«

»


Print this Post

விவாதங்களின் எல்லை…


அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தில் நீங்கள் ஆன்மீகம் போலி ஆன்மீகம் என்ற தலைப்பிலே எழுதிய கட்டுரைகளைப்பற்றி எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவை விவாதத்துக்கு அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். கட்டுரைகளின் முடிவில் எழுதிய குறிப்பும் அதை மீண்டும் சொல்லியிருந்தீர்கள். இது குழப்பம் அளிக்கிறது. எல்லாவற்றையும் விவாதித்துதான் நீங்களே வந்திருப்பீர்கள். இப்போது விவாதிக்கக்கூடாது கேட்டுக்கொண்டு போ என்று சொல்வது போல் உள்ளது. இது சரியா என்று சந்தேகமாக இருக்கிறது. அந்தக் கட்டுரைகளில் உள்ள விஷயங்களை விவாதிக்கவில்லை. ஆனால் ஏன் விவாதிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் என்று மட்டுமாவது சொல்லலாம் இல்லையா?
செல்வராஜன்

அன்புள்ள செவ்லராஜன்,

இந்த விஷயத்தை நீட்டிக்கொண்டுசெல்லவேண்டாமென எண்ணினாலும் மீண்டும் இதேபோன்ற பல கேள்விகள் எழுவதனால் இந்தப் பதில். இணையதளத்தில் பின்னூட்டம்பகுதியில் எழுதப்பட்டவற்றுக்கும் சேர்த்துத்தான். இது தனிப்பட்ட முறையில் எவரையும் விமரிசனம் செய்வதல்ல என்று சொல்ல விழைகிறேன்.

நித்ய சைதன்ய யதி 

நான் நித்ய சைதன்ய யதி  உட்பட அனைவரிடமும் கடுமையாக விவாதித்து வளர்ந்தவன் என்பதை எப்போதுமே சொல்லியிருக்கிறேன். நித்யாவே என்னை ‘சந்தேகத் தாமஸ்’ என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் விவாதிக்கக்கூடிய விஷயங்கள் விவாதிக்க முடியாத விஷயங்கள் என இருவகை உண்டு. அந்த வேறுபாடும் நித்யா வழியாகவே தெரிந்தது.

ஒருநாள் நித்ய சைதன்ய யதி ஒரு மாணவருக்கு Self Realization  குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். சில சொற்கள்தான். வழக்கம்போல நான் உடனே ‘அப்படியென்றால் என்ன? இவருக்கு இதுவரை இவர் யாரென்று தெரியாதா?’ என்று கேட்டேன். நித்ய சைதன்ய யதி சிரித்துக்கொண்டு ‘சரி நீ யார்?’ என்றார் ‘ஜெயமோகன்’ என்றேன். ‘சரி அப்புறம்?’ ‘எழுத்தாளன். மனிதன்’ என்றேன். வேடிக்கையாகச் சிரித்தபடி ‘சரியாகச் சொன்னாய். உனக்கு இனி Self realization தேவையே இல்லை. நன்றாக தெரிந்திருக்கிறது. இவருக்குத்தான் குழப்பம், பாவம்’ என்று சொல்லிவிட்டார்.

பல வருடங்கள் கழித்து அந்த நிகழ்ச்சியை நினைவில் மீட்டிய போது நித்ய சைதன்ய யதி என் அறியாமையை எதிர்கொண்ட விதம் ஆச்சரியமளித்தது. அவர் என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது எனக்கு கொஞ்சம்கூட தெரியாத ஒன்று. என் அறிதலின் தளத்திலேயே அது இல்லை. ஆனால் நான் பாய்ந்து விவாதிக்கச் சென்றேன்.  அப்போது என்னை அவர் சமாளிப்பதற்கான ஒரே வழி மென்மையாக தவிர்த்துவிடுவது மட்டும்தான்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் நித்ய சைதன்ய யதி வேடிக்கையாகப் பேச்சை மாற்றி விவாதத்தை முழுமையாகத் தவிர்த்துவிடுவார். ஒரு இளம் துறவி இன்னொரு மடத்திலிருந்து வந்திருந்தார். ஏகப்பட்ட நூல்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். நித்ய சைத்ன்ய யதி ”அறியபப்டும் எதிலும் நம்முடைய ஓரு அம்சம் சென்று படிகிறது. அதையே நாம் அறிகிறோம்” என்று சொற்பொழிவில் சொன்னபோது  அவர் ”இல்லை குரு, அறிபடு பொருளில் சென்று படிவது நம் ஆத்மா அல்ல. அகங்காரம்தான். அதை ரங்கநாதானந்தா சொல்கிறார்” என்றார்

நித்ய சைதன்ய யதி படு சிரியஸாக ”இருக்கலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மெட்டீரியல் அல்லவா? உதாரணமாக கண்ணாடி எதனுடனும் வேதிவினை புரிவதில்லை” என்று சொல்லிவிட்டு மேலே பேச ஆரம்பித்தார். நான் கைகளுக்குள் வாயைப்பொத்தி புன்னகைசெய்தேன்.

Self Realization குறித்த பேச்சின் என்னை தவிர்த்த அன்று மாலையே வேதாந்த வகுப்பில் நான் ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற கருதுகோளைப்பற்றி அவரிடம் முரண்பட்டு கேட்க எனக்காக விரிவாக விவாதித்தார் நித்ய சைதன்ய யதி. அந்த விவாதம் அதற்கு மறுநாள் காலைநடையிலும் மதியத்திலும் நீடித்தது. அவரிடம் நான் நடத்திய உரையாடலில் [காலச்சுவடு இதழில் வெளியானது. ‘இலக்கிய உரையாடல்கள்’ [எனி இண்டியன்] என்ற தொகுதியில் அது உள்ளது] அந்த விவாதத்தின் சுருக்கம் உள்ளது.  உண்மை, நன்மை, அழகு மூன்றும் ஒன்றாகவே இருக்கமுடியும் என்பதை நான் மறுத்து வாதாடியிருந்தேன். அவர் அதற்கான விளக்கத்தை அளித்தார்.

 

நித்ய சைதன்ய யதி

அதாவது ஒரு விஷயம் பொதுவாக விவாதிக்கப்படுகிறது, இன்னொன்று விவாதிக்கப்படவில்லை. ஏன்? விவாதிக்கப்பட்ட விஷயத்தில் புறவயமான ஓரு தளம் உள்ளது. அந்த புறவயமான தளத்தைவைத்தே விவாதம் நடக்க முடிகிறது. எந்த ஒரு விஷயத்தையும் தத்துவமாக குறுக்க முடிந்தால் அது பொது விவாதத்திற்குரியதுதான். தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளிலும் உள்ள அடிப்படையான தர்க்கங்களின் தொகுதி. எது தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அதை தத்துவமாக குறுக்கலாம்.

உண்மை நன்மை அழகு மூன்றுமே ஒன்றின் மூன்று பரிமாணங்கள் மட்டும்தானா என்ற கேள்வியை அடிப்படையான ஒரு தத்துவத் தருக்கமாக ஆக்கிக்கொள்ளலாம். அதை ஓவ்வொருவரும் தன் வாழ்க்கையை வைத்து விவாதிக்கலாம். சாத்தியமான தளத்தில் முடிந்தவரை முரண்பட்டு விவாதிப்பது மேலும் மேலும் கூர்மையான புரிதலை உருவாக்கும்.  தத்துவம் என்பதே விவாதம் மூலம் மட்டுமே தொடர்புறுத்தக்கூடிய ஒரு துறை. சாராம்சத்தில் தத்துவமாக ஆகக்கூடிய எந்த அறிவுத்துறையும் அப்படியே.

முதல் விஷயத்தில் எது விவாதத்திற்கு அப்பால் உள்ளது? நித்ய சைதன்ய யதி பேசிக்கொண்டிருந்த அந்த தளம் என் அறிதல்வட்டத்திலேயே இல்லை. அது என்னவென்றே எனக்கு தெரியாது. அதாவது அங்கே புறவயமான பகுதியே இல்லை. பேசிக்கொண்டிருந்த இருவரும் பகிர்ந்துகொண்டிருந்த மிக அந்தரங்கமான ஒர் அறிதல் அது. என்னவென்று தெரியாமலேயே நான் மறுத்துப்பேச ஆரம்பித்துவிட்டேன்.

‘நான் யார்” என்ற கேள்விக்கு ‘நான் இது அல்ல, இதுவும் அல்ல’ என்று ஒவ்வொன்றாக நிராகரித்துக்கொண்டே சென்று ‘அப்படியானால்?’ என்ற கேள்விமுன் திகைத்து நின்றுவிட்ட பிறகுதான் நான் அந்த மாணவர் உணர்ந்த அந்தரங்கமான அந்த தவிப்பை அடையாளம் காணமுடியும். அதன் பின்னரே Self realization என்ற சொல்லை என்னால் புரிந்துகொள்ள முடியும். அந்தப்புரிதல் இல்லாமல் அவரிடம் நான் விவாதிக்கச் சென்றால் வெறும் சொற்களே விரயமாகும்.

ஒரு விவாதம் நிகழ வேண்டுமென்றால் விவாதிக்கும் இரு தரப்பினருக்கும் நடுவே பிரமாணங்கள் பொதுவானவையாக இருக்க வேண்டும் என்று நம் மரபு சொல்கிறது. பிரத்யட்சம், அனுமானம், சுருதி என்ற மூன்று பிரமாணங்கள். பிரமாணங்கள் என்றால் அறிவடிப்படைகள். நேர்க்காட்சி, ஊகம், முன்னறிவு என தமிழில் சொல்லலாம்

நான் புலன்கள் மூலம் அறிவதையே நீங்களும் அறியவேண்டும். நான் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எந்த அடிப்படையில் ஊகங்களை நிகழ்த்துகிறேனோ அந்த அடிப்படையை நீங்களும் ஏற்றாக வேண்டும். நான் அதுவரையிலான  அறிதலாக எவற்றை கொண்டிருக்கிறேனோ அவற்றை ஓரளவேனும் நீங்களும் கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் விவாதிக்க முடியாது

நான் மேலே சொன்ன முதல் உதாரணத்தில் Self realization என்று நித்ய சைதன்ய யதி சொன்ன சொல்லுக்கு அவர் உத்தேசித்தது அல்ல நான் உத்தேசிப்பது. அவர் உத்தேசித்த அந்த அனுபவம் நான் முற்றிலும் அறியாத ஒன்று. ஆக முதல் அறிவடிப்படையே பொருந்தவில்லை. விவாதிக்க முகாந்தரமே இல்லை. ஆகவே தான் அவர் தவிர்த்துவிட்டார்.

அங்கே நான் செய்வதற்கொன்றே இருந்தது. அந்த உரையாடலைக் கூர்ந்து கவனித்து அந்த அனுபவமண்டலத்திற்குள் நுழைய முடியுமா என்று பார்ப்பது. அல்லது அதை முழுக்க நிராகரித்துவிட்டு என் இடத்திலேயே இருந்துகொள்வது. என் இளமையின் காரணமாக நான் இரண்டாவதையே செய்தேன். அந்த அனுபவத்திற்கு நான் சென்று சேர மேலும் சிலவருடங்களாகியது.

இதுதான் விவாதத்தின் எல்லை. பெரும்பாலான ஆன்மீக அனுபவங்கள் அகவயமானவை. அவற்றை புறவயமாக விவாதிக்க முடியாது. ஏன் ஆன்மீகம் என்று செல்லவேண்டும். ஒரு கதையை நான் எப்படி உள்வாங்கி எழுதினேன் என்று நான் விவரிக்கிறேன் என்றிருக்கட்டும். நீங்கள் என்னிடம் விவாதிக்கமுடியுமா என்ன? அது என் சொந்த அனுபவம் அல்லவா?

நீங்கள் செய்வதற்கு ஒன்றே உள்ளது. ஒன்று, நீங்கள் அதைக்கூர்ந்து கவனித்து நான் சொல்லும் அனுபவத்திற்குள் நுழைய முயலலாம். அல்லது அதை நிராகரித்துவிடலாம். அதேபோன்றதே ஆன்மீக அனுபவமும். 

இவ்வாறு ஆன்மீக அனுபவம் அந்தரங்கமானதாக இருப்பதனால் அது மூடநம்பிக்கையாக இருந்தாலும்கூட அதை விவாதிக்கமுடியாதுதான்.  ஆன்மீகமான நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் ஒருபோதும் பேசி மாற்ற முடியாது.ஆகவே விவாதிப்பதில் பொருளில்லை.

ஏன்? இரண்டுமே இரண்டு தளங்கள் என்பதனால்தான். ஒன்று அனுபவம், இன்னொன்று கருத்து. நீங்கள் வாழ்ந்தடைந்த அனுபவம் ஒன்றை இன்னொருவர் மறுத்து வாதிட்டால் மாற்றிக்கொள்வீர்களா என்ன? தவறோ சரியோ ஏதோ ஓர் அனுபவம் வழியாகவே ஆன்மீகமான எண்ணங்களை மனிதர்கள் வந்தடைகிறார்கள். வேறு ஓர் அனுபவம் மட்டுமே அதை மாற்றும். அதாவது ஆன்மீகம் அனுபவம் மூலமே கைமாறப்பட முடியும். சொற்கள் மூலம் அல்ல.

அப்படியானால் எதற்காகச் சொற்கள்? அனுபவங்களை விளங்கிக்கொள்ள, விரித்துக்கொள்ள தேவையான ஓர் அடிப்படையை சொற்கள் அளிக்க முடியும். சொற்களில் உள்ள தர்க்கம் அல்ல. இங்கே தர்க்கத்துக்கு இடமே இல்லை. அச்சொற்கள் மூலம் முன்வைக்கப்படும் அனுபவ தளத்தை ஒருவர் தன் நுண்ணுணர்வால் அடைந்தாரென்றால் அவருக்கு அது ஒரு திறப்பாக அமையும்.

அதாவது இங்கே சொற்கள் ஒரு புறவயமான தர்க்கமாக உங்களை நோக்கி வரவில்லை. ஒரு மனிதனின் அந்தரங்கமான அறிதலை சுமந்து வருகின்றன. அந்த மனிதனை நோக்கி நீங்கள் வருவதற்கான ஒரு வழி. அவனது அனுபவதளத்தையும்  உங்கள் அனுபவதளத்துடன் சேர்த்துக்கொள்வதற்கான ஒரு உத்தி. அவ்வளவுதான்.

இந்நிலையில் அச்சொற்களை மறுத்து வாதாடப்புகுந்தால் அந்த அனுபவதளத்தை நிராகரித்துவிடுகிறீர்கள். அதை நோக்கி உங்கள் தர்க்கத்தை முன்வைக்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே நின்றுகொண்டிருக்கும் அனுபவதளத்திற்கு அதை இழுத்துச் செல்கிறீர்கள். அகவயமான அனுபவங்களைப் பற்றி விவாதிப்பதென்பது விவாதிப்பவர் இருவரும் சம்பந்தமில்லாத இரு திசைகளை நோக்கி பேசிக்கொண்டிருப்பதாகவே முடியும்.

என்னுடைய இணைய தளத்தில் எல்லாவற்றையும் விவாதிக்கவே முன்வைக்கிறேன். விவாதிக்கவே அழைக்கிறேன். ஆனால் அத்தகைய விவாதம் மூலம் இந்த குறிப்பிட்டக் கட்டுரைகளை எதிர்கொள்ள முயன்றால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதே என்னுடைய முன்னெச்சரிக்கை. அந்த கருத்துக்களுக்குப் பின்னால் என் அனுபவ மண்டலம் உள்ளது. அங்கே வந்துசேரும் சிலருக்கு மட்டுமே அது உதவும்.

உதாரணம் சொல்கிறேன். இந்த பின்னூட்டங்களில் இணைய நண்பர் சந்திரமோகன் [சந்தனார்] ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். ‘நித்யானந்தரை [காஞ்ஞாங்காடு] ஒரு நல்ல மனிதராக கொண்டால் போதும், ஏன் ஞானியாக எண்ணவேண்டும், கடவுளுக்கும் நமக்கும் நடுவே மனிதர்கள் எதற்கு?’ என்கிறார்.

இந்த மொத்தக்கட்டுரைகளே அவரது கேள்விக்கான பதில்களும் விளக்கங்களும்தான். ஆனால் அந்தக் கட்டுரைகளுக்குப் பின்னர் அந்தக் கேள்வியை அபாரமான நம்பிக்கையுடன் கேட்கிறார்.

இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருப்பனவற்றையே சுருக்கிச் சொல்கிறேன். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான இயக்கத்தின் நியதிகள் மானுடமனத்தை பேதலிக்கச் செய்கின்றன. வாழ்க்கை குறித்த மனிதனின் பதற்றம் அவ்வாறு உருவாவதே. எளிய மனம் அந்த பேரியக்கத்தை அறிய முடியாதென்பதனால் அந்த பிரம்மாண்டத்தின் முன் தன்னை ஒப்புக்கொடுத்து சரணடைகிறது. அதுவே கடவுள் கோட்பாடு. கடவுள் பக்தி பெரும்பாலான மதங்கள் முன்வைக்கும் வழி.

பௌத்த சமணமதங்களும், உயர்தளத்தில் இந்துமதமும் இணையான இன்னொரு வழியை முன்வைக்கின்றன. முதல் வழியில் நிறைவடையமுடியாத அறிவுத்தளம் கொண்டவர்களுக்காக. அந்த தளத்தில் உள்ள விடையே முக்தி அல்லது விடுதலை என்பது. இதற்கும் இறைவனுக்கும் சம்பந்தமில்லை. இந்த பிரபஞ்சப்பேரியக்கத்தை முமையாக உணர்ந்துகொள்வதன் மூலம் அது உருவாக்கும் பதற்றத்தையும் துயரையும் வெல்வதே வீடுபேறு அல்லது நிர்வாணம் அல்லது மோட்சம்.

இந்த தளத்தில் பக்திக்குப் பதிலாக கூரிய ஞானத்தேடல்தான் தேவையாகிறது. சமரசமில்லாத சலியாத தேடல். அதற்கு நம்மை அறிந்து நமக்கு வழிகாட்டும் குருநாதர்கள் இன்றியமையாதவர்கள். நாம் தேடுவது எதையோ அதை அடைந்தவர்கள் அளவுக்கு நம்மை வழிகாட்டி நடத்தும் எவரும் இருக்க முடியாது.

முழுமையறிவை தேடுபவர் சாதகர். அவரது பணி சாதனா. அடைந்தவர் யோகி அல்லது ஞானி அல்லது பரமஹம்சர் அல்லது போதிசத்வர். அத்தகைய மனிதர்கள் மானுடம் தேடும் முழுமையறிவின் உதாரணங்கள். அவர்களின் இருப்பே அதற்கான சான்றாகும். ஆகவே அவர்கள் தேவைப்படுகிறார்கள். நித்யானந்தர் அவர்களில் ஒருவர்.

சந்திரமோகன் கேட்கும் கேள்விக்கும் நான் பேசும் தளத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். நித்யானந்தர் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவே உள்ள பூசாரி அல்ல. அவர் பேசியது கடவுள் பக்தியைப்பற்றியும் அல்ல. இந்த தளத்தில் கடவுள் இல்லை. அல்லது இங்கே கடவுளுக்கு வேறு பொருள். நித்யானந்தருக்கும் சமூக சேவை செய்யும் நல்ல மனிதர்களுக்கும் நடுவே ஏராளமான வேறுபாடு உண்டு.

ஏன் மனிதர்களை ‘மேலே’ வைத்து பார்க்கவேண்டும்? சந்திரமோகனை விட ஐன்ஸ்டீன் மேலானவர் என்பதை அவர் ஒப்புக்கொள்வார் என நினைக்கிறேன். ஏனென்றால் சந்திரமோகனுக்கு இருப்பதை விட இன்னும் கொஞ்சம் விரிந்த பிரபஞ்சஞானம் கொண்டவர் அவர். ஒரு’நல்ல மனிதர்’ மட்டுமல்ல அவர். நித்யானந்தர் அவரது தளத்தில் ஐன்ஸ்டீன் போல மேலும் பலமடங்கு விரிந்து பிரபஞ்சத்தின் முழுமையை நோக்கி தன் பிரக்ஞையை விரித்துக்கொண்டவர். அவரது பரிபூரண சமநிலை அந்த நிலையில் மட்டுமே அடையத்தக்கது.

ஆகவே அவர் ஞானம் தேடுபவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். குரு சன்னிதானம். அவர்கள் அவரை வணங்குவார்கள். நினைவில் இருத்துவாகள். கடவுள்பக்தி மட்டும் போதும் என்பவர்களுக்கு நித்யானந்தரால் எந்த பயனும் இல்லைதான். ஆகவே அவர்கள் அவரும் ஒரு குட்டிக் கடவுளாக இருக்கக் கூடாதா என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் அவரை அவர்கள் மாயமந்திரங்கள் செய்பவராக எண்ண விழைகிறார்கள்.

இதுதான் நான் என் கட்டுரையில் சொன்ன விஷயங்கள். ஆனால் பின்னூட்டம் சம்பந்தமே இல்லா திசை நோக்கிச் சொல்லப்படுகிறது. இது அறிவுத்திறனின் சிக்கலால் அல்ல. இது ஒரு தத்துவக் கட்டுரையாக இருந்திருந்தால் சந்திரமோகன் மிக வலுவான மறுப்பை முன்வைத்து விவாதித்திருக்கமுடியும். இது ஆன்மீகம் சார்ந்தது. இது பேசும் தளத்தில் அவருக்கு அனுபவமே இல்லை. ஆகவே நான் எத்தனை திட்டவட்டமாக சொன்னபோதும்கூட அவருக்கு முக்தி, சாதனா, குரு, யோகி என்ற எந்தக் கருத்துமே சென்று சேரவில்லை. அவர் ஏற்கனவே எண்ணியிருக்கும் கடவுள், பூசாரி என்ற இடத்தில் நின்றுகொண்டே பேசுகிறார். இத்தகைய விவாதங்களின் பயனின்மை குறித்து நான் சொன்னதற்குக் காரணம் இதுவே.

இதையே கோமதி சங்கர் அவர்களின் பின்னூட்டம் குறித்தும் சொல்லமுடியும். நான் என் கட்டுரையில் ஓர் அனுபவ தளத்தை முன்வைக்கிறேன். அந்த அனுபவ தளத்திற்கு வர முயல்வதற்குப் பதிலாக அவர் வாசித்த நூல் ஒன்றில் வேறு மாதிரி இருந்ததே என்கிறார். அந்த விவாதத்தை பல திசைகளில் நீட்டலாம். நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான கோணங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக எடுத்து ஏற்கவோ மறுக்கவோ செய்வதல்ல இங்குள்ள வேலை.

சரி, அவ்வாறு ஏற்கவோ மறுக்கவோ என்ன அடிப்படை? நமக்கு சுய அனுபவ தளம் இருந்தால் அது மட்டும்தானே அடிப்படையாக அமைய முடியும்? அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒரு நூலை வைத்து இன்னொன்றை மறுக்கலாமன்றி வேறென்ன செய்ய முடியும்? சுய அனுபவம் இருந்தால் அதன் பின் நூல்களில் என்ன சொல்லப்பட்டிருந்தால் என்ன? இங்கே ஒரு அனுபவம் சொல்லப்படுகிறது, அதனுடன் தொடர்புகொண்டு நம் அனுபவமாக அதை ஆக்கிக்கொள்ள முடியுமா என்பதே கேள்வி.

நான் சொல்வதை எவரும் ஏற்கவேண்டும் என்று இங்கே சொல்லவில்லை. இன்றைய சூழலில் சிலருக்கு அவர்களின் நம்பிக்கையில் ஓர் விரிசல் விழுந்திருக்கலாம். அவர்களிடம் பல ஆழமான கேள்விகள் எழுந்திருக்கலாம். அவர்கள் இந்தச் சொற்கள் வழியாக இந்த அனுபவத்திற்குள் வர முடிந்தால் சில திறப்புகள் நிகழலாம் என்பதற்கு அப்பால் இதனால் பயனில்லை என்பதே என் எண்ணமும். அதையே சொல்லியிருக்கிறேன்.

விவாதிக்கவேண்டாமென்று சொன்னது நிராகரிப்புக்கான உரிமை உண்டு என்ற அடிக்குறிப்புடன்தான். மிகப்பெரும்பாலானவர்கள் நிராகரிப்பார்கள் என நான் அறிவேன். இந்த எதிர்வினைகளிலேயே நிராகரிப்பே அதிகம். 

ஏன் இவற்றை இப்படி புறவயமாக எழுதக்கூடாதென நினைக்கிறேன் என்றால் இத்தகைய விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்கு சில மனநிலை சார்ந்த நிபந்தனைகள் உள்ளன. ஆர்வம் இல்லாதவர்களிடம் சொல்லலாகாது. இந்த தளம் நோக்கி மனத்தில் ஒரு அடிப்படை திறப்பு இல்லாதவர்களிடம் சொல்லக்கூடாது. சொல்லப்படுபவருக்கும் சொல்பவருக்கும் இடையே  ஆழமான நம்பிக்கை இல்லாமல் சொல்லக்கூடாது. சொல்லப்படும் சந்தர்ப்பமும் சூழலும் சிறப்பாக அமையாது சொல்லக்கூடாது

இல்லாமல் சொல்லப்படும்போது அதன் சாராம்சமான அனுபவதளத்திற்குப் பதில் வெறும் சொற்களே சென்று சேர்கிறது. விவாதம் மூலம் அந்த அனுபவ தளம் மேலும் நிராகரிக்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் நம்பிக்கை இல்லாத போது அனுபவங்கள்மீதும் நம்பிக்கை இல்லாமலாகிறது.

கண்ணாடி அறைக்குள் நின்று பேசுபவரின் அசைவுகள் கேலிக்குரியதாக ஆவதைப்போன்றதே இதுவும். அவர் என்ன சொனனரென்று தெரியாதபோது அவர் கோமாளியாக ஆகிறார். இந்த தளத்தைச் சாராத ஒருவருக்கு இவ்விஷயங்கள் வேடிக்கையோ விசித்திரமோ அபத்தமோ ஆக தோன்றக்கூடும். 

இருந்தாலும் சொல்லப்படும்போது சிலருக்கு, மிகமிகச் சிலருக்கு மட்டும், பயனுள்ளவையாக இருக்கும் என்று தோன்றியதனால் எழுதினேன். அவ்வளவே. முடித்துக்கொள்வோம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6727/

24 comments

2 pings

Skip to comment form

 1. Prakash

  நன்றி , என் எல்லா கேள்விகளுக்கும் இந்த கட்டுரையில் பதில் வந்து விட்டது.

 2. Ramachandra Sarma

  பெரும்பாலான நேரம் எனக்கு தெரிந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்குமே சரியாகப்போகிறது. எங்கேயிருந்து விவாதிக்க?

 3. Prakash

  ஜெமோ, உங்களுக்கு நேரம் இருப்பின், எனது வலை தலத்தில் உள்ள புதிய கட்டுரையை வைத்து கொள்ளவா இல்லை எடுத்து விடவா (அரை குறையா தெரியவில்லை) என்று சொல்ல முடியுமா. எனக்கு நிறைய வெள்ளைக்கார நண்பர்கள், பலரும் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக இருக்கட்டும் என்று எழுதினேன்.

  http://kaliru.blogspot.com/2010/03/india-poor-country.ஹ்த்ம்ல்

 4. Ramachandra Sarma

  ப்ரகாஷ், தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நினைத்துச் சொல்கிறேன். உங்கள் கட்டுரையை படித்துப்பார்த்தேன். அந்தக்கட்டுரை நீங்கள் குளிரில் நடுங்கிக்கொண்டே எழுதியதுபோல இருக்கிறது. உங்கள் ஊகங்களை உண்மைகள் என்பது போல எடுத்து வைத்திருக்கிறீர்கள். இவையெதையும் தர்க்கப்பூர்வமாக நிறுவவோ அல்லது ஊகித்துச்சொல்லக்கூடிய அளவுக்கு மானுடவியல் சார்ந்த அனுபவமோ சான்றுகளோ இருக்கும் என்று தோன்றவில்லை.
  இதுபோன்ற எழுதப்பட்ட கட்டுரைக்கு சம்மந்தமில்லாத கட்டுரைகளில் ஜெ வின் கருத்து வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பி கேட்கலாமே?

 5. vengku

  அன்புள்ள ஜெ

  விவாதங்களின் சிக்கலைப்பற்றி நான் நினைத்ததையே நீங்களும் சொல்கிறீர்கள். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாரும் எதையாவது சொல்ல நினைக்கிறார்கள். அந்த கருத்துக்களை எந்த அடிப்படையில் சொல்கிறார்கள், சொல்ல வந்த விஷயத்தினால் வாசிப்பவர்களுக்கு என்ன லாபம் என்றெல்லாம் யோசிப்பதில்லை. இன்டர்நெட்டில் ஏராளமானவர்கள் எதையாவது எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் ஒரு சராசரி மனிதனுக்கு எழும் சந்தேகங்களைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அவற்றுக்கு உங்கள் அனுபவ தளம் சார்ந்த ஆழமான பதில்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இவற்றை நீங்கள் உங்கள் நாவல்களில் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். சொல்லப்போனால் திசைகளின் நடுவே போதி மடம் மலம் வாள் மாதிரியான கதைகளிலே சொன்ன விஷயங்களைத்தான் இங்கேயும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் கதைகளுக்கு வெளியே அதிகம் இதைப்பற்றி பேசியதில்லை. எனக்குத்தெரிந்து இப்போதுதான் பேசுகிறீர்கள். இலக்கியம் விவாதத்திற்கு இடம்தராமல் இவற்றை சொல்கிறது என்பதனால் இருக்கலாம்

  இந்த நேரத்தில் உங்கல் வாள் என்ற கதையை நினைத்துக்கொள்கிறேன். கை டெக் ஆசிரமங்களில் இருக்கும் கருத்துக்களை ஒடுக்கும் இயல்பை அந்தக்கதை மிக அற்புதமாக படம்பிடித்துக் காட்டும்

 6. Prakash

  நன்றி ராம். எனக்கு ஜெமோ’வின் மின்னஞ்சல் தெரியாது. இப்பொழுது தான் தொடர்புக்கு பார்த்தேன். நான் குளிரில் நடுங்கி கொண்டு தான் இதை எழுதினேன் :) . அது என் சிறு தர்க்கம் ஆதாரமெல்லாம் இல்லை. உங்கள் உண்மை கருத்துக்கு நன்றி. உங்கள் மின்னஞ்சலும் தெரியாது, அதனால் இங்கேயே நன்றி சொல்லி கொள்கிறேன்.

 7. ramji_yahoo

  அருமையான பகிர்வு ஜெமோ.

  நாங்கள் (குறிப்பாக நான்) உங்கள் பதிவுகளை வாசிப்பது உங்கள் அனுபவம், வாசிப்பில் இருந்து பல விசயங்களை, அனுபவங்களை பெற்று கொள்ளலாம் என்ற குறிக்கோளோடு தான் வருகிறேன்.

  பல அனுபவங்களை பெற்றும் இருக்கிறேன், பெற்றுக் கொண்டும் இருக்கிறேன்.

  நீங்கள் சொல்வது போல நாங்களும் கான்ஜாங்க்காடு நித்யானன்தரை சற்றே பெரிய உயர்ந்த மனிதராய் ஏற்று கொள்கிறோம்.

  கற்பனைக்கு வைத்து கொள்வோம், கான்ஜான்காடு நித்யானந்தர் காம உறவில் ஈடுபட்டால் நாம் எவ்வாறு அதை எதிர் கொள்ள வேண்டும். (விதண்டா வாடத்திர்க்கு நான் கேட்க வில்லை, ) உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்.

  எனது மன நிலையி சொல்லி விடுகிறேன்- காஞ்சி மகா பெரியவாளோ (மறைந்த), அன்னை தெரசாவோ காம செயல்களில் ஈடுபட்டு இருந்தாலும் கூட நான் அவர்களை வெறுக்க மாட்டேன்.

 8. Ramachandra Sarma

  இப்போதும் பிரச்சனை காமம்தான் போலும். சர்க்காரியா சொல்லியிருந்தார் கேரளமக்கள் இப்போது செக்ஸுவலி ஸ்டார்வ்ட் என்று. தமிழ்நாடும் கூடியவிரைவில் அப்படித்தான் ஆகிவிடும் போல இருக்கிறது. ராம்ஜி, உடலுறவுதானே, செய்துவிட்டுப் போகட்டுமே நமக்கென்ன என்று விட்டுவிடவேண்டியதுதான். நமது உருவக கற்பனைகளை அவர்கள் மீது ஏற்றாமல் இருக்கும்வரை பிரச்சனை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

 9. ramji_yahoo

  ராமச்சந்திர ஷர்மா தங்களின் பதிலுக்கும் கருத்துக்கும் நன்றி. ஜெமோ என்ன சொல்கிறார் பார்ப்போம்.

 10. Anamika

  Every action is a mistake. Make interesting mistakes and make them quickly!
  But there is a secret that none of them know: knowledge releases from all sin.

 11. Anamika

  To a Vidyarthi (wisdom-seeker) everything is denied except the seeking of wisdom.
  The vertical axis is happiness, the horizontal axis is suffering.

 12. Sankar Venkat

  திரு ஜெயமோகன்,
  நம் நூறு கவலைக்கு, ஒரே மருந்தில் யாராவது தீர்பர்களா என தேடுகிறோம்.
  யாராலும் எந்த அதிசயமும் நிகழ்த்த இயலாது என ஏற்க மறுக்கிறோம்.

  உடலுக்கு டாக்டர், மனதுக்கு குரு (இவர்களும் மனிதர்களே)

  விரிவான விளக்கத்திற்கு நன்றி.

  நன்றி ஜெயமோகன்

 13. ஜெயமோகன்

  அன்புள்ள கோமதி சங்கர், முரண்பட்டு விவாதிப்பதைப் பற்றி சொல்கிறீர்கள். உங்கள் கேள்வியைப்பற்றிய என்னுடைய பதிலையே அவ்வகையான ஒரு முரண்பாடு என ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

  சில விஷயங்களில் விவாதங்களை ஏன் தவிர்க்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒரு கருத்து அதைச் சொல்பவரின் அகங்காரத்தை பிரதிநிதிகரிக்கும் பட்சத்தில் அது மறுக்கப்படுவது அவரை புண்படுத்தும். பிறகு நடப்பது அகங்கார மோதல் மட்டுமே

  ஆனால் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அதை தடுக்க முடியாது.சுந்தர ராமசாமி நம் அகங்காரத்தை நொறுக்க மாட்டார். அப்படியே விட்டுவிடுவார். நித்யா கண்ணீர் மல்கச் செய்துவிடுவார்.நான் அவரிடம் மனத்தாங்கல் கோன்டு ஓடிவந்திருக்கிரேன் . ஆனால் உடைவுகள் வழியாகவே நாம் புதியதாக எதையாவது கற்றுக்கொள்கிறோம்

  நான் எதையும் உத்தேசிக்கவில்லை. சாதாரணமாக உங்களை மேற்கோள் காட்டினேன். உங்களை வருத்தபப்ட வைத்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன்

 14. gomathi sankar

  No need to….என்னை போல் சந்தேக தாமஸ்களுக்கு ஏன்அறிவின் வாசல்கள் எப்போதும் அடைக்கப் படுகின்றன என்ற ஆதங்கமே தவிர வேறு இல்லை ஆனால் என்ன சொல்லியும் புரிந்துகொள்ளாத மனிதர்களுக்கு ஏன் சொல்லவேண்டும் என்ற வருத்தம் வேண்டாம் என்பதே ஏன் கருத்து சந்தனாரோ நானோ ஒரு முகாந்தரம் மட்டுமே கீதை அர்ச்சுனனுக்காக மட்டுமே நிகழ்த்தப் படவில்லை இந்த கணம் கேள்விகேட்டவருக்கு புரியாது இருக்கலாம் ஆனால் அதனால் பலர் பயன்பெற்றார்கள் இல்லையா ஏற்கனவே முமுக்ஷு நிலையை அடைந்தவர்க்கு கீதை எதற்கு ஆகவே எங்களைபோல் சந்தேகபிரானிகளிடம் சற்று கூடுதல் கவனம் அளிக்கவே வேண்டுகிறேன் பிறிதொரு சமயம் ஏன் குண்டலினியை மறுக்கிறீர்கள் என விரிவாக எழுதுங்கள் ஏனெனில் திருமூலர் முதல் கென் வில்பர் வரை சொல்கிற விஷயத்தை நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் நிச்சயம் ஒரு பின்புலம் வைத்திருப்பீர்கள் அதை அறிவது அனைவருக்கும் நலமாக இருக்கும் அல்லவா [Did I do than again?]நன்றியுடன்..

 15. chandanaar

  அன்புள்ள ஜெ..
  நீங்கள் சொல்வதுபோல் நான் ஆன்மீக விஷயத்தில் அனுபவம் இல்லாதவன் தான். ஆனால் முன்பே சொன்னது போல் எனக்கும் கடவுளுக்குமான தொடர்பு..என் இக்கட்டான சூழ்நிலைகளில் எங்கிருந்தோ கிடைக்கும் பேருதவி .. மனம் சோர்ந்த நிலையில் இருக்கும்போது யாராவது அருகில அமர்ந்து புன்னகைக்கவோ அல்லது ஆறுதல் சொல்லவோ (மிக தற்செயலாக நடப்பது போல் ) கிடைக்கும் அனுபவங்களை என் அறிவுக்கு எட்டிய வரையில் கடவுளின் அன்பு தான் என்று பலமுறை உணர்ந்திருக்கிறேன். எனவே தான் எனக்கு அவதாரங்களை தேடி செல்ல வேண்டியிருக்கவில்லை. கோவிலுக்கே போவது குறைவுதான். நீங்கள் சொல்லும் விஷயங்களை ஒரு வாசகன் தன அனுபவத்தோடும் வாழ்க்கையோடும் ஒப்பிட்டு பிறகு உள்வாங்கி கொள்வது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். விவாதம் தொடர நான் காரணமாய் இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி.

 16. ஜெயமோகன்

  நன்றி சந்திரமோகன், உங்களாஇ புண்படச்செய்யவில்லை என நினைக்கிரேன். கடைசியாக மிஈன்டும் சொல்கிரேன். பூசாரி, தெய்வமனிதர்கள் வேறு. குரு வேரு. ஞானியர் என்பவர் மாபெரும் குருக்களே ஒழிய கடவுள்கள் அல்ல
  ஜெ

 17. chandanaar

  மிக்க நன்றி ஜெ..
  முன்பே நான் ஒருமுறை சொன்னதுபோல் வாசகர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிக சில எழுத்தாளர்களில் நீங்கள் முக்கியமானவர்.நீங்கள் சொல்வதை அப்படியே எற்றுகொள்பவர்கள் மட்டும் பின்னோட்டம் எழுதினால் விவாதம் என்பதே இல்லாமல் போய் விடும் என்று நினைக்கிறேன். என்னை போன்றவர்களின் எதிர் கேள்விகளால் நிறைய பேருக்கு வேறொரு கோணத்தில் விளக்கம் கிடைத்தால் மகிழ்ச்சி தானே. தங்கள் அன்புக்கு நன்றி ஜெ.

 18. rajmohanbabu

  அன்புள்ள ஜெ,

  மிக அருமையான கட்டுரை. பல கேள்விகளுக்கும் இது ஒரு தெளிவான விடை அளிக்கிறது. நீங்கள் ஒரு கட்டுரையில் உங்களுடைய தியானஅனுபவங்களை குறித்து நாட்குறிப்பு எழுதி வைத்துள்ளீர்கள் என்று கூறி உள்ளிர்கள். அதை புத்தகமாக வெளியிட்டால் மிகுந்த உபயோகமாக இருக்கும். நன்றி
  அன்புடன்,
  ராஜ்மோகன்

 19. tdvel

  எழுத்தாளர்கள் தம் வாசகர்களுடன் உரையாட எப்போதுமே தயாராகவே உள்ளனர். எழுத்தாளர் எழுதி பொதுவில் வைத்ததை அனைவரும் விமர்சிக்கலாம். ஞாயமான கேள்விகளுக்கு பதிலளிப்பது எழுத்தாளர்களின் கடமையும் கூட. அதேசமயம் வாசகர்களுக்கு என்றும் சில கடமைகள் உண்டு. சிந்தனை ஊன்றி முழுக்க படிக்காமலேயே கட்டுரையில் கூறியிருப்பதையே மீண்டும் கேட்பது எழுத்தாளர்களுக்கு அயற்சியூட்டாதா? சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்ல வைப்பது எழுத்தாளனின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாகாதா? ஒரு எழுத்தாளர் மனம் சிந்தனை குவியப்படுத்தி எழுதியதை மேலோட்டமாக படித்துவிட்டு சீதைக்கு இராமன் சித்தப்பாவா? அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? போன்ற கேள்விகளை கேட்பது எப்படி சரியாகும். எழுத்தாளரின் உழைப்பை அசட்டை செய்வதாகாதா?
  த.துரைவேல்

 20. chandanaar

  நண்பர் துரைவேலுக்கு கோபம் தீரவில்லை போலும்.. ஜெ விடம் உங்களுக்கு என்ன தேவையோ அது கிடைக்கிறது இல்லையா? எனக்கு என்ன சந்தேகமோ அதை கண்டிப்பாக கேட்பேன். சரியாக படிக்கவில்லை என்று மட்டும் சொல்ல வேண்டாம் நண்பரே. இதை பற்றிய விவாதம் இன்னும் தொடர வேண்டுமே ஒழிய ..இந்த விளக்கம் போதும் என்று இருந்துவிட்டால் ‘நீங்கள் எந்த விஷயத்தையுமே தட்டையாக பார்த்து புருந்து கொள்பவர் என்று தான் நினைக்க தோன்றும். இப்படி தான் கேள்வி கேட்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.ஆனால் கேள்வியில் உண்மை இருக்கிறதா என்பது முக்கியம். நான் சொன்னது போல் நீங்கள் உங்கள் அனுபவம் சார்ந்து பேசுகிறீர்கள். நான் என் அனுபவத்தை வைத்து விஷயங்களை பார்க்கிறேன். ஜெ விளக்கம் சொல்லி விட்ட பின்பும் நீங்கள் இப்படி பேசுவது தேவையற்றது. வெளியில் வாருங்கள்.

 21. ஜெயமோகன்

  தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம். இங்கே நிறுத்திக்கொள்வோம். சந்தனார், உங்களை திசை திருப்ப நான் வேண்டுமென்றால் இளையராஜாவை பற்றி ஏதேனும் வசை எழுதுகிறேனே

 22. chandanaar

  இல்லை ஜெ. நீங்கள் எழுதியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாறாக விளக்கம் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். இளையராஜாவோடு என் அறிவும் பார்வையும் தீர்ந்து விடுகிறது என்று நீங்கள் கருதவில்லை என்று நினைக்கிறேன். அப்படி செய்தால் மட்டும் கண்டிப்பாக வருந்துவேன். நன்றி ஜெ.

 23. ஜெயமோகன்

  no..for fun))

 24. Prakash

  tdvel கருத்தில் நானும் உடன்படுகிறேன். என் கருத்து உட்பட, அபத்தமாக இருந்தால் அதை வெளியிட வேண்டாம். பிறகு எப்படி புரிந்து கொள்வது அபத்தமா இல்லையா என்று ?

 1. காலச்சுவடும் வினவும் » எழுத்தாளர் ஜெயமோகன்

  […] விவாதங்களின் எல்லை […]

 2. ஏன் விவாதிக்கிறேன்

  […] 5 நாம் ஏன் வரலாற்றை வெறுக்கிறோம் 6 விவாதங்களின் எல்லை 7 ஏன் சங்கடமான […]

Comments have been disabled.