இரவு 8

கங்குல் வெள்ளம்
கடலென அலைக்கும்
நெஞ்சப்புணை என்
கை நழுவிச்செல்லும்

 

மௌனமாக திரும்பிக்கொண்டிருந்தோம். காரை இப்போது கமலா ஓட்டினார். ஒற்றுத்தாள் நீரை உறிஞ்சிக்கனப்பதுபோல இரவு ஈரமாகி குளிர்ந்து கனத்துக்கொண்டிருந்தது. இன்னும் சற்றுநேரத்தில் அதிலிருந்து கருமை சொட்டி வடிய ஆரம்பிக்கும். அதன் விளிம்புகள் வெளிற ஆரம்பிக்கும். நான் சன்னலோரத்தில் சுழன்றுசென்றுகொண்டிருந்த தென்னந்தோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தென்னைமரங்களின் ஓலைகளை ஒவ்வொன்றாக துல்லியமாகப் பார்க்க முடிந்தது. மரங்களின் உடல்வளையங்களை எண்ணமுடியும் என்று பட்டது. எத்தனை விரைவாக என் கண்கள் இருட்டுக்குப் பழகிவிட்டன!

ஒரு முழுக்கச்சேரி முடிந்தபின்னர் உறையிடாமல் வைக்கப்பட்டிருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன். ரீங்காரம் அதன் குடத்தில் வளைவுகளில் ஆணிகளில் தந்திகளில் எங்கும் ததும்பிக்கொண்டிருந்தது. கமலா ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று சீட்டியடித்தார். மேனனைவிடத் திறமையாக கச்சிதமாக அவர் காரோட்டுவதைக் கண்டுகொண்டிருந்தேன். மேனன் முன்னிருக்கையில் அமர்ந்துகோண்டு விளக்கைப்போட்டு ஒரு சிறிய நூலை சரித்து வெளிச்சத்துக்குக் காட்டி வாசித்துக்கொண்டிருந்தார்.

பூஜைமுடிந்து மீண்டும் சமையலறைக்குச் சென்று காய்கறிகளும் ஓட்ஸ¤ம் போட்டு கஞ்சியாக வைக்கப்பட்ட ஓஒர் உணவை குடித்தோம். போர்ட்ரிட்ஜ்  என்று லிஸ் சொன்னபடி கண்களைச் சிமிட்டினார். அவர் சமையலில் ஏதோ சோதனைகள் செய்துபார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின்னர் நூலகத்திற்குச் சென்று முக்கர்ஜியுடன் பேசிக்கொண்டிருந்தோம். முகர்ஜி மூவாற்றுபுழாவுக்கு செல்வதகாச் சொன்னார். அங்கே ஏதோ யட்சியம்பலத்தில் அம்ம ஊட்டு சடங்கு நடக்கப்போகிறது. அவரது நண்பரான கரிமுற்றம் நம்பூதிரி அவரை அழைத்திருந்தார்.

நான் முக்கர்ஜியிடம் சாக்தம் பற்றி பொதுவாக கேட்டேன். அவர் எப்போதுமே விரிவுரை ஆற்றும் மனநிலையில் இருப்பவர் போல. சட்டென்று ஆரம்பித்துவிட்டார். இந்திய மதங்கள் ஆறு. அவற்றில் பெருமதங்கள் மூன்றுதான். சைவம் வைணவம் சாக்தம். சாக்தம் பிரபஞ்சத்தில் அலகிலாத ஆற்றலை கடவுளின் உருவமாக வழிபடுகிறது. ”இரண்டு வகை ஆற்றல்களின் முரணியக்கம்தான் இந்த பிரபஞ்சம். செயலாற்றல். அது ஒரு கருத்து. ஒரு தூண்டுகைக் காரணம், அவ்வளவுதான். அதை சிவம் என்றார்கள். அதனால் உயிர்கொண்டெழுந்து இப்பிரபஞ்சமாக ஆகி விரிந்திருப்பது விளைவாற்றல். நிலையானது அதுதான். அதுதான் படைப்புக்காரணம். அதுதான் சக்தி…”

முகர்ஜி என்னைக் கூர்ந்து நோக்கினார் ”ஏன் சக்தியை மட்டும் வழிபடவேண்டும் என்கிறாயா? இங்கே நாம் காண்பதெல்லாம் சக்தி மட்டும்தான். அறிவதெல்லாம் சக்தியை மட்டும்தான். சக்திதான் எல்லாம். செயலின்மையில் இருந்து சக்தி எப்படி செயலுக்கு வந்திருக்க முடியும் என்று ஊகித்து சிவம் என்ற ஒன்றை அறிய முடியும் அவ்வளவுதான். ஆகவே சக்திதான் மானுடன் அறிந்து உணரக்கூடிய ஒரே முழுமுதல் தெய்வம்…அத்துடன் சிவம் ஏன் இன்னொரு பேராற்றலாக இருக்க வேண்டும்? அதுவேகூட சக்தியின் இன்னொரு முகமாக ஏன் இருக்கக் கூடாது? சக்தியின் ஒரு சிறுதுளியே தன்னை சிவமாக ஆக்கிக்கொண்டு தன்னைத் தூண்டி தன்னைச் செயல்வடிவமாக ஆக்கியது என்றால் அதில் என்ன பிழை இருக்க முடியும்? ஆம், சிவத்தை நீங்கள் மறுத்துவிட முடியும். மறுக்கப்பட முடியாதது சக்தியே. ஏனென்றால் அது கண்கூடானது…”

மந்திரிக்கப்பட்டவனைப்போல நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். தான் சொல்லும் விஷயங்களில் அபாரமான நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து மனதை விலக்குவது எளிதல்ல. ”சாக்த மதத்துக்கும் மற்ற மதங்களுக்கும் பெரிய வேறுபாடுண்டு. மற்ற மதங்கள் எல்லாம் ஏதாவது ஒரு கட்டத்தில் உருவாக்கப்பட்டவை. தத்துவம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டவை. சாக்த மதம் அப்படி அல்ல. அது நம்முடைய மனம் சென்று தொடமுடியாத ஆதிப்பழங்காலத்தில் தன்போக்கில் தோன்றியது. தாயிடம்தான் மனிதன் பேரன்பின் அலகிலாத வல்லமையை முதலில் உணர்கிறான். அந்த பேரன்பை எப்போது அவன் இயற்கையில் உணர ஆரம்பித்தானொ அப்போதே சாக்தம் பிறந்துவிட்டது. அப்படி உணார்ந்தவன் ஒரு நியாண்டர்தால் குரங்காகக்கூட இருக்கலாம். உலகமெங்கும் தாய்வழிபாடு பரந்து கிடக்கிறது. லட்சோபலட்சம் அன்னை தெய்வங்கள். தாய்தெய்வங்கள் இல்லாத  ஐநூறடி தூரத்து மண்ணை நீங்கள் இந்த பூமியில் கண்டுகொள்ள முடியாது. அன்று கலகாரி பாலைவனத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆளில்லாத வரண்ட நிலம். அங்கே ஒரு மரம். அதைச் சுட்டிக்காட்டி புதர்மனிதர்கள் அதை தாய் என்கிறார்கள் என்றான் விவரிப்பாளன். ஆம் தாய் தெய்வம் இல்லாத இடமே இல்லை…”

முகர்ஜி முன்னால் குனிந்தார். வலியுறுத்த விரும்பும் விஷயத்தைச் சொல்ல வரும்போது மெல்ல நம்மை தொடுவது அவரது வழக்கம். அவரது கனத்த கையை என் முழங்கை மேல் வைத்து மேஜைக்கு அப்பாலிருந்து உற்று நோக்கிச் சொன்னார் ” இன்று சாக்தம் என்று நாம் அறிவது இந்தியாவிலிருந்த பல்லாயிரம் தாய்வழிபாடுகளில் சிலவற்றை மட்டும் எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய வழிமுறை மட்டும்தான். உண்மையான சாக்தம் என்பது இந்திய மண்ணில் விரிந்து பரவிக்கிடக்கிறது. உங்களூரில் பார்த்தேன், ஒரு தெருவில் ஏழெட்டுமாரியம்மன் கோயில்கள். வங்காளத்தில் சொல்லவே வேண்டாம். ஒரு வீட்டு வளைப்புக்குள் நாலைந்து அம்பாதேவி கோயில்கள் இருக்கும். சாக்தம் மானுடனின் இயல்பான ஒரு வெளிப்பாடு. அதில் ஒருபகுதியே சாக்த மதம்…” 

மேனன் புத்தகத்தை மூடி காரின் அறைக்குள் வைத்துவிட்டு பெருமூச்சு விட்டார். கார் கடற்கரையை ஒட்டிய சாலையில் சென்றுகொண்டிருந்தது. எங்கள் இடதுபக்கம் வெண்ணிற அலைகள் இருளுக்குள் வளைந்து வளைந்து பின்வாங்கின. நான் காரின் கண்ணாடியை தழைத்தேன். கடற்காற்று ஓர் அருவி போல உள்ளே கொட்டி நிறைந்தது. ஒரு கணம் நுரையீரல் குளிரால் உப்பியது. ”கொஞ்ச நேரம் நின்றுவிட்டு போகலாமே” என்றார் மேனன். கமலா காரை நிறுத்தினார். கதவை திறந்து வைத்துக்கொண்டு கடலையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

”ஒரு நடைபோய்விட்டு வரலாமா?” என்றார் மேனன். நான் செருப்பை கழற்றிவிட்டு கதவைத்திறந்து மணலில் கால்வைத்தேன். மணலின் மேல்பக்கம் பொருக்காக ஆகி சில்லிட்டிருந்தது.  கால் குளிரை நொறுக்கி உள்ளே புதைந்தபோது மணலின் அந்தரங்கம் இளம்சூடாக இருப்பதை உணர்ந்தேன். கமலாவின் முந்தானை சிறகாக எழுந்து பறக்க அவர் அதைப் பற்றி இழுத்து நன்றாக போர்த்திச் செருகிக் கொண்டார். கடலில் இருந்து காற்று வருகிறதா இல்லை கடலுக்குள் போகிறதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. காற்று பக்கவாட்டில் இருந்து வீசுவது போல அவ்வப்போது தோன்றியது. வானத்தில் பாதிநிலா மேகங்களை சத்தமில்லாமல் கச்சிதமாகக் கிழித்துக்கொண்டு சென்றது.

கடலோரம் சென்று அலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றோம். கடலும் கரையும் சாம்பல்நிறத்தின் பலநூறு அழுத்தவேறுபாடுகளால் வரையப்பட்ட ஓவியம் போல தெரிந்தன. அலை வந்து கரைகழுவிச் செல்லும்போது மணல்சரிவு பளபளத்து, அந்த பளபளப்பு அணைந்து பின்வாங்க , அந்த மென்கதுப்பில் சிறுகுமிழிகள் கண்ணாடிமுத்துக்களாக மின்னி அணைந்து உள்ளிழுக்கப்பட்டு சின்னஞ்சிறு குழிகளாக மாறுவதை பார்க்க முடிந்தது. அலைநுரைகளின் சில சிதறல்கள் ஆங்காங்கே மணலில் கைவிடப்பட்டு சுருசுருவென வற்றி மறைந்தன. தூரத்தி கொத்து முள்ளுடன் ஒரு கடலுயிரியின் ஓடு கிடந்தது. அலை துவண்ட கரைகடலுக்கு அப்பால் பெருங்கடல் கிரானைட் நெளிவுகளாக சென்று தொடுவானின் மாபெரும் கண்ணாடிவில் வளைவை அடைந்தது.  வானம் அங்கிருந்து வளைந்தெழுந்து உச்சியில் நன்றாக இருண்டு எங்களை நோக்கி வந்து உதிரி மேகங்களின் கூரையாகிச் சென்று பின்னால் தென்னைமரக்கூட்டங்களுக்கு மேலே பரவி மௌனமாக சரிந்தது.

இருட்டுக்குள் சிறிய பறவைகள் கடல்மீது பறப்பதைக் கண்டேன். அவை நீரில் இறங்கி மோதி தத்தி மேலெழுந்து மீண்டும் இறங்கின. அவற்றின்  துடிக்கும் சிறகுகளைக்கூட என்னால் பார்க்க முடிந்தது. பிரமையா இல்லை நான் புதியதோர் கண்ணைப் பெற்றுவிட்டேனா? கரையோரமாக தூரத்தில் ஒரு மனிதன் நடந்து வருவதைக் காணமுடிந்தது. கடலைப் பார்த்துக்கொண்டு குனிந்து ஏதோ செய்தபடி வந்தவன் எங்களைப் பார்த்துவிட்டான். ஒரு கணம் நின்றபின் அருகே நெருங்கி வந்தான். அவன் கரிய உடலில் ஈரம் வழிவதைக் கண்டேன். மார்பின் ரோமங்கள் நீர்வடிய ஒட்டியிருந்தன. முன்வழுக்கையில் மணல்துகள்கள். அவன் நின்று ”ஆரா மேனன் சாரா?” என்றான். மேனன் ”அதேடா…” என்றார்.

அவன் அருகே வந்து நின்று ”கண்டிட்டு குறே நாளாயல்லோ” என்றான். என்னைக்கூர்ந்து நோக்கி ”அதாரு புதிய ஆளு?” என்று கேட்டான். ”இதொரு தமிழ்நாட்டுகாரன். ஓடிட்டரா” என்றார் மேனன். ”ஓ” என்று ஆர்வமில்லாமல் சொன்னபின்பு அவன் கடலோரமாக நடந்து குனிந்து மணலில் நீண்டிருந்த ஒரு கோடை பிடித்து கயிறாக தூக்கி இழுத்து அங்கே இருந்த ஒரு தறியில் கட்டினான். ”அவன் பேரு தோமா” என்றார் மேனன். ”என்ன பண்றார்?” ”சீன தாப்புவலை போட்டிருக்கான். கரையொரமா போடுவாங்க. அப்றம் இழுத்து எடுப்பாங்க. இறாலும் சிப்பியும் கிடைக்கும்” நான் அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

”தோமா வலையை போட்டுவிட்டு இந்த வெளிச்சத்திலே உக்காந்து மலையாள மனோரமா வாசிப்பார்” என்றார் கமலா. ”நான் முதலிலே பார்த்தப்ப அப்டியே அதிர்ச்சி ஆயிட்டேன். ‘தோமா  பத்து வயசிலே இந்த தொழிலுக்கு வந்தாச்சு. பகலிலே கண் திறக்கிறதே இல்லை…” நான் அவரையே பார்த்தேன். இருட்டுக்குள் அவர் கடல்மணலில் சில அடையாளங்களை வைத்தபடிச் சென்றுகொண்டிருதார். ”கடலிலே மீனிருந்தா இங்கே நின்று பார்த்து சொல்லுவார்… கடல்மீன் போறப்ப தண்ணி நிறம் மாறுமாம்” என்று கமலா சொன்னார். மேனனிடம் ”அவர் உங்க சங்கத்திலே உண்டா?” என்றேன். ”ஓ நோ…அவரு வேற மாதிரி… இவரைமாதிரி சீனவலை போடுற நெறையபேர் இருக்காங்க. இவங்களுக்கான ஓட்டல் டீக்கடை எல்லாமே உண்டு. இவங்க வேற ஒரு சங்கம். நாம அதிலே சேரணுமானா நாமும் சீனவலை ரெண்டு வாங்கணும்” என்றார் மேனன்.

கோவிந்தன் திரும்பி செல்லும் வழியில் மேனன் ”பொலி உண்டா தோமாச்சா ?” என்றார். தோமா ”ஓ என்னா பொலி? மோசம் மேனனே. வளரே மோசம்.. மழை ஒந்நு சாறியால் கொள்ளாம்” என்று சொல்லிக்கொண்டே சென்றார். தூரத்தில் இன்னொரு உருவம் தெரிந்தது. அவர் கைகளை காட்ட தோமாவும் கையசைத்தார். பின்பு அலை ஒன்றில் குதித்து குதிரை மேல் ஏறுவது போல அதில்  ஆரோகணித்து உள்ளே சென்று மறைந்தார். ”எ பியூட்டிபுல் புர·பஷன்” என்றார் மேனன். உடனே சிரித்துக்கொண்டு ‘நாட் ப்ர·பவுண்ட் பட் டீப்” என்றார்.

திரும்பி காரில் வந்து ஏறிக்கொண்டோம்.  மேனன் என்னிடம் ”பிரசண்டானந்தா இன்னிக்குப் பாடிய சம்ஸ்கிருதப்பாடல் என்ன தெரியுமா?” என்றார். நான் தலையசைத்தேன். ”இதுக்கு ராத்ரி சூக்தம்னு பேரு. ரிக்வேதத்தில் பத்தாம் மண்டலத்திலே உள்ள எட்டு மந்திரங்கள். சாக்த மதத்தில் இது ஒரு முக்கியமான மூலமந்திரம்” என்றார். ”லிஸ் அதை இங்க்லீஷிலே மொழிபெயர்த்து அவளே மியூசிக் போட்டு பாடியிருக்கா” அவர் ஒலிக்கருவியை இயக்க மின்னிக்கொண்டு அது விழித்தது. கித்தாரின் மெல்லிய அதிர்வு. தாளம் நிலையாக ஓட ஆரம்பித்த பின்பு லிஸ்ஸின் குரல் எழுந்தது

இரவெனும் தேவி

எங்கும் நிறைகிறாள்

எல்லாவற்றையும் பார்க்கிறாள்

அனைத்து எழில்களையும்

தன்னுள் ஏந்திக்கொண்டிருக்கிறாள்

அமுதமாகி வந்து

வான்வெளிய நிறைக்கிறாள்.

மேடுகளையும் பள்ளங்களையும்

நிரப்பி வழிகிறாள்.

ஒளியால் இருளை வெல்கிறாள்.

தன் சகோதரி உஷாதேவியை

தன் இடத்திலே நிறுத்திவிட்டு

மெல்ல விடைபெறுகிறாள்.

விலகிற்று இருள்.

அவள் வரும்போது

மரத்திலுள்ள கூடுகளை நோக்கி

பறவைகள் செல்வதுபோல

நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்கிறோம்

அவள் எங்களுக்கு

துணையிருப்பாளாக!

மனை மேவினர் மாந்தர்

மிருகங்களும் பறவைகளும்

விண்ணளக்கும் வேகப்பருந்துகளும்

தங்கள் இடம் தேடிச்சென்றன.

ஓநாய்க்கூட்டங்களை விலக்குக

பசித்த பெண்நாய்களை விலக்குக

ஊர்மிதேவி, இரவெனும் அரசி!

திருடர்களை விலக்குக!

நாங்கள் கடந்துசெல்ல

எளிதானவளாகுக!  

எல்லையற்ற வண்ணங்களால்

இருளை எழில்மயமாக்கும் இரவுமங்கை

இன்று வந்திருக்கிறாள்

காலைதேவியே

நீ இருளின் கடன்களை தீர்ப்பாயாக.

இரவே

பேரொளியின் புதல்வியே

இந்த துதிப்பாடல்களை

புனிதமான பசுக்களைப்போல்

உன்னிடம் ஓட்டிவருகிறேன்

வெற்றிகொள்பவனாகிய என்னுடைய

இந்தக் காணிக்கைகளை ஏற்றுக்கொள்க!

லிஸ்ஸின் குரல் ஆழமானதாக இருந்தது. மேலைநாட்டுச் செவ்வியலி¨சைப்பாடல்களில் எப்போதுமுள்ள மென்மையான நடுக்கம் அந்த செய்யுள்களுக்குச் சரியாகப் பொருந்தி வருவதுபோல. உணர்ச்சிமிகுதியால் ததும்பிக்கொண்டு பாடுவதுபோல. எங்கோ ஒரு அறியாடஹ் நாடில் புல்வெளியின் விரிவில் தங்கள் மந்தைகளை பட்டியில் கட்டியபின் தீமூட்டி சூழ்ந்தமர்ந்து தாடியும் முடியும் நீண்ட புராதன இடையர் சிலர் பாடுவது போல. ஆச்சரியமாக, அந்தப்பாடல் அவர்களை செம்புக்கம்பிச்சுருள் போன்ற மயிர்கள் கொண்ட வெள்ளையர்களாக கற்பனைசெய்ய வைத்தது.

”இங்கே சாக்த பூஜை செய்கிறார்களா?” என்று கேட்டேன். கமலா உத்வேகத்துடன் ”சுவாமி சாக்தர். ஆனால் வழக்கமான சாக்த சம்பிரதாயங்கள் ஏதும் இல்லை. இது முழுக்க முழுக்க வேறுமாதிரியானது. அமாவசையன்று பஞ்சதத்வ பூஜை செய்வார். வேண்டுமானால் இந்த அமாவாசைக்கு நாம் வருவோம்.” என்றார்.

நான் ”பஞ்சதத்துவம் என்றால்?” என்றேன். மேனன் சிரித்துக்கொண்டு ”பஞ்சகாலத்து தத்துவம்…லீவ் ஹிம் அலோன் டார்லிங்” என்றார். நான் புன்னகைசெய்தேன். ”ஸீ இதெல்லாம் நம்மை மாதிரியானவங்கர்களுக்கு வேடிக்கை பார்க்கத்தான் லாயக்கு. அபாரமான நம்பிக்கை இருந்தாத்தான் இதிலெயெல்லாம் இன்வால்வ் ஆக முடியும். கொஞ்சம் தர்க்கபுத்தி இருந்தாகூட  நடக்காது. நான் இங்கே உன்னைக் கொண்டுவந்ததே இந்த நைட் சொஸைட்டீஸ் எந்தெந்த வகையிலே எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்… யூ வாண்ட் மியூசிக்?”

நான் ”ம்” என்றேன். மேனன் மலையாள பாடல்களைப் போட்டார். அவரது ரசனைக்கு ஏற்றபாடல்கள். ‘இந்த்ர நீல பூ சூடி வரும் சுந்தர ஹேமந்த ராத்ரி..’ மேனன் நன்றாகக் காலை நீட்டியபடி ”வயலார் ராமவர்மா எழுதியதிலே எழுபத்தஞ்சு சதவீதம் பாட்டும் ராத்திரியைப்பத்தின பாட்டுதான். ராத்திரி ,நிலா, மேகம் ,காயல், படகு இதான் அவரது கனவுலகம்…நைஸ்” என்றார். 

எனக்கு தூக்கம் வருவதுபோலிருந்தது. காரின் இருக்கையில் தலையச் சாய்த்தேன். சில நிமிடங்கள்தான் தூங்கியிருப்பேன். அல்லது அது தூக்கமே இல்லை, இன்னொரு யதார்த்தம். உதயபானுவின் உறுத்த கண்களுடன்கூடிய முகம் என் முன் எழுந்து வந்தது ”ஓடிக்கோ…நீ நசிச்சுபோகும்…”

நான் திடுக்கிட்டு எழுந்தேன். ”என்ன?” என்றார் மேனன். ”நோ” என்று வாயை துடைத்தேன். ”நைட்மேர்?” ”நோ” மேனன் சிரித்து ”நீ நான்கே முறை குரட்டை விட்டாய்…” என்றார். நான் புன்னகைத்தேன். என்ன ஒரு துல்லியம். நேரில்பார்த்ததைவிட அந்தக் கனவில் உதயபானு இன்னமும் தெளிவாக தெரிந்தார். வாயைச்சுற்றி அழுத்தமான கோடுகள். கூர்மையான மூக்கின் நிழல் மேலுதட்டில் விழ ஒருசில முடியிழைகள் காற்றில் ஆட அந்த நிழல் முகத்தின் பக்கவாட்டில்  அலைய….

கார் மீண்டு நகருக்குள் சென்றது. ”நாம இப்ப வீட்டுக்குத்தானே போறோம்?” என்றேன். ”இல்லை…இங்கே சபரீஷ்னு ஒருத்தர் இருக்கார். ஒரு சிற்பி. அவரைப்பாத்துட்டு விடிகாலையிலே மகாதேவர்கோயிலில் நிர்மால்யம் கும்பிட்டுட்டு திரும்பலாம்னு பிளான்..” என் முகத்தைப் பார்த்துவிட்டு ”ஏன்?” என்றார் மேனன். நான் ”இல்லை, நான் வேணுமானா சிட்டியிலே எறங்கி ஒரு டாக்ஸியிலே போய்க்கறேன்…” ”என்ன?” என்றார் கமலா ஆச்சரியத்துடன் திரும்பி. ”ஒண்ணுமில்லை. நெறைய வேலை கிடக்கு. இப்பதான் நெனைச்சுகிட்டேன்…இப்ப போய் ஆரம்பிச்சா முடிச்சுட்டு கொஞ்சநேரம் தூங்கலாம்” ”ஓ” என்று நம்பிக்கை வராமல் சொல்லி தோளைக்குலுக்கினார் கமலா.

மேனன் ”தென் வி வில் டிராப் யூ அட் தி ஜங்ஷன்…” என்றார் ”டாக்ஸி எப்பவும் கிடைக்கும். ஸாரி, நாங்க வர்ரதா சபரீஷ் கிட்டே சொல்லிட்டோம். அவர் வெயிட் பண்ணுவார்” ”அய்யய்யோ அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நீங்க போய்ட்டு வாங்க” என்றேன். காரில் அதன்பிறகு மௌனம் நிலவியது. நான் ஏதோ சஞ்சலத்துக்கு ஆளாகியிருப்பதை மேனன் புரிந்துகொண்டிருந்தார் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. மௌனத்தை கலைப்பதற்காக அவரே ”இந்த சபரீஷ் ஒரு நல்ல சிற்பி…வெண்கலத்தில் சிற்பம் செய்றான். ஆனா உருக்கி வார்க்கிறதில்லை. பின்பக்கம் தட்டித்தட்டி புடைப்புச் சிற்பமாச் செய்றான்” என்றார். ”எ ரியல் மாடர்ன் ஆர்ட்டிஸ்ட்” என்றார் கமலா ஸ்டீரிங்கை வளைத்து. மேனன் ”ஷ்யூர். ஆனா சிலசமயம் சில சிற்பங்கள் லாரி ஏறிப்போன தாம்பாளம் மாதிரி இருக்கும்” என்றார். ”விஜய்” என்று கமலா அதட்டினார்.

நகரம் தூங்கிக்கொண்டிருந்தது. இருபக்கமும் கடைவரிசைகள் கண்மூடி நெற்றியில் ஒளிரும் விளக்குகளும் நியான் எழுத்துக்களுமாக அமர்ந்திருந்தன. மாபெரும் கட்டிடங்கள் நரம்புகள் புடைத்த அரக்கர்கள் போல நிற்க சாலையில் விளக்கொளி தொடப்படாத சாயம் போல சிந்திக்கிடந்தது. ஜவகர் சாலையில் பாண்டிக்குடி சந்திப்பில் நான் இறங்கிக்கொண்டேன். சாலையின் ஓரமாக மூன்று டாக்சிகள் கிடந்தன. வெண்ணிறமான டாட்டா இண்டிகா வண்டிகள். நான் இறங்கியதும் மேனன் ”டாக்ஸி வருமான்னு கேளு” என்றார். நான் சென்று டாக்ஸியின் சன்னல் வழியாக உள்ளே பார்த்தேன். உள்ளே டிரைவர் சீட்டை நன்றாகப் பின்னுக்குத்தள்ளி தூங்கிக் கொண்டிருந்தார்

The_Dark_City.jpg image by Ryokugod

நான் அவரை தட்டி எழுப்பினேன். வாயைத் துடைத்துக்கொண்டு ”எந்தா?” என்றார். ”டாக்ஸி வருமா? சாத்தனாட்டுகரை…” என்றேன். ”கேறிக்கோ” என்றபின் ”முந்நூறு ரூபா ஆகும்” என்றார். ”ஓக்கே” என்றபின் மேனனிடம் ”·பைன் அட்மிரல்” என்றேன். ”பை” என்று அவர் கையசைத்துவிட்டு கண்ணாடியை தூக்கினார். கார் சிவப்பு பின்விளக்கு அதிர உறுமி மேலே சென்றது. நான் டாக்ஸிக்குள் ஏறி அமர்ந்து கொண்டேன்.

தூங்கும் மிருகம் ஒன்றின் உடல்வழியாக ஊர்ந்துசெல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி. சாலையோரங்களில் வாழைத்தார் தண்டுகளும் காய்ந்த வாழையிலைகளும் கிடந்தன. கான்கிரீட் குப்பைக்கூண்டுகள் நிறைந்து வழிந்தன. புழுதிக்குழிகளில் நாய்கள் முகம் புதைத்து தூங்கின. ஒரு பைத்தியக்காரன் பரட்டைத்தலையும் எண்ணையில் நனைத்ததுபோல அழுக்கு படிந்த சட்டையுமாக ஏதோ சொன்னபடி நடந்து சென்றான்.

கார் ரீக் என்ற ஒலியுடன் நின்று விட்டது. டிரைவர் அதை மீண்டும் மீண்டும் இயக்க அது ரீ ரீக் ரீக் என்று ஒலியெழுப்பி அணைந்தது. ”என்ன?” என்றேன். ”தெரியல்ல சார்…பாக்கிறேன்…ஒரு நிமிஷம்” டிரைவர் இறங்கி காரின் பானெட்டை திறந்து உள்ளே பார்க்க ஆரம்பித்தான். என்னால் காருக்குள் சும்மா அமர்ந்திருக்க முடியவில்லை. கதவைத்திறந்து வெளியே இறங்கினேன். காற்று இல்லை, ஆனால் நன்றாகவே குளிர்ந்தது. அருகேதான் கடல், ஆனால் எப்படி காற்றடிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.

சாலையோரமாக ஒரு கல்வெர்ட் இருந்தது. அதன் மேல் அமரலாமா என்று பார்த்தேன். சுத்தமானதாகத் தெரியவில்லை. ஆகவே நின்றுகொண்டு வானத்தைப் பார்த்தேன். மேகப்படலம் இருந்ததுபோலும், நட்சத்திரங்கள் கரிய நீருக்குள் கிடந்து மின்னுபவை போலிருந்தன. சில இடங்களில் தெரிந்த சிறிய மின்மினி நடுக்கங்கள் மறைந்து போயின. பெருமூச்சுடன் கடிகாரத்தைப் பார்த்தேன். மூன்று இருபது. எதற்காக திரும்பிவிடலாமென்ற முடிவை எடுத்தேன் என்று தெரியவில்லை. ஏனோ மேற்கொண்டு இந்த இரவை அவர்களுடன் கழிக்கத் தோன்றவில்லை.

அசப்பில் திரும்பியபோது என் ஓரக்கண் ஏதோ அசைவைக் கண்டுகொண்டது. இருளே அசைந்தது போல. நான் திரும்பி கீழே பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. கண்ணை விலக்கி மீண்டும் பார்த்தபோது அசைவுகள் தெரிந்தன. சற்று குனிந்து கூர்ந்து பார்த்தேன். அந்த ஓடை முழுக்க விதவிதமான குப்பைகளைக் கொட்டியிருந்தார்கள். பாலிதீன் பொதிகள் இலைச்சுருள்கள் காகிதங்கள். அந்தக் குப்பைகள் நடுவே பெரிய பெருச்சாளிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. பார்க்கப்பார்க்கத்தான் அவை ஏராளமாக இருப்பது என் கவனத்துக்கே வந்தது. இருளுக்குள் ஒரு கொழுத்த கரிய திரவத்தில் அலையிளகுவது போல பெருச்சாளிகள் முண்டியடித்தன. மெல்லிய பிச் பிச் பிச் என்ற ஒலி.

அவற்றில் ஒன்றின் கண்களை சட்டென்று என்னால் பார்க்க முடிந்தது. மறுகணம் அனைத்துப் பெருச்சாளிகளின் கண்களையும் பார்த்தேன். சாக்கடைக்குள் கிடக்கும் உடைந்த கண்ணாடிச்சில்லுகல் போல மெல்லிய மினுமினுப்புகள். பின்பு ஓடைக்குளும் நிறைய கண்களைப் பார்த்தேன். ஒரு சிறு கடைவீதியின் நெரிசல்.  ஆம், இந்த நகரத்தின் அடியில் சாக்கடைகளின் வலைப்பின்னல்கள் வளைகள் வழியாக அவை ஒரு பாதாள நகரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். பல லட்சம் எலிகள் இருக்கக் கூடும். தலைமுறைகள் தலைமுறைகளாக வாழும் ஒரு இருள் சமூகம்

என் பிடரியை யாரோ தொடுவது போலத் தோன்றி உடல் சிலிர்த்தது. டிரைவர் ”போகாம் சார்” என்றார் . நான் விரைந்து காரில் ஏறி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன். கண்கள் மின்னும் எலி ஒன்றின் கூரிய முகத்தை கண்டு கண்களை திறந்தேன். தலை சுழல்வதுபோலவும் வாந்தி வருவது போலவும் இருந்தது. கண்ணாடியை திறந்து வெளிக்காற்றை உள்ளே விட்டேன். கண்களுக்குள் சென்ற தெருவிளக்கின் ஒளிகள் உள்ளே ஏதோ நரம்புகளை தீண்டி அதிரச் செய்தன. கண்களை மூடிக்கொண்டாலும் அந்த ஒளிச்சிதறல்கள் நீடித்தன.

[மேலும்]

முந்தைய கட்டுரைஆசிரியர்கள்
அடுத்த கட்டுரைகாமன் வுமன்