நண்பர் ஷாஜி வலைப்பூ தொடங்கியிருக்கிறார். http://shajiwriter.blogspot.
ஓர் இசைரசிகராக ஷாஜிக்கு விரிவான அனுபவம் உண்டு. இசையால் ஈர்க்கபப்ட்டு அதன்மூலம் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தால் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர். அதன் பின் அக்டந்த இருபதுவருடங்களுக்கும் மேலாக அவரது அவழ்க்கை இசையுடன் இணைந்தே வளர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் ஆங்கில இசைக்குழு ஒன்றை நடத்தியிருக்கிறார். இசை வெளியீட்டு நிறுவனங்களில் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார். இப்போது விளம்பரக்கருத்துகள், விளம்பரப்பாடல்கள் எழுதுபவராக பணியாற்றுகிறார்.
தாய்மொழியாகிய மலையாளம் தவிர தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி,வங்காளி மொழிகளில் ஷாஜிக்கு ஞானம் உண்டு. மேலைநாட்டு பரப்பு இசை, செவ்வியல் இசை, தேவாலய இசை ஆகியவற்றிலும் நாட்டார் இசைமரபுகளிலும் கடந்த இருபதாண்டுக்காலமாக தீவிரமான அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார். இந்துஸ்தானி இசையில் அவருக்கு நெடுங்கால ரசனை உண்டு. இத்துறை சார்ந்த இசை நிபுணர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இசை சேகரிப்பாளர்கள் ஆகியோருடன் நேரடியான பழக்கமும் ஷாஜிக்கு உண்டு. அவரது வாழ்க்கை ஒவ்வொரு கணமும் இசையுடன் இணைந்தது.
ஷாஜியின் இசைக்கட்டுரைகளை நான் தமிழாக்கம் செய்தேன். பெரும்பாலும் அவை ஆங்கிலவடிவில் பல இதழ்களில் அதன் பின்னர் வெளியாயின. இன்று தமிழில் ஷாஜிக்கு என தனியான வாசகர் வட்டம் உண்டு. அரிய தமிழ் மலையாளப்பாடல்கள் அவரது சேகரிப்பில் உள்ளன.
ஷாஜி சலீல் சௌதுரி இசைமீது அபாரமான ஆர்வம் கொண்டவர். அதை பக்தி என்றே சொல்ல வேண்டும். சலீல் சௌதுரி ·பவுண்டேஷனின் அமைப்பாளர் அவர்.
ஷாஜியின் வலைப்பூவில் அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் அவற்றுடன் தொடர்புள்ள இசைப்பாடல்களும் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன. இசைரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு தளமாக அது அமையலாம்.