அரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
— பாஸ்டன் பாலாஜி.
நீங்கள் இந்தக் கேள்வியை இப்படிக் கேட்பதே சங்கடமானது. இவர்களையெல்லாம் மதிப்பிட்டு மதிப்பெண் போடும் இடத்தில் இருப்பவனாக எழுத்தாளனைக் கணிக்கும் நோக்கு இதில் உள்ளது. இது பிழை.
பொதுவாக மனிதர்களை அவர்களுடைய பொது அடையாளங்களைவைத்து அளவிடமுடியாது. தங்கள் செயல்தளம் மூலம் அவர்கள் அடையும் வெற்றி தோல்விகளே முக்கியமானவை. அதைத் திறந்த மனத்துடன் ஆராயவேண்டிய இடத்தில் இருக்கிறான் எழுத்தாளன். அவன் புனித அறிவுஜீவியாகத் தன்னைக் கற்பனைசெய்துகொண்டு அத்தனைப்பேர் மீதும் சகட்டுமேனிக்கு வசைகளை அள்ளிவிடுவது ஒருவகை சுயபிம்ப உருவாக்கமே. உள்ளூர அனைவருக்குமே தங்களது சமரசங்கள், இச்சைகள், அதிகாரவேட்கை தெரிந்துதானே இருக்கும்?
ஏ.கே.அந்தோனியை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். நான் ஓர் எழுத்தாளன் என்று தெரிந்ததும் மிகமரியாதையாகக் கூப்பிட்டு அமரச்செய்து பேசினார். அவரது எளிமையும் பணிவும் என்னை மிக மிகக் கவர்ந்தது. கண்டிப்பாக கேரள அரசியலில் அவர் ஒரு பெரும்சக்தி. அந்த சக்தியில் நூறில் ஒருபங்கு இருந்தால் கூட எழுத்தாளர்கள் போடும் ஆட்டத்தைக் கண்டுகொண்டிருக்கிறேன். அந்தோனியின் நேர்மையும் நன்னோக்கமும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை. இந்த முப்பது வருடங்களில் அந்த மனிதர் எவ்வளவு வகையான ஆசைக்காட்டல்களைச் சந்தித்திருப்பார். எத்தனைவகையான தார்மீகமான நெருக்கடிகள், தாக்குப்பிடிக்கும் கட்டாயங்கள் அவருக்கு உருவாகியிருக்கும்! அவற்றை அவர் தாண்டி வந்திருக்கிறார் என்றால் அவரது ஆன்மவல்லமையைக் குறைத்து மதிப்பிடமுடியுமா என்ன? நான் இ.எம்.எஸ்ஸைச் சந்தித்திருக்கிறேன். காந்தியைச் சந்தித்ததற்கு நிகர் அது. அவரது மகத்தான வரலாற்றுப் பீடத்தில் அம்மனிதர் ஒருமேதையும், குழந்தையும் இணைந்த கலவைபோல இருந்ததை அவதானித்திருக்கிறேன்.
எந்த உலகியல்கட்டுக்கும் தன்னை அளிக்காமல் அறிவார்ந்த தளத்தில், உன்னத மனச்செயல்பாடுகளின் ஒளியில், முழுமைகுன்றாமல் வாழ்ந்த நித்ய சைதன்ய யதியை நான் நெருங்கி அறிந்திருக்கிறேன். கட்டற்ற மீறலின் அச்சமூட்டும் வலிமை கொண்ட சுவாமி வினய சைதன்யாவையும் கிட்டத்தட்டக் கருத்திலேயே விழாத அளவுக்கு எளிமை கொண்ட பேரறிஞர் முனி நாராயண பிரசாத்தையும் அணுகி அறிந்திருக்கிறேன். நாம் வாழும் இவ்வுலகில்தான் எதையுமே தனக்கென வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையுமே பிறர்க்களித்தபடி அவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள்.
பள்ளிநாள்களிலேயே என்னை மிகவும் தூண்டிய முன்னுதாரண ஆசிரியர்கள் பலர் உண்டு. ஓய்வுபெற்றுவிட்ட சத்தியநேசன் அவர்களைச் சமீபத்தில் தெருவில் பார்த்தேன். ஆற்றூர் ரவிவர்மா ஆசிரியர்தான். அத்தொழிலில் உள்ள மோகம் காரணமாக இந்தத் தள்ளாத வயதிலும் அவர் தனியார்ப் பள்ளிக்குக் கற்பிக்கச் செல்கிறார். அவரது மாணவர்கள் கேரள இலக்கிய இதழியல் துறைகளில் சாதனை செய்தனர். அவர்கள் நினைவில் அவர் அப்பழுக்கற்ற ஒரு பேராசான். எம்.வேதசகாயகுமார் ஓர் ஆசிரியராக எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் பலசமயம் என்னைப் பிரமிக்கவைத்துள்ளன.
என் மாமனார் [அருண்மொழிநங்கையின் அப்பா] எஸ்.சற்குணம் அவர்கள் ஆசிரியராக நாற்பதுவருடம் முற்றிலும் அர்ப்பண உணர்வுடன் பணியாற்றியவர். தனிவாழ்க்கையிலும் திராவிட இயக்கப் பிடிப்புள்ள பொதுப்போராளியாக முன்னுதாரணமாக இருந்தவர். தன் குடும்பத்தில் உள்ள அத்தனை எளியவர்களுக்கும் நிழல் அவர். கடற்கரையோர ஆரம்பப் பள்ளி ஆசிரியயையாக இருந்த அருண்மொழியின் அம்மா தினம் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்து பைநிறைய பூப்பறித்துக் கொண்டுசெல்லும் காட்சி என் மனதில் நிற்கிறது. என் நண்பரும் இலக்கிய வாசகருமான தங்கமணி [மொரப்பூர்] தன் பள்ளிக்கு ஆற்றும் உழைப்புக்கும் மாணவர்கள்மீது கொண்டுள்ள பற்றுக்கும் சமானமாக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிட இயலாது. நான் பட்டியலைப் போட்டுக் கொண்டே போகமுடியும்
ஆசிரியர்களில் மகத்தான மனிதர்கள் இன்றும் ஏராளமாக உள்ளனர். அருண்மொழியின் சக ஊழியையான மீனா என்பவரின் கணவரான ஆசிரியரைச் சென்றவாரம் இரவு எட்டுமணிக்குப் பேருந்தில் பார்த்தேன். ஏன் இவ்வளவு நேரமாயிற்று என்றேன். வேலைபார்ப்பது மிகச்சிறிய கிராமத்தில். அங்கே பையன்களுக்குக் கணக்கும் ஆங்கிலமும் ஏறவே ஏறாது, பத்தாவது தேர்வு வருகிறதல்லவா, ஆகவே நாங்கள் மூன்றுபேர் உபரிவகுப்பு நடத்துகிறோம் என்றார். பணம் தருவார்களா என்றேன். நல்ல கதை, கைக்காசுப்போட்டு டீ வாங்கித்தரவேண்டும், அவ்வளவு ஏழைப் பையன்கள் என்றார். காட்டுக்கத்தலாகக் கத்திப் பிரம்பால் விளாசி, டென்ஷன் ஏறி ராத்திரி தலைவலி வருகிறது என்று புலம்பினார். இன்றும் தமிழ்நாட்டில் பல அரசுப்பள்ளிகள் மிகச்சிறந்தசேவை ஆற்றிவருகின்றன என்பதை ஒவ்வொரு தேர்வுமுடிவுகளும் காட்டுகின்றன, இந்தப் பத்தாம்வகுப்பு முடிவுகளும். கிராமத்துப் பள்ளியில் நூறு பிற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்பில் கத்திக் கத்தி அவர்களில் முக்கால்பங்கினரை வெல்லவைக்கும் அந்த ஆசிரியர்களைப் போகிறபோக்கில் சீரழிந்த கும்பல் என்று சொல்லிவிடமுடியுமா என்ன?
சர்வசாதாரணமாக சினிமாக்காரன் என்கிறார்கள் எழுத்தாளர்கள். ஆனால் எஸ்.வி.சுப்பையா முதல் பாலுமகேந்திரா, நாசர், கமலஹாசன் வரை ஒன்றைக் கவனிக்கலாம். தாங்கள் சம்பாதித்த அனைத்தையுமே தாங்கள் சிறந்தபடம் என நினைப்பதை உருவாக்கவே செலவிட்டு அழிந்தவர்கள், அழிபவர்கள் அவர்கள். அவர்களைப் போல எழுத்தாளர்களில் எவர் தங்களுடைய அனைத்தையும் தாங்கள் நம்பும் ஒன்றுக்காக இழப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்? மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தால் விடைதெரியும். அது எளிய விஷயமல்ல.
ஆம், சீரழிவு உள்ளது. சரிவு உள்ளது. போலி அரசியல்வாதிகள், போலிச் சாமியார்கள், போலி ஆசிரியர்கள் மலிந்து கொண்டிருக்கிறர்கள். போலி எழுத்தாளர்கள் அதைவிட மலிகிறார்கள். வெற்றி என்றால் லௌகீக வெற்றி என்ற எண்ணம் இருக்கும்போது ஊழலும் சீரழிவும் இருக்கத்தான் செய்யும். சமூகத்தின் அற அடிப்படையை நோக்கிப்பேசும் எழுத்தாளன் அதைப்பற்றிய ஆழ்ந்த கவலை கொண்டிருக்கவும் வேண்டும். அதற்காக அவனது குரல் எழவேண்டும்.
ஆனால் எழுத்தாளன் என்ற பீடத்தில் இருந்துகொண்டு சமூகம் ஒட்டுமொத்தச் சாக்கடை என்ற குரலை எழுப்புவது தன் நேர்மைமீது நம்பிக்கைகொண்டவர் செய்யும் காரியமல்ல. எழுத்தாளர்கள் மண் மீது தொடாமல் ஒரு அடி உயரத்தில் வாழவில்லை. அரசு ஊழியராக, தனியார் தொழிலூழியராக, வணிகராக அவர்களுக்கும் செயல்தளம் உண்டு. அங்கே சமரசங்களும் உண்டு. எவ்வளவு சின்ன பணியில் இருக்கிறோமோ, எவ்வளவு சாதாரண வாழ்க்கை வாழ்கிறோமோ அந்த அளவுக்குச் சமரசங்கள் குறைவு. நான் நெருங்கிப்பழகிய மூத்த எழுத்தாளர்கள் பலர் தனிவாழ்வில் மிகமிகச் சாதாரணமான லௌகீக நோக்கம் கொண்டவர்கள். அவர்களது எழுத்தே அவர்களது தகுதியை உருவாக்குகிறது.
நான் நேரில் அறிந்த மகத்தான மனிதர்களில் விவசாயிகள் அதிகம். என் எழுத்தில் அதைக் காணலாம். துறவிகள் ஆசிரியர்கள் அன்னைகள் உண்டு. பிச்சைக்காரர் உண்டு – ‘ஏழாம் உலகத்’தின் ராமப்பன். இதில் எழுத்தாளர்கள் எவரும் இல்லை. எழுத்தாளர்களை அவர்கள் எழுத்திலிருந்து பிரித்துப் பார்த்தால் ஏமாற்றம் தாங்கமுடியாது என்பதே என் அனுபவம். வெறும் எழுத்து இருளுக்கே இட்டுச்செல்லும், காரணம் அதன் கூடவே அகங்காரமும் உள்ளது. அறிவு உருவாக்கும் அந்த அகங்காரத்தை அறிவால் வெல்லமுடியாது. நான் எழுத்தாளனாகத் தொடங்கியிருக்கலாம், எழுத்தாளனாக முடியமாட்டேன். முடிந்தால் அது எனக்குத் தோல்விதான்.
எழுத்தாளன் தன் அகங்காரத்தைக் கழற்றிவைத்து வணங்கக் கூடிய காலடி ஒன்று இருக்கவேண்டும். பாரதிக்கு நிவேதிதாபோல; குமாரனாசானுக்கு நாராயணகுருபோல. இல்லையேல் அவன் அழிவான். இது நான் எப்போதுமே சொல்லிவருவது. ரப்பர் நாவலில் கண்டன்காணி போல, காடு நாவலில் குட்டப்பன் போன்ற ஒருவரைக் கண்டால் அவனது அகந்தையின் படம் தாழவேண்டும். அற்பர்களிடமும் அதிகாரபீடங்களிடமும் மட்டுமே அவனது அகங்காரம் மீறி உயரவேண்டும்.
எழுத்தாளன் எழுதும்போது ஒருவகை மனவிரிவை உன்னதத்தை அடைகிறான். அது அல்ல அவன். அது சாமியாடியின் சன்னதம் போல, அருள்வாக்குப் போல. சாமி இறங்கினால் அவனும் மனிதனே. பெரும்பாலான நேரங்களில் எளிய மனிதன். அந்த சுய எளிமையை அவன் அங்கீகரிக்கவேண்டும். அதிலிருந்துதான் அவனது ஆன்மீகம் தொடங்குகிறது. அவன் உருவாக்கும் படைப்புகள் அவனுக்கு அவனது அளவைவிட பெரிய உருவை மெல்ல உருவாக்கி அளிக்கும். அதைச் சுமந்தலைய ஆரம்பித்தானென்றால் காலப்போக்கில் அவன் ஒரு மனிதனாக இல்லாமல் அட்டைவெட்டுப்படமாக மாறிப்போக நேரிடும். அட்டைவெட்டுப்படங்கள் என்ன, தத்ரூபச் சிலைகள் கூட எதையும் எழுதிவிட இயலாது.
எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல்வாதிமீதும் அபிமானம் இல்லை. அரசியல்வாதி சமரசங்கள் மூலம் உருவாகின்றவன் என்பதை நான் அறிவேன். ஏனெனில் அரசு என்பதே ஒரு மாபெரும் சமரச அமைப்புதான். மிகச்சிறந்த சமரசப்படுத்துபவன், பேரம்பேசுபவன் சிறந்த ஆட்சியாளன்.
தமிழக அரசியலில் என் மரியாதைக்குரிய தலைவர் என்றால் அது காம்ராஜ். அவரை மிகச்சிறிய வயதில் நான் கண்டதுண்டு. எம்.ஜி.ஆரின் ஆரம்பகால நோக்கங்கள் மீது உயர்வான எண்ணம் உண்டு. அவருக்கு ஏழைகள் மீது உண்மையான பிரியம் உண்டு என்றே நான் எண்ணுகிறேன். ஈழத்தமிழர்களைப்பற்றி மனமார்ந்த அக்கறை கொண்ட கடைசித்தலைவர் அவரே.
நான் சந்தித்துப் பழகிய முக்கியத் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தியும் மூப்பனாரும். வாழப்பாடியை ஒருமுறை சந்தித்தேன். அவரது எளிமை, அனைவரிடமும் அவர் சமானமாகப் பழகியவிதம் என்னைக் கவர்ந்தது.
மூப்பனாரை நான் சந்தித்தது யதேச்சையாக. என் நண்பரும், விஷ்ணுபுரம் ஒரு பார்வை நூலை எழுதியவருமான ராஜசேகரன் அதற்கு ஒரு திறனாய்வுக் கூட்டம் மயிலாடுதுறையில் ஏற்பாடுசெய்தார். மறுநாள் கல்கி நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டம். அதில் கூட்டத்தில் ஒரு பார்வையாளனாகக் கலந்துகொண்டேன். கல்கியின் புத்தமங்கலம் கிராமத்துக்குச் சென்றோம். விழாக்குழுத்தலைவரான மூப்பனாரும் கூடவந்தார். சா.கந்தசாமி என்னை மூப்பனாருக்கு அறிமுகம் செய்தார். என் இளம்வயது அவருக்கு ஆச்சரியமளித்தது. ஜெயகாந்தன் கூட சிறுவயதிலேயே பிரபலமடைந்துவிட்டார் என்றார். என் பெயர் காரணமாகவோ என்னவோ அவருள் ஜெயகாந்தனின் நினைவுடன் நானும் கலந்துவிட்டேன். அதனால் சற்று அதிகப்படியான பிரியத்தை என்மீது காட்டினார். மூப்பனார் சமையற்காரர்களை, சங்கீதக்காரர்களை எளியமனிதர்களை அடையாளம்கண்டு அங்கீகரிப்பதைக் கண்டு வியப்படைந்தேன்.
புகைப்படம் எடுக்க அனைவரும் அமர்ந்தபோது நான் விலகிப் பின்னால் நின்றேன். ஒருமுறைப் புகைப்படக்கருவி சிமிட்டியபிறகே நான் இல்லாததை மூப்பனார் கவனித்தார். என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டுத் தன் மடியில் அமர்த்திக் கொண்டார். அப்படம் கல்கியில் வெளியாயிற்று. பலர் நான் மூப்பனாருக்கு மிக நெருக்கமானவன் என்று எண்ண அது வழிவகுத்தது. சாரு நிவேதிதா கூட அப்படி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். அவர் மிக வற்புறுத்திச் சொன்னபிறகும்கூட நான் மூப்பனாரைப் பிற்பாடு சந்தித்ததே இல்லை. கன்யாகுமரி மாவட்டத்துக்கு வந்தபோது அவர் என்னை ஆளனுப்பிக் கூப்பிட்டார். நான் சந்திக்கச் செல்லவில்லை. அரசியல் தலைவர் தொடர்புகளின் சுமை என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்குத் தாங்க முடியாதது.