‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 65

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 1

கர்ணன் நீராடிக்கொண்டிருக்கும்போதே துரியோதனன் அவன் மாளிகைக்கு வந்து முகப்புக்கூடத்தில் காத்திருந்தான். சேவகன் நீராட்டறைக்கு வந்து பணிந்து அதைச் சொன்னதுமே கர்ணன் எழுந்துவிட்டான். நீராட்டறைச்சேவகன் “பொறுங்கள் அரசே” என்றான். “விரைவாக” என்று சொல்லி கர்ணன் மீண்டும் அமர்ந்தபடி “நீராடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றான். திரும்பிய சேவகனிடம் “வருந்துகிறேன் என்று சொல்” என்றான்.

உடலைக்கழுவியதுமே எழுந்து இடைநாழி வழியாக ஓடி ஆடைகளை அணிந்துகொண்டு ஈரக்குழலுடன் வெளியே வந்து “வணங்குகிறேன் இளவரசே… தங்களை காண வருவதற்காக நீராட அமர்ந்தேன். தாங்களே வருவீர்கள் என்று எண்ணவில்லை. வரும் மரபும் இல்லை…” என்று மூச்சிரைத்தான்.

துரியோதனன் புன்னகையுடன் “வரக்கூடாதென்றும் மரபு இல்லை. நீ அங்கநாட்டு அரசன். அப்படியென்றால் இங்கு நீ அரசமுறையில் வந்து தங்கியிருக்கிறாய் என்றே பொருள்” என்றான். கர்ணன் புன்னகையுடன் அமர்ந்துகொண்டு “முதிர்ந்துவிட்டீர்கள்…” என்றான். “ஆனால் சிலவருடங்களாகவே போர்ப்பயிற்சி இல்லை என நினைக்கிறேன். தோள்களில் இறுக்கம் இல்லை. உடல் தடித்திருக்கிறது.”

துரியோதனன் புன்னகையுடன் “செய்தி வந்த அன்று எட்டு நாழிகைநேரம் இடைவெளியே இல்லாமல் கதைசுழற்றினேன். உதிரம் முழுக்க வியர்வையாகி வழிந்தோடிவிடும் என்று தோன்றியது. ஆனால் மறுநாள்காலை தூக்கி வைத்த கதாயுதம்தான். ஏழுவருடங்களாக தொட்டே பார்க்கவில்லை” என்றான். அவன் விழிகளை நோக்காமல் கர்ணன் சாளரம் நோக்கி திரும்பிக்கொண்டு “அவர்களைப் பற்றி வரும் செய்திகள் ஏதேனும் உண்டா?” என்றான்.

துரியோதனன் “வரும் செய்திகளா?” என்றான் வியப்புடன். “இல்லை, அவர்களின் இறப்பை ஐயப்படும்படி…” என்றான் கர்ணன். துரியோதனன் உரக்க நகைத்து “நீ அரசு சூழ்பவன் என்பதை காட்டிவிட்டாய்… அவர்களின் எலும்புகளை நான் கண்ணால் பார்த்தேன்” என்றான். கர்ணன் பெருமூச்சுடன் “நெருப்புக்கும் பாம்புக்கும் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையை வைத்திருப்பது நன்று. வெட்டி வீசப்பட்ட பாம்பின் தலை கடித்து இறந்தவர்கள் உண்டு” என்றான்.

சிலகணங்கள் உற்று நோக்கியபின் மெல்லிய சிரிப்புடன் “நீ ஐயப்படுவதற்கான அடிப்படை என்ன?” என்றான் துரியோதனன். துரியோதனனில் அந்த எள்ளல்நகைப்பு புதிதாக குடியேறியிருப்பதை கர்ணன் கண்டான். அதற்கும் அவன் பேசும் பொருளுக்கும் தொடர்பிருக்கவில்லை. எப்போதும் ஒரு முகத்தசை நெளிவு போல அவனிடமிருந்தது அது. “அவர்கள் மொத்தமாக அழிவதென்பது ஒரு பெரிய நிகழ்வு. அத்துணை பெரிய நிகழ்வு இவ்வளவு எளிதாக முடிந்துவிடுமா என்ற ஐயம்தான்.” துரியோதனன் உரக்க நகைத்து “கதைகேட்கும் குழந்தைகளின் கடுநிலை அது” என்றான்.

“இருக்கலாம்” என்றான் கர்ணன். துரியோதனனிடம் இருந்த இன்னொரு உடற்செயலை அவன் கண்கள் அறிந்தன. அனிச்சையாக அடிக்கடி வலதுதொடையை ஆட்டிக்கொண்டே இருந்தான். அந்த அசைவை அவனே உணரும்போது நிறுத்திக்கொண்டு தன்னை மறந்து பேசத்தொடங்கியதும் மீண்டும் ஆட்டினான். அவன் தன் தொடையை நோக்குவதைக் கண்டு துரியோதனன் அசைவை நிறுத்திக்கொண்டு கையை தொடைமேல் வைத்தான். “உன் ஐயம் முதல்முறையாக என்னிலும் ஐயத்தை கிளப்புகிறது” என்றான்.

“நான் இங்குவருவதுவரை நீங்கள் முடிசூடவில்லை என்று அறிந்திருக்கவில்லை” என்றான் கர்ணன். “பாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி நான் விந்தியமலையில் இருக்கும்போதே வந்துசேர்ந்தது. திருவிடத்தைக் கடந்து செல்லும்போது நீங்கள் முடிசூடிவிட்டீர்கள் என்று ஒரு சூதனின் கதையை கேட்டேன். அதன்பின் நான் காடுகளில் குருகுலங்களிலேயே இருந்தேன். நேற்று மாலை அஸ்தினபுரியை நெருங்கிக்கொண்டிருக்கையில் ஒரு வணிகன் பேச்சுவாக்கில் சொன்னதைக் கொண்டுதான் நீங்கள் முடிசூடவில்லை என்றறிந்தேன்.”

துரியோதனன் “அது பிதாமகரின் முடிவு” என்றான். “அதற்கேற்ப தந்தையும் ஏழெட்டு மாதத்தில் நலம்பெற்றுவிட்டார். நம் சமந்த நாடுகளின் ஒப்புதல் பெற்றபின் நான் முடிசூடலாம் என்று முதலில் சொன்னார் பிதாமகர். சமந்த நாடுகளில் சில கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தன. குலக்குடிகளில் ஷத்ரியர்கள் தவிர அனைவருமே என்னை எதிர்த்தனர். இறுதியாக துவாரகையில் இருந்து யாதவனின் உளநிலை குறித்த உளவுச்செய்தி வந்தது, நான் முடிசூட்டிக்கொண்டால் அஸ்தினபுரிமேல் யாதவர்கள் போர் அறிவிப்பு செய்வார்கள் என்று.”

“இளைய யாதவனா?” என்றான் கர்ணன். “அவனைப்பற்றிய கதைகளைத்தான் தென்னகத்திலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.” துரியோதனன் கசப்புடன் நகைத்து “ஆம், யாதவர்கள் பாரதவர்ஷம் முழுக்க பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே இந்த நாட்டின் உண்மையான குடிகள் இன்று. அவர்கள் நெடுநாட்களாக தேடிக்கொண்டிருந்த தலைவன் அவன்” என்றான்.

“இன்று அவன் அத்தனை யாதவகுடிகளையும் ஒருங்கிணைத்துவிட்டான். கடல்வணிகம் மூலமும் கூர்ஜரத்தை கொள்ளையிடுவதன் மூலமும் பெரும் செல்வத்தை சேர்த்து வைத்திருக்கிறான். அவன் மகதத்துடன் சேர்ந்துகொண்டு நம்மைத் தாக்கினால் அஸ்தினபுரி அழியும். ஆகவே பிதாமகர் சிந்தித்தார். இன்னும் சற்று பொறுப்போம், நானே நேரில் சென்று யாதவர்களிடம் பேசுகிறேன் என்றார். அமைச்சும் சுற்றமும் அரசரும் அதை ஏற்றுக்கொண்டனர். பேச்சுவார்த்தைக்காக மும்முறை பிதாமகர் துவாரகைக்குச் சென்றார். எதுவும் நிகழவில்லை.யாதவனின் உளக்குறிப்பே விளங்கவில்லை” என்றான் துரியோதனன்.

”பிதாமகர் இப்போது என்னதான் சொல்கிறார்?” என்றான் கர்ணன். “சிறந்த ஷத்ரிய அரசொன்றில் இருந்து நான் பட்டத்தரசியை கொள்வேன் என்றால் முடிசூட்டிக்கொள்ளலாம் என்று சொன்னார். ஷத்ரிய அரசர்களின் பின்துணையை நான் அதன் மூலம் அடையலாம் என்றார். கலிங்கத்திலும் மாளவத்திலும் வங்கத்திலும் கோசலத்திலும் இளவரசியர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எனக்கு பெண்தர மறுத்து விட்டார்கள்.”

“ஏன்?” என்றான் கர்ணன். “எளிய விடைதான். நான் முடிசூடிக்கொள்வேன் என்றால் பெண்கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் பெண்கொடுத்தால் மட்டுமே நான் முடிசூடமுடியும்” என்று துரியோதனன் சிரித்தான். கர்ணன் சிலகணங்கள் முகவாயை தடவியபடி இருந்துவிட்டு நிமிர்ந்து “இளவரசே, பீஷ்ம பிதாமகர் பாண்டவர்கள் சாகவில்லை என்று நினைக்கிறார்” என்றான். துரியோதனன் விழிகள் அசையாமல் நோக்கி பின்னர் “ஏன்?” என்று முணுமுணுத்தான்.

“ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அவருக்குத் தோன்றியிருந்தால் உங்களை அரசனாக ஆக்கியிருப்பார். ஐயமே இல்லை” என்றான் கர்ணன். “ஒவ்வொன்றும் அவரது திட்டமே. இந்நாட்டின் மக்களிடையே உங்களைப்பற்றி இருக்கும் எண்ணமென்ன என்று அவர் அறிவார். பாரதவர்ஷத்தில் எங்காவது ஒரு நாட்டின் சமந்த மன்னர்களிடம் கேட்டு அரசனுக்கு முடிசூடும் வழக்கம் உண்டா என்ன?” .துரியோதனன் “நான் அவர் என் தந்தை மேலுள்ள அன்பினால் அவரை அரசராக வைத்திருக்கிறார் என்று நினைத்தேன்” என்றான்.

“இல்லை” என்று கர்ணன் மீண்டும் உறுதியாக சொன்னான். “இது வேறு. அவர் பாண்டவர்களிடமிருந்து செய்தி ஏதும் வரும் என்று காத்திருக்கிறார்.” துரியோதனன் “ஏழுவருடங்களாகின்றன” என்றான். “ஆம், பாண்டவர்கள் வலுவான ஒரு துணைக்காக காத்திருக்கலாம் அல்லவா? அந்தத் துணை கிடைத்தபின்னர் அவர்கள் வெளிப்படலாம்” துரியோதனன் தலையை இல்லை என்பதுபோல அசைத்து “கர்ணா, நான் அவர்களின் எலும்புகளை பார்த்தேன்” என்றான்.

கர்ணன் சினத்துடன் “எலும்புகளை பார்த்தீர்கள், உடல்களை அல்ல” என்றான். “எதிரி அழிந்தான் என்று அரசன் தன் விழிகளால் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கின்றன நூல்கள்.” துரியோதனன் பெருமூச்சு விட்டு “அவர்கள் இருக்கிறார்கள் என்கிறாயா?” என்றான். “இருக்கலாம்… அதற்கான சான்றுகள் பீஷ்மபிதாமகரின் நடத்தையில் உள்ளன” என்ற கர்ணன் எழுந்து “நான் உடனடியாக காந்தார இளவரசரை பார்க்கவேண்டும்” என்றான்.

“கிளம்புவோம்” என்று துரியோதனன் எழுந்துகொண்டான். “நான் பெரும்பாலும் தினமும் மாதுலரை காண்கிறேன். அவர் இன்றுவரை என்னிடம் எதையும் சொன்னதில்லை” என்றபின் வெளியே நடந்தான். கர்ணன் சால்வையை சுழற்றி அணிந்தபடி எண்ணச்சுமையுடன் பின்னால் நடந்தான். தலைகுனிந்து நடந்த துரியோதனன் தேர் அருகே சென்றபோது நின்று திரும்பி மீசையை நீவியபடி “கர்ணா, இத்தனை தூரம் நடந்து வருவதற்குள் நான் உறுதியாகவே உணர்ந்துவிட்டேன், அவர்கள் சாகவில்லை. இருக்கிறார்கள்” என்றான். குழப்பத்துடன் அவன் கண்களை நோக்கி “இல்லை, அவர்கள் இறந்திருக்கவே வாய்ப்பதிகம். நான் சொன்னது பிதாமகர் அப்படி நினைக்கிறார் என்றுதான்” என்றான் கர்ணன்.

“இல்லை, அவர்கள் இருக்கிறார்கள்” என்றான் துரியோதனன். “ஆம், அவர்களின் எலும்புகளை நான் பார்த்தேன். ஆனால் ஒரே ஒருகணம்தான். உடனே பார்வையை விலக்கி கொண்டுசெல்லும்படி சொல்லிவிட்டேன். பிறகு ஒருகணம்கூட அவற்றை நான் நினைக்கவில்லை. நினைக்காமலிருக்க எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவை நினைவில் எழவே இல்லை, அவ்வளவுதான் .ஆனால் ஒரே ஒருமுறை அவை என் கனவில் வந்தன. அன்று எழுந்து அமர்ந்து உடல்நடுங்கினேன். பின் அதையும் முழுமையாக மறக்கும் வித்தையை என் அகம் கண்டுகொண்டது.”

அவன் பேசட்டும் என்று கர்ணன் காத்திருந்தான். “என்னிடம் ஒரு தாலத்தில் எலும்புகளை காட்டுகிறார்கள். நான் ஒவ்வொரு எலும்பாக எடுத்து இது வெள்ளாட்டின் எலும்பு இது சிறுத்தையின் எலும்பு என்று சொல்கிறேன். விழித்துக்கொண்டேன்” என்றான் துரியோதனன். “நான்காண்டுகள் கழித்து இதோ நடந்துவருகையில் சற்றுமுன் கண்டது போல அக்கனவை என் அகத்திலிருந்து எடுத்தேன். அந்த எலும்புகளில் யானையின் எலும்புகள் இல்லை.”

கர்ணன் ரதத்தின் தூணைப்பற்றிக்கொண்டு நின்றான். அவன் முகத்தை தலைதூக்கி நோக்கிய துரியோதனன் “ஆம், அவை வேறு ஆறுபேரின் எலும்புகள். அவர்கள் தப்பிவிட்டார்கள். எங்கள் கொலைத் திட்டத்தை அவர்கள் முன்னரே அறிந்திருக்கிறார்கள்” என்றான். தேரில் ஏறிக்கொண்டு “காந்தார அரண்மனை” என்று ஆணையிட்டபின் “ஒவ்வொன்றாக நினைவிலெழுகின்றது. அனைத்தையும் என் அகம் முன்னரே அடையாளம் கண்டு எண்ணி எடுத்து என் சுஷுப்திக்குள் சேர்த்து வைத்திருக்கிறது. அந்தத் திட்டத்தை அறிந்துகொண்டவர் விதுரர். அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அவர் மட்டும் ஒருவகை தவிப்புடனேயே இருந்தார். அதை அப்போதே கணிகர் கண்டு சொல்லவும் செய்தார். ஆனால் அதை அப்போது ஒதுக்கிவிட்டோம்.”

“வெற்றிகரமாக அனைத்தும் நிகழவேண்டுமே என்ற கவலையில் வெற்றிகரமாக நிகழும் என்ற பொய்நம்பிக்கையை மனிதர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்” என்றான் கர்ணன் புன்னகைத்தபடி. “ஆகவே அதற்கு எதிரான அனைத்து சான்றுகளையும் புறக்கணிப்பார்கள். அவற்றைக் கண்டறிந்து சொல்பவர்களை ஊக்கத்தை அழிப்பவர்கள் என்றும் அவநம்பிக்கையாளர்கள் என்றும் அடையாளப்படுத்துவார்கள். ஆனால் அகம் அனைத்தையும் அறிந்துகொண்டேதான் இருக்கும். அவையெல்லாம் சுஷுப்தியின் சேற்றில் புதைந்து கிடக்கும்.”

“விதுரர் நிலைகொள்ளாதவராக இருந்தார். அவர் பதற்றமடைந்துகொண்டிருக்கையில் சால்வையை மாற்றிமாற்றி அணிவது வழக்கம். அதை அன்று செய்தார். தருமன் அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும்போது அவர் அவன் தோள்களை பற்றிக்கொண்டு சற்றுதூரம் சென்றார்.” என்றான் துரியோதனன் கர்ணன் “அப்படியென்றால் அவருக்கு உறுதியாக உங்கள் திட்டம் தெரியாது. மெல்லிய ஐயம் மட்டும் இருந்திருக்கலாம். அவர் எச்சரித்திருக்கிறார். உறுதியாக அறிந்திருந்தால் போகவேண்டாமென்றே தடுத்திருப்பார்” என்றான்.

“இறுதிக்கணம் வரை அவரிடம் தத்தளிப்பு இருந்துகொண்டே இருந்திருக்கலாம். அவரது உளமயக்கா இல்லை ஐயத்திற்கான அடிப்படை ஏதேனும் இருக்கிறதா என்று… ஆகவே உட்குறிப்பூட்டிய சொற்கள் சில சொல்லியிருக்கக்கூடும்” என்று கர்ணன் தொடர்ந்தான். “அந்த ஐயத்தை மட்டும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பிவிட்டால் போதும் என அவர் அறிவார். ஐயம் அகவிழி ஒன்றை திறந்துவிட்டுவிடுகிறது. புறவிழிகளைவிட பன்மடங்கு கூரியது. ஒருபோதும் உறங்காதது. அது ஆபத்தைக் கண்டுபிடித்துவிடும்.”

துரியோதனன் “ஆம்” என்றான் சிலகணங்கள் கழித்து. “அவர் அந்த ஐயத்தை எப்படி அடைந்தாரென்றும் இன்று என்னால் அறியமுடிகிறது. அவர் குண்டாசியின் முகத்தை பார்த்திருக்கக் கூடும். அந்த அவைக்கூட்டத்திற்குப் பின் அவன் நடுங்கிக்கொண்டே இருந்தான். தனிமையில் அமர்ந்து ஏங்கினான். எவர் விழிகளையும் ஏறிட்டுப்பார்க்க முடியாதவனாக ஆனான். அக்கொலைத்திட்டத்தை அவன் அகத்தால் தாளமுடியவில்லை.” தேரின் தூணில் தாளமிட்டபின் “ஆனால் அவர்கள் இறந்த செய்தி வந்தபோது குண்டாசி நான் எண்ணியது போல உடைந்து போகவில்லை. அழுதுபுலம்பி காட்டிக்கொடுக்கவுமில்லை. அவன் எளிதாக ஆனதுபோல் தோன்றியது. அவன் முகம் மேலும் தெளிவுகொண்டதாக எண்ணிக்கொண்டேன்.”

“அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே” என்றான் கர்ணன். “அந்தச் செய்தியை தாளாமல் அவன் அடைந்த பெருவதை முடிந்துவிட்டது என்ற ஆறுதல்தான் அது. பாண்டவர்கள் மீது கொண்ட அன்பால், அதன் விளைவான குற்றவுணர்ச்சியால் அவன் துயர்பட்டிருப்பான். ஒரு கட்டத்தில் துயர் மட்டுமே பெரிதாக நின்றிருக்கும். அந்தத் துயரிலிருந்து விடுபடுவதை மட்டுமே விழைந்திருப்பான். அதன்பொருட்டு பாண்டவர்களை வெறுக்கவும், அவர்களை அழிக்க சதிசெய்ததை நியாயப்படுத்தவும் முயன்றிருப்பான். அந்த உள்ளப்போராட்டமே அவனை அடுத்தகட்ட வதைக்கு கொண்டுசென்றிருக்கும். அவர்களின் இறப்புச் செய்தி அவனை கணநேரத்தில் விடுவித்திருக்கும். உளையும் கட்டி இருக்கும் விரலை வாளால் வெட்டி வீசுவதற்குநிகர் அது. வாளின்புண்ணை மட்டும் ஆற்றிக்கொண்டால்போதும்.”

துரியோதனன் அதன்பின் ஒன்றும் பேசவில்லை. தேர் காந்தாரமாளிகையின் முற்றத்தில் நின்றபோது தேர்ச்சேவகன் வந்து குதிரையின் சேணங்களை பற்றிக்கொண்டான். துரியோதனன் பாய்ந்து இறங்கி கர்ணனுக்காக காத்து நின்றான். கர்ணன் உயரமானவர்களுக்கே உரிய விரைவின்மையுடன் நீண்டகால்களை மெல்ல எடுத்துவைத்து இறங்கினான். துரியோதனன் “கர்ணா, நான் வியப்பது அதையல்ல. அவர்கள் இறக்கவில்லை என்று தெரிந்ததும் என்னுள் ஏற்பட்ட ஆறுதலையும் நிறைவையும்தான்” என்றான். “இப்போது தேரில்வரும்போது எடையற்ற இறகு போல் உணர்ந்தேன். சென்ற ஏழுவருடங்களில் நான் உண்மையான மகிழ்ச்சியை அடைந்தது இப்போதுதான்.”

கர்ணன் “நீங்கள் அந்தச் சதியை அப்போதே ஏற்றுக்கொண்டிருக்க மாட்டீர்கள் இளவரசே” என்றான். “ஏனென்றால் அச்செயல் உங்கள் தந்தைக்கு உகக்காத ஒன்று. ஒவ்வொரு கணமும் உங்கள் நெஞ்சில் எடையுடன் அமர்ந்திருந்தது அவ்வெண்ணமே” என்றான். துரியோதனன் “ஆம், இதைவிடச் சிறப்பாக என் அகத்தை எவரும் அறிந்துவிடமுடியாது. சென்ற ஏழுவருடங்களில் ஒன்பதுமுறை மட்டுமே நான் தந்தையின் அவைக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் விழிகளற்றவராக இருப்பது எத்தனை சிறந்தது என எண்ணிக்கொண்டேன். விழியிருந்தால் நான் அவர் பார்வைமுன் உடைந்து சரிந்திருப்பேன்” என்றான்.

பின்னர் உரக்க நகைத்து “என் இளையோரின் விழிகளையே என்னால் ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை கர்ணா… இத்தனைநாள் திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்தேன். மதியவெயில் சரிந்தபின்னர் படுக்கை விட்டெழுந்தேன். இங்கே வந்து மாதுலரிடம் சதுரங்கமாடினேன். குடித்தேன். நிலையழிந்து சரிந்து தேரில் விழுந்து விடியற்காலையில் சென்று படுக்கையில் விழுந்தேன். ஏழுவருடங்களை சகடம்சேற்றில் புதைந்த தேரைத் தள்ளுவதுபோல தள்ளி நீக்கிக் கொண்டிருந்தேன்.”

அவர்களைக் கண்டதும் சகுனியின் அணுக்கச்சேவகர் கிருதர் வந்து வணங்கினார். துரியோதனன் “மாதுலர் எழுந்துவிட்டாரா?” என்றான். “அவர் காலையிலேயே எழுந்துவிட்டார்” என்றார் கிருதர். “காலையில்தானே நான் சென்றேன்” என்று துரியோதனன் வியக்க அவர் ஒன்றும் சொல்லவில்லை. “கணிகர் வந்துள்ளாரா?” என்றான் துரியோதனன் மீண்டும். “இல்லை… அவர் பின்மதியம்தான் வருவார்” என்றார் கிருதர். துரியோதனன் “எங்கள் வருகையை அறிவியுங்கள்” என்றான். கிருதர் சென்றதும் “வியப்புதான். மாதுலர் பெரும்பாலும் துயில்வதேயில்லை” என்றான். கர்ணன் புன்னகையுடன் “துயிலும் சகுனித்தேவரை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அவர் பாறைமறைவில் காத்திருக்கும் ஓநாய். கண்களை மூடினாலும் கூட சித்தம் விழித்திருக்கும்” என்றான்.

“அவருக்கு பாண்டவர் உயிருடனிருப்பது தெரிந்திருக்குமா?” என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகையுடன் “உறுதியாகத் தெரிந்திருக்கும்.” என்றான். கிருதர் வந்து “வருக” என்றார். அறைக்குள் கால்களை ஒரு சிறிய பீடம் மீது நீட்டிவைத்து பகடையாடிக்கொண்டிருந்தார் சகுனி. கர்ணனைக் கண்டு அவர் திரும்பியபோது வலியில் முகம் சுளித்து ஒருகணம் கண்களை மூடினார். கர்ணன் “வணங்குகிறேன் காந்தாரரே” என்றான். “சிறப்புறுக” என்று வாழ்த்திய சகுனி அமரும்படி கைகாட்டினார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

கர்ணன் அமர்ந்ததும் சகுனி “எங்கிருந்தாய்?” என்றார். கர்ணன் “வேசரநாட்டில்… அதன்பின் சிலகாலம் திருவிடத்தில்” என்றான். சகுனி தலையசைத்து “விற்கலைகளில் இங்கிலாதவற்றை கற்றிருப்பாய் என நினைக்கிறேன்” என்றார். கர்ணன் புன்னகைத்தான். “அவன் சென்றபோதிருந்த நிலை அல்ல இப்போது. இன்று அர்ஜுனன் இறந்துவிட்டான். அவன் எவரையும் எதிரியென்றே எண்ணவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். ஏறிட்டு துரியோதனன் முகத்தை நோக்கியதுமே அவன் சொல்லவருவதென்ன என்று சகுனி புரிந்துகொண்டார். புன்னகையுடன் தாடியைத் தடவி “ஆம், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்” என்றார்.

சிலகணங்கள் அமைதி நிலவியது. ஒவ்வொருவர் நெஞ்சிலும் ஒரு சொல் எழுந்து ததும்பி கனத்தது. துரியோதனன் “அதை எப்போதிருந்து அறிவீர்கள்?” என்றான். “எலும்புகளைப் பார்த்ததுமே” என்றார் சகுனி. துரியோதனன் உடலை அசைத்தபோது பீடம் முனகியது. பெருமூச்சுடன் எளிதாகி துரியோதனன் “தாங்கள் என்னிடம் சொல்லவே இல்லை. ஒரு சிறு சான்றுகூட உங்கள் சொல்லிலும் செயலிலும் வெளிப்படவில்லை” என்றான். “சொல்லியிருந்தால் உன் உடலிலேயே அது வெளியாகியிருக்கும். உன் உடன்பிறந்தார் உன் விழிகளைக்கொண்டே அதை அறிந்திருப்பார்கள். அதன்பின் அது எவ்வகையிலும் மறைபொருள் அல்ல.”

“ஆம்” என்றான் துரியோதனன். சகுனி சிரித்துக்கொண்டு “ஆகவே அது மறைபொருளாகவே இருக்கட்டுமென எண்ணினேன். அவர்கள் வெளிப்படுவதற்குள் நீ மணிமுடி சூட்டிக்கொள்ள முடியும் என்று திட்டமிட்டேன்” என்றார். கர்ணன் “அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்றான். சகுனி “எங்கிருந்தார்கள் என்பது மட்டும்தான் தெரியும்” என்றார். “இடும்பவனத்தில்… அங்கேயே ஏழுவருடங்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்னரே அச்செய்தியை நான் அறிந்தேன். அதுவும் மிகநுட்பமாக ஒற்றர் செய்திகளைக்கொண்டு நானே உய்த்தறிந்ததுதான்.”

சகுனியே சொல்லட்டும் என அவர்கள் காத்திருந்தனர். “என் பிழை நான் படைசூழ்தலிலும் கணிகரை நம்பியது” என்றார் சகுனி. “அரசு சூழ்தலில் அவர் நிகரற்றவர். ஆனால் அவரது அனைத்துத் திறன்களும் ஓர் அறைக்குள்தான் நிகழமுடியும். மானுடரின் அகத்தில் வாழும் இருளுக்குள் அவரால் கருநாகம்போல ஓசையின்றி நுழைய முடியும். அதுவே அவரது ஆற்றல். படைசூழ்வது முற்றிலும் வேறானது. அங்கே மனிதன் இயற்கைமுன் நிற்கிறான். மண்ணையும் வானையும் எதிர்கொள்கிறான். தன் அச்சத்தாலும் ஆசையாலும் ஐயத்தாலும் அவன் இயக்கப்படுவதில்லை. தன் அடிப்படை விலங்குணர்வால் இயக்கப்படுகிறான்.”

“ஒருமுறையேனும் படைநடத்திச் செல்லாத எவரும் படைசூழ்பவனின் அகத்தை அறியமுடியாது. அக இருளின் சிறுமைகளில் இருந்து விடுபட்டு அவன் அடையும் ஆற்றலையும் நம்பிக்கையையும் உணர்ந்துகொள்ள முடியாது” என்றார் சகுனி. “அரக்குமாளிகையில் அவர்கள் இல்லை என்றதுமே நான் அதைச்சுற்றி ஆய்வுசெய்யச் சொன்னேன். அந்த மூடன் புரோசனன் நீண்ட சுரங்கப்பாதை ஒன்றை அதற்குள் அமைத்திருந்திருக்கிறான், அவன் தப்பிச்செல்வதற்காக. அதனூடாக அவர்கள் தப்பிச்சென்றதை உணர்ந்தேன். கணிகர் அவர்கள் எங்கு சென்றிருக்கக் கூடும் என்று எட்டு கணிப்புகளை அளித்தார்.”

“அவர்கள் தங்களுக்கு உதவக்கூடிய நாடுகளுக்கே செல்வார்கள் என்று நான் கணித்தேன். துவாரகைக்குச் செல்லும் வழியில் அவர்களைப் பிடிக்க வலைவிரித்தேன். அவர்கள் மகதத்தை நோக்கி செல்வார்கள் என்றார் கணிகர். ஜராசந்தனிடம் அஸ்தினபுரியை கைப்பற்றி அவனிடமே அளிப்பதாக உடன்படிக்கை இட்டு படைபெற்று அஸ்தினபுரியை தாக்குவார்கள் என்றார். அதை தருமன் செய்யமாட்டான் என்று நான் எண்ணினேன். ஆயினும் அவ்வழியிலும் காத்திருந்தேன்.”

“அனைத்து ஷத்ரியநாடுகளிலும் அவர்களைத் தேடி என் ஒற்றர்கள் அலைந்தனர். சேர்ந்து சென்றால் ஐயத்திற்கிடமாகும் என அவர்கள் பிரிந்துசெல்வார்கள் என்று கணித்தேன். பீமன் ஆசுரநாடுகளுக்கும் அர்ஜுனனும் குந்தியும் யாதவர் நாடுகளுக்கும் தருமன் தொலைதூரக் கடலோர நாடுகளுக்கும் செல்லக்கூடுமென எண்ணினேன். ஏழாண்டுகாலம் ஒவ்வொருநாளும் இங்கிருந்து ஒற்றர்செய்திகளுக்காக செவிகூர்ந்தேன். அவர்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என்று கணிகர் உய்த்து அறிந்து சொன்ன இடும்பவனத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.”

“இங்கே ஓர் அறையில் இருந்துகொண்டு சிந்திக்கும் மதிசூழ்கையாளன் இடும்பவனத்திற்குள் நுழைவதையே மிகமிகப் பிழையான முடிவாக எண்ணுவான். சித்தச்சமநிலை கொண்ட எவரும் அம்முடிவை எடுக்கப்போவதில்லை என மதிப்பிடுவான். இடும்பர்கள் அயலவரைக் கண்டால் அக்கணமே கொன்று உண்பவர்கள். அவர்களின் காட்டில் அயலவர் வாழ ஒப்பமாட்டார்கள். அதில் எந்தவித சித்தநெகிழ்வும் அறமுறையும் அற்றவர்கள். தன்னந்தனியாக அக்காட்டுக்குள் செல்வது தற்கொலையேதான். அவர்கள் எவ்வகையிலும் பாண்டவர்களின் எதிர்காலத்திற்கு உதவுபவர்கள் அல்ல. இடும்பவனத்துக்கு அப்பாலுள்ளது மிகப்பெரிய புல்வெளி. மீண்டும் அடர்ந்த காடு…”

“ஆனால் நாம் இப்படி எண்ணக்கூடும் என்பதே இடும்பவனத்தை அவர்களின் முதல்தேர்வாக ஆக்கிவிடுகிறது. பீமனைப்போன்ற ஒரு தோள்வீரனும் பார்த்தனைப்போன்ற வில்வீரனும் இருக்கையில் அங்கு சென்றால்தான் என்ன என்ற துணிச்சல் எழுவதும் இயல்பே” என்றார் சகுனி. “நான் விதுரரை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். அவருக்கு பாண்டவர்கள் இருக்குமிடம் தெரியும் என்று எண்ணினேன். அவருக்கு வரும் அத்தனை செய்திகளையும் அறிந்துகொண்டிருந்தேன். பின்னர் அறிந்துகொண்டேன், அவருக்கே பாண்டவர்கள் இருக்கும் இடம் தெரியாது என. தெரிந்துகொள்ள அவரும் நாடெங்கும் ஒற்றர்களை அனுப்பிக் கொண்டிருந்தார். செய்திகள் ஏதும் வராமை கண்டு அவரும் பதற்றத்துடன் இருந்தார்.”

”அதுதான் என்னை ஏமாற்றியது” என்று சகுனி தொடர்ந்தார். “அவர் அவர்களை இடும்பவனத்திற்குக் கொண்டு சென்று விடும்படி சொல்லவில்லை. கங்கைக்கு அப்பால் கொண்டுவிடும்படி மட்டுமே சொல்லியிருந்தார். அங்குள்ள காட்டைப்பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. கங்கைக்கு அப்பாலுள்ள மலைக்கிராமங்களில் எதிலேனும் பாண்டவர்கள் செல்லவேண்டும், சென்றதுமே செய்தியனுப்பவேண்டும் என அவர் எண்ணியிருந்தார். மிகவும் பிந்தியே அவரும் இடும்பவனம் பற்றி அறிந்தார். அங்கே பாண்டவர்கள் சென்றிருக்கக் கூடுமென அவரும் எண்ணவில்லை.”

“அங்கே செல்லலாம் என்ற முடிவை பார்த்தன் எடுத்திருப்பான்” என்றான் கர்ணன். “இல்லை அது பீமனின் முடிவு. ஏனென்றால் அது குரங்குகளின் காடு. அவை இருக்கும் வரை அவன் படைகளால் பாதுகாக்கப்பட்டவனே. அவை அவனை சாகவிடாது என அவன் அறிவான்” என்றார் சகுனி. “பீமன் அங்கே இடும்பர்குலத் தலைவன் இடும்பனைக் கொன்று அவன் தங்கை இடும்பியை மணந்திருக்கிறான். அவர்களுக்கு ஒரு மைந்தன் பிறந்திருக்கிறான். அவன் பெயர் கடோத்கஜன். இத்தனைநாளும் அவர்கள் அருகே உள்ள சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்திருக்கிறார்கள்.”

“சாலிஹோத்ர குருகுலமா?” என்று கர்ணன் கேட்டான். “அவர்களைப்பற்றி கேள்விப்பட்டதே இல்லையே!” சகுனி “அவர்கள் அதர்வ வேதத்தின் ஒரு பிரிவை சார்ந்தவர்கள். சாலிஹோத்ர மரபு தனக்கென தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் கொண்டது. சாலிதீர்த்தம் என்ற சுனையையும் அதனருகே நின்றிருக்கும் சாலிவிருக்‌ஷம் என்னும் மரத்தையும் அவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் அவர்களின் தெய்வம். அஸ்வசாஸ்திரத்தில் அவர்கள் ஞானிகள். பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளை வருடத்திற்கு ஒருமுறை கொண்டுவந்து கங்கைக்கு மறுபக்கம் ரிஷபபுரி என்னுமிடத்தில் உள்ள சந்தையில் விற்பது மட்டுமே அவர்களுக்கும் புறவுலகுக்குமான தொடர்பு. பலநூற்றாண்டுகளாக இப்படித்தான். ஆகவே அவர்களைப்பற்றி நம் மெய்ஞான மரபுகள் எதற்குமே அறிமுகம் இல்லை” என்றார்.

“குந்திதேவி அங்கிருந்து சாலிஹோத்ரரின் மாணவர்கள் வழியாக ஓலைகளை கொடுத்தனுப்பி பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் தன் ஒற்றர்களிடம் தொடர்புகொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருமுறைகூட அஸ்தினபுரிக்கோ துவாரகைக்கோ செய்தி அனுப்பவில்லை. நாம் அச்செய்திகளை இடைமறிக்கக் கூடுமென்று எண்ணிய அவர்கள் மதிநுட்பத்தை எண்ணி நான் வியந்துகொண்டே இருக்கிறேன்.” கர்ணன் “எப்படி இப்போது தெரியவந்தது?” என்றான். “சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்து அவர்கள் கிளம்பி கங்கையைக் கடந்தபோதே அவர்களை ஒற்றர்கள் கண்டுகொண்டார்கள். அதன்பின்பே அவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரிந்தது.”

துரியோதனன் “இப்போது அவர்கள் எங்கே?” என்றான். “கங்கையைக் கடந்து சபரிதீர்த்தம் என்ற ஊரை அடைந்து அங்கிருந்து காளகூடக் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள்.” துரியோதனன் எழுந்து “காளகூடக் காட்டுக்கா? அப்படியென்றால் அவர்கள் சத்ராவதிக்குள் நுழையப்போகிறார்கள்” என்றான். “அங்கே அஸ்வத்தாமன் ஆள்வதை அவர்கள் அறிவார்கள். அவன் அர்ஜுனன் மீது காழ்ப்புகொண்டவன். அவர்கள் நேராக காடுவழியாக உசிநாரர்களின் நிலத்துக்குத்தான் செல்வார்கள். உசிநாரபூமி வெறும் மலைக்காடு. மலைவேடர்களும் யாதவர்களும் வாழும் ஓரிரு சிற்றூர்கள் மட்டும் கொண்டது.”

“அவர்கள் அங்கே ஏன் செல்லவேண்டும்?” என்று கர்ணன் கேட்டான். “உசிநாரர்களிடம் மணவுறவு கொள்ள அவர்கள் விழைய மாட்டார்கள். உசிநாரர்கள் வேடர்குலத்து அரசர்கள். படைபலம் குறைந்தவர்கள். சத்ராவதியை அஞ்சிக்கொண்டிருப்பவர்கள்.” சகுனி “அங்கமன்னரே, அவர்கள் செல்வது காம்பில்யத்திற்கு. அங்கே துருபதன் தன் மகளுக்கு சுயம்வரம் அறிவித்திருக்கிறான்” என்றார்.

“ஆம், அவளைப்பற்றி கேட்டிருக்கிறேன்” என்று துரியோதனன் சொன்னான். “பிதாமகர் பீஷ்மர் அவளை எனக்காக மகள்கொடை கேட்டு அவரே நேரில் சென்று துருபதனிடம் பேசினார். அவளுக்கு சுயம்வர அறிவிப்பு வரும், அப்போது வாருங்கள் என்று துருபதன் சொல்லிவிட்டார்.” சகுனி “அவர் அப்படி சொல்லவில்லை என்றால்தான் வியப்பு. அவள் பேரழகி என்கிறார்கள். அரசு சூழ்தலில் நிகரற்றவள் என்று ஷத்ரியநாடுகள் முழுக்க அறியப்பட்டுவிட்டாள். அனைத்தையும் விட அவள் பிறவிநூலை கணித்த நிமித்திகர் அனைவருமே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக ஆவாள் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

துரியோதனன் “அப்படியென்றால் மகதனும் வந்து வாயிலில் நின்றிருப்பான். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக ஆவதுதானே அனைவருக்கும் கனவு?” என்றன். சகுனி புன்னகைத்து “அது வெறும் கனவு மட்டும் அல்ல. பாஞ்சாலம் இன்று வைத்திருக்கும் படைகளையும் அவற்றை தலைமைதாங்கி நடத்தும் ஐந்து குலங்களைச் சேர்ந்த பன்னிரு இளவரசர்களையும் கொண்டு நோக்கினால் அது ஒரு பெரும் வாக்குறுதியும்கூட” என்றார்.

“அங்கு செல்கிறார்களா?” என்று கர்ணன் தனக்குத்தானே என சொன்னான். “ஆம், துருபதன் இன்று நடுநிலை எடுக்க விழைகிறான். எவருக்கு பெண் கொடுத்தாலும் பகைமையை ஈட்டநேரும். இளவரசி கணவனை தேர்வுசெய்தால்கூட அது அரசியல் சூழ்ச்சியாகவே கருதப்படும். படைக்கலப்போட்டி ஒன்று வைத்து வெல்பவனுக்கே இளவரசி என்றால் ஷத்ரியர்கள் எவரும் எதிர்க்கமுடியாது. வென்று இளவரசியை மணப்பவனை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்” என்றார் சகுனி. “அதுவே பாண்டவர்களை ஈர்க்கிறது. அர்ஜுனனும் பீமனும் செல்வது அதை எண்ணியே. அங்குள்ள உடல்வலுப்போட்டிகளில் பீமன் வெல்லமுடியும். விழிகூர்மைப் போட்டிகளில் அர்ஜுனன் வெல்வான்.”

அவர்கள் அவரது சொற்களை முன்னரே ஆன்மாவால் கேட்டுவிட்டிருந்தனர். சகுனி “அவர்களை வெல்லவேண்டும் என்றால் நீங்களிருவரும் செல்லவேண்டும்” என்றார். “எங்கோ ஒரு களத்தில் கர்ணன் அர்ஜுனனையும் தார்த்தராஷ்டிரன் பீமனையும் எதிர்கொண்டாகவேண்டும். மண்ணுக்காக நிகழும் அந்தப்போர் இன்றே பெண்ணுக்காக நிகழட்டுமே!”

“ஆம் மாதுலரே, அதுவே சிறந்த வழி. முதலையை விழுங்கிய மலைப்பாம்பின் கதையை இளமையில் கற்றிருக்கிறேன். அதுபோல இருக்கிறது பாண்டவர்களுக்கும் நமக்குமான போர். வாழ்வுமில்லை, சாவுமில்லை. இங்கே இப்படி முடிந்தால் நன்றே. எந்த முடிவென்றாலும்” என்றபின் துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆம்” என்றான் கர்ணன்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஇயல் விருது எனக்கு…
அடுத்த கட்டுரைசயாம் மரணரயில் -ஆவணப்படம்