பயணம், இன்னும் கடிதங்கள்

திரு.பூமிநாதனின் கருத்துக்களில் சில உண்மைகள் உண்டு. தமிழகத்தில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் சமூக, பொருளியல் மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் திராவிட இயக்கங்களே. தாழ்த்தப் பட்ட பிரிவினர்கள், பிற்படுத்தப் பட்ட பிரிவினர்கள் அளவுக்குப் பயன் பெற வில்லையெனினும், வட மாநிலங்களை விட பரவாயில்லை. இது பற்றிய ஒரு பரிசீலனையை நீங்கள் செய்தே ஆக வேண்டும். – பாலா
***
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் இந்தியப் பயணம் குறித்த பயணக் குறிப்புகளின் மூலமாக எங்களையும் உடன் அழைத்துச் செல்கிறீர்கள்.
குறிப்பாக காசி பற்றிய கட்டுரை. இதுவரை நான் ஒரு முறை கூட காசி சென்றதில்லை. ஆனால், உங்கள் கட்டுரையைப் படித்தபோது நான் ஆண்டாண்டுகளாக வாழ்ந்த ஒரு நகரம் அது என்பதான பிரமையில் ஆழ்ந்தேன்.
உள்கட்டமைப்பு பற்றிய உங்கள் கட்டுரையில் காமராஜர் குறித்த உங்கள் கருத்துக்களோடு நான் உடன்படுகிறேன். மேலதிகமாக, திராவிட இயக்க அரசுகளும் தொடர்ந்து அத்தகைய முயற்சிகளை முன்னெடுத்து(அதன் பிண்ணனிக் காரணங்கள் எதுவாக இருப்பினும்) சென்றதன் மூலமாகவே தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி சாத்தியப் பட்டிருக்கிறதென்று எண்ணுகிறேன்.
மற்றபடி, இத்தகைய ஒரு பயணம் என்பது எனது வாழ்நாள் முழுவதற்குள்ளாவது எனக்கு சாத்தியப்படுமா என்ற ஏக்கம் உண்டு. உங்களுக்கு சாத்தியப்பட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
மதி

=======================

அன்புள்ள ஜெயமோகன்
தங்களின் பயணக்கட்டுரைகள் நன்றாக உள்ளது.
ஒரு வாசகர்  திராவிட இயக்கங்களை பற்றியும் அண்ணாதுரை பற்றியும் ஒரு மறுபரிசீலனையை கோரியிருந்தார்.
உங்களை இளைய தலைமுறையை சார்ந்தவர் என்று சொல்லியிருந்தார்.உங்களை விடவும் இளைய தலைமுறையை சார்ந்தவன் நான். அதனாலேயே நான் காண்பதில் நியாயம் இல்லை என்று சொல்லி விட முடியாது.நிலக்கிழார் ஒழிப்பு பற்றி  சொல்லியிருந்தார் .ஆனால் நிலக்கிழார்கள் ஒழிக்கப்பட்டு அந்த இடத்துக்கு இவர்கள் வந்து விட்டார்கள்.பழைய நிலக்கிழார்கள் ஒழிக்கப்பட்டு புதிய நிலக்கிழார்கள் அந்த இடத்தை பிடித்துக் கொண்ட புரட்சி
.உங்கள் முந்தைய கட்டுரையில் ஹிந்தியை விட ஆங்கிலம் தெரிந்தால் வடக்கில் வேலை கிடைப்பது கடினமில்லை என்று எழுதியிருந்தீர்கள் அது ஒரு பகுதி உண்மை.வேலை கிடைப்பது சிரமமில்லை ஆனால்  அந்த இடத்துக்கான மொழி உங்களுக்கு தெரியா விட்டால் அந்த அலுவலகத்தில் உங்களுக்கென்று ஒரு தொடர்புவட்டத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.வேலை கிடைக்கும் வரை வேண்டுமானால் வேலை கிடைத்தால் போதும் என்ற மனோபாவம் அதற்க்கு பிறகு அந்த இடத்தில் புழங்கும் மொழியை உங்களுக்கு பேச தெரியாவிட்டால் உங்களுக்கான தொடர்பு வட்டம் சுருங்கி விடும்.
தொடர்பு வட்ட சுருக்கம் எனபது உங்களின் அடுத்த கட்ட வாய்ப்பு சுருங்குவதர்க்கான ஒரு குறியீடு.பாகல் என்கிற ஹிந்தி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்கள்ளுக்கு தெரியும் இது தெரியாமல் ஒரு ஆறு மாத காலம் எனக்கு கழிந்திருக்கறது எனக்கு.என்னை பொறுத்தவரை நான் ஹிந்தி கற்கும் வாய்ப்பில் மண்ணைப்போட்ட புண்ணியவான்கள் இவர்கள்.என்னைப்போல் எத்தனை பேர்?அதற்காக நான் தமிழை மட்டம் தட்ட முனையவில்லை ஆனால் தமிழை வளர்ப்போம்  என்று முழங்கிய   அளவுக்கு இவர்களால் வளர்க்க முடிந்ததா என்கிற கேள்வியை எத்தனை முறை தான் கேட்ப்பது? .தமிழ் நாட்டு அரசியலில் ராஜாஜி,காமராஜர் ஆகியோரின் அரசியலில் நாம் எவ்வளவு தான் குற்றம் கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு மாற்று கண்டிப்பாக இவர்கள்  அல்ல.கையூட்டு பெறுவது கேவலம் என்கிற நிலை மாறி ஊழல் என்பது ஒரு  உரிமை என்கிற அளவுக்கு மக்களின் பொது மனோபாவத்தை சிறுமைப்படுத்தியவர்கள். நீங்களும் நானும் ஆயுள் முழுவதும் முயன்றாலும் இந்த கட்சிகளின் வட்டச்செயலர் சம்பாதிப்பதை கூட நாம் சம்பாதிக்க முடியாது. இதை அந்த வாசகர்  மறுக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். திராவிடநாடு,மொழிப்போர்,அண்ணாயிசம் இவையெல்லாம் தமிழ்நாட்டின் அர்த்தமிழந்துபோய் விட்டன.இவர்களே அதை கைவிட்டு ஆண்டுகள் பலவாகின்றன.இன்னும் அவையெல்லாம் மிகவும் ரசிக்கத்தக்க நகைச்சுவைகள் அவை.அனால் அதை நம்பியவர்கள் போராடி அடிபட்டவர்கள் எத்தனை பேர்
 
 இரண்டாவதாக அந்த வாசகர் தமிழகம்  கட்டமைப்பு வசதியில் திராவிட இயக்கங்களின் காலத்தில் முன்னேறிஇருப்பதாக சொன்னார்.  கடந்த நாற்பத்தியொரு ஆண்டு காலத்தில் இருபத்தியொரு வருடங்கள் ஆண்டது அதிமுக அரசு. மதிய உணவு திட்டத்தை அன்றைய முதல்வர் எம் ஜீ.ராமச்சந்திரன்  விரிவுப்படுதியது.
  பொது விநியோக முறையை நெறிப்படுத்தியது முதலியவை அவருடைய ஆட்சியின் சிறப்பம்சங்கள்.
 .இவையெல்லாம் ஏதோ  திராவிட இயக்கத்தின் சித்தாந்த தெளிவை  உணர்ந்தா செய்தார் ? கண்டிப்பாக இல்லை அவர் திராவிட இயக்ககங்களில் பங்கு பற்றியது சினிமாவில் தனக்கென ஒரு தனிஇடத்தை அடைய விரும்பி! அதற்க்கு  இவர்களுடைய மேடை பேச்சும் நாடகமும் வசன உத்தியும் வெகுஜன மக்களிடம்  தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும். என்று அவர் புரிந்து கொண்டது  தான் காரணம் ஆனால்  அவர் திரையுலகில் வெற்றி  பெறுவதற்கு மாத்திரமல்லாது அவர் ஒரு அரசியல் ஆளுமையாக மாறியது அவரே நினைத்தும் பார்காத அதிசயம்.அதை தக்க வைத்துக்கொள்ள எளிய மக்களின் நம்பிக்கையை பலப்படுத்த  மதிய உணவு திட்டம்,பொது விநியோக முறை ஆகியவை அவருடைய சூத்திரங்கள்.
.அவர் சித்தாந்தங்களையோ இவர்களின் முழக்கங்களையோ மனதளவில் ஏற்றுக்கொண்டதே கிடையாது. ஆனால்  மேடைகளில் ஆதரித்தார்.சினிமாவில் விளம்பரப்படுத்தி விளம்பரமடைந்தார் காமராசர் மேல் அவர் கொண்ட மதிப்பை திமுக மேடையில் அண்ணா முன்னிலையில் பகிரங்கப்படுத்தியவர் அவர்.அடுத்ததாக ஜெயலலிதா அவர் எந்த அளவுக்கு திராவிட சித்தாந்தத்தை  மதிப்பவர் என்று எல்லோருக்கும்  தெரியும். அவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவர் ஒரு சிறப்பான் நிர்வாகி. கடந்த ஆட்சியில் அவருடைய  மழை நீர் சேகரிப்பு திட்டம் அவருடைய நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவை சிறப்பானவை. சட்டம் ஒழுங்கு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அவர் செய்து கொண்டதில்லை.அடுத்தாக சினிமாகாரர்களை கூப்பிட்டு கொஞ்சியதில்லை.
இவையெல்லாம் திராவிட இயக்கம் என்ற பெயரில் திராவிட சித்தாந்தத்தை கொஞ்சம் கூட நம்பாத இரு தலைவர்களின் சிறப்பியல்புகள்.
அவர்களிடம் குறைகளும் உண்டு அதை மறுப்பதற்கில்லை.
சென்ற நாடாளுமன்ற தர்தலில் திமுக சார்பில் எம்.பீ யாக விண்ணப்பம்  பூர்த்தி செய்ய அறுபது லட்ச ரூபாய் பெறப்பட்டது.அது வெறும் விண்ணப்ப செலவே.தமிழகத்தில் தொண்ணூறு லட்சம் குடும்பங்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றன. இது தமிழகத்தின் ஜனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மாற்ற மாநிலங்களின் காட்டிலும் நாம் பரவாயில்லை என்று சொல்லியிருந்தீர்கள் ஜெயமோகன். பரந்த மனப்பான்மை எதில் எதில் இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். காமராசர் ஆட்சி காலத்தில் ஒன்பது ஆண்டுகளில்  கல்வித்துறையில் நாம் பெற்ற வளர்ச்சி எங்கே? இன்று நாற்பது ஆண்டுகளில் பெற்றிருக்கிற வளர்ச்சி என்ன? இயல்பான வளர்ச்சியை திராவிட இயக்கங்களோடு முடிச்சு போடுவது நம்மை நாமே ஏமாற்றி கொள்கிற செயல்.முக்கால்வாசி கல்லூரிகள் தரமற்று துவக்கப்பட்டு அங்கு பட்டம் பெற்றவர்கள் படுகிற பாடு என்ன?கடந்த உள்ளாட்சி தேர்தல் கலவரங்கள் மறந்து பொய் விட்டதா என்ன அந்த நண்பருக்கு?மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை விட மக்களின் அறியாமையை மிக அழகாக பயன்படுத்திக்கொள்கிற கவர்ச்சி திட்டங்கள் இது தான் திராவிட அரசியலின் உண்மையான முகம். அராஜகம்;ஊழல் மத இழிவு; தெளிவின்மை;மக்களின் அறியாமையின் மீது அபார நம்பிக்கை;எல்ல அரசியல் அறங்களையும் அப்புறப்படுத்திய சிறுமையை தாண்டி திராவிட இயக்கங்கள் எதையும் சாதிக்கவில்லை சதிக்கப்போவதுமில்லை இது திண்ணம்.
சந்தோஷ்
=====================

உங்கள் பயணம் பற்றிய கட்டுரைகளையும் கடிதங்களையும் கூர்ந்து படித்துவருகிறேன். ஒரு இந்திய தரிசனத்தை அக்கட்டுரைகள் அளிக்கின்றன. இந்திய நிலப்பகுதியில் உள்ள வாழ்க்கையைப்பற்றிய உங்கள் பதிவுகளும் அங்குள்ள வாழ்க்கையைப்பற்றிய ஒப்பீடுகளும் சிறப்பானவை. அறிஞர் அண்ணா பற்றி த சண்டே இண்டியன் வெளியிட்ட சிறப்பிதழில் ஒரு விஷயம் படித்தேன். அண்ணா அவரது கடைசிக்காலத்தில் எம்பியாக இருந்தபோது ஒருமுறை காரிலேயே டெல்லிக்குச் சென்றாராம். அந்தப்பயணம்தான் அவரை தேசிய நோக்கு கொள்ளச் செய்தது. கடைசிக்காலத்தில் அவர் இந்தியாவின் முழுமையை உணர்ந்துகொண்டாராம். ஒருமுறை காரில் இந்தியாவெங்கும் வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது
எம்.பாண்டியன்

முந்தைய கட்டுரைஇந்தியப்பயணம் 21, பூரி
அடுத்த கட்டுரைஷாஜியின் வலைப்பூ