யோகம்,ஞானம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஷாசா என்பவர் யோகம் பற்றி எழுதியிருந்த கடிதம்  பார்த்தேன்.. பதற்றம் ஏற்படுத்தியது.. அவருக்கு உறுதியாக, அதே சமயம் ஆறுதல் தரும் பதிலை அளித்திருக்கிறீர்கள்.  

அவர் குறிப்பிட்டிருக்கும் சுதர்சன் கிரியா என்ற பயிற்சி ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பு கற்றுத் தரும் அடிப்படைப் பயிற்சி.. detoxification, பிராணசக்தியை சஞ்சரிக்கச் செய்வது, அயற்சியை நீக்குவது என்று சில நல்ல உடல்/மன நல விளைவுகள் அதனால் ஏற்படுகின்றன. பெங்களூரில் அனேகமாக பெரும்பாலான மென்பொருள் கம்பெனிக்கள் இப்பயிற்சியை தங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் கற்றுத் தருகிறார்கள் (வகுப்பில் சேர நிரப்ப வேண்டிய படிவத்தில்  நரம்புத் தளர்ச்சி, schizophernia, ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரசினைகள் உண்டா என்று கேள்விகள் இருந்தது  எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேர்கள்,  yes என்றூ குறிப்பிட்டிருந்ததை வைத்து,  உங்கள் வழக்கமான சிகிச்சையைத் தொடருங்கள் என்று அனுப்பி விட்டார்கள்).

இதனைத் தொடர்ந்து செய்பவர்களில் சிலருக்கு அகவிழிப்புணர்வு அதிகமாகும்.. அத்தகையவர்களுக்கு அடுத்த கட்ட  பயிற்சிகளான முத்திரைகள், பந்தங்கள், தியானம் ஆகியவற்றை ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பிலேயே கற்றுத் தருகிறார்கள்..   இந்தக் கடிதம் எழுதியவர்  அந்தப் பயிற்சிகளையும் அதே அமைப்பைத் தொடர்பு கொண்டு கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். அங்கு தவறு செய்து விட்டார்… இப்போது கூட அதை அவர் செய்யலாம்.  தவறான பயிற்சிகளால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம்- அதை அவர் முதலில் நிவர்த்தி செய்து கொள்வதும் தேவை. ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பில் நல்ல ஆயுர்வேத டாக்டர்கள் சிலரும் இருக்கிறார்கள், அவர்களையே கூட அணுகலாம்.

நித்யா எபிசோட் யாருக்கு என்ன செய்ததோ இல்லையோ, தமிழ் வாசகர்களது  குழப்பங்களுக்கும், ஐயங்களுக்கு தீர்க்கமான, நேர்மையான, ஆழமான பதில்களை அளிக்கும் ஒருவரைக்  காண்பித்துக் கொடுத்திருக்கிறது.  இத்திறக்கிலான உங்களது வழிகாட்டுதல்கள் ஆன்மிக, தத்துவத் தேடல் கொண்ட பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இவற்றை முழுமையாகத் தொகுத்து புத்தக வடிவில் கொண்டு வாருங்கள்..

அன்புடன்,
ஜடாயு


My blog:  http://jataayu.blogspot.com/

அன்புள்ள ஜடாயு

எனக்கு இந்த பயிற்சிகளை எந்த அளவுக்குச் செய்கிறார்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று நேரடி அனுபவம் இல்லை. நேரில் செல்லவேண்டிய ஆர்வமும் இல்லை, அவசியமும் இல்லை. நான் கேள்விப்பட்டதை வைத்தே சொன்னேன். குறிப்பாக என் அலுவலகத்தில் சிலர் சென்றிருக்கிறார்கள். அங்கே மிக மேம்போக்கான, உதாசீனமான பயிற்சி அளிக்கப்பட்டது என்று எனக்குப் பட்டது. ஆனாலும் நன்கறியாமல் தனிப்பட்ட எந்த அமைப்பையும் குறித்து நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

பொதுவாக ‘பெரிய’ பெயர்களை இந்தப்பயிற்சிகளுக்கு அளிப்பதில்தான் அத்தனை சிக்கல்களும் தொடங்குகின்றன. ஒருசராசரி இந்துவுக்கு அவன் மரபில் உள்ள ஞான,யோக முறைமைகளைப்பற்றிய எந்த அறிதலும் இருப்பதில்லை. ஆகவே அவன் இவற்றையே நம் மரபு அளிக்கும் உச்சமாக எண்ணிக்கொள்கிறான். பல எளிய மனங்கள் இந்த பிரமை மகிழ்ச்சியில் திளைக்கின்றன. பலர் பொய்யாக அதை பாவனை செய்கிறார்கள். மிகச்சிலர் மனதின் கட்டுப்பாட்டை இழக்கவும் செய்கிறார்கள்.

யோகம் என்பது பொதுவாக மூன்று தளம் கொண்டது எனலாம். ஓன்று அனுஷ்டானம். யோகாசனம் போன்ற பயிற்சிகள், பிராணயாமம், உணவுக்கட்டுப்பாடுகள் போன்றவை இந்த தளம் சார்ந்தவை. இரண்டு, ஞானம். தத்துவப்பயிற்சி.  மூன்று, சாதனா. தியானம் இதைச் சேர்ந்தது. இந்தமூன்றும் சரியானபடி இணையும்போதே அது யோகம் ஆகிறது. அதன் முதல் நோக்கம் முழுமையான அகவிடுதலை அல்லது முக்தி.

இங்கே அனுஷ்டானங்களில் சிலவற்றையும் சாதனாவின் எளியதோர் வடிவையும் இணைத்து ஒரு சிறிய பயிற்சிமுறையை உருவாக்கிக்கொண்டு அதை மிகப்பரவலாக கொண்டுசெல்கிறார்கள். அனுஷ்டானங்கள் உடலை சரிசெய்யவும் மனதை சரிசெய்யவும் வேண்டியே உருவாக்கபப்ட்டவை என்பதனால் அவற்றுக்கு  அரிதான குணப்படுத்தும் சக்தி உண்டு. அது பரவலாக மக்களைக் கவர்களிறது. அதையே அந்தச் சாதனாவின் பலனாகக் காட்டி விடுகிறார்கள்.

யோகசாதனை என்பது மனிதனை விடுவிக்க வேண்டும். விடுதலை என்பது எளிதல்ல. அதையே சொல்லிச் சொல்லி பார்க்கிறேன் என நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ,

ஞானிகள் இயற்பியல் விதிகளை மீறி எதுவும் செய்துவிடுவதில்லை என்று கூறி இருக்கிறீர்கள். தர்க்க மனதுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

தவிர, ஞானிகளுக்கு காலங்களைக் கடந்து எதிர்காலத்திற்குள்ளும் இறந்த காலத்திற்குள்ளும் ஊடுருவிப் பார்க்கும் தன்மை இருக்கிறதா ?

 ஆமெனில் , சற்று விளக்குவீர்களா ?

நன்றி.

மதி

பொதுவாக நம்மால் முடியாததைச் செய்ய ஞானியரால் முடியவேண்டும் என்ற பாமர அளவுகோல் நம் சமூகத்தில் உள்ளது. ஆகவேதான் தீயை உண்பது நீரில் நடப்பது போன்றவற்றுடன் முக்காலமும் உணர்ந்திருத்தலையும் எதிர்பார்க்கிறார்கள். ஞானியரை அளக்க அளவுகோல்கள் இல்லாமல் அஞ்ஞானத்தையே அளவுகோலாகக் கொள்வதன் விளைவுகள் இவை என்பது என் எண்ணம்.

ஓர் உரையாடலில் நாராயணகுரு சொல்கிறார். அஞ்ஞானம் ஞானத்தை அறிந்துகொள்ள முடியாது. இரண்டும் வேறு வேறானவை. அஞ்ஞானம் தன்னிடம் இருப்பதை ஒருவன் உணர்ந்தாலே அது ஞானம்தான். நம்மிடம் இருக்கும் ஞானத்தின் துளியைக் கோண்டே ஞானத்தின் கடலை நம்மால் அறிய முடியும். 

உண்மையில் நம்மால் முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை சாமானியர் அறிவதில்லை. சுகதுக்கங்களில் நிலைகுலையாமலிருக்க, விருப்புவெறுப்பில்லாமல் மனிதர்களைப் பார்க்க, மானுடவாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க, நான் எனது என்ற அளவுகோலுக்கு அப்பால் சென்று அறிய நம்மால் முடிவதில்லை.  அதை அறிந்தால் சர்வ சாதாரணமாக அவற்றை செய்யும் மனிதர் ஞானி என எளிதில் அறியலாம்.

இந்தப்பிரபஞ்சம் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. இதன் ஒவ்வொரு செயலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ஒருசெயலை முற்றிலும் அறிய ஒட்டுமொத்தச் செயலையும் அறிந்தாகவேண்டும். அப்படி அறிந்திருந்தால்தானே அடுத்த கணம் சாலையில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியும்?

முக்காலமும் அறிதல் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? இந்த பிரபஞ்சத்தில் உள்ள முடிவிலாத கோடானுகோடிச் செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருத்தலைச் சொல்கிறீர்களா? அது ஒரு மனித மூளையால் சாத்தியமென உண்மையிலேயே நினைக்கிறீர்களா? எதிர்காலத்திற்குள்ளும் இறந்த காலத்திற்குள்ளும் செல்லும் ஆற்றல் எந்த மானுட உயிருக்கும் சாத்தியமல்ல என்று நான் உறுதியாக அறிவேன்.

அப்படியானால் முக்காலமும் உணர்தல் என்றால் என்ன? காலப்பெரும் சுழற்சியாக இங்கே நிகழக்கூடிய இந்நிகழ்வின் சாராம்சமான விதியை உணர்ந்துகொண்டால் அது முக்காலமும் உணர்தல் அல்லவா? அந்த விதி ஒரு சின்னஞ்சிறு இலையில் ஒரு புழுவில் கூட நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பௌத்தம் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஆதாரம் தர்மம் என்கிறது. அந்த தர்மமே நம்முள் செல்லும் சோறு சக்தியாக மாறுவதிலும் உள்ளது.

நம்முடைய அறிதல் என்பது துண்டுபட்ட அறிதல். நம்முடைய சொந்த பிரக்ஞையால் துண்டுபண்ணி எடுக்கப்பட்டது அது. நம்மால் ஒருபோதும் எதையும் ஒட்டுமொத்தமாக முழுமையாக பார்க்க முடிவதில்லை. நம்முடைய இருப்பு மூலமே நாம் எதையும் அறிகிறோம். ஆகவே அறிதல் என்பது ‘நம்முடைய அறிதல்’ மட்டுமே. அதையும் மீறிச் சென்றால்கூட அது மானுடகுலத்துக்கு உரிய அறிதலாக மட்டுமே இருக்கும்.

அதற்கப்பால் ஒரு ‘தூய’ அறிதல் சாத்தியம் அல்ல என்று ஐரோப்பிய நவீனச் சிந்தனையாளர் சொல்கிறார்கள். எந்த அறிதலும் அறிபவனின் அறிதல்முறைக்குக் கட்டுப்பட்டதே என்றும், அறிபவன் இல்லா அறிதல் இல்லை என்றும் அவர்கள் சொல்வார்கள். நவீன மொழியியலில் இதைப்பற்றிய விரிவான விவாதங்கள். உள்ளன

நான் அதை ஏற்கவில்லை. அது சாத்தியமே என்றே நினைக்கிறேன். மனிதன் தன்னுடைய சுயத்தை அல்லது தன்னிலையை முழுமையாக இழக்கும்போது, அவனுடைய உள்ளுணர்வு அதன் அதிதூய நிலையை அடையும்போது, அந்த அறிதல் சாத்தியமென நினைக்கிறேன். அங்கே அறிபடுபொருள் அறிபவன் அறிவு மூன்றுமே ஒன்றாக ஆகிறது. அதையே முழுஅறிதல் என்கிறோம் . அதற்கான வழிமுறையே யோகம்.

நாராயணகுரு அறிவு என்ற சின்னஞ்சிறு நூலில் அதைப்பற்றி பேசியிருக்கிறார். நான் அதை மொழியாக்கம் செய்து ‘சொல் புதி’தில் வெளியிட்டிருக்கிறேன்.

அத்தகைய முழுமைஅறிதல் காலத்தை எப்படிப் பார்க்கும்? நாம் காலத்தை துண்டுபடுத்தப்பட்ட காலமாகவே பார்க்கிறோம். அதாவது நம் பிரக்ஞை வழியாக செல்லும் காலம். நேற்று, இன்று, நாளையாக பிரிக்கப்பட்ட காலம். நிகழ்வுகளுடன் சேர்ந்து கணக்கிடப்படும் காலம். அதை நம் மரபு கண்ட காலம் என்கிறது. 

முழுமையறிவு  அதன் ஒரு முகமாகிய துண்டுபடாத முழுமையான காலத்தை உணரும் என்று சொல்லப்படுகிறது. அதை அகண்ட காலம் என்று மரபு சொல்கிறது. அந்தக் காலத்தை ஞானிகள் உணர்வதையே ‘முக்காலமும் உணர்தல்’ என்ற சொல் சுட்டுகிறது. அது நம்முடைய காலப்பிரக்ஞையால் விளக்க முடியக்கூடிய ஒரு அறிதல் அல்ல.

அதை நாளைக்கு பூகம்பம் வரும் என்றோ அடுத்த இந்திய பிரதமர் ராகுல்காந்திதான் என்றோ சொல்லும் அன்றாட அறிவாக புரிந்துகொள்வதில்தான் நம் அறியாமை உள்ளது. ஞானியர் கூறும் முக்காலமும் அறிதல் என்பது காலமின்மையில் நின்று அறிதல். நீங்கள் சொல்வது நிகழ்காலத்தில் நின்றுகொண்டு இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கும் எளிய அறிதல். அதில் நிற்பவர் ஞானியரல்ல.

ஜெ

அன்புள்ள ஜெமோ,
நான் கேட்க போகும் கேள்வி, உங்களுக்கும் எழுந்திருக்கும் என நினைகிறேன். மண் குடுத்த உடல் மண்ணிருக்கு போகின்றது, அப்புறம் என்கிரிந்தோ வந்த உயிரும் அங்கே தானே போக வேண்டும். கறந்த பால் மடி புகாது என்று சில ஞானியர் சொல்கின்றனர், சிலர் மறு பிறப்பு என்று சொல்கின்றனர். மறுபிறப்பு சும்மா மனிதனின் இயலாமையை மறைக்கவா ? நான் படித்த இந்து மத, புத்த மத பக்கங்களில் இதற்கு பதில் கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரிந்ததை பகிர்வீர்களா ?

நன்றி,
பிரகாஷ்

 
பிரகாஷ்

திரும்பவும் ஒரு பெரிய வினா. பலநூறு பக்கங்களில் விவாதிக்க வேண்டியது. நான் இந்தப்பதிலை ஒரு தொடக்கமாகவே சொல்கிறேன். இதுசார்ந்து வாசிக்க, அறிய நிறைய விஷயங்கள் உள்ளன.

பத்துபேர் நம்பும் பழங்குடி மதம் உட்பட எல்லா மதங்களும் முதலில் அளித்தாகவேண்டிய பதில் மரணத்துக்குப் பின் என்ன என்பதே. அங்கிருந்தே மானுட தத்துவ சிந்தனை ஆரம்பிக்கிறது. பலலயிரம் மதங்களில் பல்லாயிரம் விளக்கங்கள் உள்ளன.

அறிவியல் அளிக்கும் விளக்கமும் அதில் ஒன்று மட்டுமே. மதங்கள் அளிக்கும் விளக்கம் எந்த அளவுக்கு அகவயமானதோ, நிரூபிக்க முடியாத ஊகமோ, அந்த அளவுக்கே அறிவியலின் விளக்கமும் உள்ளது.

அந்த விடைகளில் ஆகச்சிறந்த விடைகள் இரண்டே. அவை இந்து,சமண,பௌத்த மதங்களால் அளிக்கப்பட்டவையாக உள்ளன. சமண மதம்   மறுபிறப்பு என்ற கோட்பாட்டில் முழுமையாக உறுதியுடன் உள்ளது. பௌத்தமும் இந்துமதமும் இருவேறு விடைகளை ஒரேசமயம் அளிக்கின்றன.

முதல் விடையான மறுபிறப்பின் தர்க்கம் இவ்வகையானது. இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள எதுவுமே அழிவதில்லை. உருமாறுகின்றன, மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன. உடலாகி நிற்கும் ரசாயனங்கள் அனைத்தும் அப்படியெ. அப்படியென்றால் தன்னிலையும் அந்த தன்னிலையை நிகழ்த்தும் உயிரும் மட்டும் எவ்வாறு முழுமையாக அழிந்து போகமுடியும்? ஏன் அதுவும் சுழன்று வரக்கூடாது?

அத்துடன் ஒருவன் தன் வாழ்நாள் முழுக்க அடைந்த ஞானமும் விவேகமும் ஏன் மரணத்துடன் முடிந்து போகவேண்டும்? அதில் தர்க்கரீதியான முழுமை இல்லையே. ஆகவே அது மீண்டும் நிகழக்கூடும் என்ற ஊகம் உருவாகியது.

இரண்டாவது ஊகம் இது.  ஐம்பெரும்பூதங்களால் [நிலம்,நீர்,எரி,வளி,விசும்பு] ஆனது இந்த உடல்.  மரணத்தில்  ஒவ்வொன்றும் அந்தந்த பூதத்தில் கலக்கின்றன. உயிர் ஐந்தாவது பூதமாகிய  விசும்பில் அல்லது சூனியப்பெருவெளியில் கலந்து விடுகிறது

இந்துமரபில் உள்ள ஐந்து தரிசனங்களுக்கும் ஏற்புடைய பதில் இரண்டாவது. பௌத்த மரபில் சூனியவாதிகளுக்கும் யோகாசாரவாதிகளுக்கும் ஏற்புடைய பதில் இது. அத்வைதிகள் பொதுவாக ஏற்பதும் இதுவே.  ஆனால் இதில் எப்போதுமே மாற்றுக்கருத்து உண்டு.

கீதை போன்ற மூலநூல்களில் இரு விடைகளுமே அளிக்கப்படுகின்றன. இவை இரண்டுவகையான உண்மைகள் இரண்டுமே சாத்தியமானவை என்று நாம் அவற்றில் காண்கிறோம். 

இந்த இரு பதில்களுக்கும் ஊகங்கள் என்ற இடமே உள்ளது. நாராயணகுரு இரண்டையுமே மெல்லிய நகைச்சுவையுடன் தாண்டிசென்றுவிட்டார். அவரது மாணவர் நடராஜ குருவும் அப்படியே. அவரது மாணவர் நித்ய சைதன்ய யதி மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்.

இந்த இரு விடைகளே சாத்தியமான உச்சங்கள். மற்ற விடைகள் எல்லாமே குழந்தைத்தனமான மதக்கற்பனைகள். இந்த இரு விடைகளுக்குள் சென்று எது ஏற்புள்ளதோ அதை எடுத்துக்கொள்ளலாம். ஏதோ ஓர் ஆழத்தில் எது உண்மை என நாம் அறிவோம். அறிந்தபின் அதைப்பற்றி பேசத்தேவையில்லை என்று உணர்வோம் .

அதை அறிந்து மானுடம் என்ன செய்யப்போகிறது? எது உண்மை என்பதல்ல எது பயனுள்ளது என்பதுதானே எளிய வாழ்க்கைக்கு தேவை? ஆகவேதான் மெய்ஞானியர் இதற்குப் பதில் சொன்னதில்லை. புத்தர் புன்னகையுடன் வாளாவிருந்தார்.  அது புத்தரின் தங்கமௌனம் எனப்படுகிறது.

நான் ஓச்சிற உப்பா என்ற சூ·பியுடம் கேட்டேன். அவர் வாய்விட்டு கடகடவென சிரித்தார். 

ஜெ

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 4
அடுத்த கட்டுரைகும்பமேளா பயணம்