இரவு 15

இரவின் புன்னகை

மிக அந்தரங்கமானது

உதடுகள் இல்லாமல்

பற்கள் இல்லாமல்

கருவிழிகளால்மட்டுமே

ஒளிரும் புன்னகை.

 

கண்ணருகே கண் வைத்து

விழிகளுக்குள் பார்த்து

நமக்குள் வாங்கிக்கொள்ளவேண்டிய

ஆத்மாவின் புன்னகை அது

இத்தனை தூரம் இவையனைத்தையும் நான் உள்ளுக்குள் நிராகரித்து வந்திருக்கிறேன் என்று அப்போதுதான்  ஆச்சரியத்துடன் புரிந்துகொண்டேன். இனிமேல் இல்லை, இன்றுமுதல் இல்லை என்ற எண்ணம் மனதில் தென்றலாக வீசிக்கொண்டிருந்தது. ஒரு தருணத்திற்கு தேவையான பாடலை மனம் எவ்வளவு அனிச்சையாக தேர்ந்துகொள்கிறது.நான் சீட்டியடித்துக்கொண்டிருந்த பாடல் என்ன என்று நான் உணர்ந்தபோது புன்னகைசெய்தேன். ‘எண்ணி எண்ணிப் பார்க்கமனம் இன்பம் கொண்டாடுதே’ ஆனால் அந்த இயல்பான பாடலுக்கு நான் வெறுமே இந்த தருணத்தால் பொருள் கொள்கிறேனா என்ன?

சா¨லையின் இருபக்கமும் முகவிளக்கொளியில் உயிர்கொண்ட தொலைவுக்கற்கள் பளபளத்தோடிவந்து பின்னால் சென்றன. விளம்பரத்தட்டிகளில் இருந்த பெண்கள் சிரித்துக்கொண்டு  மெல்ல திரும்பினர். சாலையோரமாக எங்கோ நீர் கொட்டிக்கொண்டிருந்த ஒலி. பாலத்தின் அடியில் பிரம்மாண்டமான எரிமலை ஒன்றின் லாவா உருகி நதியாகி ஓடி உறைந்தது போல ஆறு. அவற்றில் மெல்லிய மின்மினி வெளிச்சத்துடன் படகுகள். எல்லாம் எனக்குப்பின்னால் சென்று மறைய நான் எல்லாவற்றில் இருந்தும் நழுவி நழுவி முன்னால் விழுந்துகொண்டே இருந்தேன்.

நான் செய்ய வேண்டியதென்ன என்பதெல்லாம் மிகத்தெளிவாக எனக்கு தெரிந்திருந்தது. அப்படியானால் நான் ஏற்கனவே ஒரு திரும்பும் வழியை விட்டுக்கொண்டுதான் வாசல்களை பின்னால் சாத்தியிருக்கிறேன். நான் எச்சரிக்கையாக இல்லை, ஆனால் என் ஆழம் எச்சரிக்கையாக இருந்திருக்கிறது. அது அனைத்தையும் அறிந்திருக்கிறது. நான் இந்த பாதிரியாரை எதற்¡கத் தேடிச் சென்றேன்? என் பிரக்ஞை சிதறுண்டிருந்தது. என் ஆழத்தைக் காணமுடியாமல் மேல்நீர் படலம் அலையடித்தது. இவரது தர்க்கத்தின் ஆம்பல் கொடிகளில் என் கைகால்கள் சிக்கி அசைவிழந்தபோது நான் மூழ்கினேன். ஆழத்தில் என் காட்சிகள் தெளிவாக என்னை நோக்கி வந்தன.

 

ஆம். மற்றபடி நானும் அவரும் பேசிக்கொண்டதற்கு என்னதான் அர்த்தம்? மனிதஉறவுகளைப்ப்பற்றி எவர் அத்தனை திடமாக பேசிக்கொள்ள முடியும்? நான் என்னைப்பற்றியே எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது, இதில் ஒட்டுமொத்தப் பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள். அதை கோட்பாடாக ஆக்கி சரியான சொற்றொடர்களைக் கண்டுபிடித்து முன்வைத்து விவாதித்து…. அபத்தம். முட்டாள் சொற்கள் இல்லாமையின் இருளில் இருக்கிறான் என்றால் அறிவுஜீவிகள் சொற்களின் இருளில் இருக்கிறார்கள்.அருமையான சொற்றொடர், எழுதி வைத்துக்கொண்டால் எங்கேனும் மேற்கோள் காட்ட உதவும்.

புன்னகையுடன் காரை வேகம் குறைத்தேன். நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிளை இடப்பக்கமாக திரும்பியது. அதில் என் காரைத் திருப்பிய பின்னர்தான் ஏன் என்று ஆச்சரியத்துடன் எண்ணினேன். என் கைகள் மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்குவது போல. சில நிமிடங்களுக்குப் பின்னர் அது ஆசிரமம் செல்லும் பாதை என்று கண்டுகொண்டேன். கார் சென்றபடியே இருக்க நான் என் ஆழ்மனம் தன்னிச்சையாகவே முடிவெடுத்ததை எண்ணி வியந்து செயலிழந்திருந்தேன். பின்பு பிரேக்கை மிதித்து காரை நிறுத்தினேன்.

பல்லைக்கடித்தபடி காரைத்திருப்பி நேர் எதிர்த்திசையில் ஓட்ட ஆரம்பித்தேன்.  கார் நெடுந்தூரம் செல்வது வரை யாருக்கு எதிராகவோ வீம்பாக இருப்பதுபோல இறுக்கமாகவே அமர்ந்திருந்தேன். பின்பு மெதுவாக இலகுவானேன். சீட்டியடிக்க ஆரம்பித்ததும் அந்த ஒலியாலேயே உற்சாகமானேன். புன்னகை செய்தபடி என்ன நடக்கிறது என்று நினைத்தேன். இது ஒரு போதையடிமைத்தனம் போல் இருக்கிறது. அவர்கள் அவர்களை அறியாமலேயே மதுக்கடைக்குச் சென்று விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  எந்த ஒரு விஷயத்திற்கும் அடிமையாக ஆவதற்கான தயார் நிலையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது மனித மனமும் உடலும். எதையும் சில நாட்களுக்குள் ஏற்றுக்கொண்டு அதை இயல்பாக ஆக்கிக்கொண்டு…

நான் என் கண்களைப் பழக்க வேண்டும். ஆனால் அதிகம்போனால் இரண்டே  நாட்கள்தான் அதற்கு தேவை. அதன் பின்பு எனக்கு இரவு மீண்டும் தடித்துவிடும். அதற்குள் நான் காணும் எல்லா நுட்பங்களும் மறைந்துவிடும். எல்லாம் பழங்கதையாக, என்னாலேயே நம்பமுடியாத நினைவுகளாக பின்னால் நகர்ந்து சென்றுவிடும். நீலிமா– நான் அந்நினைவை வலுக்கட்டாயமாக ஒதுக்கினேன்.

சாலையோரமாக ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது. அங்கே நிழல்கள் ஆடுவது போல. கார் நெருங்க நெருங்க என்னால் அந்த இடத்தை நன்றாகவே பார்க்க முடிந்தது. காயலுக்குள் விரல் போல நீட்டிக்கொண்டிருந்த  நிலப்பகுதியில் தகரத்தாலான ஒரு சிறிய டீக்கடை. அதில் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கு முற்றத்தில் நின்ற தென்னை மரத்தின் மீது கட்டப்பட்டிருந்தது. அதனருகே பெஞ்சுகளில் பலர் அமர்ந்திருப்பது போலத்தெரிந்தது.

காரை நிறுத்திவிட்டு சற்று நேரம் அங்கேயே நின்றேன். கடை சாலையில் இருந்து பதினைந்தடி ஆழத்தில் இருந்தது. கடையில் இருந்து ஒருவன் எழுந்து ”ஆரா அவிடே? எந்தா?” என்றான். நான் ”ஒந்நும் இல்லை” என்றேன். ”மற்றே தமிழனா… ” என்று ஒரு குரல். பின்பு ”ஆ, வரீன் வரீன்” என்று தோமாவின் குரல் கேட்டது. நான் உள்ளூர ஊகித்திருந்தது சரிதான். ”ஈ வழி இறங்காமோ?” என்றேன். ”அவிடே படி உண்டு” வலப்பக்கம் ஒருவர் மட்டும் இறங்கும் அளவுக்கு படிகள் வெட்டப்பட்டிருந்தன. நான் அதன் வழியாக இறங்கி கடையின் முகப்புக்குச் சென்றேன்.

 

கடைமுகப்பில் தென்னை மரத்தைச் சுற்றி கள்ளிப்பெட்டிகளைக் கொண்டு செய்யப்பட்ட குட்டையான ஏழெட்டு பெஞ்சுகளும் சில டெஸ்குகளும் இருந்தன. அங்கே நான் நினைத்திருந்ததை விட அதிகமான பேர் இருந்தார்கள். பலர் வட்டமான தாமரையிலைகளில் புட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க உள்ளே இருவர் தூக்கிக் கட்டிய லுங்கியுடன் புட்டு சமைத்துக்கொண்டிருந்தார்கள். அடுப்பின் கனல் அளித்த செவ்வெளிச்சம்  அன்றி கடைக்குள் வேறு ஒளியே இல்லை.

தோமா ”என்னா, எவிடே போயி வருந்ந வழி?” என்றார். நான் ”இங்கே, கும்பளங்கி வரைக்கும் போனேன்” ”ஓ, தாமஸ் அச்சனைக் காணானாயிரிக்கும்” என்றார் தோமா. ”அவரை தெரியுமா?” ”பின்னே? அச்சன் நம்முட சொந்தம் ஆளாக்குமே? இங்கே வருவார்.. புட்டு சாப்பிடுங்கோ, சம்பா அரி புட்டாக்கும்” நான் சாப்பிடும் மனநிலையில் இருந்தேன், பசியென எதையும் உணரவில்லை என்றாலும். பெஞ்சில் அமர்ந்து ”சரி” என்றேன்.

”வற்கிச்சாயா ஒரு குற்றி புட்டு, நம்முடே தமிழன் சாரினு…கடலயோ பயறோ?” ”கடலை…நேந்திரம் பழம் உண்டோ?” ”சுட்ட பழமுண்டு” என்றார் வர்க்கிஸ். ”சரி ஒரு சுட்ட பழம்” என்றேன். அந்த நிலநீட்சியைச் சுற்றி ஆழமில்லாத காயல் முழுக்க  அங்கே இருந்தவர்கள் வந்த சிறிய படகுகள் கரையில்   நடப்பட்டிருந்த தறிகளில் கட்டப்பட்டிருந்தன. மாடுகளைக் கட்டிப்போட்டுவிட்டு சாப்பிடுபவர்கள் போலிருந்தார்கள். படகுகள் ஒன்றுடன் ஒன்று மெல்ல உரசிக்கொண்டிருந்தன. காயலின் பாசிவாசனை படர்ந்த காற்று நான்குபக்கமிருந்தும் வீசியது.

”பின்னே, என்னவாக்கும் காரியங்கள்?” என்றார் தோமா. ”சாருக்கு என்ன தொழிலு?” ”நான் மெட்ராஸிலே ஆடிட்டர்” என்றேன். ”மதிராசியிலே தாப்புவலை உண்டுமா?” என்றார் அருகே இருந்த சட்டைபோடாத ஆள். அவர் கடலையை புட்டில் போட்டு இறுக்கமாகப் பிசைந்து வைத்திருந்தார்.

நான் ”அங்க சாதாரணமான போட்டுதான்…” என்றேன் ”அவிடே கடலிலே வெறும் மணலாக்குமே. இவ்விடம் மாதரி பாறைகள் இல்லை. பாறை இருந்தால் செம்மீனும் கல்லுமேக்காயும் கிட்டும்…நான் மதிராசியிலே ஆறுமாசம் இருந்தேன்” என்றார் இன்னொரு ஒல்லியான ஆள். இருட்டுக்குள்  இருந்து முகங்கள் உருவாகி வந்துகொண்டே இருந்தன. இருளுக்குள் சிலைமாதிரி இருக்கும் ஒருமுகம் பேசியதுமே அந்த பாவனை வெளிப்பாடு காரணமாக  மனிதமுகமாக ஆகிவிடுவது போல இருந்தது.

”இங்கஇவ்ளவுபேரு இருக்காங்களா தாப்புவலை போடுறவங்க?” என்றேன். ”இது என்னா சார்? பத்தஞ்ஞூறு பேரு உண்டு. இப்பம் எல்லாரும் கடலுக்குள்ளே இரிப்பாங்க. இங்கே எப்பமுமே நல்ல கூட்டம் உண்டும்” என்றார் தோமா. ஒல்லியான ஆளைக்காட்டி ”இது பெரச்சன். நம்ம ·ப்ரண்டாக்கும்” பெரச்சன் என்னிடம் ”நான் மதிராசியிலே இருந்நேன் சார்” என்றார் மீண்டும். ”என்ன பண்ணினீங்க? நைட் வாட்ச்மேன் ஜோலி. சம்பளம் கொள்ளாம். பட்சே தலையில்  வெள்ளம் விட முடியாது. உப்புவெள்ளம். நமக்கு வெள்ளம் இல்லாதே ஜீவிக்க முடியாது சாரே. அதனாலே நான் திரிச்சு வந்நேன். இவிடே கொள்ளாம். நல்ல சுகமாக்கும்”

”சீசன் எப்ப?” என்றேன். பெரச்சன் ”ரண்டு சீசன் உண்டும். ஏப்ரல் மே ஒரு சீசன். அப்பம் நல்ல செம்மீனும் கொஞ்சும் கிட்டும். பின்ன ஓகஸ்டில் மழைக்காலத்தில் கல்லும்மக்காய் கிட்டும்” என்றார் . தோமா ”கல்லும்மக்காயின்னு சொன்னா சிப்பியாக்கும்” என்றேன். ”தெரியும்…”

வர்கீஸ் ”சார் கட்டன் எடுக்கட்டே?” என்றார். நான் ”கடுப்பம் குறைச்சு” என்றேன். என் கண்கள் அப்போது நன்றாகப் பழகிவிட்டன. அங்கிருந்த அத்தனைபேரையும் பார்த்தேன். இருட்டுக்குள் அமர்ந்து மௌனமாக சாப்பிட்டார்கள். சிலர் பீடியை பிடித்தபடி கண்கள் மின்ன எங்களைக் கவனித்தார்கள்.

கிட்டத்தட்ட ஐம்பதுபேர் இருந்த அந்த இடத்தில் உரையாடல் எங்களுக்குள் மட்டுமே நிகழ்ந்தது. அதுவும் மிகமெல்லிய குரலில் .பிறர் இருப்பதே தெரியாமல் இருந்தார்கள். கேரளத்தில் ஒரு சாதாரணகள்ளுக்கடையில் அந்தப்பகுதிவழியாக காரில்செல்லும்போதே காதில் வந்து அறையும் சத்தம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

”நீங்க இருட்டிலே மலையாள மனொராமா வாசிப்பீங்கன்னு கமலா சொன்னார்” என்றேன். தோமா ”ஆரு, தம்ப்ராட்டியா?” என்றார். ”ஆமா” ”அது என்னா சாரே? மத்தவங்க வெளிச்சத்திலே வாசிக்கிறது மாதிரித்தான் இதுவும்” என்றார் பெரச்சன். ”மனசுக்கு ஒரு வெளிச்சம் இருக்குமே அதுமாதிரி பூமிக்கும் கடலுக்கும் ஒரு வெளிச்சம் உண்டு சாரே. அந்த வெளிச்சம் மதி. அதுக்குமேலே வெளிச்சம் இருந்தா வெளிச்சத்தை தடுக்க குடை பிடிக்கணும்….” நான் அவரைப் பார்த்தேன். பெரிய முறுக்கு மீசை. எலும்போடிய உடலில் நரம்புகள் இழுத்துக்கட்டப்பட்டவை போல் இருந்தன.

சிலர் பணம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்.”யாருமே பேசக்காணலியே” என்றேன். ”அது இந்தத் தொழிலுக்க ரீதியாக்கும். ஓரோருத்தனும் ஒற்றைக்காக்கும் போயி நிந்நு மீன்பிடிக்கிறது. ஒற்றைக்கு நிந்நு நிந்நு பின்னெ பேச்சு இல்லாமல் ஆகும். ஆரம்பத்திலே நாம நமக்குநாமே பேசிட்டே இரிக்கும். சிலர் பாட்டு பாடும். சிலர் கதை சொல்லும். பின்ன அப்டியே பேச்சு போயிடும். கெட்டியவள் கேட்டாக்கூட ம்ம்ம்ந்நு ஒரு மூளல் மதி. பேச்சு மனசுக்குள்ள தாழ்ந்நு போகும். பின்னே ரண்டுபேர் சேர்ந்நு போயாலும் பேச்சு உண்டாவில்ல…” என்றார் தோமா.

”இப்ப நீங்க பேசறீங்களே” தோமா ” கரைக்கு வந்நால் குறே பேசும். கடலுக்குள்ளில் போயால் பின்னே வாக்கில்ல”. ”ஏன்?” என்றேன். ”பேச்சு ஆவிசியம் இல்லை சாரே. மனுஷன்மார் சும்மா பேசுந்நார். கோழிக்குஞ்சு கண்டிட்டுண்டா? குஞ்சுகோழி கியா கியான்னு ராப்பகலா பேசிட்டிருக்கும். கோழி மூத்தா பேச்சு  நிந்நு போகும்….” தோமா எழுந்து ”அப்பம் காணாம் சாரே” என்றார்.

பெரச்சன் ஒரு பீடியைப் பற்ற வைத்தார். நான் ”இப்ப எங்க போறீங்க?” என்றேன். ”ஒந்நாம் கடலுக்கு சாரே. வருந்நோ?” நான் உடனே அந்த எண்ணத்தை அடைந்து ”வரேன்” என்றார். ”உடுப்பெல்லாம் நனையும். ரூபாயும் மற்ற கடலாசுகளும் ஒந்நும் இரிக்கருது” என்றார் . நான் ”அதெல்லாம் பத்திரமா இருக்கு” என்றேன். ”எந்நால் கேறிக்கோ” என்றபடி இருவரும் படகை நோக்கிச் சென்றார்கள்.

படகு என்று அவற்றைச் சொல்வது சற்று அதிகம். நீளமான பிளாஸ்டிக் டப்பாக்கள். இளமஞ்சள் நிறம் பூசப்பட்டவை.  நான் பெரச்சனுடன் ஏறிக்கொண்டேன். கால்வைத்தபோது அது முரண்டுபிடிக்கும் குதிரைக்குட்டி மாதிரி ஆடி சற்றே  விலக முற்பட்டது. பெரச்சன் என் தோளைப்பற்றிக்கொண்டார். நான் நடுவே சப்பணமிட்டு அமர்ந்தேன். அவர் அதன் முகமுனையில் ஒரு காகம்போல குந்தி  அமர்ந்தார். துடுப்பினால் ஒரு உந்து உந்துவதற்குள் படகு காயலில் வெகுதூரம் சென்றது. கரையில் அந்த டீக்கடை ஒரு திரைச்சீலை போல நெளிந்தபடி பின்னால் சென்றது.

சிலநிமிடங்களுக்குள் நாங்கள் காயலுக்குள் இருந்தோம். பெரச்சன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். ”பெரெச்சன் வெள்ளமடிக்குமோ” என்று கேட்டேன். ”இடைக்கு…எனக்கு அதில் வலிய இஷ்டமில்லை” என்றார். ”ராத்திரியிலே வாழுறவங்க நல்லா அடிச்சு பூஸ் ஆவீங்கன்னு நெனைச்சேன்” ”பூஸ் ஆயால் ஜோலி நடக்காது சாரே. தாப்புவலை இடுந்ந ஆரும் ராத்திரி குடிக்க மாட்டார். காலத்து குடிச்சிட்டு கிடக்குந்நவர் உண்டு…” நான் அவரது நெளியும் நரம்புகளையே பார்த்தேன். ”பெரச்சனு எத்ர வாசாயி?” ”எழுபது கழிஞ்š” நான் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். நான் ஐம்பது மதிப்பிட்டிருந்தேன்.

கடலும் காயலும் சந்திக்கும் நீர்வேலியை கண்ணாலேயே காணமுடிந்தது. கடல்நீர் இன்னமும் இருண்டு அழுத்தமாக இருப்பதுபோல தெரிந்தது. படகுகள் கடலை அஞ்சி தயங்கியவை போல அலைகளில் தத்தி தத்தி அங்கேயே நின்றன. பெரச்சன் படகை பக்கவாட்டுக்கு திருப்பி துடும்பை பலமாக உந்தி ,ஒரு மதிலை கையூன்றி ஏறி குதிப்பதுபோலவே நீரின் அந்த வேலியை படகைக் கொண்டு எம்பித்தாண்டினார். மறுபக்கம் சென்றதும் படகின் ஆட்டம் மாறுபடுவதை உணர்ந்தேன். அதுவரை அது தத்தி தத்திச் சென்றது, இப்போது ஊசலில் ஆட ஆரம்பித்தது.

நான் ”இந்த கடலிலே..” என்றேன். பெரெச்சன் வாயில் கை வைத்து பேசாதே என்றார். நான் பேச்சைநிறுத்திக்கொண்டு திரும்பி தோமா பார்த்தேன். அவர் எங்களுக்கு நாலடி மேலே இருந்தார். அவரது தோள்களில் நீர் வழிவதைக் கண்டேன். என் தலை சுழலும் உணர்வு ஏற்பட்டது. இப்போது அவர் நாலைந்தடி ஆழத்தில் இருக்க நான் அவரது தலைமயிரைப் பார்த்தேன். சற்று குமட்டுவதுபோலிருந்தது. வாந்தி எடுத்துவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். கால்களை நன்றாக நீட்டினேன். பின்பு தலையையும் சாய்த்தேன்.

மெல்ல ஆடியபடி வானம் தலைக்குமேலே படர்ந்திருந்தது. கருமையில் விபூதியால் தீற்றப்பட்டது போல மெல்லிய பிறைநிலவு. இன்னும் ஓரிரு நாட்களில் அமாவாசை வந்துவிடும். காற்று நீர்த்துளிகளை அள்ளி படகில் வீசியது. என் உடலும் உடைகளும் நன்றாக நனைந்து விட்டன. ஆனால் காற்றில் படபடத்து நீர்த்துளிகளை உதறிக்கொண்டே இருந்தது சட்டை. பாண்ட் மட்டும் தொடைகளை ஈரமாகக் கவ்வியது.

நட்சத்திரங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நட்சத்திரமாக பார்வையால் தொட்டுத் தொட்டுச் சென்று ஒரு கணத்தில் பிரமித்து ஒட்டுமொத்த நட்சத்திரவெளியையும் பார்த்து சில கணங்கள் அதில் இருந்தபின் கலைந்து மீண்டும் ஒவ்வொரு நட்சத்திரமாகப் பார்க்கும் சுழற்சி. மீண்டும் மீண்டும். என்னென்ன எண்ணங்கள். கடற்பாசி போல ஒன்றுடன் ஒன்று தொடாமல் அலைகளில் ஆடும் தனிநினைவுகள். இளமைப்பருவம். பயணங்கள். சம்பந்தமில்லா முகங்கள். சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள். எல்லா எண்ணங்களும் சொற்களாக இருந்தன. அப்படியானால் எல்லாவற்றையும் சொற்களாகத்தான் மாற்றிக்கொண்டிருக்கிறேனா? சொற்களை மட்டும்தான் திருப்பி எடுக்க முடியுமா?

இது என்ன  அசட்டு மூளையோட்டல் என்று சலித்தேன். ஏன் இத்தனை நினைப்புகள். ஏன் ஓயாமல் மனதை போட்டு சலித்துக்கொண்டே இருக்கிறேன்? எழுந்து அமர்ந்து கடலைப்பார்த்தேன். அலைகள் அதிகம் இல்லை. அப்போது பார்க்க பெரும் பிசின்பரப்பு போல தோன்றியது. அலைகளின் வளைவுகளில் மட்டும் அக ஒளி. கண் மட்டுமே அறியும் ஒளியுடன் இருந்தது கடல்பரப்பு. கையை தூக்கிப்பார்த்தால் கைக்குப்பின் கடல்தான் தெரிந்தது.  வானத்தின் ஒளியை கடல் பிரதிபலிக்கிறதா இல்லை கடலின் ஒளியை வானம் பிரதிபலிக்கிறதா? எங்கிருந்து வரும் ஒளி இது? பகலில் சூரியனிடமிருந்து பெற்ற ஒளியின் சேமிப்பா? இல்லை, அந்த ஒளியைப்பற்றிய நினைவு மட்டும்தான் இது.

அவர்கள் இருவரும் எந்தவிதமான தொடர்புறுத்தலும் இல்லாமல்  முற்றிலும் மௌனமாக இணைந்து வேலைசெய்தார்கள். கடலுக்குள் ஏற்கனவே வலையை போட்டிருந்தார்கள் போல. அதை ஒன்றுடன் ஒன்று கயிறால் இணைத்தார்கள். பெரச்சனின் முகத்தைப் பார்த்தால் அவருக்குள் எந்தச் சொற்களும் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அச்செயல் அன்றி எதுவுமே அவரிடமிருக்கவில்லை என்று பட்டது. இயல்பாக வேலைசெய்யும் கைகள்,  கூடுகட்டும் தூக்கணாம்குருவியின் அலகுபோன்றவை.

விண்மீன்கள், அலைகள். மீண்டும் விண்மீன்கள் அலைகள். மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த கண்கள் பின்னர் பிரக்ஞையில் இருந்து விடுபட்டன. நான் வேறெங்கோ இருந்தேன். இளமையில் தனிமையில். மீண்டு வந்து பார்த்தபோது கடலும் வானமும் காலமில்லாமல் ஆடிக்கொண்டே இருந்தன. என்ன ஒரு தனிமை. எதைப்பற்றி நினைக்கிறேன் அப்படி? ஆனால் அந்தச் சொல்லே மனதில் மீண்டும் வந்தது. எத்தனை பெரிய தனிமை. அதிலேயே நெடுநேரம் சென்றுகொண்டிருந்தேன்.

வலைகளை அவர்கள் இணைத்து முடிக்க நெடுநேரமாகியது. பெரச்சன் தோமாவிடமிருந்து விலகிச் சென்றார். கடலுக்குள் நாங்கள் செல்வது போல தெரியவில்லை. கடல் எங்களை மெல்லிய சரடொன்றால் உள்ளுக்கு இழுத்துக்கொள்வது போல் இருந்தது. கரையின் எல்லா ஒளிகளும் முழுமையாக மறைய சுற்றிலும் நீர் மட்டுமே தெரிந்தது. பெரெச்சன் படகின் நுனியில் துடுப்பை மடிமீது வைத்துக்கொண்டு  அமர்ந்தார். நான் அவர் ஏதோ பேசப்போகிறார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் நானிருப்பதையே அறியாதவராக இருந்தார்.

கடலின் ஒளி அதிகரித்து வருவதாக தோன்றியது. கடல் ஒரு மாபெரும் நீலத்திரைச்சீலையாக அதற்கு அப்பால் யாரோ விளக்கேற்றுவது போல. சற்று நேரத்தில் என்னால் கடலின் நுரைகளை மிதக்கும் சிறிய கடற்குப்பைகளைக்கூட பார்க்க முடிந்தது. வானில் நட்சத்திரங்கள் மிகப்பெரிதாக தெரிந்தன. மின்னி மின்னி அவை வளர்ந்தன. உதிர்ந்து விழுந்துவிடுபவை போல வானில் இருந்து தனித்து பிரிந்தன. ஆரஞ்சுப்பழம் அளவுக்குப் பெரிய ஒரு கோள் வான் சரிவில் தொங்கி நின்றது.

அப்படியே நேரம் சென்று கொண்டிருந்தது. எதற்காக காத்திருக்கிறார் பெரெச்சன். இவர்களின் தொழிலும், உத்திகளும் எனக்குப் புரியப்போவதில்லை. ஆனால் எப்படி இப்படி முற்றிலும் அமைதியாக முற்றிலும் செயலற்று அமர்ந்திருக்க முடிகிறது? தலைக்குள் ஓடும் மூளையை என்ன செய்வார்? ஆனால் இது மனிதனின் பிரச்சினை மட்டும் தானே? பூனைகள் நாளெல்லாம் சிலைபோல காத்திருக்கின்றன. நாய்கள் கல்லித்து அமர்ந்துவிடுகின்றன. மாடுகள் பூரணமான தியானநிலையை அடைகின்றன. ஆனால் இது தியானநிலையா? இது ஒரு மனப்பழக்கம் மட்டும்தானே?

நிமிடங்கள் மேலும் நிமிடங்கள். ஒருமணிநேரம் ஆகியிருக்குமா? இல்லை, மேலும் ஆகியிருக்கும். என் முன் படகு நுனியில் ஒரு கல்லை எடைக்கு வைத்ததுபோல் அவர் அமந்திருந்தார். அவருக்குப்பின்னால் கடலின் திரவஒளி. கண்கள் மட்டும் இரு திரவ ஒளிப்புள்ளிகள். அப்படியே சென்றுகொண்டிருந்தது காலம். காலம் என்பது மரங்களால் கட்டிடங்களால் சாலைகளால் ஆனது. இங்கே காலம் கீழே விழுந்த திரவம்போல பரவிப்பரந்து விட்டிருக்கிறது.

விடிய விடிய இப்படியே கடல் மீது நின்றிருக்க வேண்டுமா என்ன? என்னால் தாங்கமுடியாது, மனம் பித்தாகிவிடும். இப்போதே காலம் என் பிரக்ஞையை அழுத்திக் கனக்க ஆரம்பித்துவிட்டது. கணம்தோறும் எடை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதோ வெறியுடன் கைவீசி எதையோ கத்தப்போகிறேன். அல்லது மார்பில் அறைந்து அழப்போகிறேன். திருப்பு, திருப்பு, கரைக்குப்போ, கரைக்குப்போ. ஆனால் அந்தக்குரல் எனக்குள்ளே மட்டும்தான் ஒலித்தது. அந்தக்குரலை நான் பேசினாலும் அவருக்குத் தெரியவைத்துவிடமுடியாது. அவர் எங்கோ இருந்தார். அவருக்கு எனக்குமான எல்லா தொடர்புகளும் அறுந்துவிட்டன.

ஒருவகையான தன்னிரக்கம் வந்து மனம் இரங்கி கண்ணீர் துளிர்க்குமளவுக்கு நான் நெகிழ்ந்தேன். ஆனால் எதைப்பற்றி அந்த நெகிழ்ச்சி என்று மறுகணமே எண்ணியதும் புன்னகை புரிந்தேன். என் மனம் நிலையழிகிறது. பித்துநிலை நோக்கிச் செல்கிறது. நான் திரும்பி வரவே முடியாத ஒரு ஆழம் நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறேன். திரும்பு திரும்பிவிடு….திரும்பு.. ஆனால் சில கணங்களில் அந்த ஆவேசக்கூக்குரல் வெறுமொரு அகஒலியாக ஆகி தாளமாக மாறி மூச்சுடன் கலந்து மறைந்தது. எத்தனை பெரிய விண்மீன்கள். இவற்றை நான் ஏன் இதுவரை பார்க்கவில்லை!

நான் அலையொன்றால் அடிக்கப்பட்டு விழித்தெழுந்தேன். எழுந்து அமர்ந்தேன். முழுமையான விழிப்பில் முற்றிலும் நான் இல்லாமல் இருந்திருக்கிறேன். என் அகம் உதைபட்டதுபோல திடுக்கிட்டது. பெரெச்சன் ”போவாம்… வேலியேற்றம் துடங்ஙி” என்றார். கடலில் இருந்து பெரிய அலைகள் கரை நோக்கி யானைப்படைகள் போல திரண்டு வரிசையாக சென்று கொண்டிருந்தன. இந்த நீர் ஏற்றத்தில்தான் கடலில் இருந்து மீன்கள் காயலுக்குள் வரும் போலும்.

அலைகளில் ஏறி கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். துடுப்புபோடவெண்டிய தேவையே இருக்கவில்லை. அலைகளுக்குள் நடுவே நீர் வளைவில் நான் கண்ணாடிக்குள் குமிழிகள் போல மீன்களைப் பார்த்தேன். கரையின் விளக்கு வரிசைகள் ஒரு செம்மணிச்சரம்போல தெரிந்தன. பின்பு ஒரு காரின் முக விளக்கொளியைக் கண்டேன். கடைசியாக என்ன நினைத்தேன்? விண்மீன்கள். ஆம், அவை அப்போதும் மிகப்பெரிதாக இருந்தன. ஆனால் அவற்றின் மீதான ஆச்சரியம் என்னுள் இருந்து அகன்றிருந்தது. கடலும் வானமும் அளித்த பிரமிப்பு முற்றாக விலகிவிட்டிருந்தது. நான் அவற்றுக்குச் சமானமாக இருந்தேன்.

கரையை அடைந்ததும் நான் இறங்கிக்கொண்டேன். ஒரு கணம் பெரெச்சனை நோக்கி புன்னகை செய்துவிட்டு டீக்கடை முன் ஏறி படிகளில் ஏறி என் காரை அடைந்தேன். கதவைத்திறந்து உள்ளே அமர்ந்து மெல்ல அதை கிளப்பி சாலை வழியாக மிதந்து சென்றேன். பிளாஸ்டிக் குழாயின் நீரோட்டம் வழியாகச் செல்லும் குமிழி போல, அத்தனை எளிதாக, மௌனமாக.

[மேலும்]

முந்தைய கட்டுரைமலை ஆசியா – 4
அடுத்த கட்டுரையோகம்,ஞானம்