பகுதி பதின்மூன்று : இனியன் – 4
பெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி தாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த ஆண்கள் நீண்ட கழிகளை கையில் ஏந்திச் செல்ல தொடர்ந்து இடையில் மான் தோல் அணிந்து பச்சை இலைகள் கொண்ட மரக்கிளை ஒன்றை ஏந்திய கடோத்கஜன் மகிழ்ந்து சிரித்து இருபக்கமும் நோக்கியபடி நடந்தான். அவனுக்குப்பின்னால் இடும்பியும் பெண்களும் சென்றனர். அவர்களின் வரிசையில் இணையாமல் சற்றுத் தள்ளி பீமன் நடந்தான்.
நெளியும் பச்சைப் புல்வெளியை மேலாடையாகப் போர்த்தி நின்ற மூதாதையரின் குன்றை அணுகியதும் பெண்கள் உரக்க குரவையிட்டனர். ஆண்கள் கழிகளைத் தூக்கி உறுமல் போல ஒலியெழுப்பினர். அதன் உச்சியில் வரிசையாக நின்ற பெருங்கற்களின் பல்வரிசையால் குன்று வானத்தின் மேகக்குவை ஒன்றை மெல்லக் கடித்திருந்தது. அவர்கள் அந்த மேட்டின் புல்லை வகுந்தபடி ஓடி ஏறத்தொடங்கினர். பெருங்கற்களின் அருகே சென்றதும் அதை மூன்றுமுறை சுற்றிவந்து தலைவணங்கி அமர்ந்தனர். முதியபெண்கள் மூச்சிரைக்க இறுதியாக வந்து சேர்ந்ததும் இடும்பர்கள் மட்டும் வட்டமாக சுற்றி அமர்ந்துகொள்ள பீமன் விலகி கைகளை மார்பின் மேல் கட்டியபடி நின்றுகொண்டான்.
குலமூத்தவர்கள் கடோத்கஜனை நடுவே கொண்டுவந்து நிறுத்தினர். மூங்கில்களும் குடுக்கைகளும் ஒலிக்க குரவையொலிகள் முழங்க கடோத்கஜனின் இடையில் இருந்த மான்தோல் ஆடையை கழற்றி வீசினர். அவன் கால்களை விரித்து கரும்பாறையை நாட்டி வைத்ததுபோல அவர்கள் முன் நின்றான். ஐந்து முதியவர்கள் பெருங்கற்களின் அடியில் இருந்து சிவந்த மண்ணை அள்ளி குடுக்கையில் வைத்து நீர்விட்டு சேறாகக் குழைத்து அவன் உடலெங்கும் பூசினர். உதடுகளைக் குவித்து சில ஒலிகளை எழுப்பியபடி நடனம்போல கைகளையும் உடலையும் அசைத்து விரல்களில் சீரான நடன வளைவுகளுடன் அவர்கள் சேற்றைப் பூச கடோத்கஜன் அசையாமல் நின்றான். அலையலையாக விரல்தடம் படிய சேறு அவன் மேல் படர்ந்தது.
முகத்திலும் இமைகளிலும் காதுமடல்களிலும் இடைவெளியின்றி சேறு பூசப்பட்டபோது கடோத்கஜன் ஒரு மண்குன்று போல நின்றான். மண் கண்விழித்து நோக்கி பெரிய பற்களைக்காட்டி புன்னகை செய்தது. அவர்கள் அவனை தங்கள் கழிகளால் மும்முறை தலையில் தட்டி வாழ்த்தினர். கடோத்கஜன் சென்று அந்த பெருங்கற்களைச் சுற்றிவந்து வணங்கினான். மூன்று முதியவர்கள் தேவதாரு மரத்தில் குடைந்து செய்யப்பட்ட பழைமையான மரப்பெட்டியில் இருந்து ஏழு மூங்கில் குவளைகளை எடுத்து பரப்பி வைத்தனர். அவற்றின் அருகே உடம்பெங்கும் சாம்பல் பூசிய குலமூத்த முதியவர் அமர்ந்துகொண்டார். அவருடைய வலது கைக்கு அருகே இன்னொரு அகன்ற மூங்கில்பெட்டி வைக்கப்பட்டது. அதில் ஒரே அளவிலான உருண்ட கூழாங்கற்கள் இருந்தன.
குலமூத்தார் கைகாட்டியதும் அனைவரும் கைகளைத் தூக்கி சேர்ந்தொலி எழுப்பினர். முதியவர் கையை நடனம் போல குழைத்து முதல் கல்லை எடுத்து ஒரு முனகல் ஒலியுடன் குவளையில் போட்டார். கடோத்கஜன் குன்றின் சரிவில் விரைந்தோடி மரக்கிளையை தாவிப்பற்றி மேலேறி இலைத்தழைப்புக்குள் மறைந்தான். பெண்கள் கூச்சலிட்டு சிரிக்க சிறுவர்கள் பின்னால் ஓடி அவன் சென்ற திசையை நோக்கியபடி நின்று குதித்தனர். அவன் சென்ற இடத்தில் காட்டுக்குள் கிளைகளில் ஓர் அசைவு கடந்துசெல்வது தெரிந்தது.
முதியவர் வாயை கூட்டியும் பிரித்தும் சீராக ஒலிகளை எழுப்பியபடி கூழாங்கற்களை எடுத்து குவளைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். அனைவரும் கடோத்கஜன் ஓடிய திசையையும் கூழாங்கற்கள் போடப்படும் குவளைகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டும் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டும் நின்றனர். முதல் குவளை நிறைந்ததும் சிறுவர்கள் கூச்சலிட்டனர். உரக்க ஓர் ஒலி எழுப்பி மெல்ல அதை எடுத்து வைத்துவிட்டு இரண்டாவது குவளையில் கற்களை போடத் தொடங்கினார் முதியவர்.
மெதுவாக பீமனும் அங்கிருந்த உள்ளக் கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டான். பதற்றம் கொண்டு அருகே வந்து நின்று கூழாங்கற்களை பார்த்தான். காலத்தை கண்ணெதிரே தூலமாகப் பார்க்கமுடிந்தது. காலத்தின் அலகுகளான ஒவ்வொரு எண்ணத்தையும் பார்க்கமுடிந்தது. அவ்வெண்ணத்தை நிகழ்த்தும் ஊழை. முதியவர் கற்களை எடுத்துப்போடும் விரைவு கூடிவருவதாகத் தோன்றியது. நிலைகொள்ளாமல் அவன் கடோத்கஜன் சென்ற காட்டை நோக்கினான். பின்னர் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி அங்கேயே இடம் மாறி நின்றான். பின்னால் ஓடிச்செல்லலாமா என்று தோன்றியதை அடக்கிக் கொண்டான்.
மூன்றாவது குவளை பாதி நிறைவதற்குள் காட்டின் புதர்ச்செறிவுக்குள் இருந்து தோளில் ஒரு எருமைக்கன்றுடன் கடோத்கஜன் குதித்து புல்லில் ஏறி ஓடிவந்தான். அவனைக் கண்டதும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆனால் அவன் தோளில் இருந்த கனத்த எருமைக்கன்றைக் கண்டதும் அவர்கள் திகைத்து அமைதியானார்கள். பெண்கள் அச்சத்துடன் வாயில் கைவைக்க கிழவர்கள் கண்களை கைகளால் மறைத்து சற்று குனிந்து உதடுகளை இறுக்கி உற்று நோக்கினர்.
அவர்களின் திகைப்பைக் கண்டதும் கடோத்கஜன் முகத்தில் புன்னகை விரிந்தது. தொலைவிலேயே அவன் வெண்ணிறமான பற்கள் தெரிந்தன. அவர்களைப் பார்க்காமல் விழிகளைத் திருப்பி இயல்பாக நடப்பவன் போல பெரிய கால்களை வீசி தூக்கி வைத்து அணுகினான். அருகே வர வர மிக மெல்ல நடந்து வந்து அந்த எருமைக்குட்டியின் உடலை மூதாதைக்கல் முன் போட்டான். கூழாங்கற்களைப் போட்ட முதியவர் மூங்கில்குவளையை எடுத்துக் கவிழ்த்தபின் மூன்றுமுறை கைகளைத் தட்டி “ஃபட் ஃபட் ஃபட்” என்றார்.
முதலில் ஒரு முதியவள் கைதூக்கி கூவியதும் அங்கிருந்த அனைவரும் இருகைகளையும் தூக்கி உரக்கக் கூவினர். சிறுவர்கள் அவனை நோக்கி கூச்சலிட்டபடி ஓடினர். பெண்கள் பின்னால் சென்று கடோத்கஜனைச் சுற்றி நின்று அவன் மேல் கைகளை வைத்து குரவையிட்டனர். கிழவர்கள் அமர்ந்து அந்தக் கன்றின் உடலை கூர்ந்து நோக்கினர். ஒருவர் அதன் வாய்க்குள் கையை விட்டு நாக்கை இழுத்து நோக்கினார். அது புதியதாக கொல்லப்பட்டதுதானா என உறுதிப்படுத்துகிறார் என்று பீமன் எண்ணினான். இடும்பி வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே சிறு துள்ளலுடன் ஒற்றைச் சொற்களைக் கூவியபடி அதைச் சுற்றிவந்தாள். நினைத்துக்கொண்டு ஓடிவந்து கடோத்கஜனின் தலையில் அடித்தாள்.
பின்னர் துள்ளலுடன் பீமனிடம் ஓடிவந்து “இந்தக்குடியிலேயே மிக விரைவாக வேட்டையாடி வந்தவன் இவன்தான். என் மூத்தவர் கூட மூன்று குவளை நேரம் எடுத்துக்கொண்டார்” என்றாள். அவளுடைய பெரிய கரிய உடல் உவகையின் துள்ளலில் சிறுகுழந்தைபோலத் தெரியும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டு புன்னகைத்தான். இடும்பி ”அதுவும் எருமைக்கன்று! எடைமிக்கது!” என்று கூவினாள். அவன் மறுமொழி பேசுமுன் அவனைக் கட்டிப்பிடித்து அவன் மார்பில் தன் தலையால் மோதியபின் சிரித்தபடியே திரும்பி ஓடி தன் குலத்துப் பெண்களுடன் சேர்ந்துகொண்டாள். அவளால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. அங்குமிங்கும் அலைக்கழிந்தாள். மீண்டும் மைந்தனை நோக்கி வந்தாள். அவன் தலையை தன் தலையால் முட்டி சிரித்தாள்.
குடிமூத்தார் வந்து கடோத்கஜன் தோளைத் தொட்டு அவனை வாழ்த்தினர். அவன் அவர்கள் வயிற்றைத் தொட்டு வணங்கினான். இருவர் அந்த எருமைக்கன்றை தூக்கிக்கொண்டு அருகே இருந்த பாறைக்கூட்டம் நோக்கி சென்றனர். பீமனும் அவர்கள் பின்னால் சென்றான். கடோத்கஜனை அவர்கள் ஒரு பாறைமேல் அமரச்செய்தபின் அவனைச் சூழ்ந்து அமர்ந்து கைகளைத் தட்டிக்கொண்டு பாடத்தொடங்கினர். அவர்கள் பாடுவதை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பீமன் சென்றான். அந்த மொழி புரியவில்லை. அவர்களே பேசிய தொன்மையான மொழியில் அமைந்த பாடலாக இருக்கலாம் என்று தோன்றியது. தொலைவில் நாய்கள் வெறிகொண்டு குரைத்த ஒலி கேட்டது. ஆயினும் அவை குடில்களை ஒட்டிய தங்கள் எல்லைகளை விட்டு வரவில்லை.
எருமையை அவர்கள் திறமையாக தோலுரித்தனர். கொம்பு முளைத்து பின்பக்கமாக வளையத்தொடங்கிய இளவயதுக் கன்று அது. பெரிய வாழையிலைகளை விரித்து அதன் மேல் அதைப் போட்டு நான்கு கால்களின் முதல் மூட்டுகளிலும் கத்தியால் வளையமாக தோலை வெட்டினர். இரு முன்னங்கால்களின் அடிப்பக்கத்திலும் நீள்கோடாக தோலைக் கிழித்து அந்தக்கோட்டை கால்கள் மார்பைச் சந்திக்கும் இடத்தில் இணைத்து அதை நீட்டி வயிறு வழியாகக் கொண்டு சென்று பின்னங்கால்கள் சந்திக்கும் இடத்தில் நிறுத்தி மீண்டும் இரு கிளைகளாகப்பிரித்து இரு பின்னங்கால்களின் மூட்டில் வெட்டப்பட்ட வளையம் வரை கொண்டுசென்றனர்.
தோல்கிழிக்கப்பட்ட கோட்டில் மெல்லிய குருதித் தீற்றல் உருவாகி சிறிய செங்கருநிற முத்துகளாகத் திரண்டு நின்றது. முன்னங்காலிடுக்கில் மார்பின் அடியில் இருந்த கோட்டுச்சந்திப்பில் இருந்து மேலும் ஒரு கோட்டை இழுத்து கீழ்த்தாடை வரை கொண்டுவந்து அதை இரு கோடுகளாகப் பிரித்து கன்னம் வழியாக காதுகளின் அடியில் கொண்டுசென்று மேலேற்றி கொம்புகளுக்குப் பின்னால் மேல் கழுத்தில் இருந்த குழியில் கொண்டு இணைத்தனர். பின்னங்கால்களின் சந்திப்பில் இருந்து ஒருகோட்டை இழுத்து அதை மேலே கொண்டுசென்று வால் முதுகை சந்திக்கும் இடத்தின் மேலாக வளைத்து மறுபக்கம் கொண்டுவந்து மீண்டும் இணைத்தனர்.
அத்தனை துல்லியமாக தோலுரிப்பதை பீமன் பார்த்ததே இல்லை. அவர்களின் கைகளில் ஐயமே இல்லாத நேர்த்தி இருந்தது. நால்வர் நான்கு கால்களிலில் தோலை உடலில் இருந்து பிரித்து உரிக்கத் தொடங்கினர். சிறிய கூர்மையான உலோகத் தகட்டை அந்தக் கோட்டில் குத்தி மெல்லச் செலுத்தி தோலை விரித்து விலக்கி அந்த இடைவெளியில் முனைமழுங்கிய சப்பையான மூங்கில்களைச் செலுத்தி மேலும் மேலும் நெம்பி விரித்து அந்த இடைவெளிகளில் கைகளை நுழைத்து அகற்றி மிக எளிதாக தோலை உரித்தனர். தோல் நன்கு விரிந்ததும் பின்னர் தோலையே பிடித்து இழுத்து விலக்கத் தொடங்கினர். மெல்லிய ஒலியுடன் தோல் பிரிந்து வந்தது.
செந்நிறமான தசைநார்களுடன் வெண்ணிற எலும்பு முடிச்சுகளுடன் நான்கு கால்களும் முழங்காலுக்கு மேல் உரிந்து இளங்குருத்து போல வெளித்தெரிந்தன. கால்களில் இருந்து உரித்துக்கொண்டே சென்று வயிற்றில் விரித்து அப்படியே மடித்து முதுகு வழியாக தோலைக் கழற்றி முழுமையாகவே எடுத்துவிட்டனர். எருமையின் தலை காதுக்கு அப்பால் கொம்புகளுடன் கருமையாக இருந்தது. வாலும் கரிய தோலுடன் அப்படியே இருந்தது. முழங்கால் மூட்டுக்குக் கீழே அதன் நான்கு கால்களும் எஞ்சியிருந்தன. பிற இடங்களில் அது இளஞ்செந்நிறமான தோல் கொண்ட எருமைபோலவே தோன்றியது.
தோலைக் கழற்றி எடுக்கையில் ஒரு இடத்தில்கூட மூட்டுகளிலோ மடிப்புகளிலோ சிக்கிக் கொள்ளவில்லை. உள்ளிருக்கும் தசைப்பரப்பு எங்குமே கிழிந்து குருதி வெளிவரவில்லை. உள்ளே ஓடிய நீலநரம்புகள் தெரிய ஆங்காங்கே வெண்ணிறமான கொழுப்புப் பூச்சுடன் எருமை பாய்ந்து எழுந்துவிடும் என எண்ணச்செய்தபடி கிடந்தது. அதன் பின்தொடை முதுகை சந்திக்கும் இடத்திலும் முன்னங்கால் மார்பை சந்திக்கும் இடத்திலும் உள்ளே எழுந்த உறுதியான எலும்புகள் புடைத்துத் தெரிந்தன.
பீமன் அவர்களுக்கு உதவுவதற்காக கை நீட்ட முதிய இடும்பர் வேண்டாம் என்று கைகாட்டி விலகிச் செல்லும்படி சொன்னார். அவன் நிமிர்ந்து கைகட்டி நின்றுகொண்டான். அவர்கள் அதைச்செய்வது ஒரு மாபெரும் வேள்விக்கான அவிப்பொருளை ஒருக்கும் வைதிகர்களின் முழுமையான அகஒருமையுடனும் கைநேர்த்தியுடனும் ஒருங்கிணைப்புடனும் இருந்தது. ஒருவர் அதன் வயிற்றில் கத்தியை மென்மையாக ஓட்டி தசையைப்பிளந்து சிறிய பேழையொன்றின் மூடிகளைத் திறப்பதுபோல இருபக்கமும் விலக்கினார். உள்ளிருந்து சுளைக்குள் இருந்து விதை வருவது போல எருமையின் இரைப்பையும் ஈரல்தொகையும் மெல்லச்சரிந்து வந்தன. குருதி கலந்த நிணம் பெருகி இலையில் வடிந்தது.
அவர்கள் அந்த இரைப்பைத்தொகையை கருக்குழந்தையை கையிலேந்துவதுபோல எடுத்தனர். தொப்புள்கொடி போல மஞ்சள்நிறமான கொழுப்புருளைகள் பொதிந்த குடல் சுருளவிழ்ந்து நீண்டு வந்தது. அதை ஒருவர் இரைப்பையில் இருந்து வெட்டி தன் முழங்கையில் அழுத்திச் சுருட்டியபடி அதனுள் இருந்த பச்சைநிறமான புல்குழம்பை பிதுக்கி வெளியே கொட்டினார். பீமன் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தான். விரல்நுனிகள் குளிர்ந்து நடுக்கம் எழுந்து தோளிலும் கழுத்திலும் தசைநார்கள் இழுத்துக்கொண்டன. விழக்கூடாது என அவன் எண்ணும் கணத்திலேயே கால்கள் வலுவிழக்க மண்ணில் மல்லாந்து விழுந்தான். வியப்பொலியுடன் அவர்கள் அவனை நோக்கி எழுவதை இறுதியாக உணர்ந்தான்.
மழைச்சாரலில் நனைந்துகொண்டு அஸ்தினபுரியின் தெருவில் நடந்துகொண்டிருந்தான். முகத்தில் நீரைத்தெளித்து குனிந்து நோக்கிய கிழவரை நோக்கியபடி விழித்துக்கொண்டான். எழுந்து அமர்ந்து கையூன்றியபடி எருமையை நோக்கினான். அது உயிருடன் இருப்பது போல அசைந்துகொண்டிருந்தது. குடல்குவையை கையிலிருந்து உருவி தனியாக எடுத்து வைத்தபின் கையை துடைத்துக்கொண்டிருந்தார் முதியவர். வாழைப்பூநிறத்தில் பளிங்குக்கல் போல பளபளப்பாக இருந்த ஈரலையும் இளஞ்செந்நிறத்தில் செம்மண்நீர் சுழிக்கும் ஓடையில் சேர்ந்து நிற்கும் நுரைக்குவை போலிருந்த துணையீரலையும் இன்னொரு கிழவர் கத்தியால் வெட்டி எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். எருமையின் இதயம் பெரிய சிவந்த விழி ஒன்றின் வெண்படலம் போல குருதிக்குழாய் பின்னலுடன் இருந்தது. பீமன் தலைகுனிந்து விழிகளை விலக்கிக் கொண்டான்.
“நான் அப்போதே சொன்னேன், நீ அஞ்சுவாய் என்று” என்று நீர் தெளித்த கிழவர் கண்களைச் சுருக்கி புன்னகைத்தபடி சொன்னார். பீமன் சீற்றத்துடன் ஏறிட்டு “நான் என் கையாலேயே மான்களையும் பன்றிகளையும் கொன்று உண்பவன்” என்றான். “அப்படியென்றால் ஏன் அஞ்சி வீழ்ந்தாய்?” பீமன் கண்களை மூடிக்கொண்டு “தெரியவில்லை” என்றான். அவர் தலையை ஆட்டி சிரித்துக்கொண்டே விலகிச்சென்றார். பீமன் பல்லைக்கடித்தபடி எழுந்து எருமையை நோக்கினான். கிழவர் அதன் விலாவெலும்புக்குள் கையை விட்டு உள்ளே இருந்த இணைப்பை வெட்டி நுரையீரல் அடுக்குகளை மெல்ல உருவி எடுத்தார். அவற்றை இலையில் நிணம் சொட்ட வைத்தார்.
பீமன் பிடிவாதமாக அவற்றை நோக்கியபடி அமர்ந்திருந்தான். கிழவர் மார்புக்குவை வழியாகவே கையை விட்டு எருமையின் மூச்சுக்குழலையும் உணவுக்குழலையும் பற்றி வெட்டி இழுத்தார். அவரது விரல்நுனிகள் எருமையின் திறந்த வாய்க்குள் ஒருகணம் தெரிந்து மறைந்தன. பீமனின் உடலில் ஒரு தவிப்பு இருந்தாலும் அவன் பார்வையை விலக்காமல் நிலைக்கச் செய்திருந்தான். அவர் கையை எடுத்தபோது எருமை ஆடியது. அப்போதுதான் தன் நடுக்கம் ஏன் என்று பீமன் உணர்ந்தான். அந்த எருமையின் முகம் விழித்த கண்களுடன் நீண்டு சரிந்து புல்லைத் தொட்டுக்கிடந்த நாக்குடன் தெரிவதுதான். அதன் விழிகளில் அதன் இறுதிக்கணத்தின் எண்ணம் உறைந்து எஞ்சியிருப்பதுபோலிருந்தது.
பெருமூச்சுடன் எழுந்து அவன் எருமையின் அருகே சென்று நின்றான். அவனுக்குப்பின்னால் இடும்பி ஓடிவரும் ஒலி கேட்டது. மூச்சிரைக்க வந்து இடையில் கையை வைத்து அவனருகே நின்று “சிறந்த எருமை… அவன் ஒரே அழுத்தில் அதன் மூச்சை நிறுத்திவிட்டான்” என்றாள். குனிந்து அதன் நாக்கைப் பிடித்து இழுத்து ”புல் இன்னும் மணக்கிறது… தூய எருமை…” என்றாள். பீமன் “ஆம்” என்றான். “சுவையானது” என்றாள் இடும்பி. கிழவர் நிமிர்ந்து நோக்கி “தன் உடல்மேல் கொண்ட நம்பிக்கையால் ஓடாமல் நின்றிருக்கிறது… வலுவான கொம்புகள் கொண்டது. உன் மைந்தன் என்பதனால் அதை வெல்லமுடிந்தது. இல்லையேல் இந்நேரம் அவன் விலாவெலும்புகளை எண்ணிக்கொண்டிருப்போம்” என்றார்.
எருமையை அவர்கள் தூக்கினார்கள். அதன் வால் மயிர்க்கொத்துடன் தொங்கி காற்றிலாடியது. அவர்கள் கொண்டுசென்றபோது குளம்புகளுடன் கால்கள் அசைய அது காற்றில் நடப்பது போலிருந்தது. “சுடப்போகிறார்கள்…” என்றாள் இடும்பி. “நான் எருமையைப்பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று திரும்பி ஓடினாள். பீமன் திரும்பிப்பார்த்தான். தொலைவில் கடோத்கஜன் பாறைமேல் அசையாமல் அமர்ந்திருந்தான். அந்தத் தொலைவில் அவன் ஒரு மண்சிலை எனத் தோன்றினான். ஏழு வயதான சிறுவன் அக்குலத்திலேயே உயரமானவனாக இருந்தான்.
பீமன் ஒருகணம் நெஞ்சுக்குள் ஓர் அச்சத்தை அடைந்தான். விழிகளை விலக்கிக் கொண்டதும் அந்த அச்சம் ஏன் என்ற எண்ணம் ஏற்பட்டது. அரக்க குலத்தவர் பேருடல் கொண்டவர்கள். ஆனால் கடோத்கஜன் அவர்களுக்கே திகைப்பூட்டுமளவுக்கு மாபெரும் உடல் கொண்டிருந்தான். முழுமையாக வளர்ந்தபின் அவன் திருதராஷ்டிரரையே குனிந்து நோக்குமளவுக்கு பெரியவனாக இருக்கக் கூடும். பீமன் மீண்டும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பை அடைந்தான். திரும்பச் சென்று கடோத்கஜனை போருக்கு அழைக்கவேண்டும் என்று ஓர் எண்ணம் அவன் உள்ளே மின்னிச் சென்றது. மறுகணம் அந்த எண்ணமே அவன் உடலை உலுக்கச் செய்தது. அச்சம் என்பதுதான் மானுடனின் உண்மையான ஒரே உணர்வா என்ன?
எருமையை அவர்கள் கொண்டுசென்று பீடம்போல தெரிந்த ஒரு பாறைமேல் வைத்தனர். அதைச்சுற்றி எருமையின் உடலைத் தீண்டாமல் பாறைப்பலகைகளை அடுக்கி மூடினர். பாறைப்பலகைகளுக்கு வெளியே கனத்த விறகுகளை அடுக்கினர். விறகுகளுக்கு நடுவே மெல்லிய சுள்ளிகள் கொடுக்கப்பட்டன. பெரிய சிதை ஒன்று அமைக்கப்படுவது போலிருந்தது. அல்லது வேள்விக்குரிய எரிகுளம். காய்ந்த புல்லில் நெருப்பிட்டு பற்றவைத்தபோது மெல்ல சுள்ளிகள் எரிந்து நெருப்பு ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எழுந்து செந்தழல்களாகி திரண்டு மேலெழுந்தது. அனல்வெம்மை அருகே நெருங்கவிடாமல் அடித்தது.
கிழவர்கள் விலகி நின்று ஏதோ மந்திரத்தை சொல்லத் தொடங்கினர். அனைவரும் இணைந்து ஒரே குரலில் சீரான தாளத்தில் அதைச் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் நேரத்தை கணிக்கவே அதைச்செய்கிறார்கள் என்று பீமன் எண்ணினான். அதற்கேற்ப ஒரே புள்ளியில் அவர்கள் அனைவரும் அதை நிறுத்திவிட்டு பாய்ந்து சென்று நீண்ட மூங்கில்கழிகளால் விறகுகளை தள்ளிப்பிரித்து தழலை சிறிதாக்கினர். மண்ணை அள்ளி தீக்கதிர்கள் மேல் வீசி அணைத்தனர். தீ அணைந்து கனத்த புகை எழத்தொடங்கியதும் அவர்கள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டனர். ஒருவர் தன் இடையில் இருந்த தோல்கச்சையில் இருந்து தேவதாரு மரத்தின் பிசின் கட்டிகளை எடுத்துக் கொடுக்க வாங்கி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினர். கண்கள் அனலை ஊன்றி நோக்கிக்கொண்டிருந்தன.
ஊன் வெந்த வாசனை நன்றாகவே எழத்தொடங்கியது. அவர்கள் பிசினை உமிழ்ந்துவிட்டு எழுந்து கழிகளால் விறகுகளை உந்தி விலக்கினர். பெண்களை நோக்கி ஒருவர் கைகாட்ட அவர்கள் அனைவரும் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி முழுமையாகவே நெருப்பை அணைத்தனர். ஆனால் பாறைகளில் இருந்து எழுந்த வெம்மை அணுகமுடியாதபடி காற்றில் ஏறி வீசியது. பெண்கள் இடையோடு இடை சேர்த்து கைபின்னி மெல்ல பாடியபடி சுற்றிவந்தனர். காற்று பாறைமேல் வீசி வெம்மையை அள்ளி அவர்கள் மேல் வீசியது. அது சுழன்று வந்தபோது ஊன்நெய் உருகும் வாசனையுடன் வெம்மை காதுகளைத் தொட்டது.
பின்னர் பெண்கள் வாழையிலைகளை மண்ணில் விரிக்க, முதியவர்கள் சுற்றிச்சுற்றிச் சென்று கழிகளால் பாறைப்பலகைகளை தள்ளினார்கள். பாறைகள் கனத்த ஒலியுடன் சரிந்து விழ உள்ளே பொன்னிறத்தில் வெந்த எருமை பாறையில் கொம்புடன் படிந்திருந்தது. மூங்கில்கழிகளில் கனத்த கொடிக்கயிறுகளைக் கட்டி கொக்கிகளாக்கி அதன் கொம்பிலும் கால்களிலும் போட்டு இறுக்கி இருபக்கமும் நின்று இழுத்தனர். எருமை பாறையில் இருந்து கால்கள் மேலிருக்க எழுந்தது. அப்படியே அதை இருபக்கமும் நின்று இழுத்து காற்றில் மிதக்கவைத்து அனல்பாறைகளை விட்டு வெளியே கொண்டுவந்தபோது பெண்கள் குரவையிட்டனர்.
எருமையை வாழையிலைமேல் வைத்தனர். அதன் உடலில் இருந்து ஆவி எழுந்தது. உருகிய கொழுப்பு வடிந்து வாழையிலையில் வழிந்தது. அதன் வாலில் கொடியாலான வடத்தைக் கட்டி சுழற்றி உள்ளே கொண்டு சென்று எலும்பில் கட்டினர். அதன் கால்களில் குளம்புகள் உருகி வடிவிழந்து சுருண்டிருந்தன. கொம்புகளும் உருகி வளைந்து குழைந்தன. அதன் கால்களை இரண்டிரண்டாக சேர்த்துக் கட்டி அதன் நடுவே மூங்கிலை நுழைத்து இருவர் தூக்கிக்கொண்டனர். அவர்கள் எருமையுடன் முன்னால் செல்ல குழந்தைகள் கூச்சலிட்டபடி பின்னால் சென்றன. பெண்கள் கைகளைக் கொட்டி பாடியபடி தொடர்ந்தனர்.
பெருங்கற்களுக்கு முன்னால் மூன்று மூங்கில்கழிகள் சேர்த்து முனை கட்டப்பட்டு நின்றன. அவற்றின் நடுவே எருமை தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டது. கடோத்கஜன் எழுந்து எருமை அருகே நின்றான். பெண்கள் குடில்களில் இருந்து பெரிய கொடிக்கூடைகளில் காய்களையும் கனிகளையும் கிழங்குகளையும் மலைத்தேனடைகளையும் கொண்டுவந்து வைத்தனர். ஆண்கள் குடிலுக்கு அருகே காட்டில் புதைக்கப்பட்டிருந்த பெரிய மண்கலங்களை தூக்கிக் கொண்டுவந்தனர். வடிவம் திரளாமல் செய்யப்பட்டிருந்த கனத்த மண்கலங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த கிழங்குகளும் பழங்களும் புளித்து நுரைத்து வாசமெழுப்பின. குடிசைக்கு அருகே நாய்கள் கிளர்ச்சியடைந்து குரைத்துக்கொண்டே இருக்கும் ஒலி கேட்டது.
தேனடைகளை எடுத்து தொங்கும் எருமையின் மேல் பிழிந்தனர். தேன் வெம்மையான ஊன்மீது விழுந்து உருகி வழிந்து வற்றி மறைந்தது. தேனடைகள் மிகப்பெரிதாக இருந்தன. எருமையின் உடலின் ஊன்குகைக்குள் அவற்றைப் பிழிந்து விட்டுக்கொண்டே இருந்தனர். ஊனில் தேனூறி நிறைந்து கீழே சொட்டத் தொடங்கியதும் நிறுத்திக்கொண்டனர். கிழங்குகளையும் காய்களையும் பச்சையாகவே பரப்பி வைத்தனர். மதுக்கலங்களை அவர்கள் களிமண்ணால் மூடியிருந்தனர். அவற்றிலிருந்த சிறிய துளைவழியாக நுரையும் ஆவியும் கொப்பளித்துத் தெறித்தபோது கலங்கள் மூச்சுவிடுவதுபோலத் தோன்றியது. கலங்களின் களிமண் மூடிகளை உடைத்துத் திறந்தபோது எழுந்த கடும் துவர்ப்பு வாசனையில் பீமன் உடல் உலுக்கிக் கொண்டது.
ஒரு கிழவர் நாய்களுக்கு உணவளிக்கும்படி ஆணையிட்டார். நாலைந்துபேர் ஓடிச்சென்று குடலையும் இரைப்பையையும் பிற உறுப்புகளையும் சிறிய துண்டுகளாக வெட்டி மூங்கில் கூடைகளில் எடுத்துக்கொண்டு சென்றனர். நாய்கள் உணவு வரக்கண்டதும் துள்ளிக் குரைத்தன. ஊளையிட்டு சுழன்றோடின. உணவை அவை உண்ணும் ஒலியை கேட்கமுடிந்தது. ஒன்றுடன் ஒன்று உறுமியபடியும் குரைத்துக் கடிக்கச் சென்றபடியும் அவை உண்டன. அவர்கள் திரும்பி வந்ததும் மூத்த இடும்பர் படையல் செய்யலாம் என கை காட்டினார்.
உணவை கற்களுக்குப் படைத்தபின் அவர்கள் எழுந்து நின்று கைகளை விரித்து ஒரே குரலில் ஒலியெழுப்பி உடலை வலப்பக்கமும் இடப்பக்கமும் அசைத்து மெல்ல ஆடி மூதாதையரை வணங்கினர். குனிந்து நிலத்தைத் தொட்டு நெஞ்சில் வைத்துக்கொண்டனர். முதியவர் இருவர் கடோத்கஜனிடம் உணவை குடிகளுக்கு அளிக்கும்படி சொன்னார்கள். மண்பூசப்பட்ட வெற்றுடலுடன் கடோத்கஜன் எழுந்து பெரிய பற்கள் ஒளிர சிரித்தபடி சென்று மூங்கில்குவளையில் அந்த கரிய நிறமான மதுவை ஊற்றினான். அதன் நுரையை ஊதி விலக்கிவிட்டு வந்து எருமையின் தொடைச்சதையை வெறும் கையால் பிய்த்து எடுத்தான்.
ஊனும் மதுவுமாக அவன் விலகி நின்ற பீமனை அணுகி “தந்தையே, தங்களுக்கு” என்றான். பீமன் திடுக்கிட்டு குலமூத்தாரை நோக்கினான். கண்கள் சுருங்க அவர்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தனர். “அவர்களுக்குக் கொடு!” என்றான் பீமன். “தாங்கள்தான் முதலில்” என்றான் கடோத்கஜன். பீமன் திரும்பி இடும்பியை நோக்க அவள் நகைத்தபடி “இனிமேல் அவன்தான் முதல்இடும்பன். அவனை எவரும் மறுக்க முடியாது” என்றாள். பீமன் திரும்பி தன் மைந்தனின் பெரிய விழிகளையும் இனிய சிரிப்பையும் ஏறிட்டுப் பார்த்தான். அவன் அகம் பொங்கி கண்களில் நீர் பரவியது. கைநீட்டி அவற்றை வாங்கிக்கொண்டான். “உண்ணுங்கள் தந்தையே!” என்றான் கடோத்கஜன். பீமன் அந்த இறைச்சியை கடித்தான். ஆனால் விழுங்கமுடியாதபடி தொண்டை அடைத்திருந்தது. சிலமுறை மென்றபின் மதுவைக்குடித்து அதை உள்ளே இறக்கினான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்