நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய, பல்கலைக்கழகமே பினாமி பெயரில் நடத்தும் ஒரு கலைக்கூடமும் எங்கள் ஊரில் உண்டு. அவ்வப்போது அதில் பல முன்னோடிக்கலைஞர்களின் புகைப்பட மற்றும் ஓவியக்கண்காட்சிக்கு அழைப்புகள் இருக்கும்.
ஒருமுறை அது போன்ற ஒரு நவீன புகைப்படக்கண்காட்சி ஒன்றில் மேல்சட்டை ஏதுமணியாமல் எலும்பு முறிவு பாண்டேஜினால் ஆகிய உள்ளாடை மட்டுமே சட்டையாக அணிந்த ஒரு நடுவயதுப் பெண்ணின் மிகப்பெரிய ஒரு புகைப்படத்தை காணநேர்ந்தது. கழுத்தில் ’டை’ மட்டும் அணிந்து மார்பகங்களை மட்டும் மறைத்துக்கொண்ட நடுவயதுப் பெண்களின் பலவிதமான கால் மற்றும் அரை நிர்வாணப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வெளிவந்தசலிப்பில் ஒரு நண்பருடன் கலையில் தனித்துவம் பற்றி உரையாடிக்கொண்டே திரும்பி வந்துகொண்டிருந்தபோது ”சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் ஆகியோரின் தனித்துவம் சலிப்பூட்டுவது” என்ற வரி திடீரென நினைவுக்கு வந்தது.
என்னுடைய நிச்சயமான கருத்தும் அதுவேதான். எங்கோ படித்த மிகச்சரியான வரி. யாரோ ஒரு இசை விமர்சகரின் வரியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு எழுதியது சுப்புடுவா ஷாஜியா யார் என்று குழம்பி தேடிக்கொண்டிருந்தேன்.
இறுதியில் இதை எழுதியவர் ஞானக்கூத்தன் என்று கண்டறிந்தபோது ஏற்பட்ட ஆச்சரியம் மறைய நீண்டநாளானது.
”விரும்பத் தகுந்ததும் சலிப்பு தருவதுமாக தனித்துவம் காணப்படுகிறது. இசைத் துறையில் இதற்கு உதாரணங்கள் கூறலாம். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சிதம்பரம் ஜெயராமன் இவர்களின் தனித்துவம் சலிப்பூட்டுகிறது” (மதிமைசாலாமருட்கை, ஆனந்தின் ‘அளவில்லாத மலர்’ கவிதைத்தொகுப்புக்கு எழுதிய மதிப்புரை).
கவிஞனின் சொற்கள்தான் எவ்வளவு கூர்மையானவை! கவிஞனின் சொற்கள்தான் எவ்வளவு சரியானவை!
***
மரபுக்கவிதை மரபின் சாத்தியங்களை உள்வாங்கிய நவீனத்தமிழின் அசலான முன்னுதாரண வீச்சுக்கு உதாரணமாகி நிற்பது ஞானக்கூத்தனின் கவிமொழி.
கம்பனில் முளைத்து சங்கப்பாடல் வழி வளர்ந்து சித்தர் பாடல்களில் வேரூன்றி பாரதியின் வழி பாயும் ஆன்மீகத்தின் சாரத்தை நேரடியாக உள்வாங்கிக் கொண்டதன் எள்ளலும் போதமும் தீட்சண்யமும் கொண்ட துறவு நிலையின் கூறுமுறை அது. ”எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” என்று பாரதி தன்னையே கூறிக்கொள்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
”வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?”
”நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ”
என்ற பாரதியின் போதம் ஞானக்கூத்தனின் வரிகளில்
”வந்தனம் என்றான் ஒருவன்
இளங்காலைக்கதிரைக் கண்டு
நன்றென்றான் ஒருவன் இரவில்
முகிழ்கிற நிலவைக் கண்டு
அவன் நின்றான் கால்கள் ஊன்றி
ஒரு போதில் வருதல் மற்றப்
போதிலே மறைதல் என்னும்
இயல்பில்லா முகிலைப் பார்த்து”
(வந்தனம் என்றான் ஒருவன், 1973)
என்று தொடர்ந்து
”அமைதி என்பது மரணத்தறுவாயோ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?”
என்று தேவதேவனுக்கு கைமாறியிருப்பதை பார்க்கிறோம்.
அவ்வகையில் பாரதிக்குப்பிறகு புதுமைப்பித்தன் வழி தொடரும் நவீன மொழியின் இன்றைய வீச்சை இணைக்கும் சங்கிலித்தொடரின் முக்கியமான ஒரு கண்ணி என ஞானக்கூத்தனின் மொழியை சொல்லலாம்.
***
தாளமற்ற மொழி, வடிவ இறுக்கம், தனிநபர் சார்ந்த இருண்மைப்பார்வை ஆகியவையே நவீன கவிதையின் இயல்புகள். திட்டவட்டமான இலக்கு இல்லாமல் வாழ்வின் பொதுவான அபத்தத்தையும் முரண்பாட்டையும் காட்டும் அங்கதம், திட்டவட்டமான அர்த்தத்தை நோக்கித்தள்ளாமல் உணர்வெழுச்சியின் ஒரு தருணத்தை படிமப்படுத்தமுயலும் கவிதைகள், உணர்வெழுச்சியை குறைந்த சொற்களினூடே நேரடியாக வெளியிட முயலும் கவிதைகள் ஆகியவையே நவீனக்கவிதைகளில் நாம் அனுமானிக்க முடியும் இயல்புகள் என்பது ஜெயமோகனின் வரிகள் (நவீனத்துவத்திற்குப் பின் கவிதை – தேவதேவனை முன்வைத்து).
நவீனத்துவம் இயைந்து ஏற்றுக்கொண்ட அறிதலின் வழிகளில் ஒன்று இயற்கையை (ஏன், அன்றாட சம்பவங்களைக்கூட) வியந்து அதன் தத்துவ அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் சிந்தனையின் ஆழங்களுக்கு செல்லத்தூண்டுவது. இக்கூறு முறை
“குறுங்காலால் மணலில் அவை
எழுதிப் போட்ட
மருமமொழித் தீர்மானம்
என்ன கூறும்”
(கொள்ளிடத்து முதலைகள், 1970)
என்றும்,
”ஒட்டகம் குரூபி என்றால்
அதனுடன் உலகுக்கேதும்
நிரந்தரச் சண்டை உண்டோ?”
(ஒட்டகம், 1972)
என்றும் ஞானக்கூத்தனின் வழி கடந்து,
”என் கனவில்
தான் வந்ததை
ஒட்டகம் அறியுமா?”
(கனவில் வந்த ஒட்டகம், 2002)”
என்று யுவன் சந்திரசேகருக்கு தொடர்ந்திருப்பதையும் பார்க்கலாம்.
கவிதையனுபவம் எதை நிர்ணயித்துக்கொள்கிறது? என்ற கேள்விக்கு பதில் என்பது காலந்தோறும் மாறிவருவது என்பதே (ஜெயமோகன்). நம்பகமற்ற நகர வாழ்க்கையின் சிறுமையை,
”திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை”
(பிரச்சினை, 1968)
என்று எளிய வெளிப்படையான அங்கதமாக மாற்றிக்கொள்ளவும் செய்கிறது.
நம் இன்றைய அன்றாடக்கவிதைகளில் ஏறக்குறைய அரசியல் வெளியேறிவிட்டது என்று சொல்லலாம். அறுபதுகளில் கவிதையின் மூலக்கருக்களுள் ஒன்றாக அரசியல் இருந்ததை புரிந்து கொள்ள வேண்டுமானால் அது தொலைக்காட்சிப்பெட்டிகள் இல்லாத, இணையமே இல்லாத வானொலிகளின் காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தெருக்களிலும் (ரேடியோவிலும்) மலிந்துஒலிக்கும் கட்சி அரசியலின் மேடைப்பேச்சுக்களை கேட்டுச்சலித்த சாமானியன் ஒருவனின் கசப்பை,
”தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும்வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த்தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப்பேட்டகிள சார்பில் மாலெ’
”பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகிறேன் வணக்கொம்”
(காலவழுவமைதி, 1969)
என்று தமிழறியாத சாரசரி மேடைப்பேச்சாளனின் குரலாக உருவங்கொள்ளவும்
“நாளை அமைச்சரைப்பாருங்கடி… மவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி…”
(பரிசில் வாழ்க்கை, 1968)
என்று கும்மியடிக்கவும் ஞானக்கூத்தனின் மொழி தயங்குவதில்லை.
***
இருத்தலியத்தை முன்வைத்து நியாயப்படுத்தி சார்த்தர் எழுதிய “இருத்தலியமே மனிதத்துவம்” என்ற புகழ் பெற்ற கட்டுரை ஒன்று உண்டு. இயற்கையின் முன் வரலாற்றின் முன் அன்றாட வாழ்க்கையின் முன் நிற்க நேர்ந்த தனிமனிதனை அவனது இருப்பின் அர்த்தமின்மை, அவன் ஆகிருதியின் சிறுமையை, பொருளின்மையை முன் வைப்பதை மைய தரிசனமாகக் கொண்டது இருத்தலியம்.
இருத்தலிய நோக்கின் புனைவுக்கூறுகளில் முக்கியமானது மானுடவாழ்வையே எதிர்பாரா தற்செயல்களின் நிகழ்வுகளின் தொகையாக, பொருளற்றதாக சித்தரித்து எள்ளி நகைத்து காட்சிப்படுத்துவதாகும்.
இருத்தலியத்தின் இக்கூறுமுறை புதுக்கவிதை / நவீனகவிதைகளின் மூத்த முன்னோடியான க.நா.சு. வின் வரிகளிலேயே நிலைபெற்றுவிட்டது பின்வரும் வரிகளில் நிரூபணமாகிறது.
”இன்று உபாத்தியாயர்
வகுப்பில் வினைச்சொல்லும்
செயப்படு பொருளும் பேசும்போது
பையன்கள் ஜன்னல்வழியாக
வெளியே பார்வையைவீசிக்
காத்திருக்கின்றனர் –
வீடு பற்றி எரியாதா
வெள்ளம் வராதா
ஆதிசேஷன் மீண்டும்
தோள்மாற்றமாட்டாரா
என்று”
(க.நா.சு., செயப்படு பொருள்)
ஒரு பள்ளி வகுப்பறையின் யதார்த்தத்தை சித்தரிப்பதன் பின்னால் மறைந்து ஒளிந்துகொண்டிருக்கும் இந்த மெல்லிய பகடி தீவிரமடைந்து,
”தெய்வங்கள் நிலைபெயர்ந்து
நடமாட தொடங்கிவிட்டால்
எங்கே
யாரைத்தேடிக்காண்பது?
வீட்டில் இல்லையவன்
என்று பூசாரி சொன்னால்
நம்பிவிட வேண்டுமா?
நம்பத்தொடங்கினால்
மிச்சம் என்ன?
பெரியாரும்
கிருபானந்தவாரியும்
கருணாநிதியும்
தானே!”
(க. நா.சு., அஃ,)
என்று உற்சாகம் பீறிடும் கெக்கலித்த சிரிப்பாகவும் மாறுகிறது. ஞானக்கூத்தனின் வரிகளில்
”சங்கிலித்தொடராய் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயைமறித்து
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?”
(நாய், 1969)
என்ற கேட்டு நாய்கள் குரைக்கும் இரவில் நமக்குள்ளும் நீளும் பகடி,
”வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக்கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்
ரத்தக் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்”
(எட்டுக்கவிதைகள், 1972)
என்று கலையமைதியுடன் கிராமத்தானின் குரலாகி பக்கத்திலிருப்பவனிடம் பேசி நிற்கிறது.
ஆட்சிமாறியதாலோ கணக்கெடுப்பு முடிந்துவிட்டதாலோ ரேஷன்கார்டிலோ வாக்காளர் பதிவிலோ அல்லது ஏதோவொரு பட்டியலிலோ தன் பெயர் விடுபட்டதற்காக மேலதிகாரியிடம் முறையிடும் ஒரு சாமான்யனின் விண்ணப்பமாக,
”குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ”
என்று மன்றாடுகிறது. வரிகள் தன் சுற்றம் முழுதும் பரிகளாகி நிற்கையில் நரியாக, முற்றிலும் வேறொரு விலங்காக தன்னை உணரும் மனிதனின் தனிமையும் அவலமும் அதிகாரியின் கண்டிப்பான குரலில்,
”நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா”
(விட்டுப்போன நரி, 1969)
என்று முற்றிலுமாக கைவிடப்படுகையில், பெருங்கூட்டத்தில் நரிபோல தனியனாகி நிற்கும் சராசரி சாமான்யன் ஒருவனின் நிராதரவு நம் நினைவில் என்றென்றைக்குமாக நிலைத்து நின்று விடுகிறது.
யதார்த்த சித்தரிப்பையே படைப்பின் அடிப்படையாக மாற்றிக்கொண்ட நவீனத்துவத்தின் கூறு முறைகளை சுவீகரித்துக்கொண்ட அதேசமயம் மரபுக் கவிதையின் செய்யுள் பாணியை ஒலி நயத்துடன் அபிநயிப்பவை ஞானக்கூத்தனின் கவிதைகள்.
”மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்த உடன் அரண்மனைக்குள் இருட்டு சூழ
சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச்சோழர்.
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?”
(சினிமாச்சோழர், 1970)
என்ற கவிதையின் மொத்த எடையும் ”சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?” என்ற கேள்வியில் மையங்கொண்டு நிற்கிறது.
வாசித்தபின் பல சலனங்களை ஏற்படுத்தும் இக்கேள்வியின் பதிலாக ஒரு கணம் அசோகமித்திரனின் புலிக்கலைஞன் பகீரென நம் நினைவில் தோன்றி மறைகிறான். அப்பட்டமான இக்கேள்வியின் அங்கதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு கலைஞனின் மீது சூசகமாக வெளிப்படும் கவலையின் கரிசனமே இவ்வரிகளை சிறந்த கவிதையாக்குகிறது.
***
உலக இலக்கியத்தின் எந்த மொழிக்கும் இணையான சிறந்த படைப்பாளி தமிழில் இன்று உண்டு என்றும் உலகின் மிகச்சிறந்த நவீனக்கவிதைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகள் தமிழில் நம்மிடையே உள்ளன என்றும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் நெகிழ்வு தமிழுக்குப் புதிதல்லை எனினும்
”வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்”
என்று பாரதியிடம் வந்து
”மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
நடக்கத் தெரியாக்கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்”
(கனவு, 1972)
என்று ஞானக்கூத்தனின் வரிகளில் இப்புவியையும் கடலையும் குழந்தையாகக் கண்டு இன்னுமொரு முறை புத்துயிர் கொள்கிறது.
ஏதோ ஒரு காரணத்தினால் எழுந்து நடமாட முடியாமல் ஆகி கதவை அடைப்பதற்குக்கூட உதவியை எதிர்பார்த்து படுக்கையில் கிடக்கும்
”பொருந்தி மூடாக் கதவின் சந்தில்
குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத்
தெரிந்திடும் நீலவானை
எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது”
(நேற்று யாரும் வரவில்லை, 1970)
என்ற தனிமை தனக்குப்பதிலாக
பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று
கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப்போய்விடும்
(எல்லாம் இறுதியில் பழகிப்போய்விடும், 1983)
என்று சமாதானம் சொல்லிக் கொள்ளும்போது பதிவாகிற துயரம் புதியதொரு உயரத்தை எட்டிவிடுகிறது. நவீனத்துவத்தின் ஆகச்சிறந்த தருணங்கள் சாத்தியமாகியிருக்கும் இன்றைய தமிழ்க்கவிதைகளில் தனிமையிலும், நெகிழ்ச்சியின் ஊற்றின் ஆழத்திலிருந்து கசியும் கூறுமுறைகளினாலும் விளைந்து நிற்கும் அற்புதத் தருணங்களின் வேரின் ஆழங்களை இது போன்ற கவிதைகளில்தான் நாம் தேடமுடியும்.
ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை அதிகபட்சம் முந்நூறு இருக்கலாம். பலநூறு பக்கங்களில் கவிதை எழுதுவதைவிட வாழ்நாளில் ஒரேயொரு படிமத்தை உண்டாக்குவதேகூட முக்கியமானது என்ற எஸ்ராபவுண்டின் வாதத்தை நவீனத்துவத்தின் வழிமுறை என்று கொண்டு வாசித்தோமானால் இக்கவிதைகளில் அவற்றின் ஆகச்சிறந்த தருணங்களை நம்மால் கண்டு கொள்ள முடியும்.
கூட்டம் கூட்டமாக மனிதர்கள் கொன்று குவிக்கப்பட்டதன் சாட்சியாக ஒரு தனிமனிதனின் கதையை மட்டும் பாடுவது வழக்கில் உண்டுதான் இல்லையா?
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது. (சரிவு, 1972)
குவியலின் நடுவிலும் தனிக்கல்லாக தன்னை உணரும் தனியனொருவனின் அவனுக்கேயான துக்கமல்லவா அது?
[வேணு தயாநிதி]
குறிப்பு:
1. ஞானக்கூத்தன் விருது பெறும் நிகழ்வை முன்னிட்டு அவரின் கவிதைகளை முன்னிறுத்துவதே இப்பதிவின் பிரதான நோக்கம்.
2. ஞானக்கூத்தனை மையப்படுத்திய சுருக்கமான கழுகுப்பார்வையே தவிர நவீன தமிழ்க்கவிதையின் கவி மரபுகள் மீதான ஆய்வு அல்ல இது என்பதை முக்கியமாக கவனப்படுத்துகிறேன்.
3. சுருங்கிய வரைவு என்பதால் பிரியமான பல கவிதைகளை, கவிஞர்களை குறிப்பிட முடியாமைக்கு வருந்துகிறேன்.