யோகம், ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ

சுத்தமாக யோகாவே தெரியாத ஒருவர் திடீரென்று தானாகவே மூச்சுபயிற்சியின் தூண்டுதலால் யோகா செய்தல் சாத்தியமா?

அன்புடன்

ஷாசா.

அன்புள்ள ஷாசா.

முடியவே முடியாது – யோகம் என நீங்கள் சொல்வது சுயமுழுமையை நோக்கி செய்யபப்டும் சாதனாவை என்றால்.

யோகாசனப்பயிர்சிகள் தியானத்துக்கு உதவும் வழிமுறைகள் மட்டுமே. அவை வேறு

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோஹன் அவர்களுக்கு

வணக்கம்.

உடனடியாக என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

என் கேள்விக்குள் என் இரண்டு வருட குழப்பம் ஒளிந்துகிடக்கிறது.விவரம் சொல்கிறேன்.

என் குடும்பத்திற்கோ தியான யோகங்களுக்கோ துளியும் சம்மந்தமில்லை.

ஏனோ சிறுவயதிலிருந்தோ எனக்கு தியானம் மூச்சுப்பயிற்சி மேல் ஆர்வம் அதிகம், பாலகுமாரன் படித்தது கூட காரணமாயிருக்கலாம்.வெறுமே உட்கார்ந்து மூச்சைப்பார்ப்பேன். அதுகூட விளையாட்டாகத்தான்.

இரண்டு வருடம் முன் ஒரு விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது எதேச்சையாக ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் அவர்களின் மூச்சுப்பயிற்சி வகுப்பை அட்டெண்ட் செய்தேன் போரடிக்கிறதே என்று,சுதர்சன கிரியா என்ற அந்தப் பயிற்சியின் போது அற்புதமாக உணர்ந்தேன்.அதன்பின் தான் பிரச்சனையே.

அந்த கிரியா பயிற்சியை முறையாக வீட்டில் தினமும் செய்ய முயற்சி செய்த போது என்னை அறியாமல் முத்திரைகளும் யோகாக்களும் செய்ய ஆரம்பித்தேன். தேர்ச்சி பெற்ற யோகா கலைஞரைப்போல என் உடல் வளைந்து கொடுத்தது.மனதிலும் பரவசமாக உணர ஆரம்பித்தேன்,சுதர்சன கிரியா செய்வதை விட தன்னிச்சையாக யோகா செய்வதை விரும்ப ஆரம்பித்தேன்.நான் செய்வதெல்லாம் யோகா தானா என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது. அந்த போஸ்சர்களைப் பற்றி இண்டெர்நெட்டில் தேடிய போது அவை யோகாக்கள் தாம் என்று தெரிந்தேன்.இருப்பினும் எனக்கு சந்தேகம்,இவற்றை செய்வதால் என் உடலுக்கு கேடு வருமோ என்று.ஏனென்றால் கஷ்டமான ஹாலாசனம் முதலியவற்றை செய்த பின் முதுகு வலி வந்தது போல் தெரிந்தது. எனவே ஒரு யோகா மாஸ்டரிடம் நான் செய்பவை முறையான யோகா தான என்று செய்து காட்டினேன், அவர் என்ன சொன்னார் என்றால் இவையெல்லாம் எங்கே கற்றீர்கள்? எத்தனை வருடம் செய்கிறீர்கள் என்று கேட்டார்?

ஏனென்றால் இவை எல்லாம் அட்வான்ஸ் ஹதயோகா பிரிவைச்சேர்ந்தவை என்று சொன்னார்.

நான் சொல்வது கதை போல் இருக்கக்கூடும்.என் பிரச்சனை என்னவென்றால் நான் ஒரு முகம்மதியப் பெண்.என் கணவர் யோகா தியானம் இவற்றை மறுப்பவர் இல்லையென்றாலும் பெரிதாக ஆதரிப்பவரும் இல்லை.அதுவும் இப்போதைய நித்யானந்தர் போன்ற பிரச்சனைகளின் போது…சொல்லவே வேண்டாம்.சில நேரம் யோகாக்களின் போது என் மனமும்,கைகளும் என்னை அறியாமல் முதுகுத்தண்டின் மேல் குண்டலினி தூண்டும் முயற்சியில் ஈடுபடுகின்றன,தன்னிச்சையாக நான்  அழவோ சிரிக்கவோ ஆரம்பித்து விடுகிறேன்.பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயம் கிளம்ப சிறிது நாள் யோகா செய்வதையே தவிர்ப்பேன்.தூக்கத்தில் திடுக்கிட்டு பயந்து எழுகிறேன்.இன்னும் மென்மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறது,யாராவது தலை தடவி கற்றுக்கொடுக்க மாட்டார்களா?என்று ஆசையாகவும் இருக்கிறது.குருவைத் தேடி மனம் அலைகிறது.குடும்ப வாழ்வில் வீட்டைவிட்டு சொல்லாமல்  வெளியே எங்கும் செல்லக்கூட இயலாது.. எங்கே போய் குருவைத்தேடுவது???

உங்கள் தளத்தை படித்த போது உங்களிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது.அதனால் தான் மேம்போக்காக அந்தக்கேள்வியைப் பதிந்தேன்.சொல்லவேண்டும் என்று தோன்றியதால் இந்த நீண்ட கடிதம்.உங்கள் நேரத்தை வீணாக்கியிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்

ஷாசா.

அன்புள்ள ஷாசா.

உங்கள் கடிதம் எழுதப்பட்டிருக்கும் விதம் அதை விரிவாகவே எதிர்கொள்ளச் செய்கிறது. அத்துடன் இதேமாதிரியான பல கடிதங்கள் வந்திருக்கின்றன. உண்மையில் எனக்கு அச்சமும் சிறு பதற்றமும் ஏற்படுகிறது.

பலவருடங்களுக்கு முன்னர் நம்முடைய குருநாதர்கள் சீடர்கள குரூரமாக நிராகரிக்கும் விதத்தைப் பற்றி மிகுந்த மனத்தாங்கலுடன் இருந்தேன், ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன். இன்று அதற்கான காரணம் பிடிபடுவது போல் இருக்கிறது

பெரும்பாலான குருநாதர்கள் அணுகவே விடுவதில்லை. முரட்டுத்தனமாக நிராகரிப்பார்கள். முழுமையாக தங்களை ஒளித்துக்கொள்வார்கள். வருடக்கணக்காக  புறக்கணிப்பார்கள். காலை தொட்டு வணங்கக்கூட அனுமதிக்காதவர்கள் உண்டு. ஏன், ஒருமுறை ஒரு குரு அவர் காலைத்தொட்டு வணங்கிய ஒருவரை திரும்ப  காலைத்தொட்டு வணங்கியதைக் கண்டிருக்கிறேன். பிடிவாதமான ஒரு நிராகரிப்பு அது.

இந்த நிராகரிப்பு எதற்காக? ஒரு உறுதியான அறிவியலடிப்படை கொண்ட மெய்காண்முறையை ஏன் ரகசியமாக வைத்திருக்கவேண்டும்?  அதற்குள் நுழைவதற்கான வாசலை ஏன் மண்டையால் முட்டித்திறக்கும்படி வைத்திருக்கவேண்டும்?

நெடுநாள் குருகுலத்தில் இருந்த ஒருவரை ஒரு சாதாரண தியானம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ”நீ போய் வேலையைப் பார்” என்று நித்யா எழுப்பி விடுவதை கவனித்தேன். அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். நித்யா சொன்னார் ”அவனுக்குள் ஒரு கொந்தளிப்பு இருக்கிறது. ஜாக்ரத் அவனுக்கு மாபெரும் கவசம் மாதிரி. தியானம் அதை அழித்துவிடும்”

நித்யா சொன்னார் ”இந்த பூமியின் மேல்பொருக்கு என்பது பூமியின் அளவை வைத்துப்பார்த்தால் மிகமிக மெல்லிய ஒரு சருமம் போன்றது. அதன் மேல்மண் ஒரு இருபதடிக்குத்தான் உயிருள்ளது. அந்த சவ்வின்மீதுதான் மரங்களும், காடுகளும்,கடல்களும் உள்ளன. கோடானுகோடி உயிர்கள் வாழ்கின்றன. அதற்கு அடியில் அதிபிரம்மாண்டமான தீக்குழம்புதான் உள்ளது.

மனித மனத்தின் ஜாக்ரத் [விழிப்புநிலை அல்லது பிரக்ஞை]  என்பது அதைப்போன்றதுதான். அது மிக மிக மெல்லியது. ஆனால் அந்த படலத்தின்மீதுதான் நம்முடைய பண்பாடு, விவேகம், கல்வி, ஞானம் எல்லாமே உள்ளன. அடியிலிருப்பது அதிபிரம்மாண்டமான ஒரு அனல்கொந்தளிப்பு.  அந்த அனலைக் கையாளமுடியாதபோது ஒருபோதும் ஜாக்ரத்துடன் விளையாடக்கூடாது”

குரு நித்ய சைதன்ய யதி முறைப்படி உளவியல் கற்று பேராசிரியராக பணியாற்றியவர். கடைசிவரை உளவியல் கற்பவராகவும் கற்பிப்பவராகவும் இருந்தார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆகவேதான் பொதுவான ஒருவருக்குப் புரியும்படி சில விஷயங்களை அவர் கூறினார். அதாவது மேலைஉளவியலின் அடிப்படைகளைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார்.

பிரக்ஞை என்பது மிகமிகப் பலவீனமான ஒன்று. நீங்கள் தூக்கத்தில் அமிழ்வதற்கு சில கணங்களுக்கு முன் எப்படி மிகச் சர்வதாசாரணமாக பிரக்ஞை சிதறுண்டு மனம் மிகப்பெரிய ஒரு அராஜகவெளியாக ஆகிறதென்பதை கவனியுங்கள். தூக்கத்தில் இருந்து விழித்தெழும்போதும் அதுவே நிகழ்கிறது. கனவோ முற்றிலும் நம் பிடிக்குச் சிக்காத ஒரு பெரிய மாயவெளியாக, பிம்பங்களின் ஒழுங்கின்மை தாண்டவமாடும் பரப்பாக உள்ளது. அந்த அராஜகப்பிரம்மாண்டம் மீதுதான் நம்முடைய சுய உணர்வு, தர்க்கம், கல்வி அனைத்தும் அமர்ந்திருக்கின்றன.

பேருந்து நிலையத்தில் நம் அருகே அமர்ந்திருக்கும் ஒரு முழுப்பைத்தியத்திற்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அவர் என்ன பேசுகிறார் என்று பாருங்கள். அதைப்போலத்தான் நம் மனதுள் ஓடும் உரையாடலும் அமைந்துள்ளது. ஆனால் அதை பிரித்து பார்க்கக்கூடிய ஒரு மேலதிக பிரக்ஞை நம்மிடம் உள்ளது.  உள்ளே ஓடுவதை கட்டுப்படுத்த , மறைக்க நம்மால் முடிகிறது. நாம் பேசுவதையும் செய்வதையும் நம்மால் முடிவுசெய்ய முடிகிறது. இந்தக் கட்டுப்படுத்தும் பிரக்ஞை அவரிடம் இல்லை.

அதாவது நம் ஜாக்ரத் தான் நம்மை கட்டுப்படுத்தும்  சக்தி. நம்முடைய எல்லாவகை சுய அடையாளங்களும் அதன்மீதுதான் உள்ளன. ஜாக்ரத் விலகி நிற்கும் நிலையே பைத்தியம் என்பது. மிகச்சிறிய வேறுபாடுதான். கனவுகாண்கையில் நாமும் பைத்தியங்களே. தூக்கத்தில் அமிழ்கையில் நாமும் பைத்தியங்களே.

தியானம் என்பது ஜாக்ரத்தை ரத்து செய்வதற்கான பிரக்ஞைபூர்வமான முயற்சி. பூமியைத்தோண்டி லாவாவை வெளியே எடுக்கும் முயற்சியேதான் அது. மிக மிகக் கவனமாக, தேர்ந்த வழிகாட்டலுடன் மட்டுமே அதைச் செய்ய முடியும்.  ஜாக்ரத் விலகும்போது உருவாகும் பித்துநிலையை கையாளக்கூடிய ஆற்றல் நமக்கில்லாமல் அதைச் செய்வதுபோல ஆபத்தான பரிசோதனை பிறிதொன்றில்லை.

இயல்பிலேயே இதற்கு தகுதியற்றவர்கள் உண்டா? ஆம்.  பெரும்பாலானவர்களை தவிர்ப்பது பொருளாசை இல்லாமல் உண்மையாகவே செய்யப்படும் எல்லா யோகமரபுகளிலும் கடைப்பிடிக்கப்படும் வழிமுறையாகும். அனைவருக்கும் உரியதல்ல தியானம் என்பது ஓர் அடிப்படை உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல சிலருக்கு பிரக்ஞை என்பது மாபெரும் பாதுகாப்புக் கவசம். பிரக்ஞையை மேலும் மேலும் வலுப்படுத்துவதே அவர்களுக்கு அவசியமானது.

அவர்கள் யார் யார்? பொதுவாக ஏதேனும் நரம்புச்சிக்கல்கள் கொண்டவர்கள் எவருமே தியானவழிமுறைகளை பயிலக்கூடாது. பதற்றம் [Nervousness ] மனச்சோர்வு [Depression] , மிகைவிருப்பு [Obsession]   போன்ற மனச்சிக்கல்கள் கொண்டவர்களும் செய்யக்கூடாது. தியானம் அச்சிக்கல்களை அதிகரிக்கக்கூடும்.

காரணம் என்ன? தியானம் என்பது ஒருபக்கம் பிரக்ஞையை அழிப்பது. ஆழ்மனத்தை நோக்கிச் செல்வது. ஆனால் அதன் ஆரம்பநிலைகளில் ஒவ்வொரு தருணத்திலும் தனக்கு நிகழ்வதை தானே காணும் ஒரு பிரக்ஞையும் கூடவே சென்றாகவேண்டும். அதாவது பிரக்ஞை அழியும்போது தன்னுணர்வு கூடவே வரவேண்டும். வழிகாட்டியாக. இருண்ட ஒரு குகைக்குள் செல்லும்போது வெளீயே இருந்து ஒரு கயிறையும் பற்றிக்கொண்டு செல்வதுபோன்றது அது. அதைப்பற்றியபடி திரும்பி வந்து விடமுடியும்.

ஆகவே தன்னுணர்வு துல்லியமானதாக வலுவானதாக இருந்தாகவேண்டும். ஆனால் உளச்சிக்கல் கொண்டவர்களுக்கு அந்த தன்னுணர்வு தெளிவற்றதாக, சஞ்சலம் கொண்டதாக இருக்கும். ஆக வழிகாட்டும் அம்சம் மிகவும் பலவீனமானது. எனவே தியானம் அவர்களுக்குரியதல்ல.

இத்தகைய பல உளச்சிக்கல்கள் பெரும்பாலும் பாரம்பரியமானவை, ஒருவகையில் பிறவியிலேயே உள்ளவை என்று நித்யா ஓர் உரையில் சொல்லியிருக்கிறார். அதாவது சூழலால் இவை உருவாக்கப்படலாம், ஆனால் அவற்றுக்கான சாத்தியங்கள் ஒருவரின் மூளையில் பாரம்பரியமாகவே பெறப்பட்டிருக்கின்றன. தன்னுள் அத்தகைய விதைகள் கொண்ட ஒருவர் தியானம் செய்வாரென்றால் அவரது சுயம் கட்டுப்பாட்டை இழக்கும்.

நல்ல குருநாதர்கள் ஆரம்பநிலையில் தியானம் பயிற்றுவிப்பதற்கு முன்னதாகவே இதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். சாதாரண உரையாடல்கள் நடத்தைகளிலேயே இதற்கான தடையங்கள் இருக்கும். நேர்ப்பேச்சில் சாதாரணமாகவே கண்டுகொள்ள முடியும். அவர்களுக்கு பிரக்ஞையை அழுத்தமாக நிறுவக்கூடிய பக்தி மற்றும் ஞானம் சார்ந்த வழிமுறைகளே தீர்வாகும்.

இனி உங்கள் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்கு வருகிறேன். மூச்சுப்பயிற்சி யோகாசனப்பயிற்சி ஆகியவை தியானத்தின் துணைச்செயல்பாடுகள் மட்டுமே. நேரடியாக தியானத்துடன் தொடர்புடையவை அல்ல. துல்லியமான சுவாசமும், துல்லியமான உடல் நிலையும் தியானம் சார்ந்த பயிற்சிகளுக்கு அவசியம் என்பதனால் அவை பயிலப்படுகின்றன. மெய்யறிதலில் அவை எந்த நேரடி விளைவையும் உருவாக்குவதில்லை.

இதற்கிணையான மேலும் இரு விஷயங்கள் உண்டு. ஒன்று உணவுக்கட்டுப்பாடு. மலக்குடல் மிகச்சுத்தமாக இருந்தாக வேண்டிய அவசியம் உண்டு.வயிற்றில் அமிலம் இருக்கவும் கூடாது. ஆகவே உணவுக்கட்டுப்பாடு மிக இன்றியமையாததாகச் சொல்லப்படுகிறது. அடுத்தது சூழல். உங்கள் மனம் உங்கள் சூழலின் பிரதிபலிப்பே. அன்றாடம் காண்பது எதுவோ அதுவே மனதின் படிமங்களாக ஆகும். ஆகவே கொந்தளிப்பற்ற வன்முறையற்ற சூழல் தியானத்திற்கு இன்றியமையாதது.

இந்தத் துணைச் செயல்பாடுகள் மூலம் எந்த நேரடி விளைவும் உருவாகாது. விளைவுகள் முறையான தியானம் மூலம் பிறக்கக் கூடியவை மட்டுமே. தியானம் என்பது படிப்படியான பொறுமையான நெடுநாள் பயிற்சி மூலம் பிரக்ஞையை பின்னகர வைத்து ஆழ்மனங்களை அறியும் நிலையே. முத்திரைகள் மூலமோ, சிறப்பு வழிமுறைகள் மூலமோ, அல்லது வேறு எதன் மூலமோ அதை பத்துநாளிலோ ஆறுமாதங்களிலோ நிகழ்த்துவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்று.

மிகப்பொறுமையாக, விளைவுகளை நுணுக்கமாக அவதானித்தபடியேதான் இதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் உங்கள் பிரக்ஞை விலகவும் வேண்டும். தன்னுணர்வு தூயநிலையில் இருந்துகொண்டும் இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன நிகழ்கிறதென நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டிருக்கவேண்டும்.

இரண்டு வகைகளில் தவறுகள் நிகழும். ஒன்று, அடிப்படையில் சில உளச்சிக்கல்கள் கொண்டவர்களுக்கு ஏற்கனவே பிரக்ஞைநிலை பலவீனமாகவே இருக்கும். அவர்கள் தியானத்தில் மிக விரைவாகவே பிரக்ஞைநிலையை இழந்துவிடுவதுண்டு. அத்துடன் தன்னுணர்வும் இல்லாமலாகிவிடும்.

இரண்டு, சிலர் சிலவகையான குறியீடுகளால் அதீதமாக தூண்டப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக சக்தி சார்ந்த பிம்பங்கள் சில பெண்களை அதீதமாக தூண்டுவதை கண்டிருக்கிறேன். அவர்கள் சட்டென்று  பிரக்ஞை நிலையை தாண்டி ஆழ்நிலைக்குச் செல்வார்கள்.

இவை இரண்டுமே தியானங்கள் அல்ல, நிலைமறப்புகள் மட்டுமே. தியானம் என்பது தன்னுணர்வின் கைவிளக்குடன் உள்ளே செல்வது. அந்த தன்னுணர்வு மேலும் மேலும் வலிமைப்பட்டபடியே வரும். அது முதலில் பார்ப்பவன் என்ற நிலையாக இருந்து பின்னர் வளர்ந்து வளர்ந்து ஒரு பிரபஞ்சநிலையை அடையும் என்று சொல்கிறார்கள். ஆனால் தன்னுணர்வு துல்லியமாக ஆகாமல் பிரக்ஞை மட்டும் விலகுவதென்பது தியானம் அல்ல. அபாயகரமான ஒன்று அது.

பிரக்ஞை நிலை விலகும் கணத்தில் ஆழ்ந்தகனவுகளே உருவாகின்றன. கனவுகள் எப்போதும் நம் வாழ்க்கையின் ஆசைகளை, அச்சங்களை பிரதிபலிப்பவை. தியானத்திலும் அதுவே நிகழ்கிறது. மேலும் மேலும் ஆழ்ந்துசெல்லும்போது மிகத் தீவிரமான கெட்ட கனவுகளே உருவாகின்றன. நம்பமுடியாத ரகசிய இச்சைகள், குரூரங்கள், பயங்கரமான பீதியூட்டும் காட்சிகள், துர்வாசனைகள் ஒலிகள். அங்கே ஒழுக்கம் அறம் கருணை என பிரக்ஞைமனம் கொண்டுள்ள ஏதும் இல்லை.

கையை வைத்தால் விரலை வெட்டிக்கொண்டு போகுமளவுக்கு வேகமான ஒரு நதி –  ‘வேகவதி’ — அங்கே ஓடுகிறது, அதில் இறங்கி நீந்தி மறுகரை சேர்ந்தால்தான் அடுத்த பயணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக இது சாத்தியமல்ல. குற்றவுணர்ச்சியாலும் குழப்பங்களாலும் நாம் அலைக்கழிக்கப்படுவோம். அதற்குத்தான் கூடவே தத்துவக் கல்வியும் தேவை எனப்படுகிறது. மனத்தின் ஆழங்களை நிதானமாகப் பார்க்கவும் பகுத்தறியவும் நம்முடன் தர்க்கபுத்தி துணைக்கிருக்கவேண்டும். நம்மை எந்த திரையும் இல்லாமல் நாமே பார்ப்பது அது.

பயங்கரமான உருவெளிக்காட்சிகள் உருவாகும் என்பதை நான் அறிவேன். நரம்புகள் சிதைவடையக்கூடும். இந்த தளத்தில் பைத்தியமாகிப்போனபலரை நான் அறிவேன். பைத்தியமாகி மீண்டவர்களை அறிவேன். எளிய விஷயமல்ல இது.

அதற்கும் அப்பால்தான் சுஷ¤ப்தியின் பெரும்  ஆனந்த வெளி அதற்கப்பால் துரிய நிலையின் இன்மைவெளி. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். நாம் நம்மை ‘நான்’ என எண்ணிக்கொள்வது [அதாவது நம் தன்னிலை அல்லது Subjectivity ] சமூகத்தால் மொழியால் கட்டமைக்கப்பட்டு நமக்கு அளிக்கப்படுவது. அதை நாம் படிப்படியாக ரத்துசெய்து என்ன எஞ்சுகிறதென பார்க்கிறோம் அதுவே யோகம். 

இதை நெடுங்காலம் பலவகையான பின்னடைவுகளுடன் சிக்கல்களுடன் பொறுமையாகச் செய்தே அடைய முடியும்.  கற்பனைத்திறன் கொண்டவர்களுக்கான தூரம் இருமடங்கு என்று  எனக்குத்தெரியும். எல்லா தளத்திலும் வழிகாட்டல்கள் தேவை. எல்லாம் இருந்தும் சிலசமயம் ஒன்றும் நிகழாமல் போகும். இதை  பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பத்துமாதம் பயிற்சியில் அடையலாமென எண்ணுவது பேதமை.

இந்தப் பயிற்சி எப்படிப்பட்டதெனச் சொல்லும்போதே நீங்கள் அடைந்தது என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது அதீதமான மன அழுத்தம் மூலம் நீங்கள் அடைந்த பிரமைகள் மட்டுமே. நீங்கள் மூச்சுப்பயிற்சியில் உங்கள் மனதைக் குவித்தீர்கள். சீராக நிகழும் எதில் மனதைக் குவித்தாலும் அது பிரக்ஞை நிலையை விலகச் செய்யும் –கடிகாரச் சத்தத்தை கவனித்தால் கூட போதும்.

பிரக்ஞை நிலை விலகியபோது உங்கள் கனவுமனம் கட்டில்லாமல் வெளியாகியது. நீங்கள் கற்பனையில் எண்ணியிருந்தவை எல்லாமே உங்களுக்கு நிகழ்ந்தன என்று கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்கள். ஒருவர் மெலிந்த உடல்வாகு கொண்டவராக இருந்தால் மன உத்வேகம் மூலமே உடலை எந்த அளவுக்கும் கொண்டுசெல்ல முடியும்.

தியானம் அதன் முதல் நிலையில் நிம்மதியை, ஆழமான தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நிலையை, மட்டுமே அளிக்கவேண்டும். கொந்தளிப்பை அளித்தது என்றால் அது உளப்பிரச்சினையையே காட்டுகிறது. குறிப்பாக, அழுவதென்பது மன அழுத்ததைக் காட்டும் குறியீடு

பொதுவாக தியானத்திலிருக்கையில் அசப்பில் ஒற்றைக்குரல்கள் கேட்பது, உரசல் ஒலிகள் கேட்பது, பார்வைக்குள் ஏராளமான ஒளிப்பொட்டுகள் தெரிய உருவாகும் அதிர்வுகள், அங்கே இல்லாத வாசனைகள் தெரிவது ஆகியவை இருக்கக் கூடாது. உடனே நிறுத்தியாகவேண்டும்

நீங்கள் முரட்டுத்தனமாக, அதீதமாக சென்றிருக்கிறீர்கள். ஏற்கனவே சொன்னதுபோல எந்தவிதமான நுண் கவனிப்பும் இலலமல் அத்தனைபேருக்கும் ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பதன் விளைவு இது.

தியானப்பயிற்சியில்  அவ்வப்போது முழுமையாக நிறுத்திக்கொள்வது முக்கியமான ஒன்று. எல்லா குருநாதர்களும் அதைச் செய்வார்கள். உங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுணர்ச்சி கூடவே இல்லை என்றால் நிறுத்திக்கொள்ளுங்கள். நான் தன்னுணர்ச்சி என்று சொல்வது நான் என்ற உணர்வை அல்ல. நீங்கள் கதறி அழும்போது கூட அழுகிறேன் என்ற எண்ணமாக ஒன்று கூடவே இருக்குமே அதை.

யோகாசனம் என்பது உடலை தகுதிப்படுத்த செய்யும் பயிற்ச்சி. அதை எங்கோ கேட்ட கண்ட நினைவுகள் ஆழ்மனதில் இருக்கையில் ஒருவர் செய்துவிட முடியும். ஆனால் அப்போதுகூட மிக மெதுவாக, விளைவுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செய்யவேண்டுமே ஒழிய மூர்க்கமாக எல்லாவற்றையும் செய்து பார்க்கலாகாது. உடல்நலச்சிக்கல்களை உருவாக்கும். குறிப்பாக சிரசாசனம் சக்ராசனம் போன்றவை.

நீங்கள் தியானத்திற்குக் கையாண்ட பிம்பங்கள் உங்களுக்குரியவை அல்ல. உங்கள் இயல்புக்கு ஏற்ப வேறுவகையான பிம்பங்களை உங்களை அறிந்த ஒரு குரு அளிக்க வேண்டும். வேறுவகையான மந்திரங்களையும்.

தியானம் தேவை என்றால் பத்து நிமிடம் மூச்சுப்பயிற்சி இருபது நிமிடங்களுக்கு மிகாமல் சுத்ததியானம் [மந்திரம் இல்லாமல் ஒரே ஒரு இசைத்துணுக்கை மட்டும் தியானிப்பது. பிம்பங்கள் இல்லாமல் வெறும் ஒளித்துணுக்கை மட்டுமே தியானிப்பது] மட்டும் ஒரே ஒருமுறை செய்யுங்கள். தியானத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை குறித்து வைக்க முயலுங்கள்.

இது எளிய தியானம் மட்டுமே. அனைவருக்கும் உரியது இது. மனதை ஒருமுகப்படுத்தி வல்லமை கொள்ளச்செய்யவும், செயலாற்றலைப் பெருக்கவும் உதவும். நம்மை நாமே அவதானிக்க ஆரம்பிக்கும்போது நாம் நம்மை திறமையாக பயன்படுத்த ஆரம்பிக்கிறோம்.

யோகத்தின் பயணத்தில் அடுத்த படிகளை நீங்கள் குறைந்தது ஒரு வருடம் கழித்தே செய்ய முடியும் . அதற்கு முன் முக்கியமான கேள்வி, எதற்காக யோகம் செய்யவேண்டும்? மனச்சிக்கல்களை தீர்ப்பதற்கான வழி அல்ல அது. மகிழ்ச்சிக்கான வழியும் அல்ல. அது அறிதலுக்கான வழி.

யோகம் லௌகீக வாழ்க்கையிலேயே அல்லல்படும் எளிய மனிதர்களுக்குரியதல்ல. எளிமையான இன்பங்களை நாடும் சாதாரண மனிதர்களுக்குரியதுமல்ல. அவர்கள் உள்ளே வந்தால் பெரும் சிக்கல்களையே சந்திப்பார்கள். தங்கள் எல்லைகளுக்குள்  அவர்கள் நின்றுகொள்வதே நல்லது

யோகம்  அறிதலுக்குரிய தணியா ஆர்வமும் அர்ப்பணிப்பும் அறிவதற்கான மூளைத்திறனும் நுண்ணுணர்வுத்திறனும் உள்ள வலிமையான மனிதர்களுக்குரியது. அசாதாரண மனிதர்களால் மட்டுமே வெற்றிகொள்ளப்படுவது அது. அது சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒருபோதும் வராது.

ஜெ

முந்தைய கட்டுரைபாலமுருகன் பதில்
அடுத்த கட்டுரைகேணி கூட்டத்தில் நாஞ்சில்நாடன்