”ஏன் சார்?’”

அந்தக்கால அலுவலக நண்பர் ஒருவரை மீண்டும் ரயில் நிலையத்தில் பார்த்தேன். அவரைப்பற்றி ஒரு நல்ல நகைச்சுவை எழுதியிருக்கிறேன். நல்ல மனிதர். அதாவது என்று தமிழ்ப்பண்பாட்டால் சொல்லப்படுபவர். அல்லது நல்ல மனிதரே தானோ? எனக்குத்தான் ஏதாவது பிரச்சினையோ?

அவரது சுருக்கமான வாழ்க்கையை அவரே ஒருமுறை சொன்னார் “நான் யாரு வம்புக்கும் போறதில்லை சார். நாம உண்டு நம்ம வாழ்க்கை உண்டு. காலம்பற பாத்தீங்கன்னா ஒரு ஆறுமணிக்கு எந்திக்கிறது சார். நேரா போயி முக்குக்கடை கோலப்பன் கிட்ட ஒறைப்பாலு வாங்கிட்டு வருவேன். அவ காப்பிய போடுற நேரத்தில பேப்பர வாசிக்கிறது. பேப்பரில என்ன போடுதான். கொலை கொள்ளை இல்லேன்னா ஊழல். என்னத்த வாசிக்கிறது? சும்மா அபடியே பாத்துட்டு போறதுதான்”

“அந்தால காப்பியக்குடிச்சாச்சுன்னு சொன்னா பைக்க களுவிடுவேன். பைக்க அதிகமா எடுக்கிறதில்ல. ஏன்னா என்னா வெல விக்குது பெட்ரோலு. ஆனா காசு குடுத்து வாங்கின முதலுல்லா? அதனால களுவிடுறது. டெய்லி.நல்லா களுவி துடைச்சு வச்சா வீட்டு முன்னாடி ஒரு கெத்தா நிக்கும் பாத்துக்கிடுங்க. பொறவு பல்லு தேச்சு சேவிங் பண்ணி குளிச்சு வாறப்ப எட்டர. காலம்பற டிபன் எட்டரைக்கு ஆயிடும் பாத்துக்கிடுங்க. நாம ஒண்ணும் விதவிதமா திங்கிறதில்ல. தெனமும் இட்லிதான். இட்லி உடம்புக்கு நல்லது. தோசைன்னா எண்ணையில்லா? எண்ணை என்னா வெலை விக்குது?’

”அந்தால பதிமூணு சியிலே ஏறியாச்சுண்ணு சொன்னா ஒம்பதரைக்கு ஆபீஸ் வந்திருவேன். பைய வச்சுகிட்டு ஒம்பது அம்பதுக்கு செரியா சீட்டில் ஒக்காந்திருவேன். நம்மள ஒருத்தன் ஏன் லேட்டுன்னு கேட்டிரப்பிடாது பாத்தியளா? அட்டெண்டன்ஸ் கையெளுத்துபோட்டா வேலைய ஆரம்பிச்சிருவேன். பதினொண்ணுக்கு ஒரு டீ. போயி குடிக்கிறது. பத்து நிமிசம்தான். எங்கியும் நிக்கிறதில்ல. நமக்கு என்னத்துக்கு சார் வம்பு வளக்கும்? நான் தல நிமுந்து பாக்க மாட்டேன். ஆருகிட்ட வேணுமானாலும் கேட்டுப்பாருங்க”

“வேலை முடிஞ்சாச்சுன்னு சொன்னா இன்டூல எளுத்துக்கணக்கு போட்டுபாக்கிறது. மத்தியான்னம் சோறு கொண்டுவந்திருவேன். சாம்பார் புளிச்சிரும்லா? ரெசம் சோறு இல்லென்னா தயிர்சோரு. செலசமயம் உளுந்தங்களி. சாப்பிட்டா அந்தால ஒரு தூக்கம்… யூனியன் மயிரு மட்டைன்னு கண்டத கடியத பேசிட்டு கெடப்பானுக. நமக்கு எதுக்குசார்? கண்ணமூடினா காதும் மூடிரும்லா? ஒண்ணு அம்பதுக்கு மேலே போயி ஒக்காந்திருவேன். மூணரைக்கு ஒரு டீ. சீட்டுக்கே கொண்டாந்து குடுப்பான்”

“அஞ்சரைக்கு எந்திரிச்சா நேராட்டு பஸ்ஸுக்கு போயிருவேன். ஆறரைக்கு வீட்டில இருப்பேன்லா? கொஞ்சம்போல டிவிய பாக்கிறதுண்டு. கொஞ்சம் பாட்டு. நூஸ்ல சண்டை போடுதானுகள்லா? அதை பாப்பேன். தாயளிங்க என்ன மாதிரி சண்டை போடுதானுகங்கிறீய? எதுக்காச்சுட்டி அம்பிடு சண்டை போடுதானுகன்னு ஒருமாதிரி மனசிலாக்கி வாறதுக்குள்ள அரமணிக்கூர் ஆயிரும். அதுக்குள்ள புரோக்ராம் முடிஞ்சிரும். நாலஞ்சு பளைய பாட்டுகளப் பாத்தா இவ சாப்பிடுங்கன்னு சொல்லுவா. நான் ராத்திரி சப்பாத்தியாக்கும் ரெகுலரா சாப்பிடுகது. ஒரு டம்ளர் பாலு. கால்சியம் வேணும்லா?”

“பத்து மணிக்கு தூங்கிருவேன் சார். ஒண்ணும் நெனைக்கிறதில்ல. நமக்கு மனசு சுத்தம். அதனால படுத்தா அந்தால தூக்கம்தான். இடி விளுந்தா கேக்காது. அந்தமாதிரி. இப்டியே போவுது. பத்திருபது வருசமாட்டு இதான் ரெகுலர். லீவு போடுகதே இல்ல. ஞாயித்துக்கெளம ஆனால் காலம்பற எட்டுமணிவரைக்கும் உறங்கீருவேன். எந்திரிச்சு சிக்கன் வாங்கிக்கொண்டுவந்து குடுத்துட்டு வாரமலர் வாசிச்சு முடிச்சு டிவியில என்னமாம் பாக்கிறது. பொட்டக்களுதக குண்டியக் குண்டிய ஆட்டுதாளுகள்லா? செரி பாத்து வைப்பம். அவனுக காட்டுதத்தானே நாம பாக்க முடியும்?”

“பின்ன மதியான்னம் சோத்தத் தின்னுட்டு ஒரு ஒறக்கம். சாயங்காலம் எந்திரிச்சு குளிச்சு ஒரு டீயக் குடிச்சுட்டு ஒரு சினிமா. டிவியிலதான் சார். சினிமா தியேட்டருக்கெல்லாம் ஆரு போறது. பணம்லா புடுங்குதானுக. கேடிப்பயக்க வந்து கெட்டவார்த்த சொல்லுதானுக. நமக்கு செரிவராது. நம்ம பொஞ்சாதிக்க தம்பி டிவிடி கொண்டாந்து குடுப்பான். தமிள் சினிமா இருக்கும். என்னத்த சினிமா? அடிபிடியும் டான்ஸும். ஒரு கதை உண்டா? பாசமலர் மாதிரி படம்லாம் இப்ப இல்ல சார். செரி கெடக்கட்டுன்னு அதையும் பாத்து வைக்கியது”

“ராத்திரி பத்துமணியானா நம்ம கண்ணு சுத்தீரும் பாத்துக்கிடுங்க. ரெகுலர் லைப் சார். எதிலயும் ஒரு சிட்டவட்டம் வேணும்லா? நான்லாம் கடிகாரம் மாதிரியாக்கும். அப்டி ஒரு லைஃபு…ஒரு வம்பு தும்புக்கு போறதில்ல. நமக்கு என்ன சார்? ஒண்ணையுமே கண்டுக்கிடறதில்ல… அப்டியே போய்ட்டிருக்கு. ஏன் சார்?’

இதை அவர் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சொல்வார். சொல்லி முடித்ததுமே “ஏன்சார் நம்ம டியே மெர்ஜர் பத்தி என்னமாம் நூஸ் உண்டா? மத்தவன் ஏப்ரல் மாசத்திலே இன்கிரிமெண்ட் வரும்கியானே?’ என்பார்.

ரயில்நிலையத்தில் நான் கொஞ்சம் பீதியானேன். ஆனால் ஓர் ஆறுதல். ஓய்வுபெற்றுவிட்டார். ஆகவே கடிகார வாழ்க்கையில் இருந்து விலகியிருப்பார். வேறு ஏதாவது சொல்வார்.

அணுகி வந்து “சார் நீங்களா? உங்க சினிமாவ டிவிடியில பாத்தேன். அவன் பேரு என்ன சார்? அவன் மத்த ராதாவுக்க மகன்லா?” என்று கேட்டு “ஓ…அந்தக் குட்டியாக்கும் ராதாவுக்க மவ இல்ல? அப்ப மத்தவன் ஆருக்க மகன்?’ என்று தெளிவடைந்தபின் “இப்டியே போவுதுசார். நாம ஒரு வம்புதும்புக்கும் போறதில்ல…. நாம உண்டு நம்ம சோலி உண்டுன்னு கெடக்கோம். காலம்பற பாத்தீங்கன்னா செரியா ஆறு மணிக்கு– ” என்று ஆரம்பித்தார்

ஞானக்கூத்தனை “தெய்வமே!” என்று நினைத்துக்கொள்ளும் கணங்கள்!

scan0005

குப்பைத் துணை

ஞானக்கூத்தன்

அவருடன் காகிதக் குப்பைச் சுருளொன்று
அவருக் கிணையாய் விரைந்து வந்தது
அவரால் அழைத்து வரப்படுவதைப் போல்

அன்னார் என்னைக் கடந்து சென்றார்

அதுவும் அவரைத் தொடர்ந்து சென்றது
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி.

***

ஞானக்கூத்தன் கவிதைகள்

மற்ற கட்டுரைகள்

கருமம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57
அடுத்த கட்டுரைஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.