எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை [ தேர்க்கால் ] சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது. அடுத்தடுத்த கட்டத்தில்தான் அது அடித்தள வாழ்க்கையின் சித்திரங்களை அளிக்கத் தொடங்கியது. ஜி.நாகராஜன் அதற்கான தொடக்கம் எனலாம்.

இமையம்,சு.வேணுகோபால், ஜோ.டி.குரூஸ்,அழகியபெரியவன் போன்றவர்களும் அடுத்த தலைமுறையில் எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், வா.மு.கோமு, கெ.என்.செந்தில் போன்றவர்களும் அடித்தளவாழ்க்கையை எழுதுபவர்களாக இன்று அறியப்படுகிறார்கள். தீவிரமான கணங்களை எழுதிக்காட்டும் படைப்புகள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று தமிழிலக்கியத்தில் புதிய போக்கு என்றால் இதுதான். இவ்வகை எழுத்து அதிர்ச்சிகளுடன், சங்கடங்களுடன் உருவாக்கும் எல்லை விரிவாக்கம்.

இந்த அடித்தள வாழ்க்கைச் சித்தரிப்புகள் உருவாக்கும் அதிர்ச்சிகளுக்கு அப்பால் நீண்டகால அளவில் இவற்றின் மதிப்பு என்ன என்ற வினா இக்கதைகளை வாசிக்கையில் அடிக்கடி எழுகிறது. சு.வேணுகோபால், இமையம் போன்றவர்கள் அவர்களின் சிறந்த கதைகளில் அவற்றின் கவித்துவம் வழியாக அடுத்த கட்டத்திற்குச் செல்கிறார்கள் என்று தோன்றும்

அத்தகைய ஒரு நகர்வு சாத்தியமான ஒரு கதை இது — அதன் கடைசி வரியில். ஆனால் கதை சித்தரிப்பின் தேர்ச்சி கைகூடாமலும் இருக்கிறது. ஒரு கதையை சொல்லவந்து நிறுத்திவிட்டு ‘நேற்று என்ன நடந்தது என்றால்’ என ஆரம்பிப்பதும் மையக்கதாபாத்திரத்தின் வாழ்க்கையை ஆசிரியரே சுருக்கமாகச் சொல்வதும் பழையவகை கதைசொல்லும் முறைகள்.நவீனச்சிறுகதைகள் அந்த முறையைக் கடந்துவிட்டன. மிக எளிதாக அவற்றை சீராகச் சொல்லும் பல உத்திகள் இன்றுள்ளன

முந்தைய கட்டுரைமுத்தம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54