ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.

PQAAAICMka1F_3xrMiT4OL9aj4GRIhoDvF7vQ5lbY-U2GSm38ZOx1wE8k4G5yP4uKVoc1pBhMAVw0PSmmVNLgv2lyPkAm1T1UN_p41eaRmZXR7y1wVYnQp5JldV6

பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்ற கட்டுரைக்கு என்னென்ன எதிர்வினைகள் வருமென எண்ணினேனோ அவையே வந்தன. கிட்டத்தட்ட நாநூறு கடிதங்களில் கணிசமானவற்றில் செருப்பாலடிப்பது, வாரியலால் அடிப்பது,மலத்தில் முக்கி அடிப்பது போன்ற வரிகள் இருந்தன. ‘செப்பல் அடி’ என்ற சொல் எனக்கு உண்மையில் புரியவில்லை. நான் செப்பலோசை கொண்ட செய்யுளின் ஒரு வரி என்றே ஆரம்பத்தில் புரிந்துகொண்டேன்

இவற்றைச் சொல்லும் இளையதலைமுறையினரின் உள்ளம் எத்தனை கரிபடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. இவை அனைத்துமே தீட்டு உருவாக்கும் பொருட்கள். ஒருவனை சாதி ரீதியாக அவமதிக்க, அதாவது தலித்துக்கு நிகராக எண்ணுகிறேன் என்று காட்ட அக்காலத்தில் கையாளப்பட்ட வழிகள் இவை. இன்றும் இவர்கள் ஆழ்மனதை இவையே ஆள்கின்றன என்றால் என்ன சொல்ல. இவர்களின் வீட்டுக்குள் இப்படித்தான் பேசிக் கேட்டு இளமையிலேயே வளர்கிறார்கள். இவற்றில் உள்ள சாதிய இழிவுபடுத்தலை அறியுமளவுக்கு அடிப்படை வாசிப்போ பண்பாட்டுப் பயிற்சியோ கிடைப்பதுமில்லை.

ஒரேநாளில் அனைத்து எதிர்வினைகளையும் தொகுத்து வாசித்து என் எதிர்வினையைச் சொல்லி முடிக்க விழைகிறேன். [ஆகவே கடிதங்களை பிரசுரிக்கவில்லை,மன்னிக்கவும்] பெரும்பாலான எதிர்வினைகள் ஏதேனும் ஒருபகுதியை எடுத்துக்கொண்டு திரிபுபடுத்துவது, கிண்டல் செய்வது, வசைபாடுவது என்ற வகையிலேயே இருந்தன. அதாவது நீ என்ன சொன்னாலும் நான் நீ சொன்னதற்கு இப்படித்தான் பொருள்கொள்வேன் என்ற வகை எழுத்துக்கள்.

விதவிதமான மயிர்பிளக்கும் விவாதங்கள் வழியாக என் கட்டுரை நேரடியாக எழுப்பும் அப்பட்டமான வினாக்களை கடந்துசெல்லும் முயற்சிகள் சில இருந்தன. உதாரணம் ராஜன் குறை. நான் அவரை எப்போதுமே பொருட்படுத்தத்தக்க ஒரு வாசகர் அல்லது எழுத்தாளர் என எண்ணியதில்லை. அடிப்படை நேர்மையற்ற வாதவிளையாட்டுக்கள் அவரது எழுத்துக்கள். உதிரி மேற்கோள்களுக்கு அப்பால் எதையும் புரிந்துகொள்ளும் திராணியும் அவரிடமில்லை.அவரிடம் “சார் நீங்க தகுதியான பிராமணர். பெரியாரியப் பிராமணர் ஆனதனால் இன்னும் ஒருபடி மேலான பிராமணர். ஒத்துக்கறேன்,ஜாலியா இருங்க” என்று மட்டும் சொல்லவிழைகிறேன்.

எனக்கு வருத்தமாக இருந்தது ஒன்றே. என் கட்டுரையின் மையம் என்பது சாதியமைப்பு பற்றிய இன்று ஓரளவு சிந்திக்கும் அத்தனை பேரும் ஏற்றுக்கொண்ட கருதுகோளை முன்வைத்து எழுப்பப்பட்ட ஆதாரமான வினா. அதாவது சாதியமைப்பு என்பது நேற்றைய பழங்குடி இனக்குழு வாழ்க்கையில் இருந்து உருவாகி வந்தது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் படிநிலைப்படுத்தப்பட்டது. அதன் லாபங்களை அனுபவித்து அதை தக்கவைத்த அத்தனை பேருமே அந்த குற்றத்தில் பங்கெடுத்தவர்களே. இன்று அதை தக்கவைத்திருப்பவர்களும் குற்றவாளிகளே. அதில் பிராமணர்கள் உண்டு. நிலவுடைமைச் சாதிகளும் வணிகச்சாதிகளும் உண்டு.

அப்படி இருக்க பிராமணர்களை மட்டும் அதற்கு முழுப்பொறுப்பாக்கி அவர்களைப் பழித்தும் இழித்தும் பேசுவதும் தன் சொந்த சாதிமேல் சிறு விமர்சனம் கூட இல்லாமலிருப்பதும் அடித்தள மக்களை இன்று நேரடியாக ஒடுக்கும் தன் சாதியை பாதிக்கப்பட்ட சாதியாக சித்தரித்துக்கொள்வதும் பெரும் மோசடி. பிராமணரல்லா உயர்சாதியினர், இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவ்ர்கள் இந்த கேள்வியை மனசாட்சியுடன் கேட்டுக்கொள்ளவேண்டும் – இதுவே என் முதன்மைக்கேள்வி

ஒரு கட்டுரைகூட அதை எதிர்கொள்ளவில்லை. மிகச் சாமர்த்தியமாக வெவ்வேறு கோணங்களில் அதைத்தவிர்த்து சொல்லாட்டமிடுகிறார்கள். ஒருமுறை கூட பேச்சுக்குக் கூட அதை கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.ஒப்புக்குக் கூட எவரும் ஆமாம், இடைநிலைச்சாதியிடமும் சாதியம் இருக்கிறது, கண்டிக்கிறோம் மாற்ற முயல்கிறோம், குற்றவுணர்வு கொள்கிறோம் என்று சொல்லவில்லை. எந்த அளவுக்குச் சாதிவெறியால் இறுகிய மனங்கள் இங்கே முற்போக்கு என்ற பேரில் பிராமண எதிர்ப்பு பேசுகின்றன என்பதற்கு இதுவே ஆதாரம்.இதைமட்டும் இங்கே, எதிர்காலத்துக்காக, பதிவுசெய்ய விரும்புகிறேன்.

தலித்துக்களையும் பிராமணர்களையும் ஒப்பிடுகிறேன் என்று ஒரு குற்றச்சாட்டு. கேலிதானே செய்கிறோம் அது பெரிய தப்பா என்று இன்னொரு தரப்பு.அதன் அர்த்தம் இதுதான். “அவன நாங்க ஆயிரம் வருசமா அடிக்கிறோமே, சும்மாதானே இருக்கான். இவன் என்ன அம்பது வருசமா அடிக்கிறதுக்குப்போயி இந்தக்கூச்சல் போடுறான். ரெண்டும் ஒண்ணா? ஒருமரியாதை வேணாமா?”

எந்த நிலையிலும் ஒரு மக்கள்குழுவை வெறுக்க, அவமதிக்க முனையலாகாது. அது எவராக இருந்தாலும். அதையே மீண்டும் சொல்லவிழைகிறேன்.

மிகச்சில கடிதங்கள் நேர்மையாக ஒரு வினாவைக் கேட்டன. எழுந்து வரும் இடைநிலைச் சாதிக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

என் கட்டுரை பிராமணர்களுக்காகப் பேசவில்லை. அவர்களின் அத்தனை பலவீனங்களையும் சிக்கல்களையும் பட்டியலிட்டுச் சொல்லிச் செல்லும் அக்கட்டுரை நான் உட்பட உள்ள பிராமணரல்லாத சாதியினரை நோக்கிப் பேசுகிறது

அக்கட்டுரையின் முடிவில் யோகசிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நாராயணகுருவின் படம் அதையே சுட்டுகிறது. அவர் சொன்னதை மட்டுமே சொல்ல விழைகிறேன். அக்கட்டுரையிலேயே அதுதான் உள்ளது

எந்நிலையிலும் எம்மனிதரையும் இழிவுசெய்யாத பெருந்தன்மை,அறிவார்ந்த அதிகாரத்தை வென்றெடுக்கும் நேர்நிலையான பேருழைப்பு, மேலான சகவாழ்க்கையை நோக்கிச் செல்லும் கனவு.

பிராமணக் காழ்ப்பை உதறும்படி சொல்வது அழுத்தமான உண்மையான பிராமணிய எதிர்ப்பு நிகழட்டும் என்பதற்காகவே. கொள்கை அளவில். கருத்தியல் தளத்தில்.

தன்னம்பிக்கை, அதிலிருந்து வரும் பெருந்தன்மை, அறிவார்ந்த சமநிலை ஆகியவையே வெற்றிக்கான உண்மையான வழிகள். கூடிக்கூச்சலிட்டு பிறரை இழிவுபடுத்துகையில் நம்மை நாமே மேலும் இழிவுபடுத்திக் கொள்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரை”ஏன் சார்?’”
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58