இரவு 16

பசுமை
குலத்துடன் இருக்கிறது
மஞ்சள்
துணையுடன் இருக்கிறது
செம்மை
ஈர்த்துக்கொள்கிறது
தன்னுள் தான் நிறைந்து
நீலம்
தனித்திருக்கிறது

நான் கதவைத்தட்டியபோது நீலிமாதான் திறந்தாள். அவள் வீட்டுக்கூடத்தில் நடுநாயகமாக மூன்றடுக்குள்ள பெரிய தட்டுவிளக்கு ஒவ்வொரு தட்டிலும்  ஏழு திரிகளுட ஒரு பெரிய கொன்றைமலர்ச்செண்டு போல் எரிந்துகொண்டிருந்தது. அவள் கூந்தலின் பிசிறுகளை அது ஒளிபெறச்செய்ய பொன்னாலான வலையொன்றை தலையில் அணிந்திருப்பதுபோலிருந்தது. ”வாங்க” என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொல்லி புன்னகை செய்தாள். நான் அவளைத்தொடர்ந்து உள்ளே சென்றேன்.

அந்த தட்டுவிளக்கில் மெழுகுதான் எரிபொருளாக இருந்தது. சுடர்கள் அசையாமல் நின்றன. கூடத்தில் இரண்டு தாந்த்ரிக் ஓவியங்கள் அந்த செவ்வொளியில் செம்பிழம்புகளாக தெரிந்தன. வெண்செம்மை நிறமான சோபாக்களும் திரைச்சீலைகளும் அடக்கமான சுடரால் ஆனவை போலிருந்தன. நான் சோபாவில் அமர்ந்துகொண்டேன். அவள் எனக்கு எதிராக அமர்ந்துகொண்டாள். லேசாகப் பார்வையை தாழ்த்திக்கொண்டு வெறுமே அமர்ந்திருந்தாள்.

சற்று நேரம் மௌனத்தை உணர்ந்தபின்பு நான் ”உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னார்” என்றேன். ”அதெல்லாம் இல்லை. சும்மா வெளியே கிளம்ப மனசில்லாம சொன்னது. ஐ யம் ஆல்ரைட்” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். நான் அதன்பின்னர் என்ன பேசுவதென தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். நான் ஒரு நாள் அவளை புறக்கணித்தது பற்றி அவள் ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்து வந்திருந்தேன் என்பதை எண்ணி ஆச்சரியம் கொண்டேன். அப்படி சொல்லக்கூடியவளல்ல அவள் என நன்றாகவே என் அகம் அறிந்திருந்தும்கூட நான் அப்படி என்னிடம் நடித்துக்கொண்டிருந்திருக்கிறேன்.

நாயர் உள்ளிருந்து வருவது வரை நாங்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தோம். நாயர் வந்துகொண்டே ” ஆ, யூ ஹேவ் கம். கூட்!” என்று சொல்லி என்னிடம் கைகளை நீட்டினார். ”ஆக்சுவலி மேனன் ஹேஸ் என் இண்டியூஷன்… நீங்க கிளம்பி போயிடுவீங்கன்னு சொன்னார். கமலா சொன்னார் அப்டி போக முடியாதுன்னு. நான் ரொம்ப வருத்தமா ஆயிட்டேன். இவ வேற டல்லா படுத்திட்டா. உங்களுக்குள்ளே ஏதாவது தகராறா?”

அத்தனை திறந்த தன்மையுடன் அவர் இருந்தது என்னை மலரச்செய்துவிட்டது. சிரித்தபடி ”நோ சர்…” என்றேன். ”சில்லறை சௌந்தரியப்பிணக்கம் எல்லாம் வேணும்தான். அந்த மாதிரி இருந்தா ஓக்கே… வேற மாதிரின்னா யூ ஸீ..” அவர் சட்டென்று தீவிரம் கொண்டு ”ஐ நோ…இவளுக்கு உங்கமேலே ரொம்ப இஷ்டம்.அதான் நான் ரொம்ப ·பீல் பண்ணினேன்” நீலிமா ”அச்சா, எந்தா இது?” என்றாள். அவர் தலைகுனிந்து ”ஸாரி” என்றார்

நான் ”சண்டையெல்லாம் ஒண்ணுமில்லை சார். எனக்கு ஒரு மாதிரி ஒரு ·பீலிங். அதை எப்டி சொல்றதுன்னே தெரியலை. முழுக்க முழுக்க ஸ்பிரிச்சுவலா ஒரு ரெஸ்ட்லெஸ்னெஸ். அதான்” என்றேன். ”அதுக்கு ஸ்பிரிட் ரொம்ப நல்லது. ஒரு ஸ்மால் அடிச்சா எல்லா பிராப்ளமும் வாளையார் சுரம் தாண்டி தமிழ்நாட்டுக்கு ஓடிப்போயிடும்…” என்று சிரித்தார். 

நான் சிரித்துக்கொண்டு ”அந்த ஸ்பிரிட்ட்டே அங்கே இருந்து வர்ரதுதானே சார்” என்றேன். அவர் மேலும் உரக்கச்சிரித்து ‘தட் இஸ் ட்ரூ. அம்மை முலையை குடிக்கிற மாதிரி கேரளம் சாயங்காலமானா தமிழ்நாட்டை குடிக்க ஆரம்பிச்சிடுது” நான் புன்னகைசெய்தேன். நாயர் மீண்டும் தீவிரம் கொண்ட முகத்துடன் ”பூவர் பீப்பிள். அவங்களாலே ராத்திரியை ·பேஸ் பண்ண  முடியல்லை. ராத்திரிங்கிறது அவங்களோட அடியாழம். அங்கே திறந்த கண்ணோட மூழ்கி போக அவங்களால முடியறதில்லை.” என்று சொல்லிவந்தவர் சட்டென்று சிரித்து ”யூ ஆர் ரைட். இது என்னோட தியரி இல்லை. மேனனோட தியரி” என்றார்.

நான்,”உலகம் முழுக்க ராத்திரியிலே குடிச்சிட்டுதான் இருக்காங்க” என்றேன். ”எங்கேயும் மனுஷ மனசு ஒண்ணுதானே? நீங்க ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் விட்டுட்டு இருந்தப்ப ஏன் இத்தனை சந்தேகம் வருதுன்னா ராத்திரி ரொம்ப இமோஷானலானதுங்கிறதனாலதான்.  ராத்திரியிலே எந்த பாவனைக்கும் இடம் கிடையாது. ஸோ, எங்க ராத்திரி சொசைட்டியிலே எல்லா உறவும் ஹை வால்டேஜ் பவரோடத்தான் இருக்கும். அன்பு வெறுப்பு ரண்டுமே அப்டித்தான் இருக்கும்….ஸோ…” தோள்களைக் குலுக்கி ”எனிவே, இட் இஸ் குட்…யூ ஹேவ் கம்”

”நான் போற எண்ணத்திலேயே இருக்கலை சார்” என்றேன். ”தென் இட் இஸ் வெரி குட்” என்றார். ”என்ன சாப்பிடறீங்க” நான் ”யார் சமைக்கிறது, நீங்களா?” என்றேன். ”ஏன் சமைக்கக் கூடாதா? ஐ யம் எ வெரி குட் குக்…” என்றார். நீலிமா ” அப்பா ரொம்ப நல்லா சமைப்பார்” என்றாள். ”நீங்க உங்களுக்குப் பிடிச்சதை சமைங்க” என்றேன்0

”கலத்தப்பம் சாப்பிட்டிருக்கீங்களா?” ”அப்டீன்னா?” ”இது ஒரு கேரள டிரைபல் ·புட். பளியர் சமைக்கிறது. சிம்பிள். பெரிய கலத்திலே வைத்து சமைக்கிற அப்பம் , அவ்ளவுதான்” நான் ” சாப்பிட்டதில்லை” என்றேன். ”அப்ப இன்னைக்கு சாப்பிடுங்கோ” நான் சிரித்து ”தேங்க்யூ” என்றேன்.

அவர் உள்ளே சென்றார். எங்களை தனியாக விடுகிறார் என்று தெரிந்தது. அந்த தனிமையில் எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. நான் நீலிமாவைச் சந்தித்து இன்னமும் பதினைந்து நாள் ஆகவில்லை. அதற்குள் நான் இந்த உறவை உறுதி செய்து விட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். என்னைச்சூழ்ந்து ஒரு வலைபோல இறுகி இறுகி வந்து அவளிடம் சேர்த்துக் கட்டுகிறார்கள். பெரும்பாலான ஆண்பெண் உறவுகள் அப்படி ஒரு சூழலால் நெருக்கப்பட்டே உருவாகின்றன என்று நினைத்தேன். இல்லை, அவை நீடிப்பதற்கும் அதுதான் காரணமா?

ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்தேன். நேரடியாக நிகழ்ச்சிகளைச் சந்திக்க முடியாதபோது சிந்திப்பதை ஒரு தப்பும் வழியாக கொள்கிறோம் என்று திடீரென்று தோன்றியது. நீலிமா சட்டென்று ”என் அறைக்குப் போகலாம்” என்றாள். நான் திடுக்கிட்டு ”என்ன?” என்றேன். அவள் பேசாமல் எழுந்து நடந்தாள். நான் அவளை பின் தொடர்ந்தேன்.

 

அவள் தன் அறையின் கதவைத்திறந்தாள். ஏசி செய்யப்பட்ட அறை மென்மையான நீல வெளிச்சத்துடன் இருந்தது. அதில் அவள் நீரில் மூழ்குவது போல மூழ்கிச்செல்ல குளத்தில் குதிக்கத் தயங்குபவன்போல நான் நின்றேன். அவள் சுவரோரமாக கதவைப்பற்றியபடி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அக்கண்ம் நான் உடைபட்டு உள்ளே சென்று அவளை அள்ளி என்னுடன் இறுக்கிக்கொண்டு முத்தமிட ஆரம்பித்தேன். வெறியுடன் முத்தமிட்டு முத்தமிட்டு முத்தமிட்டு மழை கொட்டி ஓய்வது போல துளி சொட்டி மெல்ல அடங்கினேன்.

அவள் மழைபெய்த நிலத்தின் குளுமையுடன் என் மீது முழு உடலையும் சாய்த்து என் தோள்களில் அவள் கைகள் துவள மெல்ல மூச்சுவாங்க நின்றாள். நான் அவள் தோள் வளைவில் முகம் புதைத்தேன். அவள் மூச்சின் அசைவையும் சருமத்தின் வாசனையையும் அறிந்துகொண்டிருந்தேன். அவள் உடல் என் கைகளுக்குள் இருந்தபோதிலும் நான் அதை அப்போது உணரவில்லை. உடலுக்குள் இருந்த அவளை என் கைகளில் வளைத்திருந்தேன்.

மெல்ல பெருமூச்சுவிட்டு அவள் ஆங்கிலத்தில் ”விட்டுவிட்டு போக நினைத்தீர்கள் அல்லவா?” என்றாள். சொற்கள் இல்லாமல் அவள் மனதிலிருந்து என் மனதுக்கு நேரடியாக வந்தது போலிருந்தது அந்த வினா. நான் ”ம்ம்” என்றேன். மீண்டும் நீண்ட மௌனம். நான் அவள் காதுமடலையும் கன்னத்தில் இறங்கிய மென்மயிரையும் முகர்ந்தேன். அவள் உடலாக ஆனாள். கழுத்தின் மென்மையும் நிறமும் என்னை எழுச்சி கொள்ளச் செய்தன. அந்த எழுச்சி அவளை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ”நான் போக மாட்டேன் என்று உனக்கு தெரியுமா?”

”இல்லை..” என்றாள். ”நீங்கள் திரும்பிவந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது” நான் அவளை விலக்கி கண்களைப் பார்த்து ”ஏன்?” என்றேன். ”நீங்கள் அன்றிரவு கிளம்பிப் போனபோதிருந்த முகம் எனக்கு நன்றாக மனதில் இருந்தது. திரும்பி வரமாட்டீர்கள் என்று எனக்குத்தெரிந்த்து.” ”காரிலிருந்து இறங்கும்போதேவா?” ”ஆமாம்” நான் அப்படியும் அவள் ஒன்றும் சொல்லாமல் போனாள் என்பதை எண்ணிக்கொண்டேன்.

உடலின் மெல்லிய தடுப்புக்கு இருபக்கமும் இருவர் உள்ளமும் ஒன்றாக இருந்தன போலும். நான் எண்ணியதற்கு அவள் பதில் சொன்னாள்.”நான் என் மனசுக்குள் ஒரு ஆயிரம் தடவை உங்களைக் கூப்பிட்டேன். பின்னால் காரிலேயே ஓடி வரக்கூட நினைத்தேன். ஆனால் வேண்டாம் என்று என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். எப்படி அப்போது அதைச் செய்ய என்னால் முடிந்தது என்றே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் போனபிறகு என்னால் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. படுத்து அழுதுகொண்டே இருந்தேன்”

நான் அவளையே பார்த்தேன். என் கைகள் அவளிடமிருந்து நழுவின. அவள் மெல்ல பின்னால்சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். நான் எதிரே ஒரு மோடாவில் அமர்ந்தேன். நீல நிறத்தில் அந்த அறை ஒரு பெரிய ஓவியத்திரை போலிருந்தது. அதில் செம்மஞ்சள்நிறமாக வரையப்பட்டவள் போல அவள். கண்களைத் தழைத்து ”நான் அங்கே வரவேண்டுமென்று ஒவ்வொரு கணமும் நினைத்துக்கொண்டே இருந்தேன். வருவதை துளித்துளியாக கற்பனைசெய்துகொண்டிருந்தேன். ஆனால் வரமாட்டேன் என்று எனக்கு தெரிந்திருந்தது. நீங்கள் ஊருக்கு கிளம்பிவிட்டீர்களா என்று மேனனிடம் கேட்கலாம் என்று பலமுறை மொபைல் ·போனை எடுத்தேன். கேட்கவில்லை…”

”அப்புறம் அப்பா திரும்பி வந்தால் சொல்வார் என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் ”அப்பா திரும்பி வந்து ஒன்றுமே சொல்லவில்லை. இன்று மாலை எனக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது.நீங்கள் வரமாட்டீர்கள் என்று…  நீங்கள் ஏற்கனவே மானசீகமாக கிளம்பிவிட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஒரு வரிகூட கோர்வையாகச் சிந்திக்க முடியவில்லை. காரை எடுத்துக்கொண்டு உங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டே இங்கேயே உட்கார்ந்திருந்தேன்”

”என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்றேன் அபத்தமாக. ”சும்மா, நெட்டில் இருந்து தமிழ்பாட்டுகளை பதிவுசெய்துகொண்டிருந்தேன்…கூல் டோட் என்று ஒரு இணையதளம் இருக்கிறது” அவள் புன்னகைசெய்தாள். நான் கால்களை நீட்டிக்கொண்டேன். மனதை தளர்த்திக்கொள்ள விரும்புவதன் புற அடையாளம் அது என்று தோன்றியது. அவளை என்னால் நேராகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் என்னை நேராகத்தான் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

”நான் போவதாக இருந்தால் உடனே கிளம்பியிருக்கலாமே…” என்றேன். ”ஆமாம். ஆனால் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் போக விரும்பியிருந்திருக்கலாம். அதற்கான சொற்களைச் சொல்லக்கூடிய யாரையாவது தேடிச்சென்றிருக்கலாம்…” நான்  சிறிய அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவள் நான் ·பாதர் தாமஸிடம் பேசிய சொற்களைக்கூட சொல்லிவிடுவாளோ என்று தோன்றியது. ”அப்படியானால் என் திரும்பி வந்தேன்? அவர் என்னை மனம் திருப்பியிருப்பாரா?” ”இல்லை. மனம் திரும்பச் செய்யும் ஒருவரை தேடி நீங்கள் சென்றிருக்க மாட்டீர்கள்…” அவள் இதோ தாமஸ் பெயரைச் சொல்லபோகிறாள்.

”…அனேகமாக நீங்கள் பிரசண்டானந்தரை சந்தித்திருப்பீர்கள்” நான் மெல்ல இலகுவானேன். புன்னகையுடன் ”இல்லை…தாமஸை பார்க்கப்போனேன்” ”ஓ” என்று சற்றே சுருங்கிய இடது கண்ணுடன் சொன்னாள். அவளுக்கு அவரை சுத்தமாகப்பிடிக்காது என்று உணர்ந்தேன்

”நான் ஏன் திரும்பிவந்தேன் என்று நீ நினைக்கிறாய்?” நான் இப்போது அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன். இது என்னுடைய வெற்றியின் தொடக்கம். ”தெரியவில்லை…நீங்கள் திரும்பியதே ஆச்சரியமாக இருந்தது. உங்களை பார்த்ததும் எனக்கு மூச்சே நின்றுவிட்டது. அப்படியே உங்களக் கட்டிப்பிடித்திருப்பேன்..” ”ஏன் பிடிக்க வேண்டியதுதானே?” அவள் சிரித்தாள்.

”கட்டிப்பிடித்திருந்தால் அப்போதே பேச ஆரம்பித்திருப்போம்… ”என்றேன்.”கட்டிப்பிடிக்காத காரணத்தால்தான் அனாவசியமாக ஒருமணிநேரம் போய்விட்டது” அவள் உரக்கச்சிரித்து நழுவிய முந்தானை நுனியை எழுத்து மடியில் வைத்தாள். அப்போது அவள் கழுத்து அழகாக திரும்ப கன்னத்தில் நீலம் பளபளக்க நான் மானசீகமாக எழுந்து அவளை கட்டி இறுக்கினேன்.

”என்ன பார்வை?” என்று சிணுங்கினாள். நான் குரலை தாழ்த்தி ”உண்மையிலேயே வருத்தப்பட்டாயா?” என்றேன். ”நான் பொய்யா சொல்கிறேன்?” ”ரொம்ப துக்கமா?” அவள் கண்கள் தழைந்தன. இமைகளின் ஓரம் ஈரமாவதைக் கண்டேன்.”ம்ம்” உதடுகளை அழுத்தியபடி ”அது ஒரு மாதிரி மரணம்…அப்படிப்பட்ட அனுபவம்”

நான் எழுந்து அவள் தலையை இழுத்து என் இடுப்புடன் சேர்த்துக்கொண்டேன். அவள் வகிடில் குனிந்து முத்தமிட்டேன். அவள் மெல்ல விசும்பினாள். என் உடையில் முகம் புதைத்துக்கொண்டு சில கணங்கள் இருந்தாள். மெல்ல அவளை எழுப்பி என் உடலுடன் பொருத்திக்கொண்டு இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். கண்ணீரின் உப்பும் ஈரமும் என் உதடுகளை தொட்டன. மிக மெல்ல அவள் காதில் ”என்ன வெறுக்கிறதா சொன்னே?” என்றேன்.

அவள் ஒருகணம் கழித்து ”அதுவும் உண்மைதான்…”என்றாள். நான் கைகள் நடுங்க அவளை விலக்கினேன். பிளேடின் லேசர்செதுக்கிய கூர்நுனியைப் பார்ப்பதுபோல ஒரு மெல்லிய பதற்றம் அவளைப் பார்க்கும்போது ஏற்பட்டது. ஒரு பேச்சுக்குக் கூட அவள் அதை மறுக்கவில்லை. இன்னமும் அவளிடம் நான் பொய்யை எதிர்பார்க்கிறேனா?

அவள் நிமிர்ந்து நோக்கி தமிழில் ”எனக்கு தெரியலை. எப்பவும் உங்க நினைப்பா இருக்கு. நான் உங்களை கண்மூடித்தனமா விரும்பறேன்னுதான் என் மனசு சொல்லுது. ஆனா அப்பப உக்கிரமா வெஷம் போல ஒரு வெறுப்பு வந்திருது. அதுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைச்சிருது. என்னைப் பாக்க வரலைன்னு நினிச்சாக்கூட போதும் அந்த சாக்கை வச்சுகிட்டு வெறுப்பு கொதிச்சு எழுந்திடுது…தெரியலை”

நான் அவளையே பார்த்தேன். ”நானும் அதே மாதிரி உன்னை வெறுக்கிறேன்னு சொன்னா?” என்றேன். ”சரிதான்…”என்றாள் கண்களை பக்கவாட்டில் விலக்கி ”இல்லேன்னா எதுக்காக என்னை விட்டு தப்பியோட டிரை பண்ணிட்டே இருக்கீங்க” பெருமூச்சுவிட்டேன். ”மனுஷங்க பொய்யா எதையுமே உருவாக்கிக்காம உண்மையிலேயே நின்னுட்டு ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்க முடியாதா?” என்றேன். அவள் சட்டென்று சிரித்து ”சொல்றேன், அதுக்கு ரெண்டு கிளாஸ் வைன் வேணும்”என்றாள்

அந்தச் சிரிப்பில் எல்லாமே பனிக்கட்டி போல உடைந்து சிதற நாங்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தோம்.  சிரிப்பின் ஒருகட்டத்தில் அவளை நான் மீண்டும் என்னுடன் இழுத்துக்கொண்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் முத்ததால் இணைத்துக்கொண்டோம். பின்பு விடுபட்டு முத்தத்தை எண்ணி மீண்டும் சிறு முத்தங்கள் இட்டு பெருமூச்சுடன் பிரிந்தோம். அவள் சென்று தன் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவள் பார்வையைக் கண்டபின் நான் சென்று அவளருகே அமர்ந்தேன்.

அவள் என்மீது சாய்ந்து அமர்ந்தாள். நான் அவள் நெற்றி மயிரை ஒதுக்கி காதில் செருகினேன். ”ஏன் இதெல்லாம் இத்தனை காம்ப்ளிகேட்டா இருக்கு?” என்றேன். அவள் சிரித்தாள்.”நான் ஏன் திரும்பி வந்தேன் தெரியுமா?” என்றேன். அவள் நிமிர்ந்து பார்த்தாள். பெரிய கண்களுக்குள் வெண்விழிகளில் நீலம் படர்ந்திருந்தது. ”நேத்து நான் கடலுக்குள்ளே போனேன். அது ஒரு அற்புதமான அனுபவம். ரொம்ப தீவிரமானது. அதை என்னாலே சொல்ல முடியாது…”

”ஓ” என்றாள். ”அதைப்பத்தி என்ன சொன்னாலும் தப்பாத்தான் இருக்கும்… அதை அப்றமா நான் இப்டி நினைச்சிட்டேன். எக்ஸிஸ்டென்ஸ்ங்கிறதை நான் அதுக்குப்பின்னாடி முற்றிலும் வேற மாதிரி நினைக்க ஆரம்பிச்சிட்டேன்…” அவள் எதிர்பார்ப்புடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ”காரிலே திரும்பிவர்ரப்ப நினைச்சுக்கிட்டேன். இனிமே என்னால திரும்பிப்போக முடியாதுன்னு. சூடான டீ குடிச்சு பழகிட்டா கொஞ்சம் ஆறினாக்கூட ருசிக்கிறதில்லை. இந்த இரவு வாழ்க்கையிலே நான் ஒருவகையான தீவிரத்துக்குப் பழகிட்டேன். இனிமே திரும்ப முடியாது. ஒருமுறை லை·ப் தீவிரமாகிட்டுதுன்னா மேலும் தீவிரமாத்தான் ஆக முடியும். திரும்பிப்போகவே முடியாது…”

”அதனாலே எங்கிட்ட திரும்பி வந்தீங்க?” என்றாள் விளையாட்டு தெரிய. ”ஆமா. நீ சாதாரண பெண் இல்லை. சாதாரண பெண்ணோட மறுபக்கம். இன்னும் தீவிரமான ஒரு வெர்ஷன். எனக்கு நீதான் தேவை. எந்த ஒரு சாதாரணமான பெண்கூடயும் என்னால இனிமே இருக்க முடியாது. அவகிட்டே இன்னும் கொஞ்சம் தீவிரமா இருன்னுதான் என் மனசு கேக்கும். எனக்கு ராத்திரியோட உக்கிரம் தேவைப்படுது….அதான் திரும்பவேண்டாம்னு முடிவு செஞ்சேன்.. இந்த தீவிரத்தை பயந்துதான் போயிடலாம்னு நினைச்சேன்.”

”வெல்” என்றாள் ”எனிவே..” பேச்சை முடிக்காமல் என் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள். கடிகாரம் அடிக்கும் ஒலி . பின்பு என் மார்பின் ஒலியையே நான் கேட்டேன். ”என்ன பாட்டு டௌன்லோட் பண்ணினே?” என்றேன். அந்த ஆழ்ந்த மௌனத்தை நீடிக்க விட்டால் அது கரைகிறது, பேசுவதன் மூலம் சற்றே இளைப்ப்பாறி மீண்டும் அங்கேயே சென்று விட முடியும். ”எஸ்.ஜானகி பாட்டு.எல்லாமே தமிழ்ப்பாட்டுதான்.. ” சிரித்து ” அதிலே ஒரு பாட்டு சரியான சிச்சுவேஷன் பாட்டு..” ”என்னது?” அவள் மெல்லிய குரலில் ”உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன். உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்..”

நான் அவளை முத்தமிட்டேன். ”நல்லா பாடுறே” என்றேன். ”ஓ டோண்ட்..” ”இல்லை. இப்ப நீ பாடுறப்ப நல்லா இருக்கு” ” உறவினில் விளையாடீங்கிற இழுப்பை ஜானகிதான் குடுக்க முடியும்” ”எஸ்” நான் சுசீலாவின் ‘இரவுக்கு ஆயிரம் கண்களை’பாட்டை நினைவுகூர்ந்தேன். அது வெகுதூரத்தில் , வரலாற்றில் எங்கோ இருந்தது. புன்னகையுடன் ”இந்த மாதிரி கவிதை சங்கீதம் எல்லாத்தையும் கலந்து நெகிழ்ந்து உருக வைச்சாத்தான் மனுஷங்களால ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ண முடியுதா என்ன?” என்றேன். ”நோ தியரி ப்ளீஸ்” ”ஓக்கே ஓக்கே” என்றேன்.

பெல் ஒன்று வெளியே அடித்தது. ”அப்பா கூப்பிடறார்..” என்றாள். ”சாப்பிடலாமா?” நான் எழுந்து என் சட்டையை நேர்த்தியாக இழுத்து விட்டேன். அவள் சேலையை சரிசெய்தாள். அவளுடைய பளீரிட்ட இடுப்பும் வயிறும் தெரிய நான் ”அழகா இருக்கே” என்றேன். ”நாட்டி” என்றாள் கையை ஓங்கி. ”பளீர்னு இருக்கு” ”தமிழ்நாட்டிலே சிவப்பு கலர்னா பெரிய மோகம் இல்லை?” ”ஏன் இங்க இல்லியா?” ”இல்லை..இங்க மாந்தளிர் நிறம்தான் பெரிய கிரேஸ்”

வெளியே வந்தபோது செந்நிற ஒளிக்கு மாறியது மொத்த உணர்ச்சிகளை திசை திருப்பியது. நான் மனதுக்குள் சிட்டியடித்தேன். அவள் திரும்பி ”இனிமே ஒரு நாப்பத்தெட்டுமணிநேரம் இந்தப் பாட்டுதான் என்ன?” என்றாள். ”பாட்டு ஒரு பேய் மாதிரி” என்றேன். நாயர் ”கலத்தப்பம் இஸ் வெயிட்டிங்” என்றார்.

மேஜையில் அமர்ந்தோம். நாயர் ஒரு பெரிய தட்டை எடுத்துவந்தார். அதில் சிறிய சட்டி அளவுக்கு பெரிய ஒரு இட்லி இருந்தது. ”இட்லியா?” என்றேன். ”நோ…இது அரிசிமாவு தேங்காய் வெல்லம் இன்னும் பல இலைகள் தழைகள்லாம் சேர்ந்தது. கலத்திலே தண்ணிவிட்டு அதோட வாயிலே ஒரு துணியைக் கட்டி அதிலே இந்த மாவை வச்சு இன்னொரு மூடியாலே மூடி அப்டியே அடுப்பிலே ஏத்த வேண்டியதுதான். ஆவியிலே வெந்திடும்”

கலத்தப்பம் வினோதமான மனத்துடன் சுவையாக இருந்தது. ”இந்த  டிரைப்ஸ் சமையல் ரொம்ப சிம்பிள். ஆவியிலே அவிப்பாங்க இல்லேன்னா சுட்டிருவாங்க. எல்லாமே நேச்சுரலான பொருட்கள். வறுக்கிறது பொரிக்கிறதெல்லாம் சுத்தமா கெடையாது. ஆனா அந்த ருசி நம்ம ·பைவ்ஸ்டார் செ·ப்ஸ் சமைக்கிற சாப்பாட்டுக்கு வராது”

நீலிமா என் காலை மிதித்தாள்.நான் ஏன் என்றேன் கண்களால். ”நாம வெளியே போவோம்” என்றாள் முணுமுணுப்பாக. ”ஓக்கே, பட் நோ வைன்” ”யூ பாஸ்டர்ட்!” நாயர் அடுப்பில் இருந்து கிடுக்கியால் டீ பாத்திரத்தை எடுத்தார். ”இது டீ கெடையாது. சுக்கு அப்றம் சில கொட்டைகள்லாம் போட்டு காய்ச்சுற பானம். கிட்டத்தட்ட சுக்குக்காப்பி. ஆனா காப்பி கெடையாது..” அந்த பானம் அபாரமான பச்சிலை மணத்துடன் நாசியை எரிப்பதுபோல் இருந்தது

நீலிமா ”அச்சா ஞங்ஞள் அம்பலத்தில் போயி வராம்” என்றாள். ”ஓக்கே”  நீலிமா ”ஞங்கள் ஒரு  தீர்மானத்தில் எத்தி”  என்றாள். நாயர் முகம் மலர்ந்து ”ஓ, ·பைன்” என்றார். என்னிடம் ”கன்கிராஜுலெஷன்ஸ்…” சட்டென்று நெகிழ்ந்து ”ஆண்ட் தாங்ஸ்” என்றார். நான் புன்னகை செய்து ”தாங்க்யூ சார்” என்றேன்

[மேலும்]

முந்தைய கட்டுரைஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை
அடுத்த கட்டுரைபேராசிரியர் மதமாற்றம்