அன்புள்ள ஜெயமோகன்,
உஙகள் பயணக்கட்டுரையை, மூச்சை அடக்கிக்கொண்டு,ஊரடங்கி இரவு 1 மணிக்கு மேல் வாசித்துக் கொண்டிருந்தேன்
உங்கள் முந்தைய ப்யண்ம் பற்றிய பதிவுகள் ஏதேனும் உண்டா என் தெரிவிக்கவும்.
உள்ளுக்கும் உள்ளே
ஒரு பயண்ம்.
உள்ளுக்கும் வெளியே
ஒரு பயண்ம்.
வெளிக்கும் உள்ளே
ஒரு பயண்ம்.
வெளிக்கும் வெளியே
ஒரு பயண்ம்.
வெளியும் உள்ளும்
ஒரு பயணம்.
உள்ளுக்கும் வெளிக்கும்
ஒரு பயணம்.
moving without travlling:
travelling without moving- என்பது நினைவுக்கு வருகிற்து.
நன்றி.
– ஜானகிராமன்.க
****
அன்பு பயணர் ஜெயமோகன் அவர்களுக்கு…
முன்பெல்லாம் மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பரிதாபமாக
இருந்தது. விதை முளைத்து சிறு குச்சியாய் பூமியைத் துளைத்து எட்டிப்
பார்த்த நாளில் இருந்து, ஆயிரக்கணக்கான பறவைகளும், இலட்சக்கணக்கான
பூச்சிகளும் வாழும் மாபெரும் சமத்துவக் காலனியாக வாழும் பெருமரம் என்ற
நிலையை எட்டிய பின்னும், ஒரே இடத்தில் இருக்கின்றது. இன்னும் தன் வாழ்
நாள் எல்லாம் அங்கேயே நிற்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே எனக்கு
மலைப்பாக இருந்தது. கொஞ்சம் கூட அது நகர்ந்து போகாது, போக இயலாது என்பதை
என்னால் கற்பனை செய்து பார்த்தாலே பரிதாபம் தோன்றியது.
பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலை உடைய என்னைப் போன்ற
‘ஊர் சுற்றி’களுக்கு மரத்தின் மற்றொரு மகத்துவம் ரொம்ப பிற்பாடு தான்
புரிந்தது.
மேலோட்டப் பார்வைக்கு மரம் அசையாமல் அங்கேயே ஜீவகாலமெல்லாம்
நின்றிருந்தாலும், மண்ணின் கீழ் அதன் வேர்கள் எங்கெங்கோ எண் திசைகளிலும்
பரவுகிறது. வாட்டர் லைன் கொண்டு போக, ஃபைபர் கேபிள் போட ரோட்டைத்
தோண்டும் போதெல்லாம் தெரியும் பிசிறடித்த வேர்கள் எங்கேயோ இருக்கும்
மரத்தின் கால் நகங்கள்.
நகரும் திறம் கொண்ட நாமெல்லாம் எத்தனை பாக்கியம் செய்தவர்கள்? அதனை
உணராமல், ‘இருக்கும் நாலு சுவருக்குள் இருக்க நாம் என்ன கைதியா?’ என்பதை
புரியாமல் சதுரப் பெட்டிக்குள் தலை விட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
மரம் வேர்கள் கொண்டு பயணிக்கிறது; தாங்கள் பாரத தேசத்தின் வேர்களைத்
தேடிப் பயணிக்கிறீர்கள்.
ஒரு சிறந்த நாவல் போலவே, நாங்களும் தங்கள் பயணத் தொடர் வழியாக இந்தியப்
பயணம் மேற்கொண்டோம்.
மிக்க நன்றிகள் ஒரு virtual பயண அனுபவம் அளித்ததற்கு!.
இன்னும் நீங்கள் இப்பயணத்தை அசை போட்டு அவசரத்தில் விட்டுப் போன
அனுபவங்களைப் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்கு ஓய்வெடுக்கவும்.
இரா.வசந்த குமார்.
அன்புள்ள வசந்தகுமார்
மாலுமியின் ஓய்வு அலைகடலில் நகரும் கப்பலின் மீதுதான் இருக்க முடியும். நான் அடுத்த பயணத்தில் இருக்கிறேன். இப்போது ஏற்காட்டில்
ஜெ
********
அன்புள்ள ஜெ,
தான் காணும் ‘அந்தக் காலத்து‘ புகைப்படங்கள் எல்லாம் கருப்பு வெள்ளையிலேயே பார்த்து பழக்கப்பட்ட என் ஆறு வயது மகள் கேட்டாள் , ‘அப்பா , உலகம் எப்போது வண்ணமயமாக மாறியது ?‘
அன்புடன்,
மதி
அன்புள்ள மதி
என் மகள் ஒருமுறை சொன்னதை நினைவுகூர்கிறேன். அவள் கறுப்புவெள்ளை படம் பார்த்துக்கொன்டிருந்தால்– காஸபிளாங்கா என்ற ஒரு படம். ஏன் பாப்பா சலிக்கலியா என்றேன். இல்லை அப்பா ஒரு அஞ்சு நிமிஷம் போயாச்சுன்னா கலர் மாதிர்யே தெரிய ஆரம்பிச்சிரும்…என்றாள் . நீங்கள் கேட்டதன் மறுபக்கம்.
ஜெ
***********
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சில காலம் முன்பு எனது பல்கேரிய, அமெரிக்க சக தொழிலாலிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு இந்தியா மீதிருக்கும் வியப்பு புரிய வந்தது. அதேபோல எனது ஜப்பானிய சக தொழிலாளி இந்தியா வந்தபோது அவருடன் ஆந்திரக் காடுகளை சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் இந்தியா ஆப்ரிக்காவை நினைவுபடுத்துவதாகச் சொன்னார். அந்த அளவு செழுமையானதல்ல இந்தக்காடுகள் என்று சொன்னேன்.
இந்த மூவருமே என்னிடம் கேட்ட ஒரு கேள்வி, தாஜ்மஹாலுக்குப் போனதுண்டா என்று.இல்லை என்பதுதான் எனது பதில். இருப்பினும் இக்கேள்விக்கான காரணம், இந்தியா என்றவுடனேயே, அவர்கள் நினைப்பது தாஜ்மஹால், கூட்டம் கூட்டமான ஏழை மக்கள், சாமியார்கள், இன்னமும் மிஸ்டிகல் பவர் கொண்ட மக்கள், மென்பொருள் தொழில் என்றுதான் என்று சொன்னார்கள். இதிலிருந்து நான் பெரிதும் வேறுபட்டாலும், அவர்கள் அப்படி நினைத்ததில் ஆச்சரியம் இல்லை.ஏனெனில் எனது அனுபவத்திலும், உங்கள் பயணக்கட்டுரைகள் மூலமும் நான் தெரிந்துகொண்டது, பெரும்பாலான இந்தியா இன்னமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மருத்துவ வசதிகளும் இல்லாமல், ஒரு சாதாரண இந்தியன் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போராடும் நிலைமையில் இருக்கிறான் என்பதுதான்.
பெருநகரங்களின் அசுர வளர்ச்சியில் நம் கவனம் இதன்பால் சற்றும் செல்லாமலிருப்பதே என்று தோன்றுகிறது. இன்னமும் சற்றும் கலங்காமல் நாம் நம்மை வளரும் நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பது அசூயையாக இருக்கிறது. நமது அரசியல்வாதிகள் ஏதோ வானத்தை வில்லாக வளைத்துவிட்டதுபோல பேசுவது வெறுப்பைத்தருகிறது. நமது சமுதாய கட்டமைப்பை வைத்துக்கொண்டு நிச்சயம் என்னால் இதற்கு ஏதும் செய்ய முடியாது என்பது நிதர்சனம். ஒரு சமாந்திரமுள்ள சமூகத்திற்காக ஏங்கி, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுக்கு என்னை பலியாக்குவதைத் தவிர வேறெதுவும் நடப்பதற்கான சாத்தியமும் தெரியவில்லை. இந்தியா உண்மையில் ஒரு சுயபரிசோதனைக்குத் தயாராக வேண்டும், இந்தியர்கள் ஒரே ஆத்மாவின் குரலாக ஒலிக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் வெறும் மேடை பிதற்றலாகத் தோன்றுகிறது. அதற்காக நாட்டை விட்டு ஓடிவிடவா முடியும், அது இந்நாட்டிற்கு இழப்பல்ல எனும் போதும்? உங்களைப்போன்ற சில எழுத்தாளர்கள் ஒரு சிறிய சமுதாய மன மாற்றத்திற்காவது காரணமாக இருக்கிறீர்கள் என்பது உண்மை.
என் நண்பன் ஒருவன் ப்ளாக் எழுதலாம் என்று இருக்கிறேன், ஏதாவது நல்ல பெயர் சொல்லேன் என்றான். எதைப்பற்றி எழுதப்போகிறாய் என்றேன், மேலாண்மை மற்றும் அரசியல் என்றான். அத்தோடு மதங்களையும் சேர்த்துக்கொள், அற்புதமான டைடில் சொல்கிறேன் க்ரிமினல்ஸ்.காம் என்று வைத்துக்கொள் என்று சொன்னேன்.
இந்தியாவில் இருந்துகொண்டு தாஜ்மகாலைப் பார்க்காமல் இருக்கிறாயே என்று அவர்கள் கிண்டலாக கேட்டார்கள். பதில் பேசாமல் வந்துவிட்டேன். உண்மையில் தாஜ்மகாலைப் பற்றி எனக்கு பெரிய அபிப்ராயம் ஏதும் இல்லை. அது எத்தனை அழகாக இருந்தாலும் அது ஒரு சமாதி என்பதும், பல்லாயிரம் மக்களின் மனித சக்தியை வீணடித்த ஒரு பிம்பமாகவும்தான் தெரிகிறது. இதேபோன்று மனித சக்தியை விழுங்கி எழுந்த மதுரை, தஞ்சை கோவில்களைப் பற்றிய விஷயங்களில் அது ஒரு சமூகத்திற்கான நம்பிக்கை, உத்வேகம், ஆறுதல் என்றாவது சமாதானப்படுத்திக் கொள்ளமுடிகிறது. அதேபோல கோட்டைகள் மக்களின் பாதுகாப்பிற்கு என்றாவது சொல்லலாம். ஒரு தனி மனிதனின், அவன் மன்னனானாலும் சரி மகாத்மாவானாலும் சரி அவனது கல்லறைக்கு என்ன பெரிய மதிப்பு இருக்கமுடியும் என்று தெரியவில்லை. அதை ஒரு காதலின் வெளிப்பாடாகவும் கொள்ள முடியவில்லை.
எனக்கென்னவோ, மெரினாவில் இருக்கும் அண்ணா சமாதிக்கும், எம்.ஜி.ஆர் சமாதிக்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த வித்யாசமும் இல்லாததுபோலவே இருக்கிறது.
மன்னிக்கவும் ஏதேதோ பேசிக்கொண்டே போகிறேன். கேட்க வந்தது இதுதான்.
தாஜ்மஹாலைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
-ராம்.
(இனிமேலாவது சுருங்கப் பேச கற்றுக்கொள்ளவேண்டும்)
^^^^
அன்ப்ய்ள்ள ராம்
நான் அப்படியானால் இன்னும் சுருங்கப்பேசவேண்டுமே!
பொதுவாக கட்டிடங்களை அடிமைகளை வைத்துச் செய்தார்கள் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பெர்டோல்ட் பிரக்ட் என்ற உடலுழைப்பை அறியாத பேராசிரியர் தன்னை ஒரு மார்க்ஸிய புரட்சிக்காரராக கருதிக்கொண்டு எழுதிய கவிதையில் இருந்து உருவான அரைகுறை நம்பிக்கை. பயணங்களில் அதைப்பற்றி நானும் கல்பற்றா நாராயணனும் பேசிக்கொன்டோம். தாஜ்மகாலைஅ டிமைகளை வைத்து உடைக்க முடியும், கட்டமுடியாது.
எளிமையான கேள்வி, அப்படியென்றால் அன்றைய விவசாயம் அடிமைகளை வைத்தா நடந்தது? தொழில்கள்? கைத்தொழில்கள்? இசை? நடனம்?விளையாட்டுகளும் அடிமைகளால் ஆடப்பட்டனவா? ஒரு காலகட்டமே அடிமைகளால் ஆனதா? என்ன முட்டாள்தனம் அது? இன்றைய காலகட்டம் மட்டும் அடிமைத்தனமே இல்லாததா? ருஷ்யாவின் ஸ்டாலின் சிலைகளை மட்டும் தொழிலாளர் கண்ணீர் மல்க கலைப்புல்லரிப்புடன் செய்தார்களா?
கலையை அக்கலைமீது போதை கொண்டவர்களே உருவாக்க முடியும். கலை அபப்டி மனிதர்களை பித்துபிடிக்கச் செய்யக்கூடியது. அது மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவனை கண்டடையச்செய்கிறது. அவனை அக்கணங்களில் அவழ வைக்கிறது. ஓர் அடிமையை கலையில் ஈடுபடுத்தினால்கூட அவன் மெல்லமெல்ல கலையால் ஈர்க்கப்பட்டு உள்ளிழுக்கப்படுவான். கலையில் இருக்கும் உச்சகட்ட நுட்பம், தேர்ச்சி அதற்கு தேவையான கவனம் ஆகிஅவற்றை அடிமைவேலைசெய்பவனால் அடையவே முடியாது.
தாஜ்மகால் இந்திய கட்டிடக்கலையின் சிகரங்களில் ஒன்று. இந்தியக் கட்டிடக்கலையில் மொகலாயர்களின் மாபெரும் பங்களிப்பு அது. அதன் அளவுகளில் உள்ள கச்சிதம், அதன் ஒவ்வொரு கணுவிலும் மிளிரும் பெண்மை அதை ஒரு அற்புத நிகழ்வாக ஆக்குகிறது. கலை வழியாக எவ்ளிபப்டும் ஆன்மாவை அறியாதவர்களுக்குத்தான் அதன் பயன் என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. தாஜ்மகால் பளிங்கில் உருவான ஒரு கனவு. டாகூர் சொன்னதுபோல அது நித்தியத்துவத்தின் கன்னத்தில் தயங்கி நிற்கும் ஒரு துளி கண்ணீர்
தாஜ்மகாலை நிலவின் ஒளியில் பார்க்க வேண்டும். இளம்பனி அதன்மீது பட்டுச்சல்லா துணிபோல விலகும்போது பார்க்க வேண்டும். மழைக்குமுன் இளம்சிவப்புநிற வெயில் பரவும்போது பார்க்கவேண்டும். யமுனைக்கரியில் இரவு தங்கி பறவைகள் எழும் நேரத்தில் பார்க்க வேண்டும்….
தாஜ்மகால் ஷாஜகான் சக்ரவர்த்தி இந்தியதேசத்துக்கு அளித்த மாபெரும் கொடை. அது பளிங்கில் வடிக்கபப்ட்ட ஒரு கவிதைப்படிமம். கவிதை என்பது மொழிஒ அறிந்த நைவருக்கும் உள்ளதல்ல. அது கவிதை வாசகர்களுக்கு மட்டுமே உரியது….எந்தக்கலையும் அப்படித்தான்
&&&&&&&&&&&&&
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
நான் தென்னிந்தியாவைத்தாண்டி வந்த முதல் பயணம், இந்த ஜூலை மாதம் இங்கு அபு தாபிக்கு வந்ததுதான். தென்னிந்தியா என்று நான் சொல்வது – தமிழ்நாட்டில் அநேக ஊர்கள், கேரளாவில் அங்கங்கே, கர்நாடகத்தில் மைசூர், பெங்களூர், மற்றும் ஆந்திராவில் திருப்பதி.
உங்கள் பயணக்கட்டுரை ஆரம்பித்த நாள் முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து படித்தேன். பிறகு, இங்கு வேலைப்பளு அதிகமாகிவிட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இன்று ஒரே வாசிப்பில் முதல் கட்டுரையிலிருந்து 23-ஆம் கட்டுரை வரை படித்து முடித்தேன். இவ்வளவு துல்லிய விபரங்களை வேறு எங்கும் நான் பெற்றிருக்க முடியாது. மிக்க நன்றி.
பயண அனுபவங்களுடனான உங்கள் வரலாற்றுக் குறிப்புகள் மிக முக்கியமானவை. குறிப்பாக என்னைப் போன்றோர்க்கு. இந்தியாவின் கலைவளங்கள், கோயில்வளங்களை முகலாய மன்னர்கள் அழித்தனர் என்பது ஏற்கனவே அறிந்த தகவல் என்றாலும், ஒரு கோயிலைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்று உங்கள் கட்டுரைகள் வாயிலாக அறியும்போது மிகுந்த வேதனை உண்டாகிறது.
குறிப்பாக நாளந்தா, சுல்தான் பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்டதைப் படித்துவிட்டு, அதற்கு மேல் ஒருவரிகூடப் படிக்காமல் நெடுநேரம் யோசித்துக் கொண்டேயிருந்தேன். உலக வரலாற்றில் வேறு எங்கும் இந்த அளவில் பண்பாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டிருக்காது. இல்லையா? இது இந்தியாவுக்கும்,நமக்கும் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்? ஆனால், எஞ்சிய அடையாளங்களைப் பாதுகாப்பதில்கூட நம் அரசாங்கம் மெத்தனம் காட்டுவது இன்னும் கொடுமை. நம் நாட்டின் பொக்கிஷங்களான இவைகளின் எதிர்காலம் குறித்த தீரா அச்சமும் மேலோங்குகிறது.
இந்தப் பயணம் உங்களைக் காட்டிலும் என்னைப்போன்றோர்க்கு முக்கியமானது. 23 கட்டுரைகளுடன் இப்பயணம் முடிவது, சிறு ஏமாற்றத்தை அளித்தாலும், இது போன்ற ஒரு பயணத்திற்கான தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களில் இந்தியா திரும்பியவுடன் ஒரு தென்னிந்தியப் பயணத்திற்கான திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டோம்.
புகைப்படங்களுக்காக நண்பர் வசந்தகுமாருக்கு பல்லாயிரம் நன்றிகள். நேர்த்தியான கோணத்தேர்வுகள். நல்ல ஒளிச்சேர்க்கை. கட்டுரைகளுக்கு உயிரளிப்பபவைகளாக இருந்தன. மற்றும் இப்பயணத்தை சாத்தியமாக்கித்தந்த உங்கள் அத்துணை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
பி.கு:
இம்சை அரசன் 23- ஆம் புலிகேசி படத்தில், வெள்ளையராண்ட காலத்தில் வடிவேல் [உக்கிரபுத்தன்] நாளந்தாவில் படித்ததாக வருகிறது. இது ஒரு காலப்பிழை [anachronism] தானே?
நேசத்துடன்,
ஜதி
அன்புள்ள ஜதி
நன்றி. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள்
உலகநாகரீகமே பதினேழாம் நூற்றாண்டு வரை பரஸ்பரம் அழித்துக்கொள்வதாகவே இருந்தது. இன்றுகூட அமெரிக்கா புகழ்பெற்ற மெசபடோமிய பண்பாட்டுச்சின்னங்களை அழித்துக்கொன்டிருக்கிறது. நாம் வளமான மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். ஆகவே பலநூறு போர்கள் படையெடுப்புகள்.. நம் இறந்தகாலம் அழிவின் சின்னங்களால் ஆனதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை
இந்தியக் கலைச்சின்னங்களைப் பேனியவர்கள் பிரிட்டிஷார். லார்ட் கன்னிங்காம், லார்ட் சீவெல் க்ர்னல் மெக்கின்ஸி…. அவர்களுக்கு அந்த உணர்வு வந்தமைக்குக் காரணம் என்ன? அவர்கள் நாட்டில் உள்ள பாகன் பண்பாடு முழுக்கவே ஆரம்பகால கிறித்தவத்தால் அழிக்கபப்ட்டது. பின்னர் கத்தோலிக்க சின்னங்கள் எதிர்ப்புக் கிறித்தவத்தால் அழிக்கபப்ட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பின்னரே அவர்கள் தாங்கள் இழந்தது என்ன என்று அறிந்தார்கள். அந்த உணர்ச்சியே அவர்களை கலைகளை மத இன வேறுபாடின்றி பேணும் மனநிலையை அளித்தது
இறந்தகாலம் எண்ணி ஏங்க வேண்டிய ஒன்றல்ல. அபத்தமான கோபங்களை உருவாக்க வேண்டிய ஒன்றும் அல்ல. நாமனைவருமே ஒரு கொலைகார இரந்தகாலத்தின் மீது நிற்பவர்களே. இறந்தகாலம் நமக்கு பாடநூலாக வேண்டும். பிரிட்டிஷாருக்கு அப்படி ஆனது. நாம் எதையும் கற்றுக்கொள்ளாமல் பாடநூலை விரித்து வைத்துக்கொன்டு தூங்குகிறோம்