சிந்துசமவெளி

இயக்குநர் சாமி மிருகம் படம் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அவரது அடுத்தபடம் சரித்திரம் சிலம்பாட்டத்தைப்பற்றியது. தயாரிப்பாலார் சிக்கலினால் அது தாமதமாகிறது. அதற்கு அடுத்து அவர் ‘சிந்துசமவெளி’ என்று ஒரு படம் எடுக்கிறார். அதற்கு நான் எழுதுகிறேன். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்ற 11. 3. 2010 அன்று சென்னை ஆதித்யா ஓட்டல் அரங்கில் விருந்துடன் நடந்தது. நான் கலந்துகொண்டேன்.

 

சாமி

சிந்துசமவெளியில் என் பெயர் வசனம் என்ற இடத்தில் வந்தாலும் அதில் என் பங்களிப்பு சற்றே புதுமையானது. அந்தப்படத்தின் கதையும் முழுத்திரைக்கதையும் சாமியின் மனதில் நெடுங்காலமாக இருந்து வருபவை. அவருக்கு அதன் இன்னொரு வடிவம் தேவைப்பட்டது. கருவை என்னிடம் சொன்னார். நான் ஒரு சிறிய நாவலாக அதை எழுதிக்கொடுத்தேன்.

அதில் இருந்து தனக்கு தேவையான பகுதிகளை எடுத்துக்கொண்டு அவர் தன் திரைக்கதையை மேம்படுத்தினார். சில கதாபாத்திரங்கள் சேர்ந்தன. சில இடங்கள் இன்னும் அழுத்தம் பெற்றன. சில சந்தர்ப்பங்கள் மாறியமைந்தன. அதுவே என் பங்களிப்பு முழுத்திரைபடம் எடுக்க எடுக்கத்தான் தெளிவான வடிவம் கொள்ளும்

நான் எழுதிய விதத்தில் உற்சாகம் கொண்டு மேலும் அவரது இரு படங்களுக்குப் பணியாற்றவேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது அவரது அடுத்தபடத்திற்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஹரீஷ்

கேரளத்தில் வாகமண், தலைச்சேரி, பாலக்காடு பகுதிகளில் வரும் மார்ச் 25 முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. ஒரே வீச்சாக மேமாதம் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பை முடிப்பதாக இருக்கிறார். மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார். மேமாதம் மூன்றாம் வாரத்தில் சரித்திரம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

கஜினி

சிந்துசமவெளி அனேகமாக புதுமுகங்கள் நடிக்கும் படம். கதாநாயகர்கள் இருவர். ஹரீஷ் ஏற்கனவே ஒருபடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கஜினி சரித்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் அவரது நடிப்பால் கவரப்பட்டு இதில் நடிக்கவைக்கிறார் சாமி. 17 வருடங்களாக திரைவாய்ப்புக்காக முயன்றுவரும் கஜினி அடையாறு திரைக்கல்லூரி மாணவர்

கதாநாயகி அமலா பால் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வீரசேகரன் படத்தில் நடித்தவர். மைனா என்று ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. எம்.டி.வாசுதேவன் நாயரின் பழைய திரைப்படமான நீலத்தாமரா வை மீண்டும் எடுத்தார்கள். அது ஒரு வெற்றிப்படம். அதில் கதாநாயகி அமலா பால் தான். மலையாளி.

அமலா பால்

இசை சுந்தச் சி பாபு. வீணைக்கலைஞர் சிட்டிபாபுவின் மகன். எனக்குப் பிடித்த குத்துப்பாடலான கத்தாழக்கண்ணாலே வுக்கு அவர்தான் இசை. இப்போது நிறைய படங்களுக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு உத்பல் வி நாயனார். முப்பதுக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்தவர்.

சுந்தர் சி பாபு

சிந்துசமவெளியில் என் வேலை மிக எளிதாகவே முடிந்துவிட்டது. இயக்குநர் தனக்கு என்ன வேண்டுமென்ற தெளிவுடன் இருந்தாரென்றால் வேலை எளிதாக  ஆகிவிடுகிறது. வணிக சினிமா என்பது ஒரு பெரும் கூட்டுழைப்பு. அதன் நடத்துநர் தலைவர் இயக்குநர். அவருக்கு நம் பங்களிப்பைப்பற்றிய மனச்சித்திரம் இருந்தால் போதும்.

இதழாளர் ஒருவர் என்னிடம் ‘திரைக்கு எழுதுவதில் உங்களுக்கு நிறைவு இருக்கிறதா?’ என்றார். திரை எழுத்தின் எல்லைகளையும் சாத்தியங்களையும் பற்றி நான் தெளிவாகவே இருக்கிறேன். எனக்கு திரைக்கு எழுதுவதென்பது மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. நான் இன்றுவரை திரையுலகில் சந்தித்த பெரும்பாலும் அனைவருமே நல்ல நண்பர்களாக, திரைவேலை முடிந்த பின்னரும் நீடிக்கிறார்கள்.

சினிமா எனக்கு அளிக்கும் சுதந்திரம் அளப்பரியது. பொருளாதார சுதந்திரம். அதை விட நேரம்.  இத்தனை பயணங்களும் எழுத்தும் சினிமா இல்லாமல் சாத்தியமாகியிருக்குமா என்று எண்ணிக்கொள்கையில்  இதன் முக்கியத்துவம் புரிகிறது ஆகவே ”ஆம், முழு நிறைவாக இருக்கிறது” என்று பதில் சொன்னேன்.

முந்தைய கட்டுரைபேராசிரியர் மதமாற்றம்
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 5