இரவு 7

எந்தப்பகலிலும்

இரவு இருந்துகொண்டிருக்கிறது

ஒவ்வொன்றுக்கும் கீழே அழுந்தி

ஒவ்வொன்றுக்கும்பின்னால் பதுங்கி

மௌனமாக காத்திருக்கிறது.

வெளியே முக்கர்ஜியின் உரத்த குரல் ஒலித்தது. நான் வெளியே சென்றபோது நிலவொளியில் மூவரும் கூdi நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். முக்கர்ஜி மேனனைவிடவும்  அரையடி உயரம். அவரது குர்த்தாவை சராசரி உயரமுள்ள ஒருவர் அணிந்தால் அது பாதிரிமார் அங்கி போல ஆகிவிடும். எதையுமே மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கையசைவுகளுடன் பேசுபவர். வாழ்நாள் முழுக்க தன்னைவிட குள்ளமானவர்களிடம் பேசியதனாலேயே சற்றுக் குனிந்து பேசுபவராக ஆகிவிட்டிருந்தார். தோள்களுக்குப் பின்னால் ஒரு சிறு கூனல்.

நான் அருகே சென்றபோது ”ஒன்று சொல்கிறேன்.. இந்தப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரே உண்மையான நிறம் சிவப்புதான். மற்ற நிறங்கள் எதிலும் உயிரே இல்லை. சிவப்பில் மட்டும்தான் உயிர் இருக்கிறது…உயிர் என்றால் அது எரியவேண்டும். தீ மாதிரி ரத்தம் மாதிரி…இதோ வந்துவிட்டார்” என்றபின் என்னிடம் ”என்ன, முகம் பதறிப்போய் இருக்கிறது? என்னுடைய பேச்சைக்கேட்டாலே இப்படி பயப்படுகிறாய். என் ஓவியத்தைப் பார்த்தால் என்ன ஆகும்?” என்றார் சிரிக்காமல். நான் பலவீனமாக புன்னகைசெய்தேன். ‘கமான்…லெட் அஸ் மூவ்”

பேசிக்கொண்டே நடந்து குடிசைகளைக் கடந்து உள்ளே சென்றோம். உயரமான ஒரு வட்ட வடிவக்குடிசை வாசலில் விளக்கொளியில் செவ்வண்ணத்தில் ஒளிவிட்ட திரைச்சீலை தீக்கொழுந்து போல கடற்காற்றில் படபடத்தது. குடிசைக்குள் பெரிய ஒரு தீக்குண்டம் எரிவது போல. அந்த தீக்குள் புகுவது போல முக்கர்ஜி உள்ளே சென்றார். என்னிடம் ”கம் இன் …திஸ் இஸ் மை ஸ்டுடியோ” என்றார். மேனனும் கமலாவும் உள்ளே நுழைந்த பின்பு நான் நுழைந்தேன்.

உள்ளே வட்டவடிவமான மண்சுவர்களில் நிறைய ஓவியச்சட்டங்கள் தொங்கின. எல்லா ஓவியங்களும்  முதற்கணத்தில் ஒரே ஓவியத்தின் நகல்களாக எனக்குப்பட்டன. கொஞ்சம் கவனித்தபின்னர்தான் அவை வெவ்வேறு ஓவியங்கள் என்று பட்டன. அனைத்துமே பெண்முகங்கள். வெவ்வேறு பெண்கள். முகங்களின் கோணங்களும் வண்ணக்கலவைகளும்கூட வேறு வேறு. ஆனாலும் அவையெல்லாம் ஒரே ஓவியம் என்று ஏன் தோன்றுகின்றன என்று எனக்குப் புரியவில்லை.

ஓவியங்களைப் பார்த்துக்கொண்டு மெல்ல சுற்றி வந்தேன். அறைநடுவே பெரிய ஸ்பிரிட் விளக்கின் சுடர் மெல்ல படபடத்துக்கொண்டிருக்க அந்த ஒளியில் ஓவியத்திரைகள் அந்திமேகங்கள் போல செம்பிழம்பாக இருந்தன. அந்திமேகங்களைச் சொல்ல நல்ல ஒரு சொல் உண்டே,… நினைவுக்கு வரவில்லை. எல்லா ஓவியங்களும் சிவப்பின் பேதங்களால் ஆனவையாக இருந்தன.  அழுத்தமான தூரிகைத்தடங்களுடன் கூடிய இம்ப்ரஷனிச பாணி ஓவியங்கள்.

ஜ்வாலாமுகி —  நினைவில் வராமலேயே சட்டென்று நாவில் வந்துவிட்டது. சுவாலைக்கு முகம் காட்டியவள். சுவாலையே முகமாக ஆனவள். எல்லா பெண்களும் எரியும் தீயின் முன் நிற்பதுபோல — ஆம், அதுவும் தெரிந்துவிட்டது. அத்தனை பெண்களும் தீயை அல்லது அந்தியொளியை முகத்தில் ஏந்தும் கோணத்தில் இருந்தார்கள். கண்களில் கன்ன வளைவுகளில் ஒளி பளபளத்தது. அத்தனை பெண்களும் எரிந்துகொண்டிருந்தார்கள். ஆம், அத்தனை முகங்களிலும் உக்கிரமான கோபமோ குரோதமோ வெறியோ ஏதோ இருந்தது.

”என்ன, ஓவியங்கள் பிடித்திருக்கின்றனவா?” என்றார் முக்கர்ஜி. நான் மெல்ல புன்னகைத்து ”எனக்கு ஓவியம் பற்றி எதுவுமே தெரியாது…” என்றேன். ”அது ரொம்ப நல்லது…உனக்கு என்ன தோன்றுகிறது?” நான் ”பயமாக இருக்கிறது” என்றேன். ”ஏன்?” என்றார். ”ஏதோ துர்தேவதைகள் போல இருக்கிறார்கள் இந்தப்பெண்கள்…” அவர் ”வாவ்!” என்றபின் கமலாவிடம் ”பார்த்தாயா கமலா?” என்றார். நான் ”ஏன்?” என்றேன். கமலா, ”இந்த சீரியலோட பொதுத்தலைப்பே ‘யக்ஷிகள்’தான்” என்றார். நான் முகம் மலர்ந்து ”அப்படியா?” என்றேன்.

முக்கர்ஜி ”யக்ஷிகளின் நிலம் இந்த கேரளம். நான் அதற்காகவே இங்கே வந்தேன். யக்ஷிகளைச் சந்திக்கத்தான் இரவில் வாழ ஆரம்பித்தேன். பதினெட்டுவருடங்களாக இந்த யக்ஷிபூமியில் யக்ஷிகளை தேடி அலைகிறேன்…” என்றார். நான் மீண்டும் ஓவியங்களைப் பார்த்தேன். அவர்கள் எல்லாருமே சாதாரண குடும்பப் பெண்கள் போலத்தான் தோன்றினார்கள். ”நீ நினைப்பது சரிதான்”என்றார் முக்கர்ஜி ”அவர்கள் எல்லாருமே சாதாரணமான பெண்கள்தான்…யக்ஷி என்பது ஒரு ஆளுமை அல்ல. ஒரு தருணம்தான். எல்லா பெண்ணும் ஏதோ ஒருதருணத்தில் யக்ஷியாக ஆகி திரும்பி வருகிறாள்….”

”இது அதீன் எப்பவுமே சொல்ற ஒரு சூத்திரம்….எல்லா பெண்களும் இவருக்கு எதிரே வர்றப்ப பக்கத்தில வந்ததும் ஒரு யக்ஷிப் புன்னகையை காட்டிட்டுபோறாங்க. ரெண்டு கோரைப்பல்லும் ரத்தநாக்குமா…” என்றார் மேனன். ”ஷட் அப் யூ ஓல்ட் பாஸ்டர்ட்” என்றார் முக்கர்ஜி நட்பாகச் சிரித்தபடி. நான் ”ஏன் யக்ஷியை வரைகிறீர்கள்?” என்றேன்.

முக்கர்ஜி சிந்தித்து ”இந்தக் கேள்விக்கு நான் ஒவ்வொரு முறையும் ஒரு பதிலைச் சொல்வது வழக்கம். இந்த முறை உனக்காக யோசிக்கிறேன்…”என்றார். பிறகு ”பகல் ஒரு பெண் என்றால் இரவு ஒரு யக்ஷி ..அதனால்தான்” என்றார். நான் ”புரியவில்லை…” என்றேன். ”இதுக்குமேல் என்னால் சொல்ல முடியாது. நான் வரைந்து காட்டுகிறேன்”என்றார். மேனன் ”இதேமாதிரி இன்னொரு மாடர்ன் ஆர்ட்டை வரைவார். அதற்கு உரையாக இன்னொன்றை வரைய வேண்டியிருக்கும்” என்றார்.

வெளியே நிதானமாக மணி அடிக்க ஆரம்பித்தது. ”அதற்குள் ஆரம்பித்துவிட்டார்களா?” என்றார் முக்கர்ஜி. நான் நேரத்தைப் பார்த்தேன். மணி பதினொன்றரை. அந்த அறைக்குள் மேஜை நாற்காலி கட்டில் ஏதும் இல்லை. ஒரு உறக்கப்பை மட்டும் இருந்தது. ஒரு பெரிய சூட்கேஸ். முக்கர்ஜிக்கு சொந்தமாக ஏதும் உடைமைகள் இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.

”கமான்…லெட் அஸ் மூவ்” என்று முக்கர்ஜி என் தோளில் கையை வைத்தார். கனமான பெரிய கை. பெரிய மூக்கும் பெரிய கண்களும் பெரிய உதடுகளுமாக ஒரு சராசரி மனிதனை கொஞ்சம் ‘புளோ அப்’ செய்தது போல இருந்தார். ”நீங்கள் சாந்தி நிகேதனில் படித்தீர்களா?” என்றேன். ”எப்படித் தெரியும்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டு ”கமலா?” என்றார். மேனன் ”முட்டாள், ஒரு ஓவியம் வரையும் வங்காளியிடம் அப்படிக் கேட்காவிட்டால்தான் ஆச்சரியம்” என்றார். ”ஏன், வங்காளத்தில் எத்தனை ஓவியப்பள்ளிகள் இருக்கின்றன…” என்றார் முக்கர்ஜி ”இருக்கலாம். இங்கே தெரிந்தது சாந்தி நிகேதன் மட்டும்தானே?”

குடிசைகளுக்கு நடுவே இருந்த அந்த உயரமான கட்டிடத்தையும் குடிசை என்றுதான் சொல்லவேண்டும். கூம்பாகச் சரிந்த கூரைப்பரப்பை அதிகரிப்பதற்காக அதை ஒன்றுமேல் ஒன்றாக இரண்டு கூரை அடுக்காக கட்டியிருந்தார்கள். நாங்கள் சென்றபோது ஒருவர் ஒருவராக பலர் அங்கே வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள். இரு வெள்ளைப்பெண்மணிகள் குட்டைப்பாவாடையும் டி ஷர்ட்டும் அணிந்தவர்களாக குனிந்து வந்தார்கள். ஒரு வெள்ளைய இளைஞனும் அவன் தோழியும். இருவருமே டிஷர்ட்டும் ஷார்ட்ஸ¤ம் அணிந்திருந்தார்கள். இருவருமே அண்ணன்தங்கைகள் போல ஒரே வகையான மெல்லிய உடல்வாகும், ஏந்திய மூக்கும், கீறல்போன்ற உதடுகளும் கொண்டிருந்தார்கள்.

நாலைந்து நடுவயதுச் சாமியார்கள் காவியுடையும் அடர்ந்த தாடியுமாக வந்தார்கள். இரு நரைத்தாடி சாமியார்கள் அவர்களுக்குப்பின்னால். அனைவருமே முற்றிலும் மௌனமாக கனவில் நடப்பவர்கள் போல வந்து  அக்கட்டிட வாசலில் வைக்கப்பட்டிருந்த பெரிய வெண்கல பாத்திரத்தில் இருந்து நீரை அள்ளி கால்களைக் கழுவியபின் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்கள்.

கால்கழுவி உள்ளே செல்லுமிடத்தில் அடர்சிவப்பு நிறத்தில் மெத்தைபோல கால்துடைக்க திண்டு போடப்பட்டிருந்தது. உள்ளே துல்லியமான வட்டவடிவ அறைக்கு நடுவே ஒரு தூக்கு விளக்கு தொங்கியது. கடற்காற்றில் அணையாமலிருக்க கண்ணாடிக்குழல் போடப்பட்ட பாரம்பரியமான வெண்கல விளக்கு அது. உள்ளே செஞ்சுடர் ஓர் ஒற்றைத்தாமரை இதழ் போல அசையாமல் நின்றது. அந்த விளக்கின் சங்கிலி செங்குத்தாக ஒரு கோடுபோல அந்தரத்தில் எழுந்து மிக உயரத்தில் அந்தக்கூடத்தின் வட்டக்கூரையின் நட்ட நடுப்புள்ளியில் சென்று இணைந்தது.

அறையின் வடக்கு பக்கம் சுவர் ஓரமாக தரையில் மிகப்பெரிய வண்ணக்கம்பளம் ஒன்று கிடந்தது. நான் அமர்ந்த பின்னர்தான் அது கம்பளமல்ல வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட ஒரு ஓவியக்கோலம் என்று புரிந்துகொண்டேன். கரியாலும் செவ்வண்ணங்களாலும் வெண்ணிறமான மாவாலும் வரையப்பட்ட அந்த ஓவியம் மனித, தாவர மிருக வடிவங்கள் ஏதுமில்லாததாக இருந்தது. பலவகையான ஜியோமிதி வடிவங்கள் மட்டுமே. முக்கோணங்கள் அறுகோணங்கள் சதுரங்கள் . வெளியே சதுரவடிவ விளிம்புகளுடன் ஆரம்பித்து கணிதவடிவங்களாலான சுழல்களாக மையம்நோக்கிச் சென்று ஓளிவிடும் வெண்புள்ளியில் முடிந்தது. பலவகையான கோடுகள் ஒன்றையொன்றை வெட்டுவதன் மூலம் அந்த வடிவங்கள் உருவாகின்றன என்று பட்டது. கோடுகளைப் பார்த்தபோது வடிவங்கள் மறைந்தன. கோடுகள் ஓடிக்கொண்டிருப்பதுபோலப் பிரமை எழுந்தது.

ஓவியக்கோலத்திற்கு  அப்பால்  பெரிய வெண்கலத்தாம்பாளம் வைக்கப்பட்டிருந்தது. அதில் நன்றாக துலக்கப்பட்ட ஒரு வெண்கலக் கலசம். அதைச்சுற்றி உதிரச்சிவப்பான மலரிதழ்கள் குவிக்கப்பட்டிருந்தன.  வேரு பூசைப்பொருட்கள் ஏதுமில்லை. அதனருகே ஒரு மலரிதழ் வடிவிலான மரப்பலகை. அறைக்குள் நுழைந்தவர்கள் ஒவ்வொருவராக  சுவரோரமாக இருந்த பிரம்புநிலைகளில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அலங்காரக் கோரைப்பாய்களை எடுத்துப் பிரித்துப் போட்டு அமர்ந்து கொண்டார்கள். நான் கோலத்தின் வடிவச்சிக்கலையே கண்களால் பின்தொடர முயன்றபடி இருந்தேன். என் பார்வையை அது மீண்டும் மீண்டும் ஏமாற்றியபடி இருந்தது.

கூடத்திற்குள் கனமான மௌனம் நிலவியது. எவரும் இருமவோ அசையவோகூட இல்லை. அங்கே எவருமே இல்லாமலிருப்பது போலிருந்தது. நான் கடிகாரத்தைப் பார்த்தேன். பன்னிரண்டுக்கு பத்துநிமிடம். எனக்குப் பசிப்பதுபோல் இருந்தது. லிஸ் வந்து என்னை புன்னகையில்லாமல் கண்சந்தித்துவிட்டுச் சென்று அமர்ந்துகொண்டாள்.  அங்கே என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை.  ஒரு பூஜையா? ஆனால் பூஜைக்கான விரிவான ஏற்பாடுகள் எவையும் என் கண்ணுக்குத் தென்படவில்லை. காத்திருக்கும்தோறும் காலம் மிகமெல்ல கணங்களாக, அணுக்கணங்களாக, நகர ஆரம்பித்தது.

வெளியே மணியோசை கேட்டது. சங்கு ஊதும் ஒலி. கிழக்கு பக்கத்து வாசல் வழியாக நிழல்கள் முதலில் வந்தன. நிழலைத் தொடர்ந்து வருபவர் போல மொட்டை போட்டு ரத்தச்சிவப்பான வேட்டியும் ஜிப்பாவும் அணிந்திருந்த நடுவயதான மனிதர் கையில் சிறிய தட்டுமணியுடன் வந்தார். சீராக அதை அடித்தபடியே வந்து வடக்கு எல்லையில் இருந்த பீடம் நோக்கிச் சென்றார். அவர். அவருக்குப் பின்னால் பிரசண்டானந்தா கையில் ஏழு திரி சுடர் கொண்ட பித்தளை விளக்குடன்  குருதிச்சிவப்பான ஜிப்பா வேட்டி அணிந்து நடந்து அவர அவருக்குப்பின்னால் அதே போன்ற ஆடை அணிந்த இன்னொரு மொட்டை மனிதர் வந்தார். பிரசண்டானந்தாவின் முகம் அந்த விளக்கொளியில் தாடி தழல் போலச் சுடர உக்கிரமாக தெரிந்தது.

பிரசண்டானந்தா நேராகச்சென்று அந்த மரப்பலகையில் அமர்ந்து விளக்கை தாம்பாளத்தின் முன்னால் வைத்தார். சங்கு வைத்திருந்தவர் கடைசியாக ஓங்காரமாக ஊதி நிறுத்தியபின் சங்கை தாம்பாளத்தின் அருகே வைத்துவிட்டு மையவிளக்கருகே வந்து அதன் கண்ணாடியை தூக்கி திரியை இழுத்து அணைத்தார். கூடம் இருண்டு அந்த ஏழுசுடர்களின் அசையும் ஒளி மட்டும் கண்ணுக்குள் பெய்தது. மணி அடித்தவர் மணியை அடித்துக்கொண்டே இருந்தார். அதன் வேகம் அதிகரித்தது.

பிரசண்டானந்தா பத்மாசனத்தில் கண்மூடி அமர்ந்ததும் மணியோசையை நிறுத்தி மணியை கீழே வைத்துவிட்டு அவரும் விலகி நின்றுகொண்டார். மணியோசை நின்றாலும் அதன் ரீங்காரம் பிரக்ஞையில் நீடித்தது. அந்த ரீங்காரமே மௌனமாக நீண்டது. ஆழ்ந்த மௌனத்தில் நான் கடலோசையைக் கேட்க ஆரம்பித்தேன். கடல் நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருப்பது போலிருந்தது. கூடத்திற்கு வெளியே படிகளில் அலைகளின் விளிம்பு பரவிச்செல்லும் ஒலி கேட்பது போல. பிரசண்டானந்தா கண்களைத் திறந்து ஏழுசுடர்களின் ஒளியை தன் வளைவுகளில் பிரதிபலித்துக்கொண்டிருந்த கலசத்தையே உற்று நோக்கினார். பின்பு கணீரென்ற குரலில் பாட ஆரம்பித்தார். நான் கடிகாரத்தைப் பார்த்தேன், மிகச்சரியாக பன்னிரண்டு மணி.

பிரசண்டானந்தாவின் குரல் பெரும்பாலான மலையாளப்பாடகர்களைப் போல ஜேசுதாஸின் உச்சரிப்புடன் அவரது குரலை நினைவூட்டுவதாக இருந்தது. சம்ஸ்கிருதச் சொற்களுக்கு அவற்றுக்கே உரிய அழுத்தங்களை அளித்துப் பாடுவதில் ஜேசுதாஸ் நிபுணர் என்று  நினைப்பதுண்டு.அது ஏதோ சுலோகம். வேதபாடலா? ஆனால் வேதங்களை பாடும் வழக்கமான உச்சரிப்பு இல்லை. ஓங்கி எழுந்து அலையலையாக அடங்கும் உச்சரிப்பு. சங்கராபரணம் என்று தோன்றியது. விதவிதமான மனப்பிம்பங்களை அளித்தபடி அந்தப் பாடல் ஒழுகிச்சென்றது. நான் என் இளமைப்பருவத்து சுற்றுலாப்பயணம் ஒன்றை நினைவுகூர்ந்தேன். ஆந்திராவில், பெண்ணையாற்றின் உற்பத்தியிடத்துக்குப் போயிருந்தோம்.

சம்ஸ்கிருதப் பாடல் முடிந்ததும் கைகூப்பியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தார் பிரசண்டானந்தா. பின்பு மலர்களை அள்ளி அந்த கலசத்தின் மீது போட்ட படி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ‘ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ·பட்! ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹா!’ என்பது போன்ற ஒலிகளால் ஆனவையாக அவை இருந்தன. மந்திரங்கள் முடிந்ததும் கைகூப்பி சில நிமிடங்கள் இருந்த பின்பு ‘யா தேவி சர்வ ·பூதேஷ¤ சக்தி ரூபேன சம்ஷ்டிதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’ என்று ஆரம்பித்த  நாமாவளியுடன் மந்திரங்கள் முடிந்தன.

அப்படியே கண்மூடி  அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். மொத்தக் கூடமும் அவருக்காகக் காத்திருந்தது. மென்மையான குரலில் ஆங்கிலத்தில்  ” தேடுபவர்களே, இதோ மீண்டுமொரு இனிய இரவு மலர்ந்திருக்கிறது…” என்று ஆரம்பித்தார். ”கன்னங்கரிய கூந்தலில் விண்மீன்களைச் சூடி கன்னங்கரிய உடலில் கன்னங்கரிய பட்டாடை அணிந்து ராத்ரிதேவி நம்மிடம் வந்திருக்கிறாள். பகலில் வெந்து கிடந்த நிலம் அவள் பாதம்பட்டு குளிர்கிறது. வேதனை நிறைந்த நெஞ்சங்கள் இனிய கனவுகளால் இளைப்பாறுகின்றன. நோய்கள் சற்றே விலகி நிற்கின்றன. சஞ்சலங்கள் அணைந்து அமைகின்றன. துய பேரருளுடன் அவள் வந்து நம்மை ஆசிர்வதித்திருக்கிறாள்.

நண்பர்களே, நான் சொல்லும் வரியொன்றுண்டு. இரவு ஒரு யானை. யானை எத்தனை அற்புதமான மிருகம். மிருகங்களில் அதற்கு இணையாக ஏதுமில்லை. கன்னங்கரிய பேருடல். அதன் எல்லா அசைவுகளும் அழகே. அது ஒரு மாபெரும் குழந்தை. ஆனால் அந்த மகத்துவத்திற்குள் மதம் ஒளிந்திருக்கிறது நண்பர்களே. மிருகங்களிலேயே யானையைப் பழக்குவதுதான் மிக மிக எளிதானது. ஆனால் ஒருபோதும் முழுமையாக பழக்கிவிடமுடியாத மிருகமும் யானைதான்.

யானைமேல் இருக்கும் மனிதன் உணரும் அகங்காரம் ஒன்றுண்டு. அவன் தன்னை ஒரு மகாராஜாவாக, சிம்மாசனம் மேல் அமர்ந்தவனாக உணர்கிறான். அவனறிவதில்லை அவன் மகத்தான அறியமுடியாமை ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறான் என்று. நம் முன்னோர் அதை உணர்ந்திருந்தார்கள். யானை மறப்பதேயில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. யானை மன்னிப்பதேயில்லை என்கிறது. யானைப்பகை என்று அது குறிக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஒரு யானை. சாமரக்காதுகள் அசைய, கொம்புகள் ஊசலாட, பொதிகள் போல் காலெடுத்து வைத்து மெல்ல நடந்து வரும் யானை. கஜராஜவிராஜிதம் என்று காளிதாசன் சொன்னான். பேரழகியின் நடை யானையின் நடை போன்றது. ராத்ரி தேவியின் நடையல்லவா அது? யானை இதோ நம் வாசலில் வந்து நிற்கிறது. கன்னங்கருமையாக. பேரழகாக. வாருங்கள் அதன் வெண்தந்தங்களைப் பற்றிக்கொள்வோம். அதனிடம் காலெடு யானை என்று சொல்வோம்.ஏறியமர்ந்தால் இந்த உலகையே வென்றவர்களாவோம். ஆனாலும் அது யானை. அறியப்படமுடியாதது. ஏனென்றால் அது காடு. ஊருக்குள் இறங்கிவந்த காடல்லவா யானை? புதர்களின் இருளும் மலைப்பாறைகளின் கம்பீரமும் காட்டருவிகளின் ஓசையும் மலைச்சுனைகளின் குளிரும் கலந்தது யானை…

மெல்ல மெல்ல நான் அச்சொற்களில் இருந்து என் அந்தரங்க உலகை நோக்கிச் சென்றுவிட்டேன். இரவுகளின் நினைவுகள். ஒர் இரவில் நான் புரண்டெழுந்தபோது அருகே அம்மா இல்லை. இருளில் எழுந்து அமர்ந்தேன். சுவர்களும் கூரையும் எல்லாம் மிக அருகே வந்திருந்தன. மிக அப்பால் மெல்லிய இருகுரல்கள் உரையாடிக் கொண்டிருந்தன. அந்த ஒலிக்கு தாளம் போல கடிகாரம் டிக்டிக்கித்துக்கொண்டிருந்தது. நான் நூற்றுக்கணக்கான கண்களால் பார்க்கப்பட்டேன். கண்களை மூடிக்கொண்டு படுத்தபோது என் எண்ணங்களுக்கு தாளமாகியது கடிகாரம்.

நான் எண்ணங்களில் இருந்து மீண்டபோது பிரசண்டானந்தா அவரது உரையின் கடைசிப்பகுதிக்கு வந்திருந்தார். ஒரு கவித்துவமான படிமத்தில் ஏறிக்கொண்டு அடுத்ததற்காக கைநீட்டுவது அவரது வழி என்று தோன்றியது. அந்தப்படிமங்கள் வழியாக அவர் உத்தேசிப்பதைத்தான் சொல்கிறாரா அல்லது அந்தப்படிமங்கள் அவரை யானைபோலச் சுமந்துகொண்டுசெல்கின்றனவா?

கண்களை மூடி ”ஓம்! ஸ்ரீம்! ஹம்! ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹம்” என்று முழங்கி கைகூப்பியபின் பிரசண்டானந்தா சட்டென்று எழுந்து திரும்பி வந்தவழியாகச் சென்றார். மொட்டைத்தலை ஆள் கண்ணாடிக்குடுவைக்குள் கைவிட்டு விளக்கை ஏற்றியபோது சுடர் மெல்ல முளைத்தெழுந்தது. கூடவே சுவர்கள் வளைந்து கூரை எழுந்து அந்த அறையும் உருவாகி வந்தது.

இரு மொட்டைத்தலை சாமியார்களும் கூடத்தின் நான்கு பெரிய சன்னல்கதவுகளையும் திறந்தார்கள். கடற்காற்று உள்ளே பீரிட ஆரம்பித்தது. ஏழுதிரிவிளக்கின் சுடர்கள் படபடத்து ஒவ்வொன்றாக அணைந்தன.  நீரில் விழுந்த சாயம் கலைந்து பிரிவது போல புகை பிரிந்து எழுந்து காற்றில் கரைந்தது. சன்னல் கதவுகளை குறிப்பிட்ட விதத்தில் சரித்து திறந்து வைத்தபோது காற்று இன்னமும் சீராக வேகமாக கூடத்துக்குள் சுழன்றடித்தது.

சிலகணங்கள் கழித்துத்தான் நான் அதைக் கவனித்தேன். அந்த விசித்திரமான ஓவியக்கோலம் கலைந்து வண்ணத்தூள்கள் ஒன்றுடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. ஓவியத்தின் கணிதவடிவங்கள் மழுங்கி மங்கி மெல்ல கரைந்து கலவையான வண்ணத்தூள் சுவரோரமாகக் குவிந்தது. கண்ணெதிரே அந்த ஓவியம்  இல்லாமலானது ஒரு கனவு போலிருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇரவு 6
அடுத்த கட்டுரைவிவாதங்களின் எல்லை…