இரவு 17

 இந்த  இரவில்

இப்புவியில்

எத்தனை கோடி உயிர்கள்

உறவுகொள்கின்றன!

காட்டில்

கரிய பெரும் யானைகள்

மண்ணுக்குள் எலிகள்

நீருக்குள் மீன்கள்

பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்

 

நாளைய புவி

இங்கே கருபுகுகிறது

நிறைவுடன்

சற்றே சலிப்புடன்

பெருமூச்சு விட்டுக்கொண்டு

திரும்பிப் படுக்கிறது

இரவு

 

காரில் ஏறி அமர்ந்ததும் நான் ”எங்கே?” என்றேன். நீலிமா சிரித்தபடி ”தெரியலையே” என்றாள். நான் ”என்ன செய்யலாம்/” என்றேன்.”காரை ஓட்டுங்க, அது எங்கே போகுமோ அங்கே போகலாம்” என்றாள்.”இ·ப் தி டோர் ஓப்பன்ஸ்-னு  ஒரு நாவல் வாசிச்சேன். அதிலே ஹீரோ அப்டித்தான் செய்றான். குதிரை அவனோட சப்கான்ஷியஸ். அவன் நினைக்காத இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போகுது. ஆனா அதான் அவன் உண்மையிலேயே நினைச்ச இடம்.” ”கௌபாய் நாவலா?” ”ஆமா..”

நான் காரை கிளப்பியபடி ” என் அருமை சப்கான்ஷியஸே தயவுசெஞ்சு பொறுப்பா போ” என்று சொல்லி விட்டு ”அப்டில்லாம் சப்கான்ஷியசை நம்ப முடியுமா என்ன? அது பாட்டுக்கு எங்கயாம் போயி நம்மை கேவலப்படுத்திட்டுதுன்னா என்ன பண்றது?” என்றேன்.”இது, பிரேக்கும் ஸ்டீரிங்கும் எல்லாம் உள்ள சப்கான்ஷியஸ்ல?” ”சரிதான்”

கார் சாலையில் செல்லும்போது உண்மையிலேயே ஒரு லயம் கூடியது. காரில் செல்லும்போது நாம் காரில் செல்வதன் ஒரு மனச்சித்திரமும் நமக்குள் எழுகிறது. அந்த சித்திரத்தில் ஒரு நிலமிருந்தது. காயலோரம். ”காயல்!” என்றேன். ”கார் அங்கதான் போய்ட்டிருக்கு” ”தட் இஸ் ·பைன்” என்று சொல்லி இரு கைகளையும் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்

காயலோரம் தெரிய ஆரம்பித்தது. இருளுக்குள் படகுத்துறை தெரிந்தது. முகவெளிச்சத்தில் அங்கே நீருக்குள் நின்றிருந்த சிறிய ·பைபர்படகுகளின் பலவண்ண விலாக்கள் ஒளிவிட்டு அணைந்தன. நான் காரை நிறுத்தினேன். ”ஸோ?” ””காயலுக்குள்ளே போவோம்” என்றாள். ”படகுக்காரங்க யாருமே இருக்கிற மாதிரி தெரியலையே” ”அவங்க எதுக்கு? நாம ஒரு படகை எடுத்துக்குவோம்.” நான் ”தெரியாமலா?” என்றேன். ”காரை விட்டுட்டுப்போறோம்ல/”

அவள் இறங்கி படகுகளை அணுகி ஒரு படகின் மீது ஏறினாள்.  ஒரு படகுடன் இன்னொன்று சேர்த்து கட்டப்பட்டு படகுகள் ஒரு பெரிய சங்கிலி வலை போல அங்கே பரவி நின்றன. எவற்றிலுமே துடுப்பு இல்லை.”துடுப்புகளை வீட்டுக்குக் கொண்டு போயிடுவாங்க… ஆனா ஒருத்தன் கண்டிப்பா ஒரு வேலை செஞ்சிருப்பான்” என்றாள். படகுகள் வழியாகச் சென்றாள். ஒரு படகில் நின்றாள்.

”இங்கே…” என்று சொல்லி அந்தப்படகில் இருந்து தொங்கிய ஒரு கயிறை நீரில் இருந்து இழுத்து எடுத்தாள். அதில் ஒரு துடுப்பு இருந்தது. ·பைபர் துடுப்பு. கொண்டு போக சோம்பல்பட்டுக்கொண்டு அதைச் செய்திருக்கிறான். துடுப்புடன் நடந்து கடைசிப்படகை கட்டவிழ்த்து அதில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

நான் படகில் ஏறியதும் அவள் திறமையாக துடுப்பைத் தள்ளி படகை நீரில் சறுக்கிச் செல்ல வைத்தாள். ”நல்லா துடுப்பு போடறே” என்றேன். அவள் ஒன்றுமே சொல்லவில்லை. துடுப்பை போடுகையில் அவள் தோள்கள் முன்னும் பின்னும் சென்றன. நீர் ரகசியமாகச் சளசளத்தது. காற்று தெற்கிலிருந்து மேற்கே பெரிய ஓட்டமாக சென்று கொண்டிருந்தது.

”இன்னைக்கு கரிமீன் பிடிக்க மாட்டாங்களா?” என்றேன்.  காயல் முற்றிலும் காலியாக இருந்தது. ” நாளைக்கழிஞ்சு அமாவாசை” என்றாள் அவள். வானில் விண்மீன்கள் கொட்டிக்கிடந்தன. நிலா இல்லை. நிலா இருந்த இடம்  என்பது போல ஒரு மெல்லிய வெளிச்சம் மட்டும் அங்கே இருந்தது. வானத்துக்குள் ஒரு ராக் இசை மௌனமாக ஓடுவதுபோல நட்சத்திரங்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. அந்த இசையை கண்ணால் பார்த்துவிட முடியும் என்று தோன்றியது.

தூரத்தில் நான்கு படகுகள் தேங்காய்நார் சுமையுடன் மெல்லச் சென்றன. கருவுற்ற திமிங்கலங்கள் போல கனத்து அசைந்து சென்றன. அவற்றில் ஒன்றில் ஒரு டேப்ரிக்கார்டர் ஓடிக்கொண்டிருந்தது. ”·பாசிலா ·பாசிலா என்றே மாத்ரம் பெண்ணல்லே நீ, என்றே ஸ்வந்தம் பெண்ணல்லே நீ” பாட்டு நீரில் சாயம் கரைவது போல காற்றில் கரைந்தது. இசையின் விளிம்புகள் பிசிறாக பறந்தன. அதன் நடுவே அதிர்ந்த தாளம் மட்டும் இருண்ட நீரிலும் காற்றிலும் இருந்தது

படகுகளில் லாந்தர் விளக்குகள் ஆடின. அவற்றைச் சுற்றியிருந்த செம்மஞ்சள் ஒளியில் கயிறுகளும் பாத்திரங்களும் கிடப்பது தெரிந்தது. ஒன்றில் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். படகுகளைத்தாண்டிச் சென்றதும் நீலிமா பக்கவாட்டில் திரும்பி காயலின் கிளை வழியாகச் சென்றாள். ”இது எங்கே போகுது?” என்றேன். ”இந்தப்பக்கமா பெரிய ஊரெல்லாம் இல்லை. சின்ன கிராமங்கள்தான்…”

துடுப்பு படகின் சிறகு போலவே ஆகிவிட்டிருந்தது. கச்சிதமான சுழலல்களாக அது நீரை அளைய படகு வாத்து போல நீரில் இயல்பாகச் சென்றது. கரையோரத்து தென்னை மரங்களின் நிழல்கள் கரிய நீருக்குள்  ஒரு தலைகீழ் உலகைக் காட்டின. தூரத்தில் ஒரு படகு நாலைந்து விளக்குகளுடன் நீரில் அதன் வண்ணப்படம் ஒன்றை கூடவே இழுத்துகொண்டு சென்றது. அதிலும் ஏதோ பாட்டு. ஆனால் எலக்டிரானிக் தாளம் மட்டுமே கேட்டது. புல்லாங்குழலின் கிரீச்சிட்ட நாதம் சுழன்று மறைந்தது.

பின்பு முற்றிலும் அமைதியான காயல் வளைவுக்குள் நாங்கள் சென்றோம். வெகுதூரம் வந்திருக்கிறோம் என்று தோன்றியது. காயல் அலையில்லாமல் இறுகிப்போன இருட்டாக விரிந்து கிடந்தது. மென்மையாக முடிகோதும் காற்று மட்டும்தான் வீசியது. கரையோரத்து தென்னைமரங்களின் ஓலைகளை துல்லியமாக பார்க்க முடிந்தது. அவற்றின் நீர்நிழல்களிலும் அதே போல ஓலைகள் தெளிவாக தெரிந்தன.

வியப்புடன் நான் குனிந்து பார்த்தேன். காயலுக்குள் தெரிந்த வானில் விண்மீன்கள்  மின்னிக்கொண்டிருந்தன. சில விண்மீன்கள் அலைகளில் அசைந்தாடி ஒன்றுடன் ஒன்று மோதப்போவது போல் தள்ளாடின. சிவந்த பெரிய கோள்கள். மிக மெல்லிய நீலப்புள்ளி போன்ற தொலைதூர விண்மீன்கள். நான் நன்றாகவே குனிந்து அந்த விண்மீன் வெளி மீது மெதுவாக ஊர்ந்து சென்றேன்.  துடுப்பு உருவாக்கிய அலைகளில் விண்மீன்களின் படலம் வ¨ளைந்து வளைந்து அமைந்தது.

பின்பு நான் மீன்களைக் கண்டேன். இருளுக்குள் மின்னும் இருள்த்துளிகள் போல. நாலைந்து மீன்கள் மேலே வந்து சில அடி ஆழத்தில் நீருக்குள் மெல்லத் திரும்பியபோது அவற்றின் பக்கவாட்டுப் பளபளப்பை முதலில் கண்டேன். மீன்களா என்ற ஐயம் கணநேரத்தில் விலக இன்னும் ஆழத்தில் இன்னும் ஆழத்தில் என மீன்களைக் கண்டு ஒரு கட்டத்தில் எங்கள் படகே ஒரு பெரும் மீன்பரப்புக்கு மேல் செல்வதை உணர்ந்தேன். விண்மீன்கள் மீன்கூட்டத்தின் மீது துலக்கமான ஒளியுடன் நின்று அதிர்ந்தன.

மீன்படலம் ஒற்றை உடலாக ஒற்றை உயிராக தெரிந்தது. ஒரேகணத்தில் தலைமுதல் வால்வரைச்  அசைவதுபோல ஆயிரக்கணக்கான மீன்கள் சுழன்று திரும்பின. திரும்பும் ஒரு கோணத்தில் மொத்த மீன்களும் காணாமலாகி மறு கணத்தில் ஒளியுடன் மீண்டன. சட்டென்று ஏதோ அந்தரங்க நினைவுக்குச் சென்றவை போல மீன்கள் அனைத்துமே குப்புறச்சரிந்து ஆழத்தில் மறைய விண்மீன்கள் மட்டும்நலுங்கி நலுங்கி நின்றன. சிம்பனி இசை முடிந்த பின் ஒலிக்கும் ஒற்றைத் தந்தி போல ஒரே ஒரு வெள்ளிமீன் மேலே வந்து தயங்கி நின்று பின்பு சுழன்று கீழிறங்கியது.

விழிகள் மலைத்து நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். மீண்டும் மீன்கள் வரும் என்பது போல நீருக்குள் என் கவனத்தை நாட்டியிருந்தேன். நீருக்குள் இருந்த ஆழத்து இருள் என் பார்வையை உணர்ந்து சருமம் சிலிர்க்க மௌனமாக விரிந்திருந்தது. ஓரக்கண்ணால்  அசைவை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன். நீலிமா அவள் உடைகளைக் களைந்து கொண்டிருந்தாள்.

என் இதயத்தின் ஒலியை கேட்டேன். மொத்தக்காயல்வெளியும் மாபெரும் முரசொன்றின் தோற்பரப்பு போல அதிர ஆரம்பித்தது. அவள் உடைகளைக் கழற்றுவது ஒரு நடனம்போல பிசிறற்ற அசைவுகளுடன் இருந்தது. கைகளை தூக்கி ஜாக்கெட்டின் இடதுகையை உருவி முதுகு வழியாக அதை எடுத்து வலது கையை உருவி இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று பிராவின் கொக்கிகளைக் கழற்றி அதை கீழே போட்டாள். பாவாடை அதுவாகவே நழுவுவது போல விழுந்தது

இருண்ட காயலின் பின்புலத்தில் நட்சத்திரங்களின் ஒளியில் அவளுடைய சிவந்த சருமம் தெரிந்தது. ஒரு மகத்தான சிற்பம் போல. கைகளை தூக்கி கூந்தலை அவிழ்த்து தோளுக்கு பின்னால் பரப்ப மென் காற்றில் அது எழுந்து பறக்க ஆரம்பித்தது. அவள் முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. கன்னங்களும் உதடுகளும் கொதிப்பவை போலிருந்தன. தோள்களின் மெருகை மார்புகளின் மெல்லிய அசைவை…

என் உடலும் மனமும் ஆழ்ந்த அமைதியில் நிலைக்க நான் பல்லாயிரம் கண்களுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் நானிருப்பதையே அறியாதவள் போல படகின் விளிம்பில் நின்றிருந்தாள். கூந்தல் பறந்து முலைகள் மேல் பரவி வழிந்தது. பிழையற்ற பெண்ணுடல். முழுமைகொண்ட பெண்ணுடல். இருளில் இன்னும் மலராத ஒரு செந்தாமரை.

நான்  அசைவிலாது அமர்ந்திருக்க காலம் நழுவிக்கொண்டே இருந்தது. அவள் பெருமூச்சுடன் திரும்பி என்னைப் பார்த்தாள். பின்பு புன்னகைசெய்தாள். என் வாழ்நாளில் அத்தகைய பேரழகுடன் ஒரு புன்னகையைக் கண்டதில்லை. ஒளிவிடும் கண்களும் மின்னும் பற்களும் சிவந்த உதடுகளும் இணைந்து கொள்ளும் ஓரு தருணம். பின்பு கைகளை நீட்டினாள். வசியம் செய்யப்பட்டவனாக நான் எழுந்து அவளை நோக்கிச் சென்றேன். அவளுடைய நீட்டிய கரங்களை மெல்லத் தொட்டேன். அவள் என்னை அள்ளி  தன்னுடன் அணைத்துக்கொண்டாள்.

என் காதுக்குள் அவளுடைய மெல்லிய குரலைக் கேட்டேன் ”பயம்மா இருக்கா?” நான் முனகலாக ”இல்லேயே…எதுக்கு பயம்?” என்றேன். ”ஒரு கிறுக்கு கூட இப்டி வந்திட்டோமேன்னு” நான் ”எனக்கும் கொஞ்சம் கிறுக்குதான்” என்றேன். மிக ரகசியமான ஒரு கிளுகிளுப்பாக அவள் சிரித்தாள். படகில் அமர்ந்துகொள்ள நான் அவளருகே அமர்ந்தேன். என் உடைகளைக் களைந்து இருவரும் ஒரே உடலாவது போல இணைந்துகொண்டோம்.

மல்லாந்த நிலையில் அவள் ”நட்சத்திரங்கள் இல்லாம இதைச் செய்யவே கூடாதுன்னு நினைப்பேன்” என்றாள். நான் ”காயலைப்பத்தி நான் நினைச்சே பாத்ததில்லை” என்றேன். அவள் முலைகளை அள்ளிக்கொண்டேன். பெண்கள் முலைகளால் ஆனவர்கள். அது கருணை, கனிவு. அதன் வழியாக அவர்களின் அன்பை பருப்பொருளாக வெளிவருகிறது. முலைகளை ஏந்துவதற்காகவே உடல். முலைகளை கனியவைப்பதற்காகவே ஆன்மா.

”என்ன நினைப்பு?” என்றாள். ”மத்ஸ்யகந்தி ஞாபகத்துக்கு வந்தது. இதேமாதிரி போட்டிலேதான்…” சிரித்து ”மத்ஸ்யம் மணக்கிறதா?” என்றாள். ”இல்லை..நீ நிசாகந்தி” அவள் சிரித்துக்கொண்டு என்னை இறுக்கிக்கொண்டாள். மெல்ல மெல்ல எல்லா எண்ணங்களும் வடிந்தன. உடல் அதன் புராதனச் சடங்கைச் செய்ய ஆரம்பித்தது. எதற்காக அது தன்னை அவ்விதம் திரட்டி உருவம் கொண்டிருக்கிறதோ அதை. எதற்காக அது உண்கிறதோ, எதற்காக உடுக்கிறதோ, எதற்காக உறங்குகிறதோ அதை. எங்கே அது தன்னை உடல் மட்டுமே என உணர்கிறதோ அதை.

பின்பு மூச்சு மெலிதாக சீற அவள் மேலே விண்மீன்களைப் பார்த்துக்கொண்டிருக்க நான் கீழே நீரில் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  காயலுக்குள் ஒரு ரகசியக் கண் திறந்து கொண்டதுபோல நான் ஒரு மீனைப்பார்த்தேன். பின்பு இன்னொரு கண். பின்பு கண்கள். பின்பு கண்களின் பெரு வெளி.  மீன்படலம் சுழிக்க காயலின் பெருவிழி ஒருகணம் இமைப்பதைக் கண்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைபேராசிரியர் மதமாற்றம்
அடுத்த கட்டுரைசிந்துசமவெளி