முத்தம் -கடிதங்கள்

images

இனிய ஜெயம்,

முத்தம் பதிவு வாசித்தேன்.

இந்த முத்தப் போராட்டம் துளிர்த்த சூழல் தவிர்த்து, அது துளிர்த்த நிலம் சார்ந்து அப் போராட்டத்திற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் உள்ளது. அந்த நிலத்துக்கும் தமிழ் நிலத்துக்குமான பண்பாட்டு இசைவு பாரதூரமானது.

அடிப்படையில் கேரளம் சக்தி பீடம். [கால் மேல் கால் போட்டு அமரும் நாயர் பெண்களின் தோரணைக்கு நான் பெரும் ரசிகன்] வரலாற்று இடர்களுக்குப் பின்னும் அங்கு பெண்களின் இடம் வலிமை மிக்கதாகவே இருக்கிறது. உலகின் எப் பகுதியிலும் வேர் கொண்டு வாழும் திறனில் முன்னணியில் இருப்பது கேரளப் பெண்களே எனக் காண்கிறேன்.

தமிழகத்திலோ நிலை தலை கீழ். நான் ஆசீர்வதிக்கப் பட்டவன் என் அப்பா, அம்மாவையும் எங்களையும் தினமும் முத்தமிடுவார். வெளி உலகம் தெரியும் வரை எல்லா அப்பாக்களும் இப்படித்தான் இருப்பார்கள் என பேதைத்தனமான கர்ப்பிதத்தில் இருந்தேன். எனது வயதொத்த தோழமைகளை விசாரித்துப் பார்த்தேன். பாவம் அவர்கள் தங்கள் பெற்றோர்கள் முத்தமிட்டுக் கொண்டதை ஒரு முறை கூட கண்டதில்லை.

பிரியத்தின் மேன்மையை, அதன் வெளிப்பாட்டின் மேன்மையை தங்கள் வாழ்வின் எந்த தருணத்திலும் அறியாத கலாச்சார வறுமை கொண்ட சமூகம் தமிழ் இளைய சமூகம்.

உடல் என்பதன் உவகை நாம் அறியாத ஒன்று. தமிழ் நாட்டிற்குள் எங்கும் ஒரு கூட்டத்தினிடையே நடந்து சென்றால் யாருக்கும், யாருடைய உடலும் பிரக்ஞையில் இல்லை. எருமைக் கூட்டம் ஒன்றினை ஊடுருவி வெளியேறிய அனுபவமே எஞ்சும்.

பொதுவெளியில் சில உரிமைகளை அடைவதற்கு,அதை அனுபவிக்கவும் அதற்க்கான பக்குவத்தை முதலில் அடைந்திருக்க வேண்டும். தமிழ் நிலத்தில் அந்தப் பக்குவம் வர சில நூற்றாண்டுகள் ஆகும். அதுவரை தமிழ் நிலத்தில் ‘முத்தப் போராட்டம்’ என்பது மற்றொரு ‘மானாட மயில் ஆட’ வகையறா சமாச்சாரம்தான்.

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ.,

ஒழுக்க மாற்றம் என்பது பிரச்னை இல்லை; ஒழுக்க மாற்ற வேகமே பிரச்னை என்று படுகிறது. பொது இடத்தில் முத்தம் மேலை நாடுகளில் சகஜம்.. ஆனால் பொது இடங்களில் உடலுறவு அங்கும் தவறானது (கடற்கரை போன்ற சில இடங்களைத் தவிர)…
முன்னொரு காலும் பின்னொரு காலுமாகத்தான் இது மாறும் என்று நினைக்கிறேன்… இப்போது பின்னங்காலின் வலு கூடியிருக்கிறது… ஆனாலும் அது முன்னால் வந்துதானே தீரவேண்டும்..

நன்றி
ரத்தன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 56
அடுத்த கட்டுரைடோனி மோரிசன்