கிறார்கள்” என்றாள். ”நோ நிஷா…அவர் சம்ஸாரிக்குகயல்லே” என்றாள் ரம்யா. ” எ லாட் ஆ·ப் இண்டலிஜெண்ட் டாக்ஸ் பிகம் எ நாய்ஸ்” என்றாள் நிஷா. பிரசண்டானந்தா ”அந்தச் சிறுமியைப் பார்த்தாயா? எத்தனை புத்திசாலி? ஏனென்றால் சாதாரணமான குழந்தைகள்  அப்பா அம்மா சொல்லும்  பொய்களை கற்றுக்கொண்டிருக்கும் வயதில் அவள் உண்மைகளின் ஆழத்தில் வாழ்கிறாள்” நாயர் என்னிடம் ”கமான்”என்றார். மேனன் ‘ஸ்வாமிஜி…ஊணு கழிக்காம்” என்றார்.

பிரசண்டானந்தா எழுந்தார். என் தோளைத்தட்டி ”வெல், வி ஹேட் எ கூட் டாக்” என்றார். கமலா,”ஒன்லி வெஜிடேரியன்… சத்தார் வெஷமிக்கருது” என்றார். ”ஓ ஞான் ஷமிச்சே” என்றார் சத்தார். ”ஈ நாலு லார்ஜ் கேறியதினு சேஷம் ஞான் மண்ணு கிட்டியாலும் தின்னும்” நான் பிரசண்டானந்தாவிடம் ”நீங்கள் புலால் உண்ண மாட்டீர்களா? சாக்தர்கள் உண்பார்கள் என்கிறார்களே?” என்றேன். ”புலால் உண்பேன். குடிப்பேன். ஆனால் எல்லாம் சாக்தபூஜையில் மட்டும். நாளைக்கு அமாவாசை. பஞ்ச தத்வ பூஜை உண்டு…நீ வா…உனக்கு ஒரு திறப்பாக அமையும்” என்றார். நான் ”சரி” என்றேன். சட்டென்று உதயபானுவின் முகம் நினைவுக்கு வந்தது. ”முகர்ஜி, டுமாரோ சரவணன் வில் பி நித் அஸ்” என்றார் பிரசண்டானந்தா. முகர்ஜி என்னை நோக்கி கோப்பையை தூக்கிக் காட்டினார்

நாங்கள் கூட்டமாக உள்ளே சென்றோம். நீலிமாவும் வீணாவும் ஊண்மேஜையில் தட்டுகளை பரப்பிக்கொண்டிருந்தார்கள். மஜீத்  சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ”ஆ, மஜீத். இந்நு சங்கீதம் இல்லே?” என்றார் பிரசண்டானந்தா. ”ஆ·ப்டர் மீல்ஸ், மஜீத் வில் சிங்” மேனன் சொன்னார். மஜீத் ”வெளுக்கும் வரே” என்று சிரித்து உள்ளே சென்றார். பிரசண்டானந்தா என்னிடம் ”ப்ளீஸ் கம்…இட் வில் பி என் எக்ஸ்பீரியன்ஸ் டு யூ” என்றார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஅங்காடித்தெரு வருகிறது
அடுத்த கட்டுரைநாக்கு [சிறுகதை]