இரவு 13

பிடிபட்ட கரடி
மெல்ல எழுந்து சிலித்துக்கொள்வதுபோல
தன்னைக் காட்டியது
இந்த இரவு

 

ஆழ்தல் என்பது ஒன்றொன்றாக கைவிடுதல்தான். ஏனென்றால் நாம் அப்போது அவையனைத்தையும் நம்முடையனவாக ஆக்கியிருக்கும் நம்மையே படிப்படியாகக் கைவிடுகிறோம் . என் கண்ணெதிரே நான் சார்ந்திருந்த ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல மறைவதை கண்டுகொண்டிருந்தேன். என் அறிக்கைகள் தாமதமாக ஆக மின்னஞ்சல்கள் குவிந்தன. நட்பார்ந்த தொனி சிவந்து சிவந்து பழுத்து கனலுமிழும் சொற்களாகி பின் குளிர்ந்து சில்லிட்டது. அந்த எல்லையை நான் உணர்ந்தபோது முடிவெடுக்க ஒருநாள் தயங்கினேன்.

என் ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். என் வணிகத்தொடர்புகள் ஒவ்வொன்றாக விலகின. கடைசியில் நானும் என் ஆடிட்டரும் மட்டும் உரையாடிக்கொண்டிருந்தோம். அந்தியின் சிவந்த ஒளி காயலில் உருகிக் கொண்டிருந்தபோது என்னுடைய பங்குகள் மற்றும் வருமான வரி தவிர எந்தத் தகவலையும் எனக்கனுப்பவேண்டாம் என்ற மின்னஞ்சலை நான் ஆடிட்டருக்கு அனுப்பினேன். ‘மெஸேஜ் செண்ட்’ என்ற மஞ்சள் நிற அறிவிப்பு ஒரு பெரிய விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தியது. கைகளை விரித்து பின்னால் சாய்த்துக்கொண்டு கால்களை நீட்டி அமர்ந்துகொண்டேன். மிதப்பதுபோல உணர்ந்தேன்.

என்னுடைய சேமிப்பு எனக்கு எஞ்சிய வருடங்களை முழுக்க மிகவசதியானவனாக வாழப்போதுமானது. எனக்கு சென்னையிலும் மும்பையிலும் குடியிருப்புகள் இருந்தன. அப்படியானால் ஒவ்வொருநாளும் இதில் நான் என்னதான் செய்துகோண்டிருந்தேன்? வெற்றியை தேடிக்கொண்டிருந்தேன். வெற்றி என்றால்? அதை என்னால் வரையறுக்க முடியவில்லை. ஆடிட்டிங் பட்டயமும் நிர்வாகவியலில் முதுமுனைவர் பட்டமுமாக நான் பங்குச்சந்தை நிறுவனமொன்றில் பணிக்குச்சேர்ந்து பதினேழு வருடங்களாகின்றன. அப்போது வெற்றி என்பது எனக்கு ஒரு இடம் என்றே என்னுள்  இருந்தது. நான் பத்தோடு பதினொன்றல்ல என்றாகவேண்டும், என் பெயர் தனியாக சொல்லப்படவேண்டும்.

பின்பு ஒரு கருத்தரங்கில் என் துறையில் அன்று பெரிதும் பேசப்பட்டிருந்த கெ.ஆர்.பார்த்தசாரதியைச் சந்தித்தேன். பின்பு பார்த்தசாரதியாக ஆவதே என்னுடைய வெற்றி என்றாகியது. அதற்காக நான் குருதி சிந்தினேன், என்குருதி, பிறர் குருதி. பார்த்தசாரதியைக் கடந்து வெகுதூரம் சென்ற பின் மும்பையில் என் துறையின் சக்கரவர்த்தியாக இருந்த விவேக் முல்சந்தானியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அதன் பின் நியூயார்க்கின் டோரொன் ஸ்விரி. என் இலக்குகள் என்னை ஒவ்வொரு கணமும் தூக்கிச் சென்றுகொண்டிருந்தன, ஜெட் விமானத்தின் பின்பக்கம் நெருப்பு உமிழும் உக்கிரமான இயந்திரம் போல.

ஆனால் என்னுடைய வாழ்க்கை என்பது அந்தப் பயணம் மட்டுமே. தெளிவான இலக்குள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்வதில்லை. இலக்குகளில் இருந்து இலக்குகளை நோக்கி தாவிச் செல்வதையே அவர்கள் வளர்ச்சி என்று எண்ணுகிறார்கள்.எத்தனை அபத்தமான ஒரு கோட்பாடு. இயற்கையில் முடிவிலாத வளாச்சி என்ற ஒன்று எங்கும் இல்லை. முழுமை நோக்கிய நகர்வே வளர்ச்சி. அதன் பின் இருப்பே முழுமையாக ஆகிவிடுகிறது. என்னைச்சுற்றி தென்னைமரங்களும் மாமரமும் கரியபசுமைக்குள் மூழ்கிக்கொண்டிருந்தன. ஆம், இவை அனைத்துமே வளர்ந்து முடிந்துவிட்டவை.

இந்த தென்னைமரம் எத்தனை வருடங்கள் வளர்ந்திருக்கும்? அதிகபட்சம் பதினைந்து வருடங்கள். அதன் பின்? வளர்வதற்கான அந்த ஆற்றலை முழுக்க அது என்ன செய்கிறது? மூத்த தென்னையின் இலைகள் சிறுத்துவிடுகின்றன.  தேங்காய்களும் குறுகிவிடுகின்றன. ஆனால் அதன் தடி வைரம் பாய ஆரம்பிக்கிறது. அதன் இளநீரும் பருப்பும் தித்திக்க ஆரம்பிக்கின்றன. அதற்கு வளர்ச்சி என்ற ஒன்று இருந்தால் அது அகவளர்ச்சிதான். வளர்ச்சி என்பது எங்கோ ஒரு புள்ளியில் கனிதலாக மாறிவிடுகிறது.

அன்று மாலை நான் நீலிமாவுடன் ·போர்ட் கொச்சியில் ஒரு மாலுமிகளின் உணவகத்துக்குச் சென்றிருந்தேன். ஸீஸைட் பேர்ல் என்ற அந்த ஓட்டலுக்கு முன்னால்  போடப்பட்ட மாபெரும் கான்கிரீட் நங்கூரங்கள் மீது கடல் ஓங்கி ஓங்கி அறைந்து வெண்ணிறமாக நுரைத்து சிதறி வழிந்தோடியது. கடற்காற்று மண்ணை அள்ளி சுவர்கள் மேல் கொட்டும் ஒலி மழைபோல கேட்டது. கார்க்கூரைமேல் மணல் விர்ர் என்று பொழிந்தது.

கான்கிரீட் தடுப்புக்கு அப்பால் காற்று கோண்டு கொட்டிய மென்மணல்வெளியில் நாலைந்து கார்கள்தான் நின்றன. நியான் விளக்கு ஒளியில் கடலோரமுத்தின் பெயர் ஒளிவிட அதன் கண்ணாடிக்கதவின் மீது கடல்நுரையின் வெண்மை ரகசியமான ஒரு பிம்பமாக தெரிவதைக் கண்டேன். காரைப்பூட்டும்போது காரின் கண்ணாடியிலும் கடலின் வெண்ணுரை தெரிந்தது. கடல் மீது செவ்விண்மீன்கள் போல மீன்பிடிப்படகுகளின் விளக்குகள் பரவிக்கிடந்தன.

கையில் ஒரு ஓலைத்தொப்பியுடன் நின்றிருந்த வெள்ளையர் என்னிடம் ‘ஹாய்” என்றார். ரெம்பிராண்ட் ஓவியங்களில் இருட்டுப் பின்புலத்தில் தெரியும் சிவந்த முகம் போலிருந்தது அது. வலுவான தாடைகளும் சுருக்கங்கள் அடந்த கனத்த கழுத்தும் கொண்டவர். அறுபது வயதிருக்கும்.  நான்”ஹாய்” என்றேன். புன்னகையுடன் ”ஷி இஸ் என் ஏஞ்சல்” என்றார் நீலிமாவை நோக்கி. நீலிமா ”தாங்க்ஸ்” என்றாள் சிரித்தபடி. கடல் நுரையைக் காட்டி ”பீர் நுரைப்பது போலிருக்கிறது இல்லையா?” என்றார் ” எவ்வளவு பிரம்மாண்டமான பீர் பீப்பாய்! ” நான் சிரித்தேன். ”உங்களுக்கு நல்ல பொழுது அமையட்டும்” என்று வாழ்த்தி தொப்பியை மெல்ல தூக்கினார்.

உள்ளே இருட்டு. புறஊதா விளக்குகள் எங்கிருக்கின்றன என்று தெரியாமல் ஒளிர முட்டைவடிவமான கூடம் அந்தரவெளியில் மிதப்பது போல தெரிந்தது. வான் இல்லை, தரை இல்லை. மிதக்கும் மேஜைகள் மிதக்கும் பேரர்கள். நீலிமா செம்மஞ்சள் நிற சேலைகட்டியிருந்தாள். அது கிளிப்பச்சை நிறமாக மாறியது. என்னுடைய வெள்ளைநிறமான சட்டை ஒளிவிடும் நீலமாகியது. எல்லா ஆடைகளும் சுடர் விட்டுக்கொண்டிருந்தன. ஒரு மேஜைக்கருகே சென்று அமர்ந்துகொண்டோம். திடமான கனத்த பெண்குரல் முனகுவதுபோல ஒலித்து சட்டென்று மேலெழ கித்தாரின் துடிப்பு சேர்ந்துகொண்டது.

நான் மெல்ல விரல்களால் தாளமிடுவதை கவனித்து ”நைஸ், இல்ல?” என்றாள் நீலிமா. ”ப்ளூஸ்” என்றேன். ”இது மா ரெய்னீ. இவங்கதான் டெல்டா ப்ளூஸிலே லீடிங். ஆக்சுவலி ஷி இஸ் தி மதர் ஆ·ப் தட் ஜானர்” என்றாள். ”எனக்கு அந்த அளவுக்கெல்லாம் சங்கீதம் தெரியாது. சும்மா போறபோக்கிலே கேக்கிறதுதான்..” ”எங்கிட்ட நல்ல கலெக்ஷன் இருக்கு…நான் தர்ரேன்” 

பேரர் நிலவில் நடப்பவன் போல வந்து  அருகே குனிந்து பளீரிட்ட குறிப்பேடு ஒன்றை எடுத்துக்கொண்டு ”யுவர் ஓடர் ப்ளீஸ்” என்றான். நீலிமா மலையாளத்தில் ”எந்தா உள்ளது?” என்றாள். ஏராளமான கடல் உணவுகள். மாட்டிறைச்சி வகைகள். நான் வறுத்த இறால் தந்தூரி ரொட்டி சிக்கன் சொன்னேன்.  ”யூ வாண்ட் எனி டிரிங்க்?” என்று என்னைக் கேட்டாள். ”நோ தாங்ஸ்…” ”குடிக்காம எப்டி இருக்க முடியுது?” ”என்னவோ இருந்துட்டேன்…கொஞ்சம் குடிச்சிருக்கேன். எனக்கு ஒத்துக்கலை” ”தட் இஸ் நைஸ்” என்றாள்.

”கிவ் மி வைன்” என்று சொன்னாள். நான் ”நீ சாப்பிடுவியா?” என்றேன் சற்றே ஆச்சரியத்துடன். ”ஒன்லி வைன்… எனக்கு ஏராளமா டிராங்குலைசர்ஸ் குடுத்திட்டிருந்தாங்க. அதை நிப்பாட்டினப்ப ஒரு வித்ட்ராவல் ஸின்ட்ரோம் மாதிரி வந்தது. அப்ப வைன் சாப்பிட ஆரம்பிச்சேன். அப்றம் விட்டிட்டேன். எப்பவாவது தோணும். இப்ப ப்ளூஸ் கேட்டப்ப வேணும்னு தோணிச்சு..”

பேரர் ஒரு பெரிய புத்தகத்தைக் கொண்டுவந்து நீலிமாவிடம் கொடுக்க அவள் அதன் நூற்றுக்கணக்கான பெயர்கள் வழியாக விரல்களால் தேடினாள். அவள் முகம் இளநீல நிறமாக இருந்தது. உதடுகள் இன்னமும் அழுத்தமான நீலம். பேரரை நோக்கி கண்தூக்கியபோது பளீரிடும் நீலத்தில் வெண்விழிகள் தெரிந்தன. ”ஈ ஐட்டம் உண்டோ… ஓஸ்டிரேலியன் வைனா..” அவன் குனிந்து பார்த்து ”ஷ்யூர்” என்றான்.

அவள் ஆர்டர் போடுவதை நான் மௌனமாகப் பார்த்திருந்தேன். அவன் போனதும் ”என்ன பிராண்ட்?” என்றேன். ”பிட்ச்னு ஒரு பிராண்ட். வேடிக்கையா இருந்தது. வைனுக்கு ஏத்த பேரு. குடிவகைகளிலே வைன் தான் பெண். மத்த எல்லாமே ஆண்…” என்றாள். நான் இசைக்கு ஏற்ப கால்களை மெல்ல தட்டிக்கொண்டிருந்தேன். நீலிமா ”இப்பவும் அதைப்பத்தி நினைச்சு கவலைப்பட்டுட்டா இருக்கீங்க?” என்றாள். ”எதைப்பத்தி?” ”ராஜினாமா பத்தி?” ”சேச்சே, அது என் மனசிலேயே இல்லை” ”இல்லை உங்க முகத்திலே ஒரு சின்ன பதற்றம் இருக்கு..” அவள் முன்னால் சற்றே குனிந்து,”பணம் பத்தி கவலையா இருக்கா?” என்றாள் ”கண்டிப்பா இல்லை” என்றேன்.

”மேனன் அங்கிள் அடிகக்டி சொல்றதுண்டு, திரும்பவும் பிறக்காதவனுக்கு வாழ்க்கை இல்லைன்னு… நாம பிறந்து வளர்ந்த சூழலுக்கு தக்கமாதிரித்தான் நம்ம மனசும் வாழ்க்கையும் எல்லாம் அமையுது. நம்ம ஆழ்மனசு எப்டிப்பட்டது அதுக்கு உண்மையிலேயே என்ன வேணும் எதுவுமே நமக்கு தெரியறதில்லை. நம்ம சூழல் நமக்கு உண்டுபண்ணி தர்ர பாதையிலே ஓடிட்டே இருக்கோம். ஒரு கட்டத்திலே நமக்கு தெரிஞ்சுடுது நாம யாருன்னு. அப்ப எல்லாத்தையும் உதறிட்டு இதான் நான் இதுதான் எனக்கு வேணும் அப்டீன்னு எவன் திரும்பி புதிசா ஆரம்பிக்கலியோ அவனுக்கு வாழ்க்கையிலே உண்மையான சந்தோஷமே இல்லைம்பார்…. நான் அதை நம்பறேன்”

”தியரி சரிதான்…ஆனா எல்லாருக்கும் சரியா இருக்குமா என்ன?” ”எல்லாரைப்பத்தியும் நான் பேசலை. பூமியிலே நூத்துக்கு தொண்ணூத்தொன்பதுபேர் ஓட்டத்திலே மிதந்து போகத்தான் லாயக்கு. நான் சொல்றது சென்ஸிடிவான ஆட்களைப் பத்தி. ரியல் ஹேப்பினஸ்ஸை தேடிட்டிருக்கிறவங்களைப்பத்தி..” நான் டம்ளரையே சுழற்றிக்கொண்டிருந்தேன். அது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் முற்றிலும் கண்ணுக்குத்தெரியாததாக ஆகியது.நிறுத்தியபோது இளநீல நிறத்தில் வெறுமையில் இருந்து பிதுங்கி வந்து வடிவம் கொண்டு நின்றது.

”என்ன முக்கியம்னா, நீங்க உண்மையிலேயே சந்தோஷமா இருக்கீங்களா இல்லையாங்கிறதுதான்…இந்த உலகம் உண்மையிலேயே பிடிச்சிருக்கா. இல்லை இது வெறும் இன்·பாச்சுவேஷன் மட்டும்தானா…அதை மட்டும் நீங்க பாத்துட்டா போதும்…” ”எது இன்பாச்சுவேஷன்? உங்கிட்ட இருக்கிற லவ்வா?” ”அதுவும் சேர்த்துத்தான்”

நான் சில நிமிடங்கள் என்னை கூர்ந்து நோக்கிக் கொண்டேன். ”உண்மையாச் சொன்னா எனக்குச் சொல்லத்ததெரியலை…எனக்கு இருக்கிற ஈர்ப்பு உண்மையிலேயே மிக மிக ஆழமானது. வேற ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுப்பார்க்கவே முடியலை. ஆனா” நான் அவளை நோக்கி ஒரு கணம் தயங்கிவிட்டு ”…ஆனா உள்ளூர ஒரு பதற்றம் இருந்திட்டே இருக்கு. அதாவது , இது எப்டி சரியாவரும்..இதில இயற்கைக்கு விரோதமா ஏதோ இருக்கு  அந்தமாதிரி…அதாவது இது ஒரு கனவு எப்பவேணுமானாலும் கலைஞ்சிரும்ங்கிற மாதிரி… சொல்லத்தெரியலை…

வைன் வந்தது.  நான்கு வகையான மெல்லிய கண்ணாடிக் கோப்பைகள். அவை பருவடிவம் கொண்டவையாக அல்லாமல் நீலஒளியால் கோடிழுத்து காற்றில் வரையப்பட்டவை போலிருந்தன. அவள் அதை ஒரு வைன் கோப்பையில் ஊற்றியபோது ஒரு கணம் என் மனம் அதிர்ந்தது. பின்னணியின் அடர்நீல இருளில் காலியான கோப்பையில் இருந்து காலியான கோப்பைக்கு வெற்றிடத்தை அவள் ஊற்றிக்கொண்டிருந்தாள். கோப்பையைத் தூக்கி முகர்ந்து ”குட்” என்றாள்.

தூரத்தில் இரண்டு மாலுமிகள் உரக்க கத்தி சண்டை போட ஆரம்பித்தார்கள். சண்டை இல்லை என்பது அவர்கள் கடகடவென சிரிக்க ஆரம்பித்தபோது தெரிந்தது. நீலிமா ”இந்த ஷேர்மார்க்கெட் கம்பெனியிலே சேருறப்ப அந்த மாதிரி ஏதாவது தோணிச்சா?” என்றாள் ”என்ன?” என்றேன். ”அது ஒரு பொய்யான உலகமா ஏன் இருக்கக் கூடாதுன்னு?” நான் அவளையே பார்த்தேன். ”அது எவ்ளவு பொய்யான உலகம். அவங்க பேசிட்டிருக்கிற வரவு செலவு லாபம் நஷ்டம் எல்லாமே ஒரு பத்துலட்சம்பேர் சேர்ந்து கூட்டா கற்பனை பண்ணிக்கிறது மட்டும்தானே? அது ஒரு காமன் இல்லூஷன்னு ஏன் சொல்லக்கூடாது?”

நான் சற்றே திகைத்தேன். அந்த கோணம் என்னை அயர வைத்தது.  ”சொல்லலாம்தான்” என்றேன். ”அதேதான். எல்லா தொழிலும் எல்லா வியாபாரமும் அப்டிப்பட்ட இல்லூஷன் மட்டும்தான். ஆனா அதிலே இருக்கிறவங்க லட்சக்கணக்கிலே கோடிக்கணக்கிலே இருக்காங்க. இதிலே ரொம்பக் கொஞ்சம்பேர்தான் இருக்காங்க. இப்ப பூமியிலே ஒரு ஐம்பதுகோடிப்பேர் இந்தமாதிரி ஒரு வாழ்க்கையிலே இருந்தா இப்ப உங்களுக்கு இருக்கிற எந்த சஞ்சலமும் வந்திருக்காது…” எனக்கு அந்த வாதம் மிகவும் தர்க்கபூர்வமாக இருப்பதாக தோன்றியது. ஆனால் தர்க்கபூர்வமாக இருப்பதனாலேயே ஒன்றை நம் அகம் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை.

நீலிமா மீண்டும் வைன் விட்டுக்கொண்டாள். அவளுக்குப் பின்னால் ஒரு பேரர் நடந்துசென்றபோது அந்த பின்னணியில் வழிந்த வைன் அடர் ஊதா நிறமாக தெரிந்து பின் மறைந்தது. மிக மர்மமான ஒரு திரவம் அது என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த இடத்தில் நிறைந்திருந்த போதையையே அபப்டி ஊற்றிக்கொண்டிருந்தாளா என்ன?

 

பேரர் உணவு வகைகளுடன் வந்தான். அவன் தட்டில் அவற்றை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது நான் என் சிந்தனைகளிலேயே ஆழ்ந்திருந்தேன். எனக்குள் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது உண்மை. கோழியின் அடித்தாடை போல எனக்குள் ஒரு துடிப்பு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இன்று மாலை என் கடைசிக்கடிதத்தை அனுப்பியபோது அது இல்லை. அது இவளைப் பார்த்தபோதுதான் ஆரம்பித்தது. இவளுடன் இருக்கும்போது என்னுடைய புலன்கள் உச்ச கட்டத்தில் இருக்கின்றன. இவளுடைய அருகாமை எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு எச்சரிக்கை நரம்பை உயிர்கொள்ளச் செய்கிறது.

”என்ன ஒரே மௌனம்?” என்றாள் நீலிமா பரிமாறியபடி. ”ஒண்ணுமில்லையே” ”உங்க மனசிலே என்ன ஓடுது தெரியுமா? ” ”என்ன?” என் மனம் படபடத்தது. சரியாகச் சொல்லிவிடுவாளா? சொல்லக்கூடாது என்று என் அகம் ஏங்கியது. அப்போதுதான் இவள் சாதாரணமான பெண். அப்போது மட்டும்தான் இவள் என் கைகளுக்குள் நிற்கும் காதலி.

”என்னைப்பத்தின சஞ்சலம்தான். நான் பக்கத்திலே இருக்கிறப்ப ஒரு பதற்றம் வந்திடுது உங்களுக்கு. அது ஏன்னு இப்ப நினைக்கிறீங்க” அப்போது அவள் அப்படி சொன்னதை எண்ணி என் உள்ளம் உவகை கொண்டதைப் பார்த்து வியந்தேன். அவள் அதற்கு சரியான ஒரு விளக்கத்தை அளித்துவிடவேண்டும் என்று என் மனம் தவித்தது. ஆனால் அவள் கோப்பையை ஒருமுறை உறிஞ்சிவிட்டு ”ஐ நோ தட்… ஐ நோ யூ ஆர் ஸ்கேர்ட்… ஏன்னா நான் ஒரு ஒரு யக்ஷி… எஸ் ஐ யம்” என்று கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். கழுத்தின் சருமத்திற்குள் தொண்டை வளையங்களின் வசீகரமான அசைவை பார்த்தேன்

கண்களில் மெல்லிய ஈரத்துடன் அவள் நிறுத்தினாள். உதடுகள் தடித்தவை போல, முகம் கொதிக்கும் குருதி நிறைந்தது போல இருந்தது. ”பயமா இருக்கா?” என்றாள். அவளுக்குப் போதை ஏறிவிட்டிருப்பது தெரிந்தது. ”நோ” என்று புன்னகை செய்தேன். ”பயப்படணும்… ஏன்னா நான் ஒரு யட்சி…நான் குடிக்கிறது வைன் இல்லை, ரத்தம்…  எ கப் ·புல் ஆ·ப் ப்ளட்” அவள் கோப்பையை தூக்கியபடி பக்கவாட்டில் திரும்பி அங்கே அமர்ந்திருந்த வெள்ளையனிடம் ”மான், ஐ யம் டிரிங்கிங் ஹ்யூமன் ப்ளட், யூ நோ” என்றாள். ”தட்ஸ் கூட்” என்று அவன் கோப்பையை தூக்கிக் காட்ட அவனுடன் இருந்த சுடிதார் அணிந்த மலிவான கேரளவிபச்சாரி உரக்கச் சிரித்தாள்.

”நீலிமா, நாம போலாம்” என்றேன். ”ஐ வாண்ட் டு கில் ஸம்படி ஆண்ட் டிரிங் ஹிம்” என்று நீலிமா சத்தமாகச் சொல்லி உரக்கச் சிரிக்க ஆரம்பித்தாள். அவள் கன்னத்தில் பச்சை நரம்பொன்றின் அசைவைக் கண்டேன் .”ஐ வாட் டு டிரிங் எ மேன்!” என்று அவள் எழப்போக தட்டுகள் முன்னால் நகர்ந்தன. ”ப்ளீஸ்…நீலிமா ப்ளீஸ்” என்றேன். ”ஹனி டிரிங் மீ” என்றான் அந்த மாலுமி. விபச்சாரி சிரிக்க ”ஐ வில் கில் யூ” என்று நீலிமா ஒரு ·போர்க்கை கையில் எடுத்துக்கொண்டாள். நான் ”ஷட் அப்…” என்று கடுமையாக சொல்ல அவள் ஒரு கணம் யார் இவன் என்பதுபோல என்னை வெறித்துப்பார்த்தபின் அமர்ந்துகொண்டாள்.

 

நான் வேகமாகச் சாப்பிட்டேன். அவள் உணவுக்கு முன் வெறித்த கண்களுடன் அப்படியே அமர்ந்திருந்தாள். படையலுக்கு முன் விழித்திருக்கும் அம்மன் சிலை போல. நான் வாயை நா·ப்கினால் துடைத்துவிட்டு பில்லுக்காக கை தூக்கினேன். நீலிமா என்னிடம் ”யூ சன் ஆ·ப் எ பிட்ச்..நீ என்னைப்பத்தி என்ன நினைச்சே? உன் கைக்குள்ள அடங்கி நிக்கிற ஒரு பாவம் பொண்ணுன்னுதானே? உனக்கு அதானே வேணும்? யூ வாண்ட் எ ·பக்கர்ஸ் டால்? யூ, பாஸ்டர்ட்…யூ” அவள் முகம் முழுக்க கடும் சினத்தால் சீறி வாய் பிளந்து வெண்பற்கள் தெரிந்தன.

பேரர் பில்லைக் கொண்டுவந்தான். நான் கார்டைக் கொடுத்தேன். ”ஐ யம் நாட் டிரங்க்… நான் உங்கிட்ட  ஒண்ணு கேக்கணும்.  நீ என்னைப்பத்தி என்ன நினைக்கிறே? நான் ஒரு விர்ஜின் தெரியுமா? தெரியுமா உனக்கு? இருபத்தேழு வயசு எனக்கு. ஆனா  இப்பவும் நான் விர்ஜின்…ஏன் தெரியுமா?” அவள் முன்னால் சரிய சேலை முந்தானை சரிந்து அவள் முலைகளின் பிளவு நீலநிறமாக பளீரிட்டது. ”என்னால ஆம்பிளங்களை டாலரேட் பண்ணவே முடியல்லை. ஆம்பிளைங்களோட அசட்டுத்தனம், முரட்டுத்தனம், பேராசை, அகங்காரம்… க்ரீப்ஸ்…நேஸ்டி க்ரீப்ஸ்… நினைச்சாலே வாந்தி வருது. ஐ ஹேட் மென். இந்த உலகத்திலே கொஞ்சமாவது ஆம்பிளைங்களை அருவருக்காத ஒரு பெண் கூட இல்லை…தெரியுமா உனக்கு? தெரியுமா யூ பிளடி ·பக்கர்?”

கார்ட் வந்ததும் நான் எழுந்தேன். ”லெட் அஸ் மூவ்” என்றேன். ”நான் குடிச்சிட்டு உளறறேன்னு நீ நினைக்கிறே. எனக்கு போதை இருக்கு. அது எனக்கு தெரியும். ஆனா நான் சொல்றது என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்… லிஸன்…உலகத்திலே  எல்லா பொண்ணும் ஆம்பிளைங்களை அருவருக்கிறா. உலகத்திலே எந்தப்பொண்ணுக்கும் ஆண் உள்ளூர ஒரு பொருட்டே கெடையாது. ஆனால் அதை காமம் மூடியிருக்கு. அவளுக்கு பிள்ளை பெத்துக்கணும்னு ஆசை. அதுக்கு அவனோட ஸ்பெர்ம் தேவை. அதுக்காக அவனை நக்கிட்டிருக்கா… எல்லா பொண்ணும் ஆம்பிளைய உறிஞ்சி குடிச்சிட்டிருக்கா. வயிறு நெறைஞ்சதும் சக்கையா துப்பிடுவா…யூ நோ… துப்பிடுவாங்க…தூ…”

நான் அவள் புஜத்தைப் பற்றி ”இப்ப வரப்போறியா இல்லியா?” என்றேன். ”ய..ஐ யம் கமிங்” என்று எழ நாற்காலியை பின்னால் தள்ளியபடி தள்ளாடி பின் மே¨ஜையை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள். ” ஆனா நான் எல்லாத்தையும் சொல்லுவேன்…..ஐ வாண்ட் டு டாக் டு யூ” ”சரி..போய்ட்டே பேசலாம், வா…” ”எங்க போக? நான் இங்கேயே படுத்துக்கறேன்” ”கமான்” நான் வாசலைத்தாண்டி வெளியே வந்தேன். நீலிமா உடலின் எடைச்சமநிலை குலைந்து என் கையில் நிற்காமல் ஆடினாள். வெளியே பெரிய மழை பெய்வதுபோல ஒலி. மணல் காற்று திசைமாறி ஓட்டல் மீதே மண்ணை கொட்டிக்கொண்டிருந்தது.

அந்த மாலுமி தன் தொப்பியுடன் அங்கேயே நின்றிருந்தார். அவர் என்னை நோக்கி கண்ணடித்து ”ஷி இஸ் டிரங்” என்றார். ”யா..” என்று புன்னகை செய்துவிட்டு காரை திறந்தேன். கார் மீது கவிந்தவளாக நீலிமா அவரை நோக்கி ”யூ, ஓல்ட்மான்” என்று கூவினாள். ”சொல் அன்பே” என்றார் அவர். ”நீ பெண்களை வெறுக்கிறாய். பெண்கள் உன் வாழ்க்கையை அழித்துவிட்டதாக நினைக்கிறாய்” அவர் திடுக்கிட்டது போல தெரிந்தது.”என்ன உளறுகிறாய்?” என்றபடி தொப்பியை தலையில் வைத்தார், அவர் கையை எடுத்ததும் அது பறந்தது. தடுமாறி நீலிமாவைப் பார்த்தார். ”பெண்ணை விரும்பக்கூடிய எவரும் அவளைப் பார்த்ததுமே அழகாக இருப்பதாகச் சொல்ல மாட்டார்கள். உனக்கு என் மீது அக்கறை இல்லை. உன் வெறுப்பை நீயே அஞ்சுகிறாய். அதை செயற்கையான இனிமையுடன் சொல்கிறாய்…யூ பாஸ்டர்ட்…”

அவர் நிதானமடைந்து ”நீ குடித்திருக்கிறாய்” என்றார். ”ஆமாம். அதனால்தான் உண்மையைச் சொல்கிறேன். உன்னை பெண்கள் உறிஞ்சி துப்பி விட்டார்கள். நீ இந்தக் கடற்கரையில் ஒதுங்கும் தக்கையைப் போன்றவன்” நீலிமா உரக்கச் சிரித்து ”என்னை மாதிரிப் பெண்கள் உன்னை சாப்பிட்டுவிட்டார்கள்…” என்றாள். நான் அவளை காருக்குள் தள்ளி கதவைச் சாத்திவிட்டு அவரிடம்  ”ஐ யம் ஸாரி…” என்றேன். அவர் போகட்டும் என்பதுபோல சைகை காட்டினார். நீலிமா அடுத்த சன்னல் வழியாக வெளியே பார்த்து ” நீ ஓரினச்சேர்க்கையாளனாக மாறு. அதுதான் உனக்கு நல்லது” என்றாள். அவர் பீதியடைந்த முகத்துடன் பார்க்கும் கடைசிக் காட்சி என் கண்களில் நீடிக்க நான் காரைத் திருப்பி சாலையை நோக்கி ஓட்டினேன்.

நீலிமா ”நான் குடிச்சுட்டு உளறலை. நான் சொல்றது உண்மை. எனக்கு ஆம்பிளைங்களை பிடிக்கலை. ஆனா ஆம்பிளை எனக்கு தேவையாக இருக்கு. குறைவா அருவருப்பு தரக்கூடிய ஒரு ஆம்பிளை…அதுதான் நீ…” நான் காரை சாலை நோக்கி ஓட்டினேன். என் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சாலை வெளிச்சத்துடன் சுருண்டெழுந்து பின்னால் சறுக்கிச் சென்றது. நீலிமா பின்னால் சாய்ந்து கொண்டாள். சில நிமிடங்களுக்கு பின்னிருக்கையில் அமைதி. நான் கண்ணாடியைப் பார்த்தேன். பின்னிருக்கையில் இரு கோரைப்பற்களும் பரட்டைமுள் தலையுமாக ஒரு கரும்பிடாரி அமர்ந்திருந்தால்கூட அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டேன்.

சட்டென்று பின்னிருக்கையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. ”நீ இப்ப என்ன நினைக்கிறே தெரியுமா? அப்டியே விட்டுட்டு ஓடிடணும்னு நினைக்கிறே. பகல் வெளிச்சத்திலே உலவுற ஒருத்திய கட்டிட்டு ஒரு பொந்துக்குள்ள வாழ ஆரம்பிக்கணும்னு நினைக்கிறே. பகலிலே இருக்கிற பெண்களும் என்னைமாதிரித்தான். ஆனா வெளிச்சத்தை வச்சு எல்லாத்தையும் மறைச்சிரலாம். இது ராத்திரி. ராத்திரியிலே எதுக்கும் ரகசியம் இல்லை. எல்லாம் வெளியே வந்திரும்… எவ்ரி திங் இஸ் ஓபன் ஹியர்… பகலிலே இருட்டுக்குள்ள பதுங்கி கிடக்கிற எல்லாமே ராத்திரியிலே உலாவ ஆரம்பிச்சிரும்…”

அவளுடைய போதை சட்டென்று இறங்கிவிட்டது போலிருந்தது. மூளை அபாரமான கூர்மை கொள்கிறது. என் பலவீனமான புள்ளிகளை  கச்சிதமாகத் தேர்வுசெய்கிறது. முனைகூரிய அம்புகள். குறிதவறாத விஷ அம்புகள்.”என்ன பண்ணப்போறே? பகலிலே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமா? பட் யூ ஹேவ் டு ·பக் ஹர் இன் த நைட்… அதுக்கு அப்றம் அவ தூங்காம இருட்டை பாத்துட்டு கிடப்பா. அப்ப அவளோட ஆழத்திலே இருந்து விஷம் திகட்டி வந்து நாக்குல் முழுக்க கசக்கும். அப்ப நீ அவளைத் தொட்டா ராஜநாகம் கடிச்சது மாதிரி ஒரு சொல்லால உன்னைக் கொன்னிருவா…. யூ நோ எல்லா பெண்ணும் யட்சிதான்… யூ ஸில்லி ரொமாண்டிக் ·பூல்…யூ..”

பின்பு அமைதி. என் பின்கழுத்து எச்சரிக்கை உணர்வில் புல்லரித்து உச்சத்தில் நின்றது. கனமான ஒரு கோடரி என் பின் மண்டையைப் பிளக்கக் கூடும். என் மூளை சிதறி வெண் நுரையாக கொட்டிக்கிடக்கக் கூடும். ஒளிரும் தீவிழிகளுடன்  ஒரு பிசாசு அதை நக்கி நக்கிக் குடிக்கக்கூடும். ஆனால் சிலநிமிடங்களுக்குப் பின்னர் மெல்லிய குரட்டை ஒலி கேட்டது. நான் அந்த ஒலிதானா என்று அவதானித்தேன். ஆம், குரட்டைதான். பின்னிருக்கையை திரும்பிப் பார்த்தேன். தலையை நன்றாகப் பின்னால் சாய்த்து நீலிமா தூங்கிக்கொண்டிருந்தாள்.

 

மெல்ல என் உடலின் நரம்புகள் இறுக்கமிழந்து முடிச்சுகள் தொய்ந்து இலகுவாயின. என் மூச்சு சீறிக்கொண்டிருப்பதை கண்கள் எரிவதை உதடுகள் பற்களால் இறுகக் கடிபட்டிருப்பதை ஸ்டீரிங்கை நான் உச்சகட்ட இறுக்கத்துடன் பற்றியிருப்பதை உணர்ந்தேன்.  அப்போதுதான் வேகமானியைப் பார்த்தேன். நூற்றியெண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது கார். அக்ஸிலேட்டரில் என் கால் மிதித்து அதை தரையோடு தரையாக அழுத்தியிருந்தது. இருபக்கமும் தென்னந்தோப்புகள் கருமையான பிரவாகமாக பீரிட்டுச் சென்றுகோண்டிருந்தன.

மறுகணம் என் உடல் அதிர கார் வளைந்து வளைந்து பக்கவாட்டில் மணல் மேட்டில் சற்றே ஏறி பின்பு திரும்ப சாலைக்கு வந்து மெல்ல வேகமிழந்தது. அறுபது கிலோமீட்டர் வேகத்தில் அதை ஓட்டியபடி பெருமூச்சு விட்டேன்.  நல்ல வேளை. ஏதோ குருட்டு அதிருஷ்டம். நள்ளிரவுக்குப் பின்பு இந்தக் கடற்கரைச் சாலையில் முற்றாகவே வாகனங்கள் ஓடுவதில்லை.

ஆனால் அது உண்மையல்ல என்று உடனே எனக்குப் பட்டது. அந்த உச்சகட்டத்தில் என் புலன்களும் மூளையும் சாத்தியமான அதிகபட்ச கூர்மையுடன் இருந்தன. அதி துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. சாலையின் ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு குழியும் என் கண்களால் அடையாளம் காணப்பட்டன. என் கைகளிலும் கால்களிலும் கார் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. நான் என்னுடைய முழுமை நிலையில் அப்போது இருந்தேன். ஆம், அந்தக் கணங்களை நான்  ஆழத்தில் கொண்டாடிக்கொண்டிருந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைபாலமுருகன் பதில்
அடுத்த கட்டுரையோகம், ஒரு கடிதம்