இரவு 12

ஒலியாக இரவை மாற்றலாம்
சுவர்க்கோழி அதை அறியும்
நிறமாக இரவை மாற்றலாம்
வௌவால்கள் அதை அறியும்
ஓரு சொல்லாக
அதை மாற்றலாம்
மிக எளிமையான
மிக இருண்ட ஒரு சொல்லாக
நான்


ஒரு வாரம் கழித்து நான் நீலிமாவிடம் சொன்னேன்”நீ அன்று அந்த முத்தத்தை அளிக்காவிட்டால் நான் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைத்திருக்க மாட்டேன்”. அதை ஆங்கிலத்தில்தான் என்னால் சொல்ல்ல முடிந்தது. அந்த மொழி எல்லாவற்றையுமே ஒரு வணிகம்போல ஆக்கிவிடுகிறது என்று பட்டது. அவள் புன்னகையுடன் ”ஏன்?” என்றாள் ”பயமா?” நான் ”பயமில்லை….ஆனா ஏதோ ஒண்ணு..ஒரு ஒருவகையான…” என்று தடுமாறி ஆங்கிலத்தில் ”நான் உன்னை இன்னமும் ஒரு நடைமுறை யதார்த்தமாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கவில்லை. நீ என்னுடைய கனவில்தான் இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறாய்” என்றேன். ”எல்லாம் பிரமைகள்” என்றாள்.

நான் ”உன்னை நான் இதுவரைக்கும் பகல் வெளிச்சத்தில் பார்த்ததே இல்லை” என்றேன். ”ஏன் பார்க்க வேண்டும்? பகல் வெளிச்சத்தில் என்ன நடந்துவிடும்?” ”ஒன்றும் நடக்காது. ஆனால் அது ஒரு யதார்த்தம்…” ”இது?” ”இது இன்னும் கொஞ்சம் அழகான யதார்த்தம்” என்னால் குழப்பம் இல்லாமல் சொல்ல முடியவில்லை. ”ஆனால் இந்த யதார்த்தம் நாம் உருவாக்கிக் கொள்வது. கடவுள் நமக்கு அளிக்கும் யதார்த்தம் பகல்தான். அது நம்மை மீறியது” ”நீங்கள் குழம்பிப்போயிருக்கிறீர்கள்” என்றாள் நீலிமா

உண்மைதான். குழம்பித்தான் போயிருந்தேன். மௌனமாக காரை ஓட்டினேன். நாங்கள் கொடுங்கல்லூருக்குச் சென்று கொண்டிருந்தோம். இரு பக்கமும் இரவு விளக்குகள் மௌனமாக பின்னால் ஓட சாலை சுருளழிந்து முன்னால் ஓடிக்கொண்டே இருந்தது. சிடி ஒன்றின் மீது செல்லும் லேஸர் வருடல் போல காரின் முகப்பொளி சாலை மீது செல்ல அந்த சிடியின் பதிவுகள் உயிர்கொண்டு ஒலிப்பது போல என் மனம் சிந்தனைகளை கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் ஆட்டுமந்தைகள் போல முட்டி மோதி ஒன்று மேல் ஒன்று ஏறி ததும்பும் வீண் எண்ணங்களாக அவை இருந்தன

”மொத்த்ததில் நான் யட்சியா பெண்ணா என்று இனிமேல்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது, இல்லையா?” என்றாள். ”அப்படி எல்லாம் இல்லை…” என்றேன். அவள் கனத்த குரலில் ”ராத்திரி குரல்வளையைக் கடிச்சு ரத்தத்தை முழுக்க உறிஞ்சிட்டு போயிடுவேனான்னு பயமா இருக்கா?” நான் திரும்பி புன்னகைசெய்து ”ஆமா…” என்றேன். ” எனக்கும் ஆசையாத்தான் இருக்கு…பாப்போம்” என்றாள் நீலிமா. நான் சிரித்தபோது அவளும் சிரிக்க அந்த நிமிடம் வரை வந்த அந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.

”நீ ஒரு வலிமையான ஆளுமையாக இருக்கிறாய். அதுதான் காரணம். வலிமையான பெண்களை ஆண்கள் அஞ்சுவார்கள்” என்று மேலும் ஆங்கிலத்தில் சொன்னேன். ”ஓ கமான், அந்த ஸில்லி தத்துவப்பேச்சை விடுங்க…தமிழிலே பேசுங்க” நான் ”ஓகே” என்றேன். ”நானே வலிஞ்சு வந்தது பிடிக்கலியா?பொதுவா அந்த மாதிரி முன்னால்வர்ர பெண்கள் அவங்களோட ஈர்ப்பை இழந்திடுவாங்கன்னு சொல்றாங்களே” ”அதெல்லாம் இல்லை” என்றேன் ”அதிலேதான் ஆண்களுக்கு அற்புதமான ஒரு மகிழ்ச்சி இருக்கு…அது ஒரு அற்புதமான ராத்திரி… என் உடம்பிலே ஒருநாள் முழுக்க அந்த நிசாகந்தி மணம் வந்திட்டிருந்தது”

”நான் அன்னைக்கு எப்டியோ இமோஷனலாயிட்டேன்…ஏன்னா, நீங்க பின்னாலே காலெடுத்து வைக்கிறீங்கன்னு தோணிட்டிருந்தது. அன்னைக்கு முழுக்க நான் தவிச்சிட்டே இருந்தேன். ·பாதர் ஒரே தியாலஜியா போட்டுத்தள்ளிட்டிருந்தார். என்னாலே உக்காந்திருக்கவே முடியலை. அழுகை அழுகையா வந்தது. அப்பதான் நீங்க வந்து வாசலிலே நின்னீங்க. மைகாட், அந்த மொமெண்டை எப்டி சொல்றது. என் லை·ப்ல அது ஒரு கிரேட் மொமெண்ட். அப்டியே உடம்புக்குள்ளே இருந்து என்னென்னமோ பொங்கி வந்தது…ஒரு செகண்டிலே நான் கண்ட்ரோல் பண்ணிக்காம இருந்திருந்தா அப்பவே அத்தனை பேர் முன்னாடி பாய்ஞ்சு வந்து கட்டிப்பிடிச்சு முத்தமா குத்திருப்பேன்..”

நான் நெகிழ்ந்து என் கையை அவள் தொடைமேல் வைத்தேன். அவள் தன் இரு கைகளாலும் என் கையைப் பற்றிக்கொண்டாள். ”ஆச்சரியம்தான் இல்லை? ஒரு செகண்டிலே நரகம் சொர்க்கமா ஆயிடுச்சு. அதுக்கு முன்னாடிவரை நான் ஏன் உயிர்வாழணும்னு நெனைச்சிட்டிருந்தேன். அதுக்குப் பிறகு நான் தான் உலகிலேயே அதிர்ஷ்டசாலின்னு தோணிட்டுது… ” நான் பெருமூச்சு விட்டேன்.

இருவரும் அவரவர் உணர்ச்சித்ததும்பல்கள் வழியாக சென்றோம். பின்னர் மீண்டும் இருவருமே பெருமூச்சு விட்டோம். மனம் முழுக்க தித்திப்பு பொங்கி இறுகி நெஞ்சு வலிப்பது போலிருந்தது. அந்த தீவிரம் மனதுக்கு அதிகம், அத்தனை உவகை மனிதனுக்கு தேவையே இல்லை, அந்த அளவுக்கு மகிழ்ச்சி கொண்டால் மகிழ்ச்சியே அவஸ்தையாக ஆகிவிடுகிறது. நரம்புகள் கனம் தாளாமல் வெடிப்பவை போல ஆகிவிடுகின்றன. நான் கீழே வர விரும்பினேன். ஒரு வேகத்தில் ஏறிவிட்ட மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவிப்பது போலிருந்தது. என்னால் சொற்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்பு கிடைத்த ஒரு சொற்றொடரை பற்றிக்கொண்டேன். ”எப்ப நான் வேணும்னு தோணிச்சு?” நீலிமா தன் விரல்களைப் பார்த்து சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின்பு ”உண்மையச் சொல்லட்டுமா? பாத்த முதல் நிமிஷமே” என்றாள். ”ஓ” என்றேன். ”நான் செருப்பைக் கழட்டுறப்பதான் உங்களைப் பாத்தேன். மனசு திக்குன்னு ஆகிப்போச்சு. கால்கூட கொஞ்சம் தடுமாறிச்சு…அதுக்குப் பிறகு வந்து சோபாவிலே உக்காருற வரைக்கும் நான் எங்க இருக்கேன்னே தெரியல்லை” நான் சீட்டியடித்தேன். ”என்ன சீட்டி, காலிப்பசங்க மாதிரி” ”திஸ் இஸ் த கிரேட் கண்டதும் காதல்” என்றேன்

”ஆனா ஏன் அப்டீன்னு யோசிச்சா எனக்கு ஒண்ணு தோணிச்சு, ஐ வாஸ் லாங்ஙிங்… எனக்கு ஒரு ஆண் தேவைப்பட்டான். அதான் உண்மை. ஏதோ ஒரு ஆண் இல்லை. மனசுக்குள்ளே ஒரு நல்ல லவ்வரா உள்ள போகக்கூடிய ஒரு ஆண். அதான். வேறே ஒண்ணுமே இல்லை. வருஷக்கணக்கா நான் அதுக்காக ஏங்கி ஏங்கி உருகிட்டிருந்தேன். அது என்னைச் சுத்தி இருக்கிற எல்லாருக்குமே தெரியும்னு நினைக்கிறேன். எங்க அப்பா கம்லா ஆன்டி அட்மிரல் எல்லாருமே எவ்ளவு சாதாரணமா இதை அனுமதிக்கிறாங்கன்னு பாத்தா தெரியும். எல்லாருமே காத்திட்டிருந்தாங்க, உங்களை மாதிரி ஒருத்தருக்காக. எஸ், ஐ வாஸ் லாங்ஙிங்”

”எதுக்காக?” என்றேன். உடனே கேவலமான கேள்வி என்று தோன்றி ”ஐயம் ஸாரி, வாட் ஐ மீன் இஸ்..” என்றேன். ”தட் இஸ் ஆல் ரைட்.. செக்ஸ¤க்கான ஏக்கம்னு நினைக்கிறீங்க. அப்பட்டமா சொல்லப்போனா அதுவும் தான். எப்பவுமே என் உடம்பு செக்ஸ¤க்காக ஏங்கிட்டிருக்கு. எனக்கு தினமும் அது தேவைப்படுது… எப்பவுமே என் உடம்பு நிலைகொள்ளாம பரபரன்னுதான் இருக்கும். எப்பவுமே ரொமாண்டிக்கா…ஒரு பிரியமான ஆண் கண்முன்னாடி நின்னுட்டிருக்கிறமாதிரி…  ஆனா அதுக்கு ஆம்பிளை வேணும்னு இல்லை. ·பாண்டஸி போதும். ஐ வில் டு இட் மைசெல்·ப்”

நான் அவளுடைய வெளிப்படைத்தன்மையை எப்போதுமே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றாலும் அப்போது ஸ்டீரிங்கை பிடித்திருந்த என் கைகள் மெல்ல நடுங்கின. ”ஆனா இது அதுக்காக இல்லை. எனக்கு இமோஷனலா ஆண் தேவைப்பட்டான். ஸ்பிரிச்சுவலா… என்னாலே தனியா இருக்க முடியல்லை. அதைவிட சரியாச் சொல்லணுமானா தனியா இருக்கிறேங்கிற நெனைப்பை தாங்கிக்க முடியலை… அதான். அதுக்காகத்தான்”

நான் மீண்டும் அவள் தொடையில் கைவத்து மென்மையான தசையை மெல்லப்பற்றி அழுத்தினேன். எதிரே ஒரு லாரி வர ஸ்டீரிங்கில் கை வைக்க வேண்டியிருந்தது. ”நீங்க எப்டி இதைப் புரிஞ்சுக்கிறீங்கன்னு தெரியல்லை. ஆனா …எப்டிச் சொல்றது…என்னால இந்த ராத்திரிய தனியா தாண்ட முடியல்லை.” ”எந்த ராத்திரியை?” ”இந்த நீளமான ராத்திரியைத்தான். இது ஒரே ராத்திரிதானே…நடுவே நடுவே தூங்கிட்டாலும்கூட இது ஒரு சிங்கிள் நைட் தான். அப்டித்தான் எனக்குத் தோணுது. இந்த ராத்திரி ரொம்ப நீளமானது…”அவள் குரலில் தெரிந்த தவிப்பைக் கண்டு நான் திரும்பிப் பார்த்தேன். முகம் உருகுவது போல் இருந்தது.

”…பகல் மாதிரி இல்லை ராத்திரி. பகலிலே நெறைய டைவர்ஷன்ஸ் இருக்கு. நெறைய மெட்டீரியல் விஷயங்கள் இருக்கு. ராத்திரி அப்டி இல்லை.. ராத்திரி ரொம்ப எமோஷனலானது. மனசு உருகி நெகிழ்ந்து போய் இருக்கு. அப்ப நம்மாலே எதையுமே கட்டுப்படுத்த முடியாது. ராத்திரியோட பிரச்சினையே இதான். இங்க எல்லாமே கடுமையா இருக்கும். காதல், காமம், வெறுப்பு, குரோதம் எல்லாமே உக்கிரமாத்தான் இருக்க முடியும். எதுக்குமே கண்ட்ரோல் இருக்காது… அதான்பிரச்சினையே. ராத்திரியிலே வாழறது ரொம்பக் கஷ்டம் சரண். ராத்திரியை நம்மாலே சமாளிக்கவே முடியாது…” என் தோளில் கைவைத்து ”நீங்க என்கூட இருக்கணும். என்னை தனியா விட்டிரக்கூடாது” என்றாள்

நான் ”கண்டிப்பா…” என்றேன். மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை. ”ஐ லவ் யூ” என்றேன். அந்த தேய்ந்துபோன சாதாரணமான சொற்கள் அப்போது எல்லையற்ற உணர்ச்சியும் கவித்துவமும் அர்த்த விரிவும் கொண்டவையாக இருந்தன. நான், நீ ,காதல்  என மூன்றே மூன்று இருப்புகளினால் ஆன உலகம் அது. நான் நீயுடன் காதலால் இணைக்கப்பட்டிருக்கும் உலகம். நானும் நீயும் செய்வது காதல் மட்டுமாக இருக்கும் உலகம். காதல் என்ற பெயர்ச்சொல் வினைச்சொல்லாக உருமாறும் இடம் . நான் மேலும் உத்வேகத்துடன் ”ஐ லவ் யூ நீல்” என்றேன்

அவள் சீறும் ஒலியுடன் அழுதபடி அப்படியே முகம் பொத்தி மடங்கி தன் மடியில் குப்புறக் கவிழ்ந்து குலுங்கி விசும்ப ஆரம்பித்தாள். நான் அவளை திகைப்புடன் பார்க்க கார் நிலைவிட்டு ஓரமாக இறங்கியது. காரை நிறுத்திவிட்டு அவள் தலைமேல் கையை வைத்தேன். எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அப்போதுகூட அவளுடைய முதுகிலும் புறங்கழுத்திலும் பளீரிடும் சருமத்தில் என் பார்வை செல்வதை உணர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது. அவள் சில நிமிடங்கள் அழுதபின்பு நிமிர்ந்து கண்களை தன் சேலை நுனியால் ஒற்றிக்கொண்டாள். நான் சட்டென்று அவளை இழுத்து உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டேன். அவள் அதை எதிர்பார்த்திருந்தது போல தோன்றியது

அதன்பின்னர் பயணம் மிக உற்சாகமானதாக ஆகியது. இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டோம். ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளி சிரித்தோம். எங்கள் காரே சிரித்துக்கொண்டே ஓடுவது போல அங்குமிங்கும் அலைபாய்ந்தது. நல்லவேளையாக அந்த நேரத்த்தில் சாலையில் எவருமே இருக்கவில்லை. அவ்வப்போது சில மீன் லாரிகள் மட்டும் கொச்சின் நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

பாலத்தின் மீது சென்றபோது நான் காரை நிறுத்தி கதவைத்திறந்து வெளியே பார்த்தேன். மெழுகு ஓவியம்போல நீரும் நீரில் பிரதிபலித்த தென்னைமரக்கூட்டங்களும் தெரிந்தன. ”போலாம், கரை பாலத்திலே நிறுத்தக்கூடாது” என்றாள் நீலிமா. ”அது பகல் சட்டம்…இது ராத்திரி. வௌவால்களுக்கு எல்லாமே தலைகீழ்தான்” ”போதும் தத்துவம்…இப்ப போறோமா இல்லையா?”

கொடுங்கல்லூருக்கு இரவு இரண்டு மணிக்குச் சென்று சேர்ந்தோம். ஏற்கனவே பத்துப் பதினைந்து கார்கள் பெரிய அரசமரத்தடியில் நின்றிருந்தன. ஒரே ஒரு டீ மற்றும் வெற்றிலைபாக்குக் கடை மட்டும் திறந்திருந்தது. காருக்குள்ளேயே நான் வேட்டியைக் கட்டி உள்ளிருந்து பாண்டை இழுத்து வெளியே எடுத்தேன். நீலிமா வாய் பொத்திச் சிரித்தாள். ”என்ன?” ”ஓண்னுமில்லை” ‘என்னன்னு சொல்லு” ”இல்ல, மாடு குட்டி போடுறது மாதிரி இருக்கு” ”சீ…நாயே” என்று எட்டி அவள் மண்டையில் அடித்தேன். சட்டையை கழட்டிவிட்டு வெறும் மார்புடன் சென்றபோது காற்றுவந்து பட்டு உடல் சிலிர்த்தது.

” இப்ப நீங்க ஒரு நல்ல நாயர் மாதிரி இருக்கீங்க” ”அதாவது?” ”மார்பிலே முடி..” ”ஓ” என்றேன். ”ஒண்ணு தெரியுமா மலையாளா சினிமாவிலேயே நல்ல நாயர் மாதிரி இருக்கிற ஒரே ஆக்டர் மம்மூட்டிதான்” என்று சிரித்தாள். கோயில் கோபுரமில்லாமல் ஒரு சாதாரண கட்டிடம் மாதிரி இருந்தது. மையக் கோயிலுக்கு அருகே இரு சிறு கோயில்கள். ஆலமரத்தில் கீழிருந்து சென்ற ஒளி இலைகளில் ஆடியது.

காருக்குள் தாம்பாளத்தில் பூஜைக்கான பொருட்கள் இருந்தன. பழங்கள் பூக்கள் களபமும் செந்தூரமும் தவிர ஒரு செம்பட்டும் இருந்தது. கமலா எல்லாவற்றையும் முறையாக எடுத்து வைத்திருந்தார். தட்டுடன் கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தோம். கோயில் வாசல் பூட்டியிருக்க  அர்த்தமண்டபத்தில்  மட்டும் சிவப்புச்  சங்குபுஷ்பங்கள் பூத்தது போல சுடர்கள்  எரிய குத்துவிளக்குகள் கூட்டமாக நின்ரன. ”என்ன பூட்டியிருக்கு?” என்றேன். ”இது சிவன் கோயில்…அம்மைகோயில் வடக்குமுகமா இருக்கும்… நாம பக்கவாட்டிலே நுழையறோம்”

எனக்கு அந்தக்கோயில் பலவகையான குழப்பங்களை அளித்தது. கிழக்குவாசலை நோக்கியதாக ஒரு சிவன் கோயில். அதன்வலதுபக்கம் ஒரு நீளமான கருவறை வடக்குபக்கம் திறந்தது. அதில்தான் கொடுங்கல்லூரம்மா இருந்தாள். இரு கோயில்களுக்கும் ஒரே அர்த்தமண்டபம்தான். ”வடக்கு வாசல் வழியா உள்ளே வரக்கூடாது. அம்மை கண் நேரக நம் மேல் விழக்கூடாது” என்றாள் நீலிமா. கோயிலுக்குள் சிலரே இருந்தார்கள். ஒரு கணவனும் மனைவியும் மண்டபத்தருகே நிற்க ஒரு நம்பூதிரி மட்டும் விளக்குகளுக்கு எண்ணை விட்டுக்கொண்டிருந்தார்.

கருவறைக்குள் தேவியின் சிலை  சந்தனக்காப்பு போடப்பட்டு பெரிய விழிமலர்களும் வெள்ளி மார்பக அங்கியும் அணிவிக்கப்பட்டு மலர்மாலைகள் சூழல் நெய்விளக்குகளின் ஒளியில் உயிருடன் அதிர்வது போல தெரிந்தது. ”இது கண்ணகி தானே?” என்றேன் கிசுகிசுப்பாக. ”யாரா இருந்தா என்ன, தெய்வம்” என்றாள் நீலிமா. அது உண்மைதான், சிவனும் விஷ்ணுவும் முருகனும் மட்டும் யாரென்று நமக்கு தெரியவா செய்கிறது?

கோயிலுக்குவலப்பக்கம் ஒரு மண்டபம் இருந்தது. ”அதான் பழைய கர்ப்பகிருகம். அதை ஆதிசங்கரர் நிரந்தரமா மூடிட்டார்னு சொல்றாங்க. அது மேற்கு வாசல் உள்ள கர்ப்பகிருகம். அந்த வாசலை கல் வைச்சு மூடி அதுக்கு முன்னாடி இந்தக் கருவறைய கட்டி இதை வடக்கு பாத்து வச்சிருக்காங்க.” ”உள்ளே பாக்க முடியுமா?” என்றேன். ”முடியாது. உள்ள ஸ்ரீசக்ரம் இருக்கிறதா நம்பிக்கை” என்றாள்.  உள்ளே இருந்த நம்பூதிரி கணீரென்ற மென்குரலில் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். தீப ஒளியில் விழிமலர்களின் வளைவில் பட்ட ஒளி நடுவிழி போல மலர அம்மன் அந்த உச்சரிப்பைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் பட்டது.

மேலும் சிலர் வந்து கருவறை முன் குழுமினார்கள். ஆண்கள் அனைவரும் சட்டையில்லாமல் இருந்தது ஒரு வித்தியாசத்தை உருவாக்கியது. குழந்தைகளே இல்லை. அனைவருமே ஒரு விதமான மௌனத்துடன் தங்களுக்குள் மூழ்கியவர்கள்போல நின்றிருந்தார்கள். காற்று கோயிலை வளைத்து வந்து என்னை தழுவி கடந்துசெல்ல ஆடும் சுடர்களில் மண்டபம் திரைச்சீலை ஓவியம் போல் அசைந்து நெளிந்தடங்கியது.  ”சுற்றி வரவேண்டாமா?” என்று மெல்ல கேட்டேன். ”இங்க சுத்திவரக்கூடாதுன்னு ஐதீகம்” என்றாள் நீலிமா.

கோயிலின் வலப்பக்கத்தில் இருந்து மெலிந்த கரிய உடல்கொண்ட ஒரு வயோதிகர் பெரியதோர் நார்ப்பெட்டியுடன் வந்தார். அது நிறைய பச்சை மட்டைகீற்றுகளில் வெண்துணி சுற்றி தேங்காயெண்ணை ஊற்றப்பட்ட பந்தங்கள் இருந்தன. மண்டபத்தின் நான்குமூலைகளிலும் நான்கு பந்தங்களை நட்டுவிட்டுச் சென்றார். இன்னொரும் இருவர் அவருடன் சேர்ந்துகொள்ள அவர்கள் கோயிலின் வெளி வளைப்பில் இருந்த ஏராளமான சிறு சிறு தெய்வ சன்னிதிகள் முன் மூன்று மூன்று பந்தங்களை நட்டார்கள்.

சங்கு ஒலிக்க நம்பூதிரி கருவறைக் கதவை மூடினார். ”உள்ள என்ன பண்றார்?” என்றேன்.”இங்க எல்லாமே தாந்த்ரீக பூஜைதான். உள்ள நெறைய சைகைகள் எல்லாம் உண்டு. ஒருகாலத்திலே இங்கே நரபலியெல்லாம்கூட குடுத்திருக்காங்க. எங்க அப்பா சின்னவயசிலே இங்க ஆடு கோழியெல்லாம் அறுக்கிறதைப் பார்த்திருக்கார்…”என்றாள் நீலிமா. ”நம்பூதிரியா அறுப்பாங்க?” ”இவங்க நம்பூதிரி இல்லை. இவங்களுக்கு அடிகள்னு பேரு”

ஒருவர் எங்களைப்பார்க்க நாங்கள் பேச்சை முடித்துக்கொண்டோம். சட்டென்று சங்கொலியும் மணியோசையுமாக கதவுகள் திறந்தன. உள்ளே தேவி தகதகவென்று எழுந்து கூத்தாடுவதுபோலிருந்தது. இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் கூவும் சேவல் போல தலைசொடுக்கி தலைசொடுக்கி எம்பின. அடிகள் கையில் ஒரு நெய்ப்பந்தத்துடன் வெளியேவந்தார். அந்தபந்தத்தில் இருந்து நெருப்பைக் கொளுத்திக்கொண்டு சென்று எல்லா பந்தங்களையும் பற்ற வைத்தார்கள். மொத்த கோயில் வளாகமும் தீக்கொழுந்துகள் பதாகைகள் போல பறக்க தங்கள் நிழலுடன் இணை சேர்ந்து நடனமிட ஆரம்பித்தது.

அடிகள் பந்தங்களுடன் செல்ல பின்னால் அனைவரும் வணங்கியபடிச் சென்றார்கள். மேற்குவாசலில் இன்னொரு அர்த்தமண்டபம் இருந்தது. ஒரு மாபெரும் கண்டாமணி அதில் இருளுக்குள் தொங்கியது. ஒருகாலத்தில் மேற்குவாசல்தான் பிரதானமாக இருந்திருக்கிறது. அம்மன் மேற்கு நோக்கி கோயில்கொண்டிருந்த காலம். இப்போது நிரந்தரமாக மூடப்பட்டிருந்தது அது. அதன் முன் இடுப்பளவு உயரமுள்ள சுவரால் வளைக்கப்பட்ட சதுரப்பகுதியில் நிறைய சிறு கல்பிரதிஷ்டைகள். அவற்றுக்கெல்லாம் பந்தங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மூன்றடி உயரமான ஒரு சிலை செங்களபம் சார்த்தப்பட்டு சதையாலானது போல உருவம் மழுங்கி நின்றது. அதன் முன்பு கொண்டுவந்த பந்தத்தை நாட்டியபின் அடிகள் கைகளால் சைகைகள் செய்து ”ஓம் ஹ்ரீம் ·பட்” என மந்திரங்கள் சொன்னார். சிலைக்கு முன் செந்நிறமான மலர்களும் தாம்பாளத்தில் குவியலாக அரிசிமாவும் இருந்தன. நான் மெல்ல ”இது என்ன தெய்வம்?” என்றேன். ”இதுவா…இது நான் தான்” என்றாள் நீலிமா. ”விளையாடாதே” ”சத்தியமா…எங்க அம்மாவுக்கு மூணு அபார்ஷனுக்குப் பினனாடி இங்க வந்து வேண்டிகிட்ட பிறகுதான் நான் பிறந்தேன். அதான் எனக்கு இந்த தேவியோட பேரு வச்சாங்க. இது நீலி”

நான் அந்த செக்கச்சிவந்த சிலையையே பார்த்தேன். கண்கள் மூக்கு முலை ஏதுமில்லாத உருவம். ஒரு செம்பட்டை அழுத்தமாக மூடியதுபோல. ஆனால் பார்த்திருக்கவே அது உருவம் கொண்டது. கண்கள் தெளிந்தன. புன்னகை கூட தெரிவது போலிருந்தது. ”இவளுக்கு வனமாலா என்றும் பேருண்டு. இந்தக்கோயில் வளைப்புக்குள் நூற்றெட்டு பரிவார தேவதைகள் உண்டு. இவள்தான் தலைவி” என்றாள் நீலிமா.

அடிகள் உரத்தகுரலில் மந்திரங்களை கூவியபடி பலியர்ப்பிக்க ஆரம்பித்தார்.  எங்கோ ஒரு முரசு வீம் வீம் என்று அதிர ஆரம்பிக்க  கண்டாமணி இணைந்துகொண்டது. அந்த அதிர்வின் ஓளிப்பிரதிபலிப்பாக இருந்தது பந்த வெளிச்சம். நீலியின் செக்கச்சிவந்த சிலையும் ஒரு கனத்த தீச்சுடராக ஆனதுபோல உணர்ந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஞானியர், இரு கேள்விகள்
அடுத்த கட்டுரைபாலமுருகன் பதில்