பத்ரி சேஷாத்ரி பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் விதம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது என்றார்கள். முக்கியமான சில எதிர்வினைகளை மட்டும் தேர்ந்து அளிக்கும்படி சொன்னேன். தொலைபேசியில் நான் சொன்ன கருத்துக்களை எழுதியே ஆகவேண்டும் என்று அரங்கசாமி சொன்னார்.அனேகமாக அனைவரும் எதிர்வினை ஆற்றிவிட்டமையால் என் கருத்தை எழுதலாமென்று தோன்றியது.
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ஏற்கனவே வேறு சொற்களில் அசோகமித்திரனால் சொல்லப்பட்டதுதான். வெவ்வேறு பிராமணர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். பொதுவாக தமிழ்பிராமணர்களின் ஆதங்கம் அது என்று சொல்லலாம். அதை நான்கு கருத்துக்களாகச் சுருக்கலாம்.
1. தமிழ்பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து மெல்லமெல்ல விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
2. தமிழ்பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்
3. தமிழ்பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைக்க அனுமதிக்கப்படுவதில்லை.
4 இந்நிலைகாரணமாக தமிழ்பிராமணர்கள் மெல்லமெல்ல தமிழகத்தைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.
எதிர்வினைகளைப்பற்றி..
இதைப்பற்றி வந்த எதிர்வினைகளே பெரும்பாலும் பிராமணர்களக் கீழ்த்தரமாக வசைபாடி, அவதூறு செய்து அவமதிப்பவைதான். பத்ரி சேஷாத்ரி சொன்னவற்றுக்கு ஆதாரங்களைத்தான் எழுத்தில் அளித்துக்கொண்டிருக்கிறோம் என்றுகூட அறியாத மூர்க்கமே அவற்றில் வெளிப்பட்டது.
இன்னொருவகை எதிர்வினை, பிராமணர்களிடமிருந்து வந்தது. தங்களை முற்போக்குப் பிராமணர்கள் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையின் வெளிப்பாடுகள் அவை. எவ்வகையிலும் சமநிலை அற்றவை.அந்தக்குரல் எப்போது பிராமணக் காழ்ப்பு இங்கே எழுந்ததோ அன்றுமுதல் இங்கே இருந்துகொண்டிருக்கிறது. அந்தக்குரல் உடனே கவனிக்கப்படும் என்பதும், அதைச் சொன்னவர் தற்காலிகமான பாராட்டுகளுக்கு பாத்திரமாவார் என்றும் சொல்பவர்கள் அறிவார்கள்.
ஆனால் ஏதேனும் ஒரு கருத்தில் எப்போதேனும் அந்தப்பிராமணர்கள் அவர்களின் ஆதரவாளர்களான அந்த இடைநிலைச்சாதி சாதிவெறியர்களுடன் மாறுபடுவார்கள் என்றால் ‘என்ன இருந்தாலும் நீ பாப்பான், நீ அப்டித்தானே சொல்லுவே’ என்ற வசையே அவர்களுக்கும் கிடைக்கும். காலமெல்லாம் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்த ஞாநி கருணாநிதியின் முதுமையைச் சுட்டிக்காட்டிவிட்டார் என்பதற்காக அவரை பார்ப்பனன் என வசைபாடி ஏழெட்டு கட்டுரைகளை அவரது நண்பர்களே எழுதியிருந்தனை நினைவுகூர்கிறேன்
இந்த எதிர்வினைகளின் அரசியலில் நான் கூர்ந்து நோக்கியது தலித்துக்களின் குரலை. எனக்கு ஒரு குரல்கூட கண்ணுக்குப்படவில்லை. யோசித்துப்பார்க்கிறேன். சென்ற சில ஆண்டுகளாக எனக்கு மிக நெருக்கமாக உள்ள தீவிர தலித் செயல்பாட்டாளர்களான நண்பர்கள் எவரேனும் இந்த வகையான காழ்ப்பைக் கக்கும் சொற்களைச் சொல்வார்களா என? வே.அலெக்ஸ் போன்ற ஒருவர் பிராமணர்களை அல்ல எந்த ஒரு மக்கள்திரளையும் பற்றி வெறுப்புடன் ஒரு சொல் சொல்லிவிடுவாரா? பாரிசெழியனால் சொல்லமுடியுமா?
நான் கேட்டதே இல்லை. ஒருமுறைகூட. தனிப்பேச்சுகளில்கூட. மாறாக ஸ்டாலின் ராஜாங்கம் ஒருமுறை சொன்னார். ‘சாதிக்காழ்ப்பு என்றால் என்ன என்று எங்களுக்குத் தெரியும். அதனால் எந்த ஒரு சாதியையும் வெறுப்பின் குரலால் அடையாளப்படுத்த எங்களால் முடியாது’ அன்று ஏற்பட்ட மகத்தான மனநெகிழ்ச்சியை இன்று நினைவுகூர்கிறேன்.
பகுதி 1. பத்ரி சேஷாத்ரிக்கு பதில்
என் அனுபவத்தைக்கொண்டு, நேரடியாக மேலே சொல்லப்பட்ட நான்கு கருத்துக்களையும் பரிசீலிக்க விழைகிறேன்.இதில் மடக்கி மடக்கி விவாதம் செய்பவர்களிடம் சொல்ல எனக்கு ஏதுமில்லை. வெறுப்பரசியல் செய்வதைப்போல எளியது ஏதுமில்லை. எந்தத் தரப்பையும் எடுத்துக்கொண்டு புள்ளிவிவரங்களை அள்ளிவைத்து மணிக்கணக்காக வாதிடலாம்.வெறுப்பு அளிக்கும் வேகம் மட்டும் இருந்தால்போதும்
நான் சொல்வது நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவை. எழுத்தாளன் என்பவன் ஒருவகையில் அனைவரும் உள்ளூர அறிந்தவற்றை மீண்டும் சொல்பவனே. அதற்காக சமூகத்தின் ஆழ்மனத்துக்குள் செல்பவன் அவன். நான் சொல்வனவற்றை மனசாட்சியை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும் எவரும் அறிய முடியும். இலக்கியவாதியின் உண்மையான வாசகர்கள் அவர்களே.
அதற்கு அப்பால் ஒன்றுண்டு. இன்று இந்தவிஷயத்தில் பேசிக்கொண்டிருக்கும் எவரின் குரலுடனும் சேர்ந்தது அல்ல என் குரல். இது இந்தக்காலகட்டத்தின் முதன்மை படைப்பிலக்கியவாதியின் குரல். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் காலத்தில் மறைந்தபின்னும் எஞ்சும் குரல் இது
ஆம், எவர் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் இதை மறைக்க முடியாது. இது இங்கே ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். இதை மறுப்பவர்களின் மனசாட்சியுடனும் பேசிக்கொண்டுதான் இருக்கும். என் ஆசான் ஜெயகாந்தன் இதைவிட வெறுப்பு அனலடித்த காலகட்டத்தில் சிங்கம் போல மேடையேறி நின்று முழங்கிய கருத்துக்கள்தான் இவை
ஒன்று: பிராமணர்களும் அதிகாரமும்
பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பது ஒருவகையில் உண்மை. ஆனால் அது வேறுவழியில்லாமல் காலமாற்றத்தில் நிகழக்கூடியது. தவிர்க்கமுடியாதது. வளர்ச்சியின் ஒரு பகுதி அது. ஆகவே அறச்சார்பு கொண்டது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபின் ஆற்றப்பட்ட உரைகளில் ஒன்றில் நேரு இதைச் சொல்கிறார். இந்தியச் சுதந்திரப்போராட்டம் பெரும்பாலும் உயர்சாதியினரால் நடத்தப்பட்டது. ஏனென்றால் அன்று அவர்களே கல்விகற்றவர்கள். ஆனால் சுதந்திரத்துக்குபின் வந்த ஜனநாயக அரசியல் பெரும்பான்மையினராக உள்ள கீழ்ப்படிநிலைச் சாதிகளுக்கே சாதகமானதாக இருக்கும். அதுவே ஜனநாயகத்தின் வழிமுறை. ஆகவே உயர்சாதியினர் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டும் என்றார் நேரு
நேற்றைய நிலப்பிரபுத்துவச் சாதியமைப்பில் உயர்சாதியினராக இருந்த மூன்றுதரப்பினரே அதிகாரத்தை வகித்தனர். புரோகிதச் சாதியினர் [பிராமணர்] நிலவுடைமைச் சாதியினர் [வேளாளர், முதலியார்] வணிகச் சாதியினர் [செட்டியார்]
ஜனநாயகம் வந்தபோது இந்த உயர்சாதிகளின் அதிகாரம் மெல்லமெல்ல இல்லாமலாகியது. சென்ற அரைநூற்றாண்டில் நாம் காணும் படிப்படியான சமூகமாற்றம் என்பது முதல்படிநிலையில் இருந்த இச்சாதிகளின் சரிவே.
இன்று வேளாண்மைநிலம் பெரும்பாலும் வேளாளர், முதலியார்களின் கையை விட்டுச் சென்றுவிட்டது. நாட்டின் நில உச்சவரம்புச்சட்டத்தால் அவர்களின் நில உரிமை பறிக்கப்பட்டது. முழுக்கமுழுக்க செட்டியார்களிடமிருந்த தொழில்களில் பெரும்பாலானவை இன்று இடைநிலைச்சாதிகளிடம் சென்றுவிட்டிருக்கின்றன.
இதேபோன்ற ஒரு வீழ்ச்சியே பிராமணர்களுக்கும் ஏற்பட்டது. இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. இந்தியாமுழுக்க நிகழ்ந்தது, நிகழ்ந்து வருவது. தென்மாநிலங்களில் கேரளம், தமிழகம்,கர்நாடகம் ஆகியவை இந்த வேகம் கூடுதலாக உள்ளது.
முதல்படிநிலைச் சாதிகளில் பிராமணர்களின் நிலஉரிமை என்பது கொஞ்சம் மாறுபட்டது. அது கைவச உரிமை அல்ல, வரியில் ஒரு பங்கைக் கொள்ளும் உரிமை மட்டுமே.சோழர்களின் ஆட்சியில் அவ்வுரிமை அளிக்கப்பட்டது. பின்னர் நாயக்கர் ஆட்சியில் அவை மேலும் உறுதி செய்யப்பட்டன.
மன்னராட்சி மறைந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்ததுமே அந்த வரி அவர்களுக்கு வராமலாகியது. அவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கில அரசில் பணியில் சேர்ந்து அவ்வீழ்ச்சியை எதிர்கொண்டார்கள். அவர்களுக்கு நெடுங்காலமாக கல்விகற்றுவந்த ஒரு குலமரபிருந்தமையால் அதற்கேற்ற மனநிலையும் குடும்பச்சூழலும் இருந்தது.
ஆங்கில ஆட்சிக்காலத்தில் பிராமணர் வகித்த பதவிகள் இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வருவதற்கு முன்னரே குறையத்தொடங்கின. 1920களிலேயே அரசுப்பதவிகளில் கல்விகற்று மேலே வந்த பிற சாதிகள் உரிமைகோரிப் பெறத் தொடங்கின.
தென்னகத்தில் பிராமண வெறுப்பின் விதை இந்தப் போட்டி வழியாகவே உருவாகியது. உருவாக்கியவர்கள் பிராமணர்களிடம் அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட நாயர்கள். முக்கியமாக திருவிதாங்கூரில் இது ஆரம்பித்தது. சுவதேசாபிமானி ராமகிருஷ்ணபிள்ளை என்பவர் இதன் கருத்தியல் முதல்வர்.
இவரிடமிருந்து இக்கருத்துக்கள் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் பகுதியாக இருந்த வடகேரளத்துக்குச் சென்றன. அங்கிருந்து சென்னைக்கு வந்தன. ஆரம்பகால பிராமண வெறுப்பு அரசியலை முன்வைத்தவர்கள் டி.எம்.நாயர் போன்ற மலையாளிகள். பிராமணரல்லாதோர் இயக்கம் பின்னர் தெலுங்கர்களைச் சேர்த்துக்கொண்டு வளர்ந்தது. திராவிட இயக்கமாக மாறியது
அத்துடன் கிராமங்களில் கிராமகணக்குப்பிள்ளையாக பிராமணர்கள் வகித்த பாரம்பரியப் பதவிகள் இந்தியா முழுக்க அவர்களிடமிருந்து காங்கிரஸ் அரசுகளாலேயே பறிக்கப்பட்டன. கிராம ஆசிரியர்களாக அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தை நிறுத்தலாக்கியவர் ராஜாஜி. நவீனக் கல்விமுறையைக் கொண்டுவருவதற்காக அவர் இதைச்செய்தார்.
அதன்பின் இந்தியா முழுக்க கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தங்கள் பிராமணர்களின் நிலவுரிமையை இல்லாமலாக்கின. தமிழகத்தில் அதைக்கொண்டுவர வாதிட்டவர் ராஜாஜிதான்.1962ல் காமராஜ் ஆட்சிக்காலத்தில் அது சட்டமாகியது. அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் சுதந்திரத்துக்கு முன்னும்பின்னும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவானவை. தேசிய அளவில் நடைமுறைக்கு வந்தவை
ஆகவே பிராமணர்கள் மட்டும் அதிகாரத்தில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள், பிராமணர்களை திராவிடக்கட்சிகள் ஒடுக்கி அதிகாரமற்றவர்களாக ஆக்கின என்பது ஒரு மனப்பிரமை மட்டுமே. உயர்படிநிலைகளில் இருந்த சாதிகளில் எண்ணிக்கைபலம் அற்ற அத்தனை சாதிகளுமே இந்தியாவில் ஜனநாயகம் வந்தபோது அதிகாரத்தை இழந்தன. அது ஜனநாயகத்தின் இயல்பான போக்கு.
சுதந்திரத்துக்குப்பின் கல்வி பரவலானபோது அந்தப்போக்கு மேலும் விரைவுகொண்டது. இதில் எண்ணிக்கைபலம் கொண்ட ஆதிக்கசாதிகள் மட்டும் தாக்குப்பிடித்து நீடித்தன. கேரளத்தில் நாயர்களும் சிரியன் கிறித்தவர்களும் உதாரணம்.
ஆனால் இவ்வாறு அதிகாரமிழந்த உயர்சாதிகளிலேயே கூட பிராமணர்கள் பிறரை விட ஒரு படிமேல் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் முன்னரே சென்னை போன்ற நகரங்களில் குடியேறி, அரசுடன் ஒத்துழைத்து தொழில்களில் காலூன்றிவிட்டமையால் பிராமணர்களுக்குரிய பெருந்தொழில் நிறுவனங்கள் இங்கே இருந்தன. தனியார்துறைகளில் வேலைவாய்ப்புகள் இருந்தன. உதாரணமாக, டிவிஎஸ் போன்ற ஒரு குழுமம் பிராமணர்களுக்கு உள்ளது. வேளாளர்களுக்கோ முதலியார்களுக்கோ அப்படி எந்த அடிப்படையும் இல்லை
அத்துடன் கல்விகற்று மேலே செல்லும் துடிப்பை குடும்பச்சூழலில் இருந்தே பெற்றுக்கொண்டமை காரணமாக சிலகுறிப்பிட்ட தொழில்களில் பிராமணர்கள் நீடிக்கவும் முடிந்துள்ளது. ஆடிட்டர்கள் போல.
ஆனால் கண்டிப்பாக அவர்களின் வேலைவாய்ப்புகளும் அரசுசார் அதிகாரமும் குறைந்துகொண்டேதான் செல்கின்றன. அதை அவர்கள் கணிப்பொறித்துறை போன்றவற்றில் புகுந்து அடைந்த வெற்றி மூலம் ஈடுகட்டிவருகிறார்கள். இந்த மாற்றத்தை நான் ஒரு ஜனநாயக பூர்வமான மாற்றமாகவே எண்ணுகிறேன். அதை ஒரு கல்விகற்ற, வரலாற்றுணர்வுகொண்ட பிராமணர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பிற உயர்சாதியினரும்தான்.
இரண்டு: பிராமணர்களின் மீதான சமூக அவமதிப்பு
தமிழ் பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்களா? ஆம். நான் ஓர் அரசுத்துறையில் இருபதாண்டுக்காலம் பணியாற்றியவன். பல துறைகளில் பல அதிகாரிகளிடம் நேரடியான பழக்கமும் அலுவலகங்களில் அனுபவமும் கொண்டவன். மேலும் கேரளப் பணிசூழலில் இருந்து தமிழகத்துக்கு வந்தமையால் சற்று விலகி நின்று நோக்கும் பார்வையையும் அடைந்தவன். ஆகவே என் அவதானிப்பு இதுவே.
தமிழக அலுவலகச் சூழலில் தலித்துக்களும் பிராமணர்களும்தான் சாதிரீதியாக அவமதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள். நான் தமிழகம் வந்த புதிதில் ஓரு தமிழக அரசு உயரதிகாரியுடன் அவரது அறையில் பேசிக்கொண்டிருந்தேன். இலக்கிய ஆர்வம் கொண்டவர் என்பதனால் நெருக்கம். ஒரு பிராமண துணையதிகாரி வந்து விடுப்பு விண்ணப்பக்கடிதங்களை அவர் முன் வைத்தார். அனைத்திலும் அவர் குறிப்பு எழுதியிருந்தார்.
“ஏய்யா, நீதானே சாங்ஷனிங் அதிகாரி? எங்கிட்ட கொண்டுட்டு வந்து ஏன் தாலிய அறுக்கிறே?’ என்று இவர் எரிந்து விழுந்தார். பிராமண அதிகார் பேசாமல் நின்றார். “நான் எதுக்குய்யா இதையெல்லாம் பாக்கணும்?’ என்றார் மீண்டும். அவர் பேசாமல் நிற்கவே “கொண்டுட்டு போ” என்று கூச்சலிட்டார்.
அவர் மெல்லியகுரலில் “நீங்க பாத்தா நல்லாருக்கும் சார்” என்றார். அது இவரை கொஞ்சம் குளிரச்செய்தது “ஒரு முடிவையும் எடுக்காதே. பயம்” என்றபின் அதிகாரி என்னை நோக்கி “பாப்பாரப்புத்தி எப்டி வேலைசெய்யுது பாருங்க” என்றார்
நான் பின்னர் வெளியே வந்தபோது அந்த பிராமண அதிகாரி என்னிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ரப்பர் வாசித்திருந்தார். “சார் நான்தான் சாங்ஷனிங் ஆபீசர். ஆனா நான் முடிவெடுத்தா அத்தனை பேரும் பாப்பாரத்தாயளின்னு திட்டுவானுக. இப்ப இவர் ஒருத்தர் வாயத்தானே கேட்டாகணும். அதும் ரூமுக்குள்ள… பரவால்ல” என்றார் சிரித்தபடி
அன்று அடைந்த அதிர்ச்சி நான் விருப்ப ஓய்வுபெறும் வரை நீடித்தது. அரசலுவலகங்களில் பிராமண ஊழியர் ஒருவர் எப்படியும் வாரத்துக்கு ஒருமுறை நேரடியாகவே சாதி குறித்த வசையை எதிர்கொள்ள வேண்டும். நக்கல்கள், கிண்டல்கள், நட்பு பாவனையில் சொல்லப்படும் இடக்குகள் வந்துகொண்டே இருக்கும்.
பிராமணர்களைப் பற்றி நம் இடைநிலைச் சாதியின் பொதுப்புத்தி ஒன்றுண்டு. ஈ.வெ.ரா அவர்களால் அது ஒரு கொள்கையாகவே நிலைநாட்டப்பட்டது. பிராமணர்கள் என்றால் நயவஞ்சகம் செய்பவர்கள், பிறரைப்பற்றி தங்களுக்குள் இழித்துப் பேசிக்கொள்பவர்கள், மேட்டிமை நோக்குள்ளவர்கள், சுயநலவாதிகள் என்ற பேச்சை மீளமீளச் சொல்லிக்கொண்டிருப்பதை இருபதாண்டுக்காலம் கேட்டிருக்கிறேன்.
ஆனால் கணிசமானவர்களின் வாழ்க்கையில் பிராமணர்கள் பேருதவிசெய்திருப்பார்கள். நீண்டகால நட்பு பேணியிருப்பார்கள். இக்கட்டான தருணங்களில் இவர்கள் சென்று நிற்கும் இடமும் ஒரு பிராமணனின் வீடாகவே இருக்கும்.அத்தனைக்கும் அப்பால் பிராமணர் “பாப்பாரப்புத்தியக் காட்டிட்டீயே” என்ற வசையையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
1991ல் அருண்மொழி தன் வீட்டை விட்டு தருமபுரிக்கு என்னைத் தேடி வந்தபோது அவளை உடனே கூட்டிச்சென்று தன் இல்லத்தில் வைத்திருந்தவன் என் நண்பன் ரமேஷ். அவன் அக்காவின் பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டுதான் அருண்மொழி என்னை திருமணம் செய்துகொண்டாள். அவர்கள் வீட்டில்தான் எங்கள் முதலிரவு. ஒரு வேளை பெரும் அடிதடியாக முடிந்திருக்கக் கூடும். போலீஸ் கேஸ் ஆகியிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அதை யோசிக்கவில்லை.
ஆனால் அன்று அங்கிருந்த அத்தனை வன்னியரும் யோசித்தார்கள். அத்தனை நாயுடுக்களும் யோசித்தார்கள். எந்த வீட்டுக்கும் நான் சென்றிருக்க முடியாது. அதைப்பற்றி அப்போதே வெளிப்படையாக தொழிற்சங்கக் கூட்டத்தில் பேசியிருக்கிறோம். “அவங்க வீட்டு பொம்புளைங்களுக்கு ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு சார். அவங்க கொஞ்சம் போல்டாவும் இருப்பாங்க. நம்ம வீட்டுல பயந்து சாவாங்க” என்றுதான் அனைவரும் சொன்னார்கள். அது உண்மைதான், தமிழகத்தில் மற்றசாதிகளில் முற்போக்கெல்லாம் தெருவிலும் திண்ணையிலும்தான். [ஃபேஸ்புக்கில்?] வீட்டுக்குள் பெண்கள் முழுக்கமுழுக்க பழைமைவாதிகள்.தலைமுறை தலைமுறையாக.
அரசு அலுவலகங்களில் தலித்துக்கள் கூட்டமாக இருப்பார்கள். அவர்களுக்கு எண்ணிக்கைபலம் உண்டு. சட்டப்பாதுகாப்பும் உண்டு. ஆகவே நேரடியாக அவமதிப்பு சாத்தியமல்ல. அவமதிப்பு எங்கு நிகழுமென்றால் பொதுவாகப் பேசும்போது வாய்தவறி சிலர் சாதிசார்ந்த வசைகளை அல்லது சாதிவெறிக் கருத்துக்களை சொல்லிவிடுவார்கள். உடனிருக்கும் தலித் நண்பர் அவமதிக்கப்படுவார்.
இடைநிலைச் சாதியினர் நிறைந்த அறைக்குள் தலித் சாதியினர் எவரும் இல்லை என்ற உறுதி ஏற்பட்டதும் அப்பட்டமான சாதிவெறிப்பேச்சுக்கள் கிளம்பும். தலித் என்பவன் நேர்மையற்றவன், சுத்தமற்றவன், ஒழுக்கம் அற்றவன், அவன் பெண்கள் எவனுடனும் செல்பவர்கள் இதுதான் தலித் பற்றிய இடைநிலைச்சாதியின் மனப்படிமம். சென்ற இருபதாண்டுக்காலத்தில் நான்கண்ட மூன்று தலைமுறை இடைநிலைச் சாதியினரிடம் எந்த மனநிலை மாற்றமும் இல்லை.
ஆனால் அடிக்கடி பெரியார் பிறந்த மண் என்ற பிலாக்காணம் வேறு. நண்பர்களே ஈரோட்டில்தான் இன்றும் தனிக்குவளை முறை இருக்கிறது. பெரியார் பிறக்காத, நம்பூதிரி பிறந்த கேரளத்தில் அதைக்கேட்டால் அதிர்ந்து கைநடுங்கிவிடுவார்கள். இந்த பாவனைகளைப்பற்றி இனிமேலென்றாலும் மனசாட்சி உடைய சிலராவது உடைத்து பேசிக்கொள்ளவேண்டாமா?
அலுலகங்களில்வேலைச்செய்ய்ம் தலித் சாதியினர் அவமதிப்புக்குள்ளாவது அவர்களின் வீட்டு திருமணங்கள் மற்றும் இல்லவிழாக்களுக்கு பிறர் செல்லாமல் புறக்கணிக்கும்போது என்பதை கண்டிருக்கிறேன். ஒருமுறை முந்நூறு பேர் வருவார்கள் என எதிர்பார்த்து ஒருவர் ஏற்பாடுகள் செய்திருக்க தொழிற்சங்க நண்பகள் முப்பதேபேர் போனோம். அவரது சுண்டிச் சுருங்கிய முகம் இன்றும் நினைவில் எரிகிறது
ஆனால் பிராமணர்கள் நேரடியாகவே வசைபாடப்படுவார்கள். அதிகாரிகள் என்றால் இன்னமும் வசைபாடப்படுவார்கள். அந்தவசைகளை அவர்கள் எதிர்கொள்ளும் முறை பரிதாபகரமானது. பெரும்பாலும் அதை ஒருவகை வேடிக்கையாக மாற்றிக்கொண்டு கடந்துசெல்வார்கள். அல்லது போலி மேட்டிமைத்தனம் ஒன்றைக் காட்டி பேசாமல் செல்வார்கள்.
தங்களை தூய வைதிகர்களாக ஆக்கிக்கொண்டு பட்டையும் கொட்டையுமாக வந்து முழுமையாக ஒதுங்கியே இருப்பது பிராமணர்களின் ஒரு தற்காப்பு முறை. அவர்கள் டேபிளில் ஓரமாக அமர்ந்து சாப்பிடும்போது “அய்யரே, இது என்ன போனமாசத்து ஊளைச்சாம்பாரா?”என்ற நக்கல் எழும். தலைகுனிந்து சாப்பிட்டால் தப்பிக்கலாம்
அல்லது அதிதீவிர எதிர்நிலை. தொழிற்சங்கத்தில் சேர்ந்து கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது. பீஃப் பொரியல் சாப்பிடுவது. ஆரம்பகால கம்யூனிஸ்டு பிராமணர்கள் அதை ஆத்மார்த்தமாகவே செய்தார்கள். பெரியாருக்கே திராவிடவெறியைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பது வரைச் செல்லும்போது கொஞ்சம் போலித்தனம் சேர்ந்துகொள்ளும். இன்று இணையத்தில் எழுதும் ஞாநி போன்ற பிராமணப் பெரியாரிஸ்டுகளை எல்லா அலுவலகங்களிலும் காணலாம்.
இடதுசாரித் தொழிற்சங்கங்கள் 90கள் வரை பெரும்பாலும் சாதிய அடிப்படை அற்றவை. ஆகவே அங்கே மேலே சொன்ன முற்போக்குப் பிராமணகள் செயல்பட முடிந்தது. அவர்களின் ஈடிணையற்ற உழைப்பு இல்லையேல் தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கமே இல்லை. பெரும்பாலான தொழிற்சங்கங்களைக் கட்டி எழுப்பியவர்களில் பிராமணர்கள் முதன்மையாக இருப்பார்கள்.
ஆனால் 90களில் மெல்லமெல்ல இடதுசாரித் தொழிற்சங்கங்களும் சாதியவாதத்துக்குள் வந்தன. அந்தந்தப் பகுதியின் எண்ணிக்கை பலமுள்ள இடைநிலைச்சாதியினரே தலைமைக்கு வரமுடியுமென்ற நிலை வந்தது. பிராமணர்கள் ஒதுக்கப்பட்டனர். பலர் ‘ உன் பாப்பாரவேல இங்க வேண்டாம் கேட்டியா?’ என்ற சொல்லைக்கேட்டு கண்ணீருடன் விலகிச் சென்றனர்
ஆச்சரியமென்னவென்றால் சிலர் நேராக முதல் அடையாளத்துக்கே சென்றதுதான். தர்மபுரியில் நானறிந்த தோழர் பாலசுப்ரமணியன் வீட்டிலேயே கோயிலைக் கட்டி விபூதியும் காதில்பூவுமாக அலுவலகம் வரத் தொடங்கினார்!
இதேநிலைதான் நம்முடைய பொதுவான அமைப்புகள் அனைத்திலும். கல்விநிலையங்களில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கையில் பிராமணர்களை அவமதிப்பதை அனைவரும் ஒரு பெருங்கலையாகவே செய்தோம். நான் மீனை கொண்டுசென்று அவர்களின் சாப்பாட்டில் போடுவேன். ‘டேய் ஊளைச்சாம்பார்’ என்று எந்தப் பேருந்திலும் உரக்கக் கூவுவேன்.
இன்று அதற்காகக் கூசுகிறேன். ஆனால் அன்று அது சரியானது என எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே இன்று இணையத்தில் பிராமண வெறுப்பைக் கக்கும் பையன்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் இச்சூழலின் உருவாக்கங்கள். சுயமாகச் சிந்திக்கும் வாசிப்போ, அகம் விரியும் பண்பாட்டுக்கல்வியோ, உலகப்புரிதலோ அற்றவர்கள். அவ்வகையில் பரிதாபத்துக்குரியவர்கள்.
பிராமணர்கள் சந்திக்கும் அவமதிப்பு அலுவலகங்கள், கல்விநிலையங்களில் மட்டும் அல்ல. சமூகதளத்தில் கூடத்தான். சென்னை தவிர பிறநகரங்களில் இருந்து அவர்கள் மெல்லமெல்ல பின்வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.என் நண்பனும் எழுத்தாளனுமான யுவன் சந்திரசேகர் 1990ல் கோயில்பட்டியில் இருந்த அவனே கட்டிய புதிய வீட்டை நஷ்டத்துக்கு விற்றுவிட்டு சென்னைக்குச் சென்றதைக் கண்டதும் இந்த வினாவை நான் அடைந்தேன்.இது ஏன் நிகழ்கிறது?
பின்னர் வெவ்வேறு தளங்களில் இதை கவனித்திருக்கிறேன். பிராமணர்கள் தமிழகத்தின் சிறிய ஊர்களில் வாழமுடியாது, இதுவே உண்மை. அவர்களின் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவார்கள். பிராமணர்களிடம் பேசும்போதே மெல்லிய கிண்டலுடன் அவர்களின் பெண்களைப்பற்றி குறிப்பிடுபவர்களை நான் கண்டிருக்கிறேன். தமிழகத்தின் தெருக்களில் பிராமணப்பெண் என்று அறியப்பட்ட ஒரு பெண் அவமதிப்பைச் சந்தித்துக்கொண்டுதான் நடமாட முடியும். இந்நிலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை.
தூத்துக்குடியில் இருந்த ஒரு பிராமண நண்பனிடம் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு இதைப்பற்றிப் பேசியபோது அவனது மனைவி அலுவலகம் செல்லும்போது அடையும் அவமதிப்பைப் பற்றிச் சொன்னான். அது அவனது கற்பனையே என நான் வாதிட்டேன். பந்தயம் வைத்துக்கொண்டேன். அவள் அலுவலகம் செல்லும்போது நான் கூடவே விலகிச் சென்றேன். நம்ப முடியவில்லை. இரண்டுகிலோமீட்டர் நடந்துசெல்லும் வழியில் மூன்றுபேர் அவளை ‘லட்டு’ என்று கூப்பிட்டு சீட்டியடித்தார்கள். வேறெந்த சாதிப்பெண்ணை அப்படிச் சொல்லியிருந்தாலும் செவிள் பிய்ந்திருக்கும்.
இப்போது என் மகள் பிளஸ்டூ படிக்கச் செல்லும்போது பிராமணநண்பர் ஒருவர் வந்து அவரது மகளை என் மகளுடன் எப்போதுமே இருக்கும்படி அனுமதிக்க முடியுமா என்று கோரினார். ”இவ நாயர் பொண்ணு. கூடவே ஒரு முஸ்லீம் பொண்ணும் நாடார் பொண்ணும் போகுது. அவங்களை பசங்க ஒண்ணும் சொல்லமாட்டாஙக. இவ மட்டும்போனா கிண்டல் பண்றா. நீங்க சொன்னா அவா இவளைச் சேத்துக்கிடுவா’என்றார்.
நான் சைதன்யாவிடம் சொன்னேன் “போப்பா. சரியான பயந்தாங்குளி அவ. போர்” என்றாள். நான் தமிழகத்தின் பெரியாரிய ஞானமரபை அவளுக்கு விரிவாகச் சொன்னேன். இந்தச் சமூகத்தின் இரு பெரும் பலியாடுகளில் ஒன்று பிராமணச் சமூகம் என்றேன். எந்நிலையிலும் தலித்துக்களிடம் இச்சமூகம் நடந்துகொள்வதை ஆதரிக்கலாகாது, அவர்களை அவமதிக்கும் ஒரு சொல் பிறக்கும் இடத்தில் கணநேரமும் இருக்கக் கூடாது என அவளிடம் சொல்லியிருந்தேன். அதையே இங்கும் கடைப்பிடிக்கவேண்டும் என்றேன். அவள் கண்களில் நீர் நிறைந்ததைக் கண்டேன்
மூன்று: பிராமணர்கள் வெளியேறுகிறார்களா?
ஆம், உண்மை. நானறிந்தே நாகர்கோயிலில் பிராமணர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டது. கணிசமான குடியிருப்புகள் இன்றில்லை. இன்று என் வீட்டருகே இருக்கும் அக்ரஹாரம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டு பாழடைந்து வருகிறது. அவர்களில் இளையதலைமுறை இங்கு இருப்பதில்லை. இதேதான் என் மனைவியின் ஊரான தஞ்சையில்.
ஏன் தொடர்ந்து வெளியேறுகிறார்கள்? தமிழகத்தில் சென்னை [ஓரளவு திருச்சி] தவிர பிற இடங்களில் அவர்கள் எவ்வகையிலும் பாதுகாப்பற்றவர்களே. அவர்களின் நிலம் பறிக்கப்பட்டால், அவர்கள் தாக்கப்பட்டால் காவல்நிலையங்களுக்குச் செல்லமுடியாது. ஏனென்றால் ஓர் அரசியல்வாதியின் துணையின்றி இன்று எவரும் காவல் நிலையம் செல்லமுடியாது என்பதே நடைமுறை யதார்த்தம். அரசியல்என்பது முழுக்கமுழுக்க சாதிசார்ந்தது. பிராமணர்களுக்கு உதவ அவர்களுக்கான அரசியல்வாதி எவரும் தமிழக அரசியலில் இல்லை. தமிழகத்தில் சென்னைக்கு வெளியே பஞ்சாயத்து மெம்பராகக்கூட பிராமணர்கள் இல்லை
கோயில்பட்டி அருகே ஒரு பிராமண நண்பருக்கு காவல்நிலையம் செல்லவேண்டிய சிக்கல் வந்தபோது குலசேகரத்தில் இருந்து அவரது நண்பரான என் அண்ணா கிளம்பிச்செல்லவேண்டியிருந்ததை நினைவு கூர்கிறேன். நாடறிந்த ஒரு பிராமணரின் [நீங்களெல்லாம் அறிந்தவர்தான்] நிலம் மிகக்குறைந்த விலைக்கு அவரிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டபோது அவர் ஒன்றுமே செய்யமுடியாமல் கையறுநிலையில் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் முதலீடு செய்த மொத்தப்பணத்தையும் ஒருவர் ஏமாற்றிவிட்டு சவால் விட்டபோது அவர் தனிமையில் என்னிடம் குமுறியிருக்கிறார்.
இன்று தமிழகத்தில் சமூக வாழ்க்கை என்பது சாதி சார்ந்தது. சாதி சார்ந்தே நீதி. பிராமணர்கள் எண்ணிக்கையற்றவர்களாக இருக்கையில் நிர்க்கதியாக நிற்கிறார்கள். அவர்களை அவமதிப்பது சிறந்த சமூகசேவை என நம்பும் ஒரு சமூகம் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பத்ரி சேஷாத்ரி சொல்வது உண்மைதான்.
நான்கு : பிராமணர்களின் பண்பாட்டு அடையாளம்
பத்ரியின் கட்டுரையின் கடைசி வினா, பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைக்க விரும்புவதைப்பற்றியது. அதை பிராமண மேட்டிமைத்தனமாக முத்திரை குத்தி உடனடியாக எகிறிக்குதிக்கிறார்கள்.
இன்று, கவுண்டர், தேவர், நாடார் அத்தனைபேரும் தங்கள் பண்பாட்டின் தனித்தன்மைகள் சிலவற்றை அழியாமல் பேணிக்கொள்ள முயல்வதைக் காணலாம். வேறெந்த காலத்தை விடவும் குலதெய்வ வழிபாடுகளும் குலச்சடங்குமுறைகளும் இன்று புத்துயிர் கொள்கின்றன
காரணம் உலகமயமாக்கல். அது வேர்களற்றவர்களாக தங்களை ஆக்கிவிடும் என்ற அச்சம். இது உலகமெங்கும் உள்ள அச்சம். நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றம். உலகக்குடிமகனாக அடையாளமற்றவனாக ஆகிவிடவேண்டும் என்ற கனவு நவீனத்துவ காலகட்டத்திற்குரியது என்றால் அடையாளங்கள் கொண்ட , ஒரு குறிப்பிட்ட நுண்பண்பாட்டின் பகுதியாக ஆகிவிடவேண்டும் என்பது பின்நவீனத்துவ காலகட்டத்திற்குரிய மனநிலை எனலாம்.
அதில் பிராமணர்கள் மட்டும் ஈடுபடக்கூடாது என்று சொல்வது அராஜகம். பிராமணர்களுக்கு அவர்களுக்கே உரிய பண்பாடு ஒன்று உள்ளது என அவர்கள் உணர்ந்தால் அதை அவர்கள் பேணுவதில் என்ன பிழை? அது பிறரை பாதிக்காதவரை அதில் தவறே இல்லை.
உண்மையில் இன்று இடைநிலைச்சாதியினரின் இறுதிச்சடங்குகள், குலதெய்வப்பூசைகள், நீத்தார் சடங்குகள் போன்றவையே அடுத்தகட்டச் சாதிகளை அவமதிப்பவையாக உள்ளன. அவை மாற்றியமைக்கப்படவேண்டும். ஆனால் பெரியார் பிறந்த புனித மண்ணில் அதைப்பற்றி ஒரு இடைநிலைச்சாதி மனிதாபிமானியும் பேசப்போவதில்லை. தலித் நண்பர்கள் குமுறுவதையே காண்கிறேன்
ஆனால் பிராமணர்கள் வரலட்சுமி பூசை கொண்டாடினால் அதை அவமதிக்கலாம். வீட்டுக்குள் ராமநவமி கொண்டாடினால் கேலிச்செய்யலாம். இதுவே இங்குள்ள மனநிலை
1997 என நினைக்கிறேன். நான் தியாகராஜ உத்சவத்துக்காக திருவையாறு சென்றிருந்தேன். பெரும்பாலும் பிராமணர்கள் பங்குகொள்ளும் விழாவாக அது இருந்தது அப்போது. அங்கே தியாகராஜரின் பாடல்கள் மட்டுமே பாடப்படும். அவர் தெலுங்கில் மட்டுமே பாடியவர். அங்கே ம.க.இ.கவினர் வந்து “தமிழில் பாடு இல்லையேல் ஓடு’ என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
அன்றைய நிகழ்ச்சியை அவர்கள் சிதைத்தனர். அதிகபட்சம் முப்பதுபேர். போலீஸ் அவர்களை அழைத்து கொண்டு வெளியே விடும். உடனே வேறுவழியாக திரும்பி வந்தார்கள். அங்கிருந்த ஐந்தாயிரம் பேரும் பொறுமையாகக் காத்திருந்தனர். சிலர் கண்ணீர்விட்டனர்.
அதேநாளில் அன்று கன்னட வொக்கலிக மாநாடு கோவையில் நடந்தது. தேவேகௌடாவும் சரோஜாதேவியும் கலந்துகொண்டார்கள் என்று நினைவு. ஒரு ம.க.இ.கவினர் அங்கே செல்லவில்லை. ஏனென்று அவ்வியக்க நண்பரிடம் கேட்டேன். ‘அந்த அளவுக்கு எங்களுக்கு நம்பர் இல்ல தோழர்’ என்றார்
ஈரமண்ணை தோண்டும் எளிய அரசியல் மட்டும்தான் இது. எவ்வகையான உண்மையான சமூக மாற்றத்தையும் இது உருவாக்கப் போவதில்லை. தன் சாதியை பண்பாட்டு ரீதியாக மேலும் மேலும் தொகுத்துக்கொண்டே செல்பவர்கள் பிராமணச் சாதியின் பண்பாட்டு அடையாளங்களை மட்டும் ஆதிக்கச்சின்னங்கள் என்று காண்பதைப்போல கீழ்மை பிறிதில்லை.
’
ஆக, பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை நான்கு கருத்துக்களாகச் சுருக்கலாம் என்றால் அதில் முதல் கருத்தைத் தவிர அனைத்துமே நான் முழுமையாக உடன்படுபவை. ஒரு பிராமணர் தமிழகத்தில் அவர் அவமதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு துரத்தப்படுவதாக உணர்வது அப்பட்டமான நடைமுறை உண்மை.
2. தமிழகப் பிராமண எதிர்ப்பரசியலின் அரசியல் பண்பாட்டுப் பின்னணி
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை மற்றும் அதற்கு எதிரான விவாதங்களின் பின்னணியில் தமிழகத்தின் பிராமண எதிர்ப்பின் பண்பாடு மற்றும் அரசியல் பின்னணியை சுருக்கமாக விளக்கலாமென எண்ணுகிறேன். ஒரே கட்டுரையில் இவை இருப்பது புதியவாசகர்களுக்கு உதவும்.
ஏனென்றால் கணிசமானவர்களுக்கு இவை ஏதும் தெரியாது. வெறுப்பரசியலை கக்குபவர்கள் எழுதும் எளிய ஃபேஸ்புக் குறிப்புகள் வழியாகவே அவர்கள் கருத்துக்களைக் கற்றிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நீண்ட கட்டுரையை வாசிக்கப்போவதில்லை என நான் அறிவேன். பத்துபக்கம் பொறுமையாக வாசிக்கக் கூடிய எவரும் அந்த வகையான கீழ்மை நிறைந்த வெறுப்புகளை கக்க மாட்டார்கள். இதை வாசிப்பவர்கள் அவர்களுக்கு எங்கேனும் பதில் சொல்ல இது உதவலாம்
ஒன்று: பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி
இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது? அதன் பண்பாட்டு அடித்தளம்தான் என்ன?
சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் xவடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள் இங்கே குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப்போராடி தோற்றபடியே இருந்தனர்
உண்மையில் இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே. தமிழக வரலாற்றில் தமிழ்மன்னர்கள் ஆண்டகாலம் மொத்தமாகவே முந்நூறு வருடம் இருக்காது
தமிழக ஆட்சியை வடுகர்களிடமிருந்தே வெள்ளையர் கைப்பற்றினர். அதன்பின்னரும் அவர்களையே ஜமீன்தார்களாக வைத்திருந்தனர். வெள்ளையரின் ஊழியர்களாக இருந்த பிராமணர்களுக்கும் வெள்ளையரின் நிலக்கிழார்களாக இருந்த வடுகர்களுக்கும் இடையே போட்டியும் கசப்பும் இருந்தது. ஈவேரா அவரது கட்டுரை ஒன்றில் காவலதிகாரியாக ‘நிமிர்வும் மிடுக்கும் கொண்ட’ நாயிடுவுக்குப் பதிலாக ’மீசையில்லாத பார்ப்பனன்’ வரும் நிலையை வெள்ளையன் உருவாக்கிவிட்டதை எண்ணி வருந்தி எழுதியிருக்கிறார். இதுதான் அக்காலத்தின் முக்கியமான முரண்.
இதில் மெல்லமெல்ல பிராமணர் கை ஓங்கி வந்தது. மறுபக்கம் ஜமீன்தாரிமுறை ஒழிப்பால் தெலுங்கர்களின் ஆதிக்கம் சரிந்தது. சுதந்திரப்போராட்டம் வந்தபோது பிராமணர் மேலும் அதிகாரம் பெற்றனர்.
அதற்கு எதிரான வடுகர்களின் கசப்பே திராவிட இயக்கம். அக்கசப்பை அவர்களிடம் பெருக்கி இயக்கம் கண்டவர்கள் மலபார் நாயர்கள். திராவிடர் என்ற சொல்லை ஈவேரா எடுத்துக்கொண்டது தெலுங்கர்களை உள்ளடக்கும்பொருட்டே. ஏனென்றால் அதற்கு முன்னரே தமிழர் என்ற சொல்லையே மிகப்பரவலாக அன்றைய தமிழ்மறுமலர்ச்சி இயக்கம் கையாண்டு வந்தது
வரதராஜுலு நாயிடு தலைமையில் ஈவேரா வெளியேறி திராவிட இயக்கம் உருவானதன் பின்னணியில் உள்ள இந்த மொழி அரசியலை நாம் கோவை அய்யாமுத்து போன்றவர்களின் சுயசரிதையில் காணலாம். சி.என்.அண்ணாத்துரை போன்றவர்கள்கூட வீட்டில் தெலுங்கு பேசியவர்கள் என்பதை பாரதிதாசனின் கட்டுரை காட்டுகிறது.
இத்தனை ஆண்டுக்கால அரசியல் வழியாக வடுகர் x தமிழர் பிரச்சினையை வெற்றிகரமாக பிராமணர் X தமிழர் என்று மாற்ற இவர்களால் முடிந்தது. அன்று எழுச்சி பெற்று வந்த இடைநிலைச்சாதி அரசியலுக்கு இந்த இருமை உதவிகரமாகவும் இருந்தது. இதுவே வரலாறு
சிலகாலம் முன்பு அசோகமித்திரனுக்கு சென்னையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தை லீனா மணிமேகலை பிராமணியக் கூட்டம் என்று கடுமையாகத் தாக்கி எழுதியிருந்தார். நான் லீனாவை நன்றாக அறிவேன். தனிப்பட்ட முறையில் மதிப்பும் பிரியமும் அவர்மேல் உண்டு. அந்தக் கட்டுரை எனக்கு ஒரு ஆச்சரியம். நான் நண்பரைக்கூப்பிட்டு ‘லீனா தெலுங்கரா” என்றேன். “இல்லைசார் தலித் என்றார்கள்” என்றார்.
‘அது அவர் உருவாக்கும் பிம்பம். தலித் இத்தனை பிராமண வெறுப்பைக் கக்கமாட்டார். கண்டிப்பாக இந்தம்மா தெலுங்குதான்’ என்றேன். அவர் அரைமணிநேரத்தில் கூப்பிட்டு “எப்டிசார் சொன்னீங்க? உண்மைதான்’ என்றார். ”தமிழகத்தின் பிராமணக்காழ்ப்பு அரசியலின் பின்புலத்தை அறிந்தால் இதை ஊகிப்பது ஒன்றும் கஷ்டமே இல்லை” என்றேன்.
இந்த அதிகார அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக தலித்துக்கள் இன்று உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தங்கள் சொந்த அரசியலை அவர்கள் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிராமண வெறுப்பின் பண்பாட்டுப் பின்னணி
இந்தியாவில் பிராமண மறுப்ப்பு என்றும் இருக்கும். அதற்கான வேர் நமது சமூக அமைப்பிலேயே உள்ளது. நம் சாதிச் சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் பிராமணர்கள். அதன் கருத்தியலை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அடித்தளத்தில் இருந்துகொண்டு சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பது இயல்பானதே
பிராமணிய மதிப்பீடுகளை நிராகரிக்காமல் சென்ற நிலப்பிரபுத்துவகால மனநிலைகளை நாம் கடக்க முடியாது. கொள்கைத்தளத்தில் இது மிக இன்றியமையாதது. மிகத்தீவிரமாக, ஈவேராவை விட பலமடங்கு முழுமையுடன் அதைச் செய்தவர் நாராயணகுரு. நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் அவ்வகையில் பிராமண எதிர்ப்பாளர்களே.
ஆனால் பிராமண எதிர்ப்பு வேறு பிராமணக் காழ்ப்பு வேறு. பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர்களால் முன்வைக்கப்பட்ட சென்றகால நிலப்பிரபுத்துவ யுக மதிப்பீடுகளை தர்க்கபூர்வமாக மறுத்து உடைப்பது. அவர்கள் உருவாக்கிய நம்பிக்கைகளைக் கடப்பது. அவர்களின் மனநிலைகளை நிராகரிப்பது. அதை மிகத்தீவிரமாக நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களில் காணலாம். என் முன்னுதாரணம் இந்த மரபே
பண்டித அயோத்திதாசரின் எழுத்துக்களில் உள்ளதும் பிராமண நிராகரிப்பே. இருவகையில் அது அவருக்கு முக்கியம். பிராமணர்களுக்கு நேர் எதிரான முனையில் நின்ற சாதி அவருடையது என்பதனால். அக்காலகட்டத்தைய சாதிய மதிப்பீடுகளை நிலைநிறுத்தியவர்கள் பிராமணர்கள் என்பதனால்.அம்பேத்கரின் பிராமண எதிர்ப்பும் அத்தகையதே
பிராமணக் காழ்ப்பு என்பது அது அல்ல.அது கண்மூடித்தனமான வசைபாடல். அவமதித்தல். சிறுமை செய்தல். அதற்கு வரலாற்றுணர்வோ வாசிப்போ சிந்தனையோ தேவையில்லை. .ஈவேரா முன்வைத்தது அதைத்தான். அதன் முதன்மை நோக்கம் தன் சொந்த சாதிப்பற்றை மறைப்பதுதான். நேற்றைய சாதியமைப்பில் நடுப்பகுதியில் இருந்து அனைத்தையும் அனுபவித்துவிட்டு பிராமணனை கூண்டில் ஏற்றி தப்பிப்பது மட்டும்தான்.
இந்து மெய்ஞான மரபுக்குள்ளேயே பிராமண எதிர்ப்பு என்றும் இருந்தது. பிராமணர்கள் வைதிகமரபின் குரல்களாகவே பெரும்பாலும் ஒலித்தனர். அவைதிக மரபுகள் அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டன. அது முற்றிலும் வேறு ஒரு தளம்
இன்றைய நிலையில் சாதிப்பற்று பற்றிய குற்றச்சாட்டுகளை பிராமணர்கள் மேல் சுமத்துபவர்கள் முதலில் தங்கள் சொந்தச் சாதிப்பற்றை அறிக்கையிடவேண்டும். சாதிக்கு எதிரான எந்தக் கலகமும் சொந்தச் சாதியின் சாதிவெறிக்கு எதிரான நிலைபாட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்.
இத்தனை சாதி எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கும் தமிழ்ச்சூழலில் இடைநிலைச்சாதியில் இருந்து அச்சாதியை விமர்சனம் செய்து ஒரு குரல் எழுவதை நம்மால் காணமுடிவதில்லை. ராஜாஜியை கிழித்து தோரணம் கட்டலாம். முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஒரு விமர்சனத்தை தமிழகத்தில் எழுதிவிடமுடியாது. இதுவே இங்குள்ள சாதி எதிர்ப்பின் உண்மையான நிலை
பாலைவன மக்கள் ஒரு சடங்குசெய்வார்களாம். வருடத்தில் ஒருமுறை ஒரு வெள்ளாட்டைப்பிடித்து கிராமத்திலுள்ள அத்தனை நோய்களையும் அதன்மேல் ஏற்றுவதற்குரிய சில பூசைகளைச் செய்தபின் அதை ஊரைவிட்டுத் துரத்தி பாலைவனத்தில் விடுவார்கள். அது நீரின்றி செத்து காய்ந்து அழியும். நோய்கள் ஊரைவிட்டு விலகிவிட்டதாக இவர்கள் எண்ணிக்கொள்வார்கள்
சாதிவெறியில் ஊறிய தமிழகம் அப்படிக் கண்டெடுத்த வெள்ளாடுதான் பிராமணர்கள். அதன்மூலம் இங்கே இன்னமும் தலித்துக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் பழியில் இருந்து இடைநிலைச்சாதிகளும் பிரமணரல்லா உயர்சாதியினரும் தப்பித்துக்கொள்கிறார்கள்
மூன்று, பிராமண வெறுப்பு உருவாக்கும் இழப்பு
ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். ‘எனக்குச் சாதியில் நம்பிக்கை இல்லை, சாதிப்புத்தியில் நம்பிக்கை உண்டு’ என்று. சீண்டும் முறையில் அவர் அதைச் சொன்னாலும் யோசிக்கவேண்டிய ஓர் அம்சம் அதிலுண்டு
சாதி ஒழிக என்று நாத்தெறிக்க கோஷமிட்டு சாதிக்குள் சென்று ஒடுங்கும் கும்பலிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது. ஆனால் கொஞ்சமேனும் சமூகவியல் கோணத்தில் சமநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு இதைப் புரிந்துகொள்வதில் தடையிருக்காது
சாதியமைப்பு என்பது ஒருவகை உற்பத்தியமைப்பாக பல்லாயிரம் ஆண்டு இங்கே நீடித்த ஒன்று. அதன் விலக்குகள் ஏற்றத்தாழ்வுகளை ஒட்டி கீழ்மையான பல மனநிலைகளை அது உருவாக்கியிருக்கிறது. அதை வென்று மீண்டுதான் இந்தத் தலைமுறையில் நாம் நவீன மனிதனாக முடியும்
ஆனால் கூடவே அது பல சாதகமான அம்சங்களையும் உருவாக்கியிருக்கிறது. தொழில், வணிகம் ஆகியவற்றுக்குரிய மனநிலைகளை உருவாக்கி அதை குடும்பப்ப்பண்பாடாக மாற்றி நிலைநிறுத்துவதைச் சொல்லலாம். செட்டியாரோ,நாடாரோ, மரைக்காயரோ செய்யும் வணிகத்தை தேவரோ, வெள்ளாளரோ செய்ய முடிவதில்லை. ஆசாரிகள் இன்றும் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இத்திறன்கள் நவீன வாழ்க்கையிலும் பயனுள்ளவையே.
அத்தகைய சில பண்புகள் பிராமணர்களிடம் உண்டு. நீங்கள் தெருவில் நின்றுபேசும் அரசியல் விடலை அல்ல என்றால், ஏதேனும் துறையில் நிர்வாகவியல் பழக்கம் உடையவர் என்றால் நான் சொல்வதை புரிந்துகொள்வீர்கள். அதைப் பயன்படுத்தியும் கொள்வீர்கள்.
பிராமணர்களின் அந்தத் தனிப்பண்புகளே அவர்களை இன்றும் தேவையானவர்களாக ஆக்குகின்றன.
நான் மூன்று பண்புநிலைகளைச் சொல்வேன். ஒன்று, கல்விமேல் அவர்களுக்கிருக்கும் ஈடுபாடும் அதற்குரிய மனநிலையும். இரண்டு, வன்முறையற்ற தன்மை. மூன்று, அடிப்படைக் குடிமைப்பயிற்சி
நீண்டகாலமாகவே கல்வியை தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் என்பதனால் பிராமணர்களுக்குக் கல்விகற்பதில் ஊக்கம் உள்ளது. அவர்களின் குடும்பச்சூழல் அதற்குச் சாதகமானதாக உள்ளது. கற்பதையும் கற்பிப்பதையும் அவர்கள் தங்களுக்குரிய தொழிலாக கொண்டிருந்தமையால் உருவான இயல்பான மனநிலை இது
இந்தக்காரணத்தால் பிராமணர்கள் இயல்பாகவே மிகச்சிறந்த ஆசிரியர்கள் என்பதைக் காணலாம். சென்றதலைமுறை வரை நம் ஆசிரியர்களில் கணிசமானவர்கள் பிராமணர்களாக இருந்தனர். எந்தச் சாதியினராக இருந்தாலும் சென்றதலைமுறையினரின் உள்ளங்களில் மகத்தான பிராமண ஆசிரியர்களின் நினைவுகள் இருப்பதைக் காணலாம். .
சமீபத்தில் ஊட்டி கருத்தரங்கில் நாஞ்சில்நாடன் அவரது கம்பராமாயணக் கல்வி பற்றிச் சொல்லும்போது கைகூப்பி கண்ணீருடன் அவருக்கு கம்பராமாயணம் பயிற்றுவித்த ரா.அ.பத்மநாபன் அவர்களை நினைவுகூர்ந்தார். அந்த மனநிலையை மீண்டும் மீண்டும் காண்கிறேன்.
மோசமான பிராமண ஆசிரியர் விதிவிலக்கே. ஏனென்றால் இளமையிலேயே அந்தத் தொழிலில் பெருவிருப்பம் ஏற்படும்படியாக அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு நிறைவை அளிக்கிறது. வணிகப்பின்புலம் அல்லது வேளாண்மைப்பின்புலம் கொண்ட ஒருவர் அவரது தனிப்பட்ட குணநலனால் அந்த விருப்பை அடைந்தால்தான் உண்டு.
பிராமணர்கள் இன்று கல்வித்துறையில் இருந்து விலகிவிட்டனர். முக்கியமான காரணம், நம் கல்விநிலையங்களில் அவர்கள் இன்று பணியாற்ற முடியாது. அந்நிறுவனங்களின் ஊழியர் நடுவே தனிமைப்படுத்தப்பட்டு அவமதிப்புக்கு உள்ளாவார்கள். மாணவர்கள் நடுவே சமூகத்திலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் பிராமணக்காழ்ப்பு வேரூன்றியிருப்பதனால் வகுப்புகளில் ஆசிரியருக்கான மதிப்பை பிராமணர்கள் இன்று பெறமுடியாது
இது நம் சமூகம் நெடுங்காலமாக உருவாக்கி எடுத்த ஓர் அமைப்பின் பயனை நாம் வேண்டுமென்றே இழப்பதாகும். உண்மையிலேயே அவர்கள் விலகியதன் இழப்பு நம் கல்வியமைப்பில் இன்று உள்ளது என்றே நினைக்கிறேன்.
நம் கிராமங்களில் நெடுங்காலமாக பிராமணர்கள் ஒரு சமரசப்படுத்தும் புள்ளியாக இருந்துள்ளனர். கிராமங்களின் உயவுப்பொருளே அவர்கள்தான் என்று ஒருமுறை கந்தர்வன் சொன்னதை நினைவுறுகிறேன். இன்றுகூட பெருநிறுவனங்களில் அவர்களே சமரசத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் உரியவர்கள். எந்த அமைப்பிலும் பிராமணர்கள் ஒரு முக்கியமான பங்கு வகிக்க முடியும்.
இயல்பாக அவர்கள் வணிகர்கள் அல்ல. போராடும் குணமுடையவர்கள் அல்ல. துணிந்து முடிவெடுக்கமாட்டார்கள். ஆகவே நிறுவனங்களில் அவர்கள் தலைமைப்பொறுப்பை வகிப்பது இயல்பாக நிகழாது. ஆனால் அவர்கள் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர்கள். மிகச்சிறந்த ஆலோசனையாளர்கள்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதிகளிடம், குறிப்பாக ஆதிக்க சாதிகளிடம் உள்ள வழக்கம் சட்டென்று எகிறிப்பேசிவிடுவது. [ வாழ்நாள் முழுக்க அதைக் களைய போராடிவருபவன் நான்] பிராமணர்களிடம் அவ்வழக்கமே அனேகமாக இல்லை என்பதைக் காணலாம். அவர்களின் வன்முறையற்ற தன்மை அவர்களுக்கு அளிக்கும் சிறப்பியல்பு இது. இதனாலேயே அவர்கள் மிகச்சிறந்த சமரசக்காரர்களாக விளங்குகிறார்கள்
பிராமணர்களில் பலர் அவர்கள் மட்டுமே இந்தியப்பண்பாட்டை உருவாக்கியவர்கள், அதன் சாதனைகளுக்கெல்லாம் பொறுப்பானவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அது முற்றிலும் அபத்தமானது. இந்தியமெய்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவு. இந்தியக் கலைகளில் அவர்களின் பங்களிப்பு ஒப்புநோக்க மேலும் குறைவே. இந்தியாவின் தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு மிகக்குறைவான இடமே உள்ளது. தத்துவத்தில்தான் அவர்களின் பங்களிப்பு அதிகம்.அவர்கள் இந்தியாவின் முதன்மைக் கல்வியாளர் சமூகமாக இருந்தார்கள் என்பதன் விளைவு இது.
அடிப்படையில் பிராமணர்களுடையது தொகுக்கும் புத்தி. ஆகவே இலக்கண ஆசிரியர்களாகவே சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். aggressiveness எனப்படும் அகவேகம் இல்லாத காரணத்தால் முதன்மைப் பெரும்படைப்புகளை எழுத அவர்களால் சாதாரணமாக முடிந்ததில்லை. அவற்றை போர்ச்சாதிகளும் அடித்தளச் சாதிகளுமே சாதித்தன. வான்மீகியும், வியாசனும், குணாத்யனும், பாசனும், கம்பனும் காளிதாசனும், இளங்கொவும், வள்ளுவனும் பிறரே
இதை ஏன் சொல்லவருகிறேன் என்றால் பிராமணர்களின் பங்களிப்பு என்று சொன்னதுமே ஒரு பெரும் கும்பல் கிளம்பி “அப்படின்னா மத்தவனெல்லாம் முட்டாளா?” என்ற கேள்வியை எழுப்புவதே வழக்கமாக உள்ளது. பிராமணர்கள் இந்திய ஞான மரபின், கலைமரபின்,அறிவியல் மரபின் மையப்ப்பங்களிப்பாளர்கள் அல்ல. அவர்கள் அதை தொகுத்தவர்கள், கற்பித்தவர்கள், பேணுபவர்கள். அந்தப்பங்களிப்பு மிகமுக்கியமானது.
பிராமணக்காழ்ப்பு காரணமாக நம் சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதியின் பங்களிப்பை நாம் புறக்கணிக்கிறோம். அவர்கள் இங்கிருந்து சென்று வெளிநாடுகளில் குடியேறுவதென்பது நம் சமூகத்திற்குப் பேரிழப்பே. இருபது வருடங்களில் இங்குள்ள ஆசாரிகள் அனைவரும் அமெரிக்கா சென்றுவிட்டார்கள் என்றால் அடுத்த இருபதாண்டுக்கால்த்தில் அதன் விளைவுகளை நாம் பொருளியல் தளத்திலேயே காண்போம். அதைப்போலத்தான் இதுவும்
நான்கு: பிராமணர்களும் சாதிமுறையும்
இந்த வெறுப்பை பிராமணர்கள் மேல் பிறர் மேல் காட்ட என்ன காரணம் சொல்லப்படுகிறது? அவர்கள் சாதிமேட்டிமை கொண்டவர்கள். சாதிமுறையின் லாபங்களை அனுபவித்தவர்கள்.சாதியை நிலைநிறுத்தியவர்கள். ஆகவே அவர்களை அவமதிப்பது ‘சாமிக்கு நேத்திக்கடன்’. [ராமசாமியும் சாமியே]
சாதியைப்பற்றி அம்பேத்கர் முதல் கோசாம்பி வரை எத்தனையோ பேர் எழுதிவிட்டனர். இன்று பக்கம் பக்கமாக அவை மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கின்றன.சாதியை பிராமணன் உருவாக்கி பிறரிடம் பரப்பி அவர்களைச் சுரண்டி அவன் மட்டும் கொழுத்து வாழ்ந்தான் என்பதுபோன்ற அப்பட்டமான திரிபை அடிப்படை ஞானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அப்படி ஒருவர் சொல்கிறார் என்றான் அது சுயநலத்தின் விளைவான அயோக்கியத்தனம் மட்டுமே
சாதிமுறை இங்கிருந்த பழங்குடிச் சமூக அமைப்பில் இருந்து மெல்லமெல்ல உருவாகி வந்தது. சாதிகள் என்பவை பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பு. ஆகவே தான் ஒவ்வொரு சாதியும் உபசாதிகளாகவும் கூட்டங்களாகவும் பிரிந்துகொண்டே செல்கிறது. இச்சாதிபேதங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இங்கே நிலப்பிரபுத்துவம் கட்டிஎழுப்பப்பட்டது. அந்தச் சுரண்டலே இங்கே பேரரசுகளை உருவாக்கியது
அந்த நிலவுடைமை முறையின் புரோகிதர்களாக இருந்த பிராமணர்கள் அந்த முறையை நிலைநாட்டுவதற்குரிய சிந்தனைகளை பரப்பியவர்கள்.அந்த அமைப்பின் லாபங்களை அனுபவித்தவர்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்றாகவேண்டும்.
ஆனால் அவர்கள் மட்டும்தான் அதற்குப் பொறுப்பா என்ன? இங்கே நாடாண்டவர்கள், நிலத்தை உரிமைகொண்டவர்கள், வணிகம் செய்து பொருள்குவித்தவர்கள் எவ்வகையிலும்பொறுப்பில்லையா? அவர்களெல்லாம் பிராமணர்களை கைகாட்டி தப்பித்துக்கொள்லலாமா?
இங்குள்ள சாதிமுறை நேற்றைய சமூகப் – பொருளியல் அமைப்பின் உருவாக்கம். இன்று அது சமூக ரீதியாக்ப் பொருளிழந்துவிட்டது.அதன் பண்பாட்டுக்கூறுகள் சிலவற்றுக்கு மட்டுமே இன்று ஏதேனும் மதிப்பு உள்ளது. அது நேற்றைய யதார்த்தம். நேற்றை இன்று சுமந்தலையவேண்டியதில்லை. நவீன மனிதன் அதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தாகவேண்டும். அந்த மனநிலைகளை ஒவ்வொருவரும் உதறியாகவேண்டும்
அந்த அமைப்பு கொடுமைகளுக்காக நாம் இன்று குற்றவுணர்வு கொண்டாகவேண்டும். எவ்வகையிலேலும் அந்த அமைப்பின் நலன்களை அனுபவித்த ஒவ்வொருவரும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையவேண்டும். தங்களைவிடக் கீழாக ஒரு சாதியை நடத்திய சாதியில் பிறந்த எவரும் அடைந்தாகவேண்டிய குற்றவுணர்ச்சி இது. இக்குற்றவுணர்ச்சியே நாம் நேற்றைய மனநிலைகளில் இருந்து மீள்வதற்கான வழியும் ஆகும்.
இதை சிலநாட்கள் முன் எழுதியபோது எனக்கு வந்த கடிதங்கள் என்னை பிராமணன் என வசைபாடின. அதாவது இங்குள்ள பிராமணரல்லாத உயர்சாதிகள் இடைநிலைச் சாதிகள் எவ்வகையிலும் அந்தக் குற்றவுணர்ச்சியை அடையத் தயாராக இல்லை. அப்பொறுப்பை ஏற்க அவர்களுக்கு மனமில்லை.
ஏனென்றால் உள்ளூர அவர்கள் அச்சாதிய மனநிலைகளை தக்கவைக்க விழைகிறார்கள். தன் மண்ணில் இன்னமும் இரட்டைக்குவளை இருப்பதை கண்டு கண்மூடிக்கொள்ளும் கவுண்டரும் நாயக்கரும் நாயிடுவும் ‘பெரியார் மண்ணுடா!’ என்று சொல்லி பிராமணன் மேல் பாய்வதைப்போல பச்சை அயோக்கியத்தனம் வேறில்லை. அதைத்தான் காண்கிறோம்.
‘பிராமணன் பீயள்ளுவதைக் கண்டதுண்டா’ என்று ஒருவர் கேட்டிருந்தார். ”இல்லை, செட்டியாரும் முதலியாரும் கவுண்டரும் தேவரும் நாடாரும் கூடத்தான் அள்ளுவதில்லை’ என்று நான் பதில் சொன்னேன்.
பிராமணன் உடலுழைப்பு செய்வதில்லை என்று இங்கே மேடைமேடையாகச் சொல்லப்படுகிறது. நான் கண்ட பிராமணர்களில் பாதிப்பேர் ஓட்டல்களில் இரவுபகலாக சமையல்வேலை செய்து வியர்குருவும் ஈரச்சொறியும் கொண்ட உடல்கொண்டவர்களே. ஆம் ‘சொறிபிடித்த பார்ப்பான்’ என்று பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் வசைபாடினாரே, அவர்கள்தான். ஆனால் வியர்த்து ஒழுக வெலைசெய்யும் வேளாளரைக் கண்டதில்லை, நாயிடுவைக் கண்டதில்லை.
பிராமணக் காழ்ப்பை சாதிய எதிர்ப்பு என்ற போர்வையில் வெளிப்படுத்துவது இங்குள்ள இடைநிலைச்சாதியின் சாதிவெறியர்கள் கொள்ளும் ஒரு கூட்டுப்பாவனை மட்டுமே. ஒவ்வொருவருக்கு உள்ளூர உண்மை தெரியும்.
ஐந்து : பிராமணர்களின் எதிர்மனநிலை
என் வெள்ளையானை நாவல் வெளிவந்தபோது அதில் தலித்துக்கள் மேல் காழ்ப்பு கொண்ட பிராமணர் ஒருவர் கதாபாத்திரமாக வருவதைக் க்ண்டு கொதித்துப்போய் பிராமணர்கள் எழுதியிருந்தனர். அந்நாவல் முன்வைக்கும் அடிப்படை அறத்தை அவர்கள் உணரத் தயாராக இல்லை. பிராமணர்கள் சென்ற நூற்றாண்டில் தலித்துக்களுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார்கள் என்ற எளிய வரலாற்றைக்கூட அவர்களின் சாதிப்பற்று மறைத்தது
ஆனால் அது இயல்பானதுதான். அந்நாவலில் சென்னையின் தெலுங்கு மக்களின் சாதிவெறி சுட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதைவிட அதிகமாகவே தெலுங்கு நண்பர்கள் சினம் கொண்டார்கள். நட்பைக்கூட சிலர் முறித்துக்கொண்டார்கள். இங்குள்ள ஒவ்வொரு சாதியும் அதைத்தான் செய்கின்றன.
சற்றேனும் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தவர்கள் உண்மையில் பிராமணர்களே. பிராமண சாதியின் சாதியமனநிலைகளில் இருந்து வெளிவருவதற்கான உண்மையான முயற்சியை எடுத்தவர்கள் அவர்கள். இங்குள்ள இடதுசாரி அமைப்புகளெல்லாமே அவர்களை அடித்தளமாகக் கொண்டவைதான். பிராமணவெறுப்பைக் கக்கும் மா.லெ இயக்கங்கள்கூட
ஆனால் சென்ற சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் பிராமணர்களின் மனநிலை மாறியிருக்கிறது. அவர்கள் சென்றகாலத்தில் சாதியத்தை நிலைநிறுத்தியமைக்குப் பொறுப்பேற்று வெட்கும் நிலையில் இன்றில்லை. ஏனென்றால் அதேயளவு பொறுப்பேற்கவேண்டிய பிறசாதியினர் எல்லாம் சாதிப்பெருமை பேசி ‘ஆண்டபரம்பரைடா!’ என்று மார்தட்டி அதிகாரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொத்தச் சாதிமுறைக்கும் பிராமணர்களை பொறுப்பாக்கி ஒவ்வொரு நாளும் வசைபாடுகிறார்கள். மண்ணில் இருந்து துரத்துகிறார்கள்
இன்று பிராமணர்கள் ஒடுக்கப்படுபவர்களாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒடுக்கியதன் குற்றவுணர்ச்சி மறைந்து ஒடுக்கப்படுவதன் ஆற்றாமையும் சினமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. சவால்விடுவதுபோல சாதிச்சங்கங்களை அமைக்கிறார்கள். ‘பிராமண சங்க அடலேறே’ என்று ஒருவருக்கு வினைல் போர்டு வைத்திருப்பதை பார்வதிபுரத்தில் பார்த்தேன்
இங்கு நிகழும் கீழ்த்தரமான வெறுப்பரசியல் அவர்களை எதிர்ப்பரசியலுக்குக் கொண்டுசெல்கிறது. மெல்லமெல்ல அவர்களையும் வெறுப்பால் நிறைக்கிறது.
முடிவாக….
பேரா ராஜ் கௌதமனின் சுயசரிதை நாவலான காலச்சுமை [சிலுவைராஜ் சரித்திரத்தின் இரண்டாம்பகுதி] ஒரு முக்கியமான நிகழவை ஆவணப்படுத்துகிறது. அவரது மகள் கௌரி பிளஸ் டூவில் மாநில அளவில் வெற்றிபெறுகிறாள். அவரது கல்லூரியிலும் அவர் வாழும் தெருவிலும் வாழும் இடைநிலைச்சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட அவ்வெற்றியை அறிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் தலித். அவரை அறிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் அதைப்பற்றி அவரே பேசும்போதுகூட இயல்பாகத் தவிர்த்துச்செல்கிறார்கள்
ஆனால் அவரை அறிந்திராத பிராமணர்கள் அவர் இல்லம் தேடி வருகிறார்கள். அவளைக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகளும் பரிசுகளும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். இதை எழுதிச்செல்லும் ராஜ் கௌதமன் அவர்களின் அந்த மகிழ்ச்சி தனிமனிதர்கள் சார்ந்தது அல்ல, கல்வி மீதான அவர்களின் வழிபாட்டுமனநிலையைச் சார்ந்தது என்கிறார்
ஒருவேளை தமிழகத்திற்கு பிராமணர்கள் அளிக்கும் முதன்மையான கொடையே அதுதான். கல்விமேல், கலைகள் மேல் அவர்களிடமிருக்கும் பற்றே அவர்களை இச்சமூகத்திற்குத் தேவையானவர்களாக ஆக்குகிறது. அவர்களிடமிருந்த பண்பாடும் கலைகளும் மட்டுமே சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் அழியாமல் நீடித்தன என்பதை நினைவுறுங்கள். பாட்டோ பரதமோ அவர்களே அதைப் பேணிக்கொண்டிருக்கிறார்கள்.
சைவசித்தாந்தம் அறிந்த வேளாளர்கள் இன்று எத்தனைபேர்? திருமுறைகளில் விற்பன்னர்களான ஓதுவார்கள் எங்கே? ஆனால் பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பண்பாடுகள் இன்றும் நீடிக்கின்றன.அவர்கள்தான் நாம் போற்றும் தமிழ்ச்செவ்வியலையே நமக்கு மீட்டளித்த முன்னோடிகள். நாம் பேசும் தமிழ்வரலாற்றை ஆய்வுசெய்து வகுத்தளித்தவர்கள்.அவர்களின் அறிவுக்கொடை இல்லாத ஒரு துறைகூட இன்றில்லை.
பிராமணவெறுப்பு அனைத்துவகையிலும் இச்சமூகத்திற்குத் தீங்கானது என்றே நினைக்கிறேன். இன்று, நம் சமூகம் நேற்றுவரை அவர்களுக்கு அளித்த முதன்மை இடத்தை அளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் எவரும் கீழல்ல என்றால் எவரும் மேலல்ல என்பதும் உண்மையே. அவர்களை வழிபடவேண்டியதில்லை. கொண்டாடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை வெறுத்து அவமதித்துத் துரத்துவதும் வேண்டியதில்லை
இந்தியச் சமூகத்தின் ஆதிக்கக்கருத்தியல் என்பது நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல உருவாகி வந்தது. அது சாதியம் சார்ந்தது. அதை எதிர்ப்பது என்பது நவீன சமூகம் நோக்கிய வளர்ச்சியில் இன்றியமையாதது. அதை நிலைநாட்டிய பிராமணர்களை, பிராமணிய சிந்தனைகளை எதிர்ப்பதும் இயல்பானதே. ஆனால் அதை காழ்ப்பின்றி முற்றிலும் அறிவுத்தளத்தில் நிகழ்த்த முடியும் வெல்லமுடியும் என்பதையே நாராயணகுருவின் இயக்கம் காட்டுகிறது
தமிழர்நாகரீகம் என்கிறோம். பண்பாடு என்கிறோம். நாம் ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வெறுப்பின் கீழ்மை நம் பண்பாட்டின் மாபெரும் இழுக்குகளில் ஒன்று என்பதை நாம் உணரவேண்டும். நவீன மனிதன் ஒருநிலையிலும் ஒரு மக்கள்திரளை ஒட்டுமொத்தமாக வெறுக்கமாட்டான். ஒருவரையும் அவர்களின் அடையாளம் காரணமாக வெறுக்கமாட்டான். கீழ்த்தர இனவெறி, சாதிவெறிதான் இது. இதையே முற்போக்கு என்று எண்ணிக்கொள்ள நம்மை பயிற்றுவித்திருக்கிறார்கள்
பிராமண வெறுப்பு என்பது தலித்வெறுப்பின் மறுபக்கம். தலித் வெறுப்பு உள்ளடங்கி இருக்கிறது. பிராமண வெறுப்பு வெளிப்படையாக முற்போக்கு முகத்துடன் முன்வைக்கப்படுகிறது. பிராமண வெறுப்பு கொண்டவன் உறுதியாக தலித் வெறுப்பாளனே. தலித் வெறுப்பை கைவிடுபவன் பிறப்பு அடிப்படையில் எவரையும் வெறுக்கமுடியாதவன் ஆகிறான். அவனால் பிராமணர்களையும் வெறுக்கமுடியாது.
வெறுப்பை அன்றி எதையுமே உணரமுடியாத மனங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அடிப்படை நாகரீகமும், மனிதாபிமானமும் கொண்டவர்களை நோக்கியே பேசுகிறேன். இக்கீழ்மையை விட்டுவெளியேறாதவரை நாம் நாகரீக மனிதர்களே அல்ல.
இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கீழ்மைகளில் முதன்மையானது அது கொண்டிருக்கும் சாதியவெறுப்பே. பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும்.