அன்புள்ள ஜெ
ஏன் சார் ? அருமையான அங்கதக் கட்டுரை. ஆடனின் ஒரு புகழ்பெற்ற கட்டுரையை நினைவுறுத்தியது. அதை இணைத்துள்ளேன்
டேவிட் ராஜேஷ்
அறியப்படாத குடிமகன்
மூலம் The Unknown Citizen- கீழே
டபிள்யூ எச் ஆடன்
(JS/07 M 378 என்பவருக்காக
இந்த பளிங்கு நினைவுச்சின்னம்
அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது)
அவர் எந்த அலுவல்சார்ந்த புகாரும் பதிவு செய்யப்படாத ஒருவர் என
புள்ளியியல்துறை உறுதிசெய்தது
அவரது செயல்பாடுகள் குறித்த அனைத்து அறிக்கைகளும்
முற்றிலும் ஒத்துப்போகின்றன
ஒரு பழமையான வார்த்தையின் புதிய அர்த்தத்தில் அவர் ஒரு புனிதர்.
ஏனெனில் அவர் செய்த எல்லாவற்றிலும்
மேலான சமூகத்திற்கே சேவை செய்தார்.
அவர் ஓய்வில்செல்லும்வரைக்கும்,
போர்க்காலங்கள் தவிர்த்த நாட்களில்,
ஒரு ஆலையில் வேலை செய்தார்,
ஒருபோதும் வேலைநீக்கம் செய்யப்படவில்லை.
அவர் தன் முதலாளி, ஃபட்ஜ் மோட்டார் இன்க் அமைப்புக்கு
திருப்தியளிப்பவராயிருந்தார்
ஆயினும் அவர் தொழிலாளி வர்கத்தின் துரோகியோ
அல்லது கோணலான கருத்துக்களையுடையவரோ அல்லர்
ஏனென்றால் தொழிற்சங்க அறிக்கையின்படி அவர்
எல்லா கட்டணங்களையும் செலுத்திவிட்டார்
(‘சங்கத்தில் அவர் சங்கமம் பலமாயிருந்தது’)
மேலும் எங்களது சமூக உளவியலாளர்கள்
அவர் தன் நண்பர்களிடையே பிரபலமானவர் என்றும்
மிதமாகக் குடிப்பதை விரும்பினார் என்றும் கண்டறிந்துள்ளனர்
அவர் தினமும் ஒரு செய்தித்தாளை வாங்கினார் என்றும்
விளம்பரங்கள் மீதான அவரது எதிர்வினை
எல்லாவகையிலும் இயல்பானதாய் இருந்தது என்றும்
ஊடகங்கள் திண்ணமாக நம்புகின்றன.
அவர் பெயரிலிருந்த காப்பீட்டு பத்திரங்களின்படி
அவர் முழுமையாக காப்பீடு செய்யப்பட்டிருந்தார்.
ஒருமுறை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்,
குணமான பின்பே வெளியில் வந்தார் என்பதை
அவரது மருத்துவ அட்டை காண்பிக்கிறது.
அவர் தவணை திட்டத்தின் நன்மைகளை குறித்து முழுமையாக அறிந்திருந்தார்
மேலும் நவீன மனிதனுக்குத் இன்றியமையாத
அனைத்தையும் வைத்திருந்தார் என்று
‘புரடியூசர்ஸ் ரிசர்ச்’ மற்றும் ‘ஹை கிரேட் லிவிங்’*
இரண்டுமே அறிவிக்கின்றன
ஓர் ஒலிப்பெருக்கி, ஒரு வானொலி, ஒரு மகிழுந்து, ஒரு குளிர்பதனி.
அவர் காலத்துக்கு ஏற்ற கருத்தை உடையவராக இருந்தார் என
கருத்துக்கணிப்பெடுப்பவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
அமைதிகாலத்தில் அமைதிக்கு ஆதரவாயிருந்தார்.
போர்க்காலத்தில் கிளம்பிச் சென்றார்.
திருமணமாகியவர், மக்கள்தொகையில் ஐந்து குழந்தைகளை கூட்டியுள்ளார்.
இது எங்கள் யூஜெனிஸ்டின்** கூற்றுப்படி
அவர் தலைமுறை பெற்றோருக்கு சரியான எண்ணிக்கையாகும்
எமது ஆசிரியர்களின் அறிக்கையின்படி
அவர் அவர்களது கல்வியில் எந்தக் குறுக்கீடும் செய்யவில்லை.
அவர் சுதந்திரமானவரா? அவர் மகிழ்ச்சியாயிருந்தாரா?
இந்தக் கேள்வி அபத்தமானது
ஏதாவது தப்பாக இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் கேள்விப்பட்டிருப்போம்.
[தமிழில் சிறில் அலெக்ஸ்]
* கன்ஸ்யூமர் ரெப்போர்ட் மற்றும் குட் ஹவுஸ்கீப்பிங் போன்ற இதழ்களை குறிப்பிடலாம்
**யூஜெனிஸ்ட் – குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே சில மாற்றங்களை செய்வதன் மூலம் (குறிப்பாக மரபணு மாற்றம்) நல்ல குழந்தைகளைப் பெற முடியும் என நம்பியவர்கள்.
*
அன்புள்ள டேவிட் ராஜேஷ்,
சாமானிய மனிதர்கள் என்ற ஒன்றை படிப்படியாகத் திரட்டி எடுத்ததுதான் இதுவரையிலான மானுட சரித்திரத்தின் சாதனையோ என்று தோன்றிவிடும் சமயங்களில்.
இப்போது போர்கள் இல்லை. பஞ்சங்கள் இல்லை. மதம், கடவுள் எல்லாமே பெரிதாக ஒன்றும் செய்யாமல் ஆகிவிட்டன. ஆகவே காற்றே வீசாத இடத்தில் முடிவிலி வரை அசையாமல் நின்றுகொண்டிருக்கும் பாலிதீன் குப்பை போல வாழ்ந்துவிடமுடிகிறது. ஒன்றுமே நடக்காமல் ஒரு முழு வாழ்க்கையும்
அந்த வாழ்க்கைக்கான களம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. விதிகள் எழுதி அச்சடித்துத் தரப்பட்டிருக்கின்றன. ஒழுங்காக இருந்தால் அதற்கான கூலியும் உண்டு. அப்புறமென்ன?
இந்த நடுத்தர வர்க்கத்தின் ‘இன்மையை’ மெல்லிய அங்கதத்துடன் எழுதியவர் அசோகமித்திரன். கூரிய எள்ளலுடன் எழுதியவர் ஞானக்கூத்தன். அசோகமித்திரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் ஞானக்கூத்தனே இதைச் சொல்லியிருந்ததை நினைவுறுகிறேன்
>
ஞானக்கூத்தனின் ஒரு கவிதை
இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.
தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.
ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.
உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?
*
தண்ணீர்த்தொட்டிக் கடலில் வேளாவேளைக்கு தேடிவரும் உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பவர் ஆடனின் அறியப்படாத மனிதன். அந்த கண்ணாடித் தடுப்பு மட்டும் அவ்வப்போது தடுத்து தொந்தரவு செய்யாவிட்டால் என்ன குறை?
ஜெ
The Unknown Citizen
W. H. Auden, 1907 – 1973
(To JS/07 M 378
This Marble Monument
Is Erected by the State)
He was found by the Bureau of Statistics to be
One against whom there was no official complaint,
And all the reports on his conduct agree
That, in the modern sense of an old-fashioned word, he was a
saint,
For in everything he did he served the Greater Community.
Except for the War till the day he retired
He worked in a factory and never got fired,
But satisfied his employers, Fudge Motors Inc.
Yet he wasn’t a scab or odd in his views,
For his Union reports that he paid his dues,
(Our report on his Union shows it was sound)
And our Social Psychology workers found
That he was popular with his mates and liked a drink.
The Press are convinced that he bought a paper every day
And that his reactions to advertisements were normal in every way.
Policies taken out in his name prove that he was fully insured,
And his Health-card shows he was once in hospital but left it cured.
Both Producers Research and High-Grade Living declare
He was fully sensible to the advantages of the Instalment Plan
And had everything necessary to the Modern Man,
A phonograph, a radio, a car and a frigidaire.
Our researchers into Public Opinion are content
That he held the proper opinions for the time of year;
When there was peace, he was for peace: when there was war, he went.
He was married and added five children to the population,
Which our Eugenist says was the right number for a parent of his
generation.
And our teachers report that he never interfered with their
education.
Was he free? Was he happy? The question is absurd:
Had anything been wrong, we should certainly have heard.