புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்

என் மேஜையில் சில நூல்கள் இப்போது உள்ளன. ஏசுகிறிஸ்துவைப்பற்றிய சமீபத்திய ஆய்வுகள். Michael Baigent, Richard Leigh, and Henry Lincoln. எழுதிய The Holy Blood and the Holy Grail என்ற நூலை கஷ்டபட்டு வாசித்து முடித்து பெருமூச்சு விட்டேன். இந்த நூலை எப்படி புரிந்துகொள்வது. இதில் கடுமையான ஆராய்ச்சி உள்ளது. ஏசுவின் வரலாற்றைப்பற்றி பல்வேறு ஞானவாத கிறித்தவ நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஊகித்து எழுதப்பட்டது இது. ஏறத்தாழ இதே தலைப்பிலான இன்னும் இரு நூல்கள் மிச்சமிருக்கின்றன வாசிக்க. நண்பர் ஆனந்தக்கோனார் வாங்கி அளித்தவை.

இவை டாவின்ஸி கோட் நாவல் அளித்த பரபரப்பை விற்க முனைபவை. இவற்றை வைத்து ஏசுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஏசுவை புரிந்துகொள்ளும் முயற்சி அல்ல இவற்றில் உள்ளது. ஒரு பரபரப்பை உருவாக்கும் முயற்சி மட்டுமே. ஏசுவைப்பற்றிய சில தகவல்களை கற்பனையில் விரிவாக்கம்செய்யும் முயற்சி மட்டும்தான் இது. இப்படித்தான் மிச்ச நூல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன்

அவுட்லுக் இதழில்  Sheela Reddy எழுதிய கட்டுரை ஒன்றை நண்பர் அசோகன், சண்டே இண்டியன் அனுப்பியிருந்தார். Stephen Batchelor  என்ற ஆய்வாளர் எழுதிய Confessions of a Buddhist Atheist என்ற நூலின் சுருக்கமான குறிப்பு இது. இக்கட்டுரையில் புத்தரின் வாழ்க்கையை ஸ்டீபன் பேச்சிலர் பாலிமொழியின் 6000 பக்க ஆவணங்களில் இருந்து திரட்டி மறுபரிசீலனை செய்து எழுதியதாக சொல்லப்பட்டிருக்கிறது.    

 [ http://www.outlookindia.com/article.aspx?264458  Who Killed Gautama? ]

ஸ்டீபன் பேச்சிலரின் நூலை வாசகர்கள் வாசிப்பதற்கு முன்னால் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம். ஆனால் அதற்கு முன் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவரது தம்மமும்’ டி.டி.கோசாம்பி எழுதிய ‘பகவான் புத்தர்’ ஆகிய இரு நூல்களையும் வாசிக்கலாம். இரண்டுமே தமிழில் கிடைக்கின்றன.

புத்தர் மிக நெருக்கடியான ஓர் அரசியல் சூழலிலே செயல்பட்டவர் என்பது ஒரு வரலாற்று உண்மை. அவரது சாக்கிய குலம் ஒரு பழங்குடி அரசு. குலமுறை ஆசாரங்களால் ஆன ஒரு ஜனநாயக அமைப்பு அந்த அரசுக்கு இருந்தது. அதன் இளவரசர் அவர். அத்தகைய அரசுகள் பேரரசுகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் புத்தர் பிறந்தார்.

கிட்டத்தட்ட சங்ககாலமும் அத்தகையதே. வேளிர்கள் போன்ற சிறுகுடி அரசர்கள் மூன்று முடிமன்னர்களாலும் அழிக்கப்பட்ட காலம் அது. உதிர ஆறு ஓடிய காலகட்டம். புத்தர் அவரது அகிம்சையை போதித்தது அந்தச்  சூழலுக்கு எதிராகவே. அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே.

புத்தர் தன் கொள்கையால் பெரும் முடிமன்னராகிய கோசலமன்னரை  வென்று அவரை தன் மாணவராக ஆக்கிக்கொண்டார். அவருக்கும் சாக்கிய குலத்திற்கும் இடையெ உறவு உருவாகியது. பௌத்தம் ஏன் வென்றது என்பதற்கு டி.டி.கோசாம்பி காட்டும் காரணம் என்னவென்றால் ஆயுதம் மூலம் சிறு அரசுகளை அடைக்கி பேரரசுகளை உருவாக்குவதற்குப் பதிலாக கருத்தியல் ஒருமை மூலம் பேரரசுகளாஇ உருவாக்கலாமென ஒரு வழியை அது காட்டியது என்பதுதான். வட இந்தியாவில் ஓடியிருந்த குருதிநதியை பௌத்தமும் சமணமும் நிறுத்தின

ஆனால் அது  புத்தரின் மறைவுக்குப் பின்பு மெல்லமெல்ல உருவான ஒரு நிலைதான். புத்தரின் காலகட்டத்தில் பழங்குடி குல அரசுகள் அனைத்ததிகார மன்னர் அரசுகளாக மாறுவதன் சிக்கலான அரசியல் இருந்தது. அந்த அரசியல் பலவகையான உள்மோதல்களும் வன்முறையும் கொண்டதுதான்.

தன் ஞானத்தால் மட்டுமல்ல ராஜதந்திரத்தாலும்தான் புத்தர் அச்சூழலை எதிர்கொண்டிருக்க முடியும். அவரது சங்கம் என்ற அமைப்புக்கு எதிராக எல்லாவகையான உட்பகையும் வெளிப்பகையும் இருந்திருக்கும். எல்லா ஞானிகளும் சமகாலத்தால் புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தப்படுவார்கள். புத்தருக்கும் அத்தகைய சூழல்கள் இருந்திருக்கலாம்

ஸ்டீபன் பேச்சிலர் அந்தச் சூழலை பலவகையான தகவல்களுடன் அளிக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தகைய ஒரு ஆய்வுக்கும் பிம்ப உடைப்புக்கும் எல்லாவகையான வாய்ப்பும் புத்தர் வரலாற்றில் இடமுள்ளது. புத்தர், ராமர், கிருஷ்ணன், ஏசு, நபி எல்லாருமே அதற்கு உட்பட்டவர்களே — கடைசியாகச் சொல்லப்பட்டவர் மதவெறியர்களாலும், அசட்டுமுற்போக்காளர்களாலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார் என்ற போதிலும்.

இத்தகைய ஆய்வில் எழும் இரண்டு சிக்கல்களை மட்டும் வாசகர்கள் கருத்தில்கொள்ளவேண்டுமென விழைகிறேன். ஒன்று இந்த ஆளுமைகளை நாம் மூன்றாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். தொன்ம ஆளுமை, தத்துவ ஆளுமை, வரலாற்று ஆளுமை .[குழப்பம் வேண்டாம், ஆளுமை என்றால் பர்சனாலிடி]

புத்தர் என்ற தொன்மம் ஈராயிரத்துக்கும் மேலான ஆண்டுகளால் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்ட ஒன்று. மானுடத்தின் மகத்தான இலட்சியக் கனவுகளில் ஒன்று அது. கருணையும் ஞானமும் ஒன்றாகும் ஒரு புள்ளி. அழியா விழுமியங்களால் ஆனது. அந்த தொன்ம புத்தர் என்றும் இருந்தாகவேண்டும். அதை நாம் பிறவற்றில் இருந்து பிரித்தே பார்க்க வேண்டும். பிற ஆளுமைகள் இந்த தொன்ம ஆளுமையை மறுப்பதில்லை என்றும் இது செயல்படும் தளம் முற்றிலும் வேறானது என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தத்துவ ஆளுமை என்பது அவரது கூற்றுகள் மூலம் உருவாகி வந்தது. உண்மையில் புத்தரின் உபதேசங்கள் அவற்றின் மீதான எதிர்வினைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் உருவாகிவரும் சித்திரம் அது. புத்தரின் செய்தியே இந்த புத்தர். இந்த சித்திரத்தை ஓரளவுக்கு வரலாற்று புத்தர் சித்திரம் விளக்கலாம். ஆனாலும் புத்த நூல்கள் இருக்கும்வரை இந்தச் சித்திரமும் இருக்கும்

வரலாற்று புத்தர் பல்வேறு வரலாற்றுச் செய்திகளால் நாம் கண்டடையும் ஒரு மனிதர் மட்டுமே. அந்த மனிதரை புரிந்துகொள்வதன் மூலம் நாம் அந்த மனிதரின் செய்தியை இன்னமும் நெருக்கமாக உணர முடியும் அவ்வளவே. மிகையான கற்பிதங்களுக்குச் செல்லாமலிருக்க அது உதவும். காலம்தோறும் இந்த சித்திரம் வளரும், விரியும், திரியும்.

அவற்றில்  எந்த சித்திரமும் முழுமையானதல்ல. பல்வேறு வகையான சித்தரிப்புகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைந்து நாம் தான் நமக்குரிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஆனால் வரலாற்றுச்சித்திரங்களை முன்வைப்பவர்கள் தாங்கள் உருவாக்கும் சித்திரங்கள் மூலம் அந்த மொத்த ஆளுமையையே மாற்றி எழுதிவிடுவதாக நம்புகிறார்கள். அங்கேதான் பிரச்சினையே.

இரண்டாவதாக உள்ள சிக்கல் என்பது இத்தகைய வரலாற்று உருவகங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் உதிரிச் செய்திகளை வைத்து கற்பனைசெய்யப்படுவதென்று நாம்  உணர்ந்திருப்பதில்லை. அச்செய்திகளும் பல நூறு வருடங்களுக்குப் பின்னர் எழுதப்பட்டவை என்பதையும் உணர்வதில்லை. ‘இறுதி’ முடிவுகளுக்கு எளிதில் வந்துவிடுகிறோம்.

மேலைநாட்டு ஆய்வாளர்கள் இரு வகை என்று எனக்குப் படுவதுண்டு. முதல்வகை கீழைநாட்டு ஆன்மீக,பண்பாட்டு விஷயங்கள் எதையும் சிறுமைப்படுத்தும் முன் தீர்மானங்களை உள்ளூரக் கொண்டவர்கள். இவர்களே பெரும்பான்மை.

இரண்டாம் வகையினர் , பொதுவான ஆய்வுமுறைகளைக் கொண்டு ஆராய்பவர்கள். இவர்கள் தங்கள் ஆய்வுகள் புறவயமானவை, பகுத்தறிவுக்குட் பட்டவை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த புறவயத்தன்மை, பகுத்தறிவு என்பனவேகூட பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கருத்தியல் பொதுப்போக்குகளால் சமைக்கப்பட்டவை என்று இவர்கள் உணர்வதில்லை.

உதாரணமாக, பெரும்பாலான மேலைநாட்டு ஆய்வாளர்களிடம் எதிர்மறை மானுட உணர்ச்சிகள் [ இட் என்று அவர்கள் சொல்லும் காமமும் வன்முறையும்] தான் மானுடனுடைய அடிப்படை உணர்ச்சிகள் என்றும் உன்னதம் நோக்கிய தேடல் என்பது செயற்கையானது என்றும் ஓர் எண்ணம் இருக்கிறது. ·ப்ராய்டியத்தில் இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டது இது. இதை ஒரு மதநம்பிக்கை போலவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் வைத்திருப்பதைக் காணலாம்

இந்த அடிப்படையில் இவர்கள் ஆன்மீக முன்னோடிகளையும் வரலாற்று நாயகர்களையும் ஆராயும்போது அவர்களின் அந்தரங்க பலவீனங்கள் என்ன, சரிவுகள் என்ன என்ற கோணத்திலேயே அணுகுகிறார்கள். அவற்றை வைத்தே அந்த ஆளுமைகளை புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். பல ஆய்வுகள் இந்த ·ப்ராய்டிய மதநம்பிக்கையால் கோணலாகிப்போனவையாகவே உள்ளன. சிறந்த உதாரணம் மானுடவியலாளரான ஆலன் டண்டிஸ்.  வருங்காலத்தில் இத்தகைய ஆய்வுகளில் பெரும்பகுதி குப்பைக்கூடைக்கே சென்று சேரும் என்று நினைக்கிறேன்.

இந்த முன்னறிதல்களுடன் ஸ்டீபன் பேச்சிலர் முதலியவர்களின் ஆய்வுகளை அணுகுவது நல்லது என்பது என் அபிப்பிராயம். இந்தக் கட்டுரையிலேயே என் பார்வைக்குப் பட்ட சில பார்வைப்பிழைகளைச் சொல்கிறேன். புத்தரின் போதனைகளை பெரிய அளவில் மக்களிடம் கொண்டுசேர்க்க ஆரம்பத்தில் முயன்றவர் கோசல மன்னர். புத்தரின் தொடக்ககால மாணவர் அவர்.

பின்னர் புத்தரின் சங்கத்திற்கும் கோசல மன்னருக்கும் கருத்துவேறுபாடுகள் உருவாயின. புத்தரின் சங்கம் கோசல எல்லைக்கு வெளியே பரவி பிறநாடுகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தபோது அதில் கோசல மன்னரின் இடம் குறைந்தது. மகதம் புத்த மதத்தின் மையமாக ஆகியது. இது இயல்பானதே. இந்த கட்டத்தில் புத்த சங்கம் புத்தரின் பிரதம சீடர்களின் ஆளுகைக்குள் சென்றதை கோசல மன்னர் விரும்பாமலிருக்கலாம்

ஆகவே பல வருடங்களுக்கு பின்னர் புத்தரின் வரலாறு எழுதப்பட்டபோது கோசல மன்னர் ஒரு போர் வெறியர் , புத்தரை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்ற நோக்கில் எழுதப்பட்டது. ஸ்டீபன் பேச்சிலர் அந்தச் சித்தரிப்பை அப்படியே ஒரு வரலாற்று உண்மையாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அத்தகைய ஒரு கொடூர மன்னரால் ஆதரிக்கப்பட்டு அவர் வழியாக முன்வைக்கப்பட்டிருந்தால் புத்தரின் போதனைகள் எப்படி லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் என்ற எளிமையான கேள்வி இங்கே எழும். மேலும் அப்படி புத்தரால் கவரப்பட்டவர்கள் எளிய அடித்தள மக்களும்கூட.

அதேபோல அகிம்சையை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட சமணர்கள், அவர்கள் அரசியலதிகாரம் நோக்கி வர ஆரம்பிக்காத காலத்திலேயே, பௌத்த பிட்சுக்களைக் கொன்றொழித்தார்கள் என்ற கதையை அப்படியே விழுங்கி வைக்கிறார் ஸ்டீபன் பேச்சிலர். இந்த வகையான மோதல்கள் நிகழ்ந்தது இருமதங்களும் அரசியலதிகார மதங்களாக அமைப்புகளாக ஆகிவிட்ட பிறகுதான். அப்போதும்கூட இம்மோதல்களை இருதரப்பும் மிகைப்படுத்தி எழுதி வைத்தன. தங்கள் எதிரிகளை குறைத்து சொல்லவும் தங்கள் முனிவர்களை புனிதர்களாக ஆக்கவும்.

வராகபாதம் என்று பெயருள்ள ஒரு காளானை தவறுதலாக புத்தர் உண்டதாகச் சொல்லப்படுகிறது. அதையே அப்படியே பொருள்கொண்டு புத்தர் பன்றிக்கறி உண்டு இறந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மரணத்துக்கு விஷமே காரணம் என்றெல்லாம் ஸ்டீபன் பேச்சிலர் ஊகிப்பதற்கான எந்த முகாந்திரமும் பௌத்த நூல்களில் இல்லை – இருப்பதாக ஸ்டீபன் பேச்சிலரின் நூலிலும் இல்லை என்று இக்கட்டுரை காட்டுகிறது.

ஸ்டீபன் பேச்சிலர் பொதுவாக பரபரப்பை நாடுபவராகவும், எல்லா ஆன்மீக-பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் அதிகாரவிருப்பும்  எதிர்மறை இச்சைகளும் தான் உண்மையான காரணமாக இருக்கும் என்று அந்தரங்கத்தில் நம்பக்கூடியவராவும் தெரிகிறார். இவ்வாறு ஒரு முன்தீர்மானமான சித்தரிப்புக்குத் தேவையான தரவுகளை தேடி அவற்றை ஓர் ஆய்வாளனுக்குரிய ஐயநோக்கு இன்றி பார்த்து எழுதப்பட்ட நூல் இது என்ற முதல்பதிவு என் மனதில் உருவாகியது.

ஸ்டீபனின் நூலை பௌத்த வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

முந்தைய கட்டுரைஇரவு 10
அடுத்த கட்டுரைஇரவு 11