மலை ஆசியா – 4

ஜனவரி  இருபத்தொன்பதாம்தேதி  காலை மலேசியாவின் தலைநகரத்தைப் பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பினோம். கொலாலம்பூர்தான் மலேசியாவின் தலைநகரமாக நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. மலேசியாவின் வணிகத்தலைநகரமும் அதுதான். ஆனால் காலப்போக்கில் அது நெருக்கடியான நகரமாக ஆனபோது எண்பதுகளின் மலேசியப்பிரதமர் மகாதிர் மொகம்மது நிர்வாக அலுவலகங்கள் அனைத்தையும் அருகே  உருவாக்கப்பட்ட புதிய தலைநகரத்திற்கு மாற்றினார். அதன்பெயர் புத்ரஜெயா.

புத்ரஜெயா மலேசியாவின் செலாங்கோர் மாகாணத்தில் உள்ளது. அந்த மாகாணநிர்வாகத்தில் இருந்து தலைநகர உருவாக்கத்திற்காகப் பெறப்பட்ட 12000 ஏக்கர் நிலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிர்வாகத்தலைநகரம் இது. இந்நகரத்தின் 38 சதவீத நிலம் பசுமைக்காக ஒதுக்கப்பட்டிருப்பதனால் காடு சூழந்த உயரமற்ற குன்றுகள் நடுவே அரண்மனைகளின் தொகுதியாக அமைந்திருக்கிறது இது.

 

காரில் அந்நகரத்திற்குள் நுழையும்போது மதியவெயில் ஏறிவிட்டிருந்தது. இறங்கி ஒளியை பிரதிபலித்த பெரும் கட்டிடங்களைப் பார்த்தபோது கண்கள் கூசின. சீனச் சுற்றுலாப்பயணிகள் எல்லா சொற்றொடருக்கு பின்னாலும் ஹா ஹா என்ற ஒலியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் விளிம்பில்லாத கண்ணாடி போட்டு ரத்தச்சிவப்பு நிறமான உடைகள் அணிந்திருந்தார்கள்.

எனக்கு அத்தனை பசுமையையும் மீறி அது ஏதோ பாலைவனநகரம் என்ற பிரமை எழுந்தது. கொஞ்சம் பிந்தித்தான் அது ஏன் என்று புரிந்தது. பெரும்பாலான கட்டிடங்களில் இஸ்லாமியக் கட்டிடக்கலையின் அம்சங்கள் ஊடுருவியிருந்தன. பெரிய கும்மட்டங்கள், உருளைத்தூண்கள், சலவைக்கல் வராந்தாக்கள்.

காரிலேயே அந்நகரத்தைச் சுற்றிவந்தோம். செயற்கைநீர் நிலைசூழ அமைந்திருந்த புத்ரா மசூதி நவீனக் கட்டிடக்கலையும் பாரம்பரிய இஸ்லாமியக் கட்டிடக்கலையும் இணைவதன் அழகிய உதாரணம். பெரும்பாலான கட்டிடங்கள் மசூதிகள் போலத்தான் எனக்குத்தோன்றின. மசூதிகளுடன் நம் மனம் வாங்கு விளியையும் இணைத்துக்கொண்டிருப்பதனால் அந்தக் கட்டிடங்கள் அனைத்துமே அல்லாவே பெரியவன் என்று அறைகூவுவது போல தோன்றின.

புத்ரஜெயாவின் பணிகள் இன்னமும் முடியவில்லை என்றார்கள். நடுவே வந்த பொருளாதார மந்தநிலையால் கொஞ்சம் சிக்கல்கள் உருவாயினவாம். அகலமான சாலைகள், நன்றாக பராபமரிக்கப்பட்ட சாலையோர பூங்காக்கள், சுத்தத்தின் பளீரிடல். மலேசியா தன்னை முதல் உலக நாடாக எண்ணிக்கொண்டு முயல்வதன் கண்கூடான உதாரணம் அந்நகரம். அத்தகைய ஒரு பகுதி இந்தியாவில் எங்கும் இல்லை. இந்தியாவின் இதயமான டெல்லி ராஷ்டிரபதிபவன் அருகிலேயே குப்பைகள் குவிந்திருக்கும்.

 

நகரவளர்ச்சித்துறை அலுவலகம் சென்று அமைச்சர் டத்தோ சரவணனைப் பார்த்தோம். இங்கே இன்னமும் பரபரப்பாக இருந்தார். ‘இன்று விடுமுறை நாள் ,ஆனாலும் வருகையாளர்களை தவிர்க்க முடியாது’ என்றார். அவரது அறையில் சற்று நேரம் இருந்தபோது வந்து கொண்டே இருந்தவர்கள் நடுவே சில சொற்கள் மட்டும் பேசினார். முந்தையநாள் மலேசிய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் அவரை அவரது அரசியல் வழிகாட்டியான டத்தோசிரி சாமிவேலு கண்டித்ததாக நாளிதழில் செய்திகள் வந்திருந்தன. செய்திகளை ஒவ்வொண்ராக வாசித்து சிரித்தபடி போட்டார்.

‘உண்மையிலேயே  கண்டித்தாரா?’ என்று சந்திரமௌலி கேட்டார். ‘அதை கண்டிப்பு என்று சொல்லக்கூடாது, வழிகாட்டல் என்று சொல்லவேண்டும். அவருக்கு அதற்கான உரிமை இருக்கிறது’ என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாளிதழ்ச்செய்தி கடுமையான மொழியில் இருந்தது. ‘இதை எழுதியவர் எனக்கு நண்பர்தான். நாளை அறிமுகம் செய்து வைக்கிறேன்  இங்கே இதெல்லாம் சகஜம்’ என்றார்

அங்கிருந்து கிளம்பி சைவ உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தோம். நாஞ்சில்நாடன் கன்றைப்பிரிந்த தாய்போலஅறைக்குள் சென்று தன் சூட்கேஸை எடுத்து உச்சி முகர்ந்து பிரித்து விலாவரியாக அடுக்க ஆரம்பித்தார். நான் அப்படியே கட்டிலில் படுத்தேன். தொலைக்காட்சியை போட்டேன். மலேசியத்தொலைக்காட்சி போல சலிப்பூட்டும் எதுவுமே இல்லை என்று பட்டது. திரும்பத் திரும்ப மலாய்க்குடும்பங்களின் சில்லறை நகைச்சுவைகள்.  அங்கே நாற்காலி விலகியிருந்தால்கூட சிரிக்கிறார்கள். ஏதாவது குறியிட்டு அர்த்தம் உண்டோ என்னவோ.  விட்டால் பொருளாதாரச் செய்திகள். இல்லையேல் கார் விரைவுகள்.

மாலை குளித்து தயாராகி பத்துமலைக்குச் சென்றோம். நான் சென்றமுறை மலேசியாவந்தபோது பத்துகுகைகளுக்குச் சென்றிருந்தேன். அன்று என் மனப்பதிவு கொஞ்சம் எதிர்மறையானதாகவே இருந்தது. அந்தக் குகைகள் ஒரு மாபெரும் இயற்கை அற்புதம். ஆனால் அதை முருகன் கோயிலாக்கியதன் வழியாக நம் ஆட்கள் அதை மலினப்படுத்தி குப்பைக்குவியலாக ஆக்கியிருந்தார்கள். கொஞ்சம்கூட கலையம்சம் இல்லாத சிமிண்ட் பொம்மைகளை கொண்ட குட்டிக் குட்டிக் கோயில்கள். கடைவீதிகள்.

பத்துமலை என்பது சுண்ணாம்புக்கல்லால் ஆனது. மலையின் மேலிடுக்கு வழியாக உள்ளே புகுந்த மழைநீர் மென்மையான சுண்ணாம்புப்பாறைகளை அரித்துக்கொண்டே இருந்தமையால் மெல்லமெல்ல அவை குகைகளாக உருவெடுத்தன. தமிழில் இவற்றை பிலம் என்றுதான் சொல்லவேண்டும். தாஜ்மகாலின் வாசல்கள் போல மாபெரும் வளைவுகளாக திறந்த குகை வாயில்கள் உள்ளே சில இடங்களில் இருபதாள் உயரமுள்ளவை. மேலிருந்து சுண்ணாம்புப்பாறை நீரில் கரைந்து சொட்டி இறுகி கூம்புகளாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

 

1878லேயே பிரிட்டிஷ் நிலவியலாளர் வில்லியம் ஹோர்னடே பத்துக்குகைகளை பற்றி பதிவுசெய்திருக்கிறார். அங்கே ஓடும் பத்து ஆறு அந்தப்பெயரை மலைகளுக்கு அளித்திருக்கிறது. இந்திய வணிகரான தம்புசாமிப்பிள்ளை என்பவர்தான் அந்த குகையை முருகனின் கோயிலாக ஆக்கியவர். 1891ல் தம்புசாமிப்பிள்ளை அந்த மலையில் முருகன் சிலையை நிறுவி அதை புனிததலமாக்கினார். இன்று மலாயத் தமிழ் மக்களின் தலைமை வழிபாட்டிடமாகவே பத்துமலை உள்ளது.

கிட்டத்தட்ட பழனி தைப்பூசமளவுக்கே கூட்டம். நிற்குமிடம் இந்தியாவா மலேசியாவா என்ற மயக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. சுத்த தமிழ் முகங்கள். விபூதிப்பூச்சுகள். வசீகரமான மொட்டைகள். குலுங்கும் தொப்பைகள். சுடிதார்கள், சுற்றிக்கட்டிய சேலைகள். ஒலிப்பெருக்கிகளில் பத்துமலை முருகனின் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஆச்சரியமாக பல பாடல்களில் கவித்துவம் இருந்தது, தமிழகத்தில் பக்திப்பாடல்கள் சலவை உருப்படிப்பட்டியல் போல ஆகி நெடுங்காலமாகிறது. மரபின் மைந்தன்கூட பத்துமலை முருகன் மீது பாடல்கள் எழுதி ஒரு ஒலிநாடா வந்திருப்பதாகச் சொன்னார்.

தோளோடு தோள் பிதுங்கும் நெரிசல். எங்கும் விளக்கொளி பரவிவிட்டது. நாஞ்சில் பக்தியால் கனிந்துவிட்டார். ‘நமக்கு என்னா? எல்லாம் சாமிதான்’ என்று சொன்னாலுகூட சைவக்கடவுள்கள் மட்டுமே அவரை நெக்குருக வைப்பது வழக்கம். ”எந்த ஊரிலே இருந்து எங்கிண வந்து இவ்ளவு பக்தியா இருக்கானுக…” என்று வியந்துகொண்டே வந்தார்.

பத்துமலை வாசலில் 272 படிகள். அவற்றில் மேலேறும் நீரோட்டம் போல மக்கள் ஒற்றைப்பிரவாகமாக செல்ல மறுபாதியில் அதே போல மக்கள் பெருக்கு கீழே பெய்துகொண்டிருந்தது. படிகளை ஒட்டி அமைந்திருக்கும் முருகனின் கான்கிரீட் சிலை  130 அடி உயரமானது.  கற்சிலைகளுக்கான சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்டதல்ல. கோபுரங்களின் சுதைப்பொம்மைகளின் பாணியில் அமைக்கப்பட்டது.பொன்னிறமான பெயிண்ட் அடித்திருப்பார்கள். அழகான சிலை அல்ல. ஆனால் இரவில் விளக்கொளியில் அது வெண்கலச் சிலையோ என பிரமை எழுப்புவதாக இருந்தது.

கோயிலின் வலப்பக்கமாக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் முகப்புவராந்தாவில் மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் வந்து  உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகாதீர் மொகம்மது அதிபராக இருந்தபோது பிரதமர் பத்து குகைகளுக்கு வரும் வழக்கத்தை நிறுத்தினார். மகாதீர் மொகம்மதுவின் வம்சாவளியின் மூலம் கேரளக்கடற்கரைக்கு வரும். ஆகவே அவர் தன்னை அசலைவிட அசலான மலாய்க்காரராக காட்ட முயன்றவர். மலேசியாவின் இஸ்லாமிய அடையாளத்தை உருவாக்க முயன்றவரும் அவரே.

இன்றைய அரசு மலேசியாவை ஒரு பல்லின-பல்மத குடியராக நீட்டிக்க முயல்கிறது. அதன் ஒருபகுதியாக நீண்ட இடைவெளிக்குப் பின் மலேசியப் பிரதமர் வந்து காவடி விழாவில் பங்குகொள்கிறார் என்றார்கள். கட்டிடத்தில் பெரும் கூடம் நிறைய  விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலாய் தமிழ் அரசியலில் பெரும்புள்ளிகள் பலர் அமர்ந்திருந்தார்கள். டத்தோ சரவணன் மாப்பிள்ளை போல சரிகைவேட்டி வெண்ணிற ஜிப்பா அணிந்து  நின்றிருந்தார்.

 

”முன்னாடியே வந்திட்டீங்களா?” என்று நாஞ்சில் கேட்டார். ”இனிமே தைப்பூசம் முடியற வரைக்கும் இங்கேதான் இருப்பேன்” என்றார் சிரித்துக்கொண்டு. அவரது மனைவிக்கு பூர்வீகம் கேரளம், ஆனால் மலையாளம் சரியாக பேசவராது. தமிழாக மாறிவிட்டவர்கள். அவரது மனைவியையும் மனைவியின் அம்மாவையும் அறிமுகம் செய்துகொண்டேன்.

இரவு பதினொருமணி வாக்கில் பிரதமர் வந்தார். பெரிய பாதுகாப்பு வளையங்கள் ஏதுமில்லை. ஒருசில சீருடைக்காரர்களே காணப்பட்டார்கள். மலேசிய பிரதமர் மலேசியா ஒரு பல இன, பல மத நாடாக இருப்பதில் உறுதிபூண்டிருப்பதாகவும் மலேசிய மண் அங்கே வாழும் அனைவருக்கும் உரியதே என்றும் சொன்னார். எந்த வகையான அடிப்படைவாதத்தையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் எல்லா பண்பாடுகளையும் பேணுவதே மலேசிய அரசின் கொள்கை என்றும் சொன்ன போது பெரும் கைதட்டல் எழுந்தது

கூட்டத்தில் ஒரு சிறு குழுவினர் ஒரு தட்டியுடன் நின்றுகொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சில சுவரொட்டிகளும் கண்ணில் பட்டன. மலேசிய தமிழ்ப்பாடத்திட்டத்தில் இலக்கணம் இலக்கியம் முதலிய பல விஷயங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் பாடங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் சொல்லி எதிர்ப்பு தெரிவித்த தமிழ் நடவடிக்கை குழுவினர் அவர்கள். தமிழகத்தில் தமிழ்ப்பாடம் நடைமுறை தமிழே போதும் என்ற முடிவுக்கு பத்தாண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டதை எண்ணிக்கொண்டேன்.

 

நாங்கள் மக்கள் வெள்ளத்தில் இறங்கி மலை ஏறச்சென்றோம். ஏறும் வழி முழுக்க கைவிடப்பட்ட காலணிகள் கால்களில் மிதிபட்டன. சீனாக்காரர்கள் வெள்ளையர்கள்கூட பிதுங்கி நெருங்கி மலை ஏறினார்கள். சீனாக்காரர்கள் விபூதிப்பூச்சுடன் விரதமிருந்து மலை ஏற வெள்ளையர் காமிராக்களுடன் மலையேறினார்கள். மேலிருந்து பார்த்தபோது எங்கும் மக்கள் தலைகள் கொந்தளிப்பதே தெரிந்தது.

மலேசிய தைப்பூசத்தின் சிறப்பே விதவிதமான காவடிகள். பால்காவடிகள் பன்னீர்க்காவடிகள். பிரம்மாண்டமான தேர் போன்ற காவடிகள் பல இருந்தன. மெல்லிய கம்பியால் செய்யபப்ட்டு தாள் துணி ஆகியவற்றால் பொதியப்பட்டு மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை தனியாட்களாக தூக்கி வந்தார்கள். அலகுகுத்தி வந்தவர்கள், சதையில் குத்தப்பட்ட கொக்கிகளால் தேரிழுத்து வந்தவர்கள். நதிவெள்ளத்தில் மிதப்பவை போல அந்த காவடிகள் சுழன்று தயங்கி நகர்ந்தன. காவடிகள் வாடகைக்குக் கிடைக்கும் என்றார்கள்.

பத்துமலையானை  வணங்கி விபூதி அணிந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.  குப்பைகளை போடாதீர் நம்மைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்று ஒலிப்பெருக்கி மன்றாடிக்கோண்டே இருக்க குப்பைகலை விசிறிக்கொண்டே சென்றனர் பக்தர்கள். அந்த மன்றாடலுக்குப் பதில் பணம் கேட்டிருந்தால் மொத்த மலேசியாவிலும் குப்பையை அள்ளுவதற்கான காசு தேறியிருக்கும். நாம் பாசக்கார சனம்.

 

கீழே வந்து வெளியேறும் வழியில் ஒழுங்கு குலைந்துவிட்டது. வரும் வழியில் ஏராளமானவர்கள் நுழைய மொத்தக்கூட்டமும் பிதுங்கி திணறி நின்றுவிட்டது. கூச்சல்கள் மிதிபடும் கால்கள். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கிய பெற்றோர்களின் பீதி தெரிந்தது.

நாங்கள் தோள்கள் இடுப்புகள் கால்கள் வழியாக வெளியே வந்தோம். பத்துமலை என்னை பிரசவித்து வெளியே போட்டது போல உணர்ந்தேன். நானும் முத்தையாவும் மட்டும் நேராகச்சென்று பைக்குகள் நின்ற இடத்தை அடைந்தோம். கொஞ்ச நேரம் எம்பியபோது ராமலிங்கம் தென்பட்டார். அவரைக் கரை சேர்த்தோம். செல்போனில் அழைத்தபோது அந்தபிராந்தியத்தில் அலைமோதிக்கொண்டிருந்த சந்திரமௌலி அகப்பட்டார். நாஞ்சில்நாடன் தொலைந்து போனார்.

”பாவம் நல்ல எழுத்தாளர், நகைச்சுவையா எழுதுவார்” என்று அதற்குள் அனுதாபம் தெரிவிக்க ஆரம்பித்தார் முத்தையா. செல்பேசியில் கூப்பிட்டோம். ”எங்க இருக்கீங்க?” ”இங்கிணதான் இருக்கேன்…நீங்க எங்க இருக்கீங்க?” நாங்கள் இருக்கும் இடத்தைச் சொன்னோம். நேராக அதைப்பார்த்துக்கொண்டே வரும்படிச் சொன்னோம். ஆனால் ஆளைக்காணவில்லை.

மீண்டும் செல்பேசி அழைத்தால் அப்படி ஒரு எண்ணே இல்லை என்று சொல்லிவிட்டது.”நாம இப்ப இவரை தொலைச்சோம்னா அது இவர் மேல நாம வைக்கிற ஒரு விமரிசனமா ஆயிடும்.அதான் கவலையா இருக்கு” என்றார் முத்தையா. கிடைச்சிட்டார் என்று ராமலிங்கம் கூவினார். ”எங்கே?” என்றேன். ”செல்போனிலே கிடைச்சாச்சு. சார் எஙக் இருக்கீங்க?” நாஞ்சில் எங்கோ ஒரு இடத்தில் இருந்தார். ”சார்,பக்கத்திலே போர்டுலே என்ன எழுதியிருக்குன்னு சொல்லுங்க” ”கொலாலம்பூர்னு எழுதியிருக்கு”. ”சார், வெளையாடரீங்களா? அதைத்தான் எல்லா போர்டிலேயும் எழுதியிருக்காங்களே?”

ஒரு மேம்பாலத்தடியில் நாங்கள் நின்றிருந்தோம். நாஞ்சில் அதன் தொடக்கத்திற்கே சென்றுவிட்டிருந்தார். ”எதிலயும் ஆதி மூலம் வரை போற எழுத்தாளர் அவரு” என்றார் முத்தையா. நான் கடுப்பாகி ”முத்தையா கூட்டிட்டு வந்தது நீங்க. நீங்களே இப்டி பொறுப்பில்லாம இருக்கீங்க” என்றேன். ”அப்டியெல்லாம் தமிழ் எழுத்தாளன் தொலைஞ்சுபோயிடமாட்டான். தொலைஞ்சுபோகவேண்டிய பலபேர் இன்னும் இருந்திட்டிருக்காங்க”

ஒருவழியாக ராமலிங்கம் நாஞ்சிலை கூட்டி வந்தார். முகம் முழுக்க ஒரு சாதனைப்புன்முறுவலுடன் வந்தார் நாஞ்சில் ”என்ன பிரச்சினை பெரிசா? நான் நேரா உள்ள போனா ஆபீஸ் இருக்கு. அங்க டத்தோ இருக்கார். ஒண்ணூம் பயமில்லை” என்றார். சந்துகள் வழியாகச் சென்றோம். தொலைதூர மலேசியாவிலிருந்து வந்த விதவிதமான மனிதர்கள் அங்கே கூடியிருந்தார்கள். பலபேர் குடும்பங்களாக வந்திருந்தார்கள். தரையில் துணிகளை விரித்து படுத்திருந்தார்கள். சில இடங்களில் ஸ்டவ் வைத்து சமைத்துக்கொண்டிருந்தார்கள்.

காரைக் கண்டுபிடித்து சாலையில் கால்மணிநேரம் பயணம்செய்தபின்பு ஒரு மஞ்சள்போர்டைக் காட்டி இதுதான் நான் சொன்ன போர்டு என்றார் நாஞ்சில்நாடன். என்னால் அவரை திரும்பிப்பாராமல் இருக்க முடியவில்லை

முந்தைய கட்டுரைகேணி கூட்டத்தில் நாஞ்சில்நாடன்
அடுத்த கட்டுரையோகம்,ஞானம்