பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 4
கனகன் வேண்டுமென்றே காலடி ஓசை கேட்க வந்து “பேரவைக்குச் செல்ல பிதாமகர் வந்து இறங்கிவிட்டார். இடைநாழி வழியாக இங்கே வருகிறார்” என்றான். “இங்கா?” என்று திகைத்து எழுந்த விதுரர் முகத்தை மேலாடையால் துடைத்துக்கொண்டார். திரும்பி ஒரு சிறிய ஆடியை எடுத்து தன் முகத்தை நோக்கினார். அப்போதுதான் தன் முகம் எப்படி துயரத்தை சுருக்கங்களாக்கி வைத்திருக்கிறது என்று தெரிந்தது. உதடுகளை விரித்து புன்னகையை நடித்தார். மெல்ல முகம் புன்னகை கொண்டதாக ஆகியது. சால்வையை சரிசெய்தபடி எழுந்து வெளியே ஓடினார்.
இடைநாழியில் விரைந்து சென்று பீஷ்மரை எதிரேற்று வணங்கினார் விதுரர். நீண்ட கால்களை விரைந்து வைத்து வந்த பீஷ்மர் காற்றில் பாய்ந்து வருபவர் போல தோன்றினார். கைகளை வீசியபடி சினத்துடன் “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றார். “தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார் விதுரர். பீஷ்மர் “விதுரா, மக்களிடம் ஆணைபெற்று ஆள்பவன் ஒருபோதும் நல்லாட்சியை அளிக்க முடியாது. மக்களின் உணர்ச்சிகளை எந்த மூடனும் தூண்டிவிட்டுவிட முடியும்…” என்றார். “ஏனென்றால் அவர்களுக்கு வரலாற்றில் பங்கே இல்லை. வரலாற்றில் பங்கெடுப்பதாக நடிக்கும்பொருட்டு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கே தீவைப்பார்கள். மூடர்கள்.”
விதுரர் “ஆனால் அது அவர்களின் ஒருங்கிணைந்த எண்ணமாக இருக்கையில்…” என்றார். “ஒருங்கிணைந்த எண்ணமா? எத்தனை நாழிகை அது ஒருங்கிணைந்ததாக இருக்கும்? சொல்! நான் இன்றே இதை ஷத்ரியர்கள் தங்கள் மேலாதிக்கத்துக்காக செய்யும் சதியாக பிறர் கண்களுக்கு மாற்றிக் காட்டவா? இதே குலத்தலைவர்கள் வந்து ஷத்ரியர்களுக்கு எதிராகப்பேசுவார்கள். பார்க்கிறாயா?” என்றார் பீஷ்மர். “மக்களின் எண்ணம் ஒருங்கிணைந்து இருந்த தருணமே வரலாற்றில் இல்லை. அது குறுகிய வழியில் செல்கையில் விரைவுகொண்டு கொந்தளிக்கும் நதியே. கரைகட்ட அறிந்தவன் அதை எளிதில் விரித்துப்பரப்பலாம்.”
“ஆம், நான் அதை அறிவேன். என்னால் அதை செய்யமுடியாது. அதற்கும் ஒரு ஷாத்ர வல்லமை தேவை” என்றார் விதுரர். “ஆனால், இப்போது என்னை கொன்று உண்ணவேண்டுமென பசி கொண்டுவிட்டார்கள். இன்று துரியோதனனுக்கு முடி சூட்டவில்லை என்றால் அது என் சதி என்றே எண்ணப்படும். என்னால் அதன் பின் அஸ்தினபுரியில் வாழமுடியாது. இம்மக்களின் நினைவில் நான் கசப்பாக ஆகிவிடுவேன்.” விதுரர் கண்களைத் திருப்பி “அது எனக்கு இறப்புக்கு நிகர் பிதாமகரே” என்றார்.
பீஷ்மர் பற்களைக் கடித்து குனிந்து “ஆகவே? ஆகவே என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்றார். “இளவரசர் முடிசூடட்டும்” என்றார் விதுரர் மெல்ல. “முடியா? மணிமுடியேவா?” என்றார் பீஷ்மர் உரக்க. “ஆம், வேறு வழியில்லை” என்றார் விதுரர். வெடித்தெழுந்த குரலுடன் கையை வீசி “ஒருபோதும் நடக்காது” என்றார் பீஷ்மர். பின் தன்னை அடக்கி மூச்சுக்குள் “அவர்கள் இருக்கிறார்கள்…” என்றார்.
”ஆம், பிதாமகரே. ஆனால் நாம் இன்று இருக்கும் நிலையை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அரசர் தங்கள் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்? இன்றுவரை அஸ்தினபுரியில் தங்கள் சொல் மீறப்பட்டதில்லை. இன்று நிகழ்ந்தது என்றால்?” என்றார் விதுரர்.
பீஷ்மர் சிலகணங்கள் கூர்ந்து நோக்கி “அப்படி நிகழும் என்கிறாயா?” என்றார். விதுரர் “அரசர் உணர்ச்சிமயமானவர். அந்த ஷத்ரிய குலத் தலைவர் பத்ரசேனர் அவர் சொன்னது போல கழுத்தறுபட்டு அவையில் விழுவார் என்றால் அவர் தங்களை மீறக்கூடும். அரசர் தன்னை ஒரு ஷத்ரியப் படைவீரனாக எண்ணிக்கொள்பவர். அவர்களில் ஒருவரென்றே அவர்களாலும் கருதப்படுபவர். பத்ரசேனரின் உணர்ச்சி அவரை அடித்துச் சென்று சேர்த்துவிடும்” என்றார்.
பீஷ்மர் தயங்கி பார்வையை விலக்கினார். “பிதாமகரே, ஒருவன் முழுப்பொய்யையே சொன்னாலும் முழுமூடத்தனத்தையே சொன்னாலும் அதன்பொருட்டு உயிர்துறப்பான் என்றால் அதை தெய்வங்கள் வந்து தொட்டு உண்மையாக ஆக்கிவிடும்” என்றார் விதுரர். ”பத்ரசேனர் சொன்னது வீண் சொல் அல்ல. அவரை நான் அறிவேன்.”
தோள்கள் தளர பீஷ்மர் போகட்டும் என்பது போல கையை அசைத்தார். விதுரர் “நான் சொல்வதை சிந்தியுங்கள் பிதாமகரே” என்றார். பீஷ்மர் பெருமூச்சு விட்டு “ஆம், அவன் என் மாணவன்” என்றார். “உள்ளாழத்தில் எங்கோ ஓரிடத்தில் அவன் என்னை மறுத்துப்பேச விழைந்திருக்கவும் கூடும்.”
“பிதாமகரே, அவரை குறைகூறி பயனில்லை. இன்று அவர் சொல்லில் இருக்கும் விசை அவருடையது அல்ல. ஏரியின் முழுநீரும் வந்து முட்டும் மதகின் உச்சகட்ட அழுத்தம் அது. மதயானைகளின் மத்தகங்களை விட நூறு மடங்கு ஆற்றல் கொண்டது” என்று விதுரர் சொன்னார். “இப்போது அதற்குப் பணிவோம். இவ்விசை அதிகநேரம் நீடிக்காது. அதன்பின் ஆவதைச் செய்வோம்.”
பீஷ்மர் தாடியைத் தடவியபடி “ஆம்… அதுவே விவேகம் என்று தோன்றுகிறது” என்றார். பின்னர் புன்னகைத்து அவர் தோளைத் தொட்டு “வா” என்றார். விதுரர் மீண்டும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டார். பீஷ்மரும் புன்னகைதான் செய்கிறார். ஆனால் அது சோர்ந்த புன்னகை. மைந்தரை எண்ணி மனம் கசந்த தந்தையின் புன்னகை.
அவன் புன்னகை எப்படி இருக்கும் இத்தருணத்தில்? வெளியே கொந்தளிக்கும் இந்த மூட மக்கள்திரளை அவன் முழுமையாக மன்னிப்பான். அவர்களை நோக்கி கனிந்து நகைப்பான். உள்ளிருந்து அவர்களை ஆட்டிவைக்கும் சதிகாரர்களை? அவர்களையும்தான். ஆனால் அகம் கனிந்து, புன்னகை விரிந்து, அவர்களின் தலைகளை வெட்டி வீசுவான். விதுரர் புன்னகை செய்தார்.
அப்புன்னகையுடன் அவர் அவை நுழைந்தபோது அவர் முகத்தை முதலில் வந்து தொட்ட கணிகரின் கண்கள் திகைப்புடன் விலகிக்கொள்வதை விதுரர் கண்டார். அதை கண்ட சகுனியும் அவர் முகத்தை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். பீஷ்மரை அனைவரும் எழுந்து வணங்கி வரவேற்றனர். அவர் தன் பீடத்தில் அமர்ந்து கால்களை விரித்து அதன்மேல் கைகளை வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.
விதுரர் தன் மேல் பதிந்திருந்த கண்களின் கூர்முனைகளை உணர்ந்தபடி எவரையும் நோக்காமல் சென்று பீடத்தில் அமர்ந்தார். நிமிர்ந்து தலைதருக்கி எதிரே இருந்த சாளரத்தை நோக்கி முகத்தை திருப்பிக்கொண்டார். அது தன் முகத்தை ஒளியுடன் காட்டும் என அவர் அறிந்திருந்தார்.
துரியோதனனும் அவன் தம்பியரும் அரசருக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்தனர். துரியோதனன் அருகே கர்ணன் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனன் இருந்தான். துரியோதனன் முகம் முச்சந்தியில் வைக்கப்பட்ட ஆடி போல கணம்தோறும் ஒன்றைக் காட்டியது. மீசையை நீவியபடி கர்ணன் அமைதியாக இருந்தான். தென்னகப் பயணத்துக்குப்பின் அவன் மேலும் பலமடங்கு ஆழம்கொண்டவனாக ஆகிவிட்டதாகத் தோன்றியது.
பேரவை முழுமையாகக் கூடியதும் நான்கு வெளிவாயில்களும் மூடப்பட்டன. சேவகர்கள் அனைவரும் வெளியே சென்றனர். வெளியே காவல்வீரர்களின் பாதக்குறடு ஒலி மட்டும் மெல்ல கேட்டது. அவையில் சிலர் தும்மினர். யாரோ ஏதோ முணுமுணுத்தனர். தலைக்குமேல் ஆடிய பட்டுப்பெருவிசிறி அறையின் வண்ணத்தில் அலைகளை கிளப்பியது. சாளரத் திரைச்சீலைகள் காற்றில் படபடத்தன. அப்பால் ஏதோ ஒரு மரத்தில் ஒரு காகம் கரைந்தது. மிகத்தொலைவில் யானைக்கொட்டிலில் ஒரு யானை உறுமியது. எங்கோ ஆலயமணி ஒன்று ஒலித்து அடங்கியது.
விப்ரர் வந்து “அரசரின் வருகை” என்றார். பீஷ்மரும் துரோணரும் கிருபரும் தவிர பிறர் எழுந்து நின்றனர். சஞ்சயன் கைபற்றி திருதராஷ்டிரர் மெல்ல நடந்து வந்தார். அவர் மிக மெலிந்திருந்தாலும் உடலின் எலும்புச்சட்டகமே அவரை பேருருவாகக் காட்டியது. தோள் எலும்புகளும் முழங்கை எலும்புகளும் பெரிதாக புடைத்திருந்தன. விலா எலும்புகள் நடக்கும்போது தோலுக்குள் அசைந்தன.
அவரது தோற்றம் பேரவையில் எழுப்பிய உணர்ச்சி மெல்லிய ஒலியாக வெளிப்பட்டது. அவர் நோயுற்றிருக்கிறார் என அவர்கள் அறிந்திருந்தாலும் மெலிந்த திருதராஷ்டிரரை அவர்களால் கற்பனை செய்யவே முடிந்திருக்கவில்லை. யாரோ தொண்டையைக் கமறினர். வாழ்த்தொலி ஒன்று மெல்ல எழுந்தது. “அஸ்தினபுரியாளும் குருகுல முதல்வர் திருதராஷ்டிரர் நீடூழி வாழ்க!” தொடர்ந்து வாழ்த்துக்கள் எழுந்து அவைமுகடு முழங்கியது.
முதல் முறையாக வாழ்த்தொலிகள் உண்மையான உணர்ச்சிகளுடன் எழுவதாக விதுரர் எண்ணினார். “ஹஸ்தியின் தோள்கொண்ட எங்கள் குலப்பதாகை வாழ்க! மண்ணில் இறங்கிய விண்ணகத்து வேழம் வாழ்க!” விதுரர் திரும்பி நோக்கியபோது அத்தனை குலத்தலைவர்கள் முகங்களும் உருகிக் கொண்டிருப்பதை பார்த்தார். இரு கைகளையும் கூப்பி தன் முகத்தை அதில் வைத்துக்கொண்டார். அவர் நெஞ்சமும் பொங்கி எழுந்தது.
அமர்ந்ததுமே கை தூக்கி அவையை அடக்கிவிட்டு உரத்த பெருங்குரலில் திருதராஷ்டிரர் சொன்னார் “இங்கு வருகையில் என்னிடம் விப்ரர் சொன்னார், என் தம்பி விதுரனை சிலர் குறை சொல்வதாக. அத்தனை பேருக்கும் ஒன்று சொல்கிறேன். அவனே இந்நகரம். அவனே வாழும் விசித்திரவீரிய மாமன்னன். என் தந்தையை நானாளும் கோல்கீழ் நின்றபடி ஒரு சொல் சொல்லத் துணிந்தவன் அக்கணமே என் எதிரியே!”
திகைத்து தன்னை அறியாமலேயே விதுரர் எழுந்துவிட்டார். கால்கள் வலுவற்றிருக்க நிற்க முடியாமல் மீண்டும் பீடத்தில் விழுவது போல அமர்ந்தார். திருதராஷ்டிரர் தன் முழங்கால் மேல் ஓங்கி அறைந்து கூவினார்.
“என்ன சொன்னீர்கள்? அவன் யாதவர்களுக்காக சதி செய்கிறானா? ஏன் செய்யவேண்டும்? இப்போது இச்சபையில் அவன் சொல்லட்டும், அஸ்தினபுரியின் முடியும் கருவூலமும் அவனுக்குரியது. அவன் அளித்தால் அது யாதவர்களுக்குரியது. இவ்வரசும் இம்முடியும் இங்குள்ள எவரும் என் இளையோனுக்கு நிகரானவரல்ல. ஆம், எவரும்” ஓங்கி தன் தோளில் அறைந்தார் திருதராஷ்டிரர் . அந்த ஒலியில் அவை அதிர்ந்த அசைவு எழுந்தது. “என் மைந்தரோ, பிதாமகர் பீஷ்மரோ கூட.”
கை தூக்கி திருதராஷ்டிரர் கூவினார். “யார் அதைச் சொன்னது? பத்ரசேனரே நீரா?” பத்ரசேனர் எழுந்து கைகூப்பி “ஆம், அரசே” என்றார். “இச்சபையில் என் இளையோனிடம் பிழைபொறுக்கக் கோரவேண்டுமென உமக்கு ஆணையிடுகிறேன். இல்லையேல் இப்போதே என்னிடம் மற்போரிட வாரும். வென்றால் இம்மணிமுடியை நீரே எடுத்துக்கொள்ளும். உமது குடி இங்கு ஆளட்டும். நானும் என் இளையோனும் வாளை நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு விசித்திரவீரியரும் எந்தையரும் வாழும் விண்ணுலகு செல்கிறோம்… வாரும்!” என்றபடி திருதராஷ்டிரர் எழுந்தார். பெரிய கைகளை விரித்து அவர்களின் தலைமேல் கவிந்தவர் போல நின்றார்.
பத்ரசேனர் கைகூப்பி உறுதியான குரலில் “அரசே, நீங்கள் என் கண் அறிந்த தெய்வம். ஆனால் என் சொல்லுக்காக அவைநடுவே சாவதே நான் செய்யக்கூடியது. என் சொற்களில் மாற்றமில்லை. இங்கே இப்போதே அஸ்தினபுரியின் மணிமுடி துரியோதனருக்கு வழங்கப்படவேண்டும். இன்றே பாஞ்சாலம் நோக்கி மணிமுடியுடன் பெண்கொள்ள அவர் சென்றாகவேண்டும். அதை அரசர் ஆணையிடவேண்டும். அந்த மணிமுடியை விதுரரே எடுத்து இளவரசர் தலையில் அணிவிக்கட்டும். அதன்பின் அவரைப்பற்றி நான் சொன்னதற்கு அவை நடுவே நான் பிழைபொறுக்கக் கோருகிறேன்” என்றார். “ஒரு சொல் அவர் எதிராகச் சொல்வாரென்றாலும் அவரைக் கொல்ல எழுவேன். இச்சபையில் உங்கள் கையால் இறப்பேன். என் உடைவாள் மேல் ஆணை!”
திருதராஷ்டிரர் “பிதாமகர் சொல்லட்டும்” என்றார். பீஷ்மர் ”மைந்தா, இந்த அவையில் நீ சொன்ன அன்பு நிறைந்த சொற்களுக்காக உன் மூதாதையர் விண்ணகத்தில் மெய்சிலிர்த்து கண்ணீர் விடுகிறார்கள். இங்கே நானும் அவர்களுடன் இணைந்திருக்கிறேன். நீ சொல்! நீ சொல்வது என் தந்தையரின் சொல்” என்றார்.
திருதராஷ்டிரர் பேச வாயெடுப்பதற்குள் கணிகர் “நான் அயலவன். ஆனால் அஸ்தினபுரியின் நலம் விழைவோன். அஸ்தினபுரியின் மணிமுடி சார்ந்த பேச்சில் நானோ காந்தாரரோ சொல்ல ஏதுமில்லை. ஆனால் இன்றுள்ள முதல் பணி பாஞ்சால இளவரசி அஸ்தினபுரிக்கு வந்தாகவேண்டும் என்பதே. தேவயானியின் அரியணையில் அவள் அமர்ந்தாகவேண்டும். அதைப்பற்றி மட்டும் எண்ணுவோம்” என்றார். சகுனி “ஆம், அதையே நான் சொல்ல விழைகிறேன். நம்மிடமிருந்து நமது அரசு தவறப்போகிறது. அதுவே இங்கு நாம் கூடுவதற்கான பின்னணி” என்றார்.
திருதராஷ்டிரர் “காந்தாரரே, அதை நான் உணர்ந்தே இருக்கிறேன். என்னிடம் விரிவாக அதை கணிகர் சொன்னார். நானும் ஒற்றர்களிடம் பேசினேன். பாஞ்சாலத்தை நாம் எவரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது. அதற்குரியவற்றை செய்தே ஆகவேண்டும்” என்றார்.
விதுரர் கைகூப்பி எழுந்ததும் அவை அமைதிகொண்டது. அவர் செருமியபின் “அரசே, நானும் அதையே சொல்கிறேன். அதன் பொருட்டு இளவரசர் துரியோதனர் முடிசூடுவதும் தகும் என்பதே என் எண்ணம். ஹஸ்தியின் மணிமுடியுடன் அவர் சென்று பாஞ்சாலனின் அவையில் அமரட்டும். திரௌபதியை வென்றுவரட்டும். உடனே நாம் செய்யவேண்டியது அதுவே” என்றார்.
பத்ரசேனர் “ஆம், அது நிகழட்டும்” என்றபின் எழுந்து வந்து தன் உடைவாளை உருவி விதுரர் முன் தாழ்த்தி “அமைச்சரே, நான் சொன்ன ஒவ்வொரு சொல்லும் இந்நாட்டின் மேல் கொண்ட பற்றினாலேயே. உங்களை நான் ஐயுற்றதும் அதனால்தான். இப்போது என் குலத்தின் தெய்வமான இந்த வாளை உங்கள் முன் தாழ்த்தி பொறுத்தருளும்படி கோருகிறேன்” என்றார். விதுரர் “நிகழ்ந்தவற்றை மறப்போம்” என்றார்.
பீஷ்மர் “முடிசூடுவதில் சில முறைமைகள் உள்ளன” என்று தொடங்கியதும் விதுரர் “அம்முறைமைகளை பட்டத்து அரசியாக பாஞ்சாலி வந்ததும் செய்வோம். அரியணை காத்திருக்கட்டும். கங்கை அபிஷேகம் செய்து முடிசூடி கோலேந்தி மூத்தோர் வாழ்த்துகொள்வதே முதன்மையானது. அது இங்கே இந்த அவையிலேயே நிகழட்டும்” என்றார். சகுனி “அமைச்சர் சொன்னது முறையானதென்று நானும் எண்ணுகிறேன்” என்றார்.
பீஷ்மர் “இந்த அவையில் எவருக்கேனும் மறுஎண்ணம் உண்டா?” என்றார். பேரமைச்சர் சௌனகர் எழுந்து “மாற்று எண்ணம் உள்ளவர் உண்டா? மாற்று எண்ணம் உள்ளவர் உண்டா? மாற்று எண்ணம் உள்ளவர் உண்டா?” என்று மும்முறை கேட்டார். ”இல்லை” என்று அவை விடை சொன்னதும் “அவை அரசரின் முடிவை ஏற்றுக்கொண்டது என்று அறிவிக்கிறேன்” என்றார். “முடிசூடும் இளவரசர் வாழ்க! ஹஸ்தியின் தோள்கொண்ட துரியோதனர் வாழ்க” என்றார்.
திரும்பி “கருவூலத்தில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடியை எடுத்துவருக!” என்றார். கருவூலக்காப்பாளரான பூரணரும் அரண்மனை செயலமைச்சரும் மறைந்த களஞ்சியக்காப்பு அமைச்சர் லிகிதரின் மைந்தருமான மனோதரரும் கருவூலம் நோக்கி ஓடினர். அவர்களைத் தொடர்ந்து பிற துணையமைச்சர்களும் சென்றனர்.
சௌனகர் சேவகரிடம் “அரசியரை முழுதணிக்கோலத்தில் அவைக்கு வரச்சொல்லுங்கள். கங்கை நீரும் மஞ்சள் அரிசியுமாக ஏழு வைதிகர் உடனே வந்தாகவேண்டும்” என்று ஆணையிட கோட்டையின் தலைமைக் காவலரும் அமைச்சர் விப்ரரின் மைந்தருமான கைடபர் விரைந்தோடினார்.
சௌனகர் விதுரர் அருகே வந்து குனிந்து “வேள்வி ஏதும் தேவையா?” என்றார். ”எரிசான்று வேண்டுமல்லவா?” விதுரர் “இல்லை. மண்ணாள்வதற்கு புனலே சான்று. ஆன்மாவை ஆள்வதற்கே அனல். இம்மணிமுடிசூட்டல் ஓர் அடையாளத்துக்காகத்தான். வைதிகர் கங்கைநீரூற்றிய பின் அரசர் மணிமுடியை எடுத்து மைந்தர் தலையில் வைக்கட்டும். அவர் கோலேந்தி நின்றதும் மூத்தோரும் அவையும் மஞ்சள்அரிசியிட்டு வாழ்த்தட்டும். அதுவே மணிமுடி சூடியதாக ஆகிவிடும். அரியணை ஏற்பதற்கான வேள்விகளை பின்னர் விரிவாகச் செய்யலாம்” என்றார்.
துரியோதனன் இறுகிய முகத்துடன்தான் அமர்ந்திருந்தான். அவன் அகம் இன்னமும்கூட அங்கு நிகழ்வனவற்றை நம்பவில்லை என்று விதுரருக்குத் தோன்றியது. ஆனால் கௌரவர்கள் அனைவரும் முகம் முழுக்க சிரிப்புடன் உடல்கள் உவகையில் அசைய கைகள் அலைபாய நின்றனர். துச்சாதனன் தம்பியரிடம் மாறி மாறி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.
கணிகர் ஒளிரும் சிறு விழிகளுடன் அவையை நோக்கி அமர்ந்திருந்தார். அவையில் வந்து இருளில் அமர்ந்து நோக்கும் எலிபோல ஒவ்வொரு குலத்தலைவரின் முகமாக அவர் நோக்கிக்கொண்டிருப்பதை விதுரர் கண்டார். சகுனி பீஷ்மரின் முகத்தையும் திருதராஷ்டிரர் முகத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். சஞ்சயன் அங்கே நிகழ்வதைச் சொல்ல தலைசரித்து திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் சொற்களுக்கேற்ப அவர் முகம் மாறிக்கொண்டிருந்தது.
பேரவையின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அவர்கள் அங்கே வந்தபோதிருந்த கிளர்ச்சி அவிந்து பரபரப்பு கூடியது. ஆனால் அவர்கள் பெருமளவில் உவகை ஏதும் கொள்ளவில்லை என்று தோன்றியது. உண்மையில் அவர்களில் மெல்லிய ஏமாற்றம்தான் ஓடிக்கொண்டிருப்பதாக விதுரர் எண்ணினார். அவர்கள் இன்னும் பெரிய கொந்தளிப்பை, உணர்ச்சி நாடகத்தை எதிர்பார்த்திருக்கலாம். தங்கள் வாழ்நாள் முழுக்க சொல்லிச் சொல்லித் தீராத சில அங்கே நிகழும் என்று எண்ணியிருக்கலாம். துரியோதனன் முடிசூடப்போகிறான் என்றானதுமே அவர்களுக்குள் அவனைப்பற்றி இருந்த ஐயங்களும் அச்சங்களும் மேலெழுந்து வந்திருக்கலாம். விதுரர் புன்னகையுடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
பேரவையின் கதவு திறந்து இளைய கௌரவன் சுஜாதன் மெல்ல நடந்து வந்து துரியோதனன் அருகே நின்று ஏதோ சொல்ல அவன் மெல்ல எழுந்தான். திருதராஷ்டிரர் திரும்பி “என்ன?” என்றார். ”மதுராவில் இருந்து குருநாதர் பலராமர் வந்திருக்கிறார். என்னை உடனே பார்க்கவேண்டும் என்கிறார்” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரர் “தக்க தருணம். முடிசூடும் வேளையில் நட்பரசர் ஒருவர் இருப்பது முறைப்படி மிக நன்று. தெய்வங்களே அவரை அனுப்பியிருக்கின்றன” என்றார். “அவரை இங்கே வரச்சொல்!”
துரியோதனன் தயங்கி “அவர் எதன்பொருட்டோ கடும் சினத்துடன் வந்திருக்கிறார்.” என்றான். “சினம் இங்கு அவைக்கு வந்து நீ மணிமுடி சூடவிருக்கிறாய் என்பதை அறிந்துகொண்டதும் தீர்ந்துவிடும். அவரது நல்வாழ்த்து உனக்குத்தேவை.” திருதராஷ்டிரர் உவகையுடன் நகைத்து “ஆம், அதுவே முறை. தாய் தந்தை குருநாதர் தெய்வம் என நால்வரும் கூடி வாழ்த்த வேண்டும். அவர் வரட்டும்…” என்றார்.
சுஜாதன் வெளியே செல்ல கூடவே துச்சாதனனும் சென்றான். அவை முழுக்க பதற்றமான மெல்லிய பேச்சொலி நிறைந்திருந்தது. பீஷ்மர் “அவர் சினம் கொண்டிருப்பது எதற்கென்று நீ அறிவாயா?” என்று கேட்க துரியோதனன் “இல்லை பிதாமகரே” என்றான். விதுரர் “அவர் கட்டற்ற முந்துசினத்துக்குப் புகழ்பெற்றவர்” என்றார். திருதராஷ்டிரர் சிரித்து “ஆம், நெய்க்கடல் என்றே அவரை சொல்கிறார்கள்” என்றார். “ஆனால் தன் மாணவன் முடிசூடக்கண்டால் குளிர்ந்து பனிக்கடலாகிவிடுவார்.”
பலராமர் உள்ளே நுழைந்ததுமே துரியோதனன் ஓடிச்சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவனை நோக்காமல் அவையை நோக்கி உரத்த குரலில் கையைத் தூக்கி “அஸ்தினபுரியின் பிதாமகரையும் அரசரையும் குடிகளையும் வணங்குகிறேன். நான் வந்தது என் மாணவனை நோக்கி ஒரு வினாவை எழுப்ப மட்டுமே…” என்றார்.
திருதராஷ்டிரர் “அவன் எந்த முறைமையையும் மீறுபவனல்ல. அதை நான் வாக்குறுதியாகவே அளிக்க முடியும் பலராமரே. உங்கள் ஐயம் எதுவோ அதை அவை முன்னால் கேட்கலாம். இத்தருணத்தில் அவனை வாழ்த்த அவன் ஆசிரியரே வந்தது நல்லூழ் என்றே இந்நகர் எண்ணுகிறது” என்றார்.
பலராமர் “ஆம், பேரவை கூடுகிறது. அங்கு சென்று கேளுங்கள் என்றுதான் என் இளையோன் சொன்னான். நான் வந்ததே அதற்காகத்தான்” என்றார். விதுரரின் அகம் திடுக்கிட்டது. அவர் விழிகள் கணிகரின் விழிகளைத் தொட்டு மீண்டன. கணிகரின் முகம் வெளுத்து உதடுகள் இறுகிவிட்டதை உணர்ந்ததுமே அவர் புன்னகை புரிந்தார். பீஷ்மரை நோக்கினார். பீஷ்மரின் விழிகள் விதுரரை வந்து தொட்டு புன்னகைத்து மீண்டன. அவர் மெல்ல அசைந்து அமர்ந்தார்.
“அமருங்கள் யாதவரே” என்றார் திருதராஷ்டிரர். பலராமர் “நான் அமர வரவில்லை. துரியோதனா, நீ என் மாணவனாகிய பகனை ஏன் கொன்றாய்? அடேய், ஒருசாலை மாணாக்கனை ஒருவன் கொல்லவேண்டும் என்றால் அவ்வாசிரியனின் ஒப்புதலுடன் களம் குறிக்கவேண்டும் என்றுகூட அறியாத வீணனா நீ? நானறியாமல் என் மாணவனைக் கொன்றவன் என் எதிரியே. இதோ நான் அறைகூவுகிறேன். எடு உன் கதாயுதத்தை. உன் தலையை பிளந்துபோட்டபின்னரே நான் மதுராபுரிக்கு மீள்வேன்” என்று கூவினார்.
கைகூப்பியபடி நின்ற துரியோதனன் திகைத்து “என்ன சொல்கிறீர்கள் குருநாதரே?” என்றான். “நான் ஏழு வருடங்களாக அஸ்தினபுரியை விட்டு விலகவில்லை. ஐயமிருந்தால் இங்குள்ள எவரிடமேனும் கேளுங்கள்!” பலராமர் திகைத்து திரும்பி நோக்க விதுரர் “ஆம், அவர் அஸ்தினபுரியை விட்டுச் செல்லவில்லை. அப்படி ஒரு போர் நிகழ்ந்திருந்தால் அது ஒரு பகலுக்குள் இங்கிருந்து சென்று வரும் தொலைவில் நிகழ்ந்திருக்கவேண்டும்” என்றார்.
“இல்லை, பகன் ஏகசக்ர நகரை ஆட்சிசெய்து வந்தான். அது சத்ராவதிக்கு அப்பால் கங்கைக்கரையில் உள்ளது” என்றபோது பலராமர் குரல் தணிந்தது. தனக்குத்தானே கேட்பதுபோல “நீ அவனைக் கொல்லவில்லையா?” என்றார். ”இல்லை குருநாதரே. அவரைப்பற்றி நான் தங்களிடமிருந்து மட்டுமே அறிந்திருக்கிறேன்” என்றான் துரியோதனன்.
பலராமர் குழப்பத்துடன் “அப்படியென்றால் அவனைக் கொன்றவன் யார்? ஜராசந்தனா? ஒருபோதும் அவனால் பகனைக் கொல்லமுடியாது. குறித்த நேர்ப்போரில் அவனைக் கொல்ல இன்று உன்னால் மட்டுமே முடியும். இல்லையேல் உன் தந்தை கொன்றிருக்கவேண்டும். இல்லையேல் பீஷ்மர் கொன்றிருக்கவேண்டும்” என்றார்.
பீஷ்மர் “நானும் ஏழாண்டாக இந்நகரை விட்டு விலகவில்லை பலராமரே” என்றார். “ஐயமிருந்தால் சான்று அளிக்கிறேன்.” பலராமர் “தேவையில்லை. தங்கள் சொற்களே போதும்” என்றபின் “என் சித்தம் குழம்புகிறது. இன்றிருக்கும் இளையோரில் பகனைக் கொல்ல வேறு எவராலும் முடியாது… அதையே என் இளையவனும் சொன்னான். பகனைக் கொல்லும் ஆற்றல் கொண்டவர்களில் பீமன் இறந்துவிட்டான், இருப்பவன் துரியோதனன். எனவே அவனே கொலையாளி, சென்று அவையிலேயே அவனை நிறுத்தி கேளுங்கள் என்றான்” என்று சொல்லி முகவாயை கையால் வருடிக்கொண்டார்.
அவையில் ஓர் இறுக்கமான அமைதி நிலவியது. எண்ணியிராத கணத்தில் தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி “ஆ!” என்று கூவிய திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து “ஆம், அது பீமன். பீமனேதான். அத்தனை தெளிவாக உணர்கிறேன். அவன் சாகவில்லை. பகனைக் கொன்றவன் அவன்தான்… பிதாமகரே, என் மைந்தர் இறக்கவில்லை” என்று கூச்சலிட்டார்.
பெரிய வெண்பற்கள் தெரிய உரக்க நகைத்தபடி பீடத்தை விட்டு முன்னால் ஓடிவந்து கைகளை தலைக்குமேல் தூக்கி ஆட்டி நடனம்போல அசைந்தபடி “அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்!” என்று கூச்சலிட்டார். கைகளைத் தட்டியபடி பித்தனைப்போல சிரித்து பின் நெஞ்சில் ஓங்கி அறைந்து “ஆம், அவர்கள் இருக்கிறார்கள். என் தெய்வங்கள் கருணை கொண்டவை… மைந்தா துரியோதனா! அவர்கள் அந்த எரிநிகழ்வில் சாகவில்லை… இருக்கிறார்கள்” என்றார்.
பேரவையில் பெரும்பாலானவர்கள் திகைத்து அமர்ந்திருந்தனர். விதுரர் கணிகரை நோக்கினார். அவர் கண்களை மூடிக்கொண்டு உடலை முற்றிலும் குறுக்கி அங்கில்லாதது போல் இருந்தார். சகுனி கைகளை இறுக இணைத்துக்கொண்டு கழுத்துநரம்புகள் புடைக்க சிவந்த முகத்துடன் சுருங்கி அமர்ந்திருந்தார். பலராமர் “ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக சொன்னார்கள்…” என்றார். “என் இளையோனும் அதைத்தானே சொன்னான்?”
பீஷ்மர் “பகன் கொல்லப்பட்டதை எவர் சொன்னார்கள்?” என்றார். பலராமர் “ஏகசக்ர நகரியில் இருந்து வந்த ஒரு சூதன் என்னிடம் சொன்ன கதை அது. நான் அதை முழுதும் கேட்கவில்லை. செய்தியை அறிந்ததுமே சினம் கொண்டு எழுந்து விட்டேன்” என்றார்.
பீஷ்மர் “அவன் இங்குள்ளானா?” என்றார். “ஆம், அவன் என்னுடன் வந்திருக்கிறான்” என்றார் பலராமர். பீஷ்மர் உறுதியான மெல்லிய குரலில் “அவன் இங்கு வரட்டும். அங்கே நிகழ்ந்ததை அவன் விரிவாகவே சொல்லட்டும்… அப்போது தெரியும், கொன்றது பீமனா இல்லையா என்று. வரச்சொல்லுங்கள்” என்றார்.
சௌனகர் “அரசே, பீமசேனரும் பாண்டவர்களும் உயிருடன் இருந்தால் எந்த முடிசூட்டுச் சடங்கும் தேவை இல்லை. அஸ்தினபுரியின் முடிக்குரிய இளவரசன் உயிருடன் இருக்கிறான்… நாம் செய்யவேண்டியது அவனை இங்கே திரும்பச் செய்வது மட்டும்தான்” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். “தருமன் இறக்கவில்லை. நான் உறுதியாக அறிவேன். பீமன் இருக்கிறான் என்றால் தருமனும் இருக்கிறான். அவனே நம் இளவரசன். அர்ஜுனனும் பீமனும் சென்று பாஞ்சாலியை வெல்லட்டும். குடித்தலைவர்களின் கோரிக்கை நிறைவடைய அதுவே வழி.”
“முதலில் சூதன் பாடலைக் கேட்போம்” என்றார் பீஷ்மர். விப்ரர் வெளியே ஓடி சூதனை அழைத்துவர சேவகர்களை அனுப்பினார். துரியோதனன் பின்னகர்ந்து சுவரில் சாய்ந்து தலைகுனிந்து நின்றான். அவனைப்போலவே அவன் தம்பியரும் ஆகிவிட்டதாகத் தோன்றியது. கலைந்த சிறு பேச்சுக்களுடன் அவையினர் மெல்ல அமர்ந்துகொண்டனர்.
விதுரர் மீண்டும் கிருஷ்ணனின் புன்னகையை நினைத்துக்கொண்டார். மானுட உள்ளங்கள் முடிந்தவரை ஓடிக் களைத்து சென்று அமரும் இடத்தில் முன்னதாகவே வந்து புன்னகையுடன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இங்கிருக்கும் இத்தனை மானுடப்பெருந்திரளும் இதன் காமகுரோத மோகங்களும் இவை போடும் பல்லாயிரம் கணக்குகளும் எப்படித்தான் பொருளாகின்றன?
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்