இரவு 10

விண்மீன்குமிழிகள் மிதக்கும்

நதி இந்த இரவு

குறையாத கடலில் இருந்து

நிறையாத கடல் நோக்கி

ஒழுகிச்செல்கிறது.

மௌனமாக

நுரையில்லாமல்

 

 

நான் வாசலில் நின்றதைக் கண்டு நீலிமா அனிச்சையாக கால்வாசி எழுந்துவிட்டாள். முகம் மகிழ்ச்சியில் விரிய உதடுகள் எதையோ சொல்லவருபவை போல லேசாக பிளக்க வெண்பற்கள் உள்ளே செவ்விளக்கொளியில் தெரிய அவள் கணித்திரையில் கிரா·பிக்ஸ் உயிர்கொண்டு சற்றே அசையும் செவ்வியல் ஓவியம்போல் இருந்தாள். நான் என்னைத் திரட்டிக்கொண்டு ”ஐயம் ஸாரி..” என்றேன். மேனன் ”கமான்” என்றார் நான் சென்று நாற்காலியில் நீலிமாவுக்கு நேர் எதிராக அமர்ந்துகொண்டேன்.

நீலிமாவின் கன்னங்கள் திட்டுத்திட்டாகச் சிவந்து கொண்டிருப்பதாக பட்டது. உதடுகள் இன்னமும் ஈரம் கொண்டவை போல. கண்களின் ஓரத்தில் மெல்லிய நீர்க்கசிவு பளபளத்தது. கைவிரல்நகங்களைப் பார்த்துக்கொண்டிருக்க இமைகள் சிறிய குருவியொன்றின் சிறகுகள் போலச் சரிந்திருந்தன. கழுத்தின் குழியில் அதிர்வு தெரிந்தது.

”இது தாமஸ் தெக்கேப்பறம்பில்…” என்றார் மேனன். மீசையில்லாமல் கூரிய மூக்குடன் விளிம்பில்லா கண்ணாடி போட்டு ஜிப்பா அணிந்த மனிதர் ”ஹாய்” என்று வொயின் கோப்பையை தூக்கினார். நான் ”கிளாட் டு மீட் யூ” என்றேன். ”தாமஸ் ஒரு பாதிரியார்” என்றார் மேனன் ”ஆங்கிலத்தில். நிறைய பாடல்களும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். இங்கே செயிண்ட் ஆன்ஸ் செமினாரியில் இருக்கிறார்” நான் அவரைப் பார்த்ததுமே அவர் ஒரு பாதிரியார் என்று எப்படியோ கண்டுபிடித்திருந்தேன். ”இது சரவணன்…ஆடிட்டர். ஒரு புதிய வரவு” என்றார் மேனன்.

நாயர் ”நாங்கள் மனம்திரும்புதலைப் பற்றியும் சுயவருத்தத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்” என்றார். ”நான் என்ன சொன்னேன் என்றால் பாவம் என்பது எப்படி ஒரு கணநேர மன எழுச்சியோ அதைப்போன்றதே மனம்திரும்புதலும் என்று. ஒரு கிரா·ப் கோடு மேலே போவதும் கீழே இறங்குவதும் மாதிரி. இரண்டுமே இரண்டு வகையான உச்சங்கள். ஒன்றின் பிரதிபலிப்புதான் இன்னொன்று. அந்த மனிதனின் ஆளுமை என்பது இரண்டுக்கும்பொதுவாக நடுவே ஓடும் மையக்கோடு மாதிரி… எதற்குச் சொல்கிறேன் என்றால் நான் பல குற்றவாளிகளைச் சந்தித்திருக்கிறேன். நான் கொஞ்சநேரம் பேசும்போது கண்ணீர்விட்டு அழுது இனிமேல் இந்த தப்பை பண்ணவே மாட்டேன் சார், திருந்திவிட்டேன் என்பான். ஆரம்பகாலத்தில் நானும் அதை நம்பியிருந்தேன். ஆனால் திரும்பவும் அதையே செய்வான். அப்படியானால் என்னிடம் சொன்னது பொய்யா? அதுவும் உண்மைதான்….இது ஒரு ஊஞ்சல் மாதிரி. எந்த அளவுக்கு ஒருபக்கம் எழுகிறதோ அதே அளவுக்கு மறுபக்கமும் செல்லும். சென்றாக வேண்டும்…”

மேனன் ”அதாவது, இவரை மாதிரி பாதிரியார்கள் பாவமன்னிப்பு கொடுப்பதன் வழியாக மேலும் குற்றவாளிகளை உருவாக்கி அளிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்” என்றார். தாமஸ் ”மேனனே, கர்த்தாவினோடு களி வேண்ட கேட்டா?” ”போடா” என்றார் மேனன் இன்னொரு இஞ்ச் பிராந்தி விட்டுக்கொண்டு வெள்ளி இடுக்கியால் பனிக்கட்டிகளை  எடுத்து போட்டபடி. ”நல்ல நாயர் ஒரிக்கலும் செய்த காரியத்தினாய் நாணிக்கில்ல கேட்டடா?” தாமஸ் ”நாயம்மாருக்கு எந்தும் ஆகாம்…”என்றபின் என்னிடம் ”கேட்டீர்களா மிஸ்டர்- ” ”சரவணன்” என்றேன் .”சரவணன், நாயர்களிலும் சர்தார்ஜிகளிலும் கிறித்தவர்கள் கிடையாது. அவர்களுக்குப் புரியுமளவுக்கு பைபிளை எளிமைப்படுத்த வத்திகான் இனிமேல்தான் ஒரு கமிட்டி போடப்போகிறது.” என்றார்.

”நீ பாவமன்னிப்பைப்பற்றி பேசப்போகிறாய் என்றால் இன்னும் ஒரு லார்ஜ் ஏற்றிக்கொள்வது நல்லது” என்றார் மேனன். ”ஓ, அடியனு மதியே” என்றார் தாமஸ். பிறகு நாயரிடம் ”அதாவது இதிலே நான் கவனித்த விஷயம் என்னவென்றால் எதற்காக மனிதன் மனம் திரும்புகிறான்? மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று,  அவன் செய்துகொண்டிருக்கும் விஷயங்களில் அவனுக்கே உள்ளூர ஒரு கண்டனம் இருக்கிறது. அது தவறு என்று அவன் மனசாட்சி சொல்கிறது… ” ”ஓ புல் ஷிட்” என்றார் மேனன் ”ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு தாமஸ் தொடர்ந்தார். ”இரண்டு அவனுக்கு அவன் இருக்கும் நிலையில் பலவகையான பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சமாளித்து அவனால் அங்கே தொடர முடியவில்லை. மூன்று, அவனுக்கு வேறு ஒரு புதிய வாழ்க்கை வேண்டும் என்று தோன்றுகிறது. பெரும்பாலானவர்களில் இந்த மூன்று அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தே இருக்கின்றன”

”இந்த மூன்று காரணங்களில் முதல் இரண்டு காரணங்களுக்காக யார் மனம் திரும்புகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக திரும்பிசென்றுவிடுவார்கள். ஏனென்றால் ஒருமுறை மனம்திரும்பி சில நல்ல விஷயங்களைச் செய்ததுமே அவர்களின் குற்றவுணர்ச்சி போய்விடுகிறது. இதில் என்னைப்போன்ற பாதிரியார்கள் வேறு அவர்களிடம் நீ செய்தவை எதுவும் பெரிய தப்புகள் இல்லை என்று சொல்லிவிடுவோம். அதைப் பொறுக்கிக் கொள்வார்கள். பிரச்சினைகளை அஞ்சி மனம்திரும்புகிறவர்கள் சில நாட்களிலேயே அலுப்பு கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். ஏனென்றால் அந்தப்பிரச்சினைகள்தான் அவர்களின் முழுமையான ஆற்றலை செலவிட்டு அவர்கள் செய்யவேண்டிய செயல்கள். எப்போது மனித ஆற்றல் வெளியே வருகிறதோ அப்போதுதான் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். பிரச்சினைகள் இல்லாத சலிப்பில் இருந்து வெல்ல திரும்பவும் தவறுகளுக்குச் செல்வான். பாவத்தில் இருக்கும் ஈர்ப்பு இருக்கிறதே அது சாதாரணமானதல்ல. பாவமளவுக்கு உயிர்த்துடிப்பான இன்னொன்று கிடையாது. பாவம் அளவுக்கு நம்மை மூழ்கடிக்கும் வல்லமை வேறு எதற்குமே கிடையாது. சொல்லப்போனால் லூசி·பர் ஏசுவை விட மகத்தானவன். என்ன இருந்தாலும் அவன் மூத்தவன் அல்லவா? இருந்தாலும் ஏன் லூசி·பர் தோற்கிறான் என்றால் மானுடகுலம் நீடித்து வாழவேண்டும் என்று பரமபிதா நினைக்கிறார் என்பதனால்தான். ஏசு ஜெயித்தால் மட்டுமே மானுட குலம் வாழ முடியும். அது மட்டும்தான் ஏசு ஜெயிப்பதற்கான காரணம். மற்ற எல்லா காரணங்களும் லூசி·பருக்குச் சாதகமானவை”

நான் சட்டென்று அந்த உரையாடலில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நீலிமாவை என் உடலின் எல்லா மயிர்க்கால்களாலும் உணர்ந்தபடி அவளைப் பார்க்காமல்  தாமஸை நோக்கி பார்வையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவளுடைய பிரக்ஞை முழுக்க என் மீதே இருக்கிறதென்று பட்டது. ”மனம் திரும்புகிறவன் இன்னொரு மேலான வாழ்க்கை வேண்டும் என்று நினைத்தான் என்றால் அவனுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அங்கே ஏசு பேசுவதற்கு ஒரு சிறிய இடைவெளி கிடைக்கிறது. ஏனென்றால் அது ஒரு அடிப்படையான ஆசை. இன்னும்கொஞ்சம் மேலான ஒன்று தனக்கு வேண்டும் என்ற நிரந்தரமான ஆசையால் தான் மானுடகுலம் இதுவரை கொண்டுவரப்பட்டிருக்கிறது. புனிதமான ஆசை அது. ஏசு முழுமனதோடு ஒத்துக்கொள்ளக்கூடிய ஆசை. இன்னமும் அழகான இன்னமும் தீவிரமான இன்னமும் பெரிய ஒன்று வேண்டும் என்று. அதை நாம் ஒரு குற்றவாளிக்கு அளித்தால் அவன் திரும்பிச் செல்ல மாட்டான். எட்டாம் வகுப்பு மாணவனை நீங்கள் ஏழாம் வகுப்பில் உட்காரச் செய்ய முடியாது. அவன் உடம்பு கூசும். சின்ன வயது சட்டைக்குள் நாம் நுழைய முடியாது”

”ஓ, இவன்றே ஆ குரிசு எடுத்து கொடுத்தால் மதியல்லோ… போடா” என்றார் மேனன். அவர் நன்றாகவே போதையில் இருந்தார். ”நான் ஒரு விஷயம் கவனித்திருக்கிறேன் மிஸ்டர்–” ”சரவணன்” ”எஸ்,சரவணன், இந்த நாயர்கள் அடிப்படையில் போலீஸ்காரர்கள். அதாவது படைவீரர்கள். அவர்கள் தத்துவஞானிகளாக இருக்கலாம். கலைஞர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம். ஒரு லார்ஜ் உள்ளே போனால் எல்லா நாயரும் படைநாயர்தான். அதன் பிறகு லெ·ப்ட் ரைட் மட்டும்தான் மண்டைக்குள் இருக்கும்” நான் லேசாக புன்னகை செய்தேன்.

 

மேனன் துடித்தெழுந்து ”யூ பிளடி ·பக்கர்… யூ நோ ஆல் நஸ்ராணிஸ் ஆர் பேஸிக்கலி லோ·பர்ஸ்… கேட்டியா சரவணன். எல்லா சிரியன் கிறிஸ்தவர்களும் குடிகாரப்பொறுக்கிகள். சந்தேகமிருந்தா இவனோட பிஷப்புக்கு ஒரு நான்கு லார்ஜ் ஊற்றிக்கொடுத்துப்பாரு. சங்ஙனாச்சேரியிலே அவன் அப்பூப்பன் பரட்டுக்காட்டு தோமாச்சன் வாத்து மேய்க்கிறப்ப சொல்ற எல்லா கெட்டவார்த்தையும் அவன் வாயிலேயும் வரும்… நம்ம ஜோர்ஜ் பூதக்காட்டிலை தெரியுமில்லை? ப்ச, பழைய பிஷப். பெரிய மகான். இப்ப அவரோட கல்லறையிலே ஸ்கூல் பிள்ளைங்க மெழுகுவத்தி ஏத்துறாங்க. செயிண்ட் ஜோர்ஜ்…அவரு எனக்கு நல்ல பழக்கம். பகல் முழுக்க பிரார்த்தனை பிரசங்கம். ராத்திரியானா பிராந்தி ஏத்திக்கிட்டு டா ஏசு,மயிரேன்னு ஆரம்பிச்சு விடிய விடிய நாறடிப்பார். ஒரு ஆசாரியை  அப்டித்தான் நடத்தணும்னு எங்கிட்ட சொனனர். அவரோட அப்பா பூதக்காட்டில் வற்கிச்சாயனுக்கு போட் செய்ற ஆலை இருந்தது. அதிலே நெறைய ஆசாரிமாரை பாத்திருக்காராம். ஒரு ஆசாரிக்கு என்ன பெரிசா ஞானம் கெடைச்சிருக்கும்னு நமக்குத் தெரியாதான்னு சொல்லுவார். சொல்லப்போனா ஏசுவுக்கும் ஜோர்சச்சாயனோட தெறி பிடிச்சிருந்ததுன்னு தோணுது. இல்லேன்னா அவரை செயிண்டா ஆக்கியிருக்க மாட்டாரே. சும்மா இவனை மாதிரி ஆட்கள் நாள் முழுக்க கர்த்தாவே கர்த்தாவேன்னு போட்டு உயிரை எடுக்கிறதுக்கு ஒரு சேஞ்சா ஒருத்தர் நல்ல சாவக்காட்டு மலையாளத்திலே நாலு புளிப்பும் காரமும் உள்ள வார்த்தை பேசிக்கேட்டா ஒரு சுகம்தானே… எந்தா தோமா?”

”நாயம்மாருக்கு எந்தும் பறயாம்”என்றார் தோமஸ் ”கேட்டீர்களா மிஸ்டர் சங்கரன், நாயர்களுக்கு கேரளத்தில் இருந்து நேரே நரகத்துக்கு போவதற்காக பரிசுத்த பிதா ஆகாசத்தில் ஒரு சூப்பர்ஹைவே போட்டிருக்கிறார். ஆனாலும் அதில் டிரா·பிக் ஜாம்” மேனன் ”போடா…கமலே…மை டியர்,  ஐ வான்ட் சம் லிகர்…சம் ஹெவென்லி டிரிங்க்” என்றார். நாயர் ”மனம்திருந்தும் குற்றவாளி என்று ஒருவர் உண்டா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது ·பாதர்” என்றார். ”இருக்கிறார்கள். நிறையவே இருக்கிறார்கள்.” ”நான் பார்த்ததில்லை…” ”ஏன் நானே அவர்களில் ஒருவன்தானே?” என்றார் தோமஸ். ”அதுக்கு நீ எங்கேடா மனம் திரும்பினாய், பாஸ்டர்ட்?” என்று மேனன் சிவந்த கண்களுடன் ஆங்கிலத்தில் உக்கிரமாகக் கேட்டார். ”ஸீ மிஸ்டர் சரவணன், மை டியர் ஆடிட்டர் சரவணன், நீ ஒரு நல்ல தமிழன், இந்த நாய் என்னோட கிளாஸ்மேட்.  நான் எழுதிக்கொடுத்த பிட்பேப்பரை வைத்து பரீட்சை எழுதி ஜெயிச்சுட்டு இப்ப எனக்கே அட்வைஸ் பண்றான்… டா மயிரே, நீ சரோஜினியம்மையோடு எந்து பறஞ்š எந்நு ஞான் பறயுமே…கர்த்தாவாண சத்யம் ஞான் பறயுமே”

நாயர் மேனனை முற்றாகப் புறக்கணித்து ”ஒரு மனிதன் அவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றை கண்டுகொண்ட பின்பு அதிலிருந்து மீளமாட்டான்” என்றார். ”அது மகிழ்ச்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? பலசமயம் மனிதனுக்கு துன்பம் தேவைபப்டுகிறது. வலி தேவைப்படுகிறது. அவமானம் தேவைப்படுகிறது. தேடிப்போய் அவற்றை அடைபவர்கள் உண்டு” என்றார் ·பாதர் . நான் ”நீங்கள் என்ன செய்கிறீர்கள் ·பாதர்?” என்றேன். ”நான் சொந்தமாக ஒரு பாவமன்னிப்பு முறையை உருவாக்கியிருக்கிறேன்” என்றார் தாமஸ்.”பகல் முழுக்க உபவாசம் இருக்கவேண்டும். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு தனிமையில் வந்து பாவமன்னிப்பு கோரவேண்டும். நிஸாகும்பஸாரம் என்று பெயர். இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இரவில் மனிதர்கள் நெகிழ்ந்து போய் இருக்கிறார்கள்”. மேனன் ”பிகாஸ் இம்மீடியட்லி தே கன் கோ ஹோம் ஆண்ட் ·பக்” என்றார். அவரது மோவாய் நன்றாகவே மார்பில் படிந்திருந்தது.

”நீங்கள் அப்படித்தான் இரவுலகுக்கு வந்தீர்களா?” என்றேன் ”ஆமாம். ஆரம்பம் முதலே எனக்கு இரவு பிடிக்கும். பகல் முழுக்க மனிதர்களுடன் இருப்பதாகவும் இரவு நானும் கர்த்தாவும் மட்டும் இருப்பதாகவும் தோன்றும். இரவுதான் பிரார்த்தனையின் நேரம். சொற்கம் வாசல்களை திறக்கும் நேரம். எங்கள் தேவாலயத்திற்கு வாருங்கள். எங்கள் செமினாரி பதினேழாம் நூற்றாண்டில் சிரியன் மிஷன் ஒன்றால் கட்டப்பட்டது. அங்குள்ள தேவாலயம் மிகவும் பழமையானது. பதினெட்டாம் நூற்றாண்டுச் சுவரோவியங்கள் உண்டு.  ஆல்ட்டர் மிகவும் அழகாக இருக்கும். பலாமரத்தால்செய்யபப்டு கில்ட் அடிக்கபப்ட்ட சிற்பங்கள். குழந்தை ஏசுவும் மரியும். வழக்கமாக தேவாலயங்கள் சிலுவை வடிவில் இருக்கும், இது ஓவல் வடிவில் இருக்கும். அந்த தேவாலய அரங்கில் விடியற்காலையின் குளிரில் தன்னந்தனியாக சில மெழுகுவத்திகளை ஏற்றிவைத்துவிட்டு பிரார்த்தனை செய்தால் கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவை இதோ இவ்வளவு பக்கத்தில் அறிய முடியும். அவரது உடலின் சூடு நம் மீது படுவது போல் இருக்கும்”

”·பாதர் ஒரு கிறிஸ்தவ இரவுச் சமூகத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார் நாயர். ”அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை. நள்ளிரவுக்குப் பின்னால் பிரார்த்தனை செய்வதை நான் பிரபலப்படுத்தினேன். என் மீதான நம்பிக்கையில் கொஞ்சம் புதியவர்கள் வந்திருக்கிறார்கள். இரவின் மௌனத்தில் ஒரு சர்ச் ஆர்கனை மெல்ல தொட்டால் போதும் தேவ சங்கீதம் எழும். ஆலய மணிகளில் துணியைச் சுற்றி மெல்ல அடிப்போம். அந்த நாதம் காதுகளிலேயே விழாமல் மனதுக்குள் சென்று விடும்..” என்றார் தாமஸ் ”ஓ, ஹி இஸ் ஆல் ஓவர்” என்று மேனனைப்பார்த்து உதட்டைப் பிதுக்கினார். மேனன் நன்றாக தூங்கிவிட்டிருந்தார். ”மனம் திரும்புகிறவர்களை நான் இரவுலகுக்குக் கொண்டு வந்துவிடுகிறேன். அவர்கள் செய்துவந்த அனைத்தையும் அந்த சூழலுடன் அந்த உணர்வுகளுடன் அப்படியே உதறிவிட்டு இரவுக்கு வந்து விடச்செய்வேன். இங்கே முற்றிலும் புதிய ஓர் உலகம். பிதாவின் ஆசி மௌனமாக மண்மீது பொழிந்துகொண்டிருக்கும் ஒரு புனிதமான உலகம். அதன் பின் அவர்களுக்கு வியாபாரமும் சதிகளும் பேராசைகளும் பாவங்களும் நிறைந்த பகல் இல்லை. தியானமயமான இரவு மட்டும்தான்”

நான் அவரது அந்த தீவிரத்தை சற்றே மிகையாக உணர்ந்த அக்கணமே அவர் சிரித்து ”ஆனால் இதெல்லாம் திருடர்களுக்கு பொருந்தாது. அவர்கள் ஏற்கனவே இரவில்தான் இருக்கிறார்கள். கர்த்தாவின் அருளோடு திருடுகிறார்கள்” என்றார். நான் சிரித்தேன். அவர் அபாரமான புத்திசாலித்தனம் கொண்ட மனிதர் என்று ஊகித்தேன். அவரது நம்பிக்கையின் அதீதத்தன்மையை அவரே கிண்டல் செய்து கொள்வதன்மூலம் அதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

”வாட் ஹேப்பண்ட் டு ·புட்?” என்றார் மேனன். ”ஐ திங் கம்லா இஸ் டூயிங் சம்திங் நியூ”என்று ·பாதர் சொன்னார். ”ஞான் போயி நோக்கட்டே” என்று சொல்லி நீலிமா எழுந்தாள். நான் அவளைப் பார்த்து புன்னகை செய்தேன். அவள் என் கண்களைப் பார்த்து ”நீங்க கூட வாங்க” என்றாள். அந்த நேரடியான அழைப்பு என்னை சில கணங்கள் பதறச் செய்தது. பின்பு ”எஸ்..ஷ்யூர்” என்று எழுந்துகொண்டேன். இரூவரும் உள்ளே சென்றோம்.

நீலிமா ”ரெண்டுபேரும் போட்டு அறுத்துட்டாங்க இல்ல?” என்றாள். நான் ”அதெல்லாம் இல்லை” என்றேன். ”ஒண்ணும் சொல்ல வேண்டாம். நானே பார்த்தேன். பச்சைமுட்டை குடிச்ச முகபாவத்தோட உக்காந்திட்டிருக்கிறதை…” என்றாள். நான் சிரித்தேன். ”கமான்..” என்று சொல்லி உள்ளே சென்றாள். அவள் அருகே நிற்கையில் அவளுடைய  பளீரிட்ட தோள்களை விட்டு கண்களை நகர்த்த முடியாமல் ஆனால் அப்படிப் பார்ப்பதன் அத்துமீறலை உணர்ந்தவனாக நான் இனிய திணறல் ஒன்றை அடைந்தேன். 

கமலா சமையலறையில் அவசரமாகச் சமைத்துக்கொண்டிருக்க அருகே மஜீத் அமர்ந்திருந்தார். நான் மஜீதை பார்த்ததும் ”ஹலோ இக்கா” என்றேன். ”எந்தா மோனே?” என்று சொல்லிவிட்டு நீலிமாவைப் பார்த்து ”நீலமிழியுள்ளோரு மொஞ்சத்தி நின்நுடே நோக்கொரு முனயுள்ள கத்தி”’ என்று பாடினார். நீலிமா புன்னகை செய்தாள். ”நான் சமையலுக்கு உதவி வேணுமா?” என்றேன் .”முடிஞ்சிட்டுது” என்றார் கமலா. ”என்ன குற்றவாளிகளை ராத்திரியிலே பிரார்த்தனை செய்ய சொல்லணுமா வேண்டாமா, தர்க்கம் எதுவரைக்கும் வந்திருக்கு?” என்றார் சிரித்தபடி. ”இங்கே கேட்குமா?” என்றேன்.”நான் வரும்போதே இதினேப்பற்றித்தான் பேச்சு அங்கே”

மஜீத் சிரித்தபடி ”ஞம்மக்கு ஒரு ஐடிய உண்டு. நல்ல வர்க்கத்துள்ள மனிசேம்மாரு ஒந்நு ·பாலிளகி மண்டன்மாராவான் மேண்டிட்டா இம்மாதிரி ஹராம்புடிச்ச வெள்ளம் வலிச்சு கேற்றுந்நே” என்றார். நான் ”என்ன சொல்றார்?” என்றேன். ”மலையாளம் புரியாதா?” ”புரியும்…ஆனா இவர் பேசறது சுத்தமா புரியலை” ”இது அரபி மலையாளம்… பர்க்கத்துன்னா அறிவு. அப்றம் ·பால்ன்னா கிறுக்கு….ஹராம்னா பாபம்…எந்தா மஜீதே?” மஜீத் ”பின்னே?” என்றார். நான் ”சரி , அது அரபி. ஆனா மத்த மலையாளமும் புரியலியே” ”அது அல்லாவுக்குத்தான் முழுக்க புரியும்” என்றார் கமலா ஆங்கிலத்தில்.

நான் ”மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார்?” என்றேன். ”புத்திசாலிகள் ஒரு விடுதலைக்காக தங்களை முட்டாளாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்று இந்த மதுவைக் குடிக்கிறார்கள் என்கிறார்” என்று நீலிமா ஆங்கிலத்தில் சொன்னாள். ”இதுவும் ஒரு மலையாளம். ஆறுமலையாளிக்கு நூறு மலையாளம் என்று ஒரு பழமொழி உண்டு. மலையாளத்தில் மற்ற மொழி கலந்தால்தான் மலையாளம் வளரும். இது ஒரு காக்டெயில்” கமலா சிரித்தாள்.

”ஞம்மடே கார்ணோம்மாரு கடலில் அரேபியாக்கு உரு ஓட்டி கயிஞ்ஞவரா.. போப்பூர்ல்…அறியாலோ போப்பூரில்..” என்றார் மஜீத். கமலா ”போப்பூர் கோழிக்கோடுக்கு அருகில் இருக்கும் ஒரு ஊர். நூறு வருடம் முன்புகூட பெரிய துறைமுகமாக இருந்தது. அரபு வணிகம் முழுக்க அந்த வழியாகத்தான் நடந்திருந்தது. பிறகு ஆற்றுமணல் மூடி துறைமுகம் அழிந்தது. இப்போதுகூட ஏராளமான கட்டிடங்கள் அங்கே கைவிடப்பட்டு கிடக்கின்றன” என்று சொன்னார். ”சமையல் முடிஞ்சாச்சு…. குடிகாரங்க ரெடியாயிட்டாங்களா?” ”ஞான் நோக்கிட்டு வராம் ஆன்டி” என்று நீலிமா கிளம்பினாள்

மஜீத்  அந்தக்காலத்தில் போப்பூரில் உருக்கள் சாயங்காலம்தான் கரைக்கு வரும் என்று சொன்னார். இரவு முழுக்க சரக்குகளை கரையிறக்குவார்கள். மாட்டு வண்டிகளில் கோழிக்கோட்டுக்கு கொண்டுவருவார்கள். விடிவதற்குள் சரக்கு ஏற்றிக்கொண்டு உருக்கள் கிளம்பிவிடும். உருக்கள் என்றால் என்னா என்று கேட்டேன். பெரிய மரக்கலங்களுக்கு உரு என்று பெயர், இப்போதுகூட போப்பூர் பகுதியில் ஆசாரிமார் அவற்றைச் செய்கிறார்கள் என்றார்.

ஏன் மரக்கலங்கள் இரவில் வரவேண்டும்? ஏனென்றால் அவை பகலில்தான் கிளம்பிச் செல்ல முடியும். கரையோரமாக கடலுக்குள் நிறைய மலைகள் உண்டு. அடையாளங்களை வைத்து கவனமாகச் செல்ல வேண்டும். இரவில் போக முடியாது. ஒரு முற்ற்பகலில் கிளம்பவில்லை என்றால் அந்த நாள் வீண் இருபது இரவும் , இருபது பகலும் ஆகும் அரேபியாவுக்குச் சென்று சேர. அரிசி முதல் துணிகள் வரை கொசெல்வார்கள். பேரீச்சம் பழம் முதல் குதிரைகள் வரை கொண்டு வருவார்கள். ”அதொரு காலம் மோனே… அந்நொக்கே மாப்ளைக்கு முஸீபத்து உண்டாயிருந்நு” முஸீபத் என்றால் என்ன என்று நான் கேட்கவில்லை.

போப்பூர் இரவுநகரம் என்று அழைக்கப்பட்டது. பகலில் நகரம் அப்படியே களையிழந்து ஆவிகளின் நகரமாக ஆகிவிடும். போப்பூரில் பேய்கள் பகலில்தான் சுற்றிவரும் என்று பழமொழி உண்டு. பண்டக சாலைகள் பூட்டிக்கிடக்கும். சாளைமீன் காயப்போட்டதுபோல எல்லா இடங்களிலும் கூலியாட்கள் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.  கண்விழித்திருக்கும் எவரையுமே பார்க்க முடியாது. காலையில் பள்ளியில் தொழுகைக்கு மோதினாரும் முசலியாரும் மட்டும்தான் இருப்பார்கள். மாலைத்தொழுகைக்குத்தான் பட்டுக்குல்லாயும் சொக்காயும் அணிந்த மாப்ளகள் வந்து கூடுவார்கள்.

தொழுகை முடிந்ததும் வடக்கன் மாப்ளா ஓட்டல்களில் கூட்டம்கூட்டமாக குழுமி வெள்ளையப்பமும் பத்திரியும் மாட்டுக்கறியும் ஆவிபறக்க சாப்பிடுவார்கள். உருக்கள் ஒவ்வொன்றாக கரையடுக்க ஆரம்பிக்கும். எங்கும் சீனவிளக்குகள் எரியும். ஹாஜி தடத்தில் காதர் மொய்தீன் கடைக்கு முன் அந்தக்காலத்திலேயே பிரம்மாண்டமான கல்விளக்குத்தூண் நாட்டி அதில் கேஸ் விளக்கு போட்டிருந்தார். மண்ணெண்ணை ஒரு பெரிய பீப்பாயில் தரையில் வைக்கப்பட்டிருக்கும். வண்டு போல ரீங்கரித்தபடி விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அது ஒரு பிரம்மாண்டமான பூச்சி என்று நம்பிய முஸ்லீம்கள் அதற்கு இபிலீசு விளக்கு என்று பெயரிட்டார்கள்.

”இபிலீஸ்னா?” ”செகுத்தான். படைச்சோனின்றே சத்ரு.” இபிலீஸ் விளக்கின் ஒளியில் தடத்தில் கடைமுற்றம் பகலாக இருக்கும். சாதாரணமான பகல் அல்ல பொன்வெளிச்சம் உள்ள பகல். அந்த வெளிச்சத்தில் ஹாஜி வெள்ளி நாணயங்களை பரப்பிவைத்து அவற்றை பொன் நாணயங்களாக மாற்றினார் என்று சொல்வார்கள். ஆயிரம் தீக்கண்கள் கொண்ட விலங்குகள் போல மரக்கலங்கள் கடலில் பொறுமை இழந்து ஒன்று மீது இன்னொன்று மெல்ல முட்டி அலைபாயும் சீனவிளக்குகளின் ஒளியில்  மனிதர்களுடன் அவர்களின் நிழல்களும் அசைய நகரமே ஜின்னுகளும் இபிலீஸ¤களும் கலந்து நடனமிடுவது போலிருக்கும். ”இப்போ போப்பூரினு ராத்ரியில்ல மோனே.. பகல் மாத்ரமே உள்ளூ”என்றார் மஜீத்

மேனனும் நாயரும் பேசியபடியே வந்தார்கள். பின்னால் ·பாதர் தாமஸ் நீலிமாவுடன் சிரித்துக்கொண்டு வந்தார். மேனன் முகம் கழுவி போதையே இல்லாமல் புதிதாக இருந்தார். அதற்குள் எப்படி மொத்த சாராயத்தையும் ஜீரணித்துக்கொண்டார் என்று புரியவில்லை. மேனன் என்னிடம் ”சாப்பிடலாமா?” என்றார். ”யூ ஆர்  சோபர்”‘ என்றேன். ”எஸ் ஐயம்” என்று சிரித்துக்கொண்டே ஊண்மேஜையில் அமர்ந்தார். கமலா என்னிடம்  ”இந்தா இதையெல்லாம் எடுத்து  வையுங்கள்.. ”என்றார். நான் பாத்திரங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். மஜீத் தண்ணீர் நிரப்பி வைத்தார்

·பாதர் ”கேட்டா நாயரே, யுவர் டாட்டர் இஸ் என் எக்ஸ்டிரீம்லி ப்யூடிபுள் கேர்ல்” என்றார். ”பாத்தியா இதனாத்தான் இந்தாள் பாதிரியானான். இத ரகசியத்தைக் கண்டுபிடிக்க இவனுக்கு எட்டுமாசம் ஆகியிருக்கு” என்றார் மேனன். ”பெண்ணுங்களோடு குணுங்ஙாதே வந்து இருந்நு தின்னடா பட்டீ” . ·பாதர் வந்து அமர்ந்துகொண்டு ”எனக்கு இங்கே வருவது மிகவும் பிடித்திருக்கிறது கமலா. வருடம் முழுக்க கர்த்தாவிடம் பேசிக்கொண்டிருந்ததற்கு இங்கே வந்து சாத்தானிடம் ஒருநாள் பேசுவது நல்ல மாறுதலாக இருக்கிறது”

நானும் சாப்பிட அமர்ந்துகொண்டேன். மஜீதும் பரிமாறினார். ”ஒருகாலத்தில் கமலா பேரழகி” என்றார் ·பாதர் ”ஆனால் இப்போது அதைவிட பேரழகி” கமலா சிரித்தபடி ”தோமாச்சா வேண்டா வேண்டா” என்றார்.  உற்சாகமான உரையாடல்கள் வழியாக சென்றுகோண்டே இருந்தோம். நான் ”மஜீத் போப்பூரைப் பற்றிச் சொன்னார்” என்றேன். ”அவன் ஒன்றைச் சொல்லியிருக்க மாட்டானே..போப்புர்தான் ஒருபால் புணர்ச்சியின் தலைமை பீடம். ” என்றார் மேனன். ”மாப்பிளாக்கள் நாளெல்லாம் கப்பலில் வாழ்ந்தவர்கள். அங்கே அவர்கள் உருவாக்கிக்கொண்ட இரு ருசிகள். ஒன்று பிரியாணி. கையிலே கிடைத்த கறியை எல்லாம் சோற்றுடன் போட்டு வேகவைப்பது. கறி கொஞ்சம் பழசாக இருக்கும் என்பதனால் எல்லாவகையான நறுமணப்பொருட்களையும் அதில் போடுவது…அப்படித்தான் பிரியாணியை கண்டுபிடித்தார்கள். இன்னொன்று இது…கப்பலில் பெண்கள் செல்வதில்லை இல்லையா?”  என்றார் ·பாதர்

மேனன் ”அந்தக்காலத்தில் போப்பூர் என்றாலே இதுதான் அர்த்தம்.  இப்போதுகூட போப்பூரிலும் சுற்றுவட்டாரங்களிலும் இரவுச்சங்கங்கள் உண்டு. எல்லாருமே இந்தப்பழக்கம் கொண்டவர்கள்” என்று மேனன் ஆரம்பித்ததுமே ”விஜய் வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட்?” என்றார் கமலா. நான் அனிச்சையாகக் கண்களை திருப்பியதும் நீலிமாவைப் பார்த்தேன். அவள் உதடுகள் விரியாமல் புன்னகை செய்தாள்.

”தென், வாட் இஸ் யுவர் பிளான்?” என்றார் ·பாதர். ”ஆர் யூ கமிங் வித் மி?” நாயர் மேனனைப் பார்த்தார். ”என்னுடைய பிஷப் இன்று அதிகாலை பிரார்த்தனைக்கு வருகிறார். நான் அவருக்கு இந்த சாத்தானை அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். நீங்களும் வரலாம்” என்றார். நாயர் ”ஓகே…” என்றார். கமலா ”நீங்கள் மூன்று சாத்தான்களும் போனால் போதும். நீலிமாவும் சரவணனும் தனியாக எங்கோ போகவேண்டும் என்று சொன்னார்கள்” நாயர் நீலிமாவிடம் ”இஸ் இட்?” என்றார். அவள் தலையசைத்தாள். நான் பிரமிப்புடன் கமலாவைப் பார்த்தபோது அவர் புன்னகைசெய்தார்

[மேலும்]

முந்தைய கட்டுரைவிமரிசகனின் தடுமாற்றங்கள்
அடுத்த கட்டுரைபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்