«

»


Print this Post

புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்


என் மேஜையில் சில நூல்கள் இப்போது உள்ளன. ஏசுகிறிஸ்துவைப்பற்றிய சமீபத்திய ஆய்வுகள். Michael Baigent, Richard Leigh, and Henry Lincoln. எழுதிய The Holy Blood and the Holy Grail என்ற நூலை கஷ்டபட்டு வாசித்து முடித்து பெருமூச்சு விட்டேன். இந்த நூலை எப்படி புரிந்துகொள்வது. இதில் கடுமையான ஆராய்ச்சி உள்ளது. ஏசுவின் வரலாற்றைப்பற்றி பல்வேறு ஞானவாத கிறித்தவ நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஊகித்து எழுதப்பட்டது இது. ஏறத்தாழ இதே தலைப்பிலான இன்னும் இரு நூல்கள் மிச்சமிருக்கின்றன வாசிக்க. நண்பர் ஆனந்தக்கோனார் வாங்கி அளித்தவை.

இவை டாவின்ஸி கோட் நாவல் அளித்த பரபரப்பை விற்க முனைபவை. இவற்றை வைத்து ஏசுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஏசுவை புரிந்துகொள்ளும் முயற்சி அல்ல இவற்றில் உள்ளது. ஒரு பரபரப்பை உருவாக்கும் முயற்சி மட்டுமே. ஏசுவைப்பற்றிய சில தகவல்களை கற்பனையில் விரிவாக்கம்செய்யும் முயற்சி மட்டும்தான் இது. இப்படித்தான் மிச்ச நூல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன்

அவுட்லுக் இதழில்  Sheela Reddy எழுதிய கட்டுரை ஒன்றை நண்பர் அசோகன், சண்டே இண்டியன் அனுப்பியிருந்தார். Stephen Batchelor  என்ற ஆய்வாளர் எழுதிய Confessions of a Buddhist Atheist என்ற நூலின் சுருக்கமான குறிப்பு இது. இக்கட்டுரையில் புத்தரின் வாழ்க்கையை ஸ்டீபன் பேச்சிலர் பாலிமொழியின் 6000 பக்க ஆவணங்களில் இருந்து திரட்டி மறுபரிசீலனை செய்து எழுதியதாக சொல்லப்பட்டிருக்கிறது.    

 [ http://www.outlookindia.com/article.aspx?264458  Who Killed Gautama? ]

ஸ்டீபன் பேச்சிலரின் நூலை வாசகர்கள் வாசிப்பதற்கு முன்னால் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம். ஆனால் அதற்கு முன் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவரது தம்மமும்’ டி.டி.கோசாம்பி எழுதிய ‘பகவான் புத்தர்’ ஆகிய இரு நூல்களையும் வாசிக்கலாம். இரண்டுமே தமிழில் கிடைக்கின்றன.

புத்தர் மிக நெருக்கடியான ஓர் அரசியல் சூழலிலே செயல்பட்டவர் என்பது ஒரு வரலாற்று உண்மை. அவரது சாக்கிய குலம் ஒரு பழங்குடி அரசு. குலமுறை ஆசாரங்களால் ஆன ஒரு ஜனநாயக அமைப்பு அந்த அரசுக்கு இருந்தது. அதன் இளவரசர் அவர். அத்தகைய அரசுகள் பேரரசுகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் புத்தர் பிறந்தார்.

கிட்டத்தட்ட சங்ககாலமும் அத்தகையதே. வேளிர்கள் போன்ற சிறுகுடி அரசர்கள் மூன்று முடிமன்னர்களாலும் அழிக்கப்பட்ட காலம் அது. உதிர ஆறு ஓடிய காலகட்டம். புத்தர் அவரது அகிம்சையை போதித்தது அந்தச்  சூழலுக்கு எதிராகவே. அது எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே.

புத்தர் தன் கொள்கையால் பெரும் முடிமன்னராகிய கோசலமன்னரை  வென்று அவரை தன் மாணவராக ஆக்கிக்கொண்டார். அவருக்கும் சாக்கிய குலத்திற்கும் இடையெ உறவு உருவாகியது. பௌத்தம் ஏன் வென்றது என்பதற்கு டி.டி.கோசாம்பி காட்டும் காரணம் என்னவென்றால் ஆயுதம் மூலம் சிறு அரசுகளை அடைக்கி பேரரசுகளை உருவாக்குவதற்குப் பதிலாக கருத்தியல் ஒருமை மூலம் பேரரசுகளாஇ உருவாக்கலாமென ஒரு வழியை அது காட்டியது என்பதுதான். வட இந்தியாவில் ஓடியிருந்த குருதிநதியை பௌத்தமும் சமணமும் நிறுத்தின

ஆனால் அது  புத்தரின் மறைவுக்குப் பின்பு மெல்லமெல்ல உருவான ஒரு நிலைதான். புத்தரின் காலகட்டத்தில் பழங்குடி குல அரசுகள் அனைத்ததிகார மன்னர் அரசுகளாக மாறுவதன் சிக்கலான அரசியல் இருந்தது. அந்த அரசியல் பலவகையான உள்மோதல்களும் வன்முறையும் கொண்டதுதான்.

தன் ஞானத்தால் மட்டுமல்ல ராஜதந்திரத்தாலும்தான் புத்தர் அச்சூழலை எதிர்கொண்டிருக்க முடியும். அவரது சங்கம் என்ற அமைப்புக்கு எதிராக எல்லாவகையான உட்பகையும் வெளிப்பகையும் இருந்திருக்கும். எல்லா ஞானிகளும் சமகாலத்தால் புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தப்படுவார்கள். புத்தருக்கும் அத்தகைய சூழல்கள் இருந்திருக்கலாம்

ஸ்டீபன் பேச்சிலர் அந்தச் சூழலை பலவகையான தகவல்களுடன் அளிக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தகைய ஒரு ஆய்வுக்கும் பிம்ப உடைப்புக்கும் எல்லாவகையான வாய்ப்பும் புத்தர் வரலாற்றில் இடமுள்ளது. புத்தர், ராமர், கிருஷ்ணன், ஏசு, நபி எல்லாருமே அதற்கு உட்பட்டவர்களே — கடைசியாகச் சொல்லப்பட்டவர் மதவெறியர்களாலும், அசட்டுமுற்போக்காளர்களாலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார் என்ற போதிலும்.

இத்தகைய ஆய்வில் எழும் இரண்டு சிக்கல்களை மட்டும் வாசகர்கள் கருத்தில்கொள்ளவேண்டுமென விழைகிறேன். ஒன்று இந்த ஆளுமைகளை நாம் மூன்றாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். தொன்ம ஆளுமை, தத்துவ ஆளுமை, வரலாற்று ஆளுமை .[குழப்பம் வேண்டாம், ஆளுமை என்றால் பர்சனாலிடி]

புத்தர் என்ற தொன்மம் ஈராயிரத்துக்கும் மேலான ஆண்டுகளால் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்ட ஒன்று. மானுடத்தின் மகத்தான இலட்சியக் கனவுகளில் ஒன்று அது. கருணையும் ஞானமும் ஒன்றாகும் ஒரு புள்ளி. அழியா விழுமியங்களால் ஆனது. அந்த தொன்ம புத்தர் என்றும் இருந்தாகவேண்டும். அதை நாம் பிறவற்றில் இருந்து பிரித்தே பார்க்க வேண்டும். பிற ஆளுமைகள் இந்த தொன்ம ஆளுமையை மறுப்பதில்லை என்றும் இது செயல்படும் தளம் முற்றிலும் வேறானது என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தத்துவ ஆளுமை என்பது அவரது கூற்றுகள் மூலம் உருவாகி வந்தது. உண்மையில் புத்தரின் உபதேசங்கள் அவற்றின் மீதான எதிர்வினைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் உருவாகிவரும் சித்திரம் அது. புத்தரின் செய்தியே இந்த புத்தர். இந்த சித்திரத்தை ஓரளவுக்கு வரலாற்று புத்தர் சித்திரம் விளக்கலாம். ஆனாலும் புத்த நூல்கள் இருக்கும்வரை இந்தச் சித்திரமும் இருக்கும்

வரலாற்று புத்தர் பல்வேறு வரலாற்றுச் செய்திகளால் நாம் கண்டடையும் ஒரு மனிதர் மட்டுமே. அந்த மனிதரை புரிந்துகொள்வதன் மூலம் நாம் அந்த மனிதரின் செய்தியை இன்னமும் நெருக்கமாக உணர முடியும் அவ்வளவே. மிகையான கற்பிதங்களுக்குச் செல்லாமலிருக்க அது உதவும். காலம்தோறும் இந்த சித்திரம் வளரும், விரியும், திரியும்.

அவற்றில்  எந்த சித்திரமும் முழுமையானதல்ல. பல்வேறு வகையான சித்தரிப்புகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைந்து நாம் தான் நமக்குரிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஆனால் வரலாற்றுச்சித்திரங்களை முன்வைப்பவர்கள் தாங்கள் உருவாக்கும் சித்திரங்கள் மூலம் அந்த மொத்த ஆளுமையையே மாற்றி எழுதிவிடுவதாக நம்புகிறார்கள். அங்கேதான் பிரச்சினையே.

இரண்டாவதாக உள்ள சிக்கல் என்பது இத்தகைய வரலாற்று உருவகங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் உதிரிச் செய்திகளை வைத்து கற்பனைசெய்யப்படுவதென்று நாம்  உணர்ந்திருப்பதில்லை. அச்செய்திகளும் பல நூறு வருடங்களுக்குப் பின்னர் எழுதப்பட்டவை என்பதையும் உணர்வதில்லை. ‘இறுதி’ முடிவுகளுக்கு எளிதில் வந்துவிடுகிறோம்.

மேலைநாட்டு ஆய்வாளர்கள் இரு வகை என்று எனக்குப் படுவதுண்டு. முதல்வகை கீழைநாட்டு ஆன்மீக,பண்பாட்டு விஷயங்கள் எதையும் சிறுமைப்படுத்தும் முன் தீர்மானங்களை உள்ளூரக் கொண்டவர்கள். இவர்களே பெரும்பான்மை.

இரண்டாம் வகையினர் , பொதுவான ஆய்வுமுறைகளைக் கொண்டு ஆராய்பவர்கள். இவர்கள் தங்கள் ஆய்வுகள் புறவயமானவை, பகுத்தறிவுக்குட் பட்டவை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த புறவயத்தன்மை, பகுத்தறிவு என்பனவேகூட பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கருத்தியல் பொதுப்போக்குகளால் சமைக்கப்பட்டவை என்று இவர்கள் உணர்வதில்லை.

உதாரணமாக, பெரும்பாலான மேலைநாட்டு ஆய்வாளர்களிடம் எதிர்மறை மானுட உணர்ச்சிகள் [ இட் என்று அவர்கள் சொல்லும் காமமும் வன்முறையும்] தான் மானுடனுடைய அடிப்படை உணர்ச்சிகள் என்றும் உன்னதம் நோக்கிய தேடல் என்பது செயற்கையானது என்றும் ஓர் எண்ணம் இருக்கிறது. ·ப்ராய்டியத்தில் இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டது இது. இதை ஒரு மதநம்பிக்கை போலவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் வைத்திருப்பதைக் காணலாம்

இந்த அடிப்படையில் இவர்கள் ஆன்மீக முன்னோடிகளையும் வரலாற்று நாயகர்களையும் ஆராயும்போது அவர்களின் அந்தரங்க பலவீனங்கள் என்ன, சரிவுகள் என்ன என்ற கோணத்திலேயே அணுகுகிறார்கள். அவற்றை வைத்தே அந்த ஆளுமைகளை புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். பல ஆய்வுகள் இந்த ·ப்ராய்டிய மதநம்பிக்கையால் கோணலாகிப்போனவையாகவே உள்ளன. சிறந்த உதாரணம் மானுடவியலாளரான ஆலன் டண்டிஸ்.  வருங்காலத்தில் இத்தகைய ஆய்வுகளில் பெரும்பகுதி குப்பைக்கூடைக்கே சென்று சேரும் என்று நினைக்கிறேன்.

இந்த முன்னறிதல்களுடன் ஸ்டீபன் பேச்சிலர் முதலியவர்களின் ஆய்வுகளை அணுகுவது நல்லது என்பது என் அபிப்பிராயம். இந்தக் கட்டுரையிலேயே என் பார்வைக்குப் பட்ட சில பார்வைப்பிழைகளைச் சொல்கிறேன். புத்தரின் போதனைகளை பெரிய அளவில் மக்களிடம் கொண்டுசேர்க்க ஆரம்பத்தில் முயன்றவர் கோசல மன்னர். புத்தரின் தொடக்ககால மாணவர் அவர்.

பின்னர் புத்தரின் சங்கத்திற்கும் கோசல மன்னருக்கும் கருத்துவேறுபாடுகள் உருவாயின. புத்தரின் சங்கம் கோசல எல்லைக்கு வெளியே பரவி பிறநாடுகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தபோது அதில் கோசல மன்னரின் இடம் குறைந்தது. மகதம் புத்த மதத்தின் மையமாக ஆகியது. இது இயல்பானதே. இந்த கட்டத்தில் புத்த சங்கம் புத்தரின் பிரதம சீடர்களின் ஆளுகைக்குள் சென்றதை கோசல மன்னர் விரும்பாமலிருக்கலாம்

ஆகவே பல வருடங்களுக்கு பின்னர் புத்தரின் வரலாறு எழுதப்பட்டபோது கோசல மன்னர் ஒரு போர் வெறியர் , புத்தரை அவர் பயன்படுத்திக்கொண்டார் என்ற நோக்கில் எழுதப்பட்டது. ஸ்டீபன் பேச்சிலர் அந்தச் சித்தரிப்பை அப்படியே ஒரு வரலாற்று உண்மையாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அத்தகைய ஒரு கொடூர மன்னரால் ஆதரிக்கப்பட்டு அவர் வழியாக முன்வைக்கப்பட்டிருந்தால் புத்தரின் போதனைகள் எப்படி லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் என்ற எளிமையான கேள்வி இங்கே எழும். மேலும் அப்படி புத்தரால் கவரப்பட்டவர்கள் எளிய அடித்தள மக்களும்கூட.

அதேபோல அகிம்சையை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட சமணர்கள், அவர்கள் அரசியலதிகாரம் நோக்கி வர ஆரம்பிக்காத காலத்திலேயே, பௌத்த பிட்சுக்களைக் கொன்றொழித்தார்கள் என்ற கதையை அப்படியே விழுங்கி வைக்கிறார் ஸ்டீபன் பேச்சிலர். இந்த வகையான மோதல்கள் நிகழ்ந்தது இருமதங்களும் அரசியலதிகார மதங்களாக அமைப்புகளாக ஆகிவிட்ட பிறகுதான். அப்போதும்கூட இம்மோதல்களை இருதரப்பும் மிகைப்படுத்தி எழுதி வைத்தன. தங்கள் எதிரிகளை குறைத்து சொல்லவும் தங்கள் முனிவர்களை புனிதர்களாக ஆக்கவும்.

வராகபாதம் என்று பெயருள்ள ஒரு காளானை தவறுதலாக புத்தர் உண்டதாகச் சொல்லப்படுகிறது. அதையே அப்படியே பொருள்கொண்டு புத்தர் பன்றிக்கறி உண்டு இறந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மரணத்துக்கு விஷமே காரணம் என்றெல்லாம் ஸ்டீபன் பேச்சிலர் ஊகிப்பதற்கான எந்த முகாந்திரமும் பௌத்த நூல்களில் இல்லை – இருப்பதாக ஸ்டீபன் பேச்சிலரின் நூலிலும் இல்லை என்று இக்கட்டுரை காட்டுகிறது.

ஸ்டீபன் பேச்சிலர் பொதுவாக பரபரப்பை நாடுபவராகவும், எல்லா ஆன்மீக-பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் அதிகாரவிருப்பும்  எதிர்மறை இச்சைகளும் தான் உண்மையான காரணமாக இருக்கும் என்று அந்தரங்கத்தில் நம்பக்கூடியவராவும் தெரிகிறார். இவ்வாறு ஒரு முன்தீர்மானமான சித்தரிப்புக்குத் தேவையான தரவுகளை தேடி அவற்றை ஓர் ஆய்வாளனுக்குரிய ஐயநோக்கு இன்றி பார்த்து எழுதப்பட்ட நூல் இது என்ற முதல்பதிவு என் மனதில் உருவாகியது.

ஸ்டீபனின் நூலை பௌத்த வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6736

9 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  http://www.jesusisbuddha.com/
  http://www.stellarhousepublishing.com/jesussunexcerpt.html
  இவையிரண்டும் கூட வேறுமாதிரியாக விஷயத்தை சொல்கின்றன. சும்மா தெரிந்துவைத்துக்கொள்ளலாமே என்றுதான் படித்தேன். கடைசியில் குழப்பம்தான் மிஞ்சுகிறது.

 2. sgkrishnan

  >>ஆனால் உண்மையில் இந்த புறவயத்தன்மை, பகுத்தறிவு என்பனவேகூட பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கருத்தியல் பொதுப்போக்குகளால் சமைக்கப்பட்டவை என்று இவர்கள் உணர்வதில்லை.

  அருமை சார்.

  என்ன சார் எக்ஸ்-மொங்க் ன்னு ஏதோ பெருமையா மைக்ரோசாப்ட்-ல ஓர்க் பண்ண மாதிரி சொல்லிக்கிறார்? வாழ்வில் துச்சமாக எண்ணி துறந்து விட்டவற்றை மீண்டும் அணைதுக்கொள்வதை பற்றி என்ன ஒரு பெருமிதம் அவருக்கு. இந்த பட்டம் – துறவு, பௌத்தம் பற்றிய மேதமையை காட்டும் என்று யாரோ சொல்லி இருப்பார்கள் போல…

  அவரது இந்த தனிப்பட்ட சாகசத்தை (personal adventure) நீக்கி விட்டு பார்த்தாலும் – வரலாற்றில் பின்னோக்கி போய் நடந்தது என்ன, முன்னோர்களின் நிலைப்பாடுகள் விளக்க முயலும் இது போன்ற ‘ஆராய்ச்சியாளர்களின்’ முயற்சிகள் அனைத்துமே சந்தேகதிர்க்கு உரியவகையாக படுகிறது. இவர்கள் கூற்றுக்கும், தனது முந்தய பிறவிகளின் ஞாபகம் வந்ததால் வரலாற்றில் நடந்தது என்ன என்று சொல்லும் சிலரின் கூற்றுக்கும் ஒரே மதிப்பீடு தான் தர முடிகிறது. யாருக்கு தெரியும் என்பது தான் உண்மையான பதிலாக இருக்க முடியும். அல்லது சுய முடிவுகளை விலக்கி ஆவணங்களை மட்டும் முன்வைக்கும் கறாறான கல்வி ஆராய்ச்சி (அகடமிக் ரிசர்ச்) ஆக இருக்க வேண்டும்.

  வரலாறு விடுங்கள் – இப்போது ஈழதிலோ இராகிலோ நடக்கும் சம்பவங்களே ஊடகங்களில் பல திரிபுகள் காணும் போது, வரலாற்றாசிரியர்கள் எழுதும் இது போன்ற புத்தகங்களை என்ன என்று கொள்வது? புத்தக கடைகளும் இவற்றை பெருந்தன்மையாக ‘Non-fiction’ என்று வேறு கூப்பிடுகின்றன .

  பங்கஜ் மிஷ்ரா எதுதிய ‘ஆண் எண்ட் டோ சுஃப்பெரிங்க்’ (An End to Suffering) என்ற புத்தர் பற்றிய நூல் உண்மையில் ஆவணங்களுடன் ஆராய்ச்சி செய்து முன் முடிவுகள் குறைவுடன் எழுத பட்ட தாக தோன்றியது. படித்த பின் புத்தர் மிகவும் நடைமுறை வாதியாக, தெளிவுடன் செயல் பட்டவராக தெரிந்தார்.

  கோகுல்

 3. ramasamy

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

  அவுட்லுக்கின் கட்டுரையைப் படித்ததும் இவ்வுணர்வே ஏற்பட்டது. பௌத்தம் என்னும் மாபெரும் உலகநோக்கை மேலெடுத்துச் செல்லும் முயற்சியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. செய்தியை விட செய்தியாளன் தான் சுவாரஸ்யம்.

 4. gomathi sankar

  ஹோலி க்ரைல் நூல் என் ஞாபகம் சரியாக இருந்தால் 1977 ல் வெளியானது என நினைக்கிறேன் அதை முழுக்க புனைவு என்று சொல்லமுடியாது ஏசுவின் பரம்பரை என்று தங்களை இரண்டாயிரம் வருடங்களாக நம்பும் ஒரு பிரஞ்சு அரச குடும்பத்தின் நேர்காணல் அதில் உள்ளதென நினைவு இது தவிர Templars of christ என்ற கல்ட் பற்றியும்… அவர்கள் 15 ம் நூற்றண்டில் அவர்களிடமிருந்த பெருசொத்துக்க்காகவும் மரபுக்கு எதிரான சில நம்பிக்கைகளுக்க்காகவும் கொன்று ஒழிக்கப் பட்டனர் ஏசு சிலுவையில் மரிக்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் முன்னதாகவே உண்டு குர் ஆன் ‘அவ்வாறு காட்டப்பட்டது’ என்றே சொல்வதாக ஒரு வாசிப்பு உண்டு ஏசு காஷ்மீரில் மரித்தார் என்ற கருத்துக்களையும் கேள்வியுறலாம் சரித்திரத்தில் எப்போதுமே இடைவெளிகள் இருக்கவே செய்யும் நீங்களே சொல்வதுபோல் ஏசுவின் புனிதத்தை நிரூபிக்க அவரது மலை பிரசங்கம் ஒன்றே போதும்

 5. ratan

  பெரியார் வைக்கம் வீரர் ஆகும் போது, காந்தி தலித் விரோதி ஆகும் போது… புத்தர் கொலைகாரராவது சாத்தியமே… அதே சமயம் கொலைகாரர் புத்தராவதும் சாத்தியமே…

 6. mmurali

  அன்புள்ள ஜெ

  புத்தர் பற்றி சில சிந்தனைகள் (பௌத்த ஜைன தத்துவங்களை பற்றி என்றே சொல்லலாம்)

  எளிய நடை முறைக்காக, நம்பிக்கைகளையும், மரபு சார்ந்த விஷயங்களையும் தனியாக பிரித்து, நெறி முறைகளையும் கருணை சார்ந்த பழக்கங்களை நவீன கட்டமைப்பாக (அது இன்று கூட நவீனம் தான்)
  ஏற்படுதிள்ளது. மரபு நம்பிக்கை உள்ளவர்களோ பக்தி மார்க்கம் செல்பவர்களுக்கு கூட இந்த கட்டமைப்பு, நேர்மையான பழக்கங்கள் மூலம் ஆன்மீக பலத்தை கூட்டுகிறது, இந்த கட்டமைப்பை, புதிய (சமய) சீர்திருத்தகாரர்கள் எல்லோரும் உபயோகபடுத்தி உள்ளார்கள். தேவையான மரபையும் நம்பிக்கைகளையும் இணைத்து கொள்ளலாம்.

  இதை கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என கூறவது தவறு என தோன்றுகிறது. அதை பாரம்பர்யதிற்கு ஏற்ப இணைத்து கொள்ள ஒரு சிறப்பான ஏற்பாடு, சமரசத்தை அடிப்படையாக கொண்டுள்ள இவற்றை , பல தரப் பட்ட உலக சமுதாயம், இந்த கட்டமைப்பை மிகவும் நம்பிக்கையுடன் அணுகுகிறது.

  இது காலம் காலமாக நடந்து வருகிற நிகழ்வே.

  ஆன்மீகத்தை எல்லோருடைய கைகளுக்குள் கொணர்ந்த, மிக முக்கியமான முயற்சிகள்.

  புத்தரை விட ஒரு புரட்சி செய்துவிட முடியுமா.. என்ன!

  அன்புடன்
  முரளி

 7. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ.
  புத்தர் குறித்த உங்கள் புரிதல், தெளிவூட்டுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை கற்பனை செய்வதில் நமது சுயவிருப்பங்களே ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது. யூகங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாறு தொகுக்கப்படுகிறது. சார்பின்றி யூகங்கள் செய்ய உள்நாட்டினராலேயே முடியாதபோது, வெளிநாட்டவரால் இயலுவது சாத்தியமில்லை.

  வரலாறு என்பதே, எழுதுபவர் அல்லது தொகுப்பவரின் ஆசைகளை வெளிப்படுத்துவதாகத் தான் உள்ளது. இந்தியாவில் காந்தியை மகாத்மா என்று வரலாறு சொல்கிறது. பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா தேசத் தந்தை ஆகிறார். அதே ஜின்னா இங்கு வெறுப்பு ஊற்றாய்க் கருதப் படுகிறார். எல்லாம் வரலாறு படுத்தும் பாடு. நாசி வெறியன் என்று தூற்றப்படும் ஹிட்லர் இன்றும் ஜெர்மனியின் நாயகர் தான்.
  \வரலாற்றை ஆய்பவரது கண்ணோட்டமே வரலாறாய் உருவாகிறது.

  உண்மையில், வெற்றி பெற்றவர்களே வரலாற்றின் பக்கங்களில் நாயகர்களாக வடிக்கப்படுகிறார்கள். இதில், மேதமையை நிரூபிக்க பலரும் பாடுபடுகிறார்கள். இந்த ஆசையை விட்டொழித்துவிட்டு வரலாற்றை கணிக்க வேண்டும். தவறான கணிப்புகளால் உலக அமைதி குலைந்ததற்கும் வரலாறே சாட்சியாக உள்ளது. புனிதப்போர்களும் சந்தேகக் கண்ணோட்டமும் வரலாறு உருவாக்கியவை அல்லவா? எனவே ஆசை அறுத்த ஆய்வுகளே தேவை. ஆசையே துயரங்களுக்கு எல்லாம் காரணம் என்றவர் புத்தர் தான்.

  சுவாமி விவேகானந்தர், சிவாஜி போன்றவர்கள் வாழ்வின் மிகக் குறுகிய காலத்தில் வரலாற்றை மாற்றியவர்கள் என்பதை அறிவோம். குறுகிய காலத்தில் நித்யானந்தரால் உலகப்புகழ் பெற முடிந்துள்ளதை நாம் தற்போது தான் கண்டோம். (அவரது வீழ்ச்சி தனிக்கதை). ஆகவே ஒரு நாட்டின் அரசன் வாழ்க்கையை அர்ப்பணித்து பொதுநலத் தொண்டில் ஈடுபடும்போது மக்கள் வசீகரிக்கப்பட்டதில் வியப்பில்லை. மனதில் வைராக்கியம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பது தான் புத்தரின் வாழ்க்கை; வரலாறு; போதனை. அவரது அதீத அஹிம்சையே நாட்டின் வலிமை குன்றலுக்கு காரணம் என்ற சாவர்க்கர் கருத்தும் புறக்கணிக்க முடியாதது.
  – வ.மு.முரளி.

 8. Prakash

  அன்புள்ள ஜெமோ, இந்த புத்தரின் வரலாறு தேவையா. இதனால் புத்தம் நீர்த்து போய் விடுகிறது இல்லையா? . ‘புத்தரை வழியில் கண்டால் அவரை கோல்’ என்று சொல்லும் புத்தத்துக்கு இந்த வரலாறு தேவை இல்லை தானே. Spoon cannot taste the Soup என்று சொல்வார்கள். எதற்கு சூப்’ஐ விட்டுவிட்டு ஸ்பூன்’ஐ பற்றிய பேச்சு என்று தான் புரியவில்லை.

 9. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்,

  //இவை டாவின்ஸி கோட் நாவல் அளித்த பரபரப்பை விற்க முனைபவை. இவற்றை வைத்து ஏசுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை.//

  இல்லை. இந்த நூல் டாவின்ஸி கோட் நூலுக்கு முந்தையது. டாவின்ஸி கோட் நூலின் வரலாற்றாதாரமாக இந்நூலே கருதப்பட்டது. ஆனால் இவை எதுவுமே ஞானவாதத்துவத்தை தெளிவாக அணுகவில்லை. அந்த விதத்தில் முக்கியமானவை எலைன் பேகல்ஸின் நூல்கள். பரபரப்புத்தன்மையற்ற ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அவை.

  பணிவன்புடன்,

  அநீ
  Aravindan Neelakandan

Comments have been disabled.