பயணம்:கடிதங்கள்

திரு ஜெயமோஹன் அவர்களுக்கு,

உங்கள் பயணத்தின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் எனக்கான அனுபவ நீட்சியாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் நான் நிகழ்வுகளை (ஹாப்பனிங்ஸ்) அதிகமாக நம்புகிறேன். எனக்கும் இப்படிப்பட்ட ஒரு பயண அனுபவம் லபிக்குமா என்று தெரியவில்லை. நிச்சயம் நம் தேசத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள எனக்கு ஒரு தேசிய சுற்றுப்பயணம் அவசியம் தேவை.குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள் ஒரு மிஸ்டரியாகவே இருக்கிறது.

கேரளம் போலவே வங்காளமும் இருப்பதாக பட்டதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள். எனக்கும் நான் அறிந்தவரை அப்படியே தோன்றுகிறது. இரண்டுமே ஒரு பெண் தலைமை சமூகமாக அல்லது ஒரு ஆளுமையான பெண்கள் இருக்கும் சமூகமாக படுகிறது.இரு மாநிலங்களிலும், பெண் தெய்வ வழிபாடும் அதிகம், நீர்வழிப்போக்குவரத்து வசதி உள்ளது. மீன், ப்ரதான அங்கமாக  இருக்கிறது. கலைஞர்கள் ஒரு நுன்கலையில் மிக உயரிய இடத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. இசையிலும் மற்றவர்களை விட சிறப்பாகவே உள்ளது.அற்புதமான தேசிய விருது பெறும் திரைப்படங்கள் இங்கேதான் உருவாகின்றன. கம்யூனிஸத்திற்கு ஆதரவு அதிகம் இருப்பதும் இங்கேதான். இன்னும் பல இருக்கலாம். எனக்கு என்னவோ கேரளமும் வங்காளமும் ஒன்றெனவே தோன்றுகிறது.

நான் அறிந்தவரை பல எழுத்தாளர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.நீங்கள் இந்தியாவைப் புரிந்துகொள்கிறேன் என்று கிளம்பிவிட்டீர்கள். இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? உதாரணமாக பலர், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க கண்டத்திற்கும் சென்று வந்து கோட் சூட் படங்களுடன் அங்கு பரிமாரப்பட்ட ஸ்காட்ச் பற்றியும், காக்டெயில் பற்றியும் எழுதும் போது, நீங்களோ சவரம் செய்யப்படாத முகத்துடன், காவித்துண்டோடு, இந்தியாவின் மாநிலங்களை, புராதன இடங்களை சுற்றி வந்து, மிக அதிகபட்சமாக அருந்திய கள்ளைப்பற்றி எழுதுகிறீர்கள்.
என்ன நடக்கிறது இங்கே? :)

தெலுகு இலக்கியம் பற்றி ஒருவர் உங்களுக்கு பதித்திருந்த கடிதம் படித்தேன். தெலுகு மொழியில் வந்த நல்ல படைப்புகளை அடையாளம் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இப்போது விஸ்வநாத சத்யநாராயணா எழுதிய “வேயி படகலு” படித்துக்கொண்டு இருக்கிறேன்.

நீங்கள் எழுத்துகளாக மட்டுமில்லாமல், ஏன் உங்களது சில பதிவுகளை, குரல் பதிப்புகளாக பதிவு செய்வதில்லை?  உங்கள் பேச்சைக்கேட்கவும் ஆவலாகவே உள்ளோம் சார்.
-ராம்

அன்புள்ள ராம்

நான் எப்போதுமே இந்திய தரிசனத்தில் ஆர்வம் கொன்டவந்-என் 19 வயது முதல் இந்த நாட்டு மண்ணில் அலைந்துகோன்டே இருக்கிறேன். நெடும்பயணங்கள் செய்யாத வருடமே இருந்ததில்லை. சென்றவருடம் பத்தாயிரம் கிலோமீட்டர். அதற்கு முந்தைய வருடம் பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர். நண்பர்களுக்கு கார் இருப்பதை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்பவன் நாந் அதில் கூச்சம் பார்க்க மாட்டேன். எந்த பயண வாய்ப்பையும் நான் தவிர்ப்பதில்லை

இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் அனைவருமே நிரந்தரப் பயணிகள். பஷீர், காரந்த்… தமிழ் எழுத்தாளனுக்கு பயணத்துக்கு பணம் அமைந்ததில்லை. எனக்கு சினிமா அந்த சிறிய வருமானத்தை அளிக்கிறது, அவ்வளவுதான்.

குரல்பதிவு நல்ல யோசனை. ஆனால் பொதுவாக தொழில் நுட்ப விஷயங்களில் நான் மிகமிக மந்தம்
ஜெ

88888

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் பயணக்கட்டுரைகளை தொட்ர்ந்து வாசித்து வருகிறேன். ஏங்கவைக்கும் பயணம், பிரமிக்கவைக்கும் விவரணம்.

வங்காளத்தின் மீசை வைத்த சாமி பற்றி சொல்லி இருந்தீர்கள் – அது விஸ்வகர்மா பூஜை – செப்டம்பர் 15 வாக்கில் பீஹாரிலும் வங்காளத்திலும் (மற்ற இடங்கள் பற்றி எனக்குத் தெரியாது) பிரம்மாண்டமாக நடக்கும் பூஜை. நம் ஊர் ஆயுதபூஜைக்கு வடக்கின் மாற்று அது. தொழிற்சாலைகளில் துர்கா பூஜையை விடவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பூஜை. ஏறத்தாழ விநாயகர் சதுர்த்தி பார்மட்டில்தான் நடக்கும் – பெரிய சிலைகள், ஆட்டம் பாட்டத்துடன் பூஜை, 3 ஆம் நாள் விசர்ஜனம் என்று.இதற்கும் வரி வசூலித்து சிறுவர்கள் ரௌடிகள் ஆவதன் தொடக்கமும் உண்டு.

என் பீஹார் நாட்களை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.
அன்புடன்

சுரேஷ்
8888

அன்புள்ள ஜெயன்

உங்கல் எழுத்துக்கள் வழியாக உங்களுடன் பயணம்செய்கிறேன். பயண அனுபவம் முழுமையாகட்டும் என்ற எண்ணத்தால் நான் நடுவே எதுவும் எழுதவிரும்பவில்லை

எழுத வைத்தது என்னவென்றால் சிங்களப்பயணிகளைப் பற்றிய அவ்சந்தகுமாரின் கருத்துதான். அவர்கள் இங்கே பணக்காரர்களாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மேல்நடுத்தரவற்கத்தினர் அதிகமாக இந்தியாவில் பயணம்செய்கிறார்கள். கட்டுபப்டியான செலவில் புத்தகயாவுக்கு பயணம் ஒழுங்கு செய்யும் பல நிறுவனங்கள் இங்கே உண்டு. என்னுடன் பணியாற்றும் பெரும்பாலான நிர்வாகிகள் கயாவுக்கும் பிற பௌத்த தலங்களுக்கும் சென்றுவந்தவர்களே 

இங்கே பொதுவாகவே மக்கள் பயணத்தை விரும்புகிறவர்கள். இந்த நாட்டுக்குள்ளேயே இவர்கள் நிறைய பயணம்செய்கிறார்கள். மூன்றுநாள் விடுமுறை வந்தால் கூட குழு சேர்ந்து சிறிய பயனங்கள் செல்வார்கள். இந்தியாவில் பொதுவாக மக்கள் பயணங்களில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய இந்திய நண்பர்கள் நான் இந்தியாவில் பார்த்த இடங்களில் பாதியைக்கூட பார்த்ததில்லை.

நீங்கள் மேலும் மேலும் பயணம்செய்யவேண்டுமென விரும்புகிறேன். காரணம் எங்களையும் உடனழைத்துச் செல்கிறீர்கள்

கலா
கொழும்பு

[தமிழாக்கம்]

அன்புள்ள ஜெ

கொனார்க் சூரிய கோயில் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழ்நாட்டிலும் சௌரமதம் மிகவலுவாக இருந்திருக்கிறது. பொங்கல் அதன் விளைவாக உருவானது. சூரியனை வளத்தின் தெய்வமாக கருதுவது பொங்கலின் சிறப்பு. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களில் கோபுரத்திந் உட்பக்கம் நுழையும்போது இடப்பக்கம் சூரியமூர்த்தி சிலைகள் இருப்பதைக் காணலாம். சூரியனார்கோயில் என்ற ஊரே சூரியவழிபாட்டின் அடையாளம்.

சரவணமூர்த்தி
சென்னை

முந்தைய கட்டுரைஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்
அடுத்த கட்டுரைஇந்தியப்பயணம் 23, முடிவு