ஏன் சில குறிப்புகள்?

நாலைந்து நாட்களுக்கு முன் ஒரு நாளிதழ் நிருபர் கூப்பிட்டார். ‘சார் பகவத்கீதை தேசியப் புனித நூல்னு சொல்றாங்களே உங்க கருத்து என்ன?’. இளவயது நிருபர், ஆகவே அவரது தொழிலை மறுக்க விரும்பவில்லை. அதோடு என்னைப்போல கீதையை அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கக் கூடிய ஒருவன் பதில் சொல்லியாகவேண்டிய கேள்வி அது. ஆகவே நான் பதில் சொன்னேன். நிறுத்தி, நிதானமாக.

அந்தப்பதில்தான் இணையத்தில் பிரசுரமனாது. கீதை இந்து ஞானமரபுக்கு ஒட்டுமொத்தமாகப் புனிதநூல் அல்ல என்றும். மதச்சார்பற்ற தன்மையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு இத்தகைய மதநோக்குள்ள அறிவிப்புகள் தீங்கிழைக்கும் என்றும் சொன்னேன். முடித்ததுமே நிருபர் கேட்டார் “சார், இப்ப இந்தியா இந்துநாடுன்னு சொல்றீங்க. அப்டின்னா—’

ஒருகணத்தில் ரத்தம் முழுக்க தலைக்கு ஏறிவிட்டது. கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு போனை வைத்தேன். மூளையே இல்லாத, தொடர்ச்சியாக நாலைந்து சொற்றொடர்கள் கூட எழுதத் தெரியாத பையன்களைத்தான் பெரும்பாலும் பத்திரிகைகள் இன்று நிருபர்களாக ஆக்குகின்றன. அந்த சொற்ப சம்பளத்திற்கு அதற்குமேல் தகுதிகொண்டவர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. ‘என் கருத்தை நீ போடக்கூடாது’ என்று எச்சரித்தேன். ஆனால் நான் சொன்னதாக எதையாவது போட்டுத் தொலைத்துவிடுவார்கள் என்ற பயம் வந்து நெஞ்சைக்கவ்வ உடனே விளக்கமாக எழுதி இணையத்தில் போட்டேன்.

அதேமாதிரி பேசிய சில விஷயங்கள். கேரள இதழ்களில் வெளிவந்தவை சில. இவற்றை எவரேனும் எங்கேனும் ஏதேனும் வடிவில் போடுவதற்குப் பதில் நானே எழுதிவிடலாமென தோன்றியது. வரிக்கு வரி விளக்கமாக எழுதினாலும் கூட தங்கள் வசதிப்படித்தான் நம்மவர் புரிந்துகொள்வார்கள் என்பது ஒருபக்கம் இருந்தாலும் எழுதி வைப்போமே என்று தோன்றியது. இவை பண்பாட்டு விஷயங்களில் நான் சொல்லக்கூடிய கருத்துக்கள்தான். போதிய அளவு சூடு ஆறிவிட்டதனால் நிதானமாகச் சொல்லி அத்தோடு முடித்துவிடுவதும் சாத்தியம். மேலும் ஏற்கனவே இதே கருத்துக்களை பத்துப்பதினைந்து முறை சொல்லியும் இருப்பேன்.

பண்பாடு- இலக்கியம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஏதேனும் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். நான் உறுதியாகச் சொல்லக்கூடிய இடங்கள் அவை. மற்றவற்றில் எல்லாரும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில்கூட கருத்து சொல்வது என்பதே அபாயமாக ஆகிவிட்டிருக்கிறது. நாம் சொல்வதற்கு நூற்றுக்கணக்கான வடிவ வேறுபாடுகள் வந்து ‘நான் சொல்ல வந்தது அதில்லீங்க’ என்று கூவிக்கொண்டே இருக்கவேண்டும். வேறு எதையும் எழுதமுடியாது சிந்திக்கமுடியாது.

பெண்கள் ஜீன்ஸ் அணிவதைப் பற்றி ஜேசுதாஸ் சொன்னதைப்பற்றி என்னிடம் ஒரு நெருக்கமான மலையாள இதழியல் நண்பர் கருத்து கேட்டார். ஏற்கனவே பெண்கள் ஜீன்ஸ் அணிவதை வரவேற்று நான் எழுதிய கட்டுரை அங்கே பிரபலம் [தமிழில் வாழ்விலே ஒருமுறை தொகுப்பில் உள்ளது] ஜீன்ஸ் அணிவது சுதந்திரம், அழகு என்றேன். ஆனால் ஜேசுதாஸ் போன்ற மூத்த கலைஞர், முதியவர், நேர்மைக்கும் எளியமனநிலைக்கும் புகழ்பெற்றவர், மலையாளப் பண்பாட்டின் வாழும் குறியீடு, ஒரு கருத்தைச் சொல்லும் போது ‘Fuck you jesudas’ என தட்டி எழுதி பிடிப்பது நாகரீகமும் அல்ல சுதந்திரமும் அல்ல என்றேன்.

செய்தி வெளிவந்தது. ஆம் நீங்கள் நினைப்பதேதான் “ஜீன்ஸ் அணிவது நாகரீகம் அல்ல. சுதந்திரமும் அல்ல- எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து’ என்று. ஜீன்ஸ் அணியும் என் மகள் மலையாளம் வாசிப்பதில்லை என்ற மெல்லிய ஆறுதல் மட்டுமே எஞ்சியது

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் நேர்காணல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 55