இரவு 11

இன்றிரவு
நான் தனியாக இல்லை
இரவு ஒரு தோழியாக
என்னுடன் இருக்கிறது
தன் தனிமையைப்பற்றி
என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

காரை நெருங்கியதும் நீலிமா ”நீங்க ஓட்டுங்க” என்று சொல்லி நின்றுவிட்டாள். புதிய மாருதி எஸ்டீம் கார். நான் ஏறி அமர்ந்து சாவியை திருகி அதை உயிர்ப்பித்ததும் அவள் மறுபக்கம் வழியாக ஏறி என்னருகே அமர்ந்து கொண்டாள். நான் ”எங்க போகணும்?” என்றேன். அவள் ”எங்கயுமே போகவேண்டாம்… நான் கமலா ஆன்டிகிட்டே ஒண்ணும் சொல்ல்லை. அவங்களேதான் ஏதோ செய்றாங்க” என்றாள். ”காரிலே ஏறினா எங்கியாம் போய்த்தானே ஆகணும்?” என்றேன். ”முதலிலே கிளம்புங்க…போகப்போக எதையாவது யோசிப்போம்” என்றாள் நீலிமா.

கார் சாலையை அடைந்தது. நான் பேசாமல் காரை ஓட்டிக்கோண்டிருந்தேன். நீலிமாவும் பேசாமலேயே வந்தாள். ஒரு இடத்திற்கு வந்ததும் மெல்லியகுரலில் ”டர்ன் ரைட்…இங்க ஒரு நல்ல எடம் இருக்கு” என்றாள். ”என்ன?” என்றேன் ”ஆம்பல்குளம்…” நான் ஆச்சரியமாக ”அப்படியா?” என்றேன். பின்பு ஐயத்துடன் ”ஆம்பல்னா அல்லிதானே?” என்றேன். ”யா” மேலும் சந்தேகத்துடன் ”ஆக்சுவலி தாமரைக்கும் அல்லிக்கும் என்ன வித்தியாசம்?” என்றேன். தீவிரமாக யோசித்து, ”ம்ம்…ஒரு நூறு ரூபா வித்தியாசம் இருக்கும்” என்றாள். நான் சிரித்து விட்டேன். அவளும் சிரித்தாள். ”போய்ப்பாப்போம்…பாத்தா தெரியுது…”

கார் மண்சாலைவழியாக படகுபோலச் சென்றது. ”இங்க ஒரு சின்ன யட்சி கோயில் இருக்கு…அதுபக்கத்திலேதான் குளம். அட்மிரல் கூட பலதடவை வந்திருக்கோம்” சாலையின் இருபக்கமும் இருண்ட தோப்புகளுக்குள் காகங்கள் எங்கள் முகவிளக்கு ஒளி கண்டு கலைந்தெழுந்தன. ஓர் இறக்கத்தை கிட்டத்தட்ட திருப்புவளையம் மீதே படிந்து முன்னால்சாய்ந்து கடந்தபோது எதிரே சிறிய கோயில் தெரிந்தது. தரையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் வெட்டுகல்லால் வட்டவடிவில் கட்டப்பட்ட சுவர் மீது கூம்புபோல ஓட்டுக்கூரை. கோயிலைச்சுற்றி இடுப்பளவு உயரத்தில் வெட்டுகல் சுவர். சுவர் முழுக்க மழையில் முளைத்த புற்கள் கருகிப்போய் மாட்டின் உடலில் ரோமம் பரவியிருப்பதுபோல தெரிந்தது.

காரைகோயிலருகே கொண்டு சென்று நிறுத்தினேன். வெளியே இறங்கி சுற்றும் பார்த்தபோது அமானுஷ்யமாக இருந்தது. எதிரே ஒரு பெரிய மரம் கிளைகளை தரைவரை தாழ்த்தி பரந்து கிடந்தது. ”இது என்ன மரம்?” ”இதுவா, இது கள்ளிப்பாலை. யட்சிகளுக்குப் பிரியமான மரம். மே மாசம் பூக்கும். குலைகுலையா பூத்து தொங்கும். மணம் தலைசுத்துறமாதிரி இருக்கும். செம்பக மணம் இருக்கில்ல அதைமாதிரி மணம்…அதைவிடவும் கடுமையான மணம்.நெறையபேருக்கு  அந்த மணம் கிடைச்சா அப்டியே வாந்தி வந்திடும். ஆஸ்துமாகூட வந்திடும். அதனால இந்த மரத்தை ஊருக்குள்ள எங்கயுமே நடமாட்டாங்க. ஆனால் ரொம்பதூரத்திலே இருந்து காற்றிலே அந்த மணம் வந்தா ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கும்னு சொல்வாங்க… ஆக்சுவலி, கள்ளிப்பாலை மணம் வந்து நாம அதை முகர்ந்துட்டு நல்லா இருக்கேன்னு சொல்லிட்டா யட்சி அந்த மணம் வழியா வந்திடுவான்னு ஐதீகம்”

அவள் சட்டென்று அதீதமான உயிர்த்துடிப்பு கொண்டதுபோலிருந்தது. அரைநிலவின் ஒளியில் கள்ளிப்பாலை மரத்தை நன்றாகவே பார்க்கமுடிந்தது. சடைத்திரிகள் போல இலைக்கொத்துக்கள்  தொங்கி காற்றிலாடின. கோயில்முற்றத்தின் சரல்பரப்பில் நிலவின் ஒளி பரவிக்கிடக்க அலுமினியப்பரப்பு போல அது தெரிந்தது எனக்கு. எங்கள் காலடிகள் கோயிலின் சுவர்களில் எதிரொலிக்க கூடவே வேறு சிலரும் நுண்வடிவில் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று பிரமை எழுந்தது.

”பயமா இல்லையா?” என்றேன். ”எதுக்கு பயம்? நானே ஒரு யட்சி…நேராப்போய் அந்த கோயிலுக்குள்ள சிலையா இப்டி கைய வச்சிட்டு நிக்கணும்னு தோணுது” என்று அபய ஹஸ்தம் பிடித்து நாக்கை நீட்டிக்காட்டினாள்.  ”நீ யட்சி மாதிரித்தான் இருக்கே…” ”தாங்ஸ்” ”யட்சிகள் பேரழகிகள்னு சொல்லுவாங்க…” ”வாட் யூ திங்?” என்றாள் என்னைப் பார்க்காமல். ”கண்டிப்பா…சந்தேகமே இல்லை” அவள் லேசாக குனிந்து சிரித்தாள். ”ஆனா” ”என்ன ஆனா?” ”யட்சிகளுக்கு முன்பக்கம் இருக்கும் பின்பக்கம் இருக்காதுன்னு சொல்லுவாங்க…பின்பக்கம் அப்டியே குடைவா இருக்குமாம்” ”ஓ” நான் ”உனக்கு முன்பக்கம் பின்பக்கம் ரெண்டும் இருக்கே” ”டோண்ட் பி நாட்டி” என்றாள்.

கோயிலைச் சுற்றி வந்தோம். பின்பக்கம் ஒரு சிறிய நந்தவனம். செடிகளின் இலைகளில் நிலவொளியின் மெல்லியபடலம் பரவியிருந்தது. ”என்ன மணம் அது?” என்றேன். ”நிஸாகந்தி…கேட்டிருப்பீங்களே” ”இல்லியே” என்றேன். ”நிஸாகந்தி நீயெத்ர தன்ய” என்று மெல்ல பாடினாள். ஒரு ரகசிய முத்தம்போல தித்தித்தது அந்தக் குரல். ”நல்லா பாடுறே” ”ஓ…ஐ நோ, ஐயம் நாட் எ சிங்கர்” என்றாள். ”சும்மா முதல்வரிய மட்டும் முனகுவேன். ஓ.என்.வி எழுதின பாட்டு இது…” ”ஓ” என்றேன். ”நிசாகந்தின்னா ஒரு பூச்செடி. இரவிலே மணக்கும் செடீன்னு அர்த்தம். ராத்திரியிலேதான் பூக்கும். ராத்திரியிலேதான் மணக்கும். கள்ளிப்பாலை மாதிரியே இதுவும் மயக்கம் வர்ர மாதிரி மணக்கும்..நைஸ் இல்லை?”

പ്രമാണം:A Queen of the Night1.jpg

நான் மூச்சை இழுத்தேன். ஏதோ வாசனைத்தைலம் மாதிரி நாசிச்சருமத்தைச் சீண்டும் நறுமணம். ”நான் இந்தபூவை கேள்விப்பட்டதே இல்லை.” ”சரி , வேற எந்தப்பூவை கேள்விப்பட்டிருக்கீங்க?” ”காலி·ப்ளவர்…போதுமா?” ”அய்யே..இதுக்கா கோவம்?” என்றாள். சட்டென்று அம்மாத்தனதத்தை பாவனைசெய்வது பெண்களின் அந்தரங்கமான கொஞ்சல்முறைகளில் ஒன்று என்று நினைத்துக்கொண்டேன். ”இது ஒருமாதிரி கள்ளிச்செடி. காக்டேஸியா குடும்பத்தில ஒண்ணு. இதுக்கு இங்கிலீஷிலே டச் மேன்ஸ் பைப்னு பேரு…” ”இப்ப போயி பாக்க முடியுமா?” ”பாக்கலாம்.ஆனா பொதுவா நிசாகந்தி பக்கத்திலே பாம்பு இருக்கும்” ”அய்யோ” ”வேணாமா?” ”வேணாம்” ”பயத்தைப்பாரு”

நான் ”நீதான் யட்சி…உனக்குத்தான் பயமே இருக்காது…போய் பறிச்சிட்டு வா” என்றேன். ”ஓக்கே” என்று அவள் நந்தவனத்திற்குள் சென்றுவிட்டாள். ”நீலிமா…ஸ்டாப் ஸ்டாப் பிளீஸ்” என்று நான் அவளை நோக்கி கூவ அவள் திரும்பி சிரித்து யட்சி மாதிரி ‘ஆ’ என்று இரு பக்கமும் கைகளைக் காட்டியபின் இருளுக்குள் சென்றாள். நான் ஒருகணம் தயங்கியபின் பின்னால் ஓடினேன்.

சருகுகள் குவிந்த நந்தவனத்தில் கால் வைக்கவே பயமாக இருந்தது. நீலிமா நின்று மணத்தை மூக்கால் பிடித்து அனுமானித்து சென்றாள் ”நீலிமா, ப்ளீஸ் வேண்டாம்..பயமா இருக்கு” என்றேன். ”கமான்..” என்று அவள் சென்று ஒரு புதர் அருகே நின்றாள். அந்தச்செடி இருளில் ந்ன்றாக தெரியவில்லை. ஆனால் பூவை நான் பார்த்துவிட்டேன். சப்பாத்திக்கள்ளிப் பூவைப்போல கீழ்நோக்கி குனிந்து நின்றது. வெண்ணிறமான இதழ்கள்.  ஒரு சிறு வெண்கொற்றக்குடை. நீலிமா எம்பிக்குதித்தாள். பின்பு பின்னால் வந்து ”பாம்பு” என்றாள். ”எங்கே?” என்றேன். அவள் காலை தட் தட் என்று தரையில் உதைக்க புதருக்குள் இருந்து சரசரவென்று ஒரு பாம்பு என் முன் பாய்ந்து என்னை வளைத்து ஓடியது. பளபளக்கும் சாட்டை ஒன்று நெளிந்து செல்வது போலிருந்தது.

நான் சிலைபோலக் குளிர்ந்து நின்றுவிட்டேன். காலை தூக்கி வைக்க முடியுமென்று தோன்றவில்லை. ”அது சாதாரணமான சாரைப்பாம்புதான்” என்றாள் நீலிமா. அந்தப்பூவைப் பறித்துவிட்டாள். என்னருகே கொண்டுவந்து ”மோந்துபாக்கணுமா?” என்றாள். நான் வாங்கி முகமருகே கொண்டுவந்துவிட்டு திருப்பிக்கொடுத்தேன். ”ரொம்ப கடுமையா இருக்கே” அவள் அதை மூக்கருகே கொண்டுசென்று ஆழமாக இழுத்துவிட்டு ”எனக்கெல்லாம் இந்த அளவுக்கு மணம் இல்லேன்னா பத்தாது” என்றாள். ” உன்னை சிலசமயம் பாத்தா கிறுக்கு மாதிரி இருக்கு” என்றேன். அடுத்தக்கணமே அதைச் சொல்லியிருக்கக் கூடாதோ என்ற உணர்வு ஏற்பட்டது.

ஆனால் அவள் அதை விருப்பமாகவே எடுத்துக்கொண்டாள் ”ஆக்சுவலி, எனக்கு மெண்டல் பிராப்ளம் இருந்தப்பதான் நான் ரொம்ப ·ப்ரியா இருந்தேன்னு நினைக்கிறேன். எதைப்பத்தியுமே கவலை இல்லை. நான் பாட்டுக்கு நடுராத்திரியிலே இறங்கி காட்டுக்குள்ளே போயிடுவேன். காட்டுயானைக்கூட்டத்துக்கு நடுவிலே எந்த பயமும் இல்லாம போயி நின்னிருக்கேன். நல்லா ஞாபகம் இருக்கு. ஒருவாட்டி ஒரு காட்டுமாடு என்னை தூக்கி வீசிட்டுது. ஒண்ணும் பெரிய அடி கிடையாது. .. அப்பதான் நான் நிஜம்மாவே வனயட்சியா இருந்தேன்..” அவள் பூவை தலையில் வைத்துக்கொண்டாள் ”வனயட்சி நிசாகந்தி பூவை சூடியிருப்பாள்னு சொல்வாங்க..”

”குளம் இந்தப்பக்கமா?” என்றேன். ”இந்தப்படிகள் வழியா போகணும்..ரொம்ப பெரிய குளம்லாம் இல்லை. ஆனா ரொம்ப பழங்காலத்துக் குளம்…” என்றாள். வெட்டுகல்லால் ஆன படிகளில் இறங்கி சென்று கொஞ்சதூரம் சென்று மேலும் சில படிகள் இறங்கியபோது குளத்தின் சுற்றுமதில் தெரிந்தது. அதுவும் சிவந்த வெட்டுகல்தான். அருகே சென்றதும் நீலிமா பாய்ந்து மதில் மேல் ஏறி மறுபக்கம் பார்த்தபடி நின்றாள். கரையில் இருந்த தவளைகள் சளசளவென்று நீரில் குதித்தன. நீர்ப்பாம்பு நீரில் குதித்து வளைந்து மூழ்குவதைக் கண்டேன்.

நீர்வெளி முழுக்கவே அல்லியிலைகளால் மூடப்பட்டிருந்தது.  நாலைந்து இலைகள் சூழந்த ஒரு வட்டத்துக்குள் ஒரு அல்லிமலர். தண்டு ஒரு சாண் உயரத்துக்கு நீர்மேல் எழுந்து நிற்க விரைத்த இதழ்களுடன் மலர்கள் நின்றன. அவற்றுக்கு என்ன நிறம் என்று ஊகிக்க முடியவில்லை. அல்லி இலைகள் மேல் நீர்த்துளிகள் நிலவின் ஒளியில் கண்ணாடிமணிகள் போல உருண்டசைந்தன. நான் முழங்கால் உயரமான சுற்றுமதில் மீது அமர்ந்துகொண்டேன்.  அல்லிமலர்களையே பார்த்தேன். மேலே மேகங்களில் இருந்து நிலா மெல்ல கிழித்து வெளிவந்து வானத்தை மிளிரச் செய்தது. குளம் மேலும் ஒளிகொண்டது. நீர்மணிகள் சிறிய வைரக்கற்களாயின. சட்டென்று ஒரு காற்று என் முதுகில் சட்டையை ஒட்டச்செய்தபடி குளம் நோக்கி வீச மொத்த அல்லியிலைகளும் மடிந்து குளமே நிறம் மாறியது. அப்போதுதான் அந்த நிறம் பச்சை என்று உணர்ந்தேன்.

‘இதெல்லாம் என்ன கலர் பூ?” என்றேன். ”எல்லா நிறமும் இருக்கு. வெள்ளைதான் அதிகம். ரோஸ்நெறம் இருக்கு…நாலஞ்சு நீலமும் இருக்கு…அதோ அந்த சுவர் ஓரமா இருக்கெ அது நீலம்” நான் அதை உற்றுப்பார்த்தேன். ஒரு கணத்தில் அதன் நீலநிறத்தை என் கண் அடையாளம் கண்டது. உடனே பிற மலர்களில் சிவப்பையும் வெண்மையையும் அடையாளம் கண்டுகொண்டேன். அவள் என்னருகே சற்றுத்தள்ளி அமர்ந்தாள். அவள் கழுத்திலும் கன்னத்திலும் சருமம் நிலவொளியில் மலரிதழ்கள்போலப் பளபளத்தது.

”இங்கே யாருமே வாரதில்லை… இது ரொம்ப சக்தியுள்ள யட்சீன்னு சொன்னாங்க” ”அப்டியா?” ”ஆமா…நூறுவருஷம் முன்னாடிவரைக்கும் எல்லா அமாவாசைக்கும் ஒரு சின்னப்பையனை பலி எடுத்திடுவாளாம். பையன்கள் ராத்திரியிலே கள்ளிப்பாலை இல்லாட்டி நிசாகந்தி மணத்தை மோந்திடுவாங்க. ஒரு செகண்ட் ஆசைப்பட்டான்னா அவ்ளவுதான். யட்சி வந்திடுவா. யட்சி வந்திட்டு போனா பையன் செத்து கிடப்பான். உடம்பு நல்லா வெளிறி வாழைத்தண்டு மாதிரி இருக்கும். நரம்புகளிலே ரத்தமே இருக்காதாம். வாழக்கல்குந்நு நம்பூதிரி வந்துதான் யட்சியை பிடிச்சு கட்டினார்னு கதை.” ”கேரளாவிலே யட்சிக்கதைகளுக்குப் பஞ்சமே இல்லை” என்றேன்

இருவரும் அல்லிகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். எனக்கு அல்லிகளைப்பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ராணி வார தழில் அல்லி பதில்கள் என்று ஒரு பகுதி உண்டு. அபத்தமாக அதுதான் நினைவுக்கு வந்தது. ஆனால் அல்லிமலர்களின் மிடுக்கு என் பிரக்ஞையை விட்டு விலகவேயில்லை. குளப்பரப்பில் அவை செருக்குடன் தலைதூக்கி நின்றன. ”குளிப்பமா?” என்றாள் நீலிமா சட்டென்று. ”மை காட்!” என்றேன். ”நான் குளிக்கப்போறேன்” நான் அவள் கண்களை அச்சத்துடன் பார்த்து அவள் கிண்டல் செய்கிறாள் என்று உடனே புரிந்துகொண்டேன். ”சரி குளி…யட்சிகள் தாமரைத் தடாகங்களிலே குளிப்பாங்கன்னுதான் சொன்னாங்க” ”குளிச்சிடுவேன்…” என்றாள்.

”ஆனா யட்சிகள் எப்டி குளிக்கும் தெரியுமா? ” ”எப்டி?”என்று கண்களைத் தழைத்தாள். அவளுடைய முகம் சிவப்பதை என்னால் கற்பனைசெய்ய முடிந்தது. ”கேரளத்திலே அதுக்கு யட்சிக்குளின்னே பேருண்டில்ல?” ”ஓ” என்றாள். ”யட்சிகளுக்கு முகத்திலே மட்டுமில்ல மார்பிலேயும் கண் உண்டுன்னு சொல்வாங்க” ‘ஸ்டாப்பிட்” ”அப்ப நீ யட்சி இல்லைதானே? ” அவள் பேசாமல் இருந்தாள். ”சாதாரணமான பெண்..ஒத்துக்கோ” ”சரி ஒத்துக்கிட்டாச்சு..போதுமா” நான் சிரித்தேன். அவள் சிரிக்காமல் கோபமாக இருப்பதைப் போலிருந்தது.

”முக்கர்ஜின்னு ஒருத்தரைப் பார்த்தேன்” என்றேன். ”யட்சியை வரையற ஆள்” ”ஐ நோ ஹிம்..ஸ்டுப்பிட் ஓல்ட் மான்” நான் அந்த அலட்சியத்தால் சற்றே புண்பட்டு ”நல்ல மனுஷனாத்தானே தோணுது” என்றேன் ”இருந்துட்டு போகட்டுமே…” என்றாள். பேச்சைமாற்றுவதுபோல ”கன் ஐ ஆஸ்க் எ கொஸ்டின்?” என்றாள். ”எஸ்” ”வெரி பர்ஸனல்” ”ஷ்யூர்” அவள் சில கணங்கள் பேசாமல் இருந்தாள். பின்பு ”ஏன் இன்னைக்கு முன்னாடியே வரல்லை?” என்றாள். ”அதாவது வர்க்..ஆக்சுவலி…” என்றேன். ”ஷட் அப்… ஐ நோ. நீங்க வேணும்னேதான் வரலை” நான் பேசாமல்  இருந்தேன். ”ஏன்?” என்றாள்.

நான் தயங்கி பின்பு ”எனக்கு பயமா இருந்தது” என்றேன். ”என்னைத்தானே பயம்?” என்றாள். அந்த அப்பட்டமான கேள்வியால் நான் அயர்ந்துபோய் அமர்ந்திருந்தேன். என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. ”டெல் மி” நான் நாவால் உதடுகளை ஈரப்படுத்திக்கோண்டேன். ஈரம் தேவைப்பட்டது தொண்டைக்கு. ”மே பி…”என்றேன். ”மே பி…ஆனா அப்டி இல்லை…ஆக்சுவலா இந்த மாற்றம் எனக்கு பயமா இருக்கு. நான் இது வரை வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்தமா விட்டுடணுமான்னு இருந்தது. இது ஏதோ ஒரு பைத்தியக்கார உலகம். இது பெரிய ஒரு எக்ஸைட்டிங்கான உலகம்தான். இருந்தாலும்–”

என் சொற்களை நான் கண்டுகொண்டேன். ”மனுஷனுக்கு பெரிய விஷயங்கள் வேண்டாம். அதான் அவன் மனசோட இயல்பு. ஒரு  நூறுகோடி ரூபாய இல்லாட்டி நாலுகைப்பிடி வைரத்தை மனுஷன் கையிலே குடுத்தா பதறிப்போயிடுவான். பயத்திலே சாவான். அதுமாதிரித்தான். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு. இங்க எல்லாமே தீயா எரியற மாதிரி, உருகி வழியற மாதிரி இருக்கு. ஒரு சாதாரண கண்ணாடி டம்ளரைப்பாத்தாக்கூட  அழகிலே மனசு மலைச்சுபோயிடுது. இது ஒரு கனவு…இந்தக் கனவிலேயே வாழமுடியுமான்னு தோணிட்டுது… கனவிலே இருந்து முழிச்சுக்கலேன்னா ஆபத்து. திரும்பி வரவே முடியாதுன்னு பட்டுது…வெல்…ஆக்சுவலி..”நான் என் வேகத்தை இழந்தேன் ”அதாவது,  எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயந்துட்டேன்”

அவள் கோணலாகப் புன்னகைசெய்தபடி ”ஏன் புடிச்சாத்தான் என்ன?”என்றாள் ”பைத்தியம்னா என்ன? மூளையிலே ஒரு நாலு ஜன்னலை கூடவே தெறந்து போடறது. இன்னும்கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் உள்ள வர்ரது. பைத்தியத்துக்கான சான்ஸ் இல்லாத யாருமே இல்லை. உள்ளூர பைத்தியமாகணும்னு கொஞ்சமாவது ஆசைப்படாதவங்களும் இல்லை. ஏன்னா எல்லா உச்சகட்ட அனுபவங்களிலேயும் நாம கொஞ்சம் பைத்தியங்களாத்தான் இருக்கோம்…” நான் மெல்ல மனம் அதிரப்பெற்றேன். அதை நானே உணர்ந்திருந்தேன். ”தேர் இஸ் நோ ஹாப்பினஸ் வென் யூ ஆர் ஸோபர்” என்றாள் அவள். நான் எழுந்து செல்ல விரும்பினேன். ஆனால் என் உடல் அங்கேயே இருந்தது

”லூக், இப்ப இந்த காட்சியிலே ஒரு மேட்னெஸ் இல்லையா? அதுதானே இங்க இவ்ளவு அழகை உண்டாக்குது?” என்றாள் நீலிமா. நான் ”உண்மைதான்” என்றேன். என் மூளையின் மூடிகளெல்லாம் திறந்துகொள்வது போல உணர்ந்தேன். விதவிதமான விசித்திரக் கற்பனைகள். அல்லிகள் ஒவ்வொன்றுக்கும் நாங்கள் அங்கே இருப்பது தெரியும் என்பதைப்போல. ஆகவே அவை புல்லரித்து சிலிர்த்து நிற்பவை போல. குளத்தின் ஆழத்தில் மேலும் ஆழத்துக்கு செல்லும் வாசல்கள் திறந்து கிடப்பது போல. அங்கே ஒரு நிலா அசையாமல் நின்றது.

”அப்றம் எதுக்கு பைத்தியத்தைப் பயப்படணும்” ”திரும்பி வரமுடியாட்டி?” ”எதுக்கு திரும்பி போகணும்? மனுஷனுக்கு என்ன தேவை?சந்தோஷம், அழகு, நிறைவு. அது கிடைச்சதுக்குப் பிறகு எதுக்காக திரும்பி போகணும்? எனக்கு திரும்பிப் போறதைப்பத்தி நினைச்சுப்பாக்கவே முடியலை” நான் பெருமூச்சுவிட்டேன். ”எனக்கும்தான்… நேற்று பகலை என்னால தாங்கிக்கவே முடியலை. அசிங்கமான, ஆபாசமான, வெளிச்சம். எல்லாமே கூசற மாதிரி இருந்தது… என்னால அந்த உலகுக்கு திரும்பிப் போகமுடியும்னே தோணல்லை… அப்றம் நான் உன்னை இழந்திருவேனோன்னு நினைச்சேன்…அதை என்னால தாங்க முடியல்லை…”

சட்டென்று அவள் எழுந்து, நான் திடுக்கிட்டு மார்பு அறைய செயலற்றிருந்த கணத்தில் என்னை ஆரத்தழுவிக்கொண்டு, என் உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தாள். நான் அவள் சூடான மூச்சையும் வழுவழுத்த மென்மையான உதடுகளையும் உணர்ந்தேன். இருவரும்  ஒருவரை ஒருவர் உண்பதுபோன்றதோர் அழுத்தமான முத்தத்தில் இறுகிக் கொண்டோம். ம்ம் என்ற மெல்லிய முனகலுடன் அவள் பிரிந்து கொண்டாள். நான் அவள் கண்களைப் பார்த்தேன். ”ஞான் விடில்ல” என்று சொன்னாள். கண்கள் ஒளியுடன் மின்னின. மூச்சில் கழுத்து குழிந்து எழுந்தது. தோள்கள் கூச்சம் கொண்டவை போல முன்நோக்கி வளைந்து அசைந்தன

அவள் தோள்களின் பளீரென்ற நிறத்தை பார்த்தேன். மறுகணம் அவளை அள்ளி எடுத்து தோள்களிலும் கழுத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் ஆவேசமாக முத்தமிட ஆரம்பிந்தேன். அவள் உடல் முதலில் எதிர்விசை கொடுக்கப்பட்டதுபோல இருந்தது. பின்பு நெகிழ்ந்து என் கைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல இ¨யைந்தது. பின்பு அவள் உடலில் சுயநி¨னைவு திரும்புவதை என் உடலாலேயே உணர்ந்தேன்.”மதி கேட்டோ” என்று மெல்லச் சொன்னபடி என் மார்பில்  கையை வைத்து தள்ளி எழுந்துகொண்டு முந்தானையை தூக்கிப் போட்டுக்கொண்டு இடுப்பில் சேலையை செருகினாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ”என்ன பார்வை?” என்றாள். ”இப்ப முழிப்பு வந்திடுமோன்னு பயமா இருக்கு” என்றேன். ”கமான்…விடிய ஆரம்பிச்சாச்சு” என்றாள். நான் எழுந்தேன். கார்ச்சாவி இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக்கொண்டு நடந்தேன். அவள் சேலை சரியாக அமையவில்லை. ”ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சேலையை நன்றாகவே கலைத்து சீராக உடுத்தாள். ”கொஞ்சம் புடிச்சு விடுறது?”

நான் தரையில் குந்தி அமர்ந்து சேலையின் கீழ்மடிப்புகளை விசிறிபோல மடித்து நீவினேன்.”நல்ல பழக்கம் இருக்கு போலிருக்கே” என்றாள் ”பின்னே? எங்கம்மா டீச்சர். காட்டன் புடவைதான் கட்டுவாங்க.நான் தான் இந்தமாதிரி சேவைகள் செய்றது” என்றேன். ”போகாம்” என்றாள். நான் எழுந்தபோது நிசாகந்தி மணம் வீசியது. ”உன் தலையிலே பூ எங்க?” என்றேன். ”அது கீழே விழுந்திருக்கும்…”என்றாள். ”வேறே பூ இருக்கும்போல…நல்ல மணம்”

காரைக்கிளப்பியதும் கண்டுகொண்டேன் என் சட்டையில் இருந்துதான் நிசாகந்தி வாசனை வீசிக்கொண்டிருந்தது

[மேலும்]