இரவு 9

எந்த நாளில் எந்த இரவில்

இரவின் முடிவின்மையை

முதலில் உணர்ந்தேன்?

 

விண்மீன்களும் பால்வீதிகளும் 

முட்டிமுட்டிப்பால்குடிக்கும்

கரிய தாய்ப்பன்றிதான் அதுவென்று

எப்போது  உணர்ந்துகொண்டேன்?

 

 

அறைக்குள் நுழைந்ததுமே உடைகளைக்கூட மாற்றாமல் அபப்டியே கட்டிலில் விழுந்து தூங்க ஆரம்பித்துவிட்டேன். ஒருமணிநேரம் தூங்கியபின்பு விழித்துக்கொண்டு எங்கிருக்கிறேன் என்று அரண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். எலிகளின் ஓசைகள் கேட்டதுபோல் உணர்ந்தேன். எலிகளா? எழுந்து அறையை கூர்ந்து பார்த்தேன். இருளுக்குள் நன் கண்கள் ஒவ்வொரு பொருளாக துல்லியமாக தேடிவந்தன. பின்பு அப்படியே மீண்டும் படுத்து தூங்கிவிட்டேன்.

நான் கண்விழித்தபோது காலை பத்து மணி. புரண்டுப்படுத்து தூங்கவேண்டும் என்று என் உடலும் மனமும் உந்தின. ஒரு கணம் நான் அதற்கு என்னைக் கொடுத்தேன் என்றாலும் உடனே உள்ளத்தால் உடலை உந்தி தூக்கி எழுந்து மெத்தையில் அமர்ந்துகொண்டேன். பெருமூச்சுவிட்டுக்கொண்டு என் அறையை உணர்ந்துகொண்டிருந்தபோதே நேற்று நான் விட்ட இடத்தில் இருந்து சிந்தனை மேலே சென்றது – எலிகள்! எலிகளா?  என் அறைக்குள் எலிகள் வர நியாயமில்லை. மறுகணம் அந்தக் காட்சி. எலிகளின் பாதாள நகரம்.

 

அந்த நினைப்பிலிருந்து தப்ப விழைபவனைப்போல எழுந்து படியிறங்கி கீழே வந்தேன். நான் இறங்கியபோது படிகள் படபடவென ஒலியெழுப்பின. பங்கஜம் உள்ளிருந்து எட்டிப்பார்த்து ஆச்சரியத்தை கணநேரத்திலேயே அடக்கி, ”சாய எடுக்கட்டே?” என்றாள் ”ம்ம்” என்றேன். சோபாவில் சென்று அமர்ந்து கொண்டு நாளிதழை எடுத்து விரித்தேன். அந்த பக்கங்களில் வெறும் கரும்புள்ளிகள்தான் முதலில் தெரிந்தன. கண்களை பலமுறை கொட்டிக்கொண்ட பின்னர்தான் எழுத்துக்களாக அவை ஆயின. பங்கஜம் டீயுடன் வந்தாள். மலையாளிகள்  எதற்காகத்தான் இப்படி லோட்டா நிறைய டீ போடுகிறார்களோ தெரியவில்லை. பாதிகுடித்தபின்பு அப்படியே வைத்துவிட்டு எழுந்தேன்.

வெளியே வந்து தோட்டத்தைப் பார்த்தேன். அதிகவெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல பளீரென்று வெளிறிக்கிடந்தது தென்னந்தோப்பு. மரநிழல்கள் நடுவே பீய்ய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்புநீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது.  கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின. தென்னைமரங்களின் தடியே இந்த அளவுக்கு அசிங்கமான சாம்பல்நிறம் என்பதை அப்போதுதான் கவனித்தேன். ஓலைகள் உதிர்ந்த வடுக்கள் புண்தழும்புகள் போலிருக்க பிரம்மாண்டமான சிலந்தியொன்றின் நூற்றுக்கணக்கான கால்கள் போல அவை நின்றன. முற்றத்தில் மண் மீது தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடிய வெயில் வழுவழுப்பான திரவம் போல சிந்திப் பரவிக் கிடந்தது.

மேலே சென்று என் அறைக்குள் நுழைந்து மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் என்று அமர்ந்தேன். காலைவெயில் காயலின் மீது பொழிந்து அதன் பிரதிபலிப்பு தென்னைமரங்களின் உச்சியின் ஓலைவட்டத்தின் அடியில் பட்டு அலையடித்தது. வெயிலை சிதறடித்தபடி ஓலைநுனிகள் காற்றில் துடித்தன. காகங்கள் தகரத்தால் தகரத்தை உரசுவது போல சலிக்காமல் ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தன. நான் கணித்திரையை பார்க்க ஆரம்பித்தபோது கண்கள் கூசி கண்ணீர் வழிய ஆரம்பித்தது. வெயில் என்ற  கூச்சமில்லாத அப்பட்டத்தை,  அர்த்தமற்ற வெறிச்சிடலை அத்தனை தீவிரமாக நான் உணர்ந்ததில்லை.

எழுந்து என் அறைக்குள் சென்று ஏஸியைப்போட்டுக்கொண்டு விளக்குகளை அணைத்தபின் வேலைசெய்ய ஆரம்பித்தேன். கடிதங்களுக்கு பதில்போட்டேன். சில கணிதப்பக்கங்களை சரிபார்த்தேன். முதுகு வலித்தபோது மல்லாந்து படுத்துக்கொண்டேன். என்ன ஆயிற்று என்ற எண்ணம் பீதியாக ஆகியது. என் கண்களை நான் இழந்துவிட்டேனா? பகல்களை முழுமையாகவே இழந்துவிட்டேனா? இனிமேல் சாதாரணமான வாழ்க்கையே எனக்கில்லையா என்ன? சென்னையின் என் அலுவலகம், கார்கள் உரசிக்கொள்ளும் தெருக்கள், அண்டைவீட்டுக்காரர்கள் எதுவுமே இல்லையா என்ன? எங்கே சென்றுகொண்டிருக்கிறேன்?

இல்லை, இதை இப்படி விடுவதில்லை. எல்லாவற்றையும் இப்போதே விட்டுவிடவேண்டியதுதான். இப்போது முழுதாக மூன்றுநாட்கள்கூட ஆகவில்லை. நான் சற்று அதிகமாகவே உணர்ச்சிகரமாக ஈடுபட்டுவிட்டேன் என்பதுதான் பிரச்சினை. கண்களை இருளுக்குள் உறுத்து உறுத்து பார்த்து பழக்கிக் கொண்டுவிட்டிருக்கிறேன். இன்று ஒருநாளிலேயே நான் என் கண்களை மீட்டு எடுத்துவிட முடியும். சட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு கீழிறங்கினேன். பங்கஜம் ”சாரே, ஊணு காலமாயி” என்றாள். ”வரேன்” என்றி சொன்னபின்பு முற்றத்தில் இறங்கி காயலை நோக்கிச் சென்றேன்.

நான் செய்த பிழை எடுத்ததுமே வெளிச்சத்தைப் பார்த்ததுதான். நிழல்களை மட்டுமே பார்க்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகக் கண்கள் பழகட்டும், அதன் பின்பு சாதாரணமாகப் பார்க்கலாம். மரங்களுக்குக் கீழே பரவிக்கிடந்த நிழல்களை மட்டுமே பார்த்துக்கொண்டு குனிந்தே நடந்தேன். கண்களை சுருக்கிக் கொண்டு வெளிச்சம் அதிகம் கண்ணுக்குள் விழாமல் பார்த்துக்கொண்டேன். காயலை ஒட்டி கல்மதில்மேல் அமர்ந்துகொண்டு காயலின் ஓரமான தென்னைமரங்கள் நீரில் நிழல் அலைபாய நின்ற பச்சை இருளையே பார்த்தேன். இளம்காற்று வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது நின்றது. கண்களை சாதாரணமாக வைத்துக்கொண்டு பார்க்கலாமென்றாயிற்று

திரும்பி காயலைப் பார்த்தேன். காயலை ஒருபோதும் அத்தனை மூளியாக நான் பார்த்ததில்லை என்று பட்டது. எந்த விதமான அழகுமில்லாத அம்மணம். சாயம்போன இளநீலச்சீலை போல சிற்றலைகளுடன் வெயிலில் விரிந்துகிடந்தது நீர்ப்பரப்பு. ஆப்ரிக்கப் பாசியின் குமிழ்கள் அழுக்குப்பச்சைநிறத்தில் அலைகளில் எழுந்தமர்ந்தன. பொருந்தாத ரத்தச்சிவப்பு நிறமும் மஞ்சள்நிறமும் பூசப்பட்ட ஒரு போக்குவரத்துப் படகு தலைக்குமேல் புகையை கப் கப் என்று துப்பியபடி செல்ல பாசிக்கம்பளம் வளைந்து அமைந்தது. நாலைந்து வெண்கொக்குகள் எதிர்காற்றில் ஏறி சிறகுகள் கலைய பறந்து வந்து பாசிப்படலம் மீது மெல்ல அமர்ந்து ஊசலாடின.

கண்களை மூடிக்கொண்டேன். என் மனம் ஏதோ வகையில் திரிபுபட்டுவிட்டதா என்ன? இல்லை, உண்மையிலேயே இவை இப்படித்தான் இருக்கின்றனவா? இயற்கையின் அழகு என்கிறார்களே அது உண்மையில் என்ன? எந்தவிதமான நிற ஒருமையும் இல்லாத ஒரு காட்சிவெளி அல்லவா கண்முன் நிற்கிறது. இதோ அழுக்குப்பச்சை நிறம் மீது சாம்பல்நிறபூச்சுள்ள வெண்ணிறச் சிறகுகளுடன் இந்தக் கொக்குகள் அமர்ந்திருக்கின்றன. நிறஒருமையை கொஞ்சம் உணர்ந்த ஒர் ஓவியனுக்கு இந்தக்காட்சி குமட்டலைத்தான் அளிக்கும். ஒருபோதும் அவன் இதை வரையமாட்டான். இந்த பொருந்தாமையைச் சமன் செய்ய ஏதோ ஒன்று செய்வான். ஒருவேளை மனிதன் ஓவியத்தைக் கண்டுபிடித்ததே அதற்காகத்தானா? இயற்கையின் தான்தோன்றித்தனமான காட்சிவெளியை தனக்குப் பிரியமான முறையில் அழகுபடுத்திக்கொள்வதற்காகத்தானா?

 

சோர்வுடன் எழுந்து திரும்பி நடந்தேன். தென்னைமரங்களின் தடியின் சாம்பல் நிறத்துக்கும் இலைகளின் பசுமைக்கும் என்ன பொருத்தம்? மண்ணின் செஞ்சிவப்புக்கும்  அடித்தடிகளின் பழுப்பு நிறத்துக்கும் என்ன பொருத்தம்? சம்பந்தமே இல்லாமல் வெண்ணிறமான சுவர்களும் சிவப்புநிறமான ஓட்டுக்கூரையுமாக என் வீடு. அதன் சன்னல்களில் பாசிப்பச்சை நிறமான பூபோட்ட திரைச்சீலை. அதன் தரைக்கு நீலச்சாம்பல் நிறமான சிமிண்ட்பூச்சு. யானை ஒன்று வரைந்த ஓவியத்தை ஓர் அலுவலகத்தில் பார்த்தேன். எந்தவிதமான நிற ஒருமையும் இல்லை. குரங்குகள் வரைந்தாலும் அப்படித்தான் இருக்கும்போலும். இயற்கையில் அழகு என்பது உண்மையில் இல்லையா என்ன? மனிதனின் கற்பனைதானா அது?

ஆம், இயற்கையில் அழகென்று எதைச் சொல்கிறார்கள்? பசுமையை. ஏனென்றால் பசுமை மனிதனுக்கு உணவு தருவது. பூக்களை. ஏனென்றால் பூக்கள் காய்களாக மாறக்கூடியவை. தீயை. ஏனென்றால் அது குளிர் போக்குவது. அந்தியை பொன்னை. ஏனென்றால் அவை தீயை நினைவூட்டுகின்றன. பெண்ணை. அது காமம். காமத்தால் அழகிய அனைத்தையும் பெண்ணுடன் இணைத்துக்கொள்கிறான். அழகிய அனைத்துடனும் காமத்தையும் இணைத்துக்கொள்கிறான். இயற்கை மீது படரும் மனிதனின் ஆசைதானா அழகை உருவாக்குவது? நான் கண்ட அழகான நிலக்காட்சிகள், அழகான ஓவியங்கள், கலைப்பொருட்கள், நடனங்கள், ஆடைகள் அனைத்தையும் மனதுக்குள் வரிசைப்படுத்திப் பார்த்தேன். ஆம், எளிய வாழ்வாசையை மட்டுமே  அழகென எண்ணிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

வியர்வை வழிய களைத்து என் கூடத்தில் நுழைந்து சோபாவில் அமர்ந்துகொண்டேன். பங்கஜம் வந்து மௌனமாக நின்றாள். நான் உள்ளே சென்று உணவுமேஜையில் அமர்ந்துகொள்ள அவள் சாப்பாட்டை பரிமாற ஆரம்பித்தாள். பச்சை வாழையிலையில் வெண்ணிறச் சோறு. செங்காவி நிறமான குழம்பு. மஞ்சள்நிறமான கூட்டு. எவர்சில்வரின் அபத்தமான மினுமினுப்புடன் பாத்திரங்கள். பசியன்றி வேறெதாவது காரணம் இந்த காட்சியை அழகாகக் காட்டுமா என்ன?

சாப்பிட ஆரம்பித்ததுமே பசியை உணர்ந்தேன். சில உருளைகள் உண்டதுமே பசி அடைத்துக்கொண்டது. வடித்த கஞ்சியில் வெந்நிர் கலந்து உப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து சுவையான ஒரு குடிநீரை பங்கஜம் தயாரித்திருந்தாள். அதை நாலைந்து டம்ளர் குடித்துவிட்டு எழுந்துகொண்டேன். பங்கஜம் முகத்தில் கேள்வி இருந்தது

நான் கைகழுவும்போது ”ஊணு மோசமா?” என்று அவள் பின்னாலிருந்து கேட்டாள். ”நல்லா இருந்தது…எனக்கு பசியில்லை” என்றேன். அவள் சில நிமிடங்கள் தயங்கிவிட்டு ”…அந்த மேனன் விட்டுக்கு போனா…அவங்க யட்சி உபாசனை உள்ள ஆட்களாக்கும். அங்க போனா அவங்க மாயம் வச்சு பிடிச்சுடுவாங்க. பின்ன அதிலே இருந்து தப்ப முடியாது” என்றாள். நான் ”இல்லல்ல நான் சும்மாதான் போனேன்” என்றேன். ”போன வருஷம் ஒரு தோணிக்கார பையன் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டிருந்தான். பின்ன அவனுக்கு கிறுக்காயிபோச்சு. இப்பம் அவன் கிறுக்கா அலையுறான்னு கேட்டிட்டுண்டு.” என்றாள். என் முகம் மாறியதை தடுக்க முயன்று வேறுபக்கம் பார்த்தேன்.

”யட்சி உபாசனை உள்ளவங்க வசியம் செய்தா பின்ன மனசு அவங்க பக்கம்தான் நிக்கும். அவங்க சொல்லித்தாறதுதான் சத்தியம்னு தோணும். அவங்க காட்டுறது மட்டும்தான் அழகுன்னு தோணும். மத்த எல்லாமே அசிங்கமா தோணும். யட்சிப் பிராந்து பிடிச்சால் பின்ன பகலிலே கண்ணெடுத்து பாக்க முடியாது. ராத்திரிதான் முழிச்சிருக்க முடியும்…நான் குறே கண்டிட்டுண்டு சாரே” நான் பெருமூச்சுடன் ”சரி” என்று சொன்னபின் மாடியேறி என் அறைக்குச் சென்றேன்.

மீண்டும் அந்தப்பீதி என் மனசைக் கவ்வியது. இதயத்தில் கனமான ஏதோ அப்பியிருந்து அதை துடிக்கமுடியாமல் செய்வதுபோல. கட்டிலில் அமர்ந்து கொண்டு ஒரு வார இதழைப் பிரித்தேன். என்னென்ன எண்ணங்கள் வழியாக மனம் கடந்துசெல்கிறது! எப்போதுமே நான் இப்படியெல்லாம் நினைத்தவனல்ல. இந்த எண்ணங்களே என்னுடையவை தானா? கம்யூட்டரில் வைரஸ் போல ஒருவரின் மூளைக்குள் சிந்தனைகளை செலுத்திவிடமுடியுமா என்ன? என்னுடைய சிந்தனை அமைப்பே மாறிவிட்டிருக்கிறது. கட்டிலில் மல்லாந்துபடுத்துக்கொண்டு கூரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆகிவிட்டது? திடீரென்று பால் திரிவது போல என் பகல்நேரங்கள் காட்சியின் ஒத்திசைவை இழந்து சிதைந்துவிட்டிருக்கின்றன. இனிமேல் என்னால் பகலை ரசிக்க முடியாது.

உண்மையில் எந்தமனிதனாவது பகலை ரசிக்க முடியுமா என்ன? மதியவெயிலில் அழகாக இருக்கும் இயற்கைக்காட்சி என்று ஒன்று உண்டா? பேரழகுகொண்ட நிலங்கள்கூட ஆபாசமாக திறந்து கிடப்பதைத்தானே மதியத்தில் பார்க்க முடியும்? அழகு என்று மனிதர்கள் ரசிக்கும் காட்சிகள் ஒன்று காலைவிடியும்போது அல்லது மாலை மயங்கும்போது அல்லது மழைக்கருக்கலின்போது. ஆம், பகல் மறையும்போதுதான் அழகு பிறக்க ஆரம்பிக்கிறது. மறையும் பகலில் இருந்து சிலகாட்சிகளை எடுத்து அழகெனக் கொள்கிறான் மனிதன். 

அப்படியென்றால் இரவு மட்டுமென்ன? இரவும் மனிதனால் உருவாக்கப்படும் அழகு கொண்டது அல்லவா? இருக்கலாம். ஆனால் இரவில் ஒரு பெரிய வசதி இருக்கிறது. மனிதன் தனக்கு தேவையானவற்றை மட்டும் தேவையான அளவுக்கு ஒளி அமைத்து பார்த்துக்கொள்ள முடியும். இரவின் வண்ணங்களை முழுக்க மனிதனே தீர்மானிக்க முடியும். வெளியே நகரத்தில் உலவும்போதுகூட அங்குள்ள அனைத்துக் காட்சிகளும் மனிதனின் அழகுணர்வால் வெளிச்சம்போட்டு உருவாக்கப்பட்டவைதானே? பகல் அப்படி அல்ல. பிரம்மாண்டமான வானத்தால் மனிதனை ஒருபொருட்டாகவே நினைக்காமல் அவன் மீது கொட்டப்படுவது அது.

 

நான் எப்போதோ தூங்கிவிட்டிருந்தேன். விழித்துக்கொண்டபோது அந்தியொலிகள் கேட்டன. எழுந்து கட்டிலிலேயே அமர்ந்திருந்தேன். தூங்கும்போது கரைந்து அறுபட்ட சிந்தனைகள் தூக்கம் விழித்தகணமே ஆழத்துப் பரல்மீன் மேலெழுவது போல எப்படி எழுந்து வருகின்றன. பகல் அர்த்தமற்ற காட்சிகளை மனிதன் மீது கொட்டுகிறது. நரைத்த காட்சிகள், எரியும் காட்சிகள்,ஓத்திசைவில்லாத காட்சிகள், உறுத்தும் காட்சிகள். அப்பட்டமாக இருப்பதனாலேயே ஆபாசமான காட்சிகள். இந்த வரியே மனதில் வருகிறது. ஆம், ஒரு பேரழகியை நடுமதிய வெயிலில் நிறுத்தி வைத்தால் அவள் எப்படி இருப்பாள். நீலிமாவை –

நான் மனதை இறுக்கி அந்த எண்ணத்தை உதறினேன். கீழே இறங்கி வந்தேன். பங்கஜம் இல்லை.  பிளாஸ்கில் டீ இருந்தது. அதைக்குடித்துவிட்டு மேலே வந்து பால்கனியில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். வானம் மென்மையான ஒளியுடன் ஒரு பெரிய பாலிதீன் பரப்பு போல தெரிந்தது. கசங்கல்கள் போல ஆங்காங்கே மேத்த்தீற்றல்கள். பறவைக்கூட்டங்கள் ஒலியே இல்லாமல் காற்றில் வழுக்கிச் சென்றன. தோட்டத்திற்குள் கூடணையும் காகங்களின் கூட்டக்கரைச்சல். தென்னை மரங்கள் நடுவே அந்த மாமரம் இலைகளை நாக்குகளாக ஆக்கி கூச்சலிடுவதுபோல் இருந்தது. என்ன ஒரு மென்மை, எத்தனை இதம். தென்னையோலை இலைகள் அழுத்தமான பச்சை நிறத்தில் எண்ணைப்பூச்சுகொண்டவை போல மெலிதாகப் பளபளத்து காற்றை அளைய மரங்களின் வளையங்கள் வழியாக இளஞ்செம்மை வழிந்து அவற்றை உயிர்துடிக்கும் சருமம்போல் ஆக்கியிருந்தது.

தூரத்தில் காயல்மீது இரு பாய்மரப்படகுகள் சென்றன. நீலம் மீது வெண்மை. ஆனால் நீலத்தை இருள வைத்து வெண்மையை எரியாத துலக்கம் கொள்ளவைத்து அந்தி மிகக் கச்சிதமாக இணக்கியிருந்தது. நீலப்பரப்பா கரும்பரப்பா சாம்பல் பரப்பா என்ற ஐயமெழும் படி மங்கிவிட்டிருந்த ஏரிநீரில்  ஆப்ரிக்கப் பாசியின் குமிழ்கள் தளிர்ப்பச்சை நிறத்தில் எழுந்தாடின. நான் பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தேன். எங்கும் ததும்பிய ஒருமை அனத்தையும் இணைத்து ஒரேயனுபவமாக ஆக்கி கண்முன் பரப்பியிருந்தது. இந்தவெளியில் பலவண்ணங்களுடன் பல்லாயிரம் பறவைகள் பறக்கலாம். அவையும் இதன் பகுதிகளே ஆகும்

புகை துடித்தெழ வண்டு ரீங்கரிப்பது போல உறுமியபடி ஒரு பயணிகள் படகு சென்றது. நிறைய மனிதர்கள். உள்ளே ஒரே ஒரு விளக்கு தனிமின்மினி போல தெரிய அத்தனைபேரும் நீரையே பார்த்துக்கொண்டு சென்றார்கள். நீலநிற அடிக்குடமும் மஞ்சள்நிறமான கூரையும் கொண்ட படகு. மஞ்சள்நிறம் பித்தளையின் மெருகைக் காட்டியபடி சற்றே வளைந்தது. வானத்தில் செம்மை வழிந்து வழிந்து அடிவானத்தில் தேங்கி நீர்ப்பரப்பில் கரைந்து அலைகளில் நெளிந்துகொண்டிருந்தது.

காரின் மெல்லிய உறுமல் கேட்டது. மேனனின் வீட்டைப் பார்க்கலாகாது என்று நான் திரும்பி அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். மெல்லிய செவ்வெளிச்சம் சிந்தும் சாளரங்களும் வாசல்களுமாக நின்றது வீடு. காரில் இருந்து நாயரும் நீலிமாவும் இறங்கிச் செல்வதைக் கவனித்தேன். நீலிமா என்னை பார்த்ததுபோலிருந்தது. நான் அவளைக் கவனிக்காதது போல் திரும்பிக்கொண்டேன். தென்னைமரத்தின் மேல்வட்டம் ஒரு மாட்டுவண்டிச்சக்கரம்போல் ஆரங்களுடன் தெரிய அதுவழியாக தெரிந்த வானச்சிதறல் ஒளிமங்கிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். பின்பு திரும்பிப்பார்த்தபோது மேனனின் வீடு இருட்டுக்குள் ஆழ்ந்து விட்டிருந்தது. இருட்டில் தொங்கிய நாலைந்து செம்பட்டுத்திரைச்சீலைகள் போல ஒளிபரவிய சன்னல்களும் வாசல்களும் தெரிந்தன.

நான் எழுந்து என் அறைக்குள் வந்து மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தேன். இந்த ஒருநாள்தான் நான் யாரென்பதை எனக்குக் காட்டும். என்னை பிறிதொருவர் வசியம் செய்ய முடியுமா என்று நானே அறியும் நாள் இது. இன்று கண்களைக்கும் வரை வேலைசெய்துவிட்டு தூங்குவேன். நாளை பகலில் விழித்திருப்பேன். இந்த இரவுச்சமூகம் ஒரு மலைச்சுனை. அதில் கால்நனைத்தாகிவிட்டது. அதன் ஆழம் நானறியாதது. போதும், இந்த அனுபவம் இங்கே முடிகிறது. ஆம், என் மன உறுதிக்கு நானே வைத்துக்கொள்ளும் சோதனை இது. எல்லா தேர்வுகளிலும் முதலில் வந்திருக்கிறேன். எத்தனையோ வணிக அரங்குகளில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அந்த மன திண்மை இப்போது என்னுடன் வரவேண்டும்.

நான் தொடர்ந்து வேலைசெய்தேன். கிட்டத்தட்ட தேங்கிவிட்டிருந்த எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன். ஆர்மோனிய ஒலி கேட்டது. மஜீதின் குரல் மெல்ல கரைந்து கரைந்து ஒலித்தது. அந்த அறையில் இப்போது கையில் ஒரு பிராந்தி கிண்ணத்துடன் மேனன் சோ·பாவில் சாய்ந்து அமர்ந்து அரைக்கண் செருகி கேட்டிருப்பார். ஏன் அதை நினைக்கிறேன். இல்லை, இது என் மனம் போடும் ஒருவேடம். நான் நீலிமாவைத்தான் நினைக்கிறேன். அவளுடைய அழகிய திறந்த தோள்கள் பளீரென என் கண்ணில் வந்து சென்றன. நான் என்னைஉலுக்கி வேலைக்குள் திணித்துக்கொண்டேன்

நள்ளிரவுக்குப் பின்னர் எழுந்து சோம்பல் முறித்து தண்ணீர் குடித்தேன். மணி ஒன்றரை. அவ்வளவு நேரம் விழித்திருந்தபோதிலும் களைப்பே தெரியவில்லை. தூக்கம் வருவதுபோலவும் இல்லை. என் பெட்டியைத் துழாவியபோது நான்கு மெலட்டொனின் மாத்திரைகள் கிடந்தன. விமானப்பயணங்களுக்காக நான் அவற்றை வைத்திருந்தேன். ஒன்றை பிய்த்து வாயில்போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தேன். தூக்க மாத்திரைகளின் முக்கியமான விஷயம் என்னவென்றால் நன்றாகத் தூங்கப்போகிறோம் என்ற எண்ணம் உருவாகும் என்பதே. மெத்தையில் படுத்துக்கொண்டு காலாட்டிக்கொண்டு தூக்கம் வருகிறதா என்று எண்ணிக்கொண்டே தூங்கிவிட்டேன்.

கனவுகளற்ற தூக்கம். ஆகவே தூங்கியதே தெரியவில்லை. ஒருகணம் போலத்தான் இருந்தது. விழித்துக்கொண்டபோது ஏஸியின் உறுமலைக் கேட்டேன். அதை கடலோசை என்று எண்ணியது என் மனம். கடற்கரையில் விண்மீன்கள் நடுங்கும் வானத்தின் கீழே நானும் நீலிமாவும் நின்றிருந்தோம். அவள் உடலின் இளம் வெம்மையை நான் உணர்ந்தேன். அவளுடைய குரல் தூத்தில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க நான் அவளிடம் யாரிடம் பேசுகிறாய் என்றேன். அவள் அருகே இல்லை என்பதை அப்போது உணர்ந்தேன். விழித்துக்கொண்டேன்.

என் மனம் நெகிழ்ந்து மென்மையாக இருந்தது. ஏதோ ஒருகணத்தில் நான் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிடுவேன் என்பது போல. எதற்காக அந்த துயரம்? தெரியவில்லை. ஆனால் நான் மிகவும் துயரமானவனாக, மிகப் பிரியத்திற்குரிய ஒன்றை இழந்தவனாக, திரும்ப அது கிடைக்கவே கிடைக்காது என்று அறிந்தவனாக என்னை உணர்ந்தேன். நான் எதை உணர்கிறேன் என்று இன்னொரு மூலையில் என் தர்க்கம் அலைபாய்ந்து பின்பு பற்றிக்கொண்டது. இப்போது வெளியே விடிந்திருக்கும். வானத்தில் இருந்து கண்களை கூசச்செய்யும் ஒளி பரவி ஒவ்வொன்றும் அதன் மாயத்தன்மையை இழந்து மண்ணோடு மண்ணாக ஒட்டி வெளிறி கூசி அழுக்காகி கிடக்கும். அந்த உலகில்தான் நான் இறங்கிச் செல்லவேண்டும். அந்த காட்சிகளைத்தான் நான் என் மனமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.

இரவை நான் இழந்து விட்டேன். இந்த இரவு முழுக்க அருகே, என் கையெட்டும் தூரத்தில், பேரழகுடன் அவள் எனக்காக காத்திருந்தாள். சிவந்த நெய்விளக்கு வெளிச்சம். ஒளியை ரகசியப் புன்னகை போல வெளியிடும் கண்ணாடிப்பாத்திரங்கள். ஒளியை செம்முத்தாக வைத்திருக்கும் கதவின் குமிழ்கள். பொன்னாக உருமாற்றமடைந்துவிட்ட வெண்கலப்பாத்திரங்கள். உயிர்ச்சருமத்தின் மென்மையை அடைந்து சிலிர்த்துக்கொள்ளும் வார்னீஷ் மரப்பரப்புகள். நான் சட்டென்று ஒரு மெல்லிய விசும்பலை வெளியிட்டுவிட்டேன். உடனே என்ன இது அபத்தமாக என்று என்னை கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்தேன்.

டம்ளரை வைத்தபோது கதவைத் திறந்து பார்த்தாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. விடிந்திருக்க வாய்ப்பில்லை. சன்னலைத்திறந்து வெளியே பார்த்தேன். இருளுக்குள் தென்னை மரக்கூட்டங்கள் அசையாமல் நின்றன. மேனன் வீட்டுக்குள் இருந்து பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் கேட்டன. இரு கார்கள் நின்றன. மனம் அதிர நான் அவள் கார் இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது. என் மனதின் அறைதலை என்னாலேயே கேட்கமுடிந்தது. நான் வார்ட்ரோபை திறந்து சட்டையையும் பாண்டையும் மாட்டிக்கொண்டு கீழே பாய்ந்து கதவைத்திறந்து வெளியே பாய்ந்து மேனன் வீட்டை அடைந்து  வாசலை மூச்சிரைக்க கடந்தேன்

[மேலும்]

முந்தைய கட்டுரைகாமன் வுமன்
அடுத்த கட்டுரைவிமரிசகனின் தடுமாற்றங்கள்