பேராசிரியர் மதமாற்றம்

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட சுட்டியைப் பார்க்கவும். அடுத்தது யார் அ.மார்க்ஸா?

ஜடாயு

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு… (மக்கள் உரிமைக்கு பெரியார் தாசன் அளித்த பேட்டி)

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்
தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியாhpன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில்  தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=426:periyardasan-convert-islam&catid=81:tamilnadu&Itemid=198

அன்புள்ள ஜடாயு,

தன் ஆன்மீக ஈடேற்றத்துக்காக ஒருவர் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலம். அது வரவேற்கத்தக்கது.

நான் பேரா. பெரியார்தாசன் அவர்களை நேரில் அறிவேன்.  இனிய எளிய மனிதர். இம்மானுவேல் கான்ட் மீது பிடிப்பும் பற்றும் கொண்டவர். என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷுக்கும் அவருக்கும் நெருக்கம் உன்டு. என்னுடன் ஒரு கூட்டத்திலும் கலந்துகோன்டிருக்கிறார்.  கான்ட் குறித்து அவரிடம் விவாதித்திருக்கிறேன்.

அ.மார்க்ஸைப் பொறுத்தவரை அவரும் இப்படி ஓர் முடிவை எடுக்கும் நிலையில் தயங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கேள்விப்படுகிறேன். அதுவும்கூட நல்லதே.

எந்த மதமும் தன்னளவில் மேம்பட்டதோ குறைவனதோ அல்ல. எனக்கு ஒரு வழி ஏற்புடையதாக இருக்கிறது. பிறிதொருவருக்கு அவரது இயல்புகளின் அடிப்படையில் இன்னொரு மதம் ஏற்புடையதாகிறது. ஒருவருக்கு கண்டிப்பான அப்பா தேவைப்படலாம். ஒருவருக்கு நல்லாசிரியனாக மட்டுமே இருக்கும் அப்பா தேவைபப்டலாம். ஒருவருக்கு பாசமே உருவான அப்பா தேவைப்படலாம்.

இஸ்லாம் உறுதியான் பதில்களைச் சொல்லி அறுதியான விசுவாசத்தை எதிர்பார்க்கும் மதம். அந்த விசுவாசமும் கட்டுப்பாடும் அப்துல்லா அவர்களுக்கு சாத்தியமாக்வேன்டுமென்றும், அது அவரை  முழுமையும் நிறைவும் கொள்ளச் செய்யுமென்றும் நம்புகிறேன்.
என்னைப்பொறுத்தவரை பொதுவாக இப்படி ஒரு தெளிவான நிலைபாடுகளை இவர்கள் எடுக்கும்போது இவர்களைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இவர்களுக்கு இந்து மரபின் மீது உள்ள விமரிசனம் அது இஸ்லாமாக இல்லை என்பதே என்ற புரிதல்  அனைத்தையும் எளிதாக்கிவிடுகிறது.

அப்துல்லா அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை
அடுத்த கட்டுரைசிந்துசமவெளி