«

»


Print this Post

யோகம், ஒரு கடிதம்


மதிப்பிற்குரிய ஜெ

சுத்தமாக யோகாவே தெரியாத ஒருவர் திடீரென்று தானாகவே மூச்சுபயிற்சியின் தூண்டுதலால் யோகா செய்தல் சாத்தியமா?

அன்புடன்

ஷாசா.

அன்புள்ள ஷாசா.

முடியவே முடியாது – யோகம் என நீங்கள் சொல்வது சுயமுழுமையை நோக்கி செய்யபப்டும் சாதனாவை என்றால்.

யோகாசனப்பயிர்சிகள் தியானத்துக்கு உதவும் வழிமுறைகள் மட்டுமே. அவை வேறு

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோஹன் அவர்களுக்கு

வணக்கம்.

உடனடியாக என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி.

என் கேள்விக்குள் என் இரண்டு வருட குழப்பம் ஒளிந்துகிடக்கிறது.விவரம் சொல்கிறேன்.

என் குடும்பத்திற்கோ தியான யோகங்களுக்கோ துளியும் சம்மந்தமில்லை.

ஏனோ சிறுவயதிலிருந்தோ எனக்கு தியானம் மூச்சுப்பயிற்சி மேல் ஆர்வம் அதிகம், பாலகுமாரன் படித்தது கூட காரணமாயிருக்கலாம்.வெறுமே உட்கார்ந்து மூச்சைப்பார்ப்பேன். அதுகூட விளையாட்டாகத்தான்.

இரண்டு வருடம் முன் ஒரு விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது எதேச்சையாக ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் அவர்களின் மூச்சுப்பயிற்சி வகுப்பை அட்டெண்ட் செய்தேன் போரடிக்கிறதே என்று,சுதர்சன கிரியா என்ற அந்தப் பயிற்சியின் போது அற்புதமாக உணர்ந்தேன்.அதன்பின் தான் பிரச்சனையே.

அந்த கிரியா பயிற்சியை முறையாக வீட்டில் தினமும் செய்ய முயற்சி செய்த போது என்னை அறியாமல் முத்திரைகளும் யோகாக்களும் செய்ய ஆரம்பித்தேன். தேர்ச்சி பெற்ற யோகா கலைஞரைப்போல என் உடல் வளைந்து கொடுத்தது.மனதிலும் பரவசமாக உணர ஆரம்பித்தேன்,சுதர்சன கிரியா செய்வதை விட தன்னிச்சையாக யோகா செய்வதை விரும்ப ஆரம்பித்தேன்.நான் செய்வதெல்லாம் யோகா தானா என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது. அந்த போஸ்சர்களைப் பற்றி இண்டெர்நெட்டில் தேடிய போது அவை யோகாக்கள் தாம் என்று தெரிந்தேன்.இருப்பினும் எனக்கு சந்தேகம்,இவற்றை செய்வதால் என் உடலுக்கு கேடு வருமோ என்று.ஏனென்றால் கஷ்டமான ஹாலாசனம் முதலியவற்றை செய்த பின் முதுகு வலி வந்தது போல் தெரிந்தது. எனவே ஒரு யோகா மாஸ்டரிடம் நான் செய்பவை முறையான யோகா தான என்று செய்து காட்டினேன், அவர் என்ன சொன்னார் என்றால் இவையெல்லாம் எங்கே கற்றீர்கள்? எத்தனை வருடம் செய்கிறீர்கள் என்று கேட்டார்?

ஏனென்றால் இவை எல்லாம் அட்வான்ஸ் ஹதயோகா பிரிவைச்சேர்ந்தவை என்று சொன்னார்.

நான் சொல்வது கதை போல் இருக்கக்கூடும்.என் பிரச்சனை என்னவென்றால் நான் ஒரு முகம்மதியப் பெண்.என் கணவர் யோகா தியானம் இவற்றை மறுப்பவர் இல்லையென்றாலும் பெரிதாக ஆதரிப்பவரும் இல்லை.அதுவும் இப்போதைய நித்யானந்தர் போன்ற பிரச்சனைகளின் போது…சொல்லவே வேண்டாம்.சில நேரம் யோகாக்களின் போது என் மனமும்,கைகளும் என்னை அறியாமல் முதுகுத்தண்டின் மேல் குண்டலினி தூண்டும் முயற்சியில் ஈடுபடுகின்றன,தன்னிச்சையாக நான்  அழவோ சிரிக்கவோ ஆரம்பித்து விடுகிறேன்.பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயம் கிளம்ப சிறிது நாள் யோகா செய்வதையே தவிர்ப்பேன்.தூக்கத்தில் திடுக்கிட்டு பயந்து எழுகிறேன்.இன்னும் மென்மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறது,யாராவது தலை தடவி கற்றுக்கொடுக்க மாட்டார்களா?என்று ஆசையாகவும் இருக்கிறது.குருவைத் தேடி மனம் அலைகிறது.குடும்ப வாழ்வில் வீட்டைவிட்டு சொல்லாமல்  வெளியே எங்கும் செல்லக்கூட இயலாது.. எங்கே போய் குருவைத்தேடுவது???

உங்கள் தளத்தை படித்த போது உங்களிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது.அதனால் தான் மேம்போக்காக அந்தக்கேள்வியைப் பதிந்தேன்.சொல்லவேண்டும் என்று தோன்றியதால் இந்த நீண்ட கடிதம்.உங்கள் நேரத்தை வீணாக்கியிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்

ஷாசா.

அன்புள்ள ஷாசா.

உங்கள் கடிதம் எழுதப்பட்டிருக்கும் விதம் அதை விரிவாகவே எதிர்கொள்ளச் செய்கிறது. அத்துடன் இதேமாதிரியான பல கடிதங்கள் வந்திருக்கின்றன. உண்மையில் எனக்கு அச்சமும் சிறு பதற்றமும் ஏற்படுகிறது.

பலவருடங்களுக்கு முன்னர் நம்முடைய குருநாதர்கள் சீடர்கள குரூரமாக நிராகரிக்கும் விதத்தைப் பற்றி மிகுந்த மனத்தாங்கலுடன் இருந்தேன், ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன். இன்று அதற்கான காரணம் பிடிபடுவது போல் இருக்கிறது

பெரும்பாலான குருநாதர்கள் அணுகவே விடுவதில்லை. முரட்டுத்தனமாக நிராகரிப்பார்கள். முழுமையாக தங்களை ஒளித்துக்கொள்வார்கள். வருடக்கணக்காக  புறக்கணிப்பார்கள். காலை தொட்டு வணங்கக்கூட அனுமதிக்காதவர்கள் உண்டு. ஏன், ஒருமுறை ஒரு குரு அவர் காலைத்தொட்டு வணங்கிய ஒருவரை திரும்ப  காலைத்தொட்டு வணங்கியதைக் கண்டிருக்கிறேன். பிடிவாதமான ஒரு நிராகரிப்பு அது.

இந்த நிராகரிப்பு எதற்காக? ஒரு உறுதியான அறிவியலடிப்படை கொண்ட மெய்காண்முறையை ஏன் ரகசியமாக வைத்திருக்கவேண்டும்?  அதற்குள் நுழைவதற்கான வாசலை ஏன் மண்டையால் முட்டித்திறக்கும்படி வைத்திருக்கவேண்டும்?

நெடுநாள் குருகுலத்தில் இருந்த ஒருவரை ஒரு சாதாரண தியானம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ”நீ போய் வேலையைப் பார்” என்று நித்யா எழுப்பி விடுவதை கவனித்தேன். அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். நித்யா சொன்னார் ”அவனுக்குள் ஒரு கொந்தளிப்பு இருக்கிறது. ஜாக்ரத் அவனுக்கு மாபெரும் கவசம் மாதிரி. தியானம் அதை அழித்துவிடும்”

நித்யா சொன்னார் ”இந்த பூமியின் மேல்பொருக்கு என்பது பூமியின் அளவை வைத்துப்பார்த்தால் மிகமிக மெல்லிய ஒரு சருமம் போன்றது. அதன் மேல்மண் ஒரு இருபதடிக்குத்தான் உயிருள்ளது. அந்த சவ்வின்மீதுதான் மரங்களும், காடுகளும்,கடல்களும் உள்ளன. கோடானுகோடி உயிர்கள் வாழ்கின்றன. அதற்கு அடியில் அதிபிரம்மாண்டமான தீக்குழம்புதான் உள்ளது.

மனித மனத்தின் ஜாக்ரத் [விழிப்புநிலை அல்லது பிரக்ஞை]  என்பது அதைப்போன்றதுதான். அது மிக மிக மெல்லியது. ஆனால் அந்த படலத்தின்மீதுதான் நம்முடைய பண்பாடு, விவேகம், கல்வி, ஞானம் எல்லாமே உள்ளன. அடியிலிருப்பது அதிபிரம்மாண்டமான ஒரு அனல்கொந்தளிப்பு.  அந்த அனலைக் கையாளமுடியாதபோது ஒருபோதும் ஜாக்ரத்துடன் விளையாடக்கூடாது”

குரு நித்ய சைதன்ய யதி முறைப்படி உளவியல் கற்று பேராசிரியராக பணியாற்றியவர். கடைசிவரை உளவியல் கற்பவராகவும் கற்பிப்பவராகவும் இருந்தார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆகவேதான் பொதுவான ஒருவருக்குப் புரியும்படி சில விஷயங்களை அவர் கூறினார். அதாவது மேலைஉளவியலின் அடிப்படைகளைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார்.

பிரக்ஞை என்பது மிகமிகப் பலவீனமான ஒன்று. நீங்கள் தூக்கத்தில் அமிழ்வதற்கு சில கணங்களுக்கு முன் எப்படி மிகச் சர்வதாசாரணமாக பிரக்ஞை சிதறுண்டு மனம் மிகப்பெரிய ஒரு அராஜகவெளியாக ஆகிறதென்பதை கவனியுங்கள். தூக்கத்தில் இருந்து விழித்தெழும்போதும் அதுவே நிகழ்கிறது. கனவோ முற்றிலும் நம் பிடிக்குச் சிக்காத ஒரு பெரிய மாயவெளியாக, பிம்பங்களின் ஒழுங்கின்மை தாண்டவமாடும் பரப்பாக உள்ளது. அந்த அராஜகப்பிரம்மாண்டம் மீதுதான் நம்முடைய சுய உணர்வு, தர்க்கம், கல்வி அனைத்தும் அமர்ந்திருக்கின்றன.

பேருந்து நிலையத்தில் நம் அருகே அமர்ந்திருக்கும் ஒரு முழுப்பைத்தியத்திற்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அவர் என்ன பேசுகிறார் என்று பாருங்கள். அதைப்போலத்தான் நம் மனதுள் ஓடும் உரையாடலும் அமைந்துள்ளது. ஆனால் அதை பிரித்து பார்க்கக்கூடிய ஒரு மேலதிக பிரக்ஞை நம்மிடம் உள்ளது.  உள்ளே ஓடுவதை கட்டுப்படுத்த , மறைக்க நம்மால் முடிகிறது. நாம் பேசுவதையும் செய்வதையும் நம்மால் முடிவுசெய்ய முடிகிறது. இந்தக் கட்டுப்படுத்தும் பிரக்ஞை அவரிடம் இல்லை.

அதாவது நம் ஜாக்ரத் தான் நம்மை கட்டுப்படுத்தும்  சக்தி. நம்முடைய எல்லாவகை சுய அடையாளங்களும் அதன்மீதுதான் உள்ளன. ஜாக்ரத் விலகி நிற்கும் நிலையே பைத்தியம் என்பது. மிகச்சிறிய வேறுபாடுதான். கனவுகாண்கையில் நாமும் பைத்தியங்களே. தூக்கத்தில் அமிழ்கையில் நாமும் பைத்தியங்களே.

தியானம் என்பது ஜாக்ரத்தை ரத்து செய்வதற்கான பிரக்ஞைபூர்வமான முயற்சி. பூமியைத்தோண்டி லாவாவை வெளியே எடுக்கும் முயற்சியேதான் அது. மிக மிகக் கவனமாக, தேர்ந்த வழிகாட்டலுடன் மட்டுமே அதைச் செய்ய முடியும்.  ஜாக்ரத் விலகும்போது உருவாகும் பித்துநிலையை கையாளக்கூடிய ஆற்றல் நமக்கில்லாமல் அதைச் செய்வதுபோல ஆபத்தான பரிசோதனை பிறிதொன்றில்லை.

இயல்பிலேயே இதற்கு தகுதியற்றவர்கள் உண்டா? ஆம்.  பெரும்பாலானவர்களை தவிர்ப்பது பொருளாசை இல்லாமல் உண்மையாகவே செய்யப்படும் எல்லா யோகமரபுகளிலும் கடைப்பிடிக்கப்படும் வழிமுறையாகும். அனைவருக்கும் உரியதல்ல தியானம் என்பது ஓர் அடிப்படை உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல சிலருக்கு பிரக்ஞை என்பது மாபெரும் பாதுகாப்புக் கவசம். பிரக்ஞையை மேலும் மேலும் வலுப்படுத்துவதே அவர்களுக்கு அவசியமானது.

அவர்கள் யார் யார்? பொதுவாக ஏதேனும் நரம்புச்சிக்கல்கள் கொண்டவர்கள் எவருமே தியானவழிமுறைகளை பயிலக்கூடாது. பதற்றம் [Nervousness ] மனச்சோர்வு [Depression] , மிகைவிருப்பு [Obsession]   போன்ற மனச்சிக்கல்கள் கொண்டவர்களும் செய்யக்கூடாது. தியானம் அச்சிக்கல்களை அதிகரிக்கக்கூடும்.

காரணம் என்ன? தியானம் என்பது ஒருபக்கம் பிரக்ஞையை அழிப்பது. ஆழ்மனத்தை நோக்கிச் செல்வது. ஆனால் அதன் ஆரம்பநிலைகளில் ஒவ்வொரு தருணத்திலும் தனக்கு நிகழ்வதை தானே காணும் ஒரு பிரக்ஞையும் கூடவே சென்றாகவேண்டும். அதாவது பிரக்ஞை அழியும்போது தன்னுணர்வு கூடவே வரவேண்டும். வழிகாட்டியாக. இருண்ட ஒரு குகைக்குள் செல்லும்போது வெளீயே இருந்து ஒரு கயிறையும் பற்றிக்கொண்டு செல்வதுபோன்றது அது. அதைப்பற்றியபடி திரும்பி வந்து விடமுடியும்.

ஆகவே தன்னுணர்வு துல்லியமானதாக வலுவானதாக இருந்தாகவேண்டும். ஆனால் உளச்சிக்கல் கொண்டவர்களுக்கு அந்த தன்னுணர்வு தெளிவற்றதாக, சஞ்சலம் கொண்டதாக இருக்கும். ஆக வழிகாட்டும் அம்சம் மிகவும் பலவீனமானது. எனவே தியானம் அவர்களுக்குரியதல்ல.

இத்தகைய பல உளச்சிக்கல்கள் பெரும்பாலும் பாரம்பரியமானவை, ஒருவகையில் பிறவியிலேயே உள்ளவை என்று நித்யா ஓர் உரையில் சொல்லியிருக்கிறார். அதாவது சூழலால் இவை உருவாக்கப்படலாம், ஆனால் அவற்றுக்கான சாத்தியங்கள் ஒருவரின் மூளையில் பாரம்பரியமாகவே பெறப்பட்டிருக்கின்றன. தன்னுள் அத்தகைய விதைகள் கொண்ட ஒருவர் தியானம் செய்வாரென்றால் அவரது சுயம் கட்டுப்பாட்டை இழக்கும்.

நல்ல குருநாதர்கள் ஆரம்பநிலையில் தியானம் பயிற்றுவிப்பதற்கு முன்னதாகவே இதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். சாதாரண உரையாடல்கள் நடத்தைகளிலேயே இதற்கான தடையங்கள் இருக்கும். நேர்ப்பேச்சில் சாதாரணமாகவே கண்டுகொள்ள முடியும். அவர்களுக்கு பிரக்ஞையை அழுத்தமாக நிறுவக்கூடிய பக்தி மற்றும் ஞானம் சார்ந்த வழிமுறைகளே தீர்வாகும்.

இனி உங்கள் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்கு வருகிறேன். மூச்சுப்பயிற்சி யோகாசனப்பயிற்சி ஆகியவை தியானத்தின் துணைச்செயல்பாடுகள் மட்டுமே. நேரடியாக தியானத்துடன் தொடர்புடையவை அல்ல. துல்லியமான சுவாசமும், துல்லியமான உடல் நிலையும் தியானம் சார்ந்த பயிற்சிகளுக்கு அவசியம் என்பதனால் அவை பயிலப்படுகின்றன. மெய்யறிதலில் அவை எந்த நேரடி விளைவையும் உருவாக்குவதில்லை.

இதற்கிணையான மேலும் இரு விஷயங்கள் உண்டு. ஒன்று உணவுக்கட்டுப்பாடு. மலக்குடல் மிகச்சுத்தமாக இருந்தாக வேண்டிய அவசியம் உண்டு.வயிற்றில் அமிலம் இருக்கவும் கூடாது. ஆகவே உணவுக்கட்டுப்பாடு மிக இன்றியமையாததாகச் சொல்லப்படுகிறது. அடுத்தது சூழல். உங்கள் மனம் உங்கள் சூழலின் பிரதிபலிப்பே. அன்றாடம் காண்பது எதுவோ அதுவே மனதின் படிமங்களாக ஆகும். ஆகவே கொந்தளிப்பற்ற வன்முறையற்ற சூழல் தியானத்திற்கு இன்றியமையாதது.

இந்தத் துணைச் செயல்பாடுகள் மூலம் எந்த நேரடி விளைவும் உருவாகாது. விளைவுகள் முறையான தியானம் மூலம் பிறக்கக் கூடியவை மட்டுமே. தியானம் என்பது படிப்படியான பொறுமையான நெடுநாள் பயிற்சி மூலம் பிரக்ஞையை பின்னகர வைத்து ஆழ்மனங்களை அறியும் நிலையே. முத்திரைகள் மூலமோ, சிறப்பு வழிமுறைகள் மூலமோ, அல்லது வேறு எதன் மூலமோ அதை பத்துநாளிலோ ஆறுமாதங்களிலோ நிகழ்த்துவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்று.

மிகப்பொறுமையாக, விளைவுகளை நுணுக்கமாக அவதானித்தபடியேதான் இதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் உங்கள் பிரக்ஞை விலகவும் வேண்டும். தன்னுணர்வு தூயநிலையில் இருந்துகொண்டும் இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன நிகழ்கிறதென நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டிருக்கவேண்டும்.

இரண்டு வகைகளில் தவறுகள் நிகழும். ஒன்று, அடிப்படையில் சில உளச்சிக்கல்கள் கொண்டவர்களுக்கு ஏற்கனவே பிரக்ஞைநிலை பலவீனமாகவே இருக்கும். அவர்கள் தியானத்தில் மிக விரைவாகவே பிரக்ஞைநிலையை இழந்துவிடுவதுண்டு. அத்துடன் தன்னுணர்வும் இல்லாமலாகிவிடும்.

இரண்டு, சிலர் சிலவகையான குறியீடுகளால் அதீதமாக தூண்டப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக சக்தி சார்ந்த பிம்பங்கள் சில பெண்களை அதீதமாக தூண்டுவதை கண்டிருக்கிறேன். அவர்கள் சட்டென்று  பிரக்ஞை நிலையை தாண்டி ஆழ்நிலைக்குச் செல்வார்கள்.

இவை இரண்டுமே தியானங்கள் அல்ல, நிலைமறப்புகள் மட்டுமே. தியானம் என்பது தன்னுணர்வின் கைவிளக்குடன் உள்ளே செல்வது. அந்த தன்னுணர்வு மேலும் மேலும் வலிமைப்பட்டபடியே வரும். அது முதலில் பார்ப்பவன் என்ற நிலையாக இருந்து பின்னர் வளர்ந்து வளர்ந்து ஒரு பிரபஞ்சநிலையை அடையும் என்று சொல்கிறார்கள். ஆனால் தன்னுணர்வு துல்லியமாக ஆகாமல் பிரக்ஞை மட்டும் விலகுவதென்பது தியானம் அல்ல. அபாயகரமான ஒன்று அது.

பிரக்ஞை நிலை விலகும் கணத்தில் ஆழ்ந்தகனவுகளே உருவாகின்றன. கனவுகள் எப்போதும் நம் வாழ்க்கையின் ஆசைகளை, அச்சங்களை பிரதிபலிப்பவை. தியானத்திலும் அதுவே நிகழ்கிறது. மேலும் மேலும் ஆழ்ந்துசெல்லும்போது மிகத் தீவிரமான கெட்ட கனவுகளே உருவாகின்றன. நம்பமுடியாத ரகசிய இச்சைகள், குரூரங்கள், பயங்கரமான பீதியூட்டும் காட்சிகள், துர்வாசனைகள் ஒலிகள். அங்கே ஒழுக்கம் அறம் கருணை என பிரக்ஞைமனம் கொண்டுள்ள ஏதும் இல்லை.

கையை வைத்தால் விரலை வெட்டிக்கொண்டு போகுமளவுக்கு வேகமான ஒரு நதி –  ‘வேகவதி’ — அங்கே ஓடுகிறது, அதில் இறங்கி நீந்தி மறுகரை சேர்ந்தால்தான் அடுத்த பயணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக இது சாத்தியமல்ல. குற்றவுணர்ச்சியாலும் குழப்பங்களாலும் நாம் அலைக்கழிக்கப்படுவோம். அதற்குத்தான் கூடவே தத்துவக் கல்வியும் தேவை எனப்படுகிறது. மனத்தின் ஆழங்களை நிதானமாகப் பார்க்கவும் பகுத்தறியவும் நம்முடன் தர்க்கபுத்தி துணைக்கிருக்கவேண்டும். நம்மை எந்த திரையும் இல்லாமல் நாமே பார்ப்பது அது.

பயங்கரமான உருவெளிக்காட்சிகள் உருவாகும் என்பதை நான் அறிவேன். நரம்புகள் சிதைவடையக்கூடும். இந்த தளத்தில் பைத்தியமாகிப்போனபலரை நான் அறிவேன். பைத்தியமாகி மீண்டவர்களை அறிவேன். எளிய விஷயமல்ல இது.

அதற்கும் அப்பால்தான் சுஷ¤ப்தியின் பெரும்  ஆனந்த வெளி அதற்கப்பால் துரிய நிலையின் இன்மைவெளி. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். நாம் நம்மை ‘நான்’ என எண்ணிக்கொள்வது [அதாவது நம் தன்னிலை அல்லது Subjectivity ] சமூகத்தால் மொழியால் கட்டமைக்கப்பட்டு நமக்கு அளிக்கப்படுவது. அதை நாம் படிப்படியாக ரத்துசெய்து என்ன எஞ்சுகிறதென பார்க்கிறோம் அதுவே யோகம். 

இதை நெடுங்காலம் பலவகையான பின்னடைவுகளுடன் சிக்கல்களுடன் பொறுமையாகச் செய்தே அடைய முடியும்.  கற்பனைத்திறன் கொண்டவர்களுக்கான தூரம் இருமடங்கு என்று  எனக்குத்தெரியும். எல்லா தளத்திலும் வழிகாட்டல்கள் தேவை. எல்லாம் இருந்தும் சிலசமயம் ஒன்றும் நிகழாமல் போகும். இதை  பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பத்துமாதம் பயிற்சியில் அடையலாமென எண்ணுவது பேதமை.

இந்தப் பயிற்சி எப்படிப்பட்டதெனச் சொல்லும்போதே நீங்கள் அடைந்தது என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது அதீதமான மன அழுத்தம் மூலம் நீங்கள் அடைந்த பிரமைகள் மட்டுமே. நீங்கள் மூச்சுப்பயிற்சியில் உங்கள் மனதைக் குவித்தீர்கள். சீராக நிகழும் எதில் மனதைக் குவித்தாலும் அது பிரக்ஞை நிலையை விலகச் செய்யும் –கடிகாரச் சத்தத்தை கவனித்தால் கூட போதும்.

பிரக்ஞை நிலை விலகியபோது உங்கள் கனவுமனம் கட்டில்லாமல் வெளியாகியது. நீங்கள் கற்பனையில் எண்ணியிருந்தவை எல்லாமே உங்களுக்கு நிகழ்ந்தன என்று கற்பனை செய்துகொண்டிருக்கிறீர்கள். ஒருவர் மெலிந்த உடல்வாகு கொண்டவராக இருந்தால் மன உத்வேகம் மூலமே உடலை எந்த அளவுக்கும் கொண்டுசெல்ல முடியும்.

தியானம் அதன் முதல் நிலையில் நிம்மதியை, ஆழமான தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நிலையை, மட்டுமே அளிக்கவேண்டும். கொந்தளிப்பை அளித்தது என்றால் அது உளப்பிரச்சினையையே காட்டுகிறது. குறிப்பாக, அழுவதென்பது மன அழுத்ததைக் காட்டும் குறியீடு

பொதுவாக தியானத்திலிருக்கையில் அசப்பில் ஒற்றைக்குரல்கள் கேட்பது, உரசல் ஒலிகள் கேட்பது, பார்வைக்குள் ஏராளமான ஒளிப்பொட்டுகள் தெரிய உருவாகும் அதிர்வுகள், அங்கே இல்லாத வாசனைகள் தெரிவது ஆகியவை இருக்கக் கூடாது. உடனே நிறுத்தியாகவேண்டும்

நீங்கள் முரட்டுத்தனமாக, அதீதமாக சென்றிருக்கிறீர்கள். ஏற்கனவே சொன்னதுபோல எந்தவிதமான நுண் கவனிப்பும் இலலமல் அத்தனைபேருக்கும் ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பதன் விளைவு இது.

தியானப்பயிற்சியில்  அவ்வப்போது முழுமையாக நிறுத்திக்கொள்வது முக்கியமான ஒன்று. எல்லா குருநாதர்களும் அதைச் செய்வார்கள். உங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுணர்ச்சி கூடவே இல்லை என்றால் நிறுத்திக்கொள்ளுங்கள். நான் தன்னுணர்ச்சி என்று சொல்வது நான் என்ற உணர்வை அல்ல. நீங்கள் கதறி அழும்போது கூட அழுகிறேன் என்ற எண்ணமாக ஒன்று கூடவே இருக்குமே அதை.

யோகாசனம் என்பது உடலை தகுதிப்படுத்த செய்யும் பயிற்ச்சி. அதை எங்கோ கேட்ட கண்ட நினைவுகள் ஆழ்மனதில் இருக்கையில் ஒருவர் செய்துவிட முடியும். ஆனால் அப்போதுகூட மிக மெதுவாக, விளைவுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செய்யவேண்டுமே ஒழிய மூர்க்கமாக எல்லாவற்றையும் செய்து பார்க்கலாகாது. உடல்நலச்சிக்கல்களை உருவாக்கும். குறிப்பாக சிரசாசனம் சக்ராசனம் போன்றவை.

நீங்கள் தியானத்திற்குக் கையாண்ட பிம்பங்கள் உங்களுக்குரியவை அல்ல. உங்கள் இயல்புக்கு ஏற்ப வேறுவகையான பிம்பங்களை உங்களை அறிந்த ஒரு குரு அளிக்க வேண்டும். வேறுவகையான மந்திரங்களையும்.

தியானம் தேவை என்றால் பத்து நிமிடம் மூச்சுப்பயிற்சி இருபது நிமிடங்களுக்கு மிகாமல் சுத்ததியானம் [மந்திரம் இல்லாமல் ஒரே ஒரு இசைத்துணுக்கை மட்டும் தியானிப்பது. பிம்பங்கள் இல்லாமல் வெறும் ஒளித்துணுக்கை மட்டுமே தியானிப்பது] மட்டும் ஒரே ஒருமுறை செய்யுங்கள். தியானத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை குறித்து வைக்க முயலுங்கள்.

இது எளிய தியானம் மட்டுமே. அனைவருக்கும் உரியது இது. மனதை ஒருமுகப்படுத்தி வல்லமை கொள்ளச்செய்யவும், செயலாற்றலைப் பெருக்கவும் உதவும். நம்மை நாமே அவதானிக்க ஆரம்பிக்கும்போது நாம் நம்மை திறமையாக பயன்படுத்த ஆரம்பிக்கிறோம்.

யோகத்தின் பயணத்தில் அடுத்த படிகளை நீங்கள் குறைந்தது ஒரு வருடம் கழித்தே செய்ய முடியும் . அதற்கு முன் முக்கியமான கேள்வி, எதற்காக யோகம் செய்யவேண்டும்? மனச்சிக்கல்களை தீர்ப்பதற்கான வழி அல்ல அது. மகிழ்ச்சிக்கான வழியும் அல்ல. அது அறிதலுக்கான வழி.

யோகம் லௌகீக வாழ்க்கையிலேயே அல்லல்படும் எளிய மனிதர்களுக்குரியதல்ல. எளிமையான இன்பங்களை நாடும் சாதாரண மனிதர்களுக்குரியதுமல்ல. அவர்கள் உள்ளே வந்தால் பெரும் சிக்கல்களையே சந்திப்பார்கள். தங்கள் எல்லைகளுக்குள்  அவர்கள் நின்றுகொள்வதே நல்லது

யோகம்  அறிதலுக்குரிய தணியா ஆர்வமும் அர்ப்பணிப்பும் அறிவதற்கான மூளைத்திறனும் நுண்ணுணர்வுத்திறனும் உள்ள வலிமையான மனிதர்களுக்குரியது. அசாதாரண மனிதர்களால் மட்டுமே வெற்றிகொள்ளப்படுவது அது. அது சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒருபோதும் வராது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6765

22 comments

Skip to comment form

 1. gomathi sankar

  அனுபவம் இல்லாது வெறும் புத்தகப் படிப்பு மூலம் பேசுகிறேன் என்று சொல்வீர்கள் என்ற தயக்கம் இருந்தாலும் நான் சொல்ல விரும்பியதை அனுமதிப்பீர்கள் என நினைக்கிறேன் இந்த பெண் கூறுவது போல அனுபவங்கள் மேலைநாடுகளிலும் நிறைய சொல்கிறார்கள் அதில் நிறைய பேர் யோகா பற்றியோ குண்டலினி பற்றியோ முன்னரே அறியாதவர்கள் மூச்சுப் பயிற்சி போன்ற யோக சாதனைகளின் பொது மட்டுமல்ல பிரசவம் போன்ற நெருக்கடிகளின் போது கூட தன்னிச்சையாக நிகழ்ந்திருக்கிறது நம்முடைய அறிதல் முழுக்க மூளை மூலமாகவே நிகழ்கிறது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் அறிவியல் புனைகதைகளில் hyperspace என்ற கருதுகோள் கேள்விப்படலாம் காலம் மற்றும் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கீறல்கள் மூலம் ஒளிவேகம் என்ற தடையை மீறி வெளிப் பிரபஞ்சத்துள் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை அது வெறும் நம்பிக்கை இல்லை என்று இன்றைய அறிவியலார்கள் சிலர் கருதுகிறார்கள் நாசா இதுபற்றி அதிகாரபூர்வமற்ற சில ஆராய்ச்சிகள் செய்கிறது நம்முடைய உடலிலும் இதுபோல் பிரபஞ்சத்துடன் நேரடி தொடர்பு கொள்ளக் கூடிய சில திறப்புக்கள் உள்ளன இவையே சக்கரங்கள் என்றும் குண்டலினி என்றும் மறை இலக்கியத்தில் பேசப்படுகின்றன இந்த தாழ்கள் பயிற்சி மூலமோ தற்ச்செயலாகவோ திறக்கும்போது பல்வேறு அனுபவங்கள் ஏற்படுகின்றன எல்லாநேரமும் பயங்கர அனுபவங்களே கிட்டும் என்று இல்லை சில நேரங்களில் அற்புத காட்சிகளும் கிட்டுகின்றன நீங்கள் சொல்வதுபோல் குரு மிக அவசியம் அதாவது தனிப்பட்ட குரு இல்லாவிடில் மனம் சிதைந்து போகும் வாய்ப்பு மிக அதிகம் இந்த வழி ஒரு தடவை திறந்து விட்டால் மீண்டும் அடைப்பது சிரமம் நிறைய குருக்கள் சில க்ரியா பயிற்ச்சிகள் மூலம் இதை உடல்ரீதியிலோ மனரீதியிலோ தயாராய் இல்லாத மனிதர்களுக்கு அறிமுகப் படுத்தி விடுகிறார்கள் அவர்களுக்கும் இதனால் ஏற்படுகிற பிரச்சனைகளை தீர்க்க தெரியாது நீங்கள் சொல்வதுபோல் இது கையை வைத்தால் வெட்டுகிற நதியே யோக நூல்களிலேயே இது வீரர்களுக்கானது என்றே கூறப்பட்டுள்ளது ஆனால் நாம் எல்லோரும் நம்மை வீரர்கள் என்றே நினைத்துக் கொள்ள ஆசைப் படுகிறோம் உண்மை அதுவல்ல இது சற்று பலவந்தமான வழி சரியான தயாரிப்பு இல்லையெனில் ருது ஆகாத பெண்ணை வலுக்கட்டாயம் செய்வதுபோலவே இருக்கும் அதுவும் காளி போன்ற ஒரு யட்சியை!

 2. change

  இந்த கேள்வியை கேட்டவருக்கும், விரிவாக பதிலளித்த உங்களுக்கும் என் நன்றிகள். எனக்குள் இருந்த ஒரு குழப்பமான, என்னால் வார்த்தை படுத்த முடியாத நிலையில் இருந்த ஒரு புரிதலை, மிக இயல்பாக உள்வாங்கி கொள்ள வைத்தமைக்காக.

  -change
  http://change-within.blogspot.com

 3. Prakash

  ஓஷோ படித்து ஒன்றை மற்றும் ஆழமாக எடுத்துகொண்டேன். உடலால் மனதை கட்டுபடுத்தலாம். மனத்தால் உடலை கட்டுபடுத்தலாம். உடல் நாம் மனதால் தீர்கமாக சொல்வதை கேட்கின்றது. நான் சொல்வது சிலருக்கு சிரிப்பு வரும், ஆனால் என் கை ரேகை இவ்வாறு மாற வேண்டும் , மற்றும் விரலில் ஒரு மச்சம் நீங்க வேண்டும் என்று நினைத்து நினைத்து இரண்டு வருடங்களில் நடந்தது (அவர் சொன்னதை சோதனை செய்து பார்க்க).

  சிறு சிறு காச்சல், உடல் உபாதைகளையும் மனத்தால் மாற்றலாம். இது ஒரு காடு. அசாத்திய தைரியம் வேண்டும். மனதால் வியாதியை குனபடுதலாம் என்றால், மனத்தால் அதை கொண்டும் வரலாம். மனதை குவித்தால் நினைப்பது – கற்பனை – ஓரளவுக்கு சாத்தியம் என்பதை அனுபவமாக உணர்துள்ளேன்.

  இது காடு தான். அதாவது கற்பனைக்கும் நிகழ்வுக்கும் த்யானத்தில் ஆரம்பத்தில் அதிகம் வேற்றுமை தெரியாது. எது உண்மை என்று அறிய பல வருடங்கள் கூட ஆகும் என்று தோன்றுகிறது. திடீர்னு சிலருக்கு கிருஷ்ணர் காட்சி தர மாதிரி இருக்கும், சிலருக்கு வெளிச்சம் தெரிவது மாதிரி இருக்கும். இது உள் மனதில் பொதிந்து உள்ள ஆசை கனவு போல தெர்கின்றது. அதாவது கனவை த்யானத்தில் பாப்போம். கனவு கனவில் எவ்வளவு உண்மையாக உள்ளது ? த்யானத்தில் அதே கனவு தெரிந்தால் உண்மை என்று நம்ப கூடும் தானே ? அதையும் தாண்டி செல்வதே Adventure. ஜெமோ என் புரிதல் சரி தானா இல்லை நானும் எங்காவது சறுக்கி கொண்டு இருகின்றேனா ?

 4. gomathi sankar

  மேலும் எல்லா அணுக்களும் தங்கள் பௌதீக இருப்பின் மறுமுனையாக ஆற்றல் அல்லது சக்தி இருப்பை கொண்டுள்ளன இது புரோட்டான் எலெக்ட்ரான் என்று எளிய இயற்பியலே இதில் மனிதனும் விலக்கல்ல இந்த மாதிரி பயிற்சிகள் நம்முடைய சக்தி இருப்பை அறிமுகம் செய்துவைக்கவே முயல்கின்றன இது ஒரு பார்வை மாற்றமே ஆனால் தயாராக இல்ல்லாதவர்க்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்கும் இந்த தளத்தில் நமது எண்ணங்களே பொருட்கள் மனமே உடல் எண்ணங்கள் மீது ஆளுமை இல்லாதவர்க்கு இது மிக ஆபத்தான நிலை நங்கூரம் இல்லாத கப்பல் போல அலைந்து பாறைகளில் மோதி உடைந்து விட நேரலாம் இந்த வழி திறந்த உடன் நாம் கார்பட் கீழே மறைத்து வைத்த அத்தனை குப்பைகளும் வெளிவரும் ஒருவகையில் நம்முடைய அத்தனை பாசாங்குகள் கீழே இருக்கும் உண்மையான சுயம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் இத்தனை ஆபத்துக்கள் இருந்தாலும் இதை ஒதுக்கிவிடக் கூடாது என்பதே என் கருத்து ஏனெனில் இது அறிதலின் பரிமாணத்தில் முக்கியமானதொரு பாய்ச்சல் இதைப் பற்றி இன்னும் தெளிவாக அறிந்து கொள்வது நம்முடைய இருத்தல் பற்றி நிறைய கேள்விகளுக்கு விடை தரும் என தோன்றுகிறது அறிவை அஞ்சுதல் நம் மரபில் இல்லை

 5. Ramachandra Sarma

  இது மிகவும் ஆழமாக விஞ்ஞானிகளால் விளக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இதை யோக சாதனைகள் என்று அடக்க விரும்பவில்லை. இன்னும் விஞ்ஞானம் செல்லவேண்டிய தூரம் மிகவும் இருக்கிறது முளையை பொருத்தவரை. இருப்பினும், விஞ்ஞானம் ஒரு நாள் வெல்லும்.

  இந்தத்தளம் http://www.ted.com உலகின் பல முக்கியமான பேச்சுக்களை வீடியோவாக கொண்டுள்ளது. கீழ்வரும் இணைப்புகளை கேட்டுப்பாருங்கள்.

  http://www.ted.com/talks/vs_ramachandran_the_neurons_that_shaped_civilization.html
  http://www.ted.com/talks/vilayanur_ramachandran_on_your_mind.html
  http://www.ted.com/talks/christopher_decharms_scans_the_brain_in_real_time.html

 6. Prakash

  gomathi sankar கருத்தில் நானும் உடன் படுகிறேன். தரையில் நடந்தால் ஆபத்து இருந்தும் குரங்கு மனிதனாக ஆனது. இப்படி Risk எடுத்தால் தான் நகர முடியும். அறிவை அஞ்சுதல் – அதை காட்டிலும் உண்மையை அஞ்சுதல் நம் மரபில் இல்லை என்று தோன்றுகிறது.

 7. Prakash

  >>அது சூப்பர் மார்க்கெட்டுக்கு ஒருபோதும் வராது ..

  காலம் கனிந்தால் அதுவும் வரும் என்றே படுகின்றது. முதல் முறை செல்பவர் தான் அதிக கஷ்ட பட வேண்டும். அறிவும் திறனும் வளர வளர எல்லோருக்கும் இது வாய்க்கும் என்றே படுகின்றது. எல்லாவற்றையும் போல. இப்பொழுது அழ்மனத்தை பற்றிய ஆராய்ச்சியை பார்த்தல் Conscious mind அவ்வளவு தூரத்தில் இல்லை என்றே படுகின்றது. பல்பு கண்டு பிடிபதிற்கு முன்பு அதை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம், அனால் இன்று எவர் வேண்டுமானாலும் சுவிட்ச் போட்டு பல்பு’ஐ எரிய வைக்கலாம் அதை அனுபவிக்கலாம். எல்லாமும் எல்லாருக்கும் காலம் கணித்தால் கிடைக்கும் என்றே நினைகிறேன்..

 8. Vijay S

  //பல்பு கண்டு பிடிபதிற்கு முன்பு அதை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம், அனால் இன்று எவர் வேண்டுமானாலும் சுவிட்ச் போட்டு பல்பு’ஐ எரிய வைக்கலாம் அதை அனுபவிக்கலாம்.//

  அன்புள்ள திரு.பிரகாஷ், நீங்கள் சொல்வதில் லாஜிக் கொஞ்சம் இடிக்கிறது.

  “அறிவியல்” (Science) என்பதும் “தொழில்நுட்பம்” (Technology) என்பதும் வெவ்வேறு.

  பல்புக்குப் பின்னால் இருக்கும் “அறிவியலை” “அறிந்ததனால்” முதலில் ஒருத்தர் அந்த “அறிவைத்” “தொழில்நுட்பமாக்கி” பல்பை உருவாக்கினார். ஆக, பல்பைப் பயன்படுத்துவோர் ஒரு “தொழில்நுட்பத்தைப்” “பயன்படுத்துகிறார்”-களேயன்றி அதன் பின்னணியிலுள்ள “அறிவியலை” தாங்களும் “அறிந்து”-விடுவதில்லை.

  பல்பு என்பது ஒரு புரோடக்ட். பல்பை சூப்பர்மார்க்கெட்டில் வாங்கலாம்; பயன்படுத்தலாம்; ஆனால், அதன் பின்னாலிருக்கும் அறிவை எந்த சூப்பர்மார்க்கெட்டிலும் வாங்கிவிடவும் முடியாது; அது அனைவருக்கானதும் அல்ல; அது அதற்குத் தேவையான மூளைத்திறன் கொண்டோருக்கு மட்டுமே.

 9. Prakash

  அன்புள்ள விஜய் சரி தான். ஆனால் அதன் பின்னாலிருக்கும் அறிவை முன்னை விட இப்பொழுது எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் இல்லையா ?.

  Einstein வழ நாள் முழுக்க கஷ்ட பட்டு கண்டு பிடித்த E=mc^2 நாம் புரிந்து கொள்வதிற்கு எவ்வளவு கஷ்டம். ஒரு நல்ல வாத்தியார் கிடைத்தால் போதும் அல்லவா ? அன்று ஒருவர் கண்டு பிடித்தது, இன்று ஒரு லட்சம் பேருக்காவது நன்றாக புரிகின்றது இல்லயா ? அது காலம் மாற மாற அனைவரையும் சென்றடையுமா இல்லையா ?

  இன்று ஜெமோ’வின் அறிவையும் நம்மால் அறுவடை செய்ய முடிகின்றது , அவர் அளவுக்கு தெரியுமா என்றில்லை ஆனால் அவர் கஷ்டப்பட்டு தேடி எழுதுவதற்கு சில விஷயங்கள் பல வருடங்கள் கூட ஆகலாம், அனால் நான் இங்கே ஜாலி’ஆகா காபி குடித்து கொண்டு ஒரு கட்டுரையில் அந்த அறிவை ஓரளவிற்கேனும் ஒரு நாளில் பெருகின்றேனா இல்லயா ?

 10. saran

  பல நாட்களாக என் மனதில் இருந்த கேள்விக்கு (
  என் மனதில் இருந்த கேள்வி.. யோகா செய்யும் மனிதர்களில் சிலர் காரணமில்லாமல் சிரிக்கிறார்கள் / அழுகிறார்கள் ?)
  விடை கிடைத்தது..Thanks for the wonderful Answer and Question

 11. L Muthuramalingam

  அன்புள்ள ஜெமோ, உங்கள் கட்டுரை மிக அருமை. ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாராட்டுகள். எனக்கென்னவோ விசயம் வெளியில் இல்லாதது மாதிரியே தெரிகிறது. மனசே ரிலாக்‌ஷ் ப்ளீஷ் புத்தகம் எனக்கு மிக எளிதாக விளக்கியாதாக படுகிறது. என்னை மிகவும் மாற்றியமைத்திருப்பதாக அந்த புத்தகத்தை என் நண்பர்கள் மிகவும் விரும்பி படிக்கிறார்கள். நான் கூட பரிந்துரைக்கிறேன், மன நிம்மதிக்காக, பலருக்கும்.

 12. Ramachandra Sarma

  விஜய், சரியாகச் சொன்னீர்கள். இந்த ஒரு வாதம் அறியாது நான் தோற்ற விவாதங்கள் எத்தனையோ. :(

 13. zvasanth

  Dear Jeyamohan,

  she is talking the “There is nothing in and itself – Buddhist philosophy” in scientific way. It also closes with the avatar philosophy. This is one of the top 10 TED Talks.

  http://www.ted.com/talks/jill_bolte_taylor_s_powerful_stroke_of_insight.html

  Any way put outside the lankavathara sutra few minutes.

 14. Vijay S

  //ஆனால் அதன் பின்னாலிருக்கும் அறிவை முன்னை விட இப்பொழுது எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் இல்லையா ?//

  நாம் இவ்வாறெல்லாம் “வாங்குவது” அறிதலின் பாதைகளுக்கான பயன்பாட்டு உரிமைகளை மட்டுமே தவிர அறிவையே அல்லவே (We can only buy access rights to knowledge, not knowledge itself)! இந்தப் பாதையில் சென்றால் இந்த இடத்தை அடையலாம் என்பது வேறு, அந்தப் பாதை வழியே பயணித்து அந்த இறுதி அறிவை அடைவது என்பது வேறு, இல்லையா? (Knowing the path is different from walking the path.)

  //Einstein வழ நாள் முழுக்க கஷ்ட பட்டு கண்டு பிடித்த E=mc^2 நாம் புரிந்து கொள்வதிற்கு எவ்வளவு கஷ்டம். ஒரு நல்ல வாத்தியார் கிடைத்தால் போதும் அல்லவா?//

  ஒரு விஷயத்தை மறக்கிறீர்கள். பழைய பாக்யராஜ் படத்தில் “ஏக் காவ்ன் மே ஏக் கிஸான் ரெஹ்தா தா” என்று சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் நல்ல வாத்தியாரா என்று பார்க்குமுன், மாணவனுக்கு அதைக் கற்கும் ஆர்வம் மாத்திரமல்ல, ஓர் அடிப்படைப் புரிந்து கொள்ளும் திறனும் (comprehension) இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

  இன்னொன்று, இந்த “நல்ல வாத்தியார்” என்பவர் தேவைப்படுகிறார் அல்லவா! ஒரு வாத்தியார் இல்லாமல் எத்தனை பேர் தாமாகவே ஐன்ஸ்டைன் சென்றடைந்த சிகரங்களைச் சென்றடைந்தனர்? அல்லது சென்றடைய முடியும்?

  மேலும், தகவல் பிழையைப் பெரிது படுத்துகிறேன் என்று நினைக்க மாட்டீர்களென்றால், ஐன்ஸ்டைன் வாழ்நாள் முழுக்கவெல்லாம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கவில்லை; தனது 26 வயதிலேயே தான். இது ஏன் முக்கியம் என்றால், 26 வயதில் அவர் கண்டடைந்தவற்றை அடைய, அவரது மூளைத்திறன் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்!

  //அன்று ஒருவர் கண்டு பிடித்தது, இன்று ஒரு லட்சம் பேருக்காவது நன்றாக புரிகின்றது இல்லயா ? அது காலம் மாற மாற அனைவரையும் சென்றடையுமா இல்லையா ?//

  உலகம் உருண்டை என்று ஏட்டில் படிக்கும் அளவில் வேண்டுமானால் சென்றடையலாம்; ஏனென்றால் இயற்பியல் உண்மைகள், ஜெ பல விஷயங்களில் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளது போல், புறவயமானவை; அகவயமான விஷயங்களில் அறிதல் என்பதே “அறிந்துணர்தல்” தான் – அதில் “உணர்தல்” என்கிற ஒரு கூறும் சேர்ந்தே தான் இருக்கும். ஜெ இங்கு கூட “அறிவதற்கான மூளைத்திறனும் நுண்ணுணர்வுத்திறனும்” என்று கூறியிருப்பதை கவனிக்க!

 15. stride

  ஆன்மீகம் போலி ஆன்மீகம் குறித்து வந்த பதில்களை பார்த்து விவாதங்களின் எல்லை எழுதினார் ஜெ. அதில்

  “விவாதிக்கவேண்டாமென்று சொன்னது நிராகரிப்புக்கான உரிமை உண்டு என்ற அடிக்குறிப்புடன்தான். மிகப்பெரும்பாலானவர்கள் நிராகரிப்பார்கள் என நான் அறிவேன். இந்த எதிர்வினைகளிலேயே நிராகரிப்பே அதிகம்.

  ஏன் இவற்றை இப்படி புறவயமாக எழுதக்கூடாதென நினைக்கிறேன் என்றால் இத்தகைய விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கு சில மனநிலை சார்ந்த நிபந்தனைகள் உள்ளன. ஆர்வம் இல்லாதவர்களிடம் சொல்லலாகாது. இந்த தளம் நோக்கி மனத்தில் ஒரு அடிப்படை திறப்பு இல்லாதவர்களிடம் சொல்லக்கூடாது. சொல்லப்படுபவருக்கும் சொல்பவருக்கும் இடையே ஆழமான நம்பிக்கை இல்லாமல் சொல்லக்கூடாது. சொல்லப்படும் சந்தர்ப்பமும் சூழலும் சிறப்பாக அமையாது சொல்லக்கூடாது

  இல்லாமல் சொல்லப்படும்போது அதன் சாராம்சமான அனுபவதளத்திற்குப் பதில் வெறும் சொற்களே சென்று சேர்கிறது. விவாதம் மூலம் அந்த அனுபவ தளம் மேலும் நிராகரிக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் நம்பிக்கை இல்லாத போது அனுபவங்கள்மீதும் நம்பிக்கை இல்லாமலாகிறது.

  கண்ணாடி அறைக்குள் நின்று பேசுபவரின் அசைவுகள் கேலிக்குரியதாக ஆவதைப்போன்றதே இதுவும். அவர் என்ன சொனனரென்று தெரியாதபோது அவர் கோமாளியாக ஆகிறார். இந்த தளத்தைச் சாராத ஒருவருக்கு இவ்விஷயங்கள் வேடிக்கையோ விசித்திரமோ அபத்தமோ ஆக தோன்றக்கூடும். ”

  என்று சென்ற வாரம் தான் எழுதினார். இங்குள்ள கருத்துக்களை பார்க்கும் போது அதை மறுபடியும் படித்து பார்த்தேன். எனக்கு ஆன்மீகம் வெகு தொலைவு தான். வெகு தொலைவு என்பதை விட அது வேறு பரிமாணத்தில் சஞ்சரிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அங்கே இயற்பியல் விதிகள் கிடையாது. தர்க்கம் வேலை செய்யாது. அந்த பரிணாமத்தை கடக்க நம் புலன்களுக்கு தெரிந்த யதார்தத்தை விட்டு விட்டு கடக்க வேண்டும். அது என்னால் முடியாது. அப்படி முடியாமல் அதனை வெளியில் இருந்து அறிய முடிவது இங்கிருந்து செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதை யூகிப்பதை போல் ஆகி விடும். இன்னும் இருபது வருடங்களில் செவ்வாய்க்கு சென்று விடுவோம் என்று கூறலாம். செவ்வாய்க்கு சென்ற பின் அதை பூமி அளவுக்கு அறிய எவ்வளவு வருடமாகும். சரி செவ்வாய்க்கு போனால் என்ன. அங்கிருந்து தூரத்தில் தெரியும் நட்சத்திரத்தை காட்டி அதனை அறிய முடியுமா என்று அறிதலின் எல்லை நகர்த்தப்பட்டால்? அப்புறம் பிரபஞ்சத்தின் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களையும் முழுதும் அறிய வேண்டுமானால்? இது முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும்.

  இது தான் அறிவியலின் பணி என்று சொல்லலாம். அது தங்கு தடையின்றி சென்று கொண்டே இருக்கும். ஆனால் அதன் எல்லைகளும் முடிவில்லாமல் விரிவடைந்து கொண்டே இருக்கும். இதனை விடவும் விரிவானது ஆன்மீகமும் அதனை உணரும் ஆழ் மனமும் என்று நான் கருதுகிறேன். மரணம் இதனை மேலும் சிக்கலாக்குகிறது. எளிதில் அறிவியல் விதிகளால் அறிய முடியாது.

  அதனை இப்படி அறிவியல் கட்டுமானங்கள் மூலம் விவாதிப்பது “Lost in translation” ஆக தான் இருக்கும். கடைசியில் ஜெ எழுதியதை ஆசனமும், யோகமும், தியானமும் ஒன்று தான் என்று நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  சிவா

 16. Prakash

  //ஆர்வம் மாத்திரமல்ல, ஓர் அடிப்படைப் புரிந்து கொள்ளும் திறனும் இருக்க வேண்டும்.

  ஆர்வம இருந்தால் அதுவும் தானாக வரும் என்பது என் வாதம் :)

  //அகவயமான விஷயங்களில் அறிதல் என்பதே “அறிந்துணர்தல்” தான் – அதில் “உணர்தல்” என்கிற ஒரு கூறும் சேர்ந்தே தான் இருக்கும்

  நச்சுனு சொன்னீங்க. த்யானம் உணர்தல், புறவயமாக தூண்ட படலாமே ஒழிய , நாம் தான் உணர வேண்டும். வெறும் அறிவியல் சூத்திரம் மனனம் செய்வது போல அல்ல இது.

  Evolution படி ஒரு சிலரே வெற்றி அடைய முடியும் ஆனால் எல்லோரும் போட்டி போட வேண்டும். முயற்சி செய்தால் தான் தெரியும். என்னால் முடியாது என்று நின்றவர்கள் , வியக்கும் அளவுக்கு மாறுதலடைவதை பார்த்திருகிறேன்.

  ஜெமோ சொல்வதிலும், நீங்கள் சொல்வதிலும் ஒரு நெகடிவ் அப்ரோச் இருப்பதாக படுகின்றது (நான் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் – பல வற்றையும் போல). இது மேலும் நமக்கல்லாம் முடியாது என்று நின்று விடவே உதவும்.

  கம்பளி பூச்சி கூட்டுக்குள் கஷ்ட படும் போது, அதன் கஷ்டத்தை போக்குவதற்கு அந்த கூட்டை உடைத்தால் என்ன ஆகும் – அது கடைசி வரை வண்ணாத்தி பூச்சி ஆகாது. அதை தான் நான் சொல்ல விளைகிறேன்.

 17. Prakash

  என்ன இது ஒரே விஷயம் பல வாறு தெரிகின்றது !?!?! திரும்பி படித்து யோசித்து பார்த்ததில், நான் தான் கம்பளி பூச்சி கூட்டை உடைகின்றேனோ என்று படுகின்றது. நீங்க கஷ்ட படனும் , சிலருக்கு தான் வாய்க்கும் என்பதை ‘நெருப்பு’ இருந்தால், அந்த ஒரு ‘சிலருள் நானும் ஒருவன்’ என்று கேட்கும் என படுகின்றது. பேசாமல் நான் வாயை திறக்காமல் இருப்பதே நன்று :)

 18. Ramachandra Sarma

  பொறுமையாக தேடி, படித்து, கிரகித்து, உணர்ந்து கொள்ளுபவருக்கு கேள்விகளே இருக்காது என்று மேல்மங்கலம் முத்தையா சுவாமி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.:)

 19. bogaros

  அன்புள்ள ஜெயமோகன்,
  தங்களின் யோகம் குறித்த கட்டுரை அற்புதம். தங்களின் வலிமையான மொழி கனமான விசயங்களை எளிமையாக்குகிறது. ஒரு சந்தேகம். சாஷா அவர்களின் கடிதத்தில் “என்னை அறியாமல் ஹதயோகா முத்திரைகளும் யோகாக்களும் செய்ய ஆரம்பித்தேன்” என்று கூறியிருந்தார். அது எவ்வாறு சாத்தியம் ஆகியது என்று விளக்க முடியுமா?. அத்துடன் வேதாத்திரி மகரிஷின் தத்துவங்கள் / தியான முறைகள் குறித்த தங்களின் கருத்தை அறிய ஆர்வமாய் உள்ளேன்.

  மிக்க நன்றி
  போகர்.

 20. gomathi sankar

  இந்த அனுபவங்களுக்கு உண்மையில் ஒரு தேவை இருக்கவே செய்கிறது அர்ச்சுனனுக்கு கீதை மட்டுமே போதுமாக இல்லை கடைசியில் விஸ்வ ரூப தரிசனமும் தேவையாக இருந்தது சமீப கால உதாரணமாக ராமகிருஷ்ணர் விவேகானந்தருக்கு கடவுளைக் காட்டியது சொல்லலாம் ஆனால் கீதைதான் பார்த்தனை அந்த தரிசனத்துக்கு தயார் செய்தது இல்லாவிடில் அவன் மனம் சிதறி இருக்க கூடும் பார்த்தன் நரேந்திரன் போன்ற தருக்கத்தில் கட்டுண்டவர்க்கு சட்டென்று வேறொரு பார்வையை ஞானிகள் சீடர்களுக்கு வழங்கி திசைதிருப்பி விட்டிருப்பதை சரித்திரம் முழுக்க காணலாம் இல்லாவிடில் அவர்கள் தருக்கத்தின் எல்லையிலேயே காலம் முழுக்க நின்றுகொண்டிருப்பார்கள் இன்றைய கல்விமுறையின் காரணமாக நாம் தருக்கத்தை மிக அதிகமாக சார்ந்திருக்கிறோம் தாமஸ் மாதிரி கடவுளை கையால் தொட்டு உறுதிப் படுத்திக்கொள்ள நினைக்கிறோம் ரவிசங்கர் போன்ற குருக்கள் இதையே சில கிரியாக்கள் மூலம் தருவதாக சொல்கின்றனர் இவர்கள் கொடுக்கிற பயிற்ச்சிகள் எதுவும் புதிதல்ல இதை இவர்கள் நேரடியாக அளிப்பது இல்லை என்பதே குறை

 21. tamilsabari

  //தியானம் தேவை என்றால் பத்து நிமிடம் மூச்சுப்பயிற்சி இருபது நிமிடங்களுக்கு மிகாமல் சுத்ததியானம் [மந்திரம் இல்லாமல் ஒரே ஒரு இசைத்துணுக்கை மட்டும் தியானிப்பது. பிம்பங்கள் இல்லாமல் வெறும் ஒளித்துணுக்கை மட்டுமே தியானிப்பது] மட்டும் ஒரே ஒருமுறை செய்யுங்கள். தியானத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை குறித்து வைக்க முயலுங்கள்.//

  தியானம் பற்றிய என்னுடைய பழைய விளக்கங்களுடன் ஒத்து போகிறது. நன்றி.

  உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?
  உங்களை உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா – 2 ?

 22. ஜெயமோகன்

  Dear Jeyamohan,

  Sorry, I am not familiar at writing with tamil key board.

  Your intrepretations of Yoga, Sadhana, and meditation are simple and easy to understand.

  You have revealed how a true spiritual Guru would behave when people flock to him/her for truth.

  Next time when I come to India, I will definitely add the Cave residence of Appoppan in my itinerary.

  Please continue to write on this topic about many of the unknown great saints and spiritual teachers.

  Warm regards,

  Thanvi

Comments have been disabled.